எருசலேம்—உங்களுடைய “மகிழ்ச்சியின் மகுடமாக” இருக்கிறதா?
“எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!”—சங்கீதம் [திருப்பாடல்கள்] 137:6, பொ.மொ.
1. கடவுளுடைய தெரிந்தெடுக்கப்பட்ட நகரத்தைப் பற்றி நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்களுக்கு இருந்த மனப்பான்மை என்ன?
நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்களில் முதலில் கொஞ்சம் பேர் பொ.ச.மு. 537-ல் எருசலேமுக்குத் திரும்பிவந்திருந்தனர்; அதன்பின் சுமார் எழுபது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கடவுளுடைய ஆலயம் திரும்பக் கட்டிமுடிக்கப்பட்டது, ஆனால் நகரமோ இன்னும் பாழடைந்த நிலையில் கிடந்தது. இதற்கிடையில், பாபிலோனில் நாடுகடத்தப்பட்டிருந்தவர்களில் ஒரு புதிய சந்ததி வளர்ந்துவிட்டது. “எருசலேமே நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக” என்று பாடிய சங்கீதக்காரனைப் போலவே அவர்களில் பலர் உணர்ந்தனர் என்பதில் சந்தேகமில்லை. (சங்கீதம் 137:5) இன்னும் சிலர் வெறுமனே எருசலேமை நினைத்துப்பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அது தங்களுடைய ‘மகிழ்ச்சியின் மகுடம்’ என்பதை செயலில் காண்பித்தனர்.—சங்கீதம் 137:6, பொ.மொ.
2. எஸ்றா யார், அவர் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டார்?
2 உதாரணமாக, ஆசாரியனாகிய எஸ்றாவை சிந்தித்துப்பாருங்கள். அவர் தாயகம் திரும்புவதற்கு முன்பே எருசலேமில் மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காக வைராக்கியமாய் உழைத்திருந்தார். (எஸ்றா 7:6, 10) அதற்காக எஸ்றா அபரிமிதமாய் ஆசீர்வதிக்கப்பட்டார். நாடுகடத்தப்பட்டிருந்தவர்களில் இரண்டாவது தொகுதியை எருசலேமுக்கு அழைத்துச் செல்லும் சிலாக்கியத்தை எஸ்றாவுக்கு வழங்க யெகோவா தேவன் பெர்சிய ராஜாவின் இருதயத்தை உந்துவித்தார். அதோடு அந்த ராஜா, “யெகோவாவின் ஆலயத்தை அலங்கரிக்க” பொன்னையும் வெள்ளியையும் நன்கொடையாக வாரிவழங்கினார்.—எஸ்றா 7:21-27, தி.மொ.
3. எல்லாவற்றிற்கும் மேல் எருசலேமே மிக முக்கியம் என்பதை நெகேமியா எவ்வாறு காண்பித்தார்?
3 சுமார் 12 வருடங்களுக்குப்பின், மற்றொரு யூதன் உறுதியுடன் செயல்பட்டார்—அவர்தான் நெகேமியா. அவர் சூசானிலிருந்த பெர்சிய அரமனையில் பணிபுரிந்தார். ராஜாவாகிய அர்தசஷ்டாவுக்கு பானபாத்திரக்காரராக கெளரவமான ஸ்தானத்தில் இருந்தார், ஆனால் நெகேமியாவுக்கு அது “மகிழ்ச்சியின் மகுடமாக” இல்லை. மாறாக, எருசலேமுக்குச் சென்று அதை திரும்பக் கட்டுவதற்கே ஏக்கங்கொண்டிருந்தார். இதற்காக நெகேமியா பல மாதங்களாய் ஜெபித்து வந்தார், அதனால் யெகோவா தேவன் அவரை ஆசீர்வதித்தார். நெகேமியாவின் தணியாத தாகத்தை அறிந்து, பெர்சிய ராஜா அவருக்கு ராணுவ பரிவாரங்களையும் எருசலேமை திரும்பக் கட்டுவதற்கு அதிகாரமளித்து கடிதங்களையும் கொடுத்தார்.—நெகேமியா 1:1–2:9.
