இவை உண்மையில் கடைசி நாட்களா?
படகைச் செலுத்துவதற்குக் கடினமான நதிப் பகுதியில் ஒரு சிறு படகு பிரவேசிக்கையில், நீங்கள் அதன் முகப்பில் இருக்கிறீர்கள். நுரைபொங்கி அலையலையாக நீர்வீழ்ச்சிபோல் விழும் நீருக்கிடையே மாபெரும் கற்பாறைகள் பயமுறுத்தும் வகையில் லேசாக தோன்றுகின்றன. உங்கள் துடுப்பைச் செலுத்தி அவற்றிலிருந்து விலகிச் செல்ல நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். உங்கள் பின்னாலுள்ள ஆள், படகை செலுத்துவதற்கு துடுப்பைக் கொண்டு உங்களுக்கு உதவிசெய்ய வேண்டியவராக இருக்கிறார், ஆனால் அவருக்குப் போதிய அனுபவமில்லை. இன்னும் மோசமாக, உங்களிடம் நிலப்படமும் இல்லை, ஆகையால் இந்த விரை நீரோட்டங்கள் அமரிக்கையான ஒரு குளத்தில் போய்ச் சேருமா அல்லது ஒரு நீர்வீழ்ச்சியில் முடிவடையுமா என்பதைப் பற்றி உங்களுக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை.
இது மகிழ்ச்சி தருகிற காட்சியாக இல்லை, அல்லவா? ஆகையால் அதை நாம் மாற்றலாம். அனுபவம் வாய்ந்த வழிகாட்டி ஒருவர், இந்த நதியின் ஒவ்வொரு கற்பாறையையும் ஒவ்வொரு திருப்பத்தையும் அறிந்திருக்கிறவர், உங்களுடன் இருக்கிறார் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். தூரத்தில் இருக்கும்போதே, இந்த நுரை நிறைந்தத் தண்ணீர் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று அவர் அறிந்திருக்கிறார், அது எவ்வாறு சென்று முடியும் என்று அவர் அறிந்திருக்கிறார், அதனூடே தான் எவ்வாறு தப்பிச் செல்ல முடியும் என்றும் அறிந்திருக்கிறார். நீங்கள் அதிக பாதுகாப்பாய் உணருவீர்களல்லவா?
உண்மையில், நாம் எல்லாரும் அதைப் போன்ற இக்கட்டான நிலையில் இருக்கிறோம். நம்முடைய தவறினால் அல்லாமல், மனித சரித்திரத்தின் கடும் துன்ப காலப்பகுதியில் நாம் நம்மைக் காண்கிறோம். காரியங்கள் எவ்வளவு காலம் இவ்வாறு இருக்கும், நிலைமைகள் முன்னேற்றமடையுமா, அல்லது இதற்கிடையில் பிழைத்திருப்பது எவ்வாறு என்பவற்றைப் பற்றி பெரும்பான்மையான மக்கள் எதுவும் அறியாதிருக்கிறார்கள். ஆனால் நாம் நம்பிக்கையற்றவர்களைப்போல் அல்லது உதவியற்றவர்களைப்போல் உணரவேண்டியதில்லை. நம்முடைய சிருஷ்டிகர் ஒரு வழிக்காட்டியை—சரித்திரத்தின் இந்தத் துயரம் நிறைந்த காலப்பகுதியை முன்னறிவித்ததும், அது எவ்வாறு முடிவடையும் என்று முன்குறிப்பிடுவதும், தப்பிப்பிழைப்பதற்கு நமக்குத் தேவைப்படும் வழிநடத்துதலை அளிக்கிறதுமான ஒன்றை—நமக்கு அளித்திருக்கிறார். அந்த வழிகாட்டி ஒரு புத்தகமாகிய பைபிளே. அதன் ஆசிரியரான யெகோவா தேவன், தம்மை மகத்தான போதகர் என்று அழைத்து, ஏசாயாவின் மூலமாய்த் திரும்பவும் நம்பிக்கையூட்டுபவராக இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.” (ஏசாயா 30:20, 21) அத்தகைய வழிநடத்துதலை நீங்கள் ஆவலோடு ஏற்றுக்கொள்வீர்களா? அப்படியானால், நம்முடைய நாட்கள் எவ்வாறு இருக்கும் என்று பைபிள் உண்மையில் முன்னறிவித்ததா என்பதை நாம் கவனிக்கலாம்
