நோக்கமுள்ள ஒரு வாழ்க்கைமுறை
மெல்வா A. வீலான்ட் சொன்னபடி
நான் முழுக்காட்டப்பட்டு ஒருசில மாதங்களுக்குப் பின்பு மார்ச் 1940-ல், என்னுடைய தங்கை ஃபிலிஸ் என்னிடம் வந்து கேட்டாள்: “நீங்கள் ஏன் பயனியர் சேவை செய்யக்கூடாது?” “பயனியர் சேவையா?” என்று நான் கேட்டேன். “ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் முழு நேரமாக பிரசங்கிப்பதை நீ சொல்கிறாயா?”
‘என்னுடைய குறைவான பைபிள் அறிவோடும் வங்கியிலிருந்த அதைவிட இன்னும் குறைவான சேமிப்போடும் நான் எப்படி பயனியராக இருக்கமுடியும்?’ என்பதாக நான் யோசித்தேன். என்றாலும் ஃபிலிஸின் கேள்வி என்னை யோசிக்கும்படி செய்தது. அதைக் குறித்து நான் அதிகமாக ஜெபிக்கவும் செய்தேன்.
கடைசியாக நான் இவ்வாறு சிந்தித்துப் பார்த்தேன், ‘அவருடைய ராஜ்யத்தை முதலில் தேடினால் நம்மை கவனித்துக்கொள்வதாக அவர் வாக்களிக்கும்போது நான் ஏன் கடவுளில் நம்பிக்கை வைக்கக்கூடாது?’ (மத்தேயு 6:33) ஆகவே 1940 ஜூன் மாதத்தில், உடுப்பு தைக்கும் என்னுடைய வேலையிலிருந்து நின்றுவிடுதாக நான் தகவல் தெரிவித்தேன். பின்பு நான் ஆஸ்திரேலியாவிலுள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை அலுவலகத்துக்கு ஒரு பயனியர் நியமிப்புக் கேட்டு எழுதினேன்.
என்னுடைய வாழ்நாட் கால நியமிப்பு
ஒருசில வாரங்களுக்குப் பின்னர், ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமாகிய சிட்னியின் புறநகர் பகுதியான ஸ்டிராத்ஃபீல்ட்-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமைக் காரியாலயத்தின் மைதானம் ஒன்றில் நடக்கவிருந்த மாநாடு ஒன்றுக்கு நான் சென்றுவந்தப் பின்பு எனக்கு ஒரு நியமிப்பு கொடுக்கப்படும் என்பதைத் தெரிவித்த ஒரு பதிலை நான் பெற்றுக்கொண்டேன். மாநாடு முடிந்த அடுத்த நாள் காலையில் நான் என்னுடைய நியமிப்பைப் பெற்றுக்கொள்வதற்காக அலுவலகத்துக்குச் சென்றேன்.
அலுவலகத்திலிருந்த ஒரு நபர் இவ்விதமாக விளக்கினார்: “இப்பொழுது சலவையகத்தில் அதிக வேலை இருக்கிறது. இங்கே தங்கியிருந்து ஒருசில வாரங்களுக்கு உங்களால் உதவமுடியுமா?” அது நடந்தது ஆகஸ்ட் 1940-ல்—நான் இன்னமும் சலவையகத்தில் வேலைசெய்துகொண்டிருக்கிறேன்! அந்தச் சமயத்தில் தலைமைக் காரியாலய குடும்பத்தில் 35 பேர் மாத்திரமே இருந்தனர்; இப்பொழுது 276 பேர் இருக்கின்றனர்.
ஆனால், ஒரு சலவையகத்தில் வேலைசெய்வதை நான் ஏன் “நோக்கமுள்ள ஒரு வாழ்க்கைமுறை,” என்பதாக கருதுகிறேன் என்பதாக நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். விசேஷமாக இப்பொழுது இதுவே 50-க்கும் மேலான ஆண்டுகளாக என்னுடைய வேலையாக இருப்பதால் நீங்கள் அவ்வாறு யோசிக்கலாம். நான் விளக்குவதற்கு முன்பாக, ஆரம்ப காலத்தில் எனக்கிருந்த நாட்டங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும்.
