மற்றவர்களை கனம் பண்ணுங்கள்
“கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.” —ரோமர் 12:10.
1, 2. (ஆ) மனத்தாழ்மையைக் காட்டுவதற்கு நாம் எதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்? (ஆ) ‘கனம்’ என்ற சொல்லை பைபிள் எவ்வகையில் அடிக்கடி பயன்படுத்துகிறது, கனம்பண்ணுவதை யார் எளிதாய் காண்கிறார்கள்?
“நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” (1 பேதுரு 5:5) கடவுளுடைய வார்த்தையிலுள்ள இந்த அறிவுரையை நமது முந்தைய கட்டுரை வலியுறுத்திக் கூறியது. நாம் மனத்தாழ்மையை அணிந்துகொள்வதற்கு ஒரு வழி, மற்றவர்களை கனம் பண்ணுவதைப் பழக்கமாக்கிக் கொள்வதேயாகும்.
2 “கனம்” என்ற சொல் நாம் மற்றவர்களுக்குக் காட்ட வேண்டிய மதிப்பு, மரியாதை, பரிவு ஆகியவற்றை குறிப்பிடுவதற்கு பைபிளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. மற்றவர்களிடம் தயவாக இருப்பதன் மூலமும், அவர்களை மதிப்பதன் மூலமும், அவர்களுடைய கருத்தைச் செவிகொடுத்துக் கேட்பதன் மூலமும், அவர்கள் நம்மிடம் நியாயமாய்க் கேட்பவற்றை நிறைவேற்ற ஆயத்தமாக இருப்பதன் மூலமும் நாம் மற்றவர்களை கனம்பண்ணுகிறோம். மனத்தாழ்மையாய் இருப்பவர்களுக்கு இது கஷ்டமான ஒன்றில்லை. இருதயத்தில் அகந்தையுள்ளவர்களுக்கோ மெய்யான மதிப்பு காட்டுவது கஷ்டம். அதற்குப் பதில், முகஸ்துதியால் ஆதரவையும் அனுகூலங்களையும் பெறுவதற்கு முயற்சி செய்வார்கள்.
மனிதர்களை யெகோவா கனம் பண்ணுகிறார்
3, 4. எவ்வாறு யெகோவா ஆபிரகாமை கனம்பண்ணினார், ஏன்?
3 கனம் பண்ணுவதில் யெகோவாதாமே முன்மாதிரி வைக்கிறார். சுதந்திரமாக செயல்படும் மனிதரை அவர் படைத்தார். அவர்களை வெறும் ரோபட்டைப் போல் நடத்துகிறதில்லை. (1 பேதுரு 2:16) உதாரணமாக, ஒழுக்கங்கெட்ட சோதோமை அழிக்கப்போவதைப் பற்றி ஆபிரகாமிடம் கடவுள் சொன்னபோது, ஆபிரகாம் இவ்வாறு கேட்டார்: “துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்களினிமித்தம் இரட்சியாமல் அந்த நகரத்தை அழிப்பீரோ?” அதற்கு யெகோவா, 50 நீதிமான்களினிமித்தம் அந்த நகரத்தைத் தாம் அழிக்காமல் விட்டுவிடுவதாக பதிலளித்தார். பின்பு ஆபிரகாம் தொடர்ந்து மனத்தாழ்மையுடன் மன்றாடினார். ஒருவேளை 45? 40? 30? 20? 10? பேர் மாத்திரமே இருந்தால்? என படிப்படியாய் கேட்டார். 10 நீதிமான்கள் மாத்திரமே அங்கு இருந்தாலும் சோதோமை தாம் அழிக்காமல் விட்டுவிடுவதாக யெகோவா ஆபிரகாமுக்கு உறுதிகூறினார்.—ஆதியாகமம் 18:20-33.