இயேசுவைப் பின்பற்றினவர்கள் அர்த்தமுள்ள ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள்
இயேசுவைப் பின்பற்றினவர்கள் நிச்சயமாக ஆச்சரியப்பட்டிருப்பார்கள். எழில் மிகுந்த எருசலேமின் ஆலய கட்டிடங்கள் முற்றிலுமாய் அழிக்கப்படும் என்று, இப்போதுதானே இயேசு, அழுத்தந்திருத்தமாய் அவர்களுக்குச் சொல்லியிருந்தார்! அத்தகைய முன்னறிவிப்பு ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. இதற்குப்பின் சிறிது நேரத்தில், அவர்கள் ஒலிவ மலையின்மீது உட்கார்ந்தபோது, சீஷர்களில் நான்கு பேர் இயேசு நோக்கி இவ்வாறு கேட்டனர்: “எங்களுக்குச் சொல்லும், இந்தக் காரியங்கள் எப்போது சம்பவிக்கும், உம்முடைய வந்திருத்தலுக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்?” (மத்தேயு 24:3, NW; மாற்கு 13:1-4) அவர்கள் அதை உணர்ந்திருந்தாலும் இல்லாவிடினும், இயேசுவின் வார்த்தைகள் ஒன்றுக்கு மேற்பட்ட பொருத்தத்தை உடையவையாக இருக்கும்.
எருசலேமின் ஆலயம் அழிக்கப்பட்டதும் யூதக் காரிய ஒழுங்குமுறை முடிவடைந்ததுமான இவை, கிறிஸ்துவின் வந்திருத்தலுக்கும் இந்த முழு உலகக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்குமுரிய காலமும் ஒன்றாக இருக்கவில்லை. இருப்பினும் இயேசு, தம்முடைய நீண்ட பதிலில் அந்தக் கேள்வியின் இந்த எல்லா அம்சங்களுக்கும் திறமையுடன் பதிலளித்தார். எருசலேமின் அழிவுக்கு முன்பாக நிலைமைகள் எவ்வாறு இருக்கும் என்பதை அவர்களுக்குச் சொன்னார்; தம்முடைய வந்திருத்தலின்போதும், பரலோகத்தில் அரசராகத் தாம் ஆண்டுகொண்டு, இந்த உலகக் காரிய ஒழுங்குமுறை முழுவதற்கும் அதன் முடிவைக் கொண்டுவரவிருக்கும் நிலையின்போதும், இந்த உலகம் எவ்வாறு இருக்கும்படி எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்.
எருசலேமின் முடிவு
எருசலேமையும் அதன் ஆலயத்தையும் பற்றி இயேசு சொன்னதை முதலாவதாகக் கவனியுங்கள். உலகத்தில் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றுக்கு வரவிருந்த பயங்கர இக்கட்டுகளுக்குரிய ஒரு காலத்தை, முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிவித்தார். முக்கியமாய், லூக்கா 21:20, 21-ல் பதிவுசெய்யப்பட்ட அவருடைய வார்த்தைகளைக் கவனியுங்கள்: “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.” எருசலேம் சேனைகளால் சுற்றிலும் சூழப்பட்டிருந்தால், அதன் மத்தியில் “எருசலேமிலிருக்கிறவர்கள்,” இயேசு கட்டளையிட்டிருந்தபடி எவ்வாறு “வெளியே புறப்பட” முடியும்? வாய்ப்பளிக்கும் ஓர் இடைப்பட்ட சந்தர்ப்பம் இருக்கும் என்று இயேசு மறைமுகமாகக் குறிப்பிட்டார் என்பது தெளிவாயிருக்கிறது. அவ்வாறு நடந்ததா?
