சகோதர நேசத்திற்கு திறவுகோலைக் கண்டுபிடித்தல்
‘உங்கள் தேவபக்தியோடே சகோதர நேசத்தையும் கூட்டி வழங்குங்கள்.’—2 பேதுரு 1:5-7, NW.
1. யெகோவாவினுடைய மக்களின் கூட்டங்கள் இப்படிப்பட்ட சந்தோஷமான சமயங்களாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று எது?
யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இல்லாத மருத்துவர் ஒருவர், உவாட்ச் டவர் பைபிள் ஸ்கூல் ஆப் கிலியடில் மிஷனரி பயிற்சிபெற்ற தன்னுடைய மகளின் பட்டமளிப்பைப் பார்ப்பதற்கு ஒரு சமயம் வந்திருந்தார். அவர் கண்ட சந்தோஷமான மக்கள் கூட்டத்தினால் அவ்வளவு கவர்ந்திழுக்கப்பட்டதால், இவர்கள் மத்தியில் குறைவான வியாதிப்படுதலே இருக்கவேண்டும் என்று அவர் சொன்னார். எது இந்த மக்கள் கூட்டத்தைச் சந்தோஷமாக இருக்கச் செய்தது? இதன் சம்பந்தமாக சபைகளில், வட்டார அசெம்பிளிகளில், மாவட்ட மாநாடுகளில் யெகோவாவின் மக்கள் கூடிவரும் எல்லா கூட்டங்களையும் சந்தோஷமான சமயங்களாக ஆக்குவது எது? அவர்கள் ஒருவருக்கொருவர் காண்பிக்கும் சகோதர நேசமல்லவா அது? சந்தேகமின்றி, யெகோவாவின் சாட்சிகளைப்போல, மதத்திலிருந்து அவ்வளவு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் பெறும் வேறு எந்த மத தொகுதியும் இல்லை என்று சொல்லப்படுவதற்கு ஒரு காரணம் சகோதர நேசமாகும்.
2, 3. நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் எப்படி உணரவேண்டும் என்பதைக் குறித்து எந்த இரண்டு கிரேக்க வார்த்தைகள் சொல்கின்றன, அவற்றின் வித்தியாசமான பண்புகள் எவை?
2 அப்போஸ்தலன் பேதுரு, 1 பேதுரு 1:22-ல் (NW) சொன்ன வார்த்தைகளின்படி, அப்படிப்பட்ட சகோதர நேசத்தை காண நாம் எதிர்பார்க்கவேண்டும்: “ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர நேசமுள்ளவர்களாகும்படி, . . . சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்.” சகோதர நேசம் என்று இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அடிப்படைக்கூறுகளில் ஒன்று ஃபீலியா (நேசம்). இதன் அர்த்தம் “அன்பு” என்று பொதுவாக மொழிபெயர்க்கப்படும் வார்த்தையாகிய அகாப்பே-யின் அர்த்தத்தோடு நெருங்கிய தொடர்புடையதாய் இருக்கிறது. (1 யோவான் 4:8) சகோதர நேசமும் அன்பும் இடமாறிப் பயன்படுத்தப்பட்டாலும், அவை விசேஷித்த சிறப்பியல்புகளை உடையனவாய் இருக்கின்றன. பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் பலர் செய்கிறதுபோல, நாம் இவற்றை ஒன்றோடொன்று குழப்பிக்கொள்ளக் கூடாது. (இந்தக் கட்டுரையிலும், பின்வரும் கட்டுரையிலும் இந்த இரண்டு வார்த்தைகளை ஒவ்வொன்றாக நாம் கலந்தாலோசிக்கலாம்.)