4 சோதோமில் பத்து நீதிமான்களுங்கூட இல்லை என்பது யெகோவாவுக்குத் தெரியும். என்றபோதிலும் ஆபிரகாமின் கருத்துக்குச் செவிகொடுத்துக் கேட்டு, மதிப்புடன் அவரை நடத்துவதன் மூலம் ஆபிரகாமை கனம்பண்ணினார். ஏன்? ஏனெனில், ஆபிரகாம் “யெகோவாவில் விசுவாசம் வைத்தான்; அவர் அதை அவனுக்கு நீதியாக எண்ணினார்.” ஆபிரகாம் “தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.” (ஆதியாகமம் 15:6, தி.மொ.; யாக்கோபு 2:23) மேலும், ஆபிரகாம் மற்றவர்களைக் கனம்பண்ணியதையும் யெகோவா கண்டார். ஆபிரகாமின் மேய்ப்பர்களுக்கும் அவருடைய சகோதரனின் மகனான லோத்தின் மேய்ப்பர்களுக்கும் இடையே பிராந்தியத்தைக் குறித்த ஒரு வாக்குவாதம் எழும்பினது. அப்போது தனக்கு விருப்பமான பகுதியை முதலாவதாக தெரிந்துகொள்ளும்படி லோத்திடம் ஆபிரகாம் சொன்னதன் மூலம் அவர் லோத்தை கனம்பண்ணினார். லோத்து, மிகச் செழுமையானதென்று தான் கருதின நிலப்பகுதியைத் தெரிந்துகொண்டான், ஆபிரகாம் வேறு இடத்திற்குச் சென்றார்.—ஆதியாகமம் 13:5-11.
5. எவ்வாறு லோத்தை யெகோவா கனம்பண்ணினார்?
5 அவ்வாறே நீதிமானாகிய லோத்தை யெகோவா கனம்பண்ணினார். சோதோம் அழிக்கப்படுவதற்கு முன்பாக லோத்தினிடம் மலைப் பகுதிக்கு ஓடிப்போகும்படி சொன்னார். எனினும், லோத்து தனக்கு அங்கு செல்ல விருப்பமில்லை என்று சொன்னான். அருகிலிருந்த சோவார் பட்டணம் அழிக்கப்படவிருந்த பகுதியில் இருந்தபோதிலும், லோத்து அங்கு செல்ல விரும்பினான். யெகோவா லோத்தினிடம் சொன்னார்: “நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம் பண்ணினேன்.” லோத்து கேட்டுக்கொண்டதை செய்வதன்மூலம் உண்மையுள்ள லோத்தை யெகோவா கனம்பண்ணினார்.—ஆதியாகமம் 19:15-22; 2 பேதுரு 2:6-9.
6. எவ்வாறு மோசேயை யெகோவா கனம்பண்ணினார்?
6 தம்முடைய ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து வழிநடத்தவும், அவர்களை போகவிடும்படி பார்வோனிடம் பேசவும், யெகோவா மோசேயை எகிப்துக்குத் திரும்ப அனுப்பினபோது, மோசே இவ்வாறு பதிலளித்தார்: “ஆண்டவரே, . . . நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்.” அப்போது யெகோவா மோசேக்கு உறுதியளித்து: “நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.” ஆனால் மோசே இன்னும் தயங்கினார். அப்போது யெகோவா, மோசேக்குத் திரும்பவும் நம்பிக்கை அளித்து, மோசேயின் சகோதரனாகிய ஆரோனை பேச்சாளனாக அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார்.—யாத்திராகமம் 4:10-16.
7. மற்றவர்களைக் கனம்பண்ணுவதற்கு ஏன் யெகோவா மனமுள்ளவராக இருந்தார்?
