பயனியர் ஊழியத்தில் தொடர்ந்து நிலைத்திருங்கள்
ஏறக்குறைய 45,00,000 யெகோவாவின் சாட்சிகள் உலகமெங்கும் நற்செய்தியை அறிவித்து வருகின்றனர். அவர்களில் ஆறு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பயனியர்கள் அல்லது முழு நேர ராஜ்ய பிரஸ்தாபிகள். இந்தப் பெரிய பயனியர் படையில் உள்ளவர்கள், இளம்பருவ வயதிலிருந்து தங்களுடைய 90-களில் இருக்கும் வேலை ஓய்வுபெற்றவர்கள் வரையாகப் பரவியிருக்கின்றனர். அவர்கள் சகலவிதமான வாழ்க்கை பின்னணிகளிலிருந்தும் வாழ்க்கை பாணிகளிலிருந்தும் வந்தவர்கள்.
சந்தேகமின்றி, இந்த முழு நேர பிரசங்கிகள் அனைவரும் பயனியர் ஊழியத்தில் வெற்றிபெற விரும்புகின்றனர். பலர் தங்களுடைய வாழ்க்கை தொழிலாக இதைச் செய்ய விரும்புகின்றனர். சிலர் ஒருசில காரணங்களால் அவ்வாறு செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், மற்றவர்களால் தொடர்ந்து பண கஷ்டங்கள், மோசமான உடல் ஆரோக்கியம், சோர்வு, பிற பிரச்னைகள் போன்றவற்றிற்கு மத்தியிலும் பயனியர் செய்ய முடிந்திருக்கிறது. எனவே, முழு நேர பிரசங்கிகள் எவ்வாறு இப்படிப்பட்ட பிரச்னைகளைச் சமாளிப்பதோடு, தொடர்ந்து பயனியர் சேவையில் நிலைத்திருப்பவர்களாக இருக்கமுடியும்?
பண சம்பந்தமான தேவைகளை எதிர்ப்படுதல்
அப்போஸ்தலன் பவுல் செய்ததுபோல், பொதுவாகப் பயனியர்கள் தங்களுடைய செலவுகளுக்குச் சொந்தமாக வேலைசெய்கிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 2:9) உலகின் பெரும்பாலான பாகங்களில், அவர்கள் உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து ஆகிய விஷயங்களில் மேலேறிக்கொண்டே போகும் விலைவாசி ஏற்றத்தை அவர்கள் எதிர்ப்படுகின்றனர். அவர்களுக்குத் தேவையான பகுதிநேர வேலையைப் பெறுவது பெரும்பாலும் கடினமாக இருக்கிறது. அப்படிப் பெற்றாலும், அப்படிப்பட்ட வேலைகள் உடல்நலக் காப்பீடு வசதியற்ற மிகக் குறைந்த பட்ச ஊதியத்தையே கொடுக்கின்றன.
நாம் ‘ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் முதலாவதாக தொடர்ந்து தேடினோமென்றால்,’ யெகோவா நம்முடைய பொருளாதார தேவைகளைப் பூர்த்திசெய்வார் என்கிற விசுவாசத்தை நாம் கொண்டிருக்க முடியும். எனவே, பண கஷ்டத்தில் இருக்கும்போது, பயனியர்கள் ‘நாளைக்காகக் கவலைப்படாதிருக்க’ வேண்டும். (மத்தேயு 6:25-34) அவர்கள் இப்படிப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க உள்ளப்பூர்வமான முயற்சிகளை எடுக்கும்போது, யெகோவாவில் பலமான விசுவாசம் தேவையற்ற கவலையிலிருந்து அவர்களை விடுவிக்கும்.