3 இந்த இரண்டு கிரேக்க வார்த்தைகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைப்பற்றி ஒரு கல்விமான், ஃபீலியா என்பது “உண்மையில் கனிவான, நெருங்கிய, நேசமான ஒரு வார்த்தை” என்று குறிப்பிட்டார். மறு பக்கத்தில், அகாப்பே மனதோடு அதிகம் தொடர்புடையதாக இருக்கிறது. எனவேதான் நாம் எதிரிகளுக்கு அன்புகாட்டும்படி (அகாப்பே) சொல்லப்பட்டிருக்கும்போது, அவர்களிடம் நாம் நேசவுணர்வு கொள்வதில்லை. ஏன் இல்லை? ஏனென்றால், “தீய கூட்டுறவுகள் நல்ல பழக்கங்களைக் கெடுக்கும்.” (1 கொரிந்தியர் 15:33, NW) வித்தியாசம் இருக்கிறது என்பதை இன்னும் காண்பிப்பதாக, அப்போஸ்தலன் பேதுருவினுடைய பின்வரும் வார்த்தைகள் இருக்கின்றன: “உங்கள் . . . சகோதர நேசத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.”—2 பேதுரு 1:5-7, NW; ஒப்பிடுங்கள்: யோவான் 21:15-17.a
அதிவிசேஷித்த சகோதர நேசத்திற்கு உதாரணங்கள்
4. இயேசுவும் யோவானும் ஏன் விசேஷித்த நேசத்தை ஒருவருக்கொருவர் கொண்டிருந்தனர்?
4 அதிவிசேஷித்த சகோதர நேசத்திற்கான பல நல்ல உதாரணங்களைக் கடவுளுடைய வார்த்தை நமக்குக் கொடுக்கிறது. இந்த விசேஷித்த நேசமானது ஏதோ ஒரு திடீர் விருப்பத்தினால் விளைவடைவதல்ல, ஆனால் மேலோங்கி நிற்கும் குணங்களைப் போற்றுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. சந்தேகமின்றி, மிகச் சிறந்த உதாரணம் அப்போஸ்தலன் யோவானிடம் இயேசு கிறிஸ்து கொண்டிருந்த நேசம். இயேசு தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் அனைவர்மேலும் சகோதர நேசத்தோடு இருந்தார் என்பதில் கேள்விக்கிடமில்லை. ஒரு நல்ல காரணத்திற்காகவே அவ்வாறு இருந்தார். (லூக்கா 22:28) இவர் இதைக் காண்பித்த ஒருவிதம், அவர்களின் பாதங்களைக் கழுவி விட்டு அதன்மூலம் அவர்களுக்கு மனத்தாழ்மையைக் கற்றுக்கொடுத்ததாகும். (யோவான் 13:3-16) ஆனால் இயேசு, யோவானிடம் விசேஷித்த நேசம் காண்பித்தார், இதை யோவான் திரும்பத்திரும்ப குறிப்பிட்டுச் சொல்கிறார். (யோவான் 13:23; 19:26; 20:2) இயேசு தம்முடைய சீஷர்களுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் நேசத்தைக் காட்ட காரணத்தை உடையவராக இருந்தார். அதைப்போலவே, யோவான் இயேசுவின்மீதான தன்னுடைய ஆழமான போற்றுதலின் காரணமாக, அவர் தன்மீது விசேஷித்த நேசத்தைக் காட்டுவதற்கு காரணத்தை இயேசுவுக்குப் பெரும்பாலும் கொடுத்திருக்கலாம். யோவானின் எழுத்துக்களில் அதாவது அவருடைய சுவிசேஷத்திலும் ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்ட கடிதங்களிலும் நாம் இதைக் காண முடியும். அந்த எழுத்துக்களில் எவ்வளவு அடிக்கடி அவர் அன்பைப் பற்றி சொல்கிறார்! யோவான் எழுதின யோவான் அதிகாரங்கள் 1 மற்றும் 13 முதல் 17 வரையிலுமிருந்தும், மேலுமாக இயேசு மனிதனாவதற்கு முந்தின வாழ்க்கையைப் பற்றி இவர் அடிக்கடி எடுத்துக்காட்டிய மேற்கோள்களிலிருந்தும் இயேசுவின் ஆவிக்குரிய குணங்களை யோவான் மிகவும் போற்றினார் என்பதைக் காணலாம்.—யோவான் 1:1-3; 3:13; 6:38, 42, 58; 17:5; 18:37.
