விடாமுயற்சி முன்னேற்றத்திற்கு வழிநடத்துகிறது
ஸூஸெ மக்லாவ்ஸ்கி சொன்னபடி
காவலர் ஒருவர் என் கையைப் பற்றிப்பிடித்த போது, நான் என் தந்தைக்காக தேடினேன். இருப்பினும், எனக்குத் தெரியாமலேயே அவரை முன்னதாகவே காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றிருந்தனர். நான் அங்கு சென்றடைந்தபோது, காவலர் எங்களுடைய பைபிள்கள் உட்பட எங்கள் பிரசுரங்கள் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டார், அவற்றை தரையில் குவித்து வைத்தார். அதைப் பார்த்தபோது என் தந்தை கேட்டார்: “நீங்கள் பைபிள்களைக்கூட தரையில் வைப்பீர்களா?” தலைமை காவலர் அதற்காக வருத்தம் தெரிவித்துவிட்டு, பிறகு பைபிள்களை எடுத்து அவற்றை மேசையின் மேல் வைத்தார்.
நாங்கள் எப்படி காவல்நிலையத்தை வந்தடைந்தோம்? நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம்? பைபிளையும்கூட எங்களிடமிருந்து பறித்துக்கொள்ளும்படி, காவலர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த ஒரு நாத்திக நாட்டிலா நாங்கள் இருந்தோம்? இக்கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு, நாம் 1925-ஆம் வருடத்துக்குச் செல்ல வேண்டும், நான் பிறப்பதற்கு முன்பே செல்ல வேண்டும்.
அந்த வருடத்தில் என் தந்தை எஸ்டிஃபானோ மக்லாவ்ஸ்கியும், என் தாய் ஸுலியானாவும் அந்தச் சமயம் யுகோஸ்லாவியா என்றழைக்கப்பட்டிருந்த இடத்தை விட்டு பிரேஸிலுக்கு இருப்பிடத்தை மாற்றி, சாவோ பாலோவில் குடியேறினார்கள். தந்தை ஒரு புராட்டஸ்டன்டினராகவும் தாய் ஒரு கத்தோலிக்கராகவும் இருந்தபோதிலும், அவர்கள் இருவருக்கிடையே மதம் பிரிக்கும் காரணியாக இருக்கவில்லை. உண்மையில், பத்து வருடங்களுக்குப் பின்பு நடந்த ஏதோவொன்று அவர்கள் இருவரையும் மதசம்பந்தமாக ஒன்றுசேர்த்தது. தந்தையின் சகலபாடி ஹங்கேரிய மொழியில் மரித்தோரின் நிலைமையைப் பற்றி கலந்தாலோசித்திருந்த ஒரு முழு-வண்ண சிற்றேட்டை அவருக்குக் கொடுத்தார். அவர் அந்தச் சிற்றேட்டை அன்பளிப்பாக பெற்றிருந்தார், என் தந்தை அதை வாசித்து, அதில் அடங்கியிருந்த விஷயங்களின் பேரிலும் விசேஷமாக “நரகம்” என்பதன் பேரில் இருந்த பகுதியைப் பற்றியும் அவருடைய கருத்தைத் தெரிவிக்கும்படி கேட்டிருந்தார். அச்சிற்றேட்டை என் தந்தை இரவு முழுவதும் திரும்பவும் திரும்பவுமாக வாசிப்பதில் செலவழித்தார், அடுத்த நாள் அவருடைய மைத்துனன் அவருடைய கருத்தைக் கேட்க வந்தபோது, என் தந்தை ஆணித்தரமாக, “இதுதான் சத்தியம்!” என்று அறிவித்தார்.
