கொந்தளிப்பான உலகில் சமாதானத்தை கண்டடைந்தனர்
இந்தப் பத்திரிகையின் மேலட்டையிலுள்ள விளக்கப்படத்தில் போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவிலிருந்து ஒரு கொடூரமான போர்க்காட்சி காண்பிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு இடத்தில் சமாதானம் இருக்க முடியுமா? ஆச்சரியப்படும் வகையில் அதற்கு பதில் ஆம் என்பதே. துயரம் நிறைந்த அந்தத் தேசத்தில் ரோமன் கத்தோலிக்க, கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ், முஸ்லிம் சமுதாயங்கள் போன்றவை பிராந்தியத்துக்காக போராடிக்கொண்டிருக்கிறபோதிலும், தனிப்பட்ட நபர்கள் அநேகர் சமாதானத்துக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர், சிலர் அதை கண்டடைந்திருக்கின்றனர்.
சராஜிவோவில் குடியிருந்த டாரெம்ஸ் குடும்பத்தார் யெகோவாவின் சாட்சிகளாய் இருந்தனர். அந்தப் பட்டணத்திலிருந்த எல்லா கொந்தளிப்பின் மத்தியிலும், அவர்கள் வழக்கம்போலவே தங்கள் அயலாரைச் சந்தித்து கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். (மத்தேயு 24:14) ஏன்? இந்த ராஜ்யம் உண்மையான அரசாங்கம் என்றும், இது பரலோகத்தில் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது என்றும், இது சமாதானத்துக்கான மனிதவர்க்கத்தின் மிகச்சிறந்த ஒரே நம்பிக்கை என்றும் டாரெம் குடும்பத்தார் அறிந்திருந்தனர். ‘சமாதானத்தின் சுவிசேஷம்’ என்று அப்போஸ்தலனாகிய பவுல் அழைத்ததன் பேரில் யெகோவாவின் சாட்சிகள் முழு நம்பிக்கை உடையவர்களாய் இருக்கின்றனர். (எபேசியர் 2:17) போஸொ மற்றும் ஹீனா டாரெம் போன்ற நபர்களின் உதவியால் அநேகர் போஸ்னியாவிலும் ஹெர்ஸிகோவினாவிலும் சமாதானத்தைக் காண்கின்றனர்.
மெய்யான சமாதானம் வரவிருக்கிறது
டாரெம் குடும்பத்தாரைப் பற்றி சொல்வதற்கு அதிகம் உள்ளது. ஆனால், கடவுளுடைய ராஜ்யத்தில் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்ட மற்றொரு தம்பதியினரைப் பற்றி நாம் முதலில் பேசுவோம். அவர்களுடைய பெயர்கள் ஆர்ட்டர் மற்றும் ஆரினா. அவர்களும் அவர்களுடைய இளம் மகன்களும் முன்னாள் சோவியத் யூனியன் பிராந்தியத்திலிருந்த ஒரு குடியரசில் வாழ்ந்து வந்தனர். உள்நாட்டுப்போர் மூண்டபோது, போரில் ஈடுபட்டிருந்த ஒரு பக்கத்தின் சார்பாக ஆர்ட்டர் போரிட்டார். ஆனால் விரைவில் அவர் தன்னையே கேட்டுக்கொண்டார், ‘என்னுடைய அயலகத்தாராயிருந்த இந்த ஜனங்களுக்கு விரோதமாக நான் ஏன் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறேன்?’ அவர் நாட்டை விட்டுச் சென்றார், பின்னர் பல கஷ்டங்களுக்குப் பிறகு தன் இளம் குடும்பத்தோடு எஸ்டோனியாவுக்கு வந்து சேர்ந்தார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்கிற்கு ஆர்ட்டர் சென்றபோது, யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்து கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அவர் கற்றுக்கொண்டவற்றால் மனம் கவரப்பட்டார். வெகு சீக்கிரத்தில் கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே மனிதவர்க்கத்தின் மீது ஒரே அரசாட்சியாக இருக்கும் என்பது யெகோவாவின் சித்தம். (தானியேல் 2:44) பின்னர் இந்தப் பூமி சமாதானமான ஒரு இடமாக ஆகும், அதற்குப் பிறகு உள்நாட்டுப் போர்களோ அல்லது சர்வதேச மோதல்களோ இருக்காது. ஏசாயா அந்த சமயத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தார்: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:9.
