ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
இளைஞர் ஆப்பிரிக்காவில் நற்செய்தியை அறிவிக்கின்றனர்
இயேசு உயிர்த்தெழுந்து சிறிது காலத்துக்குப் பின்பு, ஒரு ஆப்பிரிக்க மனிதன் எருசலேமைக் காணச் சென்றார். பைபிள் அவருடைய பெயரைக் குறிப்பிடுவதில்லை. “எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன்” என்பதாக மட்டுமே அவர் அறியப்பட்டிருக்கிறார். அவர் ஏன் பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்? ஏனென்றால் கிறிஸ்தவ சுவிசேஷகனாகிய பிலிப்புவை ஒரு தேவதூதன் அவருக்கு ‘இயேசுவைக் குறித்து நற்செய்தியை’ அறிவிக்கும்படி வழிநடத்தினார். இந்த எத்தியோப்பிய மனிதன் தான் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினராக ஆன முதல் ஆப்பிரிக்கராக பதிவில் இருக்கிறார்.—அப்போஸ்தலர் 8:26-39.
இன்று ஆப்பிரிக்காவில் இலட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் இருக்கின்றனர். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்துகின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள இளைஞர்களும்கூட இதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கின்றனர் என்பதை பின்வரும் அனுபவங்கள் காண்பிக்கின்றன.
◻ கென்யாவில் உள்ள நைரோபியில் சான்டி, பிரியா என்ற இரண்டு 11-வயது பெண்பிள்ளைகள் அயலகத்தாராக இருந்தனர். அவர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடுவதிலும் கதைப்புத்தகங்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்வதிலும் மகிழ்ச்சியடைந்தனர். பிரியாவின் பெற்றோர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தனர். இப்போது பிரியா தன் சேகரிப்பில் வித்தியாசமான புதிய புத்தகங்களைச் சேர்த்துக்கொள்ள முடிந்தது. உவாட்ச்டவர் சொஸைட்டி பிரசுரித்திருக்கும் பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் புத்தகத்தைக் குறிப்பாக அவள் சேர்த்துக்கொண்டாள், அது அவளுடைய விருப்பமான புத்தகமாக ஆனது. அவள் தன் பெரிய போதகர் புத்தகத்தை தன் சிநேகிதி சான்டியோடு பகிர்ந்துகொண்டாள், அதை இரண்டு பிள்ளைகளும் ஒழுங்காக படிக்க ஆரம்பித்தனர்.
இருப்பினும், சான்டியின் தாய் யூனா, ஆங்கிலிக்கன் சர்ச்சுக்குச் சென்று கொண்டிருந்தார்கள், யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து வரும் புத்தகங்களை தன் மகள் படிப்பதை அவர்கள் விரும்பவில்லை. அம்மா எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், படிப்பு தொடர்ந்து நடைபெற்றது. ஒரு நாள் சான்டி அவர்களுடைய கலந்துரையாடலை ஒரு தடவை மட்டும் கேட்கும்படி தன் தாயை கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். “பிறந்தநாட்களைக் கொண்டாடிய இரண்டு மனிதர்கள்” என்ற தலைப்பிலிருந்த அதிகாரத்தை அந்தப் பெண்கள் அன்று வாசித்தனர். யூனா கவனித்துக் கேட்டு அதிகமாகக் கவரப்பட்டார்கள். அவர்கள் உடனடியாக பிரியாவின் தாயை அணுகி அநேக பைபிள் கேள்விகளைக் கேட்டார்கள்.
பிரியாவின் தாய் யூனாவோடு பைபிளைப் படிக்க ஒரு சாட்சியை ஏற்பாடு செய்தார்கள். விரைவில் யூனாவே தான் கற்றுக்கொண்டிருந்தவற்றைத் தன்னோடு வேலை செய்துகொண்டிருந்த டாலியோடு பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். இதற்கிடையில், 11-வயது பிரியா தொடர்ந்து முன்னேற்றம் செய்து, யெகோவாவின் சாட்சிகளின் மாவட்ட மாநாடு ஒன்றில் யெகோவா தேவனுக்கு தன் ஒப்புக்கொடுத்தலைத் தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்த தீர்மானித்தாள். அதே மாநாட்டில், பிரியா பெருமகிழ்ச்சியடையும் வகையில் யூனாவும் டாலியும்கூட முழுக்காட்டப்பட்டார்கள்!
◻ யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிராத தேசங்கள் சில உள்ளன. அப்படிப்பட்ட ஒரு தேசத்தில், சாட்சிகளின் மதசம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் நம்பிக்கைகளிடமாக பொதுவாக சகிப்புத்தன்மையுள்ள நிலை உள்ளது. அந்தத் தேசத்தில் உள்ள ஒரு பள்ளியில், ஒரு ஏழு வயது சிறுவனும் அவனுடைய ஆறு வயது சகோதரனும்—சாட்சிகளின் பிள்ளைகள்—மதசம்பந்தமான ஜெபங்கள் நடைபெறும் சமயத்தின்போது ஆஜராகாமல் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.
அந்தச் சிறுவர்கள் மற்ற பிள்ளைகளோடு ஜெபத்தில் சேர்ந்துகொள்ளும்படி ஒரு நாள் ஒரு புதிய ஆசிரியர் வற்புறுத்தினார். பெரிய பையன் மறுத்துவிட்டான், ஆசிரியரால் அடிக்கப்பட்டான். அவனுடைய இளைய சகோதரன், ஆறு வயது ஷாட்ராக், தலைமை ஆசிரியரை அவருடைய அலுவலகத்தில் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தினான். ஏன் அவன் மற்றவர்களோடு சேர்ந்துகொள்ள விரும்பவில்லை என்று தலைமை ஆசிரியரும் புதிய ஆசிரியரும் அவனைக் கேட்டார்கள். அவனுடைய பெற்றோர் அவனை அடித்து விடுவார்கள் என்று பயப்படுகிறானா என்று அவனைக் கேட்டனர். அவன் நல்ல தரமுள்ள அரபு மொழியில் இவ்வாறு பதிலளித்தான்: “இல்லை, நான் வணங்கும் கடவுள் கலகத்திற்குத் தேவனாயிராமல், ஒழுங்குக்குத் தேவனாயிருக்கிறார். நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக வீட்டிலும், பள்ளியில் மற்றொரு மதத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்கமுடியாது!” அதன் விளைவாக அவனுக்கு விலக்களிக்கப்பட்டது.
முழுக்காட்டுதல் பெற்ற பின்பு, அப்போஸ்தலர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எத்தியோப்பிய மனிதன் “சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.” (அப்போஸ்தலர் 8:39) இன்று அதே போல் ராஜ்ய அறிவிப்பாளர்கள் பரந்த கண்டமாகிய ஆப்பிரிக்காவில் ‘இயேசுவைக் குறித்து நற்செய்தியை அறிவிக்கும்’ தங்கள் சிலாக்கியத்தில் களிகூருகின்றனர்.—அப்போஸ்தலர் 8:35.