‘இவை எப்பொழுது சம்பவிக்கும்? எங்களுக்குச் சொல்லவேண்டும்’
“புதிய காரியங்களை நான் சொல்கிறேன். அவை தோன்றத் துவங்குமுன்னே, மக்களாகிய நீங்கள் அவற்றை கேட்கும்படிச் செய்கிறேன்.”—ஏசாயா 42:9, NW.
1, 2. (அ) எதிர்காலத்தைக் குறித்து இயேசுவின் அப்போஸ்தலர் என்ன கேட்டனர்? (ஆ) ஒரு கூட்டு அடையாளத்தைப் பற்றி இயேசு கொடுத்த பதில் எப்படி நிறைவேற்றமடைந்திருக்கிறது?
தெய்வீக போதனை, ‘அந்தத்திலுள்ளவற்றை ஆதி முதற்கொண்டு அறிவிப்பவராகிய’ யெகோவா தேவனிடமிருந்து தோன்றுகிறது. (ஏசாயா 46:10) முந்திய கட்டுரை காண்பித்ததுபோல, இயேசுவிடமிருந்து அப்படிப்பட்ட போதகத்தை அப்போஸ்தலர் நாடி, “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும்,” என்று கேட்டனர்.—மாற்கு 13:4.
2 அதற்கு பதில் தருபவராக, இயேசு, யூத ஒழுங்குமுறை சீக்கிரத்தில் முடிவடையும் என்பதை நிரூபிக்கும் சான்றுகளடங்கிய ஒரு கூட்டு ‘அடையாளத்தை’ விவரித்து சொன்னார். இது பொ.ச. 70-ல் எருசலேமின் அழிவுடன் நிறைவேற்றமடைந்தது. ஆனால் இயேசுவின் தீர்க்கதரிசனம், நெடுங்கால ஓட்டத்தினூடே ஒரு பெரிய நிறைவேற்றத்தை அடையும். “புறஜாதியாரின் காலம்” 1914-ல் முடிவடைந்ததும், பரந்த அளவில் ஓர் அடையாளம் வெளிப்படும்; விரைவில் இந்தத் தற்கால பொல்லாத ஒழுங்குமுறை ஒரு ‘மகா உபத்திரவத்தில்’ முடிவுறும் என்பதை இது காட்டுவதாயிருக்கும்.a (லூக்கா 21:24) இந்த 20-ம் நூற்றாண்டில் நடக்கும் உலகப் போர்களாலும் பேரழிவை உண்டாக்கும் மற்ற சம்பவங்களாலும் இந்த அடையாளம் நிறைவேற்றமடைந்து வந்திருக்கிறது என்பதற்கு இன்று வாழும் லட்சக்கணக்கானோர் சான்றுபகர முடியும். இவை இயேசு கொடுத்த தீர்க்கதரிசனத்தின் பெரிய நிறைவேற்றத்தையும் குறிக்கும்; இந்த நவீனகால நிறைவேற்றம் பொ.ச. 33-லிருந்து 70 வரை நடந்தவற்றால் அடையாளப்படுத்தப்படுகிறது.
3. மற்றொரு அடையாளத்தைப் பற்றி பேசுகையில், என்ன கூடுதலான நிறைவேற்றங்களை இயேசு முன்னுரைத்தார்?
3 புறஜாதியாரின் காலங்களைப்பற்றி லூக்கா சுவிசேஷம் குறிப்பிட்ட பிறகு, மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்கா சுவிசேஷங்களிலுள்ள இணையான பதிவுகள், கூடுதலான தொடர் சம்பவங்களைப்பற்றி விளக்குகின்றன; இவை ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையினுடைய முடிவின்’ கூட்டு ‘அடையாளத்துடன்’ கூடுதலான ஓர் அடையாளத்தை உட்படுத்துகின்றன. (மத்தேயு 24:3) (15-ம் பக்கத்தில், அந்தப் பதிவிலுள்ள இந்தக் குறிப்பு புள்ளியிட்ட இரட்டைக் கோடுகளால் குறிக்கப்பட்டிருக்கிறது.) மத்தேயு சொல்கிறார்: “அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.”—மத்தேயு 24:29-31.
உபத்திரவமும் வானத்திற்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளும்
4. இயேசு குறிப்பிட்ட வானத்திற்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளைப் பற்றி என்ன கேள்விகள் எழும்புகின்றன?
4 அது எப்போது நிறைவேற்றப்படும்? எல்லா மூன்று சுவிசேஷ பதிவுகளும் வானத்திற்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் என்று நாம் அழைப்பதை குறிப்பிடுகின்றன—சூரியனும் சந்திரனும் அந்தகாரப்படுதல், நட்சத்திரங்கள் விழுதல். இவை ‘அந்த உபத்திரவத்தை’ பின்தொடரும் என்று இயேசு சொன்னார். பொ.ச. 70-ல் உச்சக்கட்டமடைந்த உபத்திரவத்தை இயேசு மனதில் வைத்திருந்தாரா, அல்லது நம்முடைய நவீன காலங்களில் இன்னும் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் மகா உபத்திரவத்தைப்பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தாரா?—மத்தேயு 24:29; மாற்கு 13:24.