ஒரு சாட்சி அவருக்குக் காண்பித்த பைபிள் படிப்புக்கு உதவும் ஒரு புத்தகத்தில் ஓவியர் வரைந்திருந்த அந்த எதிர்கால சமாதான பூமியின் படத்தைப் பார்த்துவிட்டு, அதைப் போன்று காட்சியளித்த ஒரு இடத்தில் தான் ஒரு சமயம் வாழ்ந்துகொண்டிருந்ததாக ஆர்ட்டர் குறிப்பிட்டார். ஆனால் இப்போதோ அது உள்நாட்டுப் போரினால் பாழாக்கப்பட்டுள்ளது. எஸ்டோனியாவுக்குத் திரும்பி வந்த பிறகு ஆர்ட்டரும் அவருடைய குடும்பத்தினரும் இன்னுமதிகமாக கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளோடு ஒரு பைபிள் படிப்பின் மூலம் கற்றுக்கொண்டிருக்கின்றனர்.
கொந்தளிப்பின் மத்தியில் சமாதானம்
சங்கீதம் 37:37 சொல்கிறது: “நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.” உண்மையில், கடவுளுடைய பார்வையில் குற்றமற்றவரும் நேர்மையானவருமாய் இருக்கிறவருக்கு சமாதானம் எதிர்காலத்தில் மட்டும் இருக்கப்போவதில்லை. அவர் அதை இப்போதே அனுபவிக்கிறார். அது எப்படி முடியும்? பால் என்ற பெயருடைய ஒரு மனிதரின் அனுபவத்தைச் சிந்தித்துப் பாருங்கள்.
பால் என்பவர் உண்மையில் பக்கத்து தேசத்திலிருந்து வந்தபோதிலும், தென்மேற்கு எதியோபியாவில் தொலைகோடியிலுள்ள ஒரு அகதி முகாமில் வாழ்கிறார். அவருடைய சொந்த தேசத்தில் பெட்ரோலியம் கம்பெனி ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரை அவர் சந்தித்தார், இந்த மனிதர் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற பைபிள் படிப்புக்கு உதவும் ஒரு புத்தகத்தை அவருக்கு அளித்தார்.a பால் மறுபடியும் சாட்சிகளை சந்திக்கவேயில்லை, ஆனால் அவர் அந்தப் புத்தகத்தை கவனமாக படித்தார். உள்நாட்டுப்போர் அவரை எதியோபியாவில் இருந்த அகதிகள் முகாம் ஒன்றுக்கு துரத்தியது, அங்கே அவர் தான் கற்றுக்கொண்ட காரியங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசினார். ஒரு சிறிய தொகுதி இதை சத்தியமாக ஏற்றுக்கொள்ள முன்வந்தது. தாங்கள் கற்றுக்கொண்ட காரியங்களை அடிப்படையாகக்கொண்டு, அவர்கள் விரைவில் அந்த முகாமிலிருந்த மற்றவர்களிடம் பிரசங்கித்துக் கொண்டிருந்தனர்.
பால் உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைமை அலுவலகத்துக்கு உதவிக்காக கேட்டு எழுதினார். 35 நபர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து அதிகமாக கற்றுக்கொள்ள தயாராக காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அடிஸ் அபாபாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு ஊழியர் ஆச்சரியமடைந்தார். ஒரு ஒழுங்கான அடிப்படையில் உதவி கொடுப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பால் என்பவரைப் போன்ற ஆட்கள் சமாதானத்தை அனுபவிக்கின்றனர் என்று எவ்வாறு சொல்லலாம்? அவர்களுடைய வாழ்க்கை சுலபமானதாக இல்லை, ஆனால் அவர்கள் கடவுள் பேரில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். கொந்தளிப்பான இந்த உலகத்தால் பாதிக்கப்படும்போது, அவர்கள் பைபிளின் புத்திமதியை பொருத்துகின்றனர்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” அதன் காரணமாக, இன்று அரிதாக காணப்படும் திருப்தியை அவர்கள் உடையவர்களாய் இருக்கின்றனர். அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பிய சபைக்கு எழுதிய வார்த்தைகள் அவர்களுக்குப் பொருந்தும்: “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” உண்மையிலேயே அவர்கள் ‘சமாதானத்திற்குத் தேவனாயிருக்கும்’ யெகோவாவோடு ஒரு நெருங்கிய உறவை அனுபவிக்கின்றனர்.—பிலிப்பியர் 4:6, 7, 9.
