யெகோவாவின் ஆடுகளுக்கு மென்மையான கவனிப்பு தேவை
“கர்த்தரே [“யெகோவாவே,” NW] தேவனென்று அறியுங்கள்; . . . நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.”—சங்கீதம் 100:3.
1. யெகோவா எவ்வாறு தம் ஊழியர்களை நடத்துகிறார்?
யெகோவா பெரிய மேய்ப்பராய் இருக்கிறார். நாம் அவருடைய ஊழியர்களாய் இருக்கிறோம் என்றால், அவர் நம்மை அவருடைய ஆடுகளைப் போல் கருதி நமக்கு மென்மையான கவனிப்பைக் கொடுக்கிறார். நம்முடைய பரலோக தகப்பன் நம்மை ஆறுதல்படுத்தி நமக்கு புத்துணர்ச்சியளித்து நம்மை “தம்முடைய நாமத்தினிமித்தம் நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.” (சங்கீதம் 23:1-4) நல்ல மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்து நம்மை மிகவும் அதிகமாக நேசிப்பதன் காரணமாக தம்முடைய ஜீவனையே நமக்காக கொடுத்தார்.—யோவான் 10:7-15.
2. கடவுளுடைய ஜனங்கள் என்ன நிலைமையில் தங்களைக் காண்கின்றனர்?
2 அவருடைய மென்மையான கவனிப்பைப் பெற்றிருக்கும் நாம் சங்கீதக்காரனோடு சேர்ந்து இவ்வாறு சொல்லலாம்: “மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.” (சங்கீதம் 100:2, 3) ஆம், நாம் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறோம். இது, பலமான கற்சுவர்களைக்கொண்ட ஆட்டுத்தொழுவத்துக்குள், சூறையாடுகிற பொல்லாதவர்களிடமிருந்து நாம் பாதுகாப்பாய் இருந்ததைப் போல் உள்ளது.—எண்ணாகமம் 32:16; 1 சாமுவேல் 24:3; செப்பனியா 2:6; NW.
மந்தையின் மனமுவந்த மேய்ப்பர்கள்
3. நியமிக்கப்பட்ட கிறிஸ்தவ மூப்பர்கள் கடவுளுடைய மந்தையை எவ்வாறு நடத்துகின்றனர்?
3 கடவுளுடைய ஆடுகளாக நாம் மகிழ்ச்சியாயிருப்பது ஆச்சரியமாயில்லை! நியமிக்கப்பட்ட மூப்பர்கள் நம்மை முன்நின்று நடத்துகின்றனர். அவர்கள் “அதிகாரிகளைப் போலவோ,” இறுமாப்புடன் ஆளுகிறவர்களாகவோ நடந்துகொள்வதில்லை, அல்லது நம் விசுவாசத்திற்கு எஜமானர்களாக இருக்க முயலுவதோ இல்லை. (எண்ணாகமம் 16:13; மத்தேயு 20:25-28; 2 கொரிந்தியர் 1:24; எபிரெயர் 13:7) அதற்கு மாறாக, அவர்கள் அப்போஸ்தலனாகிய பேதுருவின் புத்திமதியைப் பொருத்தும் அன்பான மேய்ப்பர்களாய் இருக்கின்றனர்: “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.” (1 பேதுரு 5:2, 3) அப்போஸ்தலனாகிய பவுல் உடன் மூப்பர்களிடம் இவ்வாறு சொன்னார்: “ஆகையால் உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே [“சொந்த குமாரனுடைய ரத்தத்தினாலே,” NW] சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.” பரிசுத்த ஆவியினால் நியமிக்கப்படும் இப்படிப்பட்ட மூப்பர்கள் ‘மந்தையை மென்மையுடன் நடத்துவதற்காக’ ஆடுகள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றனர்’!—அப்போஸ்தலர் 20:28-30.
4. மந்தையோடு கொண்டிருந்த என்ன வகையான உறவுக்காக சார்ல்ஸ் டி. ரஸல் நன்கு அறியப்பட்டிருந்தார்?