பொ.ச. 66-ல் செஸ்டியஸ் கேலஸின் தலைமையின்கீழ் ரோம சேனைகள், யூதக் கலகக்கார படைகளைத் தோற்கடித்து எருசலேமுக்குத் திரும்பும்படி செய்து, நகரத்துக்குள் அடைந்து கிடக்கச் செய்திருந்தன. ரோமர்கள் நகரத்துக்குள்ளேயே புகுந்து ஆலயத்தின் மதில் வரையாகவுங்கூட சென்றனர். ஆனால் அப்போது உண்மையில் திகைப்புண்டாக்கும் ஒன்றை செய்யும்படி கேலஸ் தன் சேனைகளை வழிநடத்தினார். அவர் பின்வாங்கிச்செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்! வீண் செருக்குக் கொண்ட யூதப் போர்வீரர்கள் பின்வாங்கி ஓடும் தங்கள் ரோமச் சத்துருக்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களுக்குத் தீங்கிழைத்தனர். இவ்வாறு, இயேசு முன்னறிவித்த வாய்ப்புக்குரிய வழி திறந்தது. மெய்க் கிறிஸ்தவர்கள் அவருடைய எச்சரிக்கைக்குச் செவிகொடுத்து எருசலேமை விட்டு வெளியேறினர். ஞானமாய் அவ்வாறு செய்தனர், ஏனெனில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்புதானே, ரோம சேனைகள், தளபதி டைட்டஸின் தலைமையில் திரும்பி வந்தன. இந்தச் சமயத்தில் தப்பிச்செல்வது சாத்தியமாக இல்லாமற்போயிற்று.
ரோம சேனைகள் எருசலேமை மறுபடியும் சூழ்ந்துகொண்டன; அதைச் சுற்றி கூர்முனை கொண்ட கம்பங்களால் ஓர் அரண் கட்டியமைத்தன. எருசலேமைக் குறித்து இயேசு இவ்வாறு முன்னறிவித்தார்: “நாட்கள் உன்மீது வரும் அப்போது உன் சத்துருக்கள் கூர்முனை கம்பங்களைக் கொண்டு உன்னைச் சுற்றி ஓர் அரண் கட்டி உன்னை வளைந்துகொண்டு எப்பக்கத்திலிருந்தும் உன்னை நெருக்குவார்கள்.”a (லூக்கா 19:43, NW) விரைவில் எருசலேம் கைப்பற்றப்பட்டது; அதன் மகிமையான ஆலயம் எரிந்து சாம்பலாகும்படி பாழ்ப்படுத்தப்பட்டது. இயேசுவின் வார்த்தைகள் அதன் ஒவ்வொரு அம்சத்திலும் மிக நுட்பமாக நிறைவேற்றமடைந்தன!
எனினும், எருசலேமின் அந்த அழிவைப் பார்க்கிலும் மேலும் பெரிதான ஒன்றை இயேசு மனதில் கொண்டிருந்தார். அவருடைய வந்திருத்தலின் அடையாளத்தைப் பற்றியும் அவருடைய சீஷர்கள் கேட்டிருந்தனர். தங்கள் கேள்வி உட்படுத்தும் காலப்பகுதியை அப்போது அவர்கள் அறியவில்லை. அது அவர் பரலோகத்தில் அரசராக ஆட்சி செய்யும்படி சிங்காசனத்தில் ஏற்றப்படும் ஒரு காலத்தைக் குறித்தது. அவர் என்ன முன்னறிவித்தார்?
கடைசி நாட்களில் யுத்தம்
மத்தேயு 24-ம் 25-ம் அதிகாரங்களையும், மாற்கு 13-ம் அதிகாரத்தையும், லூக்கா 21-ம் அதிகாரத்தையும் நீங்கள் வாசித்தால், இயேசு, நம்முடைய சகாப்தத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார் என்பதற்குச் சந்தேகமற்ற அத்தாட்சியைக் காண்பீர்கள். யுத்தங்கள் நடக்கும் ஒரு காலத்தை அவர் முன்னறிவித்தார்—மனித சரித்திரத்தை எப்போதுமே கெடுத்துவந்த வெறும் “யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும்” அல்ல, ஆனால் ‘ஜனத்துக்கு விரோதமாய் ஜனத்தையும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யத்தையும்’ உட்படுத்தும் யுத்தங்களை—ஆம், உலக மகா யுத்தங்களை முன்னறிவித்தார்.—மத்தேயு 24:6-8.