7 இத்தகைய எல்லா சந்தர்ப்பங்களிலும் யெகோவா மற்றவர்களை, முக்கியமாய் தம்மைச் சேவிப்போரை கனம்பண்ண மனமுள்ளவராக இருந்தார். அவர்கள் கேட்டது, ஒருவேளை யெகோவாவின் நோக்கத்திலிருந்து வேறுபட்டிருந்தாலும் அவர்களுடைய வேண்டுகோளுக்கு செவிகொடுத்து, அவை தம்முடைய நோக்கத்தைக் கெடுக்காதவரையில் அவற்றிற்கு இணங்கினார்.
இயேசு மற்றவர்களை கனம்பண்ணினார்
8. பெரும்பாடு அனுபவித்த ஒரு ஸ்திரீயை இயேசு எவ்வாறு கனம்பண்ணினார்?
8 மற்றவர்களை கனம்பண்ணுவதில் யெகோவாவின் மாதிரியை இயேசு பின்பற்றினார். ஒரு சமயம், 12 ஆண்டுகளாக மாதவிடாயால் பெரும்பாடு அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு ஸ்திரீ ஒரு ஜனக்கூட்டத்தில் இருந்தாள். வைத்தியர்கள் அவளை சுகப்படுத்த முடியவில்லை. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி அவள் சடங்காசார முறையில் தீட்டுள்ளவளாக கருதப்பட்டாள், அங்கு அவள் வந்திருக்கக்கூடாது. எனினும், அவள் இயேசுவின் பின்னால் வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள், சுகமடைந்தாள். இயேசு நியாயப்பிரமாணத்தின் நுணுக்கங்களை கறாராய் பின்பற்றி, அவளுடைய செயலுக்காக கடிந்துகொள்ளவில்லை. மாறாக, சூழ்நிலைமைகளை அறிந்தவராய் அவளை கனம்பண்ணி இவ்வாறு சொன்னார்: “மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு.”—மாற்கு 5:25-34; லேவியராகமம் 15:25-27.
9. ஒரு புறஜாதி ஸ்திரீயை இயேசு எவ்வாறு கனம்பண்ணினார்?
9 மற்றொரு சமயத்தில், ஒரு கானானிய ஸ்திரீ, இயேசுவை நோக்கி: “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்” என்று சொன்னாள். தாம் இஸ்ரவேல் ஜனத்தினிடம் அனுப்பப்பட்டார், புஜாதியாரிடம் அல்ல என்பதை அறிந்தவராய் இயேசு: “பிள்ளைகளின் [இஸ்ரவேலரின்] அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் [புறஜாதியாருக்கு] போடுகிறது நல்லதல்ல என்றார்.” அந்த ஸ்திரீ பதிலளித்து: “ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.” அப்போது இயேசு: “ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார்.” அவளுடைய மகள் சுகமடைந்தாள். இந்தப் புறஜாதி ஸ்திரீயினுடைய விசுவாசத்தின் காரணமாக இயேசு அவளை கனம்பண்ணினார். மூர்க்கமுள்ள நாய்களை அவர் குறிப்பிடாமல், “நாய்க்குட்டிகள்” என்ற பதத்தை அவர் பயன்படுத்தினதும்கூட, அந்தக் காரியத்தைக் கனிவுள்ளதாக்கி, அவருடைய இரக்கத்தை வெளிப்படுத்தினது.—மத்தேயு 15:21-28.
10. சக்திவாய்ந்த என்ன பாடத்தை இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்தார், அது ஏன் அவசியமாக இருந்தது?
