யெகோவா இரக்கத்தோடு ஆட்சி செய்கிறார்
வரலாறு முழுவதிலுமாக மனித அரசர்கள் தங்களுடைய குடிமக்களின் துன்பங்களைக் குறித்து இரக்கமின்றி அலட்சியமாக அதிகாரம் செலுத்தி வந்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், யெகோவா ஒரு தேசத்தைத்—இஸ்ரவேலைத்—தெரிந்துகொண்டு இரக்கத்தோடு ஆட்சி செய்வதன் மூலம் மாறுப்பட்ட பண்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரவேலர் பண்டைய எகிப்தில் இன்னும் அடிமைகளாக இருந்தபோதே உதவிக்கான அவர்களுடைய கூக்குரலை யெகோவா கேட்டார். ‘அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; . . . அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் [“இரக்கத்தினிமித்தமும்,” NW] அவர்களை அவர் மீட்டுக்கொண்டார்.’ (ஏசாயா 63:9) யெகோவா இஸ்ரவேலரைக் காப்பாற்றி, அற்புதமாக அவர்களுக்கு உணவளித்து, அவர்களுடைய சொந்த தேசத்துக்குள் அவர்களை வழிநடத்தினார்.
யெகோவாவின் இரக்க குணம் இந்தத் தேசத்துக்கு அவர் கொடுத்த சட்டங்களில் மேலுமாக வெளிப்படுத்தப்பட்டது. அநாதைகளிடமும் விதவைகளிடமும் அன்னியரிடமும் இரக்கத்தோடு நடந்துகொள்ளும்படியாக அவர் இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டார். அவர்கள் உடல் ஊனமுற்றவர்களை அநியாயமாக ஏமாற்றக்கூடாது.
தேவையிலிருப்பவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதை நியாயப்பிரமாணம் தேவைப்படுத்தியது. அறுவடைக்குப் பின்பு எளியவர்கள், சிந்திய கதிர்களைப் பொறுக்கிக் கொள்ளலாம். கடன்கள் ஓய்வு (ஏழாவது) வருடத்தில் ரத்து செய்யப்பட்டன. விற்கப்பட்ட பரம்பரை சொத்தும் யூபிலி (50-வது) வருடத்தில் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். பண்டைய இஸ்ரவேல்—அதன் வாழ்க்கையும் அமைப்புகளும் (ஆங்கிலம்) இவ்வாறு அறிவிக்கிறது: “இஸ்ரவேலில், தற்போதுள்ளதைப் போன்ற சமுதாயப் பிரிவுகள் உண்மையில் ஒருபோதும் இருக்கவில்லை.” “குடியேறிய ஆரம்ப காலத்தில், இஸ்ரவேலர் அனைவருமே ஏறக்குறைய ஒரே வாழ்க்கைத் தரத்தையே அனுபவித்தனர்.”—லேவியராகமம் 25:10; உபாகமம் 15:12-14; 24:17-22; 27:18.
யெகோவாவின் இரக்கத்தைப் பின்பற்றுதல்
கடவுளுடைய ஊழியர்கள் அவருடைய இரக்கத்தால் தூண்டப்படுகிறார்கள். உதாரணமாக, வரலாறு முழுவதிலுமாக, சில புதிய ராஜாக்கள் அவர்களுக்கு முந்தியிருந்த மன்னர்களின் குடும்பத்தில் எஞ்சியிருக்கும் அங்கத்தினர்களை கொன்றுபோட்டார்கள். ஆனால் யெகோவாவின் ஊழியனாகிய தாவீது அவ்வாறு செய்யவில்லை. சவுல் ராஜாவின் மரணத்துக்குப் பின்பு, உயிரோடிருந்த சவுலின் பேரனும் சுதந்தரவாளியுமான மேவிபோசேத்துக்கு தாவீது பாதுகாப்பளித்தார். ‘ராஜா சவுலின் மகனான யோனத்தானுக்குப் பிறந்த மேவிபோசேத்தின்மீது இரக்கம் காட்டினார்.’—2 சாமுவேல் 21:7, NW.