பண கஷ்டங்களை ஒரு நபர் எதிர்ப்பட்டிருக்கும்போது, செலவுகள் குறைக்கப்படலாம். அடிப்படை பொருளாதார தேவையை மாற்றாவிட்டாலும், வரவுசெலவு பட்டியலில் சில மாற்றங்களைச் செய்வதன்மூலம் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும். செலவுகளைக் குறைக்க, சில பயனியர்கள் மற்ற கிறிஸ்தவர்களோடு தங்களுடைய இருப்பிடத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். தங்களுடைய பிள்ளைகள் பயனியர் ஊழியத்தில் பங்குபெறுவதற்கு உதவியாக, பெற்றோர் தங்கும் இடத்தை இலவசமாகத் தருகிறார்கள் அல்லது மிகக் குறைந்த வாடகைக்குத் தருகிறார்கள். மற்றவர்கள் உணவு மற்றும் போக்குவரத்துக்கான செலவுகளில் உதவிசெய்கின்றனர். ஆனால் பயனியர்கள் மற்றவர்களுக்குப் பாரமாக இருக்க விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தங்களைத்தாங்களே கவனித்துக்கொள்ளும்படியான வேதாகமக் கடமையை உடையவர்களாக இருக்கிறார்கள்.—2 தெசலோனிக்கேயர் 3:10-12.
மற்ற பயனியர்களோடு பகிர்ந்துகொள்வதன்மூலம் போக்குவரத்துச் செலவுகள் குறைக்கப்படலாம். இரண்டு பயனியர்கள் சொந்தமாக கார்களை வைத்திருந்தால், அவர்கள் ஒரே பகுதியில் பிரசங்க வேலையில் ஈடுபடும்போது, ஒரு காரை மட்டும் பயன்படுத்துவதன்மூலம் இரண்டு வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான செலவைத் தவிர்க்கலாம். மோட்டார் வண்டிகளைச் சொந்தமாகக் கொண்டிராத பயனியர்கள், வண்டி வைத்திருப்பவர்களோடு தொகுதியாகச் சேர்ந்து, போக்குவரத்துச் செலவுகளைச் சமாளிப்பதில் பகிர்ந்துகொள்ளலாம். பக்கத்திலுள்ள பிராந்தியங்களுக்கு முக்கியமாக நடந்துபோவதன்மூலமுங்கூட போக்குவரத்துச் செலவுகள் குறைக்கப்படலாம். பல நாடுகளில் பயனியர்கள் சிக்கனமான பொது போக்குவரத்துகளைப் பயன்படுத்துகின்றனர்.
பண பிரச்னைகளை மேற்கொண்டு, முழு நேர ஊழியத்தைத் தொடர்ந்து செய்தவர்களில் நியூட்டன் கேன்ட்வெல் என்பவரும் அவருடைய மனைவியும் இருந்தனர். அவர்கள் 1932-ல் நடந்த மகா மந்தத்தின்போது, அவர்களுடைய பண்ணையை விற்றுவிட்டு, தங்களுடைய ஏழு பிள்ளைகளில் ஆறுபேரோடு பயனியர் ஊழியம் செய்தனர். “எங்களுடைய பண்ணையை நாங்கள் விற்றதால் எங்களுக்குக் கிடைத்த பணத்தையெல்லாம் சீக்கிரத்தில் செலவழித்துவிட்டோம்—முக்கியமாக மருத்துவ செலவிற்காக,” என்று எழுதினார் சகோதரர் கேன்ட்வெல். “நாங்கள் எங்களுடைய இரண்டாவது நியமிப்பிற்கு போனபோது, இரண்டு வார வாடகையை முன்பணமாகக் கொடுத்தபிறகு வெறுமனே ஐந்து டாலர்கள் மட்டுமே மீதமாக இருந்தது என்பது எங்கள் நினைவிற்கு வருகிறது. ஆனாலும், நாங்கள் எங்களுடைய ஊழியத்தை உள்ளப்பூர்வமாகச் செய்யும்வரை யெகோவா உதவியளிப்பார் என்று அறிந்திருந்தோம். . . . பல்வேறுபட்ட வழிகளில் செலவைக் குறைக்க கற்றுக்கொண்டோம். புதிய பிராந்தியத்திற்கு மாறிப்போவோர்களாக, நான் உதாரணமாக, சில பெட்ரோல் நிலைய முதலாளிகளிடம், எங்களுடைய கிறிஸ்தவ ஊழியம் சம்பந்தமாக ஒவ்வொரு நாளும் மூன்று கார்கள் சாலையில் ஓட்டப்படுகின்றன என்று சொல்வேன். இது பெரும்பாலும் பெட்ரோலைத் தள்ளுபடியில் பெறுவதில் முடிவடையும். ஆட்டோ பழுதுபார்த்தலை என் மகன்கள் கற்றுக்கொண்டது, கார் பழுதுபார்க்கும் செலவை அதிகமாகக் குறைத்து எங்களுக்கு உதவிசெய்தது.” கேன்ட்வெல் குடும்பத்தினர் இவ்வாறு பொருளாதார சவால்களை எதிர்த்து வெற்றிகரமாகச் சமாளித்து, முழு நேர ஊழியத்தில் நிலைத்திருந்தனர். சகோதரர் கேன்ட்வெல், 103 வயதில் சாகும்வரை பயனியர் அணியில் இன்னும் இருந்தார்.