10 ‘நான்-முதல்’ என்ற மனப்பான்மை தம்முடைய சீஷர்களுக்கு இன்னும் இருந்ததால், மனத்தாழ்மையாக இருப்பதற்கும் மற்றவர்களை கனம்பண்ணுவதற்குமான தேவையைப் பற்றி இயேசு அவர்களுக்கு தொடர்ந்து கற்பித்தார். ஒரு சமயத்தில் அவர்களுக்குள் ஒரு தர்க்கம் ஏற்பட்டு முடிந்த பின்பு, “எதைக் குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள்?” என்று இயேசு கேட்டார். அவர்கள் மௌனமாக இருந்தார்கள். ஏனெனில், ‘அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று . . . தர்க்கம்பண்ணியிருக்கிறார்கள்.’ (மாற்கு 9:33, 34) அவர் மரித்ததற்கு முந்தின இரவில்தானே, “தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.” (லூக்கா 22:24) ஆகையால், பஸ்கா சாப்பாட்டின்போது, இயேசு “பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவ . . . தொடங்கினார்.” எப்பேர்ப்பட்ட சக்திவாய்ந்த பாடம்! இயேசு கடவுளுடைய குமாரனாக இருந்தார், சர்வலோகத்தில் யெகோவாவுக்கு அடுத்த ஸ்தானத்தை வகித்தார். எனினும், சீஷர்களின் பாதங்களைக் கழுவுவதன்மூலம், மதிப்புவாய்ந்த ஒரு பாடத்தை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் சொன்னார்: “நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.”—யோவான் 13:-5-15.
பவுல் கனம்பண்ணினார்
11, 12. பவுல் ஒரு கிறிஸ்தவரான பின்பு என்ன கற்றார், பிலேமோனின் சம்பந்தமாக அந்தப் பாடத்தை எவ்வாறு பொருத்திப் பயன்படுத்தினார்?
11 அப்போஸ்தலன் பவுல், கிறிஸ்துவைப் பின்பற்றின மற்றவர்களை கனம்பண்ணினார். (1 கொரிந்தியர் 11:1) “மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை. . . . மாறாக, பால் கொடுக்கிற தாயானவள் தன் குழந்தைகளைப் பேணுவதைப் போல உங்களோடு கனிவுடன் நடந்துகொண்டோம்” என்று அவர் சொன்னார்: (1 தெசலோனிக்கேயர் 2:6, 7, NW) பால் கொடுக்கிற தாய் தன் சிறு பிள்ளைகளைக் கவனித்துக் காக்கிறாள். பவுல் கிறிஸ்தவரான பின்பு, மனத்தாழ்மையாயிருக்கக் கற்று, தன்னுடைய உடன் கிறிஸ்தவர்களைக் கனிவாக நடத்துவதன்மூலம் அவர்களை கனம்பண்ணினார். அவ்வாறு செய்ததில், அவர்களுடைய சுயாதீனத்தையும் மதித்தார். இது, ரோமில் அவர் கைதியாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தால் மெய்ப்பித்துக் காட்டப்பட்டது.
12 வீட்டைவிட்டு ஓடிவிட்ட ஒநேசிமு என்ற ஓர் அடிமை, பவுலின் போதகத்திற்குச் செவிகொடுத்தான். அவன் கிறிஸ்தவனாகவும், அதோடுகூட பவுலின் நண்பனாகவும் ஆனான். அந்த அடிமையின் எஜமானரான பிலேமோனும் கிறிஸ்தவராக இருந்தார். இவர் ஆசியாவில் வாழ்ந்தார். பிலேமோனுக்கு எழுதின ஒரு கடிதத்தில், ஒநேசிமு தனக்கு எவ்வளவு உதவியாக இருந்தான் என்பதைப் பற்றி பவுல் எழுதி, இவ்வாறு சொன்னார்: “அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றிருந்தேன்.” எனினும் பவுல், ஒநேசிமுவை பிலேமோனிடம் திரும்ப அனுப்பினார், ஏனெனில் அவர் எழுதினதாவது: “ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றையும் செய்ய எனக்கு மனதில்லை.” பவுல் தான் ஒரு அப்போஸ்தலனாக இருந்ததால் தன் அதிகாரத்தை இவ்விஷயத்தில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒநேசிமுவை ரோமில் தன்னிடம் வைத்துக்கொள்ளும்படி கேட்காததன் மூலம் பிலேமோனை கனம்பண்ணினார். மேலும், ஒநேசிமுவை, ‘அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும்’ நடத்துவதன்மூலம் கனம்பண்ணும்படி பிலேமோனைப் பரிந்து கேட்டார்.—பிலேமோன் 13-16.
