மாபெரும் செயல்களுக்காக யெகோவாவை துதியுங்கள்!
“என் ஆத்துமா யெகோவாவை மகிமைப்படுத்துகிறது. . . . ஏனென்றால் வல்லமையுடையவர் மாபெரும் செயல்களை எனக்கு செய்தார்.”—லூக்கா 1:46-49, NW.
1. என்ன மாபெரும் செயல்களுக்காக யெகோவாவுக்குப் பொருத்தமான துதியை நாம் செலுத்த வேண்டும்?
யெகோவா மாபெரும் செயல்களை செய்வதால் துதிக்குப் பாத்திரர். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலை பெற்றதை விவரிக்கையில் தீர்க்கதரிசியாகிய மோசே இவ்வாறு அறிவித்தார்: “உங்கள் கண்களே யெகோவா செய்த மகத்தான செயல்களையெல்லாம் கண்டன.” (உபாகமம் 11:1-7, தி.மொ.) அவ்வாறே, இயேசு பிறக்கப்போவதைக் குறித்து காபிரியேல் தூதன் அறிவித்தபோது கன்னி மரியாள் இவ்வாறு சொன்னார்: “என் ஆத்துமா யெகோவாவை மகிமைப்படுத்துகிறது. . . . ஏனென்றால் வல்லமையுடையவர் மாபெரும் செயல்களை எனக்கு செய்தார்.” (லூக்கா 1:46-49, NW) எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர் பெற்ற விடுதலை, தம்முடைய அருமை குமாரனின் அற்புதமான பிறப்பு போன்ற மாபெரும் செயல்களுக்காக யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் அவரை புகழ்ந்து போற்றுகிறோம்.
2. (அ) கடவுளுடைய ‘நித்திய நோக்கம்’ கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு எதை குறிக்கிறது? (ஆ) பத்மு தீவில் யோவான் என்ன அனுபவத்தை பெற்றார்?
2 யெகோவாவின் மாபெரும் செயல்களில் பல, மேசியாவின் மூலமாகவும் அவருடைய ராஜ்ய ஆட்சியின் மூலமாகவும் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு ஆசீர்வாதத்தை பொழியும் அவருடைய ‘நித்திய நோக்கத்தோடு’ சம்பந்தப்பட்டிருக்கின்றன. (எபேசியர் 3:8-13, NW) இந்த நோக்கம் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்ததை, தரிசனத்தில் பார்ப்பதற்கு பரலோகத்தின் திறந்த வாசல் வழியாக முதிர்வயதான அப்போஸ்தலன் யோவான் அனுமதிக்கப்பட்டார். எக்காள சத்தம் போன்ற குரல் இவ்வாறு சொல்வதை கேட்டார்: “இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன்.” (வெளிப்படுத்துதல் 4:1) ‘கடவுளைப் பற்றி அறிவித்ததாலும் இயேசுவைப் பற்றி சாட்சி கொடுத்ததாலும்’ பத்மு தீவிற்கு ரோம பேரரசால் நாடுகடத்தப்பட்ட சமயத்தில் ‘இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய’ செய்தியை யோவான் பெற்றார். இந்த அப்போஸ்தலன் கண்டவையும் கேட்டவையும் கடவுளுடைய நித்திய நோக்கத்தை பற்றிய பெரும்பாலான விஷயங்களை வெளிப்படுத்தின. இந்த விஷயங்கள் உண்மை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ஆவிக்குரிய அறிவொளியையும் காலத்திற்கேற்ற ஊக்கமூட்டுதலையும் தருகின்றன.—வெளிப்படுத்துதல் 1:1, 9, 10.
3. தரிசனத்தில் யோவான் கண்ட 24 மூப்பர்கள் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்?