தற்போதைய சமாதானம்
கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இயேசு கிறிஸ்து, பைபிளில் ‘‘சமாதானப்பிரபு” என்று அழைக்கப்படுகிறார். (ஏசாயா 9:6) அவரைக் குறித்து பண்டைய தீர்க்கதரிசி சொன்னார்: “அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.” (சகரியா 9:10) ஏவப்பட்டு எழுதப்பட்ட இப்படிப்பட்ட வார்த்தைகள் ஹோஸே என்ற பெயருடைய ஒரு மனிதரின் வாழ்க்கையில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.
ஒரு சமயம் ஹோஸே சிறைச்சாலையில் இருந்தார். அவர் ஒரு பயங்கரவாதி, காவலர் குடியிருப்புகளை வெடிவைத்துத் தகர்ப்பதற்காக தயாரிப்புகளை செய்துகொண்டிருக்கையில் கைது செய்யப்பட்டார். அவருடைய தேசத்தில் இருந்த நிலைமைகளை மேம்படுத்துவதற்கு, வன்முறை மட்டுமே அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் என்று அவர் எண்ணினார். அவர் சிறைச்சாலையில் இருந்தபோது, யெகோவாவின் சாட்சிகள் அவருடைய மனைவியோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தனர்.
ஹோஸே விடுதலை செய்யப்பட்ட பின்பு, அவரும்கூட பைபிளை படித்தார், விரைவில் சங்கீதம் 85:8-ல் காணப்படும் வார்த்தைகள் அவருக்கு பொருந்த ஆரம்பித்தன: “கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்.” இருப்பினும், அந்த வசனம் ஒரு எச்சரிப்போடு முடிவடைகிறது: “அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.” எனவே, யெகோவாவின் சமாதானத்தை நாடும் ஒருவர், துணிவோடு தன்னிச்சையாக செயல்படவோ அல்லது அவருடைய சித்தத்துக்கு எதிராகவோ இருக்கமாட்டார்.
இன்று ஹோஸேவும் அவருடைய மனைவியும் கிறிஸ்தவ ஊழியர்களாக இருக்கின்றனர். யெகோவாவின் ராஜ்யமே பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று மற்றவர்களை அதனிடமாக வழிநடத்துகின்றனர், அதற்கு முன்பு வீட்டில் செய்யப்பட்ட குண்டுகளைக்கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க ஹோஸே முயற்சி செய்து கொண்டிருந்தார். அவர்கள் இப்போது பைபிளை நம்புவதற்கு மனமுள்ளவர்களாய் இருக்கின்றனர், அது சொல்கிறது: “யெகோவா தம் பங்கில் நன்மையானதைத் தருவார்.” (சங்கீதம் 85:12, NW) ஹோஸே தான் அழிக்கத் திட்டமிட்டுக்கொண்டிருந்த குடியிருப்புகளுக்கு சமீபத்தில் சென்றார். ஏன்? கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அங்கேயிருந்த குடும்பங்களிடம் பேசுவதற்காக சென்றார்.
சமாதானமுள்ள ஜனம்
சங்கீதம் 37:10, 11-ல் பைபிள் சொல்கிறது: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” என்னே ஒரு மகத்தான எதிர்பார்ப்பு!
