சத்தியத்தை ஏன் தேடவேண்டும்?
அநேக மத அமைப்புகள் சத்தியத்தைக் கொண்டிருப்பதாக உரிமைபாராட்டி, ஆவலோடு அதை மற்றவர்களுக்கு அளிக்கின்றன. என்றாலும், அவை குழப்பமூட்டும் வகையில் பெருமளவில் “சத்தியங்களை” அளிக்கின்றன. எல்லா சத்தியங்களும் சம்பந்தப்பட்டவையே, முழுமையான சத்தியங்கள் என்று ஒன்றுமே இல்லை என்பதற்கு இது மற்றொரு அத்தாட்சியாக இருக்கிறதா? இல்லை.
சத்தியம் சம்பந்தப்பட்டது என்று சிலசமயங்களில் புத்தியுள்ள மக்கள்கூட சொல்கிறார்கள் என்று சிந்தனா கலை (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் பேராசிரியர் வி. ஆர். ரூஜிரோ தன்னுடைய ஆச்சரியத்தைத் தெரிவிக்கிறார். அவருடைய நியாயவாதம் என்னவென்றால்: “ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த சத்தியத்தைத் தீர்மானித்துக்கொண்டால், எந்த ஒரு நபருடைய கருத்தும் மற்றொருவருடையதைவிட சிறந்ததாக இருக்க முடியாது. எல்லாமே சமமாக இருக்க வேண்டும். எல்லா கருத்துக்களும் சமமாக இருந்தால், எந்தவொரு பொருளைக் குறித்தும் என்ன காரணத்துக்காக ஆராய்ச்சி செய்ய வேண்டும்? அகழ்வாராய்ச்சிக்குரிய கேள்விகளுக்குப் பதிலைக் கண்டுபிடிப்பதற்காக ஏன் நிலத்தைத் தோண்டவேண்டும்? மத்திய கிழக்கிலுள்ள அழுத்தநிலையின் காரணங்களை ஏன் துருவி ஆராய வேண்டும்? புற்றுநோய் நிவாரணத்திற்காக ஏன் தேடவேண்டும்? பால்வீதிமண்டலத்தை ஏன் ஆராயவேண்டும்? சில பதில்கள் மற்றவற்றைவிட சிறந்தவையாக இருந்தாலும், தனியொருவரின் நோக்குகளால் பாதிக்கப்படாமல் அவற்றிலிருந்து தனித்து நிற்கும் ஒன்றாக சத்தியம் இருந்தாலும் மட்டுமே இந்தச் செயல்கள் அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன.”
சொல்லப்போனால், ஒரு சத்தியமும் இல்லை என்பதாக எவருமே உண்மையில் நம்புவதில்லை. மருத்துவம், கணிதம், அல்லது இயற்பியல் சட்டங்கள் போன்ற இயற்பொருள் உண்மைகளைக் குறித்ததில், இடையுறவழிவுக்கோட்பாட்டில் மிகவும் பற்றுறுதியான நம்பிக்கையுள்ள ஒருவர்கூட, சில விஷயங்கள் உண்மையானவை என்று நம்புவார். வான்வழி இயங்கியல் சட்டங்கள் முழுமையான சத்தியங்கள் என்று நாம் நினைக்காவிட்டால், நம்மில் எவராவது ஒரு விமானத்தில் பயணம் செய்ய துணிவோமா? சோதித்துப்பார்க்கக்கூடிய சத்தியங்கள் இருக்கின்றன; அவை நம்மைச் சுற்றி இருக்கின்றன, நாம் அவற்றைச் சார்ந்து இருக்கிறோம்.