பகுதிநேர வேலையைக் கண்டுபிடித்தல்
பல பயனியர்கள் பகுதிநேர வேலையின்மூலம் தங்களுக்குத் தாங்களே ஆதரவளித்துக் கொள்கின்றனர். கொரிந்துவில் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதற்கு பவுல், தன்னுடைய உடன் விசுவாசிகள் ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் ஆகியோரோடு கூடாரம்பண்ணும் தொழில் செய்தார். (அப்போஸ்தலர் 18:1-11) இன்று, பகுதிநேர உலகப்பிரகாரமான வேலையைப் பயனியர்களுக்குக் கொடுப்பதற்கு ஆவிக்குரிய சகோதரர்கள் பெரும்பாலும் சந்தோஷமாயிருக்கின்றனர். மற்ற பயனியர்கள் தற்காலிகமான வேலைகளைத் தரும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள்மூலமாக அப்படிப்பட்ட வேலையைப் பெற்றிருக்கின்றனர். கடவுள்மீது விசுவாசம் அத்தியாவசியம். இதேபோல் வேலை சம்பந்தமான தீர்மானங்களைச் செய்வதற்கு அவருடைய வழிநடத்துதலைப் பெறுவதற்காக உள்ளப்பூர்வமான ஜெபமும் தேவை.—நீதிமொழிகள் 15:29.
“ஜெப சிந்தையினால் நல்ல பலத்தைப் பெற்றப் பிறகு,” ஒரு பயனியர் சொல்கிறார், “என்னுடைய ஊழியம் சம்பந்தமான சேவை அதிக முக்கியமான தனிப்பட்ட பொறுப்பு என்றும், என்னால் முழுநேர வேலையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் என் மேற்பார்வையாளரிடம் சொன்னேன். பின்வந்த புதன்கிழமை, நான் பகுதிநேரமாக வேலைசெய்வதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். நான் சந்தோஷத்தோடு அதை ஏற்றுக்கொண்டேன்.” ஜெபத்தின் வல்லமையைக் குறைவாக எடைபோட்டு விடாதீர்கள், உங்களுடைய ஜெபங்களுக்குச் செயல்களோடு பிரதிபலியுங்கள்.
ஊழியத்தில் தங்களை நிலைத்திருக்கச் செய்வதே, பகுதிநேர வேலையைத் தேடுவதற்கான நோக்கம் என்பதை எதிர்கால முதலாளிகளிடம் சொல்வது பயனியர்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் வேலைசெய்ய தயாராக இருக்கும் நாள்கள், ஒரு வாரத்தில் வேலைசெய்வதற்கு அவர்கள் ஒதுக்கிவைக்கப்போகும் மணிநேரங்களின் எண்ணிக்கை போன்றவற்றையும் சொல்லலாம். இரண்டு மாம்சப்பிரகாரமான சகோதரிகள் ஒரு சட்ட ஆலோசனை அலுவலகத்தில் இருந்த முழு நேர வேலையை, ஒரு வாரத்தில் ஒவ்வொருவருக்கும் இரண்டரை நாள்கள் என்று இரண்டாகப் பிரித்துக்கொண்டனர். அவர்கள் உவாட்ச்டவர் ஸ்கூல் ஆப் கிலியடிற்கு போய் மிஷனரி நியமிப்புகளைப் பெறும்வரை, பயனியர்களாக இருப்பதற்கு இது அவர்களுக்கு உதவிசெய்தது.