விளையாட்டு என்னுடைய வாழ்க்கைமுறையானது
நான் ஐந்து பிள்ளைகளில் மூத்த பிள்ளையாக ஜனவரி 1, 1914-ல் மெல்போர்னில் பிறந்தேன். மிகச் சிறந்த கொள்கைகளோடு வாழ்ந்து, தேவைப்படும்போது சிட்சையை அளித்த அன்புள்ள பெற்றோர் எங்களுக்கு இருந்தார்கள். திட்டவட்டமானதென்று குறிப்பிடப்பட முடியாத மதசம்பந்தமான வளர்ப்பையும் நாங்கள் கொண்டிருந்தோம், ஏனென்றால் எங்களுடைய பெற்றோர் சர்ச்சுக்குச் செல்பவர்களல்ல. என்றபோதிலும், பிள்ளைகளாகிய நாங்கள் சர்ச் ஆஃப் இங்லண்ட்-ன் ஞாயிறு வேதபாட பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
நான் பள்ளியிலிருந்து 1928-ல் வெளியேறி ஒரு தையல் மடந்தையில் வேலைபார்க்க ஆரம்பித்தபோது, பெரும்பாலான என்னுடைய ஓய்வுநேரத்தை விளையாடுவதில் செலவழிக்கத் தீர்மானித்தேன். இது என்னுடைய கூச்சமான சுபாவத்தை மேற்கொள்ள உதவக்கூடும் என்பதாக நான் நினைத்தேன். நான் ஒரு டென்னிஸ் மனமகிழ் மன்றத்தில் சேர்ந்துகொண்டு வருடம் முழுவதும் விளையாடினேன். குளிர் காலத்தில் நான் கூடைப்பந்தாட்டமும் தளக்கட்டுப் பந்தாட்டமும் ஆடினேன், கோடை காலத்தில் பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடினேன். கிரிக்கெட்டை நான் வெகுவாக நேசித்தேன், மாநிலங்களிடையே நடைபெறும் போட்டிகளில் தகுதிப்பெறுவதற்காக விரைவு பந்து வீச்சாளராக என்னுடைய திறமையை முன்னேற்றுவிக்க கடினமாக முயன்றேன்.
விளையாட்டுகளிலிருந்து வித்தியாசமான ஒரு நோக்கம்
கெட்ட காரியங்களைச் செய்தவர்களை முடிவில்லாமல் வாதிப்பதற்காக நரகம் என்றழைக்கப்படும் ஓரிடத்தை அன்பான ஒரு கடவுள் கொண்டிருக்கிறார் என்ற போதனையினால் நான் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், குழம்பிப் போயிருந்தேன். இது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை. ஆகவே எதிர்பாராத விதமாக பைபிளிலிருந்து “நரகம்” என்பதனுடைய உண்மையான பொருளை நான் கற்றறிந்தபோது என்னுடைய மகிழ்ச்சியைக் கற்பனை செய்துபாருங்கள். அது இவ்விதமாகத் தான் நடந்தது:
என்னைவிட ஐந்து வயது இளையவளான என்னுடைய தங்கை ஃபிலிஸ்கூட விளையாட்டுக்களை வெகுவாக அனுபவித்தாள், நாங்கள் இருவருமே ஒரே பெண்கள் கிரிக்கெட் அணியில் இருந்தோம். அணியிலிருந்த ஒரு பெண் 1936-ல் மிகவும் மதப்பற்றுள்ளவன் என்பதாக அறியப்பட்டிருந்த ஜிம் என்ற பெயருள்ள ஓர் இளம் மனிதனை ஃபிலிஸ்-க்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். விரைவில் ஜிம் பைபிள் போதகங்களைப்பற்றி ஃபிலிஸிடம் பேச ஆரம்பித்தான். அவள் மிகவும் ஆர்வமுள்ளவளாக இருந்தாள். “அது அவ்வளவு தர்க்கரீதியாகவும் நியாயமாகவும் இருக்கிறது,” என்பதாக அவள் என்னிடம் சொல்வாள்.