ஆனால், யெகோவாவின் சமாதானம் ‘சாந்தகுணமுள்ளவர்களுக்கு’ மட்டுமே என்பதை கவனியுங்கள். சமாதானத்தை நாடுபவர்கள் சமாதானமாயிருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இது நியூ ஜீலாந்தில் வாழும் கீத் என்பவருடைய விஷயத்தில் உண்மையாயிருந்தது. கீத் என்பவர் ‘உடலமைப்பிலும் ஆளுமையிலும் சக்திவாய்ந்தவராயும், எதிர்த்து சண்டையிடும் தன்மையுடையவராயும், விவாதிப்பதில் ஆர்வமுடையவராயும்’ விவரிக்கப்பட்டிருந்தார். அவர் ஒரு கும்பலைச் சேர்ந்த அங்கத்தினராக இருந்தார். ஒரு கோட்டையைப் போல் தோற்றமளித்த வீட்டில் அவர் வாழ்ந்து வந்தார், அதற்குள் அழையாது நுழைபவரை உள்ளே விடாமல் இருப்பதற்காக தோட்டங்களில் மூன்று காவல் நாய்கள் ரோந்து சுற்றிக்கொண்டிருந்தன. ஆறு பிள்ளைகளுக்கு தாயாக இருந்த அவருடைய மனைவி, அவரை விவாகரத்து செய்துவிட்டிருந்தார்.
கீத் யெகோவாவின் சாட்சிகளை சந்தித்தபோது, நற்செய்தி அவர் மீது ஆழமான பாதிப்பைக் கொண்டிருந்தது. விரைவில் அவரும் அவருடைய பிள்ளைகளும் சாட்சிகளோடு கூட்டங்களுக்கு ஆஜராகிக் கொண்டிருந்தனர். அவர் இடுப்பு வரை வைத்திருந்த முடியை வெட்டி விட்டு, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி தன்னுடைய முன்னாள் கூட்டாளிகளிடம் பேச ஆரம்பித்தார். அவர்களில் சிலரும்கூட பைபிளைப் படிக்க ஆரம்பித்தனர்.
உலகமுழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான நேர்மை இருதயமுள்ள நபர்களைப் போன்று கீத் அப்போஸ்தலனாகிய பேதுருவின் வார்த்தைகளைப் பொருத்த ஆரம்பித்திருக்கிறார்: “ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் . . . பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.” (1 பேதுரு 3:10, 11) கீத்தின் முன்னாள் மனைவி அவரை மறுபடியும் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார்கள், அவர் இப்போது ‘சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடர’ கற்றுக்கொண்டிருக்கிறார்.
முன்னாள் சோவியத் யூனியனில் பிறந்த ஒருவர் ஒருகாலத்தில் விளையாட்டு வீரராயிருந்தார். அவர் உட்பட, யெகோவாவின் சமாதானம் அநேகருக்கு ஜீவனைப் பாதுகாக்கும் ஒன்றாக இருந்திருக்கிறது. இந்த மனிதர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பதக்கங்களை வென்றிருந்தார், ஆனால் அவர் மனச்சோர்வடைந்து போதைப்பொருட்களையும் மதுபானத்தையும் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். சைபீரியாவில் உள்ள உழைப்பாளிகள் முகாமில் மூன்றுவருட தண்டனை, கப்பலில் கட்டணமில்லாமலேயே கனடாவுக்கு ஒருமுறை பயணம், அவருடைய போதைப்பொருள் பழக்கத்தின் காரணமாக இரண்டு முறை ஏறக்குறைய சாகும்நிலை போன்ற சம்பவங்கள் நிறைந்த 19 வருடங்களுக்குப் பிறகு, வாழ்க்கையில் ஒரு மெய்யான நோக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கு உதவிக்காக அவர் கடவுளிடம் ஜெபித்தார். ரஷ்ய மொழி பேசும் யெகோவாவின் சாட்சிகளோடு கொண்டிருந்த ஒரு பைபிள் படிப்பு அவருடைய கேள்விகளுக்கு பதிலைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவியது. இன்று இந்த மனிதர் லட்சக்கணக்கான மற்றவர்களைப் போன்று கடவுளோடும் தன்னோடும் சமாதானத்தைக் கண்டடைந்திருக்கிறார்.
