ஆறுதலும் உற்சாகமும்—அநேக கோணங்களில் ஜொலிக்கும் இரத்தினங்கள்
நம்மில் பெரும்பாலோர் மிகவும் ஏழ்மையாக—நிதி சம்பந்தமாக என்ற அவசியமில்லை ஆனால் ஆவியில் குறைவாக—நாம் உணர்ந்த சமயங்களை கடந்து சென்றிருக்கிறோம். நாம் மனத்தளர்வுற்றவர்களாக, அதிக மனச்சோர்வுற்றவர்களாகவும்கூட இருந்தோம். இருந்தபோதிலும், அப்படிப்பட்ட சமயங்களில் நமக்கு மிக அதிக நன்மை செய்யக்கூடிய விலைமதிப்புள்ள ஒன்று நமக்கு எளிதில் கிடைப்பதாய் இருந்திருக்கலாம். அந்த “இரத்தினமே” உற்சாகம்.
“உற்சாகப்படுத்துவது” மற்றும் “ஆறுதலளிப்பது” ஆகிய வார்த்தைகளுக்கு பைபிளில் ஒரே கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இரண்டு வார்த்தைகளுமே தைரியத்தை, பலத்தை, அல்லது நம்பிக்கையைக் கொடுப்பதன் அர்த்தத்தைத் தெரிவிக்கிறது. அப்படியானால், தெளிவாகவே, நாம் பலவீனமாக அல்லது சோர்வாக உணரும்போது, ஆறுதலும் உற்சாகமும் சரியாகவே நமக்கு தேவைப்படுபவையாக இருக்கின்றன. அவற்றை எங்கே கண்டடைய முடியும்?
யெகோவா ‘சகலவிதமான ஆறுதலின் தேவன்’ என்பதாகப் பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (2 கொரிந்தியர் 1:3) “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல” என்பதாகவும்கூட அது நமக்குச் சொல்கிறது. (அப்போஸ்தலர் 17:27) ஆகவே ஆறுதலும் உற்சாகமும் கிடைப்பவையாக இருக்கின்றன. யெகோவா உற்சாகத்தைக் கொடுக்கிற நான்கு பொதுவான அம்சங்களை நாம் சிந்திப்போமாக.
கடவுளோடுள்ள ஒரு தனிப்பட்ட உறவின் மூலமாக
யெகோவா தேவனோடு உள்ள ஒரு தனிப்பட்ட உறவு ஆறுதலின் மிகப்பெரிய மூலக்காரணமாயிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உறவு சாத்தியமானதென்பதுதானே உற்சாகத்தை அளிக்கிறது. எப்படியிருந்தாலும், எந்த உலக ஆட்சியாளர் நம்முடைய தொலைபேசித் தொடர்பை ஏற்றுக்கொள்வார் அல்லது நம்முடைய பிரச்சினைகளில் ஒரு தனிப்பட்ட அக்கறையைக் காண்பிப்பார்? இந்த மனிதர்களைக்காட்டிலும் யெகோவா எல்லையற்ற வல்லமையுள்ளவர். இருந்தபோதிலும், அவர் மனத்தாழ்மையுள்ளவர்—அற்பமான, அபூரண மனிதர்களோடு தொடர்புகொள்ள அதிக விரும்பக்கூடியவர். (சங்கீதம் 18:35, NW) நம்மீது அன்பைக் காண்பிப்பதில் யெகோவா முதல்நடவடிக்கையையும் எடுத்திருக்கிறார். முதலாம் யோவான் 4:10 சொல்கிறது: “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.” மேலுமாக, யெகோவா தம்முடைய குமாரனிடம் நம்மை அன்பாக இழுக்கிறார்.—யோவான் 6:44.
கடவுளோடுள்ள ஒரு நட்புறவுக்கு நீங்கள் பிரதிபலித்து அதில் ஆறுதலை நாடியிருக்கிறீர்களா? (யாக்கோபு 2:23-ஐ ஒப்பிடுக.) உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒரு பிரியமான, நெருங்கிய நண்பர் இருப்பாரேயானால், அவருடன் தனிமையில் சிறிது நேரம் செலவிட்டு, உங்களுடைய கவலைகள் மற்றும் அக்கறைகள், உங்களுடைய நம்பிக்கைகள் மற்றும் சந்தோஷங்களைக் குறித்து மனம்விட்டுப் பேசுவது இன்பகரமான ஒன்றல்லவா? அவரோடு இதையே செய்வதற்கு யெகோவா உங்களை அழைக்கிறார். அவருடன் நீங்கள் ஜெபத்தில் எவ்வளவு நேரம் பேசவேண்டுமென்பதற்கு அவர் வரையறை போடுவதில்லை—மேலுமாக அவர் உண்மையாகவே செவிகொடுத்துக் கேட்கிறார். (சங்கீதம் 65:2; 1 தெசலோனிக்கேயர் 5:17) இயேசு தவறாமலும் ஆர்வத்தோடும் ஜெபம் செய்தார். உண்மையில், அவருடைய 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அவர் ஒரு முழு இரவும் ஜெபம் செய்தார்.—லூக்கா 6:12-16; எபிரெயர் 5:7.