சிறிய ஆரம்பங்கள்
அந்தப் பிரசுரம் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து வந்தபடியால், அவர்களுடைய நம்பிக்கைகள் மற்றும் போதனைகளைப் பற்றி கூடுதலாக கற்றுக்கொள்வதற்கு இருவரும் அவர்களைத் தேடிச் சென்றனர். இறுதியில் அவர்களோடு தொடர்பு கொண்டபோது, எங்களுடைய குடும்பத்தின் அநேக அங்கத்தினர்கள் சாட்சிகளோடு பைபிள் கலந்தாலோசிப்புகளைக் கொண்டிருக்க ஆரம்பித்தனர். அதே வருடம், 1935-ல், ஒரு ஒழுங்கான பைபிள் படிப்பு ஹங்கேரிய மொழியில் ஆரம்பிக்கப்பட்டது, சராசரியாக எட்டு பேர் ஆஜரானார்கள், அச்சமயத்திலிருந்து எங்களுடைய வீட்டில் ஒழுங்காக பைபிள் படிப்புகளைக் கொண்டிருந்தோம்.
பைபிளை இரண்டு வருடங்கள் படித்த பிறகு, என் தந்தை 1937-ல் முழுக்காட்டப்பட்டு ஆர்வத்துடன் யெகோவாவை சேவிக்கும் ஒரு சாட்சியாக ஆனார், வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் பங்கு கொண்டார், நியமிக்கப்பட்ட ஊழியராகவும் படிப்பு நடத்துனராகவும் சேவை செய்தார். சாவோ பாலோவில் முதல் சபையை விலா மரியானா பகுதியில் உருவாக்குவதில் அவர் உதவி செய்தார். அந்தச் சபை பின்னர் நகரத்தின் மையப்பகுதிக்கு மாற்றப்பட்டு சென்ட்ரல் சபை என்று அறியப்படலாயிற்று. பத்து வருடங்களுக்குப் பின்பு எப்பிராங்கா என்ற பகுதியில் இரண்டாவது சபை உருவானது, என் தந்தை அங்கு சபை ஊழியராக நியமிக்கப்பட்டார். 1954-ல் மோயீயோ வெல்யோ பகுதியில் மூன்றாவது சபை உருவாக்கப்பட்டது, அங்கும்கூட அவர் சபை ஊழியராக சேவித்தார்.
இந்தத் தொகுதி நன்றாக பலப்படுத்தப்பட்டவுடனேயே, அவர் அருகாமையில் இருந்த சா பெர்னார்டோ டு காம்ப்போ என்ற தொகுதிக்கு உதவி செய்ய ஆரம்பித்தார். வருடங்களினூடே இப்படிப்பட்ட சாட்சிகள் அடங்கிய சிறிய தொகுதிகளின் முயற்சிகளின்மீது யெகோவாவின் ஆசீர்வாதத்தின் உதவியுடன் வளர்ச்சி குறிப்பிடத்தக்கவிதமாய் இருந்திருக்கிறது, அதன் காரணமாக 1994-ல் பெரிய சாவோ பாலோவில் 70,000-க்கும் மேற்பட்ட பிரஸ்தாபிகள் 760 சபைகளில் இருந்தனர். விசனகரமாக, இந்த வளர்ச்சியைக் காண்பதற்கு என் தந்தை உயிரோடிருக்கவில்லை. அவர் 1958-ல் 57-வது வயதில் மரணமடைந்தார்.
தந்தையின் முன்மாதிரியைப் பின்பற்ற முயற்சி செய்தல்
மற்ற முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர்களைப் போல என் தந்தையின் முதன்மையான பண்பு, அவருடைய உபசரிக்கும் தன்மையாகும். (3 யோவான் 1, 5-8-ஐக் காண்க.) அதன் விளைவாக, 1936-ல் சகோதரர் மற்றும் சகோதரி யுல் என்பவர்களோடு அன்ட்டானியோ ஆன்ட்ராட், அவருடைய மனைவி, மகன் ஆகியோரை எங்களுடைய விருந்தினராக கொண்டிருக்க நாங்கள் சிலாக்கியம் பெற்றிருந்தோம். காவற்கோபுர கிலியட் பைபிள் பள்ளியில் தேர்ச்சி பெற்றிருந்த ஹாரி ப்ளாக், டில்லார்ட் லெத்கோ என்ற இருவரும் எங்களுடைய வீட்டில் விருந்தினராக இருந்தனர், அவர்கள் 1945-ல் பிரேஸிலுக்கு முதலாவதாக அனுப்பப்பட்ட மிஷனரிகளாக இருந்தனர். இன்னும் அநேகர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தனர். இப்படிப்பட்ட சகோதரர்களும் சகோதரிகளும் எங்களுடைய குடும்பத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் எப்போதும் உற்சாகத்தின் ஊற்றுமூலமாக இருந்தனர். இந்த உண்மையை மதித்துணர்ந்து, என்னுடைய குடும்பத்தின் நன்மைக்கென்று, கிறிஸ்தவ பண்பாகிய உபசரிக்கும் தன்மையைக் குறித்த விஷயத்தில் நான் என் தந்தையின் முன்மாதிரியைப் பின்பற்ற முயற்சி செய்திருக்கிறேன்.