நம்முடைய நாளில் கனம்பண்ணுதல்
13. நாம் என்ன செய்யும்படி ரோமர் 12:10 நமக்கு சொல்லுகிறது?
13 கடவுளுடைய வார்த்தை இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.” (ரோமர் 12:10) மற்றவர்கள் நம்மை முதலில் கனம்பண்ண வேண்டும் என்று காத்திருக்கக்கூடாது, நாம் முதலில் செயல்பட வேண்டும் என்று இது அர்த்தப்படுகிறது. “ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:24; 1 பேதுரு 3:8, 9) இதன்படி, யெகோவாவின் ஊழியர்கள், குடும்ப வட்டாரத்திலுள்ளவர்களையும் சபையிலுள்ள உடன் கிறிஸ்தவர்களையும், சபைக்குப் புறம்பேயுள்ளவர்களையும்கூட கனம்பண்ணுவதற்கான வாய்ப்புகளை தேடுகிறார்கள்.
14. கணவனும் மனைவியும் எவ்வாறு ஒருவரையொருவர் கனம்பண்ணலாம்?
14 பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறார். ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறான்.’ (1 கொரிந்தியர் 11:3) கிறிஸ்து சபையை நடத்தினதுபோல் புருஷன் தன் மனைவியை நடத்த வேண்டும் என்ற கடமையை அவனுக்கு யெகோவா அளித்திருக்கிறார். ‘மனைவி பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், அவளுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யும்படி’ 1 பேதுரு 3:7-ல் புருஷனுக்கு பைபிள் கட்டளையிடுகிறது. தன் மனைவிக்குச் செவிகொடுத்துக் கேட்டு, அவளுடைய யோசனைகளைக் கவனத்தில் ஏற்க மனமுள்ளவனாயிருப்பதன் மூலம் அவன் இவ்வாறு செய்யலாம். (ஆதியாகமம் 21:12) பைபிள் நியமங்கள் மீறப்படும் ஆபத்து எதுவும் இல்லையெனில், அவளுடைய ஆலோசனைக்கு முதலிடம் கொடுக்கலாம். அவன் அவளுக்கு உதவியாக இருந்து, அவளை தயவாக நடத்த வேண்டும். இதனால், மனைவி தன்னுடைய பங்கில் ‘தன் புருஷனிடம் ஆழ்ந்த மரியாதையுள்ளவளாக இருக்க வேண்டும்.’ (எபேசியர் 5:33, NW) அவன் சொல்வதற்குச் செவிகொடுக்கிறாள், எப்போதும் தன் போக்கிலேயே செல்ல முயற்சி செய்கிறதில்லை. அவனை மதிப்புக் குறைவாகப் பேசுவதோ அல்லது ஓயாது குறை கண்டுபிடிப்பதோ இல்லை. சில அம்சங்களில் மேம்பட்ட திறமைகள் அவளுக்கு இருந்தாலும்கூட, தன் கணவனுக்கு மேலாக மேம்பட்டு நிற்க முயற்சி செய்யாமல் மனத்தாழ்மையைக் காட்டுகிறாள்.