4. வேறெதைக் காட்டிலும் யெகோவாவை வணங்குவதே மகிழ்ச்சியின் மகுடம் என்பதை நாம் எவ்வாறு காண்பிக்கலாம்?
4 வேறெதையும் காட்டிலும் எருசலேமை மையமாகக்கொண்ட யெகோவாவின் வணக்கமே அதிமுக்கியம்—‘தங்களுடைய மகிழ்ச்சியின் மகுடம்,’ அதாவது இதைக்காட்டிலும் மகிழ்ச்சியானது வேறில்லை—என்பதை எஸ்றாவும் நெகேமியாவும் அவர்களுடன் ஒத்துழைத்த மற்ற அநேக யூதர்களும் காண்பித்தனர் என்பதில் சந்தேகமே இல்லை. இன்று, யெகோவாவையும் அவருடைய வணக்கத்தையும் ஆவியால் வழிநடத்தப்படும் அவருடைய அமைப்பையும் இதேபோல் நோக்கும் அனைவருக்கும் இவர்களுடைய முன்மாதிரி எப்பேர்ப்பட்ட சிறந்த ஊக்கமூட்டுதல்! நீங்களும் இவர்களைப் போல் இருக்கிறீர்களா? தேவபக்திக்குரிய செயல்களைத் தொடர்ந்து செய்துவருவதன் மூலம், யெகோவாவை அவரது ஒப்புக்கொடுக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து வணங்கும் சிலாக்கியமே உங்கள் மகிழ்ச்சியின் மகுடம் என்பதை காண்பிக்கிறீர்களா? (2 பேதுரு 3:11) அதற்காக கூடுதலான ஊக்கம் பெற, எருசலேமுக்கு எஸ்றா சென்றதால் விளைந்த சீரிய பலன்களை இப்பொழுது சிந்திக்கலாமா?
ஆசீர்வாதங்களும் உத்தரவாதங்களும்
5. எஸ்றாவின் நாட்களில் யூதாவின் குடிமக்கள் அனுபவித்த பெரும் ஆசீர்வாதங்கள் யாவை?
5 நாடுகடத்தப்பட்டிருந்தவர்களில் சுமார் 6,000 பேர் எஸ்றாவின் வழிநடத்துதலில் திரும்பிவந்தனர்; அப்படி வருகையில் பொன்னையும் வெள்ளியையும் யெகோவாவின் ஆலயத்திற்கு நன்கொடையாக கொண்டுவந்தனர். அவற்றின் தற்போதைய மதிப்பென்ன என்று தெரியுமா? சுமார் 140 கோடி ரூபாய். முதலில் வந்தவர்கள் கொண்டுவந்த பொன்னையும் வெள்ளியையும்விட சுமார் ஏழு மடங்கு அதிகம். மனித ஆதரவையும் பொருளாதார ஆதரவையும் பெற்றுக்கொண்டதற்காக எருசலேமின் குடிமக்கள் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருந்திருக்க வேண்டும்! ஆனால் கடவுளிடமிருந்து வந்த பேரளவான ஆசீர்வாதங்கள் உத்தரவாதத்தையும் கொண்டுவந்தன.—லூக்கா 12:48.
6. எஸ்றா தன்னுடைய தாயகத்தில் எதைக் கண்டார், அதற்கு அவர் எவ்வாறு செயல்பட்டார்?
6 சில ஆசாரியர்களும் மூப்பர்களும் உட்பட, யூதர்கள் அநேகர் கடவுளுடைய சட்டத்தை மீறியிருப்பதை எஸ்றா விரைவில் கண்டுபிடித்தார். அவர்கள் புறமதத்தவரை திருமணம் செய்திருந்தனர். (உபாகமம் 7:3, 4) கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை இவ்விதம் மீறியதைக் குறித்து அவர் மிகவும் கலங்கியது நியாயமானதே. “இந்தச் சங்கதியை நான் கேட்டபொழுது என் வஸ்திரத்தையும் என் அங்கியையும் நான் கிழித்து, . . . திகைத்துக் கலங்கி இருந்துவிட்டேன்.” (எஸ்றா 9:3, தி.மொ.) பின்பு, இஸ்ரவேலர் கவலையோடு கூடியிருக்கையில், அவர் யெகோவாவிடம் தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் கொட்டி ஜெபித்தார். எல்லாருடைய செவிகளும் கேட்க, இஸ்ரவேலருடைய கடந்தகால கீழ்ப்படியாமையையும் தேசத்திலுள்ள புறமத குடிகளை திருமணம் செய்துகொண்டால் என்ன நடக்கும் என்பதைப் பற்றிய கடவுளின் எச்சரிக்கையையும் எஸ்றா அவர்களுக்கு எடுத்துச்சொன்னார். அவர் இவ்வாறு சொல்லி முடித்தார்: “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பிமீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல.”—எஸ்றா 9:14, 15.