3 24 மூப்பர்கள் ராஜாக்களைப் போல் சிங்காசனங்களில் அமர்ந்திருந்ததையும் முடிசூடியிருந்ததையும் பரலோகத்தின் திறந்த வாசல் வழியாக யோவான் கண்டார். கடவுளுக்கு முன்பாக தாழ விழுந்து பணிந்து அவர்கள் இவ்வாறு கூறினர்: “[யெகோவாவே] தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” (வெளிப்படுத்துதல் 4:11) இந்த மூப்பர்கள், உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்; யெகோவா வாக்குத்தத்தம் செய்த உயர்ந்த ஸ்தானத்தை இவர்கள் பெற்றிருக்கின்றனர். இவர்கள் படைப்பு சம்பந்தப்பட்ட யெகோவாவின் மாபெரும் செயல்களுக்காக அவரை துதிக்கும்படி உந்துவிக்கப்படுகின்றனர். நாமும் அவருடைய ‘நித்திய வல்லமையையும் தேவத்துவத்தையும்’ கண்டு வியப்படைகிறோம். (ரோமர் 1:20) யெகோவாவைப் பற்றி எந்தளவிற்கு அதிகமாக தெரிந்துகொள்கிறோமோ அந்தளவிற்கு அவருடைய மாபெரும் செயல்களுக்காக அவரை துதிப்போம்.
யெகோவாவின் புகழத்தக்க செய்கைகளை அறிவியுங்கள்!
4, 5. தாவீது எவ்வாறு யெகோவாவை துதித்தார் என்பதற்கு உதாரணங்களைக் கொடுங்கள்.
4 கடவுளுடைய மாபெரும் செயல்களுக்காக சங்கீதக்காரனாகிய தாவீது அவரைத் துதித்தார். உதாரணமாக, தாவீது இவ்வாறு பாடினார்: “சீயோனில் வாசமாயிருக்கிற யெகோவாவைப் பாடித் துதியுங்கள், அவர் செயல்களைப் புறஜாதியாருக்கு அறிவியுங்கள். யெகோவா, மரண வாசலினின்று என்னைத் தூக்கியெடுப்பவர் நீரே. நீர் எனக்கு இரங்கிப் பகைவர் எனக்கு விளைவித்து வருகிற துன்பத்தை நோக்கியருளும். அப்பொழுது உமது புகழை நான் பாடுவேன் [“உமது புகழத்தக்க செய்கைகளையெல்லாம் அறிவிப்பேன்,” NW], சீயோன் குமாரத்தியின் வாசல்தோறும் உமது இரட்சிப்பால் அகமகிழ்வேன்.” (சங்கீதம் 9:11, 13, 14, திருத்திய மொழிபெயர்ப்பு) ஆலயத்தின் கட்டிட திட்டங்களை தன் குமாரனாகிய சாலொமோனிடம் கொடுத்தபின், தாவீது இவ்வாறு கூறி கடவுளை துதித்து புகழ்ந்தார்: “யெகோவாவே, மேன்மை, வல்லமை, மகிமை, மாட்சிமை, மகத்துவம் உமக்கேயுரியன; . . . யெகோவாவே, ராஜ்யமும் உமக்குரியது, தேவரீரே எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர். . . . இப்போதும் எங்கள் கடவுளே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், உமது மகிமையுள்ள திருநாமத்தைப் புகழுகிறோம்.”—1 நாளாகமம் 29:10-13, தி.மொ.
5 தாவீதைப் போலவே கடவுளைத் துதிக்கும்படி வேத எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கின்றன—ஆம், உந்துவிக்கின்றன. சங்கீத புத்தகம் துதிகளால் நிறைந்துள்ளது. அவற்றில் சுமார் பாதி சங்கீதங்கள் தாவீதால் இயற்றப்பட்டவை. அவர் எப்போதும் யெகோவாவுக்குத் துதியும் நன்றியும் செலுத்தினார். (சங்கீதம் 69:30) அதோடு தாவீதும் மற்றவர்களும் தெய்வீக ஏவுதலால் தொகுத்த இந்த சங்கீதங்கள் பூர்வ காலங்களிலிருந்தே யெகோவாவைத் துதிப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
6. ஏவப்பட்ட சங்கீதங்கள் நமக்கு எவ்வாறு பயனுள்ளவையாக இருக்கின்றன?