அந்தச் சமயத்தில் ஃபிலிஸ்-ம் நானும் வீட்டில் ஒரே அறையில் தங்கியிருந்தோம். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி ஜிம் அவளிடம் பேசிய காரியங்களில் என்னுடைய அக்கறையைத் தூண்டுவதற்கு அவள் முயற்சி செய்துகொண்டிருந்தாள். “மனித அரசாங்கங்கள் செய்யத் தவறிவிட்டிருப்பவற்றை அது செய்யப்போகிறது,” என்பதாக கிளர்ச்சியடைந்தவளாய் என்னிடம் சொன்னாள். என்றபோதிலும், இது நம்மைக் குழப்பக்கூடிய மற்றொரு மதமே என்றும் எதிர்காலத்தைப் பற்றி யாருக்கும் உண்மையில் தெரியாது என்றும் நான் அவளோடு தர்க்கம் செய்தேன். ஆனால் ஃபிலிஸ் உறுதியாக இருந்தாள், நான் வாசிக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் பல்வேறு இடங்களில் இலக்கியங்களை வைத்திருந்தாள்.
இந்தப் புதிய நம்பிக்கையைக் குறித்து ஃபிலிஸ் இத்தனை உற்சாகமாயிருப்பதற்கு காரணம் என்ன என்பதை அறிய நான் ஆவலாயிருந்தேன், ஆகவே ஒரு நாள் ஒரு சிறு புத்தகத்தைக் கையிலெடுத்தேன். அது வருங்கால உலகம் (ஆங்கிலம்) என்ற ஆவலைத் தூண்டும் தலைப்புடையதாய் இருந்தது. அதன் பக்கங்களைப் புரட்டி “நரகம்” என்ற வார்த்தையைப் பார்த்தபோது என்னுடைய கவனம் தூண்டப்பட்டது. “நரகம்” என்ற பைபிள் வார்த்தை உண்மையில் மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேதக் குழியைக் குறிப்பதையும் நல்லவர்களும் கெட்டவர்களும் அங்கே செல்வதையும் நான் கற்றுக்கொண்டபோது ஆச்சரியமடைந்தேன். நரகம் வாதனைக்குரிய ஓரிடமல்ல என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்; மரித்தோர் உணர்வற்றவர்களாகவும் எதையும் உணரமுடியாதவர்களாகவும் இருக்கின்றனர்.—பிரசங்கி 9:5, 10; சங்கீதம் 146:3, 4.
இது எனக்கு அர்த்தமுள்ளதாக தோன்றியது, விசேஷமாக அன்பும் வல்லமையுமுள்ள கடவுள் உயிர்த்தெழுதல் என்று அழைக்கப்படும் ஓர் அற்புதத்தின் மூலமாக மரித்தோரை உயிருக்குக் கொண்டுவருவதாக வாக்களித்திருக்கிறார் என்பதைச் சிறுபுத்தகம் விளக்கியபோது அது அவ்வாறு தோன்றியது. (யோவான் 5:28, 29) இப்பொழுது ஜிம், ஃபிலிஸ்-க்கு சொல்லிக்கொண்டிருந்த காரியங்களைப் பற்றி நான் அதிகத்தைக் கண்டுபிடிக்க விரும்பினேன். நான் சிறுமியாக இருந்தபோது என்னுடைய அப்பா எனக்குக் கொடுத்திருந்த சிறிய கிங் ஜேம்ஸ் வர்ஷன்-ஐ கண்டுபிடித்து புத்தகத்தில் வரிசையாக கொடுக்கப்பட்டிருந்த வசனங்களை எடுத்துப் பார்த்தேன். நரகத்தைப் பற்றியும் மரித்தோரின் நிலைமையைப் பற்றியும் சொல்லப்பட்டதை இது உறுதிசெய்தது.