4 இயேசு சபைக்கு ‘மனிதரில் வரங்களைக்’ கொடுத்தார், சிலரை “பாஸ்டர்கள்,” அல்லது மேய்ப்பர்களாக ஏற்படுத்தினார், இவர்கள் யெகோவாவின் மந்தையை மென்மையான விதத்தில் நடத்துகின்றனர். (எபேசியர் 4:8, 13, கிங் ஜேம்ஸ் வர்ஷன்) இப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர் சார்ல்ஸ் டி. ரஸல். இவர் உவாட்ச் டவர் சொஸைட்டியின் முதல் பிரஸிடென்ட் ஆவார். பிரதான மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவின் கீழ் மந்தையை அன்போடும் இரக்கத்தோடும் மேய்ப்பதில் இவர் செய்த வேலைகளின் காரணமாக பாஸ்டர் ரஸல் என்று அழைக்கப்பட்டார். இன்று கிறிஸ்தவ மூப்பர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவால் நியமிக்கப்படுகின்றனர், “பாஸ்டர்,” “மூப்பர்,” “போதகர்” போன்ற சொற்களைப் பட்டப்பெயர்களாக உபயோகப்படுத்தாமல் இருப்பதன் பேரில் கவனம் செலுத்தப்படுகிறது. (மத்தேயு 23:8-12) இருப்பினும், தற்கால மூப்பர்கள் யெகோவாவினுடைய மேய்ச்சலின் ஆடுகளுக்குரிய நன்மைக்கென்று ஒரு மேய்க்கும் வேலையை அல்லது மேய்ப்பனுக்குரிய வேலையை செய்கின்றனர்.
5. கிறிஸ்தவ சபையில் உள்ள நியமிக்கப்பட்ட மூப்பர்களை புதியவர்கள் ஏன் அறிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்?
5 மேய்ப்பர்களாக, மூப்பர்கள் புதிய நபர்களின் ஆவிக்குரிய முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான பாகத்தை வகிக்கின்றனர். எனவே, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புதிய புத்தகம் பக்கம் 168-ல் இவ்வாறு சொல்கிறது: “சபையிலுள்ள நியமிக்கப்பட்ட மூப்பர்களோடு பழகி, அவர்களை அறிந்துகொள்ளுங்கள். தேவனை அறியும் அறிவைப் பொருத்துவதில் அவர்களுக்கு அதிக அனுபவம் இருக்கிறது, ஏனென்றால் கண்காணிகளுக்காக பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கும் தகுதிகளை அவர்கள் பூர்த்தி செய்திருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9) கடவுள் தேவைப்படுத்துகிறவற்றிற்கு முரணாக இருக்கும் ஒரு பழக்கத்தை அல்லது குணத்தை மேற்கொள்வதற்கு உங்களுக்கு ஆவிக்குரிய உதவி தேவைப்படுமானால், அவர்களில் ஒருவரை அணுக தயங்கவேண்டாம். மூப்பர்கள் பவுலின் புத்திமதியைப் பின்பற்றுவதை நீங்கள் காண்பீர்கள்: ‘திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.’—1 தெசலோனிக்கேயர் 2:7, 8; 5:14.”
புதியவர்கள் பிரசங்கிக்க விரும்புகையில்
6. ஒரு பைபிள் மாணாக்கர் ராஜ்ய பிரஸ்தாபியாக ஆக விரும்பினால் என்ன முறை பின்பற்றப்படுகிறது?
6 ஒரு பைபிள் மாணாக்கர் அறிவைப் பெற்றுக்கொண்டு கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்து கொஞ்ச காலத்துக்குப் பிறகு, அவர் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஒரு ராஜ்ய பிரஸ்தாபியாக ஆக விரும்பலாம். (மாற்கு 13:10) அப்படியென்றால், அவரோடு பைபிளைப் படித்துக்கொண்டிருக்கும் சாட்சி நடத்தும் கண்காணியோடு தொடர்புகொள்ள வேண்டும், அவர் சபை ஊழியக் குழுவில் உள்ள ஒரு மூப்பரோடும் மற்றொரு மூப்பரோடும் பைபிள் மாணாக்கரையும் அவருடைய ஆசிரியரையும் சந்திக்கும்படி ஏற்பாடு செய்வார். அந்தக் கலந்தாலோசிப்பு நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகம், பக்கங்கள் 98-99 பேரில் சார்ந்திருக்கும். புதியவர் அடிப்படை பைபிள் சத்தியங்களை நம்புகிறார் என்பதையும், கடவுளுடைய நியமங்களுக்கு இணக்கமாயிருக்கிறார் என்பதையும் இந்த இரண்டு மூப்பர்களும் கவனித்தால், அவர் பொது ஊழியத்தில் பங்குகொள்வதற்கு தகுதி பெற்றிருக்கிறார் என்று அவருக்குச் சொல்லப்படும்.a வெளி ஊழிய அறிக்கையை போடுவதன் மூலம், தன்னுடைய ஊழியத்தை அறிக்கை செய்யும்போது, அது அவருடைய பெயர் எழுதப்பட்டிருக்கும் சபை பிரஸ்தாபிகளின் பதிவு அட்டையில் குறித்து வைக்கப்படும். அப்புதியவர் இப்போது மகிழ்ச்சியோடு ‘தேவவசனத்தைப் பிரசங்கிக்கும்’ இலட்சக்கணக்கானோரோடு சேர்ந்து தன் சாட்சிகொடுக்கும் வேலையை அறிக்கை செய்யலாம். (அப்போஸ்தலர் 13:5) அவர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி என்று சபையில் அறிவிப்பு செய்யப்படும்.