என் தந்தை 1935-ல் சத்தியத்தைக் கற்றபோது ஒன்பது வயதுள்ளவனாய் மட்டுமே இருந்தபோதிலும், மூத்த மகனாக நான் அவருடைய தேவராஜ்ய வேலைகளில் அவரோடு சேர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். சாவோ பாலோவில் இசா டி கேராஸ் தெரு, எண் 141-ல் சாட்சிகளின் தலைமைக் காரியாலயத்தில் இருந்த ராஜ்ய மன்றத்தில் நாங்கள் அனைவரும் அவரோடு சேர்ந்து கூட்டங்களுக்கு ஆஜரானோம். என் தந்தை எனக்கு அளித்திருந்த பயிற்சிக்காகவும் போதனைக்காகவும் நன்றி, யெகோவாவை சேவிப்பதற்கு நான் தீவிரமான ஆர்வத்தை வளர்த்துக்கொண்டேன், 1940-ல் யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன், இப்போது அசுத்தமாக்கப்பட்டிருக்கும் நிலையில் சாவே பாலோ நடுவே பாய்ந்தோடும் டையட்டே நதியில் இதைத் தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்திக் காண்பித்தேன்.
நற்செய்தியை அறிவிப்பதில் ஒழுங்கான பிரஸ்தாபியாக இருப்பது எதை அர்த்தப்படுத்தியது என்பதை, அதாவது மற்றவர்களோடு வீட்டு பைபிள் படிப்புகளை நடத்தி அவர்களில் சத்தியத்தின் செய்தியை விதைத்து நீர்ப்பாய்ச்ச வேண்டும் என்பதை விரைவில் கற்றுக்கொண்டேன். இப்போது பிரேஸிலில் ஆயிரக்கணக்கான ஒப்புக்கொடுத்த சாட்சிகளை காணும்போது, சத்தியத்தின் அறிவை அடைவதற்கு அல்லது அதன் பேரில் போற்றுதலை ஆழமாக்குவதற்கு அவர்களில் அநேகருக்கு உதவி செய்வதற்கு நான் அவரால் உபயோகப்படுத்தப்பட்டதை அறிந்து உள்ளார்ந்த மகிழ்ச்சியடைகிறேன்.
நான் உதவி செய்தவர்களுள் ஒருவர் ஸூவாக்கேங் மெலோ என்பவர், அவரை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்தித்தேன். அதிக ஆர்வமின்றி இருந்த வேறு மூன்று ஆண்களிடம் பேசிக்கொண்டிருந்தேன், அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். பின்பு எங்களோடு சேர்ந்துகொண்டு கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு இளைஞனை கவனித்தேன். அவருடைய ஆர்வத்தைக் கண்டு, நான் என் கவனத்தை அவரிடமாகத் திருப்பினேன், ஒரு நல்ல சாட்சி கொடுத்த பின்பு சபை புத்தகப் படிப்புக்கு வரும்படி அவரை அழைத்தேன். அவர் அந்தப் படிப்புக்கு ஆஜராகவில்லை, ஆனால் தேவராஜ்ய ஊழியப்பள்ளிக்கு வந்தார், அதற்குப் பிறகு கூட்டங்களுக்கு ஒழுங்காக ஆஜரானார். அவர் நல்ல முன்னேற்றம் செய்தார், முழுக்காட்டப்பட்டார், பல வருடங்கள் பயண ஊழியராக தன் மனைவியோடு சேர்ந்து சேவை செய்தார்.