கடவுளுக்கு யெகோவா என்ற தனிப்பட்ட பெயர் இருப்பதைக் கற்றறிந்தது என்னைக் கவர்ந்த மற்றொரு ஆச்சரியமாக இருந்தது. (சங்கீதம் 83:17) கடவுள் செய்யும் அல்லது சம்பவிக்கும்படி அனுமதிக்கும் எல்லா காரியங்களுக்கும் ஒரு நோக்கத்தை, அல்லது காரணத்தை, அவர் கொண்டிருந்தார் என்பதையும் என்னால் காணமுடிந்தது. இது ‘உண்மையில் என்னுடைய வாழ்க்கையின் நோக்கமென்ன?’ என்பதாக என்னை கேட்டுக்கொள்ளும்படி செய்தது. அப்போது முதற்கொண்டு, வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றையும் அசட்டை செய்துவிடும் அளவுக்கு விளையாட்டை அத்தனை முக்கியமானதாக கருதுவது எனக்கு அதிக பிரயோஜனமாக இருக்குமா என்பதாக நான் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
தீர்மானங்களைச் செயல்படுத்துவது
வாழ்க்கையைப் பற்றிய என்னுடைய நோக்குநிலை மாறிவிட்டது என்பது ஜிம்முக்கும் ஃபிலிஸ்-க்கும் தெரியாமலே இருந்தது. ஆனால் நண்பர் ஒருவரின் விருந்துக்கு எங்களுடைய குடும்பம் அழைக்கப்பட்டபோது அதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அந்நாட்களில், இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அனைவரும் எழுந்துநின்று இங்கிலாந்து அரசருக்கு வாழ்த்துக்கூறி அனைவரும் தங்கள் கண்ணாடிக்குவளையை உயர்த்தி பின்னர் பருகுவார்கள். என்றபோதிலும், ஜிம் மற்றும் ஃபிலிஸ்-உடன் நான் உட்கார்ந்துகொண்டிருக்க தீர்மானித்தேன். நான் எழுந்து நிற்காமல் இன்னும் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தபோது அவர்களால் நம்பவேமுடியவில்லை! நிச்சயமாகவே நாங்கள் எந்த அவமதிப்பையும் கருதவில்லை, ஆனால் கிறிஸ்தவர்களாக நாங்கள் நடுநிலைமை வகித்து இப்படிப்பட்ட தேசிய கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது என்பதாக நினைத்தோம்.—யோவான் 17:16.
இருந்தபோதிலும், என்னுடைய பெற்றோரும் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். நாங்கள் உண்மையற்றவர்கள் அல்லது புத்தி சுவாதீனமில்லாதவர்கள்—அல்லது இரண்டு தன்னைகளையும் உடையவர்களாயிருக்கிறோம் என்று அவர்கள் சொன்னார்கள்! பின்னர், பெண்கள் கிரிக்கெட் அணிக்கான பரிசளிக்கும் ஆண்டு விழாவுக்கு ஃபிலிஸ்-ம் நானும் சென்றிருந்தபோது, தேசிய கொண்டாட்டத்தின்போது இதே போன்ற ஒரு காரியம் சம்பவித்தது. முடிவு நாங்கள் இருவருமே அணியிலிருந்து விலகிவிட்டோம். நான் நினைத்தது போல அது அத்தனை கடினமாக இருக்கவில்லை, ஏனென்றால் கடவுளுடைய பரலோக அரசாங்கத்தின் அரசராகிய கிறிஸ்து இயேசுவிடமே என்னுடைய ராஜபக்தியும் உண்மைப்பற்றுறுதியும் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்துவிட்டேன்.
