அறுவடை வேலையில் முன்னேறுங்கள்!
“கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.”—சங்கீதம் 126:5.
1. இன்று ஏன் ‘அறுப்புக்கு எஜமான் அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ள’ வேண்டும்?
கலிலேயாவில் மூன்றாவது பிரசங்க பயணத்தை இயேசு கிறிஸ்து முடித்த பின்பு, “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்” என தம் சீஷர்களிடம் சொன்னார். (மத்தேயு 9:37) யூதேயாவிலும் நிலைமை அப்படியே இருந்தது. (லூக்கா 10:2) ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பே அப்படி இருந்ததென்றால் இன்றைய நிலை என்ன? கடந்த ஊழிய ஆண்டில், 60 லட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் இவ்வுலகிலுள்ள 600 கோடி ஜனங்கள் மத்தியில் இந்த அடையாள அர்த்தமுள்ள அறுவடை வேலையில் ஈடுபட்டார்கள். அவர்களில் பலர், “மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” உள்ளனர். ஆகையால், “அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்” என்ற இயேசுவின் அறிவுரை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமானதாக இருந்ததைப் போலவே இன்றும் உள்ளது.—மத்தேயு 9:36, 38.
2. எது ஜனங்களின் கவனத்தை நம் பக்கம் திருப்பியிருக்கிறது?
2 அதிகமான வேலையாட்களை அனுப்பும்படி கேட்டுக்கொண்ட வேண்டுதலுக்கு அறுவடையின் எஜமானராகிய யெகோவா தேவன் பதிலளித்திருக்கிறார். கடவுள் வழிநடத்தும் இந்த அறுவடையில் பங்குகொள்வது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி! உலகத்தாரோடு ஒப்பிட எண்ணிக்கையில் கொஞ்சம் பேராக நாம் இருந்தாலும், ராஜ்ய பிரசங்கிப்பிலும் சீஷராக்கும் வேலையிலும் ஊக்கமாக பங்கெடுப்பது இவ்வுலகத்தின் கவனத்தை நம் பக்கம் திருப்புகிறது. அநேக நாடுகளில் செய்தி துறைகள் அடிக்கடி நம்மைப் பற்றி அறிக்கை செய்கின்றன. டெலிவிஷனில் வரும் நாடக காட்சியில், ‘காலிங் பெல்’ அடிக்கையில் அது யெகோவாவின் சாட்சிகளாக இருக்கலாம் என சொல்லும் அளவுக்கு இருக்கிறது. ஆம், அடையாள அர்த்தமுள்ள அறுவடைக்காரர்களாக நாம் செய்யும் கிறிஸ்தவ ஊழியம் இந்த 21-வது நூற்றாண்டில் யாவரும் அறிந்ததே.
3. (அ) முதல் நூற்றாண்டு ராஜ்ய பிரசங்கிப்பு வேலையும் மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்தது என்பது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) நம் ஊழியத்திற்கு தேவதூதர்களின் ஆதரவு உள்ளது என நாம் ஏன் சொல்லலாம்?
3 முதல் நூற்றாண்டு ராஜ்ய பிரசங்கிப்பு வேலைகளையும் இவ்வுலகம் கவனிக்கத்தான் செய்தது; அது நற்செய்தியை அறிவித்தவர்களை துன்புறுத்தியது. ஆகவே, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள் போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் [அப்போஸ்தலர்கள்] உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.” (1 கொரிந்தியர் 4:9) அதே போல துன்புறுத்துதலின் மத்தியிலும் ராஜ்ய அறிவிப்பாளராக நாம் முன்னேறுவது, இந்த உலகத்தின் கவனத்தை நம் பக்கம் திருப்புகிறது, தூதர்களுக்கும் முக்கியமானதாயிருக்கிறது. “வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்[தான்]” என வெளிப்படுத்துதல் 14:6 சொல்கிறது. ஆம், நம் ஊழியமாகிய அறுப்பு வேலைக்கு தேவதூதர்களின் ஆதரவு உள்ளது!—எபிரெயர் 1:13, 14.
‘பகைக்கப்படுவோம்’
4, 5. (அ) என்ன எச்சரிக்கையை இயேசு தம் சீஷர்களுக்குக் கொடுத்தார்? (ஆ) கடவுளுடைய இன்றைய ஊழியர்கள் ஏன் ‘பகைக்கப்படுகிறார்கள்’?
4 அறுவடைக்காரர்களாக இயேசுவின் அப்போஸ்தலர்கள் அனுப்பப்பட்டபோது, “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய்” இருக்கும்படியான அவருடைய அறிவுரைக்கு செவிசாய்த்தார்கள். மேலுமாக, “மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள். அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டு போகப்படுவீர்கள். . . . என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்” என்றும் இயேசு சொன்னார்.—மத்தேயு 10:16-22.