15. முதியோரை எவ்வாறு கனம்பண்ண வேண்டும், அவர்கள் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
15 கிறிஸ்தவ சபையில் முதியோர்கள் முக்கியமாய் கனத்தைப் பெறுவதற்கு தகுதியானவர்கள். ‘நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் [அல்லது, முதிர்வயதுள்ளவள்] முகத்தைக் கனம்பண்ணு.’ (லேவியராகமம் 19:32) யெகோவாவை பல ஆண்டுகள் உண்மையாக சேவித்தவர்களின் காரியத்தில் இது முக்கியமாய் உண்மையாக இருக்கிறது. எனெனில், “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.” (நீதிமொழிகள் 16:31) கண்காணிகள் தங்களைவிட முதியோராக இருக்கிற உடன் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த மதிப்புக்கொடுப்பதன்மூலம் முன்மாதிரி வைக்க வேண்டும். நிச்சயமாகவே, முதியோரும்கூட இளைஞருக்கு, முக்கியமாய் மந்தையை மேய்க்கும் பொறுப்பில் பங்குகொள்வோருக்கு, மதிப்பைக் காட்டுவது அவசியம்.—1 பேதுரு 5:2, 3.
16. எவ்வாறு பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவரையொருவர் கனம்பண்ண வேண்டும்?
16 இளைஞர்கள் தங்கள் பெற்றோரை கனம்பண்ண வேண்டும்: “பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாம் கற்பனையாயிருக்கிறது.” அதேபோல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கனம்பண்ண வேண்டும். ஏனெனில் “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” என சொல்லப்பட்டிருக்கிறது.—எபேசியர் 6:1-4; யாத்திராகமம் 20:12.
17. ‘இரட்டிப்பான கனம்’ செலுத்தப்படுவதற்குப் பாத்திரர் யார்?
17 மேலும், சபைக்குச் சேவை செய்வதில் கடினமாய் உழைப்போரையுங்கூட கனம்பண்ண வேண்டும்: “நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.” (1 தீமோத்தேயு 5:17) எபிரெயர் 13:17-ல் பின்வருமாறு சொல்லப்பட்டிருப்பதைச் செய்வது, நாம் இவ்வாறு கனம்பண்ணுவதற்கு ஒரு வழி: ‘உங்களை நடத்துகிறவர்களுக்கு . . . கீழ்ப்படிந்து அடங்குங்கள்.’
18. சபைக்குப் புறம்பேயுள்ளவர்களையும் நாம் என்ன செய்ய வேண்டும்?
18 சபைக்குப் புறம்பேயுள்ளவர்களை நாம் கனம்பண்ண வேண்டுமா? ஆம், உதாரணமாக, நமக்கு இவ்வாறு கட்டளை கொடுக்கப்படுகிறது: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்.” (ரோமர் 13;1) இவர்கள் உலகப்பிரகாரமான ஆளுநர்கள். இவர்கள் இடத்தைத் தம்முடைய ராஜ்யம் ஏற்கும் வரையில் அதிகாரம் செலுத்தும்படி யெகோவா இவர்களை அனுமதித்திருக்கிறார். (தானியேல் 2:44) ஆகையால், “யாவருக்கும் செலுத்த வேண்டிய கடமைகளை” நாம் செலுத்துகிறோம். “எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும்” செலுத்துகிறோம். ‘பயப்பட வேண்டியவருக்குப் பயப்படுகிறோம், கனம்பண்ண வேண்டியவரைக் கனம்பண்ணுகிறோம்.’ (ரோமர் 13:7) நாம் ஆண்களும் பெண்களுமான ‘எல்லாரையும் கனம்பண்ண’ வேண்டும்.—1 பேதுரு 2:17.
19. நாம் எவ்வாறு மற்றவர்களுக்கு ‘நன்மை செய்து’ அவர்களை கனம்பண்ணலாம்?