5. பவுலும் தீமோத்தேயுவும் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த விசேஷித்த நேசத்தைப் பற்றி என்ன சொல்லப்படலாம்?
5 இதைப்போலவே, அப்போஸ்தலன் பவுலும் அவருடைய கிறிஸ்தவ தோழன் தீமோத்தேயுவும் நிச்சயமாகவே ஒருவருக்கொருவரிடம் இருந்த குணங்களைப் போற்றியதை அடிப்படையாகக் கொண்ட அதிவிசேஷித்த சகோதர நேசத்தைத் தங்களுக்குள் கொண்டிருந்தனர் என்பதை நாம் மறக்கவிரும்பமாட்டோம். தீமோத்தேயுவைப் பற்றிய பின்வருவதைப் போன்ற நல்ல குறிப்புகளை உடையதாகப் பவுலின் எழுத்துக்கள் இருக்கின்றன: “உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை. . . . தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.” (பிலிப்பியர் 2:20-22) பவுலின் கடிதங்களில் தீமோத்தேயுவைத் தனிப்பட்டவகையில் குறிப்பிடும் குறிப்புகள் அவர் தீமோத்தேயுவின்மீது கொண்டிருந்த கனிவான நேசத்தை வெளிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, 1 தீமோத்தேயு 6:20-ஐ கவனியுங்கள்: ‘ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொள்.’ (1 தீமோத்தேயு 4:12-16; 5:23; 2 தீமோத்தேயு 1:5; 3:14, 15 ஆகியவற்றையும் பார்க்கவும்.) பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின கடிதங்களை தீத்துவுக்கு எழுதின கடிதத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது, பவுல் தீமோத்தேயுவின்மீது வைத்திருந்த விசேஷித்த நேசம் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது; அவர்களின் சிநேகத்தைப் பற்றி தீமோத்தேயு அவ்வாறே உணர்ந்திருக்கவேண்டும். இதை 2 தீமோத்தேயு 1:3-ல் உள்ள பவுலின் வார்த்தைகளிலிருந்து அறியலாம்: ‘நான் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருக்கிறேன்.’
6, 7. என்ன உணர்வை தாவீதும் யோனத்தானும் ஒருவருக்கொருவர் கொண்டிருந்தனர், ஏன்?
6 எபிரெய வேதாகமமும் தாவீது, யோனத்தான் போன்ற நல்ல உதாரணங்களைக் கொடுக்கிறது. தாவீது கோலியாத்தை கொன்ற பின்பு, “யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்,” என்று நாம் வாசிக்கிறோம். (1 சாமுவேல் 18:1) யெகோவாவின் நாமத்திற்கான தாவீதின் வைராக்கியமான உதாரணத்திற்கும், அரக்கன் கோலியாத்திடம் போர்செய்ய துணிந்து செயல்பட்டதற்கும் போற்றுதல் மனப்பான்மையே யோனத்தான் தாவீதுக்கு விசேஷித்த நேசத்தைக் கொண்டிருக்க சந்தேகமின்றி தூண்டியது.
7 யோனத்தான் தாவீதை அவ்வளவு நேசித்ததால், சவுல் ராஜாவிடமிருந்து தாவீதைக் காப்பாற்றுவதற்கு தன்னுடைய உயிரையும் பணயம்வைத்தார். இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக இருப்பதற்கு யெகோவா தாவீதைத் தேர்ந்தெடுத்ததற்காக யோனத்தான் எந்தச் சமயத்திலும் வன்மங்கொள்ளவில்லை. (1 சாமுவேல் 23:17) தாவீது அதே அளவுக்கு ஆழ்ந்த நேசத்தை யோனத்தானிடம் கொண்டிருந்தார். யோனத்தான் மரித்ததால் தாவீது துயரத்தில் இருந்தபோது அவர் சொன்னதிலிருந்து இது தெளிவாய் இருக்கிறது: “என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் (அன்பு, NW) ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப் (அன்பைப், NW) பார்க்கிலும் அதிகமாயிருந்தது.” உண்மையில் ஆழமான போற்றுதல் மனப்பான்மை அவர்களின் உறவைச் சிறந்ததாக்கியது.—2 சாமுவேல் 1:26.