7. (அ) தவற்றை கையாளுவதில் எஸ்றா வைத்த சிறந்த முன்மாதிரி என்ன? (ஆ) எஸ்றாவின் நாளில் தவறிழைத்தவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள்?
7 எஸ்றா ஜெபிக்கும்போது “நாங்கள்” என்ற பதத்தைப் பயன்படுத்தினார். தனிப்பட்ட விதமாய் அவர் தானேயும் எந்தக் குற்றமும் செய்யாதபோதிலும் தன்னையும் உட்படுத்திக்கொண்டார். எஸ்றாவின் ஆழ்ந்த துக்கமும் தாழ்மையான ஜெபமும் ஜனங்களுடைய இருதயத்தை தொட்டு, மனந்திரும்புதலுக்கு ஏற்ற செயல்களை செய்யும்படி தூண்டின. வேதனைமிக்க ஒரு பரிகாரத்தை செய்ய அவர்கள் முன்வந்தனர், அதாவது கடவுளுடைய சட்டத்தை மீறியவர்கள் அனைவரும் அந்நிய தேசத்து மனைவிகளையும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளையும் அவர்களுடைய தாயகத்திற்கு அனுப்பிவிட முன்வந்தனர். இந்த நடவடிக்கைக்கு எஸ்றா ஒப்புக்கொண்டு, தவறிழைத்தவர்கள் இதற்கு இசைவாக செயல்படும்படி ஊக்குவித்தார். பெர்சிய ராஜா கொடுத்த அதிகாரத்தைக் கொண்டு, சட்டத்தை மீறியவர்களை அழிக்கவோ, எருசலேமை அல்லது யூதாவைவிட்டு நாடுகடத்தவோ எஸ்றாவுக்கு உரிமை இருந்தது. (எஸ்றா 7:12, 26) ஆனால் அவர் இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுக்க அவசியமில்லாமல் போனதாய் தெரிகிறது. “சபையார் யாவரும்” இவ்வாறு சொன்னார்கள்: “நீர் சொல்லுகிறபடியே செய்யவேண்டியதுதான்.” மேலும், அவர்கள் இவ்வாறு ஒப்புக்கொண்டார்கள்: “இவ்விஷயத்தில் நாங்கள் செய்த குற்றமும் மிகப்பெரியது.” (எஸ்றா 10:11-13, தி.மொ.) புறஜாதியாரான தங்களுடைய மனைவிகளையும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளையும் அனுப்பிவிடுவதன் மூலம் இந்தத் தீர்மானத்திற்கு கீழ்ப்படிந்த 111 ஆட்களுடைய பெயர்கள் எஸ்றா 10-வது அதிகாரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
8. புறஜாதியாரைச் சேர்ந்த மனைவிகளை அனுப்பிவிடும் இந்தப் மிகப் பெரிய செயல் எவ்வாறு முழு மனிதவர்க்கத்தினரின் நன்மைக்காக இருந்தது?