5. நவீன காலங்களில் நடக்கும் உபத்திரவத்தைப் பற்றி முன்பு என்ன கருத்து இருந்தது?
5 புறஜாதியாரின் காலங்கள் 1914-ல் முடிவடைந்தது முதற்கொண்டே, கடவுளுடைய மக்கள் ‘அந்த மகா உபத்திரவத்தில்’ அதிக அக்கறையுடையவர்களாய் இருந்துவந்திருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:14) நவீன நாளைய மகா உபத்திரவமானது, முதல் உலகப் போர் சமயத்திற்கு இணையாக, ஓர் ஆரம்ப கட்டத்தையும் அதற்குப் பிறகு ஓர் இடைமறிக்கும் இடைக்காலத்தையும் பின்னர் கடைசியில் “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்த”மான ஒரு முடிவு கட்டத்தையும் கொண்டிருந்தது என்று அவர்கள் வருடக்கணக்காக நினைத்தனர். அவ்வாறு இருந்தனவென்றால், ‘ஒழுங்குமுறையினுடைய முடிவின்’ இடைக்கால பல பத்தாண்டுகளின்போது என்ன நடக்கும்?—வெளிப்படுத்துதல் 16:14; மத்தேயு 13:39; 24:3; 28:20.
6. வானத்திற்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனத்தை எது நிறைவேற்றுவதாக கருதப்பட்டது?
6 இந்த இடைக்காலத்தின்போது, கடவுளுடைய கூட்டிச்சேர்க்கப்பட்ட மக்களால் செய்யப்படும் பிரசங்க வேலை உட்பட, அந்தக் கூட்டு அடையாளம் காணப்படும் என்று எண்ணப்பட்டது. 1914-18-ல் இருந்த ஆரம்ப கட்டத்திற்கு பிறகு உள்ள இடைக்காலத்தின்போது முன்னுரைக்கப்பட்ட வானத்திற்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறுவதை எதிர்பார்க்கலாம் என்பதாகவும் தோன்றியது. (மத்தேயு 24:29; மாற்கு 13:24, 25; லூக்கா 21:25) வானிலுள்ள சடப்பொருட்களிடமாக கவனம் ஊன்ற வைக்கப்பட்டது—விண் தொடப்புக் கருவிகள், ராக்கெட்டுகள், காஸ்மிக் கதிர்கள் அல்லது காமா கதிர்கள், சந்திரனில் இறங்குவது அல்லது அதை ஆதாரமாகப் பயன்படுத்துவது ஆகியவை.
7. மகா உபத்திரவத்தைப் பற்றிய என்ன திருத்தப்பட்ட புரிந்துகொள்ளுதல் கொடுக்கப்பட்டிருக்கிறது?
7 என்றாலும், ஜனவரி 15, 1970, தி உவாட்ச்டவர், விசேஷமாக, வரப்போகிற மகா உபத்திரவத்தைப்பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனத்தை மறு ஆய்வு செய்தது. முதல் நூற்றாண்டில் நடந்ததை கருத்தில்கொண்டு, நவீனகால உபத்திரவம் 1914-18-ல் ஓர் ஆரம்ப கட்டத்தையும் பத்தாண்டுக்கணக்கான இடைக்காலத்தையும் பிற்பாடு ஒரு புதுத் தொடக்கத்தையும் கொண்டிருக்க முடியாது என்று காட்டியது. அந்தப் பத்திரிகை இவ்வாறு கூறி முடித்தது: “இனிமேலும் சம்பவிக்காத அந்த ‘மகா உபத்திரவம்’ இன்னும் நடக்கவிருக்கிறது, ஏனெனில் அது பொய் மத உலகப் பேரரசினுடைய (கிறிஸ்தவமண்டலம் உட்பட) அழிவை குறிக்கும்; அதைப் பின்தொடர்ந்து அர்மகெதோனில் ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளின் யுத்தம்’ நடக்கும்.”
8. நவீனகால உபத்திரவத்தைப் பற்றிய திருத்தப்பட்ட கருத்தைக் கொண்டு, மத்தேயு 24:29 எப்படி விளக்கப்பட்டது?