8. எந்த இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் விசேஷித்த நேசத்தை வெளிப்படுத்தினர், ஏன்?
8 மேலும், எபிரெய வேதாகமத்தில் இரண்டு பெண்கள் மத்தியில், நகோமிக்கும் அவளுடைய விதவை மருமகள் ரூத்துக்கும் இடையே இருந்த விசேஷித்த நேசத்தைப் பற்றிய ஒரு நல்ல முன்மாதிரியை நாம் காண்கிறோம். நகோமியிடம் ரூத் சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்: “நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேச வேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.” (ரூத் 1:16) ரூத் இவ்வாறு போற்றுதல் மனப்பான்மையோடு பிரதிபலிக்க தூண்டப்பட்டதற்கு காரணம், நகோமியின் நடத்தையும் அவள் யெகோவாவைப் பற்றிப் பேசியதும் என்று நாம் முடிவுசெய்யவேண்டுமல்லவா?—லூக்கா 6:40-ஐ ஒப்பிடுங்கள்.
அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரி
9. சகோதர நேசத்திற்கு பவுல் முன்மாதிரியாய் இருந்தார் என்று எது காண்பிக்கிறது?
9 நாம் இதுவரை கலந்துபேசின பிரகாரம், அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவின்மீது அதிவிசேஷித்த நேசத்தைக் கொண்டிருந்தார். ஆனால் பொதுவாக எல்லா சகோதரர்களுக்கும் கனிவான சகோதர நேசத்தைக் காண்பிப்பதில் மிகச்சிறந்த ஒரு முன்மாதிரியாக இருந்தார். எபேசுவிலிருந்து வந்த மூப்பர்களிடம் ‘[அவர்] மூன்று வருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொன்னதாகச் சொன்னார்.’ கனிவான சகோதர நேசமா? இதைப் பற்றி எந்தவித சந்தேகமுமில்லை! அவர்கள் பவுலைப் பற்றி இதே விதமாகத்தான் உணர்ந்தார்கள். அவர்கள் பவுலை இனி ஒருபோதும் பார்க்க மாட்டார்கள் என்று கேள்விப்பட்டபோது, ‘அவர்களெல்லாரும் மிகவும் அழுது, பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தனர்.’ (அப்போஸ்தலர் 20:31, 38) சகோதர நேசம் போற்றுதலின் அடிப்படையிலா? ஆம்! 2 கொரிந்தியர் 6:11-13-ல் உள்ள வார்த்தைகளிலிருந்தும் அவருடைய சகோதர நேசம் காணப்படுகிறது: “கொரிந்தியரே, எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது, எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது, எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது. ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
10. பவுல், 2 கொரிந்தியர் அதிகாரம் 11-ல் உள்ள தன்னுடைய சோதனைகளைச் சொல்லும்படி செய்த சகோதர நேச குறைபாடு என்ன?
10 தெளிவாகவே, கொரிந்தியர்களில் பலர் அப்போஸ்தலன் பவுலின்மீது போற்றுதலுள்ள சகோதர நேசம் இல்லாமல் இருந்தனர். எனவே அவர்களில் சிலர் இவ்வாறு குறைகூறினர்: “அவருடைய கடிதங்கள் கடுமையானவை; அழுத்தம் மிக்கவை; ஆனால், ஆளை நேரில் பார்த்தால், தோற்றமும் இல்லை, பேச்சுத்திறனும் இல்லை.” (2 கொரிந்தியர் 10:10, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) இதனால்தான் பவுல், 2 கொரிந்தியர் 11:5, 22-33-ல் பதிவு செய்திருக்கிறபிரகாரம் அவர்களுடைய ‘மகா பிரதான அப்போஸ்தலர்’ பற்றி குறிப்பிட்டு, இவர் எதிர்ப்பட்ட கஷ்டங்களைச் சொல்லும்படி தூண்டப்பட்டார்.