நம்முடைய நூற்றாண்டில் யுத்தம் செய்வது எவ்வாறு மாறியிருக்கிறது என்பதைப்பற்றி ஒரு விநாடி சிந்தித்துப் பாருங்கள். யுத்தம் என்பது இரண்டு எதிர் தேசங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சேனைகள், போர்க்களத்தில் ஒன்றையொன்று தாக்கி, வாட்களால் வெட்டுவது அல்லது துப்பாக்கிகளால் ஒருவரையொருவர் சுடுவதைக் குறித்தபோதே, அது பயங்கரமாக இருந்தது. ஆனால் 1914-ல் மகா யுத்தம் தொடங்கினது. ஒரு செயலுக்குப் பல செயல்கள் தொடரும் பாதிப்பில் பேரழிவு செய்வதற்கு ஜனத்தைப் பின்தொடர்ந்து ஜனம் ஒவ்வொன்றாக உட்பட்டன—முதல் உலக யுத்தம். அதிகத் தொலைவிலிருந்தே, ஜனங்களைத் தொடர்ந்து கொன்றுகொண்டேயிருக்கும் தானியங்கி போராயுதங்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. இயந்திர துப்பாக்கிகள் கொடிய திறனுடன் குண்டுகளை எறிந்தன; நச்சுப்புகை போர்வீரர்களை ஆயிரக்கணக்கில் எரித்தும், வேதனைப்படுத்தியும், முடமாக்கியும், கொன்றும் வந்தது. டாங்க்குகள், அவற்றின் பெரிய துப்பாக்கிகள் நெருப்பைக் கக்கிக்கொண்டிருக்க, இரக்கமின்றி, சத்துருக்களின் வரிசைக்குள் உறுமிக்கொண்டு பாய்ந்தோடின. ஆகாய விமானமும் நீர்மூழ்கிக் கப்பலுங்கூட பயன்படுத்தப்பட்டன—பின்னால் அவை பயங்கரமாக உருவாகவிருந்தவற்றிற்கு வெறும் முன்னோடிகளே.
இரண்டாவது உலக யுத்தம், மனிதக் கற்பனைக்கு எட்டாததாக இருந்தது—கோடிக்கணக்கான ஜனங்களைக் கொல்வதாய் அது, அதற்கு முந்தின உலக யுத்தத்தை உண்மையில் மிகச் சிறியதாகத் தோன்றும்படி செய்துவிட்டது. மாபெரும் விமானத் தளக்கப்பல்கள் ஏராளமான படை ஆட்களுடன் கடலில் போய்வந்துகொண்டும், ஆகாயத்திலிருந்து சத்துருக்களின்மீது குறிபார்த்து குண்டுகளை வீசுவதற்கு போர்விமானங்களை அனுப்பிக்கொண்டும் இருந்தன. நீர்மூழ்கிக் கப்பல்கள் சத்துருவின் கப்பல்களைக் குண்டுகளால் தாக்கி மூழ்க்கடித்தன. மேலும் அணுக்குண்டுகள் எறியப்பட்டன, இவை ஒவ்வொரு வெடியிலும் ஆயிரக்கணக்கான உயிர்களைப் போக்கிவிட்டன! இயேசு முன்னறிவித்ததுபோலவே, இந்த யுத்த சகாப்தத்தைக் குறிப்பதற்கு “பயங்கரமான தோற்றங்கள்” மெய்யாகவே இருந்தன.—லூக்கா 21:11.
இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் யுத்தத் தொல்லை நீங்கி அமைதி ஏற்பட்டுள்ளதா? இல்லை. சிலசமயங்களில், தனியாக ஓர் ஆண்டை எடுத்துக்கொண்டால்—1990-ன் இந்தப் பத்தாண்டிலுங்கூட—சொல்லர்த்தமாய் டஜன்கணக்கான யுத்தங்கள் நடக்கின்றன; லட்சக்கணக்கான உயிர்ச்சேதத்தை உண்டாக்குகின்றன. முக்கியமாய் யுத்தத்திற்கு பலியாகிறவர்களில் ஒரு மாற்றம் உண்டாயிருக்கிறது. இனிமேலும் அதில் சாகிறவர்கள் பெரும்பாலும் போர்வீரர்களாகவே இல்லை. இன்று, யுத்தத்தில் சாகிறவர்களில் பெரும்பான்மையர்—உண்மையில், அவர்களில் 90 சதவீதத்தினர்—பொதுமக்களாகவே இருக்கின்றனர்.
அந்த அடையாளத்தின் மற்ற அம்சங்கள்
யுத்தம், இயேசு குறிப்பிட்ட அந்த அடையாளத்தின் ஒரே ஒரு அம்சமே. “உணவு குறைபாடுகளும்” இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். (மத்தேயு 24:7, NW) அவ்வாறே இருந்திருக்கிறது. முரண்படுவதாகத் தோன்றுவதாய், மனிதவர்க்கம் முழுவதற்கும் உணவளிக்கத் தேவைப்படும் அளவுக்கு அதிகப்பட்ட உணவை இந்தப் பூமி விளைவிக்கிறபோதிலும், மனித சரித்திரத்தில் முன்னொருபோதும் இராத முறையில் விவசாயத்தில் அதிக அறிவியல் முன்னேற்றம் அடைந்திருக்கிறபோதிலும், உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் உணவை அனுப்புவதற்கு விரைவான மற்றும் தகுந்த போக்குவரத்து வசதிகள் இருக்கிறபோதிலும் அவ்வாறு இருந்திருக்கிறது. இந்த எல்லா அனுகூலங்கள் இருந்தும், ஒவ்வொரு நாளும் உலக ஜனத்தொகையில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பாகத்தினர் பசியால் வாடுகின்றனர்.
“பல இடங்களில் . . . கொள்ளைநோய்களும்” இருக்கும் என்று இயேசு முன்னறிவித்தார். (லூக்கா 21:11) மறுபடியுமாக, நம்முடைய சகாப்தம் முரண்படுவதைப் போல் தோன்றும் அசாதாரணமான ஒன்றை—முன்னொருபோதும் இராத வகையில் மேம்பட்ட மருத்துவ கவனிப்பு, தொழில்நுட்ப கலை வளர்ச்சிகள், பொதுவான பல நோய்களைத் தடுப்பதற்கு வாக்ஸீன்கள் ஆகியவற்றை—கண்டிருக்கிறது; எனினும், கொள்ளைநோய்களும் முன்னொருபோதும் இராத வகையில் பெருகியிருக்கின்றன. ஸ்பானிஷ் குளிர் காய்ச்சல், முதல் உலக யுத்தத்தை உடனடியாகத் தொடர்ந்து, யுத்தத்திற்கு பலியானவர்களைப் பார்க்கிலும் அதிகம் ஆட்களை மாள்வித்தது. இந்த நோய் அவ்வளவு அதிகமாய்த் தொற்றுவதாக இருந்ததனால், நியூ யார்க் போன்ற நகரங்களில், வெறுமனே தும்முவதற்குங்கூட ஆட்களை அபராதம் செலுத்தவைக்க, அல்லது சிறையில் போடக் கூடியதாக இருந்தது! இன்று, புற்றுநோயும் இருதயநோயும் வருடந்தோறும் லட்சக்கணக்கான உயிர்களைப் போக்குகின்றன—மெய்யாகவே இவை கொள்ளைநோய்கள். மேலும் எய்ட்ஸ் தொடர்ந்து உயிர்களைக் கொன்றுகொண்டிருக்கிறது, உண்மையில் மருத்துவ அறிவியலால் தடுக்க முடியாததாக இருக்கிறது.