6 யெகோவாவை வணங்குவோருக்கு இந்த சங்கீதங்கள் மிகுந்த பயனுள்ளவை! அவர் நமக்கு செய்திருக்கும் மாபெரும் செயல்கள் அனைத்திற்கும் நாம் அவருக்கு நன்றி செலுத்த விரும்புகையில், சங்கீதங்களில் காணப்படும் அழகிய வார்த்தைகளிடம் நம் மனம் சாயலாம். உதாரணமாக, ஒவ்வொரு நாள் புலரும்போதும் இதுபோல் அவரைத் துதிக்க நாம் உந்தப்படலாம்: “யெகோவாவுக்கு நன்றி செலுத்துவதும், உன்னதமானவரே, உமது திருநாமத்தைத் துதித்துப் பாடுவதும் நன்றாம். . . . காலையிலே உமது கிருபையையும், இரவுதோறும் உமது சத்தியத்தையும் பிரஸ்தாபிப்பது உசிதமே. யெகோவாவே, உமது கிரியையினால் என்னை மகிழ்ச்சியாக்கினீர்; உமது திருக்கரத்தின் செயல்களினிமித்தம் ஆனந்தித்துப் பாடுவேன்.” (சங்கீதம் 92:1-4, தி.மொ.) ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் ஒரு பிரச்சினையை நாம் மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியையும் நன்றியையும் ஜெபத்தில் தெரிவிப்பதற்கு நம் மனம் தூண்டப்படலாம். சங்கீதக்காரனும் இதையே செய்தார்: “யெகோவாவை, கெம்பீரமாய்ப் பாடி, நமது ரட்சணியக் கன்மலையை ஆர்ப்பரித்துப் பாடுவோம் வாருங்கள். நன்றியறிதலோடு அவர் சந்நிதி முன் வந்து சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.”—சங்கீதம் 95:1, 2, தி.மொ.
7. (அ) கிறிஸ்தவர்கள் பாடும் பல பாடல்களில் குறிப்பிடத்தக்க விஷயம் எது? (ஆ) கூட்டங்களுக்கு சீக்கிரமாகவே சென்று, முடியும்வரை ஆஜராக இருப்பதற்கு ஒரு காரணம் என்ன?
7 சபை கூட்டங்களிலும் அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும் நாம் அடிக்கடி பாடல்களைப் பாடி யெகோவாவை துதிக்கிறோம். இந்தப் பாடல்களில் பலவும் சங்கீதப் புத்தகத்திலுள்ள ஏவப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலானவை என்பது குறிப்பிடத்தக்கது. யெகோவாவை துதிப்பதற்கு நவீன காலத்திற்குப் பொருத்தமான புத்துணர்ச்சியூட்டும் பாடல்களின் தொகுப்பை பெற்றிருப்பதில் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி! கூட்டங்களுக்கு சீக்கிரமாகவே சென்று, முடியும் வரை ஆஜராக இருப்பதற்கு ஒரு சிறந்த காரணம், கடவுளுக்குத் துதி பாடுவதற்காகும். இவ்வாறு நாம் சக வணக்கத்தாரோடு பாடலிலும் ஜெபத்திலும் கலந்துகொண்டு யெகோவாவை துதிக்கிறோம்.
“யாவைத் துதியுங்கள்!”
8. “அல்லேலூயா” என்ற வார்த்தையில் பொதிந்திருக்கும் அர்த்தம் என்ன, அந்த வார்த்தை பொதுவாக எப்படி மொழிபெயர்க்கப்படுகிறது?
8 “அல்லேலூயா” என்ற வார்த்தையில் யெகோவாவைத் துதி என்ற பொருள் பொதிந்திருக்கிறது. அல்லேலூயா என்ற எபிரெய வார்த்தை “யாவைத் துதியுங்கள்” என்றே பெரும்பாலும் மொழிபெயர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சங்கீதம் 135:1-3-ல் (தி.மொ.) “அல்லேலூயா [“யாவைத் துதியுங்கள்!” NW], யெகோவாவின் திருநாமத்தைத் துதியுங்கள்; யெகோவாவின் ஊழியரே, யெகோவாவின் ஆலயத்திலும் நமது கடவுளின் பிரகாரங்களிலும் நிற்கிறவர்களே, துதியுங்கள். யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்; அவர் நாமத்தைத் துதித்துப் பாடுங்கள்; அது இனிமையானது” என்ற அன்பான, அழுத்தந்திருத்தமான வேண்டுகோளை நாம் காண்கிறோம்.
9. யெகோவாவைத் துதிப்பதற்கு எவை நம்மைத் தூண்டுகின்றன?