8 ஆனால் மத்தேயு 24:29, வானத்திற்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள், “உபத்திரவம் முடிந்தவுடனே” நடைபெறுகின்றன என்று சொல்கிறது. அது எப்படி? இங்கு “உபத்திரவம்” என்பது, பொ.ச. 70-ல் உச்சக்கட்டத்தை அடைந்த உபத்திரவத்தைக் குறித்தது என்று மே 1, 1975, தி உவாட்ச்டவர் கருத்துத் தெரிவித்தது. ஆனால், பொ.ச. 70-ல் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப்பின் ‘உடனேயே’ நம் காலத்தில் வானத்திற்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன என்று எந்த அர்த்தத்தில் சொல்ல முடியும்? கடவுளுடைய பார்வையில், இடையிலுள்ள நூற்றாண்டுகள் ஒரு மிகக் குறுகியகால இடைவெளியாகவே இருக்கும் என்று நியாயப்படுத்தப்பட்டது. (ரோமர் 16:20; 2 பேதுரு 3:8) ஆனாலும், இந்தத் தீர்க்கதரிசனத்தின் ஆழமான ஆராய்ச்சி, விசேஷமாக மத்தேயு 24:29-31-ல் உள்ள தீர்க்கதரிசனம், மிகவும் வித்தியாசமான ஒரு விளக்கத்தைச் சுட்டிக் காண்பிக்கிறது. இது, “பரிபூரண நாள் வரைக்கும் அதிகமதிகமாக” வெளிச்சம் எவ்வாறு பிரகாசிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. (நீதிமொழிகள் 4:18, அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வெர்ஷன்)b ஒரு புதிய, அல்லது மாற்றமான விளக்கம் ஏன் பொருத்தமாயிருக்கிறது என்று நாம் சிந்திப்போம்.
9. வானங்களில் நடக்கும் காரியங்களைப் பற்றிய இயேசுவின் வார்த்தைகளுக்கு எபிரெய வேதாகமம் எவ்வாறு பின்னணியை அளிக்கிறது?
9 இயேசு தம்முடைய அப்போஸ்தலரில் நால்வருக்கு, ‘சூரியன் அந்தகாரப்படுவது, சந்திரன் ஒளியைக் கொடாதிருப்பது, நட்சத்திரங்கள் விழுவது’ பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தார். யூதர்களாக, அப்படிப்பட்ட மொழிநடையை எபிரெய வேதாகமத்திலிருந்து அவர்கள் அறிந்துகொள்வர்; உதாரணமாக, செப்பனியா 1:15-ல், கடவுளின் நியாயத்தீர்ப்பு காலம், “அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்” என்று அழைக்கப்பட்டது. எபிரெய தீர்க்கதரிசிகள் பலருங்கூட, சூரியன் அந்தகாரப்பட்டிருப்பது, சந்திரன் ஒளிராதிருப்பது, நட்சத்திரங்கள் வெளிச்சம் தராமல் இருப்பதுபற்றி விவரித்துக் காட்டியிருக்கின்றனர். இத்தகைய மொழிநடையை, பாபிலோன், ஏதோம், எகிப்து, மற்றும் இஸ்ரவேலரின் வடக்கத்திய ராஜ்யத்திற்கும் எதிரான தெய்வீக செய்திகளில் நீங்கள் காண்பீர்கள்.—ஏசாயா 13:9, 10; 34:4, 5; எரேமியா 4:28; எசேக்கியேல் 32:2, 6-8; ஆமோஸ் 5:20; 8:2, 9.
10, 11. (அ) வானங்களிலுள்ள காரியங்களைப் பற்றி யோவேல் என்ன தீர்க்கதரிசனமுரைத்தார்? (ஆ) பொ.ச. 33-ல், யோவேலின் தீர்க்கதரிசனத்தில் என்னென்ன அம்சங்கள் நிறைவேறின, எவை நிறைவேறவில்லை?
10 இயேசு சொன்னதை அவர்கள் கேட்டபோது, பேதுருவும், மற்ற மூவரும் யோவேல் 2:28-31 மற்றும் 3:15 ஆகியவற்றில் காணப்படும் யோவேலின் தீர்க்கதரிசனத்தை ஒருவேளை மனதிற்கு கொண்டுவந்திருப்பர்: “நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; . . . வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.” “சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமழுங்கும்.”
11 அப்போஸ்தலர் 2:1-4 மற்றும் 14-21-ல் சொல்லப்பட்டிருப்பதுபோல, பொ.ச. 33-ல், பெந்தெகொஸ்தே நாளன்று, ஆண்களும் பெண்களுமாகிய 120 சீஷர்கள்மீது கடவுள் பரிசுத்த ஆவியைப் பொழிந்தார். இதுவே யோவேல் முன்னறிவித்து சொன்ன காரியம் என்று அப்போஸ்தலன் பேதுரு வெளிப்படுத்தினார். என்றாலும், ‘சூரியன் இருளாக மாறுவது, சந்திரன் இரத்தமாக மாறுவது, நட்சத்திரங்கள் ஒளிமழுங்குவது’ பற்றிய யோவேலின் வார்த்தைகளைக் குறித்ததிலென்ன? இது பொ.ச. 33-ல் அல்லது யூதக் காரிய ஒழுங்குமுறையினுடைய முடிவின் 30-வருடத்துக்கும் மேற்பட்டு நீடித்த காலத்தில் நிறைவேறியது என்று எதுவும் குறிப்பிடுவதில்லை.