8 இந்தச் செயல் இஸ்ரவேலரின் நன்மைக்காக மட்டுமல்லாமல் முழு மனிதவர்க்கத்தினருடைய நன்மைக்காகவும் இருந்தது. காரியங்களை சரிசெய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்திருந்தால், இஸ்ரவேலர்கள் தங்களை சுற்றியிருந்த தேசத்தாருடன் ஒன்றரக் கலந்திருப்பார்கள். இதனால், முழு மனிதவர்க்கத்தினரையும் ஆசீர்வதிப்பதற்கான வாக்குப்பண்ணப்பட்ட வித்துவின் சந்ததி களங்கப்பட்டிருக்கும். (ஆதியாகமம் 3:15; 22:18) யூதா கோத்திர தாவீது ராஜாவின் சந்ததியாக வாக்குப்பண்ணப்பட்ட வித்துவை அடையாளம் கண்டுகொள்வது கடினமாய் இருந்திருக்கும். சுமார் 12 ஆண்டுகளுக்குப்பின், இந்த இன்றியமையாத விஷயத்திற்கு மறுபடியும் கவனம் செலுத்தப்பட்டது; அப்போது, “இஸ்ரவேல் சந்ததியார் மறு ஜாதியாரையெல்லாம் விட்டுப்பிரிந்து வந்துநின்[றார்கள்].”—நெகேமியா 9:1, 2; 10:29, 30.
9. அவிசுவாச துணைவர்களைக் கொண்ட கிறிஸ்தவர்களுக்கு பைபிள் தரும் சிறந்த அறிவுரை என்ன?
9 இந்த விவரப்பதிவிலிருந்து யெகோவாவின் தற்கால ஊழியர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாண சட்டத்தின்கீழ் இல்லை. (2 கொரிந்தியர் 3:14) அதற்குப் பதிலாக, ‘கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு’ கீழ்ப்படிகின்றனர். (கலாத்தியர் 6:2) எனவே, அவிசுவாச துணைவரைக் கொண்ட ஒரு கிறிஸ்தவர் பவுலின் பின்வரும் அறிவுரைக்கு கீழ்ப்படிகிறார்: “சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 7:12) மேலும், இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய திருமணத்தை வெற்றிகரமாய் நடத்தவேண்டிய வேதப்பூர்வ கடமைக்குட்பட்டுள்ளனர். (1 பேதுரு 3:1, 2) இச்சிறந்த அறிவுரைக்கு கீழ்ப்படிவது, மெய் வணக்கத்திற்காக அவிசுவாசியான துணைவர் பெரும்பாலும் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ளும் ஆசீர்வாதத்தில் விளைவடைந்திருக்கிறது. சிலர் முழுக்காட்டப்பட்டு உண்மையுள்ள கிறிஸ்தவர்களாய் மாறியிருக்கின்றனர்.—1 கொரிந்தியர் 7:16.
10. தங்களுடைய புறஜாதி மனைவிமாரை அனுப்பிவிட்ட 111 இஸ்ரவேலரிடமிருந்து கிறிஸ்தவர்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
10 புறஜாதி மனைவிமாரை அனுப்பிவிட்ட இஸ்ரவேலரின் விஷயத்தில் திருமணமாகாத கிறிஸ்தவர்களுக்கும் சிறந்த பாடம் உள்ளது. இவர்கள் அவிசுவாசிகளான எதிர்பாலாருடன் காதலீடுபாடு வைத்துக்கொள்ளக் கூடாது. இப்படிப்பட்ட உறவை முறித்துக்கொள்வது கடினமாயும் வேதனைமிக்கதாயும் இருக்கலாம், ஆனால் கடவுளுடைய ஆசீர்வாதத்தை ஒருவர் தொடர்ந்து அனுபவிப்பதற்கு இதுவே சிறந்த செயல். கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு கட்டளை கொடுக்கப்படுகிறது: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக.” (2 கொரிந்தியர் 6:14) திருமணம் செய்துகொள்ள விரும்பும் எந்தக் கிறிஸ்தவரும் உண்மையான உடன் விசுவாசியையே மணம் செய்துகொள்ள திட்டமிட வேண்டும்.—1 கொரிந்தியர் 7:39.
11. இஸ்ரவேல ஆண்களைப் போல, நம்முடைய மகிழ்ச்சிக்கான காரணமே நமக்கு எவ்வாறு சோதனையாய் அமையலாம்?