சரித்திர மற்றும் அரசியல் நிலைமைகளின்பேரில் கடைசி நாட்களைப் பற்றி இயேசு பெரும்பாலும் பேசியிருக்கையில், அப்போஸ்தலன் பவுல், சமுதாய பிரச்சினைகளின்பேரிலும் நிலவியிருக்கப்போகும் மனப்பான்மைகளின்பேரிலும் பெரும்பாலும் கவனத்தை ஊன்ற வைத்தார். அதன் சம்பந்தமாக அவர் இவ்வாறு எழுதினார்: “கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிந்துகொள். எப்படியெனில், மனுஷர் தற்பிரியரும் . . . பக்தியில்லாதவர்களும் சுபாவ அன்பில்லாதவர்களும் இணங்காதவர்களும் . . . அடக்கமில்லாதவர்களும் கொடுமையுள்ளவர்களும் நன்மையை ஆசியாதவர்களும் துரோகிகளும் துணிகரமுள்ளவர்களும் இறுமாப்புள்ளவர்களும் கடவுளைப் பார்க்கிலும் சுகபோகத்தை அதிகமாய் நேசிக்கிறவர்களும்” ஆக இருப்பார்கள்.—2 தீமோத்தேயு 3:1-5, திருத்திய மொழிபெயர்ப்பு.
இந்த வார்த்தைகள் உங்களுக்குப் பழக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றனவா? இன்றைய உலகத்தில் சமுதாய சீர்கேட்டின் வெறும் ஒரு அம்சத்தை மட்டுமே கவனியுங்கள்—குடும்பம் சிதைவுறுதல். பிரிவுற்ற குடும்பங்களின் அதிகரிப்பு, அடித்து கொடுமையாக நடத்தப்பட்ட மனைவிகள், பலாத்காரப்படுத்தப்பட்ட பிள்ளைகள், கொடுமைக்கு ஆளான முதிர்வயதானப் பெற்றோர்கள்—ஜனங்கள் ‘சுபாவ அன்பில்லாதவர்களாக,’ ‘கொடுமையுள்ளவர்களாக,’ ‘துரோகிகளாகவுங்கூட,’ ‘நன்மையை ஆசியாதவர்களாயுங்கூட’ இருக்கிறார்கள் என்பதை இந்த நிலைமைகள் எவ்வளவு தெளிவாய் விவரிக்கின்றன! ஆம், இந்தத் தன்மைகளை இன்று பெருமளவில் நாம் காண்கிறோம்.
முன்னறிவிக்கப்பட்டது நம்முடைய சந்ததியா?
எனினும், ‘இந்த நிலைமைகள் எப்போதுமே மனிதவர்க்கத்தை வாதித்துவந்திருக்கின்றன அல்லவா? இந்தப் பூர்வ தீர்க்கதரிசனங்களில் முன்னறிவிக்கப்பட்டது நம்முடைய தற்கால சந்ததியைப் பற்றியே என்று நாம் எவ்வாறு அறியலாம்?’ என நீங்கள் ஒருவேளை சிந்திக்கலாம். இயேசு நம்முடைய காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார் என்பதை நிரூபிக்கும் அத்தாட்சியின் மூன்று வழிகளை நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.
முதலாவதாக, எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்பட்டதில் ஓரளவான, முதல் நிறைவேற்றம் இருந்தபோதிலும், இயேசுவின் வார்த்தைகள், அந்நாளுக்கும் அப்பாலுள்ள எதிர்காலத்தைத் திட்டமாய்க் குறிப்பிட்டன. எருசலேமை அழித்த அந்தப் புரட்சிக்கு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப்பின், இயேசு, முதிர்வயதிலிருந்த அப்போஸ்தலனாகிய யோவானுக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்தார். அதில், அவர் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட அந்த நிலைமைகள்—போர், பஞ்சம், கொள்ளைநோய், மற்றும் அவற்றின் விளைவான மரணம்—எதிர்காலத்தில் உலகமெங்கும் வரவிருந்ததைக் காட்டினார். ஆம், இந்த இக்கட்டுகள் ஒரு குறிப்பிட்ட இடத்தை அல்ல, ‘பூமி’ முழுவதையும் பாதிக்கும்.—வெளிப்படுத்துதல் 6:2-8.