19 சபைக்குப் புறம்பேயுள்ளவர்களையுங்கூட நாம் கனம்பண்ண வேண்டும் என்பது உண்மையாக இருக்கையில், கடவுளுடைய வார்த்தை அறிவுறுத்துவதை கவனியுங்கள்: “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) நிச்சயமாகவே, நாம் மற்றவர்களுக்கு ‘நன்மைசெய்வதற்கான’ மிகச் சிறந்த வழி, அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளுக்குக் கவனம் செலுத்தி அவற்றைத் திருப்தி செய்வதேயாகும். (மத்தேயு 5:3) அப்போஸ்தலன் பவுலின் இந்த நினைப்பூட்டுதலுக்குச் செவிகொடுப்பதன்மூலம் இதை நாம் செய்யலாம்: “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.” சாட்சிகொடுப்பதற்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் சாதுரியத்துடன் பயன்படுத்தி ‘நம்முடைய ஊழியத்தை முழுமையாய் நிறைவேற்றுகையில்,’ எல்லாருக்கும் நன்மை செய்வது மட்டுமல்லாமல் அவர்களை கனம்பண்ணுகிறவர்களாகவும் இருக்கிறோம்.—2 தீமோத்தேயு 2:15; 4:5.
யெகோவாவை கனம்பண்ணுதல்
20. பார்வோனுக்கும் அவனுடைய சேனைக்கும் என்ன நேரிட்டது, ஏன்?
20 யெகோவா தம்முடைய சிருஷ்டிகளை கனம்பண்ணுகிறார். அப்படியானால், நம் பங்கில் நாம் அவரை கனம்பண்ணுவது நியாயமாக இருக்கிறது. (நீதிமொழிகள் 3:9; வெளிப்படுத்துதல் 4:11) யெகோவாவின் வார்த்தை இவ்வாறும் கூறுகிறது: “என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள்.” (1 சாமுவேல் 2:30) கடவுளுடைய ஜனத்தை அனுப்பிவிடும்படி எகிப்தின் பார்வோனுக்குச் சொல்லப்பட்டபோது, அவன் ஆணவத்துடன் இவ்வாறு பதிலளித்தான்: “யெகோவா யார்? நான் ஏன் அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து இஸ்ரவேலை போகவிட வேண்டும்?” (யாத்திராகமம் 52, தி.மொ.) இஸ்ரவேலரை அழிக்கும்படி பார்வோன் தன் சேனைகளை அனுப்பியபோது, இஸ்ரவேலர் கடந்து செல்வதற்காக செங்கடல் பிரிந்து நிற்கும்படி யெகோவா செய்தார். ஆனால் எகிப்தியர் அவர்களை பின்தொடர்ந்தபோது அதே கடலைக்கொண்டு எகிப்தியர்களை மூழ்கடித்தார். “பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே [யெகோவா] தள்ளிவிட்டார்.” (யாத்திராகமம் 14:26-28; 15:4) ஆகையால், யெகோவாவை கனம்பண்ண மறுத்த பார்வோனின் ஆணவம் அவனை நாசகரமான முடிவுக்கு வழிநடத்தினது.—சங்கீதம் 136:15.
21. யெகோவா ஏன் பெல்ஷாத்சாருக்கு விரோதமாக இருந்தார், அதன் விளைவு என்ன?
21 பாபிலோனின் அரசனாகிய பெல்ஷாத்சார் யெகோவாவை கனம்பண்ண மறுத்தார். ஒரு விருந்தின்போது குடிபோதையில், எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பரிசுத்த பொற்பாத்திரங்களையும் வெள்ளி பாத்திரங்களையும் திராட்ச மதுபானம் குடிப்பதற்கு பயன்படுத்தி, யெகோவாவை ஏளனம் பண்ணினார். இவ்வாறு செய்கையில் தன் புறமத தெய்வங்களைப் புகழ்ந்தார். ஆனால், யெகோவாவின் ஊழியனாகிய தானியேல் அவருக்கு இவ்வாறு சொன்னார்: “நீரோவென்றால், . . . உமது இருதயத்தைத் தாழ்த்தாமல், பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்.” அதே இரவில் பெல்ஷாத்சார் கொல்லப்பட்டார், அவருடைய ராஜ்யம் அவரிடமிருந்து நீக்கப்பட்டது.—தானியேல் 5:22-31.