ஆர்னால்டோ ஆர்சி என்பவரை வேலை செய்துகொண்டிருந்த இடத்தில் சந்தித்தேன். நான் ஒழுங்காக உடன் வேலையாளர் ஒருவருக்குச் சாட்சி கொடுத்துக் கொண்டிருந்தேன், ஆனால் தாடி வைத்திருந்த ஒரு இளம் மனிதன் எப்போதும் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்ததை கவனித்தேன், ஆகையால் நான் அவரிடம் நேரடியாக பேச ஆரம்பித்தேன். அவர் ஒரு தீவிர கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆனால் அவர் புகைத்தல், ஆபாசமான திரைப்படங்களைக் காண்பது, ஜூடோ என்ற போர் கலையை பயிற்சி செய்வது போன்ற விஷயங்களைக் குறித்து அநேக கேள்விகளைக் கேட்டார். பைபிள் அவற்றைக் குறித்து என்ன சொல்கிறது என்பதை அவருக்குக் காண்பித்தேன், நான் ஆச்சரியத்தோடு சந்தோஷப்படும்வகையில், அடுத்த நாள் அவர் என்னை அழைத்து புகைபிடிக்கும் குழாயையும் அதைப் பற்றவைக்கும் லைட்டரையும் அதோடுகூட சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவத்தையும் அவர் உடைத்துப்போடுவதையும், ஆபாசமான படங்களை அழித்துப்போடுவதையும் அவருடைய தாடியை சவரம் செய்வதையும் வந்து பார்க்கும்படி அழைத்தார். சில நிமிடங்களுக்குள்ளேயே ஒரு மாற்றமடைந்த மனிதனாக ஆனார்! அவர் ஜூடோ பயிற்சி செய்வதையும்கூட நிறுத்திவிட்டு என்னோடு தினந்தோறும் பைபிளை படிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவருடைய மனைவி மற்றும் தகப்பனிடமிருந்து எதிர்ப்பு இருந்தபோதிலும், அவருக்கு அருகாமையில் வாழ்ந்து வந்த சகோதரர்களின் உதவியுடன் அவர் ஆவிக்குரிய விதத்தில் நல்ல முன்னேற்றம் செய்தார். சிறிது காலத்திற்குள்ளாக முழுக்காட்டப்பட்டு இன்று ஒரு சபை மூப்பராக சேவித்து வருகிறார். அவருடைய மனைவியும் பிள்ளைகளும்கூட சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர்.
ராஜ்ய சேவையில் பங்குகொள்ளுதல்
நான் சுமார் 14 வயதை அடைந்தபோது, ஒரு விளம்பர கம்பெனியில் வேலை செய்ய ஆரம்பித்தேன், விளம்பரப் பலகைகளுக்கு எவ்வாறு வண்ணந்தீட்டுவது என்பதை அங்கு கற்றுக்கொண்டேன். இது அதிக பயனுள்ளதாக நிரூபித்தது, யெகோவாவின் சாட்சிகளின் பொதுப் பேச்சுகளையும் மாநாடுகளையும் விளம்பரப்படுத்துவதற்கென்று விளம்பர அட்டைகள், தெரு விளம்பர அறிவிப்புகள் போன்றவற்றை வண்ணந்தீட்டுவதற்கு சாவோ பாலோவில் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த சகோதரன் நான் மட்டுமே. மாநாட்டு விளம்பர இலாகாவில் கண்காணியாக ஏறக்குறைய 30 வருடங்கள் சேவை செய்யும் சிலாக்கியத்தைப் பெற்றிருந்தேன். மாநாடுகளில் வேலை செய்வதற்கென்று நான் எப்போதும் விடுப்பு நாட்களைச் சேமித்து வைத்தேன், விளம்பரங்களை நேரத்துக்குள் வரைந்து முடிப்பதற்கென்று மாநாட்டு மன்றத்திலேயே உறங்கியும்கூட இருக்கிறேன்.