11. தெசலோனிக்கேயில் இருந்த கிறிஸ்தவர்கள்மீது பவுலின் நேசத்தைப் பற்றி என்ன சான்று இருக்கிறது?
11 பவுல் தான் ஊழியஞ்செய்தவர்கள்மேல் வைத்திருந்த கனிவான நேசம், 1 தெசலோனிக்கேயர் 2:8-ல் உள்ள அவருடைய வார்த்தைகளில் விசேஷமாகத் தெளிவாயிருக்கிறது: “நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.” உண்மையில், அவர் இந்தப் புதிய சகோதரர்கள்மீது இப்படிப்பட்ட நேசம் கொண்டிருந்ததால், அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள இனிமேலும் காத்திருக்க முடியாதவராய்—அவர்கள் எப்படித் துன்புறுத்தல்களைச் சகித்திருந்தனர் என்பதை அறிய அவ்வளவு ஆவலாய் இருந்ததால்—அவர் தீமோத்தேயுவை அனுப்பினார்; தீமோத்தேயு பவுலிற்கு மிகுந்த ஆறுதலளித்த ஒரு நல்ல அறிக்கையைக் கொடுத்தார். (1 தெசலோனிக்கேயர் 3:1, 2, 6, 7) சரியாகவே, வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (Insight on the Scriptures) இவ்வாறு சொல்கிறது: “பவுலுக்கும் அவர் ஊழியஞ்செய்தவர்களுக்கும் இடையே ஒரு நெருங்கிய சகோதர நேசப்பிணைப்பு இருந்தது.”
போற்றுதல்—சகோதர நேசத்திற்கு திறவுகோல்
12. நாம் நம் சகோதரர்களுக்குக் கனிவான நேசத்தைக் காட்டுவதற்கான காரணங்கள் யாவை?
12 ஐயமின்றி, சகோதர நேசத்திற்கு திறவுகோல் போற்றுதலாகும். நம்முடைய நேசத்தைத் தூண்டி நாம் அவர்களை நேசிக்கும்படி செய்யும் நம்மால் போற்றப்படும் குணங்களை யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் கொண்டிருக்கவில்லையா? நாமனைவருமே முதலில் கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறோம். நாமனைவருமே நம்முடைய மூன்று பொதுவான எதிரிகளாகிய, சாத்தானும் அவனுடைய பேய்களும், சாத்தானின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் பொல்லாத உலகம், மற்றும் பாவ மாம்சத்தின் சுதந்தரிக்கப்பட்ட தன்னல போக்குகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுகிறோம். சூழ்நிலையை முன்னிட்டுப் பார்க்கையில் நம்முடைய சகோதரர்கள் தங்களுடைய மிகச் சிறந்ததையே செய்கிறார்கள் என்ற நிலைநிற்கையை நாம் எப்போதும் எடுக்கவேண்டுமல்லவா? உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், யெகோவாவின் பக்கமிருக்கிறார்கள் அல்லது சாத்தானின் பக்கமிருக்கிறார்கள். நம்முடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட சகோதரர்களும் சகோதரிகளும் யெகோவாவின் பக்கம் இருக்கிறார்கள், ஆம், நம் பக்கமாக இருக்கிறார்கள்; எனவே அவர்கள் நம்முடைய சகோதர நேசத்தைப் பெற தகுதியாயிருக்கிறார்கள்.
13. மூப்பர்களுக்கு ஏன் நாம் கனிவான நேசத்தைக் கொண்டிருக்கவேண்டும்?