அவ்வப்போது, நம்மில் ஒவ்வொருவரும் யெகோவாவுடன் தனிமையிலிருக்கும்படி பார்த்துக்கொள்ள முடியும். வெறுமனே ஜன்னல் அருகே அமைதியாக உட்காருவது அல்லது அமைதலாக நடந்துசெல்வது யெகோவாவிடம் ஜெபத்தில் நம்முடைய இருதயத்தைத் திறக்க ஒரு நல்ல வாய்ப்பை கொடுக்கக்கூடும். அவ்வாறு செய்வது அளவுகடந்த புத்துணர்ச்சி மற்றும் ஆறுதலின் ஒரு ஊற்றுமூலமாக இருக்கக்கூடும். தியானிக்கும்போது யெகோவாவினுடைய சிருஷ்டிப்பின் சில அம்சங்கள்—வெறுமனே ஆகாயத்தின் ஒரு பகுதி, சில மரங்கள் அல்லது பறவைகள்—நமக்குப் பார்ப்பதற்கு இருக்குமேயானால், நம்மீதுள்ள யெகோவாவின் அன்பு மற்றும் அக்கறையின் ஆறுதலளிக்கும் சில நினைப்பூட்டுதல்களை அதில் நாம் காணக்கூடும்.—ரோமர் 1:20.
கடவுளுடைய வார்த்தையை தனிப்பட்ட விதமாக படிப்பதன் மூலம்
இருப்பினும், பைபிளைத் தனிப்பட்ட விதமாக படிப்பதன் மூலமாகவே யெகோவாவின் குணாதிசயங்கள் நமக்கு உண்மையாகவே வெளிப்படுத்தப்படும். யெகோவாவை ‘இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையுமுள்ள தேவன்’ என்று பைபிள் மறுபடியும் மறுபடியுமாக வெளிப்படுத்துகிறது. (யாத்திராகமம் 34:6; நெகேமியா 9:17; சங்கீதம் 86:15) பூமிக்குரிய தம்முடைய ஊழியர்களுக்கு ஆறுதலளிக்க ஆர்வமுள்ளவராக இருப்பது யெகோவாவின் ஆள்தன்மையின் ஒரு இயல்பான பாகமாகும்.
உதாரணத்திற்கு, ஏசாயா 66:13-ல் உள்ள யெகோவாவுடைய வார்த்தைகளைக் கவனியுங்கள்: “ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.” பிள்ளைகளின் பேரிலுள்ள தாயினுடைய அன்பு சுய-தியாகமுள்ளதும் பற்றுறுதியுள்ளதுமாக இருக்கும்படியாக யெகோவா அதை உருவேற்படுத்தினார். புண்படுத்தப்பட்ட தன்னுடைய பிள்ளைக்கு ஒரு அன்பான தாய் ஆறுதலளிப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருப்பீர்களானால், தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதலளிப்பதாக சொல்லும்போது யெகோவா எதை அர்த்தப்படுத்துகிறார் என்பது உங்களுக்குப் புரியும்.
அநேக பைபிள் பதிவுகள் இப்படிப்பட்ட ஆறுதலைச் செயலில் காண்பிக்கின்றன. தீர்க்கதரிசியாகிய எலியா பொல்லாத ராணியாகிய யேசபேலால் மரணத்தை வைத்து பயமுறுத்தப்பட்டபோது, அவர் தன் தைரியத்தை இழந்து தன் ஜீவனுக்காக ஓடினார். அவர் அதிக மனத்தளர்வுற்றவராயிருந்ததன் காரணமாக ஒரு முழுநாள் பிரயாணமாக வனாந்தரத்திற்குள் நடந்து சென்றார். தெளிவாகவே அவர் தன்னுடன் தண்ணீரையோ ஆகாரத்தையோ எடுத்துச்செல்லவில்லை. வேதனையில் எலியா தான் சாகவேண்டுமென்பதாக யெகோவாவிடம் சொன்னார். (1 இராஜாக்கள் 19:1-4) தன்னுடைய தீர்க்கதரிசியை ஆறுதல்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் யெகோவா என்ன செய்தார்?