சங்கத்தின் சவுண்ட் காரை வைத்து ஊழியம் செய்யும் வாய்ப்பையும்கூட பெற்றிருந்தேன், அது உபயோகிக்கப்பட்ட சமயத்தில் உண்மையிலேயே ஒரு புதுமைப் பொருளாக இருந்தது. நாங்கள் பைபிள் பிரசுரங்களை ஒரு மேடையின்மீது வைப்போம், பதிவு செய்து வைத்திருந்த செய்தியை சவுண்ட் கார் ஒலிபரப்புகையில், தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்து என்ன நடக்கிறது என்பதைக் காண வரும் ஜனங்களிடம் பேசுவோம். இராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதற்கு நாங்கள் உபயோகித்த மற்றொரு முறை, கையில் எடுத்துச் செல்லத்தக்க ஒலிப்பதிவுப் பெட்டியாகும், சங்கத்தின் பிரசுரங்களை அளிப்பதற்கு உபயோகப்படுத்தப்பட்ட ஒலிப்பதிவுத் தட்டுகள் இன்னும் என்னிடம் உள்ளன. அதன் காரணமாக அநேக பைபிள் பிரசுரங்கள் அளிக்கப்பட்டன.
அந்த நாட்களில் சாவோ பாலோ தெருக்களில் கத்தோலிக்க சர்ச் நீண்ட ஊர்வலங்களை நடத்தின, அடிக்கடி ஆண்கள் ஊர்வலத்துக்கு முன்னால் நின்று போக்குவரத்துத் தடைகளை விலக்கிவிடுவார்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, நானும் என் தந்தையும் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை தெருவில் அளித்துக்கொண்டிருக்கையில் ஒரு நீண்ட ஊர்வலம் வந்தது. என் தந்தை எப்போதும் போல அவருடைய தொப்பியை அணிந்திருந்தார். ஊர்வலத்தின் முன்னால் இருந்த மனிதர்களில் ஒருவர், “உங்களுடைய தொப்பியை கழட்டுங்கள்! ஒரு ஊர்வலம் வருவது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று கத்தினார். என் தந்தை அவருடைய தொப்பியை கழட்டாமல் இருந்தபோது, கூடுதலான ஆட்கள் வந்தனர், எங்களை ஒருபக்கமாக ஒரு கடை ஜன்னலுக்கு எதிராகத் தள்ளி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். இது ஒரு காவலரின் கவனத்தை ஈர்த்தது, அவர் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதைக் காண வந்தார். அந்த மனிதர்களில் ஒருவர் அவருடைய கையைப் பிடித்து, அவரோடு பேச விரும்பினார். “என் சீருடையிலிருந்து உன் கையை எடு!” என்று அந்தக் காவலர் உத்தரவிட்டு, அந்த மனிதனின் கையில் அடித்தார். பின்பு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று கேட்டார். ஊர்வலம் வந்தபோது என் தந்தை தொப்பியை கழட்ட மாட்டேன் என்று கூறியதாக அந்த மனிதன் விளக்கி, “நான் ஒரு அப்போஸ்டாலிக் ரோமன் கத்தோலிக்,” என மேலும் சொன்னார். எதிர்பாராத பதில் இவ்விதமாக இருந்தது: “நீ ஒரு ரோமன் என்று சொல்லிக்கொள்கிறாயா? அப்படியென்றால் ரோமுக்கு திரும்பிப் போ! இது பிரேஸில்.” பின்பு அவர் எங்கள் பக்கமாகத் திரும்பி, “யார் இங்கே முதலாவதாக இருந்தது?” என்று கேட்டார். நாங்கள் முதலாவது இங்கே இருந்தோம் என்று என் தந்தை பதிலளித்த போது, காவலர் அந்த மனிதர்களை அனுப்பி விட்டு, எங்களுடைய வேலையை தொடர்ந்து செய்யும்படி கூறினார். அந்த முழு ஊர்வலமும் கடந்து செல்லும் வரை அவர் எங்கள் அருகே நின்றிருந்தார்—என் தந்தையின் தொப்பி அகலாதிருந்தது!