இயேசுவைப்போல வேறு எந்த மனிதனும் யெகோவாவின் இரக்கத்தைப் பின்பற்றியது கிடையாது. அவருடைய அற்புதங்கள் பலவற்றைச் செய்வதற்கு தூண்டுதலளித்தது கடவுளுடைய இரக்கமே. ஒரு சமயம் குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்று வேண்டிக்கொண்டான். இயேசு மனதுருகி கையை நீட்டி, அவனைத் தொட்டு “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்றார். (மாற்கு 1:40-42) மற்றொரு சமயத்தில் திரளான ஜனங்கள் இயேசுவின் பின்னால் வந்துகொண்டிருந்தார்கள். கூச்சலுக்கும் குழப்பத்துக்கும் இடையில் “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்” என்பதாக இரண்டு குருடர் கூப்பிட்டபோது இயேசு அவர்களுக்கு கவனம் செலுத்தினார். ‘இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்தார்கள்.’—மத்தேயு 20:29-34.
திரளான ஜனக்கூட்டம், மற்றவர்களிடமாக இயேசுவுக்கு இருந்த உணர்வுகளை மரத்துப்போகும்படிச் செய்துவிடவில்லை. ஒரு சமயம் ஜனங்கள் நெடு நேரமாக சாப்பிடாமல் இருந்தபோது “ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன்” என்பதாக சொன்னார். ஆகவே அவர்களுக்கு அற்புதமாக உணவளித்தார். (மாற்கு 8:1-8) இயேசு சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த போது, திரளான ஜனங்களுக்கு அவர் கற்பித்தது மட்டுமல்லாமல் அவர்களுடைய தேவைகளைக் கவனித்துச் செயல்படுகிறவராயும் இருந்தார். (மத்தேயு 9:35, 36) இப்படிப்பட்ட ஒரு சுற்றுப்பயணத்துக்குப் பின்னர் இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் சாப்பிடுவதற்கும்கூட நேரம் இல்லாதிருந்தது. பைபிள் பதிவு நமக்குச் சொல்கிறது: “அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள். அவர்கள் புறப்பட்டுப் போகிறதை ஜனங்கள் கண்டார்கள். அவரை அறிந்த அநேகர் சகல பட்டணங்களிலுமிருந்து கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள். இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.”—மாற்கு 6:31-34.
ஜனங்களுடைய வியாதியும் வறுமையும் மாத்திரமல்ல, அவர்களுடைய ஆவிக்குரிய நிலைமையே இயேசு அவர்களைப் பார்த்து மனதுருகும்படியாக செய்தது. அவர்களுடைய தலைவர்கள் சுயநலத்துக்காக அவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள், ஆகவே இயேசு “அவர்கள்மேல் மனதுருகி”னார். “மனதுருகினார்” என்பதற்குரிய கிரேக்க வார்த்தையின் பொருள் “உள் ஆழத்திலிருந்து உருகுவது” என்பதாகும். இயேசு நிச்சயமாகவே ஒரு இரக்கமுள்ள மனிதராக இருந்தார்!
இரக்கம் இல்லாத உலகில் இரக்கம்
இயேசு கிறிஸ்து இப்பொழுது யெகோவாவின் பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக இருக்கிறார். பூர்வ இஸ்ரவேலில் செய்தது போலவே, இன்று கடவுள் இரக்கத்தோடு தம்முடைய ஜனத்தை ஆட்சிசெய்கிறார். “என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்கள்மீது இரக்கத்தைக் காண்பிப்பேன்.”—மல்கியா 3:17, NW.
யெகோவாவின் இரக்கத்தைப் பெற விரும்புகிறவர்கள் அவருடைய வழிகளைப் பின்பற்ற வேண்டும். உண்மைதான், தேவையிலிருப்பவர்களுக்கு உதவிசெய்வதைக் காட்டிலும் தங்களுடைய வாழ்க்கை பாணியைத் தொடர்ந்து காத்துக்கொள்வதிலேயே அதிகமாக அக்கறை காட்டும் மனிதர்களின் உலகில் நாம் வாழ்கிறோம். அதிகாரத்திலுள்ள ஆட்கள் அடிக்கடி தொழிலாளிகள் மற்றும் நுகர்வோரின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் ஆதாயத்தைத் தேடிக்கொள்கின்றனர். 2 தீமோத்தேயு 3:1-4-ல், நம்முடைய நாளில் அநேகருடைய இருதயங்களில் இரக்க உணர்வை அறவே ஒழித்துவிட்டிருக்கும் ஒழுக்கம் சார்ந்த சமுதாய சூழலை பைபிள் திருத்தமாக விவரிக்கிறது.