11 கிறிஸ்தவர்கள் வேதப்பூர்வமற்ற வழியில் செல்வதாக அவர்களிடம் சொல்லப்பட்டபோது, மற்ற பல வழிகளிலும்கூட மாற்றங்களை செய்திருக்கின்றனர். (கலாத்தியர் 6:1) ஒரு நபர் கடவுளுடைய அமைப்பில் இருப்பதை தகுதியற்றவராக்கும் வேதப்பூர்வமற்ற நடத்தையை அவ்வப்பொழுது இந்தப் பத்திரிகை சுட்டிக் காண்பித்திருக்கிறது. உதாரணமாக, 1973-ல், போதைப்பொருள் துஷ்பிரயோகமும் புகையிலையைப் பயன்படுத்துவதும் வினைமையான பாவங்கள் என யெகோவாவின் ஜனங்கள் தெளிவாக புரிந்துகொண்டனர். தேவபக்திக்குரிய நடத்தையை நாடித்தொடருவதற்கு, ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொள்ள’ வேண்டும். (2 கொரிந்தியர் 7:1) இத்தகைய பைபிள் அறிவுரையை அநேகர் மனமார ஏற்றுக்கொண்டனர்; கடவுளுடைய சுத்தமான ஜனங்களுடன் இருப்பதற்காக ஆரம்பத்தில் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை சகித்திருப்பதற்கும் மனமுள்ளவர்களாய் இருந்தனர். பாலின விஷயங்கள், உடை, சிகையலங்காரம், ஞானமாய் வேலையை தெரிந்தெடுத்தல், பொழுதுபோக்கு, இசை ஆகியவற்றின் சம்பந்தமாகவும் தெளிவான வேதப்பூர்வ வழிநடத்துதல் கொடுக்கப்பட்டுள்ளன. எந்தவொரு வேதப்பூர்வ நியமங்கள் நம்முடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டாலும், 111 இஸ்ரவேல ஆண்களைப் போல, நம்மை ‘சீர்ப்படுத்துவதற்கு’ தயாராயிருப்போமாக. (2 கொரிந்தியர் 13:11, பொ.மொ.) யெகோவாவை அவருடைய பரிசுத்த ஜனத்தாருடன் வணங்கும் சிலாக்கியத்தை “மகிழ்ச்சியின் மகுடமாக” கருதுகிறோம் என்பதை இது காண்பிக்கும்.
12. பொ.ச.மு. 455-ல் என்ன நடந்தது?
12 புறஜாதி மனைவிகளை உட்படுத்திய இந்த சம்பவத்தை விவரித்தப் பிறகு, அடுத்த 12 வருடங்களுக்கு எருசலேமில் என்ன நடந்தது என்பதைப் பற்றி பைபிள் நமக்கு சொல்வதில்லை. திருமண ஒப்பந்தங்களை முறித்துக்கொண்டதால் இஸ்ரவேலை சுற்றியிருந்தவர்கள் அதிக பகைமை கொண்டவர்களானார்கள் என்பதில் சந்தேகமில்லை. பொ.ச.மு. 455-ல், இராணுவ பரிவாரத்தோடு நெகேமியா எருசலேமுக்கு வந்தார். அவர் யூதாவுக்கு அதிபதியாக ஏற்படுத்தப்பட்டிருந்தார், மேலும் நகரத்தை திரும்பக் கட்டுவதற்கு பெர்சிய ராஜா அதிகாரமளித்து எழுதிய கடிதங்களையும் கொண்டுவந்தார்.—நெகேமியா 2:9, 10; 5:14.
பொறாமைகொண்ட அண்டை நாட்டவரிடமிருந்து எதிர்ப்பு
13. யூதர்களுடைய பொய்மத அண்டை நாட்டவர் என்ன மனப்பான்மையை காண்பித்தனர், அதற்கு நெகேமியா எவ்வாறு செயல்பட்டார்?
13 நெகேமியா வந்த நோக்கத்தை பொய் மதத்தைச் சேர்ந்த அண்டை நாட்டவர் எதிர்த்தனர். “நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ”? என்று கேட்டு அவர்களுடைய தலைவர்கள் பயமுறுத்தினர். யெகோவாவில் நம்பிக்கை வைத்து நெகேமியா இவ்வாறு பதிலளித்தார்: “பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பேர்விளங்க ஒன்றும் இல்லை.” (நெகேமியா 2:19, 20) மதிற்சுவரை பழுதுபார்க்கும் வேலை ஆரம்பமானபோது, அதே விரோதிகள் இவ்வாறு பரிகசித்தார்கள்: ‘அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும்.’ இவற்றிற்கு மறுமொழி கூறுவதற்குப் பதிலாக நெகேமியா இவ்வாறு ஜெபித்தார்: “எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்.” (நெகேமியா 4:2-4) தொடர்ந்து யெகோவாவின்மீது சார்ந்திருப்பதன் மூலம் நெகேமியா இச்சிறந்த முன்மாதிரியை வைத்தார்!—நெகேமியா 6:14; 13:14.