உயிர்த்தெழுதல் நம்பிக்கை
கடைசியில், நாம் சராஜிவோவில் உள்ள பொஸோ மற்றும் ஹீனா டாரெம் விஷயத்துக்கு வருவோம். இந்தத் தம்பதிக்கு மாக்டாலேனா என்ற ஐந்து வயது மகள் இருந்தாள். அந்த மூன்று பேரும் கடந்த ஜூலை மாதம் மறுபடியும் பிரசங்க வேலையில் ஈடுபடுவதற்காக வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றபோது திடீரென வெடிகுண்டு வெடித்ததால் அனைவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் மற்றவர்களிடம் பிரசங்கித்துக்கொண்டிருந்த சமாதானத்தைப் பற்றியென்ன? அவர்களுடைய உயிர்களை எடுத்துக்கொண்ட வெடிகுண்டு, இது மெய்யான சமாதானம் இல்லை என்று காண்பித்ததா?
நிச்சயமாகவே இல்லை! இந்த காரிய ஒழுங்குமுறையில் விசனகரமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஜனங்கள் குண்டுகளாலோ வெடிகுண்டுகளாலோ கொல்லப்படுகின்றனர். மற்றவர்கள் வியாதியிலோ விபத்துக்களிலோ இறந்துவிடுகின்றனர். அநேகர் வயோதிபத்தின் காரணமாக மரித்துவிடுகின்றனர். கடவுளுடைய சமாதானத்தை அனுபவிப்பவர்கள் அப்படிப்பட்ட நிகழ்வுகளிலிருந்து விடுபட்டவர்களாய் இல்லை, ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழும் சாத்தியம் இருந்தாலும்கூட அது அவர்களை நம்பிக்கையின்றி விடுவதில்லை.
இயேசு தம் சிநேகிதியாகிய மார்த்தாளிடம் சொன்னார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” (யோவான் 11:25) இதை எல்லா யெகோவாவின் சாட்சிகளும் நம்புவதுபோல டாரெம்ஸ் குடும்பத்தாரும் நம்பினர். மரித்துப்போவார்கள் என்றால், உண்மையிலேயே ஒரு சமாதானமான இடமாக இருக்கப்போகும் பூமியின் மீது உயிர்த்தெழுப்பப்படுவர் என்று டாரெம்ஸ் குடும்பத்தார் விசுவாசித்தனர். யெகோவா தேவன் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் . . . துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4.
இயேசு மரிப்பதற்கு சற்றுமுன்பு தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் சொன்னார்: ‘என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். . . . உங்கள் இருதயம் கலங்காமல் இருப்பதாக.’ (யோவான் 14:27) அந்த சமாதானத்தைக் கொண்டிருந்த டாரெம்ஸ் குடும்பத்தோடு சேர்ந்து நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம். அவர்கள் அந்த சமாதானத்தை இன்னும் முழுமையாக உயிர்த்தெழுதலில் அனுபவிப்பர். சமாதானத்தின் தேவனாயிருக்கும் யெகோவாவை வணங்கும் அனைவரைக் குறித்தும் நாங்கள் சந்தோஷப்படுகிறோம். அப்படிப்பட்டவர்கள் மன சமாதானத்தைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கடவுளோடு சமாதானத்தை அனுபவிக்கின்றனர். மற்றவர்களோடு சமாதானத்தை வளர்த்துக்கொள்கின்றனர். அவர்கள் ஒரு சமாதானமான எதிர்காலத்தின் பேரில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆம், கொந்தளிப்பான உலகில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், சமாதானத்தை கண்டடைந்திருக்கின்றனர். கடவுளை ஆவியோடும் உண்மையோடும் வணங்கும் அனைவரும் உண்மையிலேயே சமாதானத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்களும்கூட அப்படிப்பட்ட சமாதானத்தைக் கண்டடைவீர்களாக.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 7-ன் படங்கள்]
கொந்தளிப்பான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறபோதிலும், சமாதானத்தைக் கண்டடைந்திருக்கின்றனர்