என்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் அதிகமான பைபிள் அறிவை எடுக்கவும் நான் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு ஒழுங்காகச் செல்வது அவசியம் என்பதாக இப்பொழுது ஃபிலிஸ் என்னிடம் விளக்கினாள். அந்தச் சமயத்தில் மெல்போர்னில் ஒரு சபை மாத்திரமே இருந்தது, ஆகவே ஒவ்வொரு ஞாயிறு பிற்பகலும் நான் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன். வெகு சீக்கிரத்தில் இதுவே கடவுளுடைய உண்மையான பூமிக்குரிய அமைப்பு என்பதை உறுதியாக நம்பினேன்.
விரைவில் சபையின் வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் பங்குகொள்ளும்படியாக நான் அழைக்கப்பட்டேன். முதலில் இதற்கு நான் தயங்கினேன், ஆனால் ஒரு ஞாயிறு காலை அது எவ்விதமாகச் செய்யப்படுகிறது என்பதை வெறுமனே பார்ப்பதற்காக நான் அவர்களோடு போக தீர்மானித்தேன். அனுபவமுள்ள ஒரு சாட்சியோடு செல்வதற்கு நான் நியமிக்கப்பட்ட போது நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். முதல் வீட்டில் அவர்கள் நம்பிக்கையோடு பேசி வீட்டுக்காரரிடமிருந்து மகிழ்வான பிரதிபலிப்பைப் பெற்றுக்கொண்டார்கள். ‘ஆம், அது அவ்வளவு கடினமாக இல்லை, ஆனால் அவ்வளவு நன்றாகச் செய்வதற்கு முன் எனக்கு அதிகமான பயிற்சி தேவையாக இருக்கும்,’ என்பதாக எனக்கு நானே யோசித்துக் கொண்டேன். அந்த முதல் வீட்டுக்குப் பிறகு, சாட்சி என்னிடமாக, “இப்பொழுது உங்களால் உதவியின்றி தனியாக பிரசங்கிக்க முடியும்,” என்பதாகச் சொன்னபோது என்னுடைய ஆச்சரியத்தை கற்பனை செய்துபாருங்கள்.
“உதவியின்றி தனியாகவா?” என்று நான் திகைத்துப்போய் கேட்டேன். “நீங்கள் உண்மையாக சொல்லவில்லை இல்லையா! யாராவது ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டு எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் என்ன சொல்வேன்?” ஆனால் என்னுடைய கூட்டாளி விடாப்பிடியாக இருந்தார்கள். ஆகவே, நடுக்கத்தோடு நான் தனியாகச் சென்றேன், தெருவின் அடுத்தப் பக்கத்திலிருந்த ஆட்களுக்கு அவர்கள் தொடர்ந்து சாட்சிகொடுத்துக் கொண்டிருந்தார்கள். எப்படியோ அந்த முதல் நாள் காலைப்பொழுதைச் சமாளித்துவிட்டேன்.
அப்போது முதற்கொண்டு ஒவ்வொரு ஞாயிறு காலையும் நான் பிரசங்க வேலையில் பங்குகொள்ள ஆரம்பித்தேன். எவராவது கதவண்டையில் என்னால் பதிலளிக்க முடியாத கேள்வியைக் கேட்கையில், “நான் இந்த விஷயத்தைக் குறித்து ஆராய்ந்துவிட்டு பின்னர் உங்களிடம் வருகிறேன்,” என்று சொல்லிவிடுவேன். மகிழ்ச்சியைத் தரும் விதமாக, நோக்கமுள்ள என்னுடைய புதிய வாழ்க்கைமுறையில் தொடர்ந்து இருப்பதற்கு யெகோவா பலத்தையும் தைரியத்தையும் கொடுத்துக் கொண்டே இருந்தார். நான் என்னுடைய வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுத்து அக்டோபர் 1939-ல் மெல்போர்ன் நகர நீச்சல் குளத்தில் முழுக்காட்டுதல் பெற்றேன். அதற்குள் ஜிம்மை திருமணம் செய்திருந்த ஃபிலிஸ், அதற்குப் பின் விரைவில், நான் ஏன் பயனியர் செய்ய ஆரம்பிக்கவில்லை என்று கேட்டாள்.