14, 15. (அ) வன்முறையால் விரோதிகள் அச்சுறுத்துகையில் நெகேமியா எவ்வாறு சமாளித்தார்? (ஆ) பயங்கர எதிர்ப்பின் மத்தியிலும் எவ்வாறு யெகோவாவின் சாட்சிகளால் தங்களுடைய ஆவிக்குரிய கட்டட வேலையை தொடர்ந்து செய்ய முடிந்திருக்கிறது?
14 இன்று யெகோவாவின் சாட்சிகளும் தங்களுடைய முக்கியமான பிரசங்க வேலையை செய்துமுடிப்பதற்காக கடவுளையே சார்ந்துள்ளனர். பரிகசிப்பதன் மூலம் விரோதிகள் இந்த வேலையை தடைசெய்ய முயலுகின்றனர். இந்தப் பரிகாசத்தை பொறுக்க முடியாமல் ராஜ்ய செய்தியில் விருப்பமுள்ள நபர்கள் சிலசமயங்களில் அதைக் கேட்பதை நிறுத்திவிடுகின்றனர். பரிகசிப்பது தோல்வியடைகையில், விரோதிகள் கொதிப்படைந்து வன்முறையால் அச்சுறுத்த முயலுகின்றனர். இதைத்தான் எருசலேம் மதிற்சுவரை கட்டினவர்கள் எதிர்ப்பட்டனர். ஆனால் நெகேமியா அச்சுறுத்தலுக்கு அடிபணியவில்லை. அதற்கு மாறாக, விரோதியின் தாக்குதலை எதிர்ப்பதற்கு மதிற்சுவர் கட்டுபவர்களிடம் ஆயுதம் கொடுத்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தினார்: “அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள்.”—நெகேமியா 4:13, 14.
15 நெகேமியாவின் நாட்களைப் போலவே, பயங்கர எதிர்ப்பின் மத்தியிலும் ஆவிக்குரிய கட்டட வேலையை தொடர்ந்து செய்வதற்கு தேவையானவையெல்லாம் யெகோவாவின் சாட்சிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. விசுவாசத்தைப் பலப்படுத்தும் ஆவிக்குரிய உணவை “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” அளித்திருக்கிறது. இது, வேலை தடைசெய்யப்பட்ட இடங்களிலும்கூட கடவுளுடைய ஜனங்கள் பலன்தரத்தக்கவர்களாய் இருப்பதற்கு உதவுகிறது. (மத்தேயு 24:45, NW) இதன் விளைவாக, யெகோவா அவருடைய மக்களை பூமி முழுவதும் அதிகரிப்பினால் தொடர்ந்து ஆசீர்வதித்திருக்கிறார்.—ஏசாயா 60:22.
உட்பூசல்கள்
16. எருசலேமின் மதிற்சுவரைக் கட்டுபவர்களுடைய மனோபலத்தை அச்சுறுத்திய உட்பூசல்கள் யாவை?