எலியா தனிமையாக, தகுதியற்றவராக, மற்றும் பயமுள்ளவராக உணர்ந்ததற்காக யெகோவா அவரை கண்டனம் செய்யவில்லை. அதற்கு மாறாக, அந்தத் தீர்க்கதரிசி ஒரு “அமர்ந்த மெல்லியசத்த”த்தைக் கேட்டார். (1 இராஜாக்கள் 19:12) 1 இராஜாக்கள் 19-ம் அதிகாரத்தை நீங்கள் வாசிப்பீர்களானால், யெகோவா எவ்வாறு எலியாவை ஆறுதல்படுத்தி, அவரை சாந்தப்படுத்தி, அவருடைய விசுவாசத்தைக் கட்டியமைத்தார் என்பதைக் கவனிப்பீர்கள். இந்த ஆறுதல் மேலோட்டமானதாக இல்லை. அது எலியாவுடைய குழப்பமடைந்த இருதயத்தை நேரடியாக சென்றெட்டி, தீர்க்கதரிசியை தொடர்ந்து மேற்செல்லும்படி உற்சாகப்படுத்தியது. (ஏசாயா 40:1, 2-ஐ ஒப்பிடுக.) சீக்கிரத்தில், தன்னுடைய வேலையை மறுபடியும் ஆரம்பித்தார்.
இயேசு கிறிஸ்து அதேவிதமாக தம்மை உண்மையோடு பின்பற்றுபவர்களை ஆறுதல்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் செய்கிறார். உண்மையில், மேசியாவைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார்: ‘கர்த்தராகிய தேவன் . . . இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டவும், . . . துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், . . . என்னை அனுப்பினார்.’ (ஏசாயா 61:1-3) அவருடைய வாழ்நாட்காலத்தில், இந்த வார்த்தைகள் அவருக்குப் பொருந்தியதென்பதில் இயேசு எந்த விதமான சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை. (லூக்கா 4:17-21) உங்களுக்கு ஆறுதல் தேவைப்படுவதை நீங்கள் உணர்ந்தால், புண்படுத்தப்பட்டிருந்த மற்றும் தேவையிலிருந்த ஜனங்களை இயேசு மென்மையாக, அன்பாக கையாண்டதைக் குறித்து தியானியுங்கள். உண்மையில், பைபிளைக் கவனமாகப் படிப்பது ஆறுதல் மற்றும் உற்சாகத்தின் ஒரு மிகப்பெரிய ஊற்றுமூலமாகும்.
சபையின் மூலமாக
கிறிஸ்தவ சபையிலே, ஆறுதல் மற்றும் உற்சாகம் என்ற இரத்தினங்கள் அவற்றின் அநேக கோணங்களில் ஜொலிக்கின்றன. அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதுமாறு ஏவப்பட்டார்: “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:11) சபைக் கூட்டங்களில் எவ்வாறு ஆறுதல் மற்றும் உற்சாகத்தைக் கண்டடைய முடியும்?
முதலாவதாக, சந்தேகமில்லாமல், “தேவனால் போதிக்கப்ப”டுவதற்காக, அவரைக் குறித்தும் அவருடைய வழிகளைக் குறித்தும் போதனையைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக நாம் கிறிஸ்தவ கூட்டங்களில் ஆஜராகிறோம். (யோவான் 6:45) உற்சாகமூட்டுவதாகவும் ஆறுதலளிப்பதாகவும் இருப்பதற்கே அப்படிப்பட்ட போதனை உள்ளது. அப்போஸ்தலர் 15:32-ல் (NW) நாம் வாசிக்கிறோம்: ‘யூதாவும் சீலாவும் . . . அநேக பேச்சுகளாலே சகோதரர்களை உற்சாகப்படுத்தி அவர்களைத் திடப்படுத்தினார்கள்.’