12, 13. யோவேல் முன்னுரைத்த வானத்திற்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் எப்படி நிறைவேறின?
12 தெளிவாகவே, யோவேல் தீர்க்கதரிசனத்தின் பிற்பகுதி ‘யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதோடு,’ அதாவது, எருசலேமின் அழிவோடு நெருங்கிய தொடர்புடையதாய் இருந்தது. பொ.ச. 70-ல் எருசலேமுக்கு நேரிட்ட உபத்திரவத்தைப்பற்றி நவம்பர் 15, 1966, தி உவாட்ச்டவர் இவ்வாறு சொன்னது: “எருசலேமையும் அவளின் பிள்ளைகளையும் குறித்ததில் அது உண்மையிலேயே ‘யெகோவாவுடைய நாள்’ ஆக இருந்தது. மேலும் அந்த நாளின் சம்பந்தமாக, ‘இரத்தம், அக்கினி, புகை படலங்கள்’ மிகுதியாக இருந்தது, நகரத்தின் துயருக்கு பகலில் சூரியன் ஆறுதலளிக்கவில்லை, சந்திரன் சிந்தப்பட்ட இரத்தத்தை மனதுக்கு கொண்டுவந்து, இரவு நேரத்தில் அமைதியான, பளபளப்பான சந்திரவொளியை தரவில்லை.”c
13 ஆம், நாம் கவனித்திருக்கிற மற்ற தீர்க்கதரிசனங்களின்படி, யோவேல் முன்னறிவித்த வானத்திற்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் யெகோவா நியாயத்தீர்ப்பு செய்யும்போது நிறைவேறவிருந்தன. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அந்தகாரப்படுவது, யூத ஒழுங்குமுறையின் முடிவு காலத்தினூடே நீடித்திருப்பதற்குப் பதிலாக, அழிவுண்டாக்கும் படைகள் எருசலேமிற்கு எதிராக வந்தபோது நடைபெற்றது. நியாயமாகவே, தற்போதைய ஒழுங்குமுறையை கடவுள் அழிக்க ஆரம்பிக்கும்போது, யோவேல் தீர்க்கதரிசனத்தின் அந்தப் பாகத்தினுடைய பெரிய நிறைவேற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம்.
வானத்திற்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளுக்கு முன்பு எந்த உபத்திரவம்?
14, 15. மத்தேயு 24:29-ஐப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலில் யோவேலின் தீர்க்கதரிசனம் என்ன பாதிப்பை உடையதாயிருக்கிறது?
14 யோவேல் தீர்க்கதரிசன நிறைவேற்றம் (இதே போன்ற மொழிநடையைப் பின்பற்றும் மற்ற தீர்க்கதரிசனங்களுக்கு இசைவாக), மத்தேயு 24:29-ல் உள்ள வார்த்தைகளை புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. தெளிவாகவே, ‘சூரியன் அந்தகாரப்படுவது, சந்திரன் ஒளிகொடாதிருப்பது, நட்சத்திரங்கள் விழுவது’ போன்றவைப்பற்றி இயேசு சொன்ன காரியங்கள், தற்போதைய ஒழுங்குமுறையினுடைய முடிவின் பல பத்தாண்டு காலத்தில் நடந்தேறும் விண்வெளி ராக்கெட் முன்னேற்றம், சந்திரனில் இறங்குவது, மற்றும் இதைப்போன்ற மற்ற காரியங்களைக் குறிப்பதில்லை. இல்லை, வரப்போகிற அழிவாகிய ‘யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாளோடு’ இணைந்த சம்பவங்களை அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.
15 இது வானத்திற்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் எப்படி “உபத்திரவம் முடிந்தவுடனே” நடக்கும் என்ற நம் புரிந்துகொள்ளுதலோடு சம்பந்தப்படுகிறது. பொ.ச. 70-ல் முடிவடைந்த உபத்திரவத்தை இயேசு குறிப்பிட்டுக்கொண்டில்லை. மாறாக, எதிர்காலத்தில், வாக்களிக்கப்பட்ட அவருடைய ‘வந்திருத்தலின்’ உச்சக்கட்டமாக இருக்கும், இந்த உலக ஒழுங்குமுறைக்கு ஏற்படவிருந்த மகா உபத்திரவத்தினுடைய ஆரம்பத்தை அவர் குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். (மத்தேயு 24:3) அந்த உபத்திரவம் இன்னும் நமக்கு முன்னால் வர இருக்கிறது.
16. மாற்கு 13:24 எந்த உபத்திரவத்தை குறித்துக்காட்டியது, ஏன் அவ்வாறு?