இடையுறவழிவுக்கோட்பாட்டின் விளைவு
என்றாலும், ஒழுக்கம் சம்பந்தமாகத்தான், இடையுறவழிவுக்கோட்பாட்டின் தவறுகள் மிகுதியாகத் தென்படுகின்றன; ஏனென்றால் இங்குதான் அப்படிப்பட்ட சிந்தனை மிகுந்த கேடு விளைவித்திருக்கிறது. தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா இந்தக் குறிப்பைச் சொல்லுகிறது: “அறிவு, அல்லது அறியப்பட்ட சத்தியம், . . . மனிதனால் சென்றெட்டப்படக்கூடியதாய் இருக்கிறதா என்பது அதிகமாகச் சந்தேகிக்கப்பட்டிருக்கிறது. என்றபோதிலும், சத்தியம் மற்றும் அறிவு என்ற இரட்டை பண்புகள், கற்பனையானவை அல்லது கேடு விளைவிப்பவை என்பதாக ஒதுக்கப்படும்போதெல்லாம், மனித சமுதாயம் சீரழிவது நிச்சயம்.”
ஒருவேளை அப்படிப்பட்ட சீரழிவை நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக, பாலின ஒழுக்கக்கேடு தவறு என்பதாகத் தெளிவாகச் சொல்லக்கூடிய பைபிளின் ஒழுக்க போதனைகள், அரிதாகவே இனியும் சத்தியங்களாகக் கருதப்படுகின்றன. சூழ்நிலைக்கேற்ற நெறிகள்—“உங்களுக்கு நன்மையானதை நீங்களே தீர்மானியுங்கள்”—என்பதே இன்று நிலவும் அபிப்பிராயமாக இருக்கிறது. இந்த இடையுறவழிவுக்கோட்பாட்டு நோக்கின் விளைவாக சமுதாய சீரழிவு ஏற்படவில்லை என்று எவராவது வாதாட முடியுமா? நிச்சயமாக, உலகளாவிய விதத்தில், பாலுறவுகளின் காரணமாகக் கடத்தப்பட்ட நோய்களின் மிகுதி, பிளவுபட்ட குடும்பங்கள், பருவவயதிலுள்ள வளரிளமை பெண்களின் கருத்தரிப்புகள் ஆகியவை தாமே போதிய சான்றளிக்கின்றன.
சத்தியம் என்பது என்ன?
ஆகவே இடையுறவழிவுக்கோட்பாட்டின் கலங்கலான தண்ணீர்களை விட்டுவிட்டு, சத்தியத்தின் தூய்மையான தண்ணீர்கள் என்பதாக பைபிள் விவரிக்கிறவற்றை சுருக்கமாக ஆராய்வோமாக. (யோவான் 4:14; வெளிப்படுத்துதல் 22:17) பைபிளில், “சத்தியம்” என்பது தத்துவ அறிஞர்களால் தர்க்கம் செய்யப்படுகிற அறிவுக்கு எட்டாத, மனதால் புரிந்துகொள்ள முடியாத ஒரு கருத்தைப்போன்று ஒருபோதும் இல்லை.
இயேசு தம் வாழ்க்கையின் முழு நோக்கமும் சத்தியத்தைப் பற்றி பேசுவதே என்று சொன்னபோது, நூற்றாண்டுகளாக உண்மையுள்ள யூதர்கள் மதிப்பாகக் கருதி வந்த ஏதோவொன்றைப்பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார். அவர்களுடைய பரிசுத்த எழுத்துக்களில், “சத்தியம்” என்பதை கொள்கைரீதியில் உள்ள ஒன்றாக அல்ல, மெய்யான ஒன்று என்பதாகக் காலகாலமாக யூதர்கள் வாசித்திருந்தனர். பைபிளில், “சத்தியம்” என்பது “ஈமெத்” (ʼemethʹ) என்ற எபிரெய வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்படுகிறது; உறுதியான, திடமான, ஒருவேளை மிக முக்கியமாக, நம்பத்தக்க ஒன்றை அது அர்த்தப்படுத்துகிறது.