9 கடவுளுடைய வியத்தகு படைப்புகளையும் நமக்காக அவர் செய்திருப்பவற்றையும் ஆழ்ந்து தியானிக்கையில், உள்ளப்பூர்வமான போற்றுதல் அவரைத் துதிப்பதற்கு நம்மை தூண்டுகிறது. பூர்வ காலங்களில் தம்முடைய மக்களுக்காக யெகோவா செய்த அற்புதமான செயல்களை சிந்தித்துப் பார்க்கும்போது, நம் இதயம் அவரைத் துதிப்பதற்கு உந்துவிக்கிறது. யெகோவா இனிமேல் செய்யப்போகும் மாபெரும் செயல்களைப் பற்றிய வாக்குறுதிகளை தியானிக்கையில் நாம் எப்படியெல்லாம் அவருக்கு துதியையும் நன்றியையும் தெரிவிக்கலாம் என வழிதேடுகிறோம்.
10, 11. நாம் ஜீவித்திருப்பதே கடவுளைத் துதிப்பதற்கு எப்படி காரணமாக அமைகிறது?
10 நாம் ஜீவித்திருப்பதே யாவைத் துதிப்பதற்கு நமக்கு தகுந்த காரணத்தை அளிக்கிறது. தாவீது இவ்வாறு பாடினார்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைக் [யெகோவாவை] துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.” (சங்கீதம் 139:14) ஆம், நாம் ‘அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.’ பார்வைத் திறன், செவித் திறன், சிந்திக்கும் திறன் போன்ற அருமையான பரிசுகளை பெற்றிருக்கிறோம். ஆகவே, நம் படைப்பாளருக்கு துதி சேர்க்கும் வண்ணம் வாழ வேண்டாமா? இதைத்தான் பவுலும் எழுதினார்: “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.”—1 கொரிந்தியர் 10:31.
11 நாம் உண்மையிலேயே யெகோவாவை நேசிக்கிறோமென்றால் எல்லா காரியங்களையும் அவருடைய மகிமைக்கென்றே செய்வோம். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை” என்று இயேசு சொன்னார். (மாற்கு 12:30; உபாகமம் 6:5) யெகோவாவை நாம் நேசித்து, நம்முடைய படைப்பாளரெனவும் ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ அருளுபவரெனவும் அவரைத் துதிக்க வேண்டும். (யாக்கோபு 1:17; ஏசாயா 51:12; அப்போஸ்தலர் 17:28) ஏனென்றால், காரணக்காரியங்களை ஆராயும் மனோசக்தியையும், ஆவிக்குரிய திறமையையும் உடல் பலத்தையும்—நம்முடைய எல்லா வரங்களையும் திறன்களையும்—யெகோவாவிடமிருந்தே நாம் பெறுகிறோம். நம்முடைய படைப்பாளராகிய அவரே அன்புக்கும் துதிக்கும் பாத்திரர்.
12. யெகோவாவின் மாபெரும் செயல்களைப் பற்றியும் சங்கீதம் 40:5-ல் உள்ள வார்த்தைகளைப் பற்றியும் நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
12 யெகோவாவின் மாபெரும் செயல்கள் நாம் அவரில் அன்புகூர்ந்து அவரை துதிப்பதற்கு எண்ணற்ற காரணங்களை அளிக்கின்றன! “என் கடவுளாகிய யெகோவாவே, நீர் செய்த அதிசயங்களும் [“வியத்தகு செயல்களும்,” NW] எங்கள் பொருட்டு நீர் பண்ணின யோசனைகளும் அநேகம். உமக்கு நிகரானது ஒன்றுமில்லை; நான் அவைகளை அறிவித்துச் சொல்லப் புகுந்தால் அவைகள் எண்ணமுடியாதவைகள்” என தாவீது பாடினார். (சங்கீதம் 40:5, தி.மொ.) யெகோவாவின் அதிசயமான கிரியைகள் எல்லாவற்றையும் தாவீதால் விவரித்துச் சொல்ல முடியவில்லை, நம்மாலும் முடியாது. ஆனால், கடவுளுடைய மாபெரும் செயல்களில் எவற்றையாகிலும் நாம் அறிய வரும்போதெல்லாம் அவரை துதிப்போமாக.
கடவுளுடைய நித்திய நோக்கத்தோடு சம்பந்தப்பட்ட செயல்கள்
13. நம் நம்பிக்கை எவ்வாறு கடவுளுடைய மாபெரும் செயல்களோடு பின்னிப்பிணைந்துள்ளது?