22. (அ) இஸ்ரவேலின் தலைவர்கள்மீதும் அவர்களுடைய ஜனங்களின்மீதும் யெகோவாவின் கோபம் ஏற்பட்டது ஏன்? (ஆ) யெகோவா யாருக்கு தயவு காட்டினார், அதன் பலன் என்ன?
22 பொ.ச. முதல் நூற்றாண்டில், பொதுமக்களிடம் அரசனாகிய ஏரோது உரையாற்றிக்கொண்டிருந்தான், அப்போது அவர்கள்: “இது மனுஷ சத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.” தற்பெருமை வாய்ந்த அந்த அரசன் அதை மறுக்கவில்லை, அந்த மகிமையை விரும்பினான். அப்போது, “அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்.” (அப்போஸ்தலர் 12:21-23) ஏரோது யெகோவாவை அல்ல, தன்னையே கனம் பண்ணிக்கொண்டான், அதனால் சாகும்படி அடிக்கப்பட்டான். அக்கால மதத் தலைவர்கள், யெகோவாவின் குமாரனாகிய இயேசுவைக் கொல்லும்படி சதிசெய்ததன்மூலம் கடவுளை கனவீனம் பண்ணினார்கள். இயேசு சத்தியத்தைப் போதித்தார் என்று அதிபதிகள் சிலர் அறிந்திருந்தார்கள், ஆனால் அவரைப் பின்பற்றவில்லை; ஏனெனில், “அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.” அந்த ஜனம், யெகோவாவையோ அவர் நியமித்த பிரதிநிதியாகிய இயேசுவையோ கனம்பண்ணவில்லை. இதன் விளைவாக, யெகோவாவும் அவர்களை கனம்பண்ணாமல் கைவிட்டார். ஆகையால், அவர்களும் அழிந்தனர் அவர்களுடைய ஆலயமும் அழிந்தது. ஆனால், தம்மையும் தம்முடைய குமாரனையும் கனம் பண்ணினவர்களை உயிரோடு பாதுகாத்து வைத்தார்.—மத்தேயு 23:38; லூக்கா 21:20-22.
23. கடவுளுடைய புதிய உலகத்தில் வாழ்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (சங்கீதம் 37:9-11; மத்தேயு 5:5)
23 இந்தத் தற்போதைய ஒழுங்குமுறை அழிக்கப்பட்ட பின்பு, கடவுளுடைய புதிய உலகத்தில் வாழ்வதற்கு விரும்புகிற எல்லாரும், கடவுளையும் அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவையும் கனம்பண்ணவும் அவர்களுக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். (யோவான் 5:22, 23; பிலிப்பியர் 2:9-11) அவ்வாறு கனம் பண்ணாதவர்கள், “பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்.” மறுபக்கத்தில், கடவுளையும் அவருடைய குமாரனையும் கனம் பண்ணுகிறவர்களும் அவர்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களுமான நேர்மையானவர்கள் “பூமியிலே வாசம்பண்ணுவார்கள்.”—நீதிமொழிகள் 2:21, 22.
ஞாபகத்திற்கு
◻ மற்றவர்களை கனம்பண்ணுதல் என்பதன் அர்த்தம் என்ன, எவ்வாறு யெகோவா இதைச் செய்தார்?
◻ எவ்வாறு இயேசுவும் பவுலும் மற்றவர்களை கனம் பண்ணினார்கள்?
◻ கனம் பண்ணுவதற்குத் தகுதியுள்ளவர்களாக நம்முடைய நாளில் யார் இருக்கிறார்கள்?
◻ நாம் ஏன் யெகோவாவையும் இயேசுவையும் கனம்பண்ண வேண்டும்?
[பக்கம் 17-ன் படம்]
ஆபிரகாமின் மன்றாட்டுக்குச் செவிகொடுப்பதன்மூலம் யெகோவா அவரை கனம்பண்ணினார்
[பக்கம் 18-ன் படம்]
வெற்றிகரமான மணவாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் கனம் பண்ணுகிறார்கள்