நீங்கள் மனத்தளர்வுற்றிருந்தபோது கிறிஸ்தவ கூட்டத்திற்குச் சென்று முன்னிலும் மேம்பட்ட உணர்வோடு வீடு திரும்பிய அனுபவம் உங்களுக்கு எப்போதாவது இருந்திருக்கிறதா? ஒருவேளை ஒரு பேச்சில், ஒரு குறிப்பில், அல்லது ஒரு ஜெபத்தில் சொல்லப்பட்ட ஏதோவொரு காரியம் உங்களுடைய இருதயத்தைத் தொட்டு தேவையான ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கும். ஆகவே கிறிஸ்தவ கூட்டங்களுக்கு போகாமல் இருக்காதீர்கள்.—எபிரெயர் 10:24, 25.
நம்முடைய சகோதர சகோதரிகளோடு ஊழியத்திலும் மற்ற சமயங்களிலும் கூட்டுறவுகொள்வது அதேபோன்ற விளைவை உண்டாக்கக்கூடும். எபிரெயுவில் “ஒன்றாக பிணைப்பது” என்று அர்த்தப்படுத்தும் அநேக வினைச்சொற்கள் “பலம்” அல்லது “பலப்படுத்துவது” என்பதைக்கூட குறித்தது—ஒன்றாகப் பிணைக்கப்படும்போது காரியங்கள் இன்னும் பலப்படும் என்பது இதன் தெளிவான கருத்தாயுள்ளது. இந்த நியமம் சபையிலே உண்மையாக உள்ளது. நாம் ஒன்றாக கூட்டுறவு கொள்ளும்போது ஆறுதல்படுத்தப்படுகிறோம், உற்சாகப்படுத்தப்படுகிறோம், ஆம், பலப்படுத்தப்படுகிறோம். மேலுமாக நாம் பிணைப்புகளில் மிக பலமுள்ள ஒன்றாகிய அன்பினால் ஒன்றாகப் பிணைக்கப்படுகிறோம்.—கொலோசெயர் 3:14.
சில சமயங்களில் நம்முடைய ஆவிக்குரிய சகோதரர்கள் அல்லது சகோதரிகளுடைய உண்மைத்தன்மை நம்மை உற்சாகப்படுத்துகிறது. (1 தெசலோனிக்கேயர் 3:7, 8) சில சமயங்களில் அவர்கள் காண்பிக்கும் அன்பு அதைச் செய்கிறது. (பிலேமோன் 7) மற்றும் சிலசமயங்களில் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து மற்றவர்களிடமாகப் பேசும்போது, தோளோடு தோள் சேர்ந்து, ஒன்றாக வேலைசெய்வதுதானே நம்மை உற்சாகப்படுத்துகிறது. ஊழியத்தைப் பொறுத்தவரையில் நீங்கள் பலவீனமாக, உற்சாகம் தேவைப்படுவதாக உணர்ந்தீர்களானால், ஒரு முதிர்வயதுள்ள அல்லது அதிக அனுபவமுள்ள ராஜ்ய பிரஸ்தாபியோடு வேலை செய்ய ஏன் ஏற்பாடுகள் செய்யக்கூடாது? அவ்வாறு செய்வதன்மூலமாக நீங்கள் அநேகமாக அதிக ஆறுதலைப் பெறுவீர்கள்.—பிரசங்கி 4:9-12; பிலிப்பியர் 1:27.
“உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார”ரின் மூலமாக
நம்முடைய வணக்கத்தின் ஆறுதலளிக்கும் அம்சங்களை யார் ஒழுங்கமைக்கிறார்கள்? ‘ஏற்றவேளையில் ஆவிக்குரிய போஜனம்’ கொடுப்பதற்காக ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்’ என்பதாக அவர் பெயரிட்ட ஒரு வகுப்பாரை இயேசு நியமித்தார். (மத்தேயு 24:45) பொ.ச. முதலாம் நூற்றாண்டில் ஆவியால் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் இந்தத் தொகுதி ஏற்கெனவே வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது. எருசலேமிலிருந்த மூப்பர்களாலான ஆளும் குழு சபைகளுக்கு போதனை மற்றும் வழிநடத்துதலைக் கொண்ட கடிதங்களை அனுப்பியது. என்ன விளைவுடன்? அப்படிப்பட்ட ஒரு கடிதத்திற்கு சபைகள் எவ்வாறு பிரதிபலித்தன என்பதை பைபிள் பதிவுசெய்கிறது: “அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காக சந்தோஷப்பட்டார்கள்.”—அப்போஸ்தலர் 15:23-31.