13 நம் மூப்பர்களைப் போற்றுவதைப் பற்றியென்ன? அவர்கள் சபையின் அக்கறைகளுக்காகக் கடினமாக உழைப்பதால், நாம் அவர்களிடம் அதிகப் பிரியமாய் இருக்கவேண்டுமல்லவா? நம்மனைவரையும்போலவே, அவர்கள் தங்களையும் தங்களுடைய குடும்பங்களையும் கவனிக்கவேண்டும். மீதிப்பேராகிய நாம் செய்யவேண்டியதைப் போலவே அவர்களும் தனிப்பட்ட படிப்பையும், சபைக் கூட்டங்களுக்கு ஆஜராவதையும், வெளி ஊழியத்தில் பங்கெடுப்பதையும் செய்யவேண்டும். இதற்கும்மேலாக, அவர்கள் கூட்டங்களில் நிகழ்ச்சிநிரல் பாகங்களுக்குத் தயாரிக்கவேண்டும், பொதுப் பேச்சுகள் கொடுக்கவேண்டும், சபையில் வரும் பிரச்னைகளைக் கவனிக்கவேண்டும்; சில சமயங்களில் இது மணிக்கணக்கான நியாய விசாரணைகளை உட்படுத்தலாம். நிஜமாகவே, நாம் ‘இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ண’ விரும்புகிறோம்.—பிலிப்பியர் 2:29.
சகோதர நேசத்தைக் காட்டுதல்
14. சகோதர நேசத்தைக் காண்பிக்கும்படி நமக்குக் கட்டளையிடும் வேதவசனங்கள் எவை?
14 யெகோவாவை பிரியப்படுத்த, இயேசு கிறிஸ்துவும் பவுலும் செய்ததுபோல, நாம் நம்முடைய உடன் விசுவாசிகளுக்கு கனிவான உணர்ச்சியோடுகூடிய சகோதர நேசத்தைக் காட்டவேண்டும். நாம் வாசிக்கிறோம்: “[சகோதர நேசத்திலே] ஒருவருக்கொருவர் உளங்கனிந்த நேசத்தைக் காட்டுங்கள்.” (ரோமர் 12:10, கிங்டம் இண்டர்லீனியர்) “[சகோதர நேசத்தைப்] பற்றி நான் உங்களுக்கு எழுதத் தேவையில்லை, ஒருவருக்கொருவர் அன்புகாட்ட கடவுளால் நீங்கள் போதிக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்களே.” (1 தெசலோனிக்கேயர் 4:9, Int) “உங்களுடைய [சகோதர நேசம்] தொடர்ந்திருக்கட்டும்.” (எபிரெயர் 13:1, Int) நாம் நம்முடைய பரலோக தந்தையின் பூமிக்குரிய பிள்ளைகளுக்குச் சகோதர நேசத்தைக் காண்பிக்கும்போது நிச்சயமாகவே அவர் சந்தோஷப்படுகிறார்!
15. சகோதர நேசத்தைக் காட்ட சில வழிகள் யாவை?
15 அப்போஸ்தலர் காலங்களில், கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் “பரிசுத்த முத்தத்தோடு” அல்லது “அன்பின் முத்தத்தோடு” வாழ்த்தும் பழக்கத்தைப் பின்பற்றினர். (ரோமர் 16:16; 1 பேதுரு 5:14) நிஜமாகவே, சகோதர நேசத்தின் என்னே ஒரு வெளிப்பாடு! இன்று பூமியின் பெரும்பாலான இடங்களில், அதிகப் பொருத்தமான வெளிப்பாடு உண்மையான நேசப்பான்மையுள்ள புன்சிரிப்பும் பலமான கைக்குலுக்கலுமாக இருக்கக்கூடும். மெக்ஸிக்கோ போன்ற இலத்தீன் தேசங்களில் கட்டியணைப்பதன்மூலம் வாழ்த்துதல் வெளிப்படுத்தப்படுகிறது, உண்மையில் இது நேசத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. சகோதரர்களின் இந்த கனிவான நேசமே, அவர்களின் தேசங்களில் நடக்கும் அதிகமான அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.