வேதப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வேலையின் வித்தியாசமான வகைகள் உடன் விசுவாசிகளிடமும் மற்றவர்களிடமும் பேசுவதன்மூலமோ செய்தித்தாள் விளம்பரங்கள்மூலமோ காணப்படலாம். மனத்தாழ்மை உதவியாக இருக்கும், ஏனென்றால் பயனியர்கள் எப்படிப்பட்ட வேலையைச் செய்யப்போகிறார்கள் என்பதைப்பற்றி அளவுக்குமீறிய தெரிந்தெடுப்பவர்களாக இருப்பதிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும். (யாக்கோபு 4:10-ஐ ஒப்பிடவும்.) தொடர்ந்து பயனியர் சேவை செய்வதற்கு, கீழ்த்தரமானது அல்லது கேவலமானது என்று சில மக்கள் கருதும் உலகப்பிரகாரமான வேலையை அவர்கள் செய்யவேண்டியதிருக்கக்கூடும். அப்படிப்பட்ட வேலை ஏற்றுக்கொள்ளப்பட்டு வேறுபட்ட ஒன்று விரும்பப்படுகையில், வேலையில் ஒரு மாற்றம் உண்மையில் கூடியக் காரியமாக இருக்கக்கூடும்.
மோசமான உடல் ஆரோக்கியமும் சோர்வும்
சிலர் உடல்நலக் கோளாறுகளால், தங்களுடைய பயனியர் சேவையை நிறுத்தவேண்டியதிருக்கிறது. பயனியர்கள் இந்த விஷயத்தில் அவசரப்படாமல் இருந்தால், வியாதி குணப்படுத்தப்படலாம் அல்லது உடல் ஆரோக்கியம் அவர்கள் பயனியர் சேவையைத் தொடருமளவிற்கு முன்னேற்றமடையும் என்பதைக் காணலாம். உடல்நலப் பிரச்னைகளுக்கு மத்தியிலும் பலர் பயனியர் சேவையைத் தொடரலாம், ஏனென்றால் அவர்கள் மருத்துவ சிகிச்சையைப் பெறுகின்றனர், அவர்களுக்குப் பொருத்தமான உணவுக் கட்டுப்பாட்டை இடைவிடாமல் பின்பற்றுகின்றனர், மேலும் தேவையான ஓய்வையும் உடற்பயிற்சியையும் எடுத்துக்கொள்கின்றனர். ஒரு பயணக் கண்காணி, ஒரு பயனியர் சகோதரி மூட்டுவீக்கத்தினால் பாதிக்கப்பட்டதால் ஊழியத்தில் வீட்டுக்கு வீடு நடந்துசெல்வதற்கு அவளுக்கு உதவி தேவையாய் இருந்தது என்பதைக் கண்டுணர்ந்தார். (அப்போஸ்தலர் 20:20) ஆனாலும், அவளும் அவளுடைய கணவனும் 33 வீட்டு பைபிள் படிப்புகளை நடத்தியிருக்கின்றனர், மேலும் 83 மக்கள் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு உதவிசெய்திருந்தனர். சகோதரியின் உடல்நிலை சிறிது காலத்தில் முன்னேற்றமடைந்தது. அவள் 11 வருடங்கள் கழித்து பயனியர் சேவை பள்ளிக்குச் சென்றிருந்தான்.