13 கடவுளுடைய நித்திய நோக்கத்தோடு சம்பந்தப்பட்ட அவரது புகழத்தக்க மாபெரும் செயல்களோடு நம் எதிர்கால நம்பிக்கை பின்னிப்பிணைந்துள்ளது. ஏதேனில் கலகம் ஏற்பட்ட பின்பு, நம்பிக்கை அளிக்கும் முதல் தீர்க்கதரிசனத்தை யெகோவா கொடுத்தார். சர்ப்பத்திற்கு நியாயத்தீர்ப்பு அளிக்கையில் கடவுள் இவ்வாறு சொன்னார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15) துன்மார்க்க உலகை அழித்த பூகோள ஜலப்பிரளயத்தில் நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் காப்பாற்றுவதன் மூலம் யெகோவா புரிந்த மாபெரும் செயலுக்குப் பின், ஸ்திரீயின் வாக்குப்பண்ணப்பட்ட வித்தைப் பற்றிய நம்பிக்கை உண்மை மனிதரின் இருதயத்தில் பதிந்தது. (2 பேதுரு 2:5) உண்மை மனிதராகிய ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசன வாக்குறுதிகள், அந்த வித்துவின் மூலம் யெகோவா எதை நிறைவேற்றுவார் என்பதை மேலும் தெளிவுபடுத்தின.—ஆதியாகமம் 22:15-18; 2 சாமுவேல் 7:12.
14. மனிதகுலத்தின் சார்பாக யெகோவா செய்த மாபெரும் செயல்களுக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு என்ன?
14 தம்முடைய ஒரேபேறான குமாரனை—வாக்குப்பண்ணப்பட்ட வித்தாகிய இயேசு கிறிஸ்துவை—கிரயபலியாக அளித்தபோது மனிதகுலத்தின் சார்பாக யெகோவா மாபெரும் செயல்களை நடப்பிப்பவர் என்பது மிகச்சிறந்த வகையில் வெளிக்காட்டப்பட்டது. (யோவான் 3:16; அப்போஸ்தலர் 2:29-36) இந்த கிரயபலி கடவுளுடன் ஒப்புரவாக வழிவகுத்தது. (மத்தேயு 20:28; ரோமர் 5:11) பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று ஸ்தாபிக்கப்பட்ட கிறிஸ்தவ சபையில் முதலாவதாக ஒப்புரவானவர்களை யெகோவா கூட்டிச் சேர்த்தார். அவர்கள் பரிசுத்த ஆவியின் உதவியால் நற்செய்தியை எங்கும் அறிவித்தார்கள். எவ்வாறு இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும், கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் நித்திய ஆசீர்வாதங்களை அனுபவிக்க கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு வழியைத் திறந்து வைக்கிறது என்பதை விளக்கினார்கள்.
15. நம்முடைய நாளில் யெகோவா எவ்வாறு அற்புதமான முறையில் செயல்பட்டிருக்கிறார்?
15 நம்முடைய நாளில் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களில் கடைசியானவர்களை கூட்டிச் சேர்ப்பதில் யெகோவா அற்புதமான முறையில் செயல்பட்டிருக்கிறார். பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யப்போகும் 1,44,000 பேரில் மீதியானவர்களை முத்திரை போட்டுத் தீருமளவும், அழிவின் காற்றுகள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 7:1-4; 20:6) அபிஷேகம் பண்ணப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள் பொய்மத உலக பேரரசாகிய ‘மகா பாபிலோனின்’ ஆவிக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுவிக்கப்படுமாறு கடவுள் பார்த்துக்கொண்டார். (வெளிப்படுத்துதல் 17:1-5) அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோருக்கு 1919-ல் கிடைத்த விடுதலையும், அது முதற்கொண்டு அனுபவித்து வரும் தெய்வீக பாதுகாப்பும் எதை செய்வதற்கு அவர்களை அனுமதித்துள்ளது? மிக வேகமாக நெருங்கி வந்துகொண்டிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தில்’ சாத்தானிய பொல்லாத ஒழுங்குமுறைக்கு யெகோவா முடிவைக் கொண்டுவருவதற்கு முன்பாக அருமையான விதத்தில் கடைசி சாட்சி கொடுக்கவே அனுமதித்துள்ளது.—மத்தேயு 24:21; தானியேல் 12:3; வெளிப்படுத்துதல் 7:14.
16. நவீன நாளில் நடைபெறும் உலகளாவிய ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் காரணமாக என்ன நடந்தேறுகிறது?