சத்தியத்தை அந்த நோக்கில் கருதுவதற்கு யூதர்களுக்கு நல்ல காரணம் இருந்தது. அவர்கள் தங்கள் கடவுளாகிய யெகோவாவை “சத்தியத்தின் கடவுள்” என்று அழைத்தார்கள். (சங்கீதம் 31:5, NW) இது ஏனென்றால், யெகோவா தாம் செய்வதாகச் சொன்ன எல்லாவற்றையும் செய்தார். அவர் வாக்குறுதிகளை அளித்தபோது, அவற்றைக் காத்துக்கொண்டார். அவர் தீர்க்கதரிசனங்கள் எழுதப்படும்படி ஏவியபோது, அவை நிறைவேறின. முடிவான நியாயத்தீர்ப்புகளை அவர் கொடுத்தபோது, அவை நடப்பிக்கப்பட்டன. இந்த உண்மைகளுக்கு லட்சக்கணக்கான இஸ்ரவேலர் கண்கண்ட சாட்சிகளாக இருந்தனர். பைபிளை ஏவப்பட்டு எழுதியவர்கள் அவற்றை மறுக்கமுடியாத வரலாற்று உண்மைகளாகப் பதிவுசெய்தனர். பரிசுத்தமாகக் கருதப்பட்ட மற்ற புத்தகங்களைப்போல், பைபிளானது கட்டுக்கதை அல்லது புராணக்கதையைப் பின்னணியாகக்கொண்டு எழுதப்படவில்லை. அது மெய்ப்பிக்கத்தக்க உண்மைகளின்பேரில்—வரலாற்றுப்பூர்வ, அகழ்வாராய்வு சார்ந்த, அறிவியல்பூர்வ, மற்றும் சமூக உண்மைகளின்பேரில்—உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. யெகோவாவைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு சொல்வதில் எவ்வித ஆச்சரியமுமில்லை: “உம்முடைய வேதம் சத்தியம். . . . உமது கற்பனைகளெல்லாம் உண்மை. . . . உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம்”!—சங்கீதம் 119:142, 151, 160.
இயேசு கிறிஸ்து யெகோவாவிடம் ஜெபத்தில் இவ்வாறு சொன்னபோது அந்தச் சங்கீதத்தின் வார்த்தைகளை எதிரொலித்தார்: “உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவான் 17:17) தம்முடைய பிதா பேசிய அனைத்தும் முழுமையாக உறுதியானதும் நம்பத்தக்கதுமாக இருந்தது என்று இயேசு அறிந்திருந்தார். அதைப்போலவே, இயேசுவும் ‘சத்தியத்தினால் நிறைந்தவராய்’ இருந்தார். (யோவான் 1:14) அவர் சொன்ன அனைத்தும் உறுதியாக நம்பத்தக்கவையாக, சத்தியமாக இருந்தன என்பதற்கு அவரைப் பின்பற்றியவர்கள் கண்கண்ட சாட்சிகளாக இருந்து, பின்வரும் எல்லா தலைமுறைக்குமாக அவற்றை பதிவுசெய்து வைத்தார்கள்.a
என்றபோதிலும், சத்தியத்தைப் பற்றி பேசுவதற்காகத் தாம் பூமிக்கு வந்திருந்ததாக இயேசு பிலாத்துவிடம் சொன்னபோது, அவர் குறிப்பிட்ட ஒரு சத்தியத்தை மனதில் கொண்டிருந்தார். “நீ ராஜாவோ” என்று கேட்ட பிலாத்துவின் கேள்விக்குப் பதிலாக இயேசு அந்தக் கூற்றைச் சொன்னார். (யோவான் 18:37) கடவுளுடைய ராஜ்யமும், அதன் ராஜாவாக இயேசுவின் சொந்த பாகமும், இயேசு பூமியில் இருந்தபோது, அவருடைய போதனையின் முக்கிய பொருளாக, மையக் கருத்தாக இருந்தன. (லூக்கா 4:43) அந்த ராஜ்யம், யெகோவாவின் பெயரைப் பரிசுத்தம் செய்யும், அவருடைய அரசுரிமையை நியாயநிரூபணம் செய்யும், உண்மையுள்ள மனிதகுலத்தை நித்தியமான மகிழ்ச்சியுள்ள வாழ்க்கைக்கு மீண்டும் கொண்டுவரும் என்பதே எல்லா உண்மையான கிறிஸ்தவர்களும் நம்பிக்கை கொண்டிருக்கும் “சத்தியம்” ஆகும். கடவுளுடைய வாக்குறுதிகள் அனைத்தின் நிறைவேற்றத்திலும் இயேசு வகிக்கும் பாகம் அவ்வளவு முக்கியமாக இருப்பதாலும், கடவுளுடைய தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் அவராலேயே “ஆமென்,” அல்லது சத்தியமாக ஆவதன் காரணமாகவும், இயேசுவால் இவ்வாறு நன்றாகவே சொல்ல முடிந்தது: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.”—யோவான் 14:6; 2 கொரிந்தியர் 1:20; வெளிப்படுத்துதல் 3:14.