16 எருசலேமின் மதிற்சுவரை திரும்பக் கட்டும் வேலை முன்னேற்றமடைந்து சுவர் உயர்ந்தபோது, அந்த வேலை மிகவும் கடினமானது. இது, போராடிய கட்டட வேலையாட்களின் மனோபலத்தை அச்சுறுத்திய ஒரு பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தபோது ஏற்பட்டது. உணவுப் பற்றாக்குறையால் யூதர்கள் சிலர் தங்களுடைய குடும்பங்களுக்கு உணவளிப்பதையும் பெர்சிய அரசாங்கத்திற்கு வரிசெலுத்துவதையும் கடினமாய் கண்டனர். செல்வந்தரான யூதர்கள் உணவையும் பணத்தையும் கடன் கொடுத்தனர். ஆனால், கடவுளுடைய சட்டத்திற்கு முரணாக, பணத்தை வட்டியுடன் திரும்பச் செலுத்துவதற்கு ஏழை இஸ்ரவேலர் தங்களுடைய நிலங்களையும் பிள்ளைகளையும் பணையம் வைக்க வேண்டியிருந்தது. (யாத்திராகமம் 22:25; லேவியராகமம் 25:35-37; நெகேமியா 4:6, 10; 5:1-5) கடன் கொடுத்தவர்கள் இப்பொழுது அவர்களுடைய நிலங்களை எடுத்துக்கொள்ளப்போவதாக அச்சுறுத்தினர்; பிள்ளைகளை அடிமைகளாக விற்பதற்கும் அவர்களை பலவந்தம் செய்தனர். இத்தகைய அன்பற்ற, பொருளாசை மனப்பான்மையைக் கண்டு நெகேமியா கொதிப்படைந்தார். எருசலேமின் மதிற்சுவரைத் திரும்பக் கட்டும் வேலையின்மீது யெகோவாவின் ஆசீர்வாதம் தொடர்ந்திருக்கும்படி அவர் உடனடியாக செயல்பட்டார்.
17. கட்டட வேலையின்மீது யெகோவாவின் ஆசீர்வாதம் தொடர்ந்திருப்பதற்கு நெகேமியா என்ன செய்தார், அதற்கு என்ன பலன் கிடைத்தது?
17 ‘ஒரு பெரிய சபை கூடிவரும்படி’ செய்யப்பட்டது, யெகோவாவை துக்கப்படுத்தும் காரியத்தை செல்வந்த இஸ்ரவேலர் செய்திருப்பதை நெகேமியா தெளிவாக காண்பித்தார். பின்பு, வட்டி செலுத்த முடியாதவர்களிடமிருந்து அவர்களும் ஆசாரியர்களும் வாங்கிய அனைத்து வட்டியையும் சட்ட விரோதமாய் அபகரித்த நிலங்களையும் திருப்பிக்கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார். குற்றம்புரிந்தவர்கள் இவ்வாறு சொன்னது போற்றத்தக்கது: “நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம்.” இந்த வார்த்தைகள் ஏதோ ஒப்புக்கு சொன்ன வார்த்தைகள் அல்ல, ஏனெனில் ‘ஜனங்கள் [நெகேமியாவினுடைய] வார்த்தையின்படியே செய்தார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. பின்பு சபையார் யாவரும் யெகோவாவைத் துதித்தார்கள்.—நெகேமியா 5:7-13.
18. என்ன மனப்பான்மைக்கு யெகோவாவின் சாட்சிகள் நன்கு அறியப்பட்டுள்ளனர்?
18 நம்முடைய நாளைப் பற்றியென்ன? சுரண்டுவதற்குப் பதிலாக, இன்னல்களால் பாதிக்கப்பட்ட உடன் விசுவாசிகளிடமும் மற்றவர்களிடமும் யெகோவாவின் சாட்சிகள் தாராள மனப்பான்மையை காண்பித்திருப்பதற்கு நன்கு அறியப்பட்டுள்ளனர். நெகேமியாவின் நாளைப் போலவே, இது யெகோவாவுக்கு நன்றியோடு துதி செலுத்துவதில் விளைவடைந்திருக்கிறது. ஆனால் அதேசமயத்தில், வியாபார விஷயங்களின் பேரிலும் மற்றவர்களை பேராசையோடு சுரண்டுவதைத் தவிர்க்க வேண்டியதன் பேரிலும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வேதப்பூர்வ அறிவுரை கொடுப்பதை அவசியமென கண்டிருக்கிறது. சில நாடுகளில் அதிக மணமகள்-விலை கேட்பது சர்வசாதாரணமாய் இருக்கிறது, ஆனால் பேராசைக்காரரும் அபகரிப்பவர்களும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்பதை பைபிள் தெளிவாக எச்சரிக்கிறது. (1 கொரிந்தியர் 6:9, 10) இப்படிப்பட்ட அறிவுரைக்கு பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நன்கு பிரதிபலித்தது யூதர்கள் தங்களுடைய ஏழ்மை சகோதரர்களை சுரண்டிய பாவத்தை எவ்வாறு உணர்ந்தார்கள் என்பதை நினைவுக்கு கொண்டுவருகிறது.