இரண்டாவதாக, இயேசு கொடுத்த அடையாளத்தின் சில அம்சங்கள், அவற்றின் முழுமையாய்ப் பரந்த அளவு என்று நாம் சொல்ல முடிகிற வகையில், இந்த நூற்றாண்டில் நிறைவேற்றமடைந்து வருகின்றன. உதாரணமாக, 1914 முதற்கொண்டு ஏற்பட்டு வந்திருக்கிற யுத்தங்கள் அவை இருந்ததைப் பார்க்கிலும் அதிக மோசமடைவது சாத்தியமாக இருக்கிறதா? இன்று அணுசக்தி போராயுதங்களைக் கொண்டுள்ள எல்லா நாடுகளும் தங்கள் போராயுதங்களைப் பயன்படுத்தி மூன்றாவது உலக யுத்தம் ஒன்று நடத்தியிருந்தால், இந்தப் பூமி எரிந்து சாம்பலாக்கப்பட்டிருப்பதையும்—மனிதவர்க்கம் அறவே அற்றுப்போயிருப்பதையுமே அதன் பின்விளைவு பெரும்பாலும் கண்டிருக்கும். அவ்வாறே, இந்நாட்களில் தேசங்கள் ‘கோபித்திருக்கையில்,’ மனிதவர்க்கம் ‘பூமியைக் கெடுக்கும்’ என்று, வெளிப்படுத்துதல் 11:18 முன்னறிவித்தது. சரித்திரத்தில் முதல் தடவையாக, தூய்மைக்கேடும் சீரழிவும் இந்தக் கிரகத்தில் உயிர்வாழ்வதையே ஆபத்தானதாக இப்போது பயமுறுத்துகின்றன! ஆகவே இந்த அம்சமுங்கூட அதன் நிறைவேற்றத்தை அதன் கடைசி அல்லது ஏறக்குறைய கடைசி உச்ச அளவில் கண்டுகொண்டிருக்கிறது. மனிதன் தன்னைத்தானேயும் இந்தக் கிரகத்தையும் அழித்துவிடும் வரையில் யுத்தங்களும் தூய்மைக்கேடும் உண்மையில் தொடர்ந்து மோசமாகிக்கொண்டிருக்க முடியுமா? இல்லை; பூமி என்றென்றுமாக நிலைத்திருக்கும் என்றும், நேர்மையான இருதயமுள்ள மனிதர்கள் அதில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் என்றும் பைபிள்தானே கூறுகிறது.—சங்கீதம் 37:29; மத்தேயு 5:5.
மூன்றாவதாக, கடைசி நாட்களின் அடையாளத்தை முழுமையாகக் கருதுகையில் முக்கியமாய் நம்பத்தக்கதாக உள்ளது. மூன்று சுவிசேஷங்களிலுள்ள, இயேசு குறிப்பிட அம்சங்களையும், பவுலின் எழுத்துக்களில் உள்ளவற்றையும், வெளிப்படுத்துதலில் உள்ளவற்றையும் முழுமையாகக் கருதுகையில், இந்த அடையாளம் பல அம்சங்கள் அடங்கியதாக இருக்கிறது. இவற்றைத் தனித்தனியே ஒருவர் எடுத்துக்கொண்டு, மற்ற சகாப்தங்களும் இவற்றைப் போன்ற பிரச்சினைகளை எதிர்ப்பட்டிருக்கின்றன என்று வாதாடலாம்; ஆனால், அவற்றை எல்லாம் ஒன்றுசேர நாம் கருதுகையில், அவை ஒரே ஒரு சகாப்தத்தையே—நம்முடைய இந்த சகாப்தத்தையே—தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
எனினும் இவை யாவும் எதைக் குறிக்கின்றன? மிக மோசமான நம்பிக்கையற்ற காலமாக நம்முடைய சகாப்தத்தை பைபிள் வெறுமனே விவரிக்கிறதா? நிச்சயமாகவே இல்லை!