இந்தச் சத்தியத்தை முழுமையாக நம்பத்தக்கதாக உணர்ந்துகொள்வது இன்று கிறிஸ்தவர்களுக்கு அதிக அர்த்தமுடையதாக இருக்கிறது. கடவுள்மீதுள்ள அவர்களுடைய விசுவாசமும் அவருடைய வாக்குறுதிகளின்பேரிலுள்ள அவர்களுடைய நம்பிக்கையும் உண்மைகளின் அடிப்படையில், நிஜங்களின் அடிப்படையிலானவை என்பதை இது அர்த்தப்படுத்துகிறது.
சத்தியம் செயல்பாட்டில்
ஆச்சரியத்திற்கிடமில்லாமல், பைபிளானது சத்தியத்தை செயல்பாட்டுடன் தொடர்புபடுத்துகிறது. (1 சாமுவேல் 12:24; 1 யோவான் 3:18) கடவுள்-பயமுள்ள யூதர்களுக்கு, சத்தியமானது தத்துவ ஆராய்ச்சிக்குரிய ஒரு பொருள் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது. “சத்தியம்” என்பதற்கான எபிரெய வார்த்தை “உண்மைத்தன்மை”யையும் குறிக்கக்கூடும்; சொல்தவறாதவர் என்பதாக நம்பத்தக்க ஒருவரைக் குறித்து விவரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. இயேசு தம்மைப் போலவே தம்மைப் பின்பற்றுகிறவர்களும் சத்தியத்தை நோக்கும்படியாக கற்பித்தார். பரிசேயரின் மாய்மாலத்தை, அவர்களுடைய சுயநீதியான வார்த்தைகளுக்கும் அநீதியான செயல்களுக்கும் இடையிலிருந்த பெரும்பிளவை அவர் கடுமையாக கண்டனம் செய்தார். மேலும் தாம் கற்பித்த சத்தியங்களின்படியே நடப்பதில் முன்மாதிரி வகித்தார்.
கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் அனைவருக்கும் அவ்வாறே இருக்கவேண்டும். அவர்களுக்கு, கடவுளுடைய வார்த்தையின் சத்தியம், இயேசு கிறிஸ்துவின் ஆட்சியின்கீழுள்ள கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய கிளர்ச்சியூட்டும் செய்தி, வெறும் தகவல் என்பதைவிட அதிகத்தை, மிக அதிகத்தைக் குறிக்கிறது. அந்தச் சத்தியம் அவர்களைச் செயல்படும்படி தூண்டுவிக்கிறது, அதற்கேற்ப வாழும்படியும் மற்றவர்களிடத்தில் அதை பகிர்ந்துகொள்ளும்படியும் வற்புறுத்துகிறது. (எரேமியா 20:9-ஐ ஒப்பிடுக.) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களாக அவர்கள் கடைப்பிடித்த வாழ்க்கை முறையானது சிலநேரங்களில் வெறுமனே ‘சத்தியம்’ அல்லது “சத்தியமார்க்கம்” என்பதாகச் சொல்லப்பட்டது.—2 யோவான் 4; 3 யோவான் 4, 8; 2 பேதுரு 2:2.