சோர்வு சிலர் பயனியர் ஊழியத்தைக் கைவிடுவதற்கு காரணமாயிருக்கலாம். (நீதிமொழிகள் 24:10) ஒரு பயனியர், பயணக் கண்காணியிடம் சொன்னார்: “நான் பயனியர் சேவையை நிறுத்தப்போகிறேன். . . . எனக்குச் செலவு இருக்கிறது.” அவருக்கு 20 டாலர்கள் மதிப்புள்ள மூக்குக் கண்ணாடி தேவையாயிருந்தது. “ஒரு 20 டாலர் தேவைக்காகப் பயனியர் சேவையைப்போய் நீங்கள் கைவிடப்போகிறீர்களா?” என்று கண்காணி கேட்டார். உள்ளூர் காப்பி தோட்டத்தில் இந்தப் பயனியர் ஒருநாளைக்கு வேலைசெய்து 20 டாலர் சம்பாதித்து, அதைக்கொண்டு கண்ணாடி வாங்கி, பயனியர் சேவையை விடாமல் தொடரும்படி ஆலோசனை தரப்பட்டது. கூடுதலான உரையாடல், கார் பழுதுபார்ப்பதற்காக அதிகப்படியான செலவுதான் அடிப்படை பிரச்னையாக இருப்பதை வெளிப்படுத்தியது. ஒவ்வொரு நாளும் அதிதொலைவு கார் எடுத்துப்போகாமல், ஒருசில கிலோமீட்டர் வட்டத்திற்குள் பயணஞ்செய்யும்படி உற்சாகப்படுத்தப்பட்டார். அவருடைய ஆவிக்குரிய தன்மையைக் காத்துக்கொள்ளும்படி அவர் அறிவுரை கொடுக்கப்பட்டார். பயனியர் இந்த அறிவுரையைப் பொருத்திப் பிரயோகித்தார், ஆறு மாதங்கள் கழித்து, கிலியட் பள்ளிக்கு வரும்படி அழைப்பைப் பெற்றார். பட்டம்பெற்றபின் அந்நிய தேசத்திற்கு நியமிக்கப்பட்டார். அங்குப் பல வருடங்களாக தான் மரிக்கும்வரை உண்மையுடன் ஊழியஞ்செய்தார். ஆம் சோர்வுக்குப் பலியாகிவிடாமல் இருக்கும்போது, பெரிய ஆசீர்வாதங்களில் பெரும்பாலும் விளைவடைகின்றன; ஆனால் மனதில் வையுங்கள், யெகோவா நம்மோடு இருக்கிறார்.
உங்களுடைய ஊழிய சிலாக்கியத்தைப் பொக்கிஷமாகப் போற்றுங்கள்
சோதனைகளுக்கு மத்தியிலும், தேவையிலும் உணவில்லாதும் இருந்த சமயங்களில், பவுல் தன்னுடைய ஊழியத்தைப் பொக்கிஷமாகக் கருதினார். (2 கொரிந்தியர் 4:7; 6:3-6) இன்று கஷ்டம், துன்புறுத்தல் போன்றவற்றை எதிர்ப்படுகையிலும் யெகோவாவின் சாட்சிகளில் பலர் ஆப்பிரிக்கா, ஆசியா, கிழக்கு ஐரோப்பா மேலும் மற்ற இடங்களில் தங்களுடைய பயனியர் சேவை செய்யும் சிலாக்கியத்தை விடாது பற்றிக்கொண்டிருக்கின்றனர். எனவே, சோதனைகள் வரும்போது, யெகோவாவிற்கு துதியுண்டாகும்படி, இந்தச் சிலாக்கிமான சேவையில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு எல்லா முயற்சியையும் செய்யுங்கள்.
பெரும்பாலான பயனியர்கள் தங்களுடைய வாழ்க்கை பாணியை எளிமைப்படுத்தியதால்தான் முழு நேர பிரசங்க வேலையில் ஈடுபட முடிந்திருக்கிறது. பவுலைப்போல, அவர்கள் பொருள் சம்பந்தமான வசீகரங்களை எதிர்த்தனர், “உண்ணவும் உடுக்கவும்” இருந்தால் போதும் என்ற மனநிலையை வளர்த்திருக்கின்றனர். பயனியர் ஊழியத்தை விடாது பற்றிக்கொண்டிருப்பதற்கு, அவசியமான காரியங்களோடு திருப்தியடைந்தவர்களாக அவர்கள் இருக்கவேண்டும். (1 தீமோத்தேயு 6:8) கடவுள் கொடுத்த சிலாக்கியங்களைப் பொருள் சம்பந்தமான ஆஸ்திகளைவிட அதிகமான பொக்கிஷமாகக் கருதுவதால் சந்தோஷம் கிடைக்கிறது.