கிளை அலுவலகத்தில் சேவை
ஜனவரி, 1941-ல், பெத்தேல் என நாங்கள் அழைத்த கிளை அலுவலகத்தில் நான் வேலைசெய்ய ஆரம்பித்தவுடன், ஆஸ்திரேலியாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு தடையுத்தரவு போடப்பட்டது. அதற்குப் பிற்பாடு இராணுவம் ஸ்டிராத்ஃபீல்டில் இருந்த எங்களுடைய பெத்தேல் வீட்டைக் கைப்பற்றியது. நான் நகரத்துக்கு வெளியே 48 கிலோமீட்டர் தொலைவில் இங்கிள்பர்னில் இருந்த சொஸையிட்டியின் பண்ணைக்கு அனுப்பப்பட்டேன். ஜூன் 1943-ல் நீதிமன்றங்கள் உவாட்ச் டவர் சொஸையிட்டியை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து தடையுத்தரவை நீக்கின. அந்த வருட முடிவுக்குள், எங்களில் 25 பேர் ஸ்டிராத்ஃபீல்ட் பெத்தேலுக்கு திரும்பவும் அழைக்கப்பட்டோம். அங்கே நான் தொடர்ந்து சலவையகத்தில் வேலை செய்துகொண்டு, வீட்டில் மற்ற கடமைகளிலும் பங்குகொண்டு வந்தேன்.
அடுத்த பத்தாண்டு வேகமாக கடந்துவிட்டது. பின்னர் 1956-ல் நான் ஓர் உடன் பெத்தேல் ஊழியரான டெட் வீலான்டை திருமணம் செய்துகொண்டேன். டெட் மிகவும் அமைதியான, பொறுமையான மனிதராக இருந்தார். பெத்தேலில் தொடர்ந்து கணவன் மனைவியாக வாழ நாங்கள் அனுமதி பெற்றுக்கொண்டபோது மிகவும் மகிழ்ந்துபோனோம். நாங்கள் இருவரும் ஆஸ்திரேலிய கிளையில் சேவைசெய்யும் சிலாக்கியத்தைக்குறித்து மகிழ்ச்சியுள்ளவர்களாக எங்களுடைய நோக்கமுள்ள வாழ்க்கைமுறையை மிக உயர்வாக மதித்தோம். நிச்சயமாகவே எங்களுடைய பெத்தேல் வேலையோடுகூட, மற்றவர்களை கிறிஸ்துவின் சீஷராக்குவதற்கு உதவிசெய்வதில் சேர்ந்து வேலைசெய்யும் சந்தோஷத்தையும் கொண்டிருந்தோம். ஓர் உதாரணத்துக்கு, 1993, அக்டோபர் 22 ஆங்கில விழித்தெழு!-வில் வெக்ஸ் குடும்பத்தாரைப் பற்றி நீங்கள் வாசிக்கலாம்.
இராஜ்ய பிரசங்கிப்பின் சீரான வளர்ச்சி பெத்தேலில் என்னுடைய முதல் 30 ஆண்டுகளின்போது கூடுதலாக 10 அல்லது 12 ஆட்களை மாத்திரமே தேவைப்படுத்தியது. ஆனால் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை நாங்கள் இங்கே அச்சடிக்க ஆரம்பித்தபோது, 1970-களில் நிலைமை வேகமாக மாறியது. ஒரு புதிய அச்சாலை கட்டப்படுவது ஜனவரி 1972-ல் ஆரம்பமானது. விரைவில் 40 டன் எடையுள்ள அச்சு இயந்திரம் ஜப்பானிலிருந்து வந்திறங்கியது. 1973-க்குள் நாங்கள் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 7,00,000 பத்திரிகைகளை அச்சடித்துக் கொண்டிருந்தோம். எங்களுடைய பெத்தேல் குடும்பம் இப்பொழுது உண்மையில் வளர ஆரம்பித்தது.