விலையேறப்பெற்ற ஒரு பொக்கிஷம்
உண்மையில், கடவுளுடைய வார்த்தையின் சத்தியங்களை ஏற்றுக்கொள்வது ஒரு விலையைக் கேட்கிறது. முதலாவதாக, சத்தியத்தைக் கற்றுக்கொள்வதுதானே, தகர்க்கக்கூடிய ஒரு அனுபவமாக இருக்கக்கூடும். தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா இவ்வாறு குறிப்பிடுகிறது: “சத்தியம் பெரும்பாலும் ஒத்துக்கொள்ள முடியாததாக இருக்கிறது, ஏனென்றால், அது தப்பெண்ணத்தை அல்லது கட்டுக்கதையை ஆதரிக்கத் தவறுகிறது.” நம்முடைய நம்பிக்கைகள் உண்மையற்றவை என்பதாக வெளிப்படுத்தப்படுவது மயக்கத்திலிருந்து தெளிவிப்பதைப் போன்று இருக்கலாம், முக்கியமாக, நம்பகமான மதத் தலைவர்களால் நாம் போதிக்கப்பட்டிருந்தால் அவ்வாறு இருக்கலாம். நம் நம்பகமான பெற்றோர், உண்மையில், இரகசிய குற்றவாளிகள் என கண்டுபிடிப்பதற்கு சிலர் இந்த அனுபவத்தை ஒப்பிடலாம். ஆனால் ஒரு ஏமாற்றத்தின்கீழ் வாழ்வதைக் காட்டிலும் மத சம்பந்தமான சத்தியத்தைக் கண்டுபிடிப்பது சிறந்ததல்லவா? பொய்களால் வழிநடத்தப்படுவதைக்காட்டிலும் உண்மைகளை அறிந்துகொள்வது மேலானதல்லவா?b—ஒப்பிடுக: யோவான் 8:32; ரோமர் 3:4.
இரண்டாவதாக, மத சம்பந்தமான சத்தியத்தின்படி வாழ்வது, முன்பு நமக்கு நண்பர்களாக இருந்த சிலரை இழப்பதை உட்படுத்தக்கூடும். அநேகர் ‘தேவனுடைய சத்தியத்தை பொய்யாக மாற்றியிருக்கும்’ உலகில், கடவுளுடைய வார்த்தையாகிய சத்தியத்தை உறுதியாகக் கடைப்பிடிப்பவர்கள் இயற்கைக்கு மாறுபட்டவர்களாகத் தோன்றி, சிலசமயங்களில் வெறுத்து ஒதுக்கப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறார்கள்.—ரோமர் 1:25; 1 பேதுரு 4:4.
ஆனால் சத்தியமானது இந்த இரட்டிப்பான விலைக்குத் தகுந்ததே. சத்தியத்தை அறிவது நம்மை பொய்கள், ஏமாற்றங்கள், மற்றும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுவிக்கிறது. நாம் அதற்கிசைய வாழும்போது, கஷ்டங்களைச் சகித்துக்கொள்ளும்படியாக சத்தியம் நம்மைப் பலப்படுத்துகிறது. கடவுளுடைய சத்தியம் அவ்வளவு நம்பத்தக்கதாகவும் ஆதாரப்பூர்வமானதாகவும் இருக்கிறது; ஆகவே அது நாம் எந்தவிதமான சோதனையிலும் உறுதியாக நிற்பதற்கு நமக்கு அவ்வளவு நம்பிக்கையூட்டுகிறது. அப்போஸ்தலன் பவுல் சத்தியத்தை, போருக்குச் சென்ற படைவீரர்கள் அணிந்த அகலமான, கெட்டியான தோல்கச்சை, அல்லது அரைக்கச்சைக்கு ஒப்பிட்டதில் எவ்வித ஆச்சரியமுமில்லை!—எபேசியர் 6:13, 14.