16. நம்முடைய ராஜ்ய மன்றங்களில் சகோதர நேசத்தைக் காண்பிப்பதற்கு நாம் என்ன வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்?
16 நாம் ராஜ்ய மன்றத்திற்குள் நுழையும்போது, சகோதர நேசத்தை வெளிக்காட்ட விசேஷித்த முயற்சியை நாம் எடுக்கிறோமா? மனச் சோர்வடைந்திருப்பவர்களாகக் காணப்படுகிறவர்களுக்கு முக்கியமாக நாம் ஆறுதலளிக்கும் வார்த்தைகளைச் சொல்ல இது தூண்டும். ‘சோர்வுற்ற ஆத்துமாக்களிடம் ஆறுதலாய் பேசும்படி’ நாம் சொல்லப்படுகிறோம். (1 தெசலோனிக்கேயர் 5:14, NW) சகோதர நேசத்தின் கனிவான உணர்வைக் காண்பிப்பதற்கு இது நிச்சயமாகவே ஒரு வழியாகும். மற்றொரு நல்ல வழி, ஓர் அருமையான பொதுப் பேச்சுக்கு, நன்றாகக் கையாளப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரல் பகுதிக்கு, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் மாணாக்கர் பேச்சு கொடுப்பவர் எடுத்த நல்ல முயற்சிக்கு, மேலும் மற்றவற்றிற்கும் போற்றுதலைக் காட்டுவதாகும்.
17. ஒரு மூப்பர் எப்படிச் சபையின் நேசத்தை சம்பாதித்துக்கொண்டார்?
17 வித்தியாசமானவர்களைக் கூட்டம் முடிந்தபின்பு அதிகத் தாமதிப்பதாக இல்லாத பட்சத்தில், நம் வீட்டிற்கு ஒரு சாப்பாட்டிற்கோ பலகாரம் சாப்பிடவோ அழைப்பதைப் பற்றியென்ன? இயேசு லூக்கா 14:12-14-ல் சொன்ன ஆலோசனையைப் பின்பற்ற வேண்டாமா? ஒரு சமயத்தில் முன்னாள் மிஷனரி ஒருவர் சபையில் நடத்தும் கண்காணியாக நியமிக்கப்பட்டார்; அந்தச் சபையில் மற்றவர்கள் அனைவரும் வித்தியாசமான இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். சகோதர நேசம் குறைவாக இருப்பதை அவர் உணர்ந்தார். ஆகவே அவர் நிலைமையைச் சரிசெய்ய திட்டமிட்டார். எப்படி? ஒவ்வொரு ஞாயிறும் அவர் வித்தியாசமான ஒரு குடும்பத்தை வீட்டிற்கு சாப்பாட்டுக்கு அழைத்தார். ஒரு வருடத்தின் முடிவில், அனைவரும் அவரிடத்தில் கனிவான சகோதர நேசத்தைக் காண்பித்துக்கொண்டிருந்தனர்.
18. சுகமில்லாத நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு நாம் எப்படிச் சகோதர நேசத்தைக் காட்டலாம்?
18 ஒரு சகோதரனோ சகோதரியோ வீட்டில் அல்லது மருத்துவமனையில் சுகமில்லாமல் இருந்தால், நாம் அந்த நபரில் அக்கறையாய் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு சகோதர நேசம் நம்மைத் தூண்டும். அல்லது பராமரிப்பு இல்லங்களில் (nursing homes) வசிப்பவர்களைப் பற்றியென்ன? நேரில் சென்று பார்க்கவோ, ஃபோன் செய்யவோ, உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகளையுடைய இதழ்களை அனுப்பவோ நீங்கள் ஏன் செய்யக்கூடாது?
19, 20. நம்முடைய சகோதர நேசம் அதிகரித்திருக்கிறது என்பதை எப்படிக் காண்பிக்கலாம்?