1970-கள் எனக்கு தனிப்பட்ட முறையில் துயரமான ஆண்டுகளாக இருந்தன. முதலில், என்னுடைய அன்பான கணவன், டெட், 80 வயதாயிருக்கையில் 1975-ல் மரித்துப்போனார். பின்னர், ஒரே வருடத்துக்குள்ளாகவே, வயதான என்னுடைய அப்பா மரித்துப்போனார். யெகோவாவிடமிருந்தும், அவருடைய வார்த்தையாகிய பைபிள் மற்றும் என்னுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளிடமிருந்தும் நான் அதிகமான ஆறுதலைப் பெற்றுக்கொண்டேன். என்னுடைய வாழ்க்கையின் இந்தத் துயரமான காலத்தின் போது பெத்தேலில் என்னுடைய நோக்கமுள்ள வேலைகளில் சுறுசுறுப்பாய் என்னை வைத்துக்கொண்டதும்கூட எனக்கு பெரும் உதவியாக இருந்தது.
வாழ்க்கைத் தொடர்ந்தது. இப்பொழுது ஒரு விதவையாக நான் மறுபடியுமாக மனநிறைவையும் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க ஆரம்பித்தேன். 1978-ல் நான் இங்கிலாந்து, லண்டனில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றேன், அதற்குப் பின் நியூ யார்க், புரூக்லினிலுள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தலைமைக் காரியாலயத்துக்குச் சென்றுவந்தேன். அங்கே புரூக்லின் பெத்தேலில் என்னுடைய ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் சந்தோஷமாக வேலைசெய்வதைப் பார்த்தது, இன்று வரையாக எனக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்திருக்கிறது.
1970-கள் முடிவுக்கு வந்தபோது, ஆஸ்திரேலியா பெத்தேல் கட்டட வளாகத்துக்கு மேலுமான விஸ்தரிப்பு திட்டுமிடப்பட்டுவருவதை நாங்கள் அறிந்துகொண்டோம். இருந்தபோதிலும், காலி மனையில்லாத ஸ்டிராத்ஃபீல்டில் விஸ்தரிப்பு இருக்கப் போவதில்லை. மாறாக, புதிய, மிகவும் பெரிய கட்டடத் தொகுதி இங்கிள்பர்னில் எங்களுக்கிருந்த சொந்தமான நிலத்தில் கட்டப்படவிருந்தது. இங்கு தானே 1940-களின் ஆரம்பத்தில் தடையுத்தரவின்போது நான் வேலைசெய்து வந்தேன்.
நோக்கமுள்ள வாழ்க்கைமுறை தொடர்கிறது
ஜனவரி 1982-ல் நாங்கள் எங்களுடைய புதிய கட்டடத்துக்கு இடம் மாறிச் சென்றபோது மிகவும் கிளர்ச்சியடைந்தோம்! உண்மைதான், பழக்கப்பட்ட சுற்றுப்புறத்தைவிட்டு செல்வது முதலில் சற்று வருத்தமாக இருந்தது, ஆனால் சீக்கிரத்தில் 73 அழகான படுக்கை அறைகளைக் கொண்ட புதிய வீட்டில் நாங்கள் உற்சாகமாயிருந்தோம். இப்பொழுது செங்கல் சுவர்களையும் புறநகர்ப்புற தெருக்களையும் பார்த்துக்கொண்டிருப்பதற்கு பதிலாக, நாங்கள் பசுமையான விளைநிலங்களையும் மரங்களையும், புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் கால்நடைகளையும் அழகான சூரிய உதயங்களையும் சூரிய அஸ்தமனங்களையும் பார்க்கிறோம்.