பைபிள் பழமொழி இவ்வாறு சொல்கிறது: “சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.” (நீதிமொழிகள் 23:23) சம்பந்தப்பட்ட ஒன்றாக அல்லது அப்படி ஒன்று இல்லை என்பதாக சத்தியத்தை ஒதுக்கிவிடுவது, வாழ்க்கை தருகிற மிகவும் கிளர்ச்சியூட்டுவதும் திருப்தியளிப்பதுமான தேடுதலை இழப்பதாக இருக்கும். அதைக் கண்டடைவது நம்பிக்கையைக் கண்டடைவதாகும்; அதை அறிந்து, நேசிப்பது, சர்வலோகத்தின் சிருஷ்டிகரையும் அவருடைய ஒரேபேறான குமாரனையும் அறிந்து அவர்களை நேசிப்பதாகும்; அதற்கிசைவாக வாழ்வது, இப்போதும் எப்போதும் ஒரு நோக்கத்துடனும் மனசமாதானத்துடனும் வாழ்வதாகும்.—நீதிமொழிகள் 2:1-5; சகரியா 8:19; யோவான் 17:3.
[அடிக்குறிப்புகள்]
a இயேசு தம்முடைய வார்த்தைகளின் உண்மைத்தன்மையை அழுத்திக்காண்பிக்கும் விதத்தில் ஒரு தனிப்பட்ட பதத்தைப் பயன்படுத்தியதாக சுவிசேஷப் பதிவுகளில் 70 தடவைகளுக்குமேல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஒரு வாக்கியத்தை அறிமுகப்படுத்துவதற்காக அவர் பெரும்பாலும் “ஆமென்” (“மெய்யாகவே,” தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு) என்ற பதத்தைப் பயன்படுத்தினார். அதற்கு இணையான எபிரெய வார்த்தை “நிச்சயம், சத்தியம்” என அர்த்தப்பட்டது. தி நியூ இன்டர்நேஷனல் டிக்ஷனரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் தியாலஜி இவ்வாறு குறிப்பிடுகிறது: “இயேசு தம்முடைய வார்த்தைகளை ஆமென் என்பதுடன் அறிமுகப்படுத்துகையில் அவை நிச்சயமானவை, நம்பத்தக்கவை என்று முத்திரையிட்டார். அவர் தம்முடைய வார்த்தைகளின்படியே நின்று, அவை தம்மையும் தாம் சொன்னவற்றைக் கேட்டவர்களையும் கட்டுப்படுத்தும்படி பார்த்துக்கொண்டார். அவருடைய மாட்சிமை மற்றும் அதிகாரத்தின் ஒரு வெளிக்காட்டாக அவை இருக்கின்றன.”
b “சத்தியம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை அலெதீயா (a·leʹthei·a), “மறைத்து வைக்கப்படாத” என்று அர்த்தப்படும் ஒரு வார்த்தையிலிருந்து வருகிறது; ஆகவே சத்தியமானது முன்பு மறைத்து வைக்கப்பட்டிருந்ததை வெளிப்படுத்துவதைப் பெரும்பாலும் உட்படுத்துகிறது.—லூக்கா 12:2-ஐ ஒப்பிடுக.
[பக்கம் 6-ன் பெட்டி]
சத்தியம் எப்போதாவது மாறுமா?