7, 8. முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிக்கு என்ன வழிகளில் ஊழியத்தில் தேவைப்படும் உதவி கொடுக்கப்படலாம்?
7 முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிக்கு மூப்பர்களின் உதவியும் முதிர்ச்சிவாய்ந்த பிற கிறிஸ்தவர்களின் உதவியும் தேவைப்படுகிறது. உதாரணமாக, அவருடைய ஆவிக்குரிய முன்னேற்றம் அவர் ஆஜராகும் சபை புத்தகப் படிப்பு நடத்துபவருக்கு அக்கறைக்குரிய விஷயமாய் உள்ளது. புதிய பிரஸ்தாபி வீட்டுக்கு-வீடு வேலையில் திறம்பட்டவிதத்தில் பேசுவதற்கு கஷ்டப்படலாம். (அப்போஸ்தலர் 20:20) ஆகையால் அவர் உதவியை பெற்றுக்கொள்ள விரும்பலாம், விசேஷமாக அறிவு புத்தகத்திலிருந்து தன்னோடு பைபிள் படிப்புகளை நடத்திக்கொண்டிருந்தவரிடமிருந்து அவ்வாறு பெற்றுக்கொள்ள விரும்பலாம். அப்படிப்பட்ட நடைமுறையான உதவி பொருத்தமானதாய் உள்ளது, ஏனென்றால் இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை ஊழியத்துக்காகத் தயாரித்தார்.—மாற்கு 6:7-13; லூக்கா 10:1-22.
8 நம்முடைய ஊழியம் பலன்தருவதாக இருக்க வேண்டுமென்றால், முன்கூட்டியே நன்றாக தயாரிப்பது இன்றியமையாதது. ஆகையால், நம் ராஜ்ய ஊழிய மாதாந்திர இதழ்களில் கொடுக்கப்பட்டிருக்கும் அளிப்புகளை இரண்டு பிரஸ்தாபிகள் முதலில் ஒன்றாக சேர்ந்து பழகிக்கொள்ளலாம். அவர்கள் வெளி ஊழியத்தை ஆரம்பிக்கும்போது, அதிக அனுபவமுள்ள நபர் முதல் வீட்டில் அல்லது முதல் இரண்டு வீடுகளில் பேசலாம். ஒரு சிநேகபான்மையான அறிமுகத்துக்குப் பிறகு, இரண்டு பிரஸ்தாபிகளும் சாட்சி கொடுப்பதில் பங்குகொள்ளலாம். சில வாரங்கள் ஒன்றாக சேர்ந்து ஊழியத்தில் வேலை செய்வது, நல்ல மறுசந்திப்புகளும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் வீட்டு பைபிள் படிப்பு கிடைப்பதற்கும்கூட வழிநடத்தக்கூடும். கூடுதலாக அனுபவம் பெற்றிருக்கும் பிரஸ்தாபி கொஞ்ச காலம் படிப்பை நடத்திவிட்டு, பின்னர் புதிய ராஜ்ய பிரஸ்தாபியிடம் அதை ஒப்படைத்துவிடலாம். கடவுளைப் பற்றிய அறிவின் பேரில் பைபிள் மாணாக்கர் போற்றுதலை காண்பிக்கும்போது இரண்டு பிரஸ்தாபிகளுக்கும் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும்!
9. ஒரு பிரஸ்தாபி முழுக்காட்டுதலைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் என்ன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன?