5 இன்று நாம் ‘பகைக்கப்படுவதற்கு’ காரணம், ‘உலகமுழுவதும்’ கடவுளுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் பிரதான பகைவனாக இருக்கும் பிசாசான சாத்தான் எனும் ‘பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ (1 யோவான் 5:19) நம்முடைய ஆவிக்குரிய செழுமையை நம் பகைவர்கள் காண்கிறபோதிலும் அதற்குக் காரணமான யெகோவாவை ஏற்க மறுக்கிறார்கள். மகிழ்ச்சியுடன் அறுவடையில் நாம் ஈடுபடுகையில் சந்தோஷத்தால் ஏற்படும் முக மலர்ச்சியை பகைவர்கள் பார்க்கிறார்கள். நம்முடைய ஒற்றுமையைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள்! அவர்கள் வேறொரு நாட்டிற்கு செல்கையில் அங்கும் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் நாட்டில் செய்யப்படுவதைப் போன்ற அதே வேலையை செய்வதைக் காண்கையில் வேண்டா வெறுப்போடு அதை ஆமோதிக்கிறார்கள். நம்மை ஆதரிப்பவரும் நம் ஒற்றுமைக்கு காரண கர்த்தாவுமாகிய யெகோவா யார் என்பதை தக்க சமயத்தில் நம் பகைவர்கள் உண்மையிலேயே அறிவார்கள் என்பது நமக்குத் தெரியும்.—எசேக்கியேல் 38:10-12, 23.
6. அறுவடையில் ஈடுபடுகையில் என்ன உறுதி நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் என்ன கேள்வி எழும்புகிறது?
6 அறுவடையின் எஜமானர் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்” கொடுத்திருக்கிறார். (மத்தேயு 28:18) இவ்வாறு, இயேசுவின் மூலம் பரலோகத்திலுள்ள தேவதூதர்களையும் பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரரையும்’ உபயோகித்து இந்த அறுவடையை யெகோவா வழிநடத்துகிறார். (மத்தேயு 24:45-47; வெளிப்படுத்துதல் 14:6, 7) ஆனால், அறுவடையில் முன்னேறுகையில் பகைவரிடமிருந்து வரும் எதிர்ப்பை சமாளித்துக்கொண்டே எப்படி மகிழ்ச்சியை காத்துக்கொள்ள முடியும்?
7. எதிர்க்கப்படுகையில் அல்லது துன்புறுத்தப்படுகையில் என்ன மனநிலையை காத்துக்கொள்ள நாம் பிரயாசப்பட வேண்டும்?
7 எதிர்ப்போ அல்லது நேரடியான துன்புறுத்துதலோ வந்தால்கூட, பவுலுக்கிருந்த அதே மனநிலையை நாம் காத்துக்கொள்ள கடவுளுடைய உதவியை நாடுவோமாக. “பழிக்கப்படும்போது ஆசி கூறுகிறோம்; துன்புறுத்தப்படும்போது பொறுத்துக் கொள்கிறோம். அவமதிக்கப்படும்போது கனிவாகப் பேசுகிறோம்” என அவர் எழுதினார். (1 கொரிந்தியர் 4:12, 13, பொ.மொ.) வெளி ஊழியத்தை சாதுரியமாக செய்வதும் இந்த மனநிலையும் சேர்ந்து நம்மை எதிர்ப்பவர்களின் மனதையே சில சமயங்களில் மாற்றிவிடுகிறது.
8. மத்தேயு 10:28-லுள்ள இயேசுவின் வார்த்தைகளில் என்ன உறுதி உங்களுக்கு அளிக்கப்படுகிறது?
8 மரண பயமுறுத்துதலும்கூட, அறுவடைக்காரர்களாக நம்முடைய ஆர்வத்தை குறைத்துப் போடுவதில்லை. நாம் பயப்படாமல் முடிந்த மட்டும் ராஜ்ய செய்தியை யாவரறிய அறிவிக்கிறோம். மேலும் இயேசுவின் இவ்வார்த்தைகளிலிருந்து உற்சாகமூட்டும் உறுதி நமக்கு அளிக்கப்படுகிறது: “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே [“கெஹென்னாவில்,” NW] அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.” (மத்தேயு 10:28) நம்முடைய பரலோகத் தகப்பன் உயிர் கொடுப்பவரென்று நமக்குத் தெரியும். தம்மிடம் உத்தமத் தன்மையைக் காத்துக்கொண்டு, அறுவடையில் முன்னேறுபவர்களுக்கு அவர் பலனளிக்கிறார்.
உயிர்க்காக்கும் ஒரு செய்தி
9. எசேக்கியேல் சொன்னதற்கு சிலர் எப்படி பிரதிபலித்தார்கள், இன்றும் அதே போன்ற எப்படிப்பட்ட பிரதிபலிப்பைக் காண்கிறோம்?