அந்தக் கேள்வி, சிந்தனா கலை என்ற புத்தகத்தில் வி. ஆர். ரூஜிரோவால் எழுப்பப்பட்டது. அவருடைய பதில் இல்லை என்பதே. அவர் விளக்குகிறார்: “அது சிலவேளைகளில் அவ்வாறு தோன்றக்கூடும், ஆனால் உற்று ஆராய்ந்தால் அது அவ்வாறில்லை என்பது காணப்படும்.”
அவர் சொல்லுகிறார், “பைபிளின் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தின் எழுத்தாசிரியரைக் குறித்த விஷயத்தை எண்ணிப்பாருங்கள். அந்தப் புத்தகத்திற்கு ஒரே ஒரு எழுத்தாசிரியரே இருந்ததாக கிறிஸ்தவர்களும் யூதர்களும் நூற்றாண்டுகளாக நம்பினர். காலப்போக்கில் அந்தக் கருத்தின்பேரில் கேள்வி எழுப்பப்பட்டது, ஆதியாகமத்தை எழுதுவதில் ஐந்து பேர் உட்பட்டிருந்தார்கள் என்ற நம்பிக்கையால் அது கடைசியில் மாற்றீடு செய்யப்பட்டது. பின்னர், 1981-ல், ஆதியாகமத்தைப் பற்றிய 5-வருட மொழி ஆராய்ச்சியின் முடிவுகள் பிரசுரிக்கப்பட்டன; ஆரம்பத்தில் நினைத்ததுபோல், ஒரு எழுத்தாசிரியரால் எழுதப்பட்டதற்கே 82 சதவீத சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்டது.
“ஆதியாகமத்தின் எழுத்தாசிரியரைப் பற்றிய சத்தியம் மாறியிருக்கிறதா? இல்லை. நம்முடைய நம்பிக்கையே மாறி இருக்கிறது. . . . நம்முடைய அறிவு அல்லது அறியாமையைப் பொறுத்து சத்தியம் மாறாது.”
[பக்கம் 7-ன் பெட்டி]
சத்தியத்திற்கான பெருமதிப்பு
“சத்தியத்திற்கான மதிப்பு, எவரும் எதுவும் சத்தியத்தைக் கொண்டிருப்பதாக உரிமைபாராட்ட முடியாது என்ற நம்பிக்கையுடன் எல்லாவற்றையும் ‘வெளிப்படுத்த’ முயற்சி செய்யும் நம் யுகத்தின் வெறும் பொய்யான நம்பிக்கையின்மையாக இல்லை. அது, சத்தியம் எப்போது, எங்கிருந்து தென்படுமோ அப்போது அதற்கு மனத்தாழ்மையுடன் கீழ்ப்படிவதோடு, சத்தியம் உண்மையில் கண்டடையப்படலாம் என்பதால் பெறும் சந்தோஷமுள்ள நம்பிக்கையையும் சேர்ப்பதால் பெறும் மனநிலையே ஆகும். சத்தியத்தின் கடவுளை வணங்குவோருக்கு சத்தியத்தினிடமாக அப்படிப்பட்ட திறந்த மனப்பான்மை தேவை; என்றாலும், சத்தியத்திற்கு தகுந்த மதிப்பானது, ஒரு மனிதன் தன் வார்த்தையிலும் நடத்தையிலும் தன் அயலானோடு நேர்மையுடன் செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது. இந்த மனநிலையைப் பற்றியே பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் சான்றுபகர்கின்றன என்பதை நாம் கண்டிருக்கிறோம்.”—தி நியூ இன்டர்நேஷனல் டிக்ஷனரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் தியாலஜி, தொகுப்பு 3, பக்கம் 901.
[பக்கம் 7-ன் படங்கள்]
அறிவியல் சத்தியங்கள் வெளிப்படுத்தப்படுவதைச் சார்ந்தே அறிவியல் முன்னேற்றம் ஏற்படுகிறது
[பக்கம் 8-ன் படம்]
ராஜ்யத்தையும் அதன் ஆசீர்வாதங்களையும் சத்தியம் உள்ளடக்குகிறது