அதேவிதமாக, இந்தக் கொடிய கடைசி நாட்களில், யெகோவாவினுடைய ஜனங்களுக்கு அதிக ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுக்கும் ஆவிக்குரிய உணவை உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர் கொடுத்து வருகின்றனர். அந்த உணவில் நீங்கள் பங்குகொள்கிறீர்களா? உலகம் முழுவதுமாக ஊழிய வகுப்பார் கிடைக்கச் செய்திருக்கும் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களில் இது உடனடியாகக் கிடைக்கிறது. உவாட்ச் டவர் சொஸைட்டி வெளியிட்டிருக்கிற காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள், அதோடுகூட புத்தகங்கள், சிற்றேடுகள், துண்டுப்பிரதிகள் ஆகியவை எண்ணற்ற வாசகர்களுக்கு ஆறுதலைக் கொண்டுவந்திருக்கின்றன.
ஒரு பயணக் கண்காணி எழுதினார்: “நம்முடைய சகோதர சகோதரிகளில் பெரும்பான்மையோர் சரியானதைச் செய்ய விரும்புகின்றனர், ஆனால் அவர்கள் ஏமாற்றங்களோடும், பயங்களோடும், தங்களுக்கே உதவிசெய்துகொள்வதற்கு அவர்கள் வல்லமையற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற உணர்வோடும் அடிக்கடி போராடுகின்றனர். நம்முடைய பத்திரிகைகளிலுள்ள கட்டுரைகள் அவர்களுடைய வாழ்க்கை மற்றும் உணர்ச்சிகளின் மீதான கட்டுப்பாட்டை மறுபடியும் பெற அநேகருக்கு உதவிசெய்துவருகின்றன. இந்தக் கட்டுரைகள், மேலோட்டமான உற்சாகத்தைக் காட்டிலும், அளிப்பதற்கு அதிகமான ஒன்றையும் மூப்பர்களுக்குக் கொடுக்கின்றன.”
உண்மையுள்ள ஊழிய வகுப்பாரிடமிருந்து பெறக்கூடிய பிரசுரங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். காலத்திற்கேற்ற இந்தப் பத்திரிகைகள், புத்தகங்கள், மற்றும் மற்ற பிரசுரங்கள், காலங்கள் கடினமாயிருக்கும்போது நாம் ஆறுதலைக் கண்டடைய உதவிசெய்யக்கூடும். மறுபக்கத்தில், சோர்வுற்ற ஒருவருக்கு உற்சாகம் அளிக்கவேண்டிய ஒரு நிலைமையில் நீங்கள் இருப்பீர்களானால், இந்தப் பத்திரிகைகளிலுள்ள வேதப்பூர்வ தகவலைப் பயன்படுத்துங்கள். இந்தக் கட்டுரைகள் மிகவும் கவனத்தோடு, அடிக்கடி அதிக சிரமமெடுத்து பல வாரங்களாக அல்லது மாதங்களாக செய்யப்படுகிற ஆராய்ச்சி, படிப்பு, மற்றும் ஜெபத்திற்குப் பின்பு எழுதப்படுகிறது. அதிலுள்ள ஆலோசனை பைபிள் அடிப்படையிலானது, சோதிக்கப்பட்டது, மேலுமாக உண்மையுள்ளது. சோர்வோடிருக்கும் ஒருவரோடு பொருத்தமான ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகளைப் படிப்பது மிகவும் பிரயோஜனமுள்ளதாயிருப்பதாகச் சிலர் கண்டிருக்கின்றனர். இது அதிக ஆறுதலிலும் உற்சாகத்திலும் விளைவடையக்கூடும்.
நீங்கள் விலையுயர்ந்த இரத்தினங்களைக் கண்டுபிடித்தீர்களானால், அவற்றைப் பதுக்கிவைப்பீர்களா, அல்லது அந்த செல்வத்தில் சிலவற்றை தாராளமாக மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வீர்களா? சபையில் உள்ள உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு ஆறுதல் மற்றும் உற்சாகத்தின் ஒரு ஊற்றுமூலமாக இருப்பதை ஒரு இலக்காக ஆக்குங்கள். நீங்கள் தகர்த்து வீழ்த்துவதற்குப் பதிலாக கட்டியெழுப்புவீர்களானால், குறைசொல்வதற்கு மாறாக புகழ்ந்து பேசுவீர்களானால், சிந்தனையற்று “பட்டயக்குத்துகள்போல்” பேசுவதற்குப் பதிலாக ‘கல்விமான்களின் நாவோடு’ பேசுவீர்களானால், மற்றவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உண்டுபண்ண முடியும். (ஏசாயா 50:4; நீதிமொழிகள் 12:18) உண்மையில், நீங்களே ஒரு இரத்தினமாக—நிஜமான ஆறுதல் மற்றும் உற்சாகத்தின் ஒரு மூலகாரணராக—அநேகமாய் கருதப்படுவீர்கள்!