9 முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி ஆவிக்குரியப்பிரகாரமாய் முன்னேறுகையில், அவர் ஜெபத்தில் கடவுளிடம் ஒப்புக்கொடுத்தல் செய்து முழுக்காட்டுதல் பெற விரும்பலாம். (மாற்கு 1:9-11-ஐ ஒப்பிடுக.) அவர் முழுக்காட்டுதலுக்கான தன்னுடைய விருப்பத்தை சபையின் நடத்தும் கண்காணிக்கு தெரியப்படுத்த வேண்டும். நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 175 முதல் 218 வரை உள்ள கேள்விகளை பிரஸ்தாபியோடு மூப்பர்கள் மறுபார்வை செய்ய அவர் ஏற்பாடு செய்வார். நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் கேள்விகளை மூன்று பகுதிகளாக பிரித்து, கூடுமானால் மூன்று வித்தியாசமான மூப்பர்கள் நடத்தலாம். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிக்கு பைபிள் போதனைகளைப் பற்றி நியாயமான அளவு புரிந்துகொள்ளுதலும் மற்ற விதங்களில் தகுதியும் இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டால், அவர் முழுக்காட்டுதல் பெறலாம் என்று அவர்கள் அவரிடம் சொல்வார்கள். அவருடைய ஒப்புக்கொடுத்தல் மற்றும் முழுக்காட்டுதலின் காரணமாக அவர் இரட்சிப்படைவதற்கான ‘அடையாளத்தை’ பெற்றுக்கொண்டவராக ஆகிறார்.—எசேக்கியேல் 9:4-6.
விசேஷ தேவைகளைப் பூர்த்திசெய்தல்
10. அறிவு புத்தகத்தை படித்துமுடித்து முழுக்காட்டுதல் பெற்றவுடன், ஒரு நபர் எவ்வாறு தன் வேதாகம அறிவை அதிகரித்துக்கொள்வார்?
10 ஒரு நபர் அறிவு புத்தகத்தில் தன் பைபிள் படிப்பை முடித்து முழுக்காட்டுதல் பெற்ற பிறகு, ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்b போன்ற இரண்டாவது புத்தகத்தில் அவரோடு முறைப்படியாக படிப்பு நடத்துவதற்கு அவசியம் இருக்காது. சமீபத்தில் முழுக்காட்டப்பட்ட நபர், கிறிஸ்தவ கூட்டங்களுக்காக தயாரித்து அவற்றிற்கு ஒழுங்காக ஆஜராகும்போது அதிகத்தைக் கற்றுக்கொள்வார். தனிப்பட்டவிதமாக கிறிஸ்தவ பிரசுரங்களை வாசிப்பதற்கும் படிப்பதற்கும் வேதப்பூர்வமான விஷயங்களை உடன் விசுவாசிகளோடு கலந்தாலோசிப்பதற்கும் சத்தியத்துக்கான வாஞ்சை அவரை உந்துவிக்கையிலும்கூட அவர் கூடுதலான அறிவை பெற்றுக்கொள்வார். ஆனால் விசேஷ தேவைகள் எழும்பினால், அப்போது என்ன?
11. (அ) அப்பொல்லோவுக்கு எவ்வாறு பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் உதவி செய்தனர்? (ஆ) சமீபத்தில் முழுக்காட்டப்பட்ட இளம் நபர் விவாகம் செய்துகொள்வதைப் பற்றி சிந்திக்கையில் அவருக்கு என்ன உதவி அளிக்கப்படலாம்?
11 ‘வேதாகமங்களில் வல்லவனாய்’ இருந்தவனும் இயேசுவைக் குறித்து திருத்தமாய் கற்பித்தவனுமாயிருந்த, அப்பொல்லோவுங்கூட, அனுபவமிக்க கிறிஸ்தவர்களாயிருந்த பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் ‘அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தபோது’ பயனடைந்தான். (அப்போஸ்தலர் 18:24-26; ஒப்பிடுக: அப்போஸ்தலர் 19:1-7.) ஆகையால், சமீபத்தில் முழுக்காட்டப்பட்ட இளம் நபர் விவாக நோக்குடன் பழகுவதைப் பற்றியும் திருமணத்தைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கூடுதலாக அனுபவம் பெற்றிருக்கும் கிறிஸ்தவர், உவாட்ச் டவர் பிரசுரங்களில் இந்த பொருள்களின் பேரில் உள்ள தகவலைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவலாம். உதாரணமாக, இந்த விஷயங்களில் உதவியளிக்கும் தகவல் இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள், புத்தகத்தில் பகுதி 7-ல் காணப்படுகிறது.c அவரோடு பைபிள் படிப்பு நடத்திய பிரஸ்தாபி இந்தத் தகவலை புதிய நபரோடு கலந்தாலோசிக்கலாம். அவரோடு ஒரு ஒழுங்கான படிப்பு நடத்துவதை இது உட்படுத்தாது.
12. பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் புதிதாக முழுக்காட்டுதல் பெற்ற திருமணமான துணைவர்களுக்கு என்ன உதவி அளிக்கப்படலாம்?
12 மற்றொரு உதாரணத்தை சிந்தித்துப் பாருங்கள். புதிதாக முழுக்காட்டப்பட்டிருக்கும் திருமணமான துணைவர்கள் ஒருவேளை தெய்வீக நியமங்களைப் பொருத்துவதில் பிரச்சினைகளைக் கொண்டிருக்கலாம். அவர்கள் ஒரு மூப்பரை அணுகலாம், அந்த மூப்பர் சில மாலை நேரங்களில் அவர்களோடு சேர்ந்து வேதாகமத்திலிருந்து விஷயங்களைக் கலந்தாலோசிப்பதில் செலவழிக்கலாம், உவாட்ச் டவர் பிரசுரங்களில் உள்ள தகவலுக்கு அவர்களுடைய கவனத்தைத் திருப்பலாம். என்றபோதிலும், மூப்பர் அந்தத் தம்பதியோடு ஒரு ஒழுங்கான பைபிள் படிப்பை மறுபடியுமாக கொண்டிருக்கமாட்டார்.
புதியவர் தவறு செய்தால்
13. புதிதாக முழுக்காட்டப்பட்ட நபர் தவறு செய்து, பின்னர் மனந்திரும்பும்போது சபை மூப்பர்கள் ஏன் இரக்கம் காண்பிக்க வேண்டும்?
13 மூப்பர்கள் பெரிய மேய்ப்பராய் இருக்கும் யெகோவாவை பின்பற்றுகின்றனர், அவர் சொல்கிறார்: “என் ஆடுகளை நான் மேய்த்து . . . எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்.” (எசேக்கியேல் 34:15, 16; எபேசியர் 5:1) அந்த மனப்பான்மைக்கு இணக்கமாக, சந்தேகங்களைக் கொண்டிருந்த அல்லது பாவத்துக்குள் விழுந்துவிட்டிருந்த அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இரக்கம் காண்பிக்கும்படி சீஷனாகிய யூதா ஊக்குவித்தார். (யூதா 22, 23, NW) அனுபவமிக்க கிறிஸ்தவர்களிடமிருந்து நாம் நியாயமாகவே அதிகத்தை எதிர்பார்ப்பதனால், தவறுசெய்தபோதிலும் மனந்திரும்பக்கூடியவராகிய புதிதாக முழுக்காட்டுதல் பெற்றிருக்கும் நபரிடம்—வெறும் ஆட்டுக்குட்டியிடம்—நிச்சயமாகவே இரக்கம் காண்பிக்க வேண்டும். (லூக்கா 12:48; 15:1-7) ஆகையால் ‘யெகோவாவுக்காக நியாயந்தீர்க்கும்’ மூப்பர்கள் அப்படிப்பட்ட ஆடுகளுக்கு மென்மையான கவனிப்பை கொடுத்து சாந்தத்தோடே அவர்களை சீர்பொருந்தப்பண்ணுவார்கள்.—2 நாளாகமம் 19:6; அப்போஸ்தலர் 20:28, 29; கலாத்தியர் 6:1.d
14. சமீபத்தில் முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபி ஒரு வினைமையான பாவம் செய்கையில் என்ன செய்யப்பட வேண்டும், அவருக்கு எவ்வாறு உதவி அளிக்கப்படலாம்?
14 சமீபத்தில் முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபி முன்பு குடிப்பழக்கத்தைக் கொண்டிருந்து பின்பு ஒன்று அல்லது இரண்டு தடவை அளவுக்கு மீறி குடிப்பதில் தவறி விழுந்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அல்லது ஒருவேளை நீண்டகாலமாக அவருக்கிருந்த புகைபிடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டுவிட்டு, பின்னர் இரகசியமாக ஒன்று அல்லது இரண்டு தடவை புகைபிடிக்கும் சோதனைக்கு இடங்கொடுத்து விட்டிருக்கலாம். நம் புதிய சகோதரர் கடவுளுடைய மன்னிப்புக்காக ஜெபித்திருந்தபோதிலும், அந்த பாவம் பழக்கமாக ஆகிவிடாமலிருப்பதற்கு ஒரு மூப்பரின் உதவியை அவர் நாட வேண்டும். (சங்கீதம் 32:1-5; யாக்கோபு 5:14, 15) அவர், தான் செய்த தவறை மூப்பர்கள் ஒருவரிடம் சொல்லும்போது, அந்த மூப்பர் புதிய நபரை இரக்கமானவிதத்தில் சீர்பொருந்தப்பண்ணுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். (சங்கீதம் 130:3) அதற்குப் பிறகு அவர் தன்னுடைய பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்திக்கொள்ள வேதப்பூர்வமான புத்திமதி அவருக்கு உதவிசெய்ய போதுமானதாய் இருக்கக்கூடும். (எபிரெயர் 12:12, 13) இந்த மூப்பர், சபையின் நடத்தும் கண்காணியிடம் என்ன கூடுதலான உதவி கொடுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க சூழ்நிலையைக் கலந்து பேசுவார்.