16 ‘அந்த நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்’ என்ற மாற்கு 13:24-ல் உள்ள வார்த்தைகளைக் குறித்ததிலென்ன? இங்கு “அந்த” என்ற வார்த்தை நெடுங்காலம் கழித்து நடக்கப்போகும் ஒன்றைக் குறிக்கும் சுட்டுப் பெயரான எக்கீனாஸ் (e·keiʹnos) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானதாகும். எக்கீனாஸ், வெகு முந்தைய காலத்தில் நடந்த (அல்லது முன்பு சொல்லப்பட்ட) அல்லது நெடுந்தொலைவில் உள்ள எதிர்காலத்தில் நடக்கப்போகும் ஒன்றை சுட்டிக்காட்டுவதற்கு பயன்படுத்தப்படலாம். (மத்தேயு 3:1; 7:22; 10:19; 24:38; மாற்கு 13:11, 17, 32; 14:25; லூக்கா 10:12; 2 தெசலோனிக்கேயர் 1:9) எனவே, மாற்கு 13:24 ‘அந்த உபத்திரவம்’ என்று சொல்லும்போது, ரோமர்களால் ஆரம்பிக்கப்பட்ட உபத்திரவத்தைக் குறிக்காமல், தற்போதைய ஒழுங்குமுறையினுடைய முடிவில் யெகோவாவின் வல்லமைபொருந்திய செயலைக் குறிக்கிறது.
17, 18. மகா உபத்திரவம் எப்படி தொடரும் என்பதைக் குறித்ததில் வெளிப்படுத்துதல் என்ன விளக்கத்தைக் கொடுக்கிறது?
17 வெளிப்படுத்துதல் 17 முதல் 19 வரையான அதிகாரங்கள், மத்தேயு 24:29-31, மாற்கு 13:24-27, மற்றும் லூக்கா 21:25-28 ஆகியவற்றின் திருத்தப்பட்ட புரிந்துகொள்ளுதலுக்கு பொருந்தி, சரியென காட்டுகின்றன. எவ்விதத்தில்? இந்த உபத்திரவம் ஒரே சமயத்தில் ஆரம்பித்து, முடிவடையாது என்று சுவிசேஷங்கள் காண்பிக்கின்றன. அது ஆரம்பமான பின்பு, ‘மனுஷகுமாரனுடைய அடையாளத்தை’ கண்டு பிரதிபலிப்பதற்கு—புலம்புவதற்கு, மேலும் லூக்கா 21:26-ல் சொல்லப்பட்டிருக்கிறபடி, ‘பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் இருதயம் சோர்ந்துபோவதற்கு’ கீழ்ப்படிதலற்ற மனிதகுலத்திலுள்ள சிலர் இன்னும் உயிரோடு இருப்பார்கள். இந்த மிதமிஞ்சிய பயம் அவர்களுடைய நெருங்கிவரும் அழிவை முன்னறிவிக்கும் ‘அந்த அடையாளத்தை’ காண்பதினால் இருக்கும்.
18 எதிர்கால மகா உபத்திரவம், சர்வதேச ‘மூர்க்க மிருகத்தின்’ ராணுவமயமாக்கப்பட்ட ‘கொம்புகள்,’ ‘அந்த மகா வேசியாகிய’ மகா பாபிலோனின்மீது திரும்பும்போது, ஆரம்பிக்கும் என்று வெளிப்படுத்துதலிலுள்ள பதிவு காண்பிக்கிறது.d (வெளிப்படுத்துதல் 17:1, 2, 10-16) ஆனால் அநேக மக்கள் தொடர்ந்திருப்பார்கள், ஏனென்றால், ராஜாக்கள், வர்த்தகர்கள், கப்பல் மாலுமிகள், மேலும் மற்றவர்களும் பொய் மதத்தின் முடிவிற்காக துக்கிப்பார்கள். சந்தேகமின்றி, அவர்களுடைய நியாயத்தீர்ப்பு அடுத்து நிகழும் என்று அநேகர் உணர்ந்துகொள்வார்கள்.—வெளிப்படுத்துதல் 18:9-19.
என்ன வரவிருக்கிறது?
19. மகா உபத்திரவம் ஆரம்பமாகும்போது எதை நாம் எதிர்பார்க்கலாம்?
19 மத்தேயு, மாற்கு, லூக்காவிலுள்ள சுவிசேஷப் பதிவுகள் வெளிப்படுத்துதல் 17 முதல் 19 வரையுள்ள அதிகாரங்களோடு இணைந்து, சீக்கிரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதில் மிகத் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கின்றன. கடவுள் நியமித்த காலத்தில், பொய் மத உலகப் பேரரசிற்கு (மகா பாபிலோன்) எதிரான தாக்குதலோடு மகா உபத்திரவம் ஆரம்பிக்கும். இது முக்கியமாக, உண்மையற்ற எருசலேமுக்கு ஒப்பான கிறிஸ்தவமண்டலத்துக்கு விரோதமாக தீவிரமாய் இருக்கும். உபத்திரவத்தின் இந்தக் கட்டம் “முடிந்தவுடனே,” “சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் [முன்நேரிட்டிராத] தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்.”—மத்தேயு 24:29; லூக்கா 21:25.