மார்ச் 18, 1983-ல் அழகான இலையுதிர்கால சூரிய ஒளியில், எங்களுடைய புதிய கட்டடங்களின் மகிழ்ச்சியான பிரதிஷ்டையைக் கொண்டிருந்தோம். யெகோவாவின் சாட்சிகளுடைய நிர்வாகக் குழுவிலுள்ள லாயிட் பேரி மனதை நெகிழச் செய்த ஒரு பிரதிஷ்டை பேச்சைக் கொடுத்தார். நாங்கள் அனைவரும் இள வயதில் இருந்தபோது அவர்களோடு ஸ்டிராத்ஃபீல்ட் பெத்தேலில் வேலைசெய்திருந்த காரணத்தால் பிரதிஷ்டை நிகழ்ச்சிநிரலுக்கு அவரையும் அவருடைய மனைவியையும் கொண்டிருப்பதை நான் தனிப்பட்டவிதமாக போற்றினேன்.
ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் கிடைத்த தொடர்ந்த அதிகரிப்பு இங்கே இங்கிள்பர்னில் கூடுதலான விஸ்தரிப்பைத் தேவைப்படுத்தியது. 1987-ல் அலுவலகம் விரிவாக்கப்பட்டது. பின்னர், 1989, நவம்பர் 25-ல் புதிய ஐந்து மாடி குடியிருப்பு கட்டடமும் மூன்று மாடி புதிய தொழிற்சாலைச் சேர்ப்பும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நான் என்னுடைய ஊழியத்தை ஆரம்பிக்கையில் ஆஸ்திரேலியாவில் 4,000-க்கும் குறைவாக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் 59,000-ஆக வளர்ந்துவிட்டிருக்கிறது!
மிகவும் அண்மைகாலத்தில், ஜப்பான் மற்றும் ஜெர்மனியோடு சேர்ந்து சொஸையிட்டியின் மூன்று பிரதேச பொறியாளர் அலுவலகங்களில் ஒன்றாக ஆஸ்திரேலிய கிளையும் ஆக்கப்பட்டிருக்கிறது. இது பெத்தேல் கட்டட தொகுதி இன்னும் விரிவாக்கப்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மற்றொரு மூன்று மாடி அலுவலக கட்டடம் இப்பொழுது கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது ஐந்து மாடி குடியிருப்புக் கட்டடம் முடியும் தறுவாயில் உள்ளது. இது இடைவிடாமல் வளர்ந்து வரும் எங்கள் குடும்பத்துக்குக் கூடுதலாக 80 அறைகளைக் கொண்டிருக்கும்.
சலவையகத்தில் வேலை பளுவைச் சமாளிப்பதற்கு பெரிய பணியாளர் குழு இருக்கிறது, ஆனால் நான் அடிக்கடி 1940 ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு வாரங்களுக்கு இந்த இலாக்காவில் உதவும்படியாக அழைக்கப்பட்ட அந்தச் சமயத்தை நினைவுபடுத்திப் பார்க்கிறேன். அந்த இரண்டு வாரங்கள் 50-க்கும் மேலான ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டதற்காகவும் யெகோவா தேவன் இப்படிப்பட்ட நோக்கமுள்ள ஒரு வாழ்க்கைமுறைக்கு என்னுடைய நடைகளை வழிநடத்தியதற்காகவும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
[பக்கம் 21-ன் படம்]
நான் 25 வயதினளாக இருந்தபோது
[பக்கம் 23-ன் படம்]
1956-ல் எங்களுடைய திருமண நாள்
[பக்கம் 24-ன் படம்]
1938-ல் என்னுடைய தங்கையும் நானும் விளையாட்டில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தோம், ஆனால் இப்பொழுது என்னுடைய வாழ்க்கை அதைவிட அதிகமாக பலனுள்ளதாக இருக்கிறது