நற்செய்தி
கடைசி நாட்களுக்குரிய அடையாளத்தின் மிக அதிகமாய்க் கவனிக்கத்தக்க அம்சங்களில் ஒன்று மத்தேயு 24:14-ல் (NW) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது: “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி, குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல ஜனத்தாருக்கும் ஒரு சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” இந்த நூற்றாண்டில், சரித்திரத்திலேயே தனித்தன்மை வாய்ந்த ஓர் ஊழியத்தை யெகோவாவின் சாட்சிகள் நிறைவேற்றி வந்திருக்கிறார்கள். யெகோவா தேவனின் ராஜ்யத்தைப் பற்றிய பைபிளின் செய்தியை—அது என்ன, அது எவ்வாறு ஆட்சி செய்கிறது, அது எதை நிறைவேற்றும்—என்பவற்றை அவர்கள் ஏற்று, அந்தச் செய்தியை பூமி முழுவதிலும் பரவச் செய்திருக்கிறார்கள். இந்தப் பொருளின்பேரில் 300-க்கு மேற்பட்ட மொழிகளில் புத்தகங்களை அவர்கள் பிரசுரித்து, அவற்றை உண்மையில் பூமியிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஜனங்களுக்கு அவர்களுடைய வீடுகளில் அல்லது வீதிகளில் அல்லது அவர்களுடைய வேலை செய்யும் இடங்களில் அளித்திருக்கிறார்கள்.
இவ்வாறு செய்வதன்மூலம், இந்தத் தீர்க்கதரிசனத்தை அவர்கள் நிறைவேற்றி வந்திருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கையையும் அவர்கள் பரவச் செய்திருக்கிறார்கள். இயேசு இதை துர்ச்செய்தி என்றல்ல, “நற்செய்தி” என்று அழைத்தார். இந்தத் துயரார்ந்த காலத்தில் அது எப்படி நற்செய்தியாய் இருக்க முடியும்? ஏனெனில், இந்தப் பழைய உலகத்தின் முடிவில் காரியங்கள் எவ்வளவு தீயனவாய் இருக்கும் என்பது பைபிளின் முக்கிய செய்தியல்ல. கடவுளுடைய ராஜ்யம் உட்படுவதே அதன் முக்கிய செய்தி. சமாதானத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனின் இருதயத்துக்கும் அருமையான ஒன்றை—விடுதலையை—அந்த ராஜ்யம் வாக்களிக்கிறது
அந்த விடுதலை என்ன, அது எப்படி உங்களுடையதாக இருக்கலாம்? இந்தப் பொருளின்பேரில் பின்வரும் கட்டுரைகளைத் தயவுசெய்து கவனியுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a வெற்றி சிறந்து கைப்பற்றக்கூடிய தனி அனுகூலநிலை டைட்டஸுக்கு இங்கே இருந்தது. எனினும், அவர் விரும்பிய இரண்டு முக்கிய காரியங்கள் நிறைவேறவில்லை. சமாதானமாய்ச் சரணடைவதற்கான வாய்ப்பை அவர் அளித்தார், ஆனால் விளக்க முடியாத முறையில், அந்த நகரத் தலைவர்கள் பிடிவாதமாய் அதை ஏற்க மறுத்துவிட்டனர். நகர மதில்கள் கடைசியாக உடைத்து வழி உண்டாக்கப்பட்டபோது, ஆலயத்தை அழிக்காது விடும்படி அவர் கட்டளையிட்டார். எனினும் அது முற்றிலும் எரிக்கப்பட்டது! எருசலேம் பாழாக்கப்படும் என்றும் ஆலயம் முற்றிலுமாய்த் தகர்க்கப்படும் என்றும் இயேசுவின் தீர்க்கதரிசனம் தெளிவாக்கியிருந்தது.—மாற்கு 13:1, 2.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
மனக்கலக்கம் உண்டாக்கும் இத்தகைய கேள்விகளுக்கு ஜனங்கள் பதில்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்: காரியங்கள் ஏன் இவ்வளவு தீங்கானவையாக உள்ளன? மனிதவர்க்கம் எதைநோக்கிச் சென்று கொண்டிருக்கிறது?
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
இன்று யுத்தத்தினால் இறப்பவர்களில் 90-க்கு மேற்பட்ட சதவீதத்தினர்
பொதுமக்களே
[பக்கம் 7-ன் படம்]
எருசலேமின் அழிவைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனம் அதன் ஒவ்வொரு அம்சத்திலும் மிக நுட்பமாக நிறைவேறியது