19 இப்படிப்பட்ட சகோதர நேசத்தின் வெளிப்பாடுகளை நாம் கொடுக்கும்போது, நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம், ‘என்னுடைய சகோதர நேசம் பட்சபாதமுள்ளதாக இருக்கிறதா? தோல் நிறம், படிப்பு, அல்லது பொருள் சம்பந்தமான ஆஸ்திகள் ஆகியவை நான் என்னுடைய சகோதர நேசத்தைக் காண்பிப்பதைப் பாதிக்கிறதா? அப்போஸ்தலன் பவுல் கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தியதுபோல், நான் என்னுடைய சகோதர நேசத்தில் அதிகரிக்க வேண்டியதிருக்கிறதா?’ சகோதர நேசம், நம் சகோதரர்களை நல்ல நோக்குநிலையோடு பார்ப்பதற்கு, அவர்களின் நல்ல பண்புகளைப் போற்றுவதற்கு நம்மைத்தூண்டும். சகோதர நேசம், நம் சகோதரரின் ஆவிக்குரிய முன்னேற்றத்தைக்குறித்து பொறாமைப்படுவதற்கு பதில் சந்தோஷப்படுவதற்கு உதவிசெய்யும்.
20 ஊழியத்தில் நம்முடைய சகோதரருக்கு உதவிசெய்வதற்கு சகோதர நேசம் நம்மை தயாராக இருக்கும்படி செய்யவேண்டும். நம்முடைய பாடல்களில் ஒன்று (எண் 51, தமிழ்ப் பாட்டுப் புத்தகம், 1975 பதிப்பு) சொல்கிறதுபோல அது இருக்கவேண்டும்:
“பலவீனருக்குதவுங்கள்,
தைரியமாய் பேச உதவுங்கள்.
இளையோர் பயத்தை நீக்குங்கள்,
பலப்பட உதவிசெய்யுங்கள்.”
21. நாம் சகோதர நேசத்தைக் காட்டும்போது என்ன பிரதிபலிப்பை நாம் எதிர்பார்க்கலாம்?
21 எனவே, சகோதர நேசத்தைக் காட்டுவதில் இயேசு மலைப் பிரசங்கத்தில் சொன்ன நியமம் பொருந்துகிறது என்பதை மறவாதிருப்போமாக: “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.” (லூக்கா 6:38) நம்மைப்போலவே யெகோவாவின் ஊழியர்களாக இருப்பவர்களுக்கு நாம் உயர்ந்த மரியாதையைக் காண்பித்து, சகோதர நேசத்தைக் காட்டும்போது நாம் தாமே பயனடைவோம். சகோதர நேசத்தைக் காண்பிப்பதில் சந்தோஷத்தை காண்பவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியுள்ளவர்கள்!
[அடிக்குறிப்புகள்]
a “அன்பு (அகாப்பே)—எது அல்ல, எது” என்ற அடுத்த கட்டுரையைக் காண்க.
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
◻ நம் உணர்ச்சிகளோடு தொடர்புள்ள கிரேக்க வார்த்தைகள் யாவை, அவை எப்படி வித்தியாசப்படுகின்றன?
◻ சகோதர நேசத்திற்கு திறவுகோல் எது?
◻ விசேஷித்த சகோதர நேசத்திற்கு நாம் கொண்டிருக்கும் வேதாகம முன்மாதிரிகள் யாவை?
◻ நம் சகோதரர்களுக்கும் மூப்பர்களுக்கும் ஏன் கனிவான நேசத்தை நாம் கொண்டிருக்கவேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
அப்போஸ்தலன் பேதுரு தன்னுடைய சகோதரர்களை அவர்களுடைய விசுவாசத்தோடும் மற்ற கிறிஸ்தவப் பண்புகளோடும் சகோதர நேசத்தைக் கூட்டி வழங்கும்படி துரிதப்படுத்தினார்