இதைப் போன்ற சம்பவங்கள் அபூர்வமாய் இருந்தன. ஆனால் அவை நிகழ்ந்த போதோ, சிறுபான்மையருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்பும் ஆட்கள் இருந்தனர் என்றும் அவர்கள் கத்தோலிக்க சர்ச்சுக்கு அடிபணிந்து போவதில்லை என்பதையும் அறிந்துகொள்வது உற்சாகமூட்டுவதாய் இருந்தது.
மற்றொரு சமயம், நான் ஒரு பருவவயதினனைச் சந்தித்தேன், அவன் அக்கறை காண்பித்து அடுத்த வாரம் மறுபடியும் வரும்படி என்னைக் கேட்டுக் கொண்டான். திரும்பவும் சென்றபோது அவன் என்னை உள்ளே வரும்படி அழைத்து நன்றாக வரவேற்றான். என்னைக் கேலி செய்துகொண்டும் எரிச்சலடையச் செய்வதற்கு முயற்சி செய்துகொண்டுமிருந்த இளைஞர் கும்பல் ஒன்றால் சூழப்பட்டிருப்பதைப் பார்த்தது எனக்கு எவ்வளவு ஆச்சரியமாய் இருந்தது! அந்த நிலைமை மோசமடைந்தது, அவர்கள் என்னை விரைவில் தாக்குவார்கள் என்று உணர்ந்தேன். எனக்கு ஏதாவது நேரிட்டால் என்னை உள்ளே அழைத்தவர் மாத்திரமே அதற்கு பொறுப்பாளி என்றும் நான் எங்கே இருந்தேன் என்பதை என் குடும்பத்தார் அறிந்திருந்தனர் என்றும் அவரிடமே கூறினேன். என்னைப் போகவிடும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டேன், அவர்கள் ஒத்துக்கொண்டனர். இருப்பினும், அவ்விடத்தை விட்டுச் செல்வதற்கு முன், அவர்களில் எவராவது என்னிடம் தனியாக பேச விரும்பினால், நான் அதற்குத் தயார் என்று சொன்னேன். அவர்கள் ஒரு மதவெறிகொண்டத் தொகுதியினர் என்றும், உள்ளூர் பாதிரியின் நண்பர்கள் என்றும், இக்கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு அந்தப் பாதிரி அவர்களை உற்சாகப்படுத்தினார் என்றும் பின்பு அறிய வந்தேன். அவர்களுடைய பிடியிலிருந்து விடுபட்டதற்காக மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால் ஆரம்பத்தில் பிரேஸிலில் வளர்ச்சி காணப்படமுடியாத அளவு மெதுவாக இருந்தது. நாங்கள் ஆரம்ப கட்டமாகிய “நடும்” வேலையில் இருந்தோம், “பண்படுத்துவதற்கும்” எங்கள் உழைப்பின் பலன்களை “அறுவடை” செய்வதற்கும் நேரம் குறைவாகவே கிடைக்கக்கூடியதாயிருந்தது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டோம்: “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.” (1 கொரிந்தியர் 3:6, 7) கிலியட் பள்ளியில் தேர்ச்சி பெற்ற இரண்டு பேர் 1945-ல் வந்து சேர்ந்தபோது, நீண்ட காலமாய் காத்திருந்த வளர்ச்சிக்கு நேரம் வந்துவிட்டது என்று நாங்கள் உணர்ந்தோம்.