16 உலகம் முழுவதும் ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிக்கும் வேலையை யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட சாட்சிகள் சுறுசுறுப்புடன் தலைமை ஏற்று வழிநடத்தியிருக்கிறார்கள். இதன் விளைவாக எண்ணிக்கையில் அதிகரித்துவரும் ‘வேறே ஆடுகளும்’ இப்பொழுது யெகோவாவின் வணக்கத்தாராக மாறிவருகிறார்கள். (யோவான் 10:16) தாழ்மையானவர்கள் நம்முடன் சேர்ந்து யெகோவாவை துதிக்க இன்னும் வாய்ப்பு இருப்பதைக் குறித்து நாம் சந்தோஷப்படுகிறோம். “வா” என்று கொடுக்கப்படும் அழைப்பை ஏற்று யெகோவாவை துதிப்போருக்கு, மிகுந்த உபத்திரவத்தை தப்பிப்பிழைத்து என்றென்றும் யெகோவாவை துதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 22:17.
மெய் வணக்கத்திற்கு ஆயிரக்கணக்கில் திரண்டு வருகிறார்கள்
17. (அ) நம்முடைய பிரசங்க வேலை சம்பந்தமாக யெகோவா எவ்வாறு மாபெரும் செயல்களை நடப்பிக்கிறார்? (ஆ) சகரியா 8:23 எவ்வாறு நிறைவேற்றமடைகிறது?
17 நம்முடைய பிரசங்க வேலையின் சம்பந்தமாக யெகோவா இப்போது புகழத்தக்க மாபெரும் செயல்களை நடப்பித்து வருகிறார். (மாற்கு 13:10) சமீப வருடங்களில், ‘பெரிதும் அநுகூலமுமான கதவை’ திறந்து வைத்திருக்கிறார். (1 கொரிந்தியர் 16:9) இதனால், ராஜ்ய செய்தியை பிரசங்கிப்பதற்கு சத்தியத்தின் எதிரிகள் முட்டுக்கட்டையாக இருந்த நாடுகளிலும் பரந்த அளவில் நற்செய்தியை அறிவிக்க முடிந்திருக்கிறது. ஒருசமயம் ஆவிக்குரிய இருளில் இருந்தவர்கள் இப்போது யெகோவாவை வணங்கும் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கிறார்கள். இவ்வாறு, இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்: “அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (சகரியா 8:23) “உங்களோடே” என்று சொல்லப்படுபவர்கள் நவீன நாளைய அபிஷேகம் பண்ணப்பட்டவரில் மீதியானோராகிய ஆவிக்குரிய யூதர்களாவர். பத்து என்பது பூமிக்குரிய முழுமையைக் குறிப்பதால், இந்த “பத்து மனுஷர்” ‘திரள் கூட்டத்தாரை’ குறிக்கின்றனர்; இவர்கள் ‘தேவனுடைய இஸ்ரவேலரோடு’ கூட்டிச் சேர்க்கப்பட்டு ‘ஒரே மந்தை’ ஆகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10; கலாத்தியர் 6:16) இப்போது யெகோவா தேவனின் வணக்கத்தாராக அநேகர் ஒருமித்து பரிசுத்த சேவை செய்வதைக் காண்பதில் எவ்வளவு ஆனந்தம்!
18, 19. பிரசங்க வேலையை யெகோவா ஆசீர்வதித்து வருகிறார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
18 பொய் மதம் மிகுந்த ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் மக்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என ஒருசமயம் தோன்றியது; ஆனால் இப்போது அப்படிப்பட்ட நாடுகளிலும் லட்சோப லட்சம் பேர் மெய் வணக்கத்தை ஏற்றுக்கொள்வது நம்மை பரவசப்படுத்துகிறது. இந்த வருட யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகத்தை (ஆங்கிலம்) எடுத்து 1,00,000 முதல் சுமார் 10,00,000 வரையான ராஜ்ய பிரஸ்தாபிகளைக் கொண்ட தேசங்களை கவனியுங்கள். ராஜ்ய பிரசங்க வேலையை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதற்கு இது பலமான அத்தாட்சி அளிக்கிறது.—நீதிமொழிகள் 10:22.