15. சிலருடைய விஷயங்களில், சமீபத்தில் முழுக்காட்டப்பட்ட நபர் பாவம் செய்கையில் என்ன தேவைப்படலாம்?
15 சிலருடைய விஷயங்களில் கூடுதலாக தேவைப்படும். கெட்ட பெயர், மந்தைக்கு ஆபத்து அல்லது மற்ற வினைமையான பிரச்சினைகள் உட்பட்டிருந்தால், அவ்விஷயத்தைக் குறித்து விசாரணை செய்ய மூப்பர் குழு இரண்டு மூப்பர்களை நியமிக்கும். ஒரு நீதி விசாரணைக் குழுவை தேவைப்படுத்தும் அளவுக்கு விஷயம் வினைமையானதாக இருப்பதாய் இந்த மூப்பர்கள் கண்டுபிடித்தால் அவர்கள் இதை மூப்பர் குழுவுக்கு அறிக்கை செய்ய வேண்டும். அப்போது தவறு செய்தவருக்கு உதவிசெய்ய மூப்பர் குழு நீதி விசாரணைக் குழு ஒன்றை நியமிக்கும். நீதி விசாரணைக் குழு அவரை மென்மையான விதத்தில் கையாள வேண்டும். அவரை வேதாகமத்தைக்கொண்டு சீர்பொருந்தப்பண்ணுவதற்கு முயற்சிசெய்ய வேண்டும். நீதி விசாரணைக் குழுவின் தயவான முயற்சிகளுக்கு அவர் பிரதிபலித்தால், ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களில் மேடைகளில் நடத்தப்படும் பகுதிகளில் அவரை உபயோகிக்காமல் இருப்பதனால் பயன் இருக்குமா அல்லது அவரை கூட்டங்களில் குறிப்பு சொல்ல அனுமதிக்க வேண்டுமா என்பதையும் அவர்கள் அப்போது தீர்மானிக்கக்கூடும்.
16. தவறு செய்த ஒருவருக்கு உதவி செய்ய மூப்பர்கள் என்ன செய்யலாம்?
16 தவறுசெய்தவர் பிரதிபலித்தால், அவருடைய விசுவாசத்தை வலுப்படுத்துவதற்கும் கடவுளுடைய நீதியான தராதரங்களுக்கு அவருடைய போற்றுதலை வளர்ப்பதற்கும் நீதிவிசாரணைக் குழுவிலிருந்த ஒன்று அல்லது இரண்டு மூப்பர்கள் மேய்க்கும் சந்திப்புகளைச் செய்ய ஏற்பாடு செய்யலாம். அவர்களில் ஒவ்வொருவரும் அவ்வப்போது அவரோடு வெளி ஊழியத்தில் வேலை செய்யலாம். ஒருவேளை பொருத்தமான காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! கட்டுரைகளை உபயோகித்து அவர்கள் அவரோடு சில வேதப்பூர்வமான கலந்தாலோசிப்புகளை நடத்தலாம், ஆனால் அவரோடு ஒழுங்கான பைபிள் படிப்பு நடத்தவேண்டியதில்லை. அப்படிப்பட்ட மென்மையான கவனிப்போடு வரப்போகும் நாட்களில் மாம்ச பலவீனங்களை எதிர்ப்பதற்கு தவறு செய்தவர் பலப்படுத்தப்படலாம்.
17. முழுக்காட்டுதல் பெற்றிருப்பவர் தவறுசெய்துவிட்டு மனந்திரும்பாமலும் தன் பாவப்போக்கை விட்டுவிடாமலும் இருந்தால் என்ன படிகள் எடுக்கப்படுகின்றன?