எதிர்ப்பை எதிர்ப்படுகையில் தைரியம்
இருப்பினும், எதிர்ப்பு இல்லாமல் வளர்ச்சி ஏற்படாது, விசேஷமாக இரண்டாவது உலக யுத்தம் ஐரோப்பாவில் ஆரம்பமான பிறகு. அங்கு நேரடியான துன்புறுத்தல் இருந்தது, ஏனென்றால் பொதுவாக ஜனங்களும் அதிகாரிகளில் சிலரும் நம்முடைய நடுநிலைமை வகிப்பைப் புரிந்துகொள்ளவில்லை. ஒரு சமயம், 1940-ல், சாவோ பாலோ மையப் பகுதியில் விளம்பர அட்டைகளை வைத்துக்கொண்டு நாங்கள் தெரு ஊழியம் செய்துகொண்டிருக்கும்போது, எனக்குப் பின்னாலிருந்து ஒரு காவலர் என்னை அணுகி விளம்பர அட்டைகளைக் கிழித்துப்போட்டு, என்னைக் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்ல என் கையைப் பற்றிக்கொண்டார். நான் என் தந்தைக்காக எல்லாப் பக்கங்களிலும் சுற்றிப் பார்த்தேன், ஆனால் அவரை எங்கும் காணவில்லை. பிரேஸிலில் ஊழியத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்த சகோதரர் யூலி உட்பட, அவரும், இன்னும் அநேக மற்ற சகோதர சகோதரிகளும் முன்னதாகவே காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். ஆரம்ப பாராவில் குறிப்பிட்டிருந்தபடி, அங்கு என் தந்தையை மறுபடியும் சந்தித்தேன்.
நான் வயதுவராத இளைஞனாக இருந்தபடியால், என்னைக் காவலில் வைக்க முடியவில்லை, ஆகையால் விரைவில் ஒரு காவலரால் வீட்டுக்குக் கொண்டுச் செல்லப்பட்டு என் தாயிடம் ஒப்படைக்கப்பட்டேன். அதே நாள் மாலையில் சகோதரிகளும்கூட விடுவிக்கப்பட்டனர். பின்பு காவல்துறையினர் யூலியைத் தவிர சுமார் பத்து பேராக இருந்த எல்லா சகோதரர்களையும் விடுதலை செய்ய தீர்மானித்தனர். என்றபோதிலும் சகோதரர்கள் இவ்வாறு வற்புறுத்தினர்: “நாங்கள் அனைவருமே செல்வோம் அல்லது ஒருவருமே செல்ல மாட்டோம்.” காவலர்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டனர், ஆகையால் அனைவருமே ஒரு குளிர்ச்சியான அறையில் சிமென்ட் தரையில் அந்த இரவைக் கழித்தனர். அடுத்த நாள் அனைவருமே எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட்டனர். சகோதரர்கள் விளம்பர அட்டைகளோடு சாட்சி கொடுத்ததற்காக அநேக தடவைகள் கைது செய்யப்பட்டனர். அந்த விளம்பர அட்டைகள் ஒரு பொதுப் பேச்சையும், பாஸிசமா அல்லது சுயாதீனமா என்ற தலைப்பைக் கொண்ட ஒரு ஆங்கில சிற்றேட்டையும் அறிவிப்பு செய்தன, நாங்கள் பாஸிசத்துக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று சில அதிகாரிகள் அதைப் புரிந்துகொண்டனர், அது எதிர்பார்க்கப்பட்டபடியே தவறானப் புரிந்துகொள்ளுதல்களுக்கு வழிநடத்தியது.
கட்டாயமான இராணுவ சேவையும்கூட இளம் சகோதரர்களுக்குப் பிரச்சினைகளைக் கொண்டு வந்தது. 1948-ல் இந்தப் பிரச்சினையின் காரணமாக பிரேஸிலில் சிறையிலடைக்கப்பட்டவர்களில் நான் முதலாவதானவனாக இருந்தேன். அதிகாரிகளுக்கு என்னை என்ன செய்வதென்று தெரியவில்லை. காசப்பாவா நகரத்தில் இருந்த இராணுவ குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டேன், தோட்டத்தில் காய்கறி செடிகளை நட்டு அவற்றைக் கவனித்துக்கொள்ளும் வேலையும், வாள்சிலம்பக்கலை விளையாட்டுக்காக அதிகாரிகள் பயன்படுத்திய அறைகளைச் சுத்தம் செய்யும் வேலையும் எனக்குக் கொடுக்கப்பட்டது. அந்த மனிதர்களுக்குச் சாட்சி கொடுக்கவும் பிரசுரங்களை அளிக்கவும் எனக்கு அநேக சந்தர்ப்பங்கள் இருந்தன. அந்த