எருசலேமின் மதிற்சுவர் கட்டிமுடிக்கப்பட்டது
19, 20. (அ) எருசலேமின் மதிற்சுவரை கட்டிமுடித்தது மத விரோதிகள்மீது என்ன விளைவை ஏற்படுத்தியது? (ஆ) அநேக நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் பெற்ற வெற்றி என்ன?
19 எல்லா எதிர்ப்புகளின் மத்தியிலும், 52 நாட்களில் எருசலேமின் மதிற்சுவர் கட்டிமுடிக்கப்பட்டது. விரோதிகளின்மீது இது என்ன பாதிப்பை ஏற்படுத்தியது? நெகேமியா கூறினார்: “எங்கள் பகைஞர் எல்லாரும் அதைக் கேட்டபோது, எங்களுக்குச் சுற்றிலுமிருந்த புறஜாதியார் அனைவரும் பயந்து மிகவும் தைரியமிழந்து இந்த வேலை எங்கள் கடவுளால் செய்யப்பட்டதென்று அறிந்துகொண்டார்கள்.”—நெகேமியா 6:16, தி.மொ.
20 இன்று, கடவுளுடைய வேலைக்கு விரோதிகளிடமிருந்து எதிர்ப்பு பல்வேறு வழிகளிலும் இடங்களிலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. என்றபோதிலும், யெகோவாவின் சாட்சிகளை எதிர்ப்பதனால் பலன் ஒன்றுமில்லை என்பதை லட்சக்கணக்கான மக்கள் புரிந்திருக்கின்றனர். உதாரணமாக, நாஸி ஜெர்மனியிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் பிரசங்க வேலையை நிறுத்துவதற்கு நடந்த கடந்தகால முயற்சிகளை சிந்தித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன, ‘இந்த வேலை கடவுளால் செய்யப்படுகிறதென்பதை’ இப்பொழுது ஜனங்கள் அநேகர் ஒப்புக்கொள்கின்றனர். அப்படிப்பட்ட நாடுகளில், யெகோவாவின் வணக்கத்தை ‘மகிழ்ச்சியின் மகுடமாக்கிய’ உண்மையுள்ள முன்னோர்களுக்கு இது எப்பேர்ப்பட்ட பலனாக இருந்திருக்கிறது!
21. அடுத்த கட்டுரையில் என்ன முக்கியமான சம்பவங்கள் சிந்திக்கப்படும்?
21 அடுத்த கட்டுரையில், திரும்பக் கட்டப்பட்ட எருசலேமின் மதிற்சுவருக்கு குதூகல திறப்பு விழா நடத்த வழிநடத்திய முக்கிய சம்பவங்களை நாம் மறுபார்வை செய்வோம். முழு மனிதவர்க்கத்தினருடைய நன்மைக்காக மிகவும் சிறப்புமிக்க நகரம் கட்டி முடிக்கப்படுவது எவ்வாறு நெருங்கி வருகிறது என்பதையும் நாம் சிந்திப்போம்.
ஞாபகமிருக்கிறதா?
◻ எஸ்றாவும் மற்றவர்களும் எருசலேமை குறித்து எவ்வாறு மகிழ்ச்சியடைந்தார்கள்?
◻ அநேக யூதர்கள் செய்த என்ன தவறுகளைத் திருத்துவதற்கு எஸ்றாவும் நெகேமியாவும் உதவிசெய்தனர்?
◻ எஸ்றாவையும் நெகேமியாவையும் உட்படுத்திய இந்த விவரப்பதிலிருந்து நீங்கள் என்ன பாடங்களை கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 15-ன் படம்]
நெகேமியாவுக்கு எருசலேமே மகிழ்ச்சியின் மகுடமாயிருந்தது, சூசானில் அவர் செய்துவந்த கௌரவமான வேலை அல்ல
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
நெகேமியாவைப் போல, மிக முக்கியமான நம்முடைய பிரசங்க வேலையில் யெகோவாவின் வழிநடத்துதலுக்காகவும் பலத்திற்காகவும் ஜெபிக்க வேண்டும்