17 ஆனால் சமீபத்தில் முழுக்காட்டப்பட்டிருப்பதுதானே மனந்திரும்பாமல் பாவத்தை தொடர்ந்து செய்துகொண்டிருப்பதற்கு சாக்குப்போக்கு அல்ல. (எபிரெயர் 10:26, 27; யூதா 4) முழுக்காட்டுதல் பெற்றிருப்பவர் தவறுசெய்துவிட்டு மனந்திரும்பாமலும் தன் பாவப்போக்கை விட்டுவிடாமலும் இருந்தார் என்றால், அவர் சபையிலிருந்து நீக்கப்படுவார். (1 கொரிந்தியர் 5:6, 11-13; 2 தெசலோனிக்கேயர் 2:11, 12; 2 யோவான் 9-11) இந்த நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை இருந்தால், மூப்பர் குழு ஒரு நீதி விசாரணைக் குழுவைத் தேர்ந்தெடுக்கும். சபைநீக்கம் செய்யப்பட்டால் இந்த சுருக்கமான அறிவிப்பு செய்யப்படும்: “ . . . இவர் சபைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.”e
அவர்கள் ‘முதிர்ச்சியை நோக்கி முன்னேற’ உதவுங்கள்
18. புதிதாக முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களும் மற்றவர்களும் யெகோவாவைப் பற்றியும் அவருடைய சித்தத்தைப் பற்றியும் கற்றுக்கொள்வதற்கு எப்போதும் அதிகத்தைக் கொண்டிருப்பர் என்று நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?
18 கடவுளுடைய ஊழியர்களில் பெரும்பான்மையர் மந்தையில் நிலைத்திருப்பர். மகிழ்ச்சிகரமாக, நம்மில் ஒவ்வொருவரும் நம் பரலோக தகப்பனிடமாக நெருங்கி சேரமுடியும், ஏனென்றால் நாம் எப்போதும் அவரைக் குறித்தும் அவருடைய சித்தத்தைக் குறித்தும் அதிகமாக கற்றுக்கொள்ள முடியும். (பிரசங்கி 3:11; யாக்கோபு 4:8) பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளன்று முழுக்காட்டப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு, கற்றுக்கொள்வதற்கு அதிகம் இருந்தது. (அப்போஸ்தலர் 2:5, 37-41; 4:4) வேதப்பூர்வ பின்னணியில்லாமல் இருந்த புறஜாதியாருக்கும்கூட கற்றுக்கொள்வதற்கு அதிகம் இருந்தது. உதாரணமாக, அத்தேனே பட்டணத்தில் மார்ஸ் மேடையில் பவுல் பேச்சு கொடுத்தப்பிறகு முழுக்காட்டுதல் பெற்றுக்கொண்டவர்களின் விஷயத்தில் இது உண்மையாயிருந்தது. (அப்போஸ்தலர் 17:33, 34) இன்றும்கூட புதிதாக முழுக்காட்டப்பட்ட நபர்களுக்கு கற்றுக்கொள்வதற்கு அதிகம் உள்ளது, கடவுளுடைய பார்வையில் சரியானதை தொடர்ந்து செய்வதற்கான தீர்மானத்தில் தங்கள் உறுதியைப் பலப்படுத்துவதற்கு நேரமும் உதவியும் அவர்களுக்கு தேவைப்படுகிறது.—கலாத்தியர் 6:9; 2 தெசலோனிக்கேயர் 3:13.
19. முழுக்காட்டுதல் பெற்றுக்கொள்வோர் ‘முதிர்ச்சியை நோக்கி முன்னேற’ எவ்வாறு உதவப்படலாம்?