மேற்பார்வையாளர் பிள்ளைகள் (ஆங்கிலம்) என்று தலைப்பிடப்பட்டிருந்த சங்கத்தின் புத்தகப் பிரதியை முதலாவதாக பெற்றுக்கொண்டவர். பின்னர், சரீர உடற்பயிற்சி செய்யமுடியாமல் அறைக்குள்ளே இருந்த சுமார் 30 அல்லது 40 போர்வீரர்களுக்கு மதத்தைப் பற்றி கற்பிக்கும்படியும்கூட நியமிக்கப்பட்டேன். இறுதியில், சுமார் பத்து மாதங்கள் சிறைச்சாலையில் இருந்த பிறகு, விசாரணை செய்யப்பட்டு விடுதலையாக்கப்பட்டேன். சில ஆட்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட பயமுறுத்தல்கள், அவமதிப்புகள், ஏளனம் ஆகியவற்றை எதிர்ப்படுவதற்கு யெகோவா எனக்குக் கொடுத்த பலத்துக்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
உண்மையுள்ள பற்றுமாறாத ஒரு உதவியாள்
ஜூன் 2, 1951-ல் நான் பார்பராவை மணம் செய்துகொண்டேன், அது முதற்கொண்டு அவள் ஒரு உண்மையுள்ள பற்றுமாறாத கூட்டாளியாக எங்களுடைய பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டி, “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” அவர்களை வளர்த்திருக்கிறாள். (எபேசியர் 6:4) ஐந்து பிள்ளைகளில் நான்கு பிள்ளைகள் யெகோவாவை மகிழ்ச்சியோடு பல்வேறு ஸ்தானங்களில் சேவித்து வருகின்றனர். எங்களோடு சேர்ந்து அவர்கள் சத்தியத்தில் தொடர்ந்து விடாமுயற்சியுடன் நிலைத்திருந்து, அமைப்பின் வளர்ச்சிக்கும் செய்யப்படும் வேலைக்கும் தொடர்ந்து பங்களிப்பார்கள் என்பதே எங்கள் நம்பிக்கை. கைகளில் இருக்கும் குழந்தையைத் தவிர இணைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தில் உள்ள குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்கள். நான்கு பேர் மூப்பர்கள், இரண்டு மூப்பர்கள் ஒழுங்கான பயனியர்களாகவும்கூட இருக்கின்றனர், நீதிமொழிகள் 17:6-ன் உண்மைத்தன்மையை விளக்குபவர்களாய் இருந்தனர்: “பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.”
இப்போது 68-வது வயதில் என் ஆரோக்கியம் திருப்திகரமானதாயில்லை. 1991-ல் மூன்று-மாற்றுவழி இணைப்பு அறுவை சிகிச்சையும், குருதிக்குழாய்ச் சீரமைப்பும் எனக்கு செய்யப்பட்டது. இருந்தபோதிலும், சா பெர்னார்டோ டு காம்ப்போவில் உள்ள ஒரு சபையில் ஒரு நடத்தும் கண்காணியாக தொடர்ந்து சேவை செய்ய முடிவதைக் குறித்து சந்தோஷப்படுகிறேன், இங்கு முதலாவதாக வேலையை ஆரம்பித்தவர்களுள் என் தந்தையுமிருந்தார், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறேன். நம்முடைய சந்ததி உண்மையிலேயே தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது, யெகோவாவின் மேசியானிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டதைக் குறித்து அறிவிக்கும் தனிச்சிறப்புவாய்ந்த சிலாக்கியத்தில் பங்குகொள்ளும் வாய்ப்பை நாம் கொண்டிருக்கிறோம். ஆகையால் தீமோத்தேயுவுக்கு எழுதிய பவுலின் வார்த்தைகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது: “நீயோ . . . சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.”—2 தீமோத்தேயு 4:5.
[பக்கம் 23-ன் படம்]
என் பெற்றோர், எஸ்டிஃபானோவும் ஸுலியானா மக்லாவ்ஸ்கியும்
[பக்கம் 26-ன் படம்]
யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்கள் அடங்கிய குடும்ப அங்கத்தினர்களோடு ஸூஸெயும் பார்பராவும்