இருந்தபோதிலும்கூட, இரக்கத்தைக் காண்பிப்பதற்கு வாய்ப்புகளை நாம் காணமுடியும். நம்முடைய அயலாருக்குத் தேவைப்படும் உதவி எதையாவது நம்மால் செய்யமுடியுமா? நோயுற்ற எவராவது நாம் சென்று பார்ப்பதற்கு இருக்கின்றனரா? “திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள்” என்ற இந்த ஆலோசனைக்கு இசைவாக மனச்சோர்விலிருக்கும் எவருக்காவது நாம் ஊக்கமூட்ட முடியுமா?—1 தெசலோனிக்கேயர் 5:14.
மற்றவர்கள் தவறு செய்கையில் அதற்கு கடுமையாக பிரதிபலிப்பதைத் தவிர்க்க இரக்கம் நமக்கு உதவிசெய்யும். நமக்கு இவ்வாறு சொல்லப்படுகிறது: “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”—எபேசியர் 4:31, 32.
இரக்கமானது அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்வதற்கான மனச்சாய்வைத் தவிர்ப்பதற்கு நமக்கு உதவிசெய்யும். பைபிள் சொல்லுகிறது: ‘உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்ளுங்கள்.’ (கொலோசெயர் 3:12) மனத்தாழ்மையுள்ளவராயும் நம்முடைய மேற்பார்வையின்கீழ் இருப்பவர்களின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்பதற்கு நமக்கு உதவிசெய்கிறது. இரக்கமுள்ளவராயிருப்பது என்பது பிரியப்படுத்துவதற்கு கடினமானவராக இருப்பதற்குப் பதிலாக மனத்தாழ்மையாயும் நியாயத்தன்மையுள்ளவராயும் இருப்பதை உட்படுத்துகிறது. திறமையுள்ளவராக இருப்பதுதானே மற்றவர்களை இயந்திரத்தின் வெறும் பாகங்களாக கருதி நடத்துவதற்கு ஒரு காரணமாயிருக்கக் கூடாது. மேலுமாக, குடும்பத்தில் இரக்கமுள்ள கணவன்மார் தங்களுடைய மனைவிகள் பலவீன பாண்டமாக இருப்பதை நினைவில் கொள்கின்றனர். (1 பேதுரு 3:7) இயேசுவின் இரக்க சுபாவத்தின் முன்மாதிரியை ஆழ்ந்து எண்ணிப்பார்ப்பது இவை அனைத்திலும் நமக்கு உதவிசெய்யும்.
இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின்போது மக்களுக்காக ஆழ்ந்த இரக்கவுணர்வைக் காண்பித்தபடியால், இப்பொழுதும் எப்பொழுதும் இரக்கமுள்ள ஒரு அரசராக இருப்பார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். சங்கீதம் 72 தீர்க்கதரிசனமாக அவரைக் குறித்து இவ்வாறு சொல்கிறது: “ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.”—சங்கீதம் 72:4, 8, 13.
கடவுளுடைய வார்த்தை இவ்வாறு முன்னுரைக்கிறது: “நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, . . . துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.” கொடூரமான, மிருக குணமுள்ள சில ஆட்களும்கூட எவ்வாறு தங்கள் வழிகளை மாற்றிக்கொள்வார்கள் என்பதை விவரித்தப்பின், இந்தத் தீர்க்கதரிசனம் இவ்வாறு தொடருகிறது: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:4-9) இந்தத் தீர்க்கதரிசனம் உண்மையில் உலகம் முழுவதிலும் யெகோவாவை அறிந்து இரக்கமான அவருடைய வழிகளைப் பின்பற்றுகிற ஒரு ஜன சமுதாயத்தைக் குறித்து வாக்குக்கொடுக்கிறது!