19 ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் முழுக்காட்டப்படுகின்றனர், ‘முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவதற்கு,’ அவர்களுக்கு உதவி தேவை. (எபிரெயர் 6:1-3) வார்த்தையின் மூலமும், முன்மாதிரியின் மூலமும், ஊழியத்தில் நடைமுறையான உதவி கொடுப்பதன் மூலமும் புதிய ஆளுமையை தரித்துக்கொண்டு, ‘சத்தியத்திலே தொடர்ந்து நடக்க’ சிலருக்கு நீங்கள் உதவி செய்யக்கூடும். (3 யோவான் 4; கொலோசெயர் 3:9, 10) நீங்கள் அனுபவமிக்க பிரஸ்தாபியாக இருந்தால், ஒரு புதிய உடன் விசுவாசிக்கு வெளி ஊழியத்தில் உதவிசெய்வதற்கு அல்லது சில வேதப்பூர்வமான குறிப்புகளை அவரோடு சில வாரங்கள் கலந்தாலோசித்து கடவுள் பேரில் அவருடைய விசுவாசத்தை பலப்படுத்துவது, கிறிஸ்தவ கூட்டங்களுக்கான அவருடைய போற்றுதலை வளர்ப்பது போன்ற காரியங்களில் அவர்களுக்கு உதவிசெய்வதற்கு மூப்பர்கள் உங்களிடத்தில் கேட்டுக்கொள்ளலாம். மந்தையினிடமாக மேய்ப்பர்கள் கொண்டிருக்கும் உறவு, அறிவுரை கூறுவதில் தகப்பனைப் போன்றும் மென்மையானத் தன்மையில் தாயைப் போன்றும் உள்ளது. (1 தெசலோனிக்கேயர் 2:7, 8, 12) இருப்பினும், ஒரு சபைக்குத் தேவைப்படும் எல்லா காரியங்களையும் ஒருசில மூப்பர்களும் உதவி ஊழியர்களும் கவனித்துக்கொள்ள முடியாது. ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் அங்கத்தினர்களையுடைய ஒரு குடும்பத்தைப் போல் நாம் அனைவரும் இருக்கிறோம். நம் உடன் வணக்கத்தாருக்கு உதவிசெய்ய நம்மில் ஒவ்வொருவரும் ஏதாவது செய்யலாம். உற்சாகம் அளிப்பது, சோர்வுற்றிருப்போரை ஆறுதல்படுத்துவது, பலவீனரைத் தாங்குவது போன்றவற்றை நீங்களே செய்யலாம்.—1 தெசலோனிக்கேயர் 5:14, 15.
20. கடவுளைப் பற்றிய அறிவை பரப்புவதற்கும் யெகோவாவினுடைய மேய்ச்சலின் ஆடுகளுக்கு மென்மையான கவனிப்பைக் கொடுப்பதற்கும் நீங்கள் என்ன செய்யலாம்?
20 மனிதவர்க்கத்துக்கு கடவுளைப் பற்றிய அறிவு தேவை. ஒரு யெகோவாவின் சாட்சியாக அதை பரப்புவதில் நீங்கள் மகிழ்ச்சியான பங்கைக் கொண்டிருக்கலாம். யெகோவாவின் ஆடுகளுக்கு மென்மையான கவனிப்பு தேவை, இதை கொடுத்து உதவுவதில் நீங்கள் ஒரு அன்பான பங்கை வகிக்கலாம். யெகோவா உங்களுடைய ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக, அவருடைய மேய்ச்சலின் ஆடுகளுக்கு உதவிசெய்வதற்கென்று நீங்கள் எடுக்கும் இருதயப்பூர்வமான முயற்சிகளுக்காக அவர் உங்களுக்கு பலனளிப்பாராக.
[அடிக்குறிப்புகள்]
a இந்தத் தருணத்தில், நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தின் பிரதி ஒன்றை புதியவர் பெற்றுக்கொள்ளலாம்.
b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்தது.
c உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்தது.
d முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளுக்கான அப்படிப்பட்ட ஏற்பாடு, காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1989, பக்கங்கள் 18-23-ல் “கடவுளை வணங்கும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்தல்” என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
e சபைநீக்கம் செய்யப்படுவதற்கான தீர்மானம் இருந்து, தீர்ப்பை மறுபடியும் விசாரிக்கும்படி அப்பீல் செய்ய விரும்பினால், அந்த அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகம், பக்கங்கள் 147-8-ஐ பாருங்கள்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவா எவ்வாறு தம் ஆடுகளை நடத்துகிறார்?
◻ புதியவர்கள் பிரசங்கிக்க விரும்புகையில் என்ன செய்யப்படுகிறது?
◻ விசேஷ தேவைகளையுடைய புதியவர்களுக்கு, உடன் விசுவாசிகள் எவ்வாறு உதவி செய்யலாம்?
◻ தவறுசெய்துவிட்டு பின்னர் மனந்திரும்பும் நபர்களுக்கு மூப்பர்கள் என்ன உதவி அளிக்கலாம்?
◻ புதிதாக முழுக்காட்டப்பட்ட நபர் ‘முதிர்ச்சியை நோக்கி முன்னேற’ நீங்கள் எவ்வாறு உதவலாம்?
[பக்கம் 16-ன் படம்]
சார்ல்ஸ் டி. ரஸல் மந்தைக்கு ஒரு அன்பான மேய்ப்பராக இருந்ததாக நன்கு அறியப்பட்டிருந்தார்
[பக்கம் 18-ன் படம்]
இரக்கமுள்ள மேய்ப்பர்கள் கடவுளுடைய மந்தையை மென்மையோடு நடத்துகின்றனர்