[பக்கம் 20-ன் பெட்டி]
தேவையில் இருப்போருக்கு ஆறுதல்
யெகோவாவுடன் தங்களுக்கிருக்கும் தனிப்பட்ட உறவை எவ்வாறு ஒருசில காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! கட்டுரைகள் ஆழப்படுத்தியிருக்கின்றன என்பதைக் குறித்து அநேகர் விமர்சனம் செய்திருக்கின்றனர். ஒருவர் கூறினார்: “இந்தக் கட்டுரையை வாசித்தப்பின்பு, யெகோவா தம்முடைய எல்லா வல்லமையோடும் மகத்துவத்தோடும் என்னுடனேயே இருந்ததாக உணர்ந்தேன். அவர் ஒரு மெய்யான ஆள் என்பதை உணர்ந்தேன்.” மற்றொரு கடிதம் குறிப்பிட்டது: “யெகோவாவை நாங்கள் கருதும் விதத்தில் எங்களுடைய இருதயங்களும் நினைவுகளும் அவ்வளவு திடீரென மாறியிருப்பதன் காரணமாக நாங்கள் அதே ஆட்களாக இல்லை. எங்களுடைய மூக்குக்கண்ணாடிகளை யாரோ சுத்தமாக துடைத்திருப்பதுபோல் இருக்கிறது, இப்பொழுது நாங்கள் எல்லாவற்றையும் மிகத்தெளிவாகப் பார்க்கமுடியும்.”
குறிப்பிட்ட பிரச்சினைகள் அல்லது சவால்களைக் கையாள எவ்வாறு இந்தப் பத்திரிகைகள் தங்களுக்கு உதவிசெய்து, அதன்மூலமாக அவர்கள்மீது யெகோவா கொண்டிருக்கும் தனிப்பட்ட அக்கறையை உறுதிசெய்கின்றன என்பதைச் சொல்வதற்காக சிலர் எழுதுகின்றனர். ஒரு வாசகர் இவ்வாறு எழுதினார்: “எந்த அளவிற்கு யெகோவா தம்முடைய ஜனங்களின்மீது அக்கறை காண்பித்து அவர்களை நேசிக்கிறார் என்பதை மறுபடியுமாக நாங்கள் பார்க்கும்படி செய்ததற்காக மிக்க நன்றி.” மரணத்தில் ஒரு பிள்ளையை இழந்த ஜப்பானிலுள்ள ஒரு பெண் அந்தப் பொருளிலுள்ள விழித்தெழு! கட்டுரைகளைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “கடவுளுடைய இரக்கத்தின் ஆழம் அந்த பக்கங்களிலிருந்து பொழிந்தது, நான் அழுதேன், அழுதேன், அழுதேன். நான் துயரமாக மற்றும் தனிமையாக உணரும்போதெல்லாம் இவற்றை உடனடியாக படிப்பதற்கு ஏற்ற ஒரு இடத்தில் இந்தக் கட்டுரைகளை வைத்திருக்கிறேன்.” துயரப்படும் மற்றொரு பெண் எழுதினாள்: “காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! கட்டுரைகள், “நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்” என்ற சிற்றேடு ஆகியவை துயர்மிகுந்த என்னுடைய காலங்களை சகித்துக்கொள்வதற்கு எனக்குத் தேவைப்பட்ட பலத்தை கொடுத்திருக்கின்றன.”
பரிசுத்த வேதாகமங்கள் ஆறுதலின் பிரதான ஊற்றுமூலமாக இருக்கின்றன. (ரோமர் 15:4) காவற்கோபுரம் பைபிளை அதிகாரப்பூர்வ ஆதாரமாக ஏற்கிறது, அவ்வாறே அதனுடைய கூட்டுப்பத்திரிகையான, விழித்தெழு!-வும் செய்கிறது. இதன் காரணமாக, இந்தப் பத்திரிகைகள் அவற்றின் வாசகர்களுக்கு ஆறுதலளிப்பதாகவும் உற்சாகமளிப்பதாகவும் நிரூபித்திருக்கின்றன.
[பக்கம் 23-ன் படம்]
சகலவிதமான ஆறுதலின் தேவன் ஜெபத்தைக் கேட்கிறவராகவும் இருக்கிறார்