உதாரணத்தோடு விளக்க: ஆன்டன் கிர்பர், வாஷிங்டன் D.C.-யில் உள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு ராஜ்ய அக்கறைகளைப் பிரதிநிதித்துவம் செய்ய சிலாக்கியம் பெற்றவராய் இருந்தார். அவர் சில காலத்திற்கு பயனியராகச் சேவை செய்தார். 1950-களில் வட்டாரக் கண்காணியாக இருந்தார். அவருடைய முந்தைய வணிக கூட்டாளிகள் ஒரு தடவை, அவருக்குப் பத்து லட்சம் டாலர் நிகர லாபம் தரும் ஒரு திட்டத்தோடு அவரிடத்தில் வந்தனர். இதை அவர் செய்வதற்கு ஏறக்குறைய ஒரு வருட காலமாக அவருடைய எல்லா நேரத்தையும் வணிக காரியங்களுக்குக் கவனஞ்செலுத்த வேண்டியதிருந்தது. வழிநடத்துதலுக்காகவும், திடமான மன உறுதிதரும் ஆவிக்காகவும் ஜெபித்த பிறகு அவர் சொன்னார்: “ஒரு வருடத்துக்குங்கூட நான் யெகோவாவைச் சேவிக்கும் என்னுடைய அருமையான சிலாக்கியத்தை விட்டுகொடுக்க என்னால் முடியாது, நிச்சயமாகவே உலகின் எல்லா பணத்துக்காகவும்கூட பணத்திற்கெல்லாம் அப்படிச் செய்ய முடியாது. இங்கு வாஷிங்டனில் என்னுடைய சகோதரர்களுக்கு சேவை செய்வதே எனக்கு மிகவும் அருமையானது. மேலும் இங்கு யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருப்பதாக நான் உணர்கிறேன். பத்து லட்ச டாலரைச் சம்பாதிப்பதை சந்தேகமின்றி செய்யமுடியும், ஆனால் அப்படிப்பட்ட வாழ்க்கையின் இறுதியில் நான் ஆவிக்குரிய வகையில் அல்லது ஏன் சரீரப்பிரகாரமாகவும் எப்படி இருப்பேன்?” எனவே, அவர் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்தார். இப்படிப்பட்ட வழியில் அவர்களுடைய சிலாக்கியங்களைப் பொக்கிஷமாகப் போற்றுவது பயனியர் சேவையில் தொடர்ந்து பற்றிக் கொண்டிருப்பதற்கு பலருக்கு உதவிசெய்கிறது.
எப்பேர்ப்பட்ட மகத்தான ஆசீர்வாதங்களை பயனியர்கள் அனுபவிக்கின்றனர்! யெகோவாவின் மகிமைக்குரிய ராஜ்ய அரசாட்சியைப் பற்றிப் பேசுவதில் பல மணிநேரங்களைச் செலவழிப்பது ஓர் ஆசீர்வாதமாகும். (சங்கீதம் 145:11-13) ஊழியத்துக்கு அவ்வளவு நேரத்தை அர்ப்பணிப்பதால், ஏழை, நொறுங்குண்டவர்கள் ஆகியோருக்கும், வியாதிக்கு அல்லது இழப்புக்கு ஆளானவர்களுக்கும், கடும் துன்பத்தில் இருப்பவர்களுக்கும் ஓர் உண்மை நம்பிக்கையின் தேவையில் இருப்பவர்களுக்கும் ஆவிக்குரிய ஆறுதலைக் கொண்டுவரும் ஆசீர்வாதத்தைப் பயனியர்கள் பெற்றிருக்கின்றனர். எனவே, முழுநேர பிரசங்க வேலையில் நாம் ஈடுபடுவதற்கு சூழ்நிலை அனுமதித்தால், நாம் நிச்சயமாகவே அநேக ஆசீர்வாதங்களை அனுபவிப்போம். ‘யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்.’ (நீதிமொழிகள் 10:22) அவருடைய உதவி மற்றும் ஆசீர்வாதத்தினாலேயே ராஜ்ய பிரஸ்தாபிகள் அநேகர் பயனியர் சேவையில் சந்தோஷத்தோடு தொடர்ந்து நிலைத்திருக்க முடிகிறது.