20. என்னென்ன வானத்திற்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளை நாம் இன்னும் எதிர்பார்க்கலாம்?
20 ‘சூரியன் அந்தகாரப்படுவதும், சந்திரன் ஒளிகொடாமல் போவதும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழுந்துபோவதும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படுவதும்’ எந்த அர்த்தத்தில் நடைபெறும்? சந்தேகமில்லாமல், மகா உபத்திரவத்தின் ஆரம்பப் பகுதியில், பல ஒளிப்பிழம்புகள்—மத உலகத்தின் பிரபலமான குருமார்—வெளிப்படுத்துதல் 17:16-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘பத்துக் கொம்புகளால்’ அம்பலப்படுத்தப்பட்டு, அழிக்கப்பட்டிருப்பர். அரசியல் அதிகாரங்களும் அசைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. சொல்லர்த்தமான வானங்களிலும் பயமுறுத்தும் சம்பவங்கள் நடக்குமா? பெரும்பாலும், ஆம், யூத ஒழுங்குமுறையின் முடிவுக்கருகாமையில் நடப்பதாக ஜொஸீஃபஸ் விளக்கியதைவிட அதிக ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக இருக்கும். பூர்வீக கடந்தகாலத்தில், கடவுள் அப்படிப்பட்ட திடீர் மாறுபாட்டுக்குரிய விளைவுகளை உண்டாக்குவதன்மூலம் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினார் என்று நமக்குத் தெரியும், அவ்வாறு அவரால் திரும்பவும் செய்யமுடியும்.—யாத்திராகமம் 10:21-23; யோசுவா 10:12-14; நியாயாதிபதிகள் 5:20; லூக்கா 23:44, 45.
21. எவ்வாறு எதிர்காலத்தில் ஓர் “அடையாளம்” நடக்கும்?
21 இந்தச் சமயத்தில் எல்லா மூன்று சுவிசேஷ எழுத்தாளர்களும் அடுத்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தும்போது டோட்டே (toʹte) (அப்போது) என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். ‘அப்போது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும்.’ (மத்தேயு 24:30; மாற்கு 13:26; லூக்கா 21:27) முதல் உலகப் போர் முதற்கொண்டு, இயேசுவின் உண்மை சீஷர்கள் அவருடைய காணக்கூடாத வந்திருத்தலின் கூட்டு அடையாளத்தைப் பகுத்தறிந்திருக்கின்றனர், அதேநேரத்தில் பல மக்கள் அதை கண்டுணரவில்லை. ஆனால் மத்தேயு 24:30, எதிர்காலத்தில், மேலுமான ஓர் “அடையாளம்” தோன்றுவதைப்பற்றி முன்குறிப்பிடுகிறது, அது “மனுஷகுமார”னைப்பற்றியது, சகல தேசத்தாரும் அதை அறியும்படி வற்புறுத்தப்படுவர். இயேசு, காணக்கூடாதவகையில் மேகங்களோடு வரும்போது, அவருடைய ராஜ்ய அதிகாரத்தின் இயற்கைமுறையல்லாத வெளிப்பாட்டினால் அந்த ‘வருகையை’ (கிரேக்கில், எர்கோமெனென் [er·khoʹme·non]) உலகம் முழுவதிலுமுள்ள எதிர்க்கும் மனிதர்கள் கண்டுணரவேண்டும்.—வெளிப்படுத்துதல் 1:7.
22. மத்தேயு 24:30-ல் உள்ள ‘அடையாளத்தை’ காண்பதன் பாதிப்பு என்னவாயிருக்கும்?
22 மத்தேயு 24:30, அடுத்து வருகிறதை அறிமுகப்படுத்துவதற்கு மறுபடியும் டோட்டே என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. அப்போது தேசங்கள், தங்களுடைய நிலைமையின் விளைவை உணர்ந்தவர்களாய் தங்களைத்தாமே அடித்துக்கொண்டு, புலம்புவார்கள். அவர்களுடைய அழிவு உடனடியாக வரும் என்பதை ஒருவேளை உணர்ந்தவர்களாய் அவ்வாறு செய்வார்கள். கடவுளுடைய ஊழியரின் விஷயத்தில் எவ்வளவு வித்தியாசமாயிருக்கும், மீட்பு சமீபமாயிருப்பதை அறிந்தவர்களாய், நம்முடைய தலைகளை நாம் உயர்த்துபவர்களாய் இருப்போம்! (லூக்கா 21:28) பரலோகத்திலும் பூமியிலுமுள்ள உண்மை வணக்கத்தார் மகா வேசியின் முடிவில் சந்தோஷப்படுவதை வெளிப்படுத்துதல் 19:1-6-ம் காண்பிக்கிறது.