19 நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவா நம் வாழ்க்கைக்கு உண்மையான நோக்கத்தையும், அவருடைய சேவையில் பலன்தரும் வேலையையும், ஒளிமயமான எதிர்கால நம்பிக்கையையும் தந்திருப்பதற்காக அவருக்கு துதியையும் நன்றியையும் தெரிவிக்கிறோம். தெய்வீக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுவதைக் காண நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம். ‘தேவனுடைய அன்பிலே நம்மைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக’ வாழவும் உறுதிபூண்டிருக்கிறோம். (யூதா 20, 21) இப்போது திரள் கூட்டத்தாரான சுமார் 60,00,000 பேர் கடவுளை துதிப்பதைக் காண்பதில் எவ்வளவு மகிழ்ச்சி! அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானவர்களுடன் வேறே ஆடுகளும் சேர்ந்து, 235 நாடுகளில் சுமார் 91,000 சபைகளில் கடவுளை சேவிக்கிறார்கள். இவையெல்லாம் யெகோவாவின் ஆசீர்வாதத்திற்கு கண்கூடான அத்தாட்சி! ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பாரின் அயராத உழைப்பால் நாம் அனைவரும் ஆவிக்குரிய விதமாக நன்கு போஷிக்கப்படுகிறோம். (மத்தேயு 24:45, NW) முன்னேறிவரும் ஓர் தேவராஜ்ய அமைப்பு, அன்பான மேற்பார்வையின்கீழ், யெகோவாவின் சாட்சிகளுடைய 110 கிளை அலுவலகங்கள் வாயிலாக ராஜ்ய வேலைகளை கண்காணித்துவருகிறது. ‘தங்களுடைய செல்வத்தைக் கொண்டு அவரைப் போற்றுவதற்கு’ ஜனங்களின் இருதயங்களை யெகோவா தூண்டியிருப்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். (நீதிமொழிகள் 3:9, 10, பொது மொழிபெயர்ப்பு) இதன் விளைவாக, தேவைக்கேற்றபடி அச்சகங்களும், பெத்தேல் மற்றும் மிஷனரி இல்லங்களும், ராஜ்ய மன்றங்களும், மாநாட்டு மன்றங்களும் கட்டப்பட்டு, நம்முடைய உலகளாவிய பிரசங்க வேலை தொடர்ந்து நடைபெறுகிறது.
20. யெகோவாவின் புகழத்தக்க மாபெரும் செயல்களை சிந்தித்துப் பார்ப்பது நம்மை என்ன செய்ய தூண்ட வேண்டும்?
20 நம் பரலோக தகப்பன் நடப்பிக்கும் புகழத்தக்க மாபெரும் செயல்கள் அனைத்தையும் நம்மால் விவரிக்க முடியாது. ஆனால் நல்மனமுள்ள யாரேனும் யெகோவாவை துதிக்கும் மக்களோடு சேர்ந்துகொள்ள தயங்குவாரா? நிச்சயமாகவே தயங்க மாட்டார்! ஆகவே, கடவுளை நேசிப்போர் அனைவரும் மகிழ்ச்சியோடு இவ்வாறு கூறுவார்களாக: “அல்லேலூயா; வானங்களிலிருந்து யெகோவாவை துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்; அவர் தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; . . . வாலிபரே, கன்னிகைகளே, முதியோரே, இளையோரே, துதியுங்கள். அவர்கள் யெகோவா திருநாமத்தைத் துதிப்பார்களாக; அவர் திருநாமமே உயர்ந்தது; அவர் மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.” (சங்கீதம் 148:1, 2, 12, 13, தி.மொ.) ஆம், இப்போதும் எப்போதும், மாபெரும் செயல்களுக்காக யெகோவாவை துதிப்போமாக!
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• யெகோவாவின் புகழத்தக்க செயல்களில் சில யாவை?
• யெகோவாவை துதிக்க நீங்கள் ஏன் தூண்டப்படுகிறீர்கள்?
• நம்முடைய நம்பிக்கை எவ்வாறு கடவுளுடைய மாபெரும் செயல்களோடு பின்னிப்பிணைந்துள்ளது?
• ராஜ்ய பிரசங்க வேலை சம்பந்தமாக யெகோவா எவ்வாறு புகழத்தக்க செயல்களை நடப்பிக்கிறார்?
[பக்கம் 10-ன் படம்]
நீங்கள் முழுமனதுடன் ஒன்றுசேர்ந்து பாடி யெகோவாவைத் துதிக்கிறீர்களா?
[பக்கம் 13-ன் படம்]
சாந்தகுணமுள்ளவர்கள் நம்மோடு சேர்ந்து யெகோவாவை துதிப்பதற்கு வாய்ப்பு இன்னும் இருப்பதற்காக நாம் களிகூருகிறோம்