மனித துன்பத்திற்கு காரணம்
“ஏன் கடவுளே, ஏன்?” இந்தத் தலைப்பு செய்திதான் ஆசியா மைனரை துவம்சம் பண்ணிய பூமியதிர்ச்சிக்குப் பிறகு பரவலாக விநியோகிக்கப்பட்ட ஒரு செய்தித்தாளில் கொட்டை எழுத்துக்களில் போடப்பட்டிருந்தது. காயமடைந்த தன் மகளை இடிந்துபோன வீட்டிலிருந்து பித்துப்பிடித்த நிலையில் அப்பா சுமந்து வரும் படம் அதில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
போர்கள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், இயற்கை சேதங்கள் ஆகியவை அளவிலா அவஸ்தையையும் கணக்கிலா கண்ணீரையும் எண்ணற்ற சாவையும் உண்டாக்கியிருக்கின்றன. போதாக்குறைக்கு கற்பழிப்பு, குழந்தை துஷ்பிரயோகம், இன்னும் பல குற்றச் செயல்களுக்கு பலியாகிறவர்களுடைய வேதனை வேறு. சாலை விபத்துக்களால் ஏற்படும் எண்ணற்ற மரணங்களையும் படுகாயங்களையும் சற்று எண்ணிப் பாருங்கள். வியாதியாலும் வயோதிபத்தாலும் அன்பானவர்களுடைய இறப்பாலும் கோடாகோடி மக்கள் அனுபவிக்கும் கடுந்துயரத்தையும் சற்று கற்பனைசெய்து பாருங்கள்.
20-ம் நூற்றாண்டு வரலாறு காணாத துன்பத்தை கண்டது. 1914 முதல் 1918 வரை நடந்த முதல் உலகப் போர் சுமார் ஒரு கோடி படை வீரர்களை பலிவாங்கியது. இதே எண்ணிக்கையான பொதுமக்களின் உயிரையும் இது உறிஞ்சிவிட்டது என சரித்திராசிரியர்கள் சிலர் கூறுகிறார்கள். இரண்டாம் உலகப் போரில் சுமார் ஐந்து கோடி வீரர்களும் பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள். பாதுகாப்பற்ற லட்சோப லட்ச வயோதிபரும் பெண்டிரும் சிறுவர் சிறுமியரும் இதில் அடங்குவர். கடந்த நூற்றாண்டு முழுவதும் இன்னும் பல கோடிக்கணக்கானோர் இனப் படுகொலைக்கும் புரட்சிக்கும் இனக் கலவரத்திற்கும் பசி பட்டினிக்கும் பலியானார்கள். “துக்கத்தில் ஆழ்த்தும்” இப்படிப்பட்ட மரணங்கள் 18 கோடிக்கும் அதிகமானோருக்கு ஏற்பட்டதாக இருபதாம் நூற்றாண்டின் சரித்திர பதிவு (ஆங்கிலம்) கணக்கிடுகிறது.
1918/19-ல் வந்த ஸ்பானிஷ் ஜுரம் இரண்டு கோடி மக்களை வாரிக்கொண்டு போனது. கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் 1.9 கோடி பேர் எய்ட்ஸ் நோய்க்கு இரையானார்கள், இப்பொழுது சுமார் 3.5 கோடி பேரிடம் இந்நோய்க்கான வைரஸ்கள் தொற்றியுள்ளன. லட்சக்கணக்கான பிள்ளைகள் அநாதையாக தவிக்க விடப்பட்டிருக்கிறார்கள்—பெற்றோர் எய்ட்ஸ் நோய்க்கு பலியானதால் இந்தப் பரிதாப நிலை! வயிற்றில் வளரும்போதே எய்ட்ஸ் நோயை தாயார் தந்ததால் மரிக்கும் பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது.
பிற வழிகளிலும் பிள்ளைகளுக்கு அதிக துன்பம் இழைக்கப்படுகிறது. ஐக்கிய நாட்டு குழந்தைகள் நல அமைப்பு (யுனிசெஃப்) கொடுத்த தகவலை மேற்கோள் காண்பித்து, 1995-ன் முடிவில், இங்கிலாந்தில் வெளியாகும் மான்செஸ்டர் கார்டியன் வீக்லி என்ற செய்தித்தாள் இவ்வாறு குறிப்பிட்டது: “கடந்த பத்தாண்டில் நிகழ்ந்த போர்களில், 20 லட்சம் பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், 40 முதல் 50 லட்சம் பேர் ஊனமுற்றிருக்கிறார்கள், 1.2 கோடி பேர் வீடின்றி விடப்பட்டிருக்கிறார்கள், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அநாதையாக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது தங்களுடைய பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள், 1 கோடி பேர் மனோரீதியில் காயமுற்றிருக்கிறார்கள்.” பற்றாக்குறைக்கு வருஷத்திற்கு உலகமுழுவதும் 4 முதல் 5 கோடி கருக்கலைப்புகள்!
எதிர்காலத்தில்?
எதிர்காலத்தை அநேகர் கெட்ட அறிகுறியாகவே பார்க்கிறார்கள். விஞ்ஞானிகள் சிலர் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “மனிதனுடைய செயல்கள் இந்த உலகையே மாற்றிவிடலாம்; இதனால், நாம் இப்பொழுது காண்பதுபோல் உயிர்வாழும் இடமாக அது இராமற்போகலாம்.” அவர்கள் மேலும் கூறினார்கள்: “இப்பொழுதுகூட, சாப்பிட போதுமான உணவின்றி ஐந்தில் ஒருவர் வறுமையிலும் கொடிய வறுமையில் வாழ்கிறார், பத்தில் ஒருவர் கடும் ஊட்டச்சத்துக் குறைவால் அவதியுறுகிறார்.” “எதிர்காலத்தைக் குறித்து மனிதகுலத்தை எச்சரிப்பதற்கு” இச்சந்தர்ப்பத்தை அந்த விஞ்ஞானிகள் பயன்படுத்திக்கொண்டு, மேலும் இவ்வாறு சொன்னார்கள்: “மனிதருக்கு நேரிடும் பெரும் அவலத்தை தவிர்க்க வேண்டுமாகில், சரிசெய்ய முடியாத அளவுக்கு நமது பூகோள வீட்டை நாசமாக்கிவிடாமல் அதை பாதுகாக்க வேண்டுமாகில், இந்தப் பூமியையும் அதிலுள்ள உயிர்களையும் பராமரிப்பதில் பெரும் மாற்றம் தேவை.”
ஏன் இவ்வளவு துன்பத்தையும் அக்கிரமத்தையும் கடவுள் அனுமதித்திருக்கிறார்? இந்தச் சூழ்நிலையை அவர் எப்படி மாற்றுவார்? எப்பொழுது மாற்றுவார்?
[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]
மேலே, சக்கரநாற்காலி: UN/DPI Photo 186410C by P.S. Sudhakaran; மத்தியில், பட்டினியால் வாடும் பிள்ளைகள்: WHO/OXFAM; கீழே, எலும்பும் தோலுமான மனிதன்: FAO photo/B. Imevbore