23 மாற்கு 13:27-ல் இயேசுவின் தீர்க்கதரிசனம் தொடர்ந்து சொல்கிறது: “அப்பொழுது [டோட்டே] அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்.” இங்கே இயேசு இன்னும் பூமியில் உயிரோடிருக்கும் 1,44,000 ‘தெரிந்தெடுக்கப்பட்டவர்களின்’ மீதியானவர்கள்மீது கவனத்தை ஊன்றவைக்கிறார். இயேசுவின் இந்த அபிஷேகம்செய்யப்பட்ட சீஷர்கள் காரிய ஒழுங்குமுறையினுடைய முடிவின் முற்பகுதியில், தேவராஜ்ய ஐக்கியத்திற்குள் கொண்டுவரப்பட்டிருந்தார்கள். ஆனாலும், பயன்படுத்தப்பட்ட வரிசைக்கிணங்க மாற்கு 13:27-ம் மத்தேயு 24:31-ம் வேறு ஏதோவொன்றை விளக்குகின்றன. “வலுவாய்த் தொனிக்கும் எக்காளச் சத்தத்தோடே” பூமியின் கடைமுனைகளிலிருந்து மீதமிருக்கும் ‘தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்’ சேர்க்கப்படுவார்கள். எப்படி அவர்கள் சேர்க்கப்படுவார்கள்? கேள்விக்கிடமின்றி, அவர்கள் ‘முத்திரையிடப்பட்டு,’ ‘அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாய் இருக்கிறவர்களின்’ பாகமாக யெகோவாவினால் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ளப்படுவார்கள். மேலும் கடவுளுடைய குறிக்கப்பட்ட காலத்தில், ராஜ-ஆசாரியர்களாக இருக்க பரலோகத்தில் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள்.e இது அவர்களுக்கும் அவர்களுடைய உண்மையுள்ள உடன் தோழர்களாகிய ‘திரள் கூட்டத்தினருக்கும்’ சந்தோஷத்தைக் கொண்டுவரும். இவர்கள்தாமே பரதீஸான பூமியில் ஆசீர்வாதங்களை அனுபவிக்க ‘மகா உபத்திரவத்திலிருந்து வெளிவருவதற்கு’ அடையாளமிடப்படுவார்கள்.—மத்தேயு 24:22; வெளிப்படுத்துதல் 7:3, 4, 9-17; 17:14; 20:6; எசேக்கியேல் 9:4, 6.
24. மத்தேயு 24:29-31 வரப்போகிற காரியங்களைப் பற்றிய என்ன வரிசையை வெளிப்படுத்துகிறது?
24 அப்போஸ்தலர், “. . . எங்களுக்குச் சொல்லவேண்டும்” என்று சொன்னபோது, இயேசுவின் பதில் அவர்கள் கிரகித்துகொள்ள முடிந்ததைவிட அதிகத்தை உள்ளடக்கியது. எனினும், தங்களுடைய வாழ்நாளுக்குள், அவருடைய தீர்க்கதரிசனத்தின் மாதிரியான நிறைவேற்றத்தைக் காண்பதில் அவர்கள் சந்தோஷமடைந்தனர். அவருடைய பதிலைப்பற்றிய நம்முடைய படிப்பு, சமீப எதிர்காலத்தில் நிறைவேற்றமடையும் அவருடைய தீர்க்கதரிசனத்தின் அந்தப் பாகத்திற்கு கவனத்தை ஊன்றவைத்திருக்கிறது. (மத்தேயு 24:29-31; மாற்கு 13:24-27; லூக்கா 21:25-28) ஏற்கெனவே நம்முடைய மீட்பு சமீபித்துக்கொண்டிருப்பதை நம்மால் காணமுடிகிறது. நாம் மகா உபத்திரவம் ஆரம்பமாவதையும் அதற்குப் பிறகு மனுஷகுமாரனுடைய அடையாளத்தையும் அதற்கும் பிறகு தெரிந்தெடுக்கப்பட்டவர்களை கடவுள் கூட்டிச்சேர்த்தலையும் எதிர்நோக்கியிருக்கலாம். இறுதியில், அர்மகெதோனில் யெகோவாவின் கட்டளையை நிறைவேற்றுபவராக, நம்முடைய யுத்த-ராஜா, சிங்காசனத்திலமர்த்தப்பட்ட இயேசு ‘வெற்றிபெறுவார்’. (வெளிப்படுத்துதல் 6:2) யெகோவாவின் அந்த நாள், அவர் பழிவாங்குகையில், 1914 முதற்கொண்டு கர்த்தராகிய இயேசுவின் நாளை குறித்துக் காட்டியிருக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையினுடைய முடிவின் மகத்தான முடிவுகட்டமாக வரும்.
25. லூக்கா 21:28-ன் வரவிருக்கும் எதிர்கால நிறைவேற்றத்தில் நாம் எவ்வாறு பங்குகொள்ளலாம்?
25 “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்,” என்ற இயேசுவுடைய வார்த்தைகளின் வரவிருக்கும் எதிர்கால நிறைவேற்றத்திற்கு பிரதிபலிக்கும் விதமாக, நீங்கள்தாமே தொடர்ந்து தெய்வீக போதனையால் பயனடைவீர்களாக. (லூக்கா 21:28) யெகோவா தம்முடைய புனித பெயரைத் தொடர்ந்து பரிசுத்தப்படுத்துகையில், தெரிந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் திரள்கூட்டத்தினருக்கும் என்னே ஓர் எதிர்காலம் முன்னிருக்கிறது!
[அடிக்குறிப்புகள்]
a நம் நாளைய நடப்பு சம்பவங்கள் எவ்வாறு பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றமடையச் செய்கின்றன என்பதை எடுத்துக்காட்டி, இதற்கு சான்றை அளிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமாயிருக்கின்றனர்.
b கூடுதலான பொருள், உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி 1973-ல் வெளியிட்ட கடவுளுடைய ஆயிர ஆண்டு ராஜ்யம் நெருங்கிவிட்டது (God’s Kingdom of a Thousand Years Has Approached) என்ற புத்தகத்தில் 296-323 பக்கங்களிலும் செப்டம்பர் 15, 1982, தி உவாட்ச்டவர், 17-22 பக்கங்களிலும் வெளிவந்தது.
c எருசலேமின்மீதான ரோமர்களின் முதல் தாக்குதலுக்கும் (பொ.ச. 66) அதன் அழிவுக்கும் இடையே நடந்த சம்பவங்களைப்பற்றி ஜொஸீஃபஸ் எழுதுகிறார்: “இரவு நேரத்தில் பேரழிவை உண்டாக்கும் ஒரு சூறாவளி ஆரம்பித்தது; புயற்காற்று சீறியது, மழை விசைமாரிப் பெய்தது, மின்னல்கள் இடைவிடாமல் தொடர்ந்தன, இடிமுழக்கங்கள் பயமுறுத்தின, பூமி பிரமாண்டமான சப்தங்களோடு அதிர்ந்தது. மனித இனத்திற்கு ஆபத்து என்பது காரியங்களின் முழு கட்டமைப்பின் இந்த வீழ்ச்சியினால் மிகத் தெளிவாக முன்னறிவிக்கப்பட்டது, அறிகுறிகள் ஓர் இணையற்ற பேரழிவை அடையாளப்படுத்தின என்று யாராலும் சந்தேகிக்க முடியவில்லை.”
d ‘மகா உபத்திரவம்’ மேலும் ‘ஓர் உபத்திரவம்’ என்று இயேசு பேசியது அதன் முதல் பொருத்தத்தில் யூத ஒழுங்குமுறையின் அழிவாக இருந்தது. ஆனால் நம்முடைய நாளிற்கு மட்டும் பொருந்தக்கூடிய வசனங்களில் அவர் “அந்த” என்ற சுட்டிடைச்சொல்லைப் பயன்படுத்தினார்; “அந்த உபத்திரவம்” என்று சொன்னார். (மத்தேயு 24:21, 29; மாற்கு 13:19, 24) வெளிப்படுத்துதல் 7:14 இந்த எதிர்கால சம்பவத்தை ‘அந்த மகா உபத்திரவம்,’ நேர்பொருளில் “மகா அந்த உபத்திரவம்” என்று கூறியது.
e ஆகஸ்ட் 15, 1990, தி உவாட்ச்டவரில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்,” என்பதைப் பாருங்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ யோவேல் 2:28-31 மற்றும் 3:15-ல் உள்ள அம்சங்கள் எவ்வாறு முதல் நூற்றாண்டில் நிறைவேறின?
◻ மத்தேயு 24:29 எந்த உபத்திரவத்தை குறிப்பிடுகிறது, நாம் ஏன் அந்த முடிவுக்கு வருகிறோம்?
◻ மத்தேயு 24:29 என்ன வானத்திற்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறது, இது எப்படி உபத்திரவம் முடிந்தவுடனே நடக்கும்?
◻ லூக்கா 21:26, 28 எதிர்காலத்தில் எவ்வாறு நிறைவேறும்?
23. (அ) தெரிந்தெடுக்கப்பட்டவர்களிடமாக இயேசு என்ன நடவடிக்கையை எடுப்பார்? (ஆ) மீந்தவர்கள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதைக் குறித்து என்ன சொல்லப்படலாம்?
[பக்கம் 16, 17-ன் படம்]
ஆலயப் பகுதி
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.