9 இஸ்ரவேல், யூதா ராஜ்யங்களாகிய இந்தக் ‘கலகக்கார ஜாதியாருக்கு’ யெகோவாவின் செய்திகளை தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் தைரியமாய் அறிவித்தபோது, சிலர் அவர் சொல்லவிருந்ததைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். (எசேக்கியேல் 2:3) “இதோ, நீ [அவர்களுக்கு] இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்” என்று யெகோவா சொன்னார். (எசேக்கியேல் 33:32) எசேக்கியேல் சொன்னது அவர்களுக்குப் பிடித்திருந்தபோதிலும், அதற்கேற்ப நடக்கத் தவறினார்கள். இன்றைய நிலை என்ன? அபிஷேகம் செய்யப்பட்ட மீதிபேரும் அவர்களுடைய தோழர்களும் யெகோவாவின் செய்திகளை தைரியமாய் அறிவிக்கையில், ராஜ்ய ஆசீர்வாதங்களைப் பற்றி கேட்க சிலர் விரும்புகிறார்கள். ஆனால் அதற்குப் போற்றுதல் காட்டுவதில்லை; சீஷர்களாவதுமில்லை, அறுவடையில் சேர்ந்துகொள்வதுமில்லை.
10, 11. உயிர்க்காக்கும் இந்தச் செய்தியிடம் மக்களின் கவனத்தைத் திருப்ப 20-ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் என்ன செய்யப்பட்டது, என்ன பலன்களுடன்?
10 மறுபட்சத்தில் பலர் அறுவடை வேலைக்கு சாதகமாய் பிரதிபலித்திருக்கின்றனர், கடவுளுடைய செய்திகளை அறிவிப்பதில் பங்கேற்றிருக்கின்றனர். உதாரணமாக, 1922 முதல் 1928 வரை அடுத்தடுத்து நடைபெற்ற கிறிஸ்தவ மாநாடுகளில் சாத்தானின் பொல்லாத உலகிற்கு எதிரான நியாயத்தீர்ப்பு செய்திகள் தெளிவாய் அறிவிக்கப்பட்டன. அந்த மாநாடுகளில் அறிவிக்கப்பட்ட இந்தக் கண்டன செய்திகளை வானொலி நிலையங்கள் ஒலிபரப்பின. அதன்பின் இச்செய்திகள் அடங்கிய பிரதிகளை கடவுளுடைய ஜனங்கள் கோடிக்கணக்கில் விநியோகித்தனர்.
11 மற்றொரு வகையில் சாட்சி கொடுத்தல் 1930-கள் முடிவுறும் தறுவாயில் ஆரம்பமானது. அதுதான் அறிவிப்பு ஊர்வலங்கள். ஆரம்பத்தில் யெகோவாவின் ஜனங்கள் பொதுப் பேச்சுகளை அறிவிக்கும் விளம்பர அட்டைகளை அணிந்து சென்றனர். பின்பு, “மதம் ஒரு கண்ணியும் மோசடியும்,” “கடவுளையும் அரசராகிய கிறிஸ்துவையும் சேவியுங்கள்” போன்ற வாசகங்களைக் கொண்ட அட்டைகளை எடுத்துச் சென்றனர். வீதிகளில் அவர்கள் ஊர்வலமாக செல்கையில் பொது மக்களின் கவனத்தைக் கவர்ந்தனர். ‘இது பெருமளவு யெகோவாவின் சாட்சிகளின் பக்கம் பொது மக்களின் கவனத்தைத் திருப்பியதோடு, தைரியப்படுத்தவும் செய்தது’ என்று ஒரு சகோதரர் கூறினார்; இவர் இந்த ஊழியத்தில் தவறாமல் பங்குகொண்டு இங்கிலாந்திலுள்ள லண்டனின் சந்தடிமிக்க தெருக்களின் வழியே நடந்து சென்றவர்.
12. நாம் ஊழியத்தில் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்திகளோடு வேறு எதையும் அறிவிக்கிறோம், நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் யார் இப்போது இணைந்து செயல்படுகின்றனர்?
12 கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்திகளை அறிவித்து வருகையில், ராஜ்ய செய்தியிலுள்ள ஆசீர்வாதங்கள் மீதும் கவனத்தைத் திருப்புகிறோம். நாம் உலகளாவ தைரியமாய் சாட்சி கொடுத்து வருவது, தகுதியுள்ளவர்களை தேட நமக்கு உதவுகிறது. (மத்தேயு 10:11) அபிஷேகம் செய்யப்பட்ட வகுப்பாரில் கடைசி உறுப்பினரில் பெரும்பான்மையோர், 1920-களிலும் 1930-களிலும் அறுவடைக்கு விடுக்கப்பட்ட தெளிவான அழைப்பை ஏற்றனர். பின்பு, 1935-ல் நடைபெற்ற ஒரு மாநாட்டின்போது, ‘வேறே ஆடுகளாகிய’ ‘திரள் கூட்டத்தாருக்கு’ பரதீஸிய பூமியில் ஆசீர்வாதமான எதிர்காலம் இருப்பதைப் பற்றிய அற்புத செய்தி வெளிவந்தது. (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16) அவர்கள் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்திக்குக் கீழ்ப்படிந்து, உயிர்க்காக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் அபிஷேகம் செய்யப்பட்டவர்களோடு இணைந்து செயல்படுகின்றனர்.
13, 14. (அ) சங்கீதம் 126:5, 6-லிருந்து என்ன ஆறுதலைப் பெறலாம்? (ஆ) நாம் தொடர்ந்து விதை விதைத்து, நீர் பாய்ச்சி வந்தால் என்ன நடக்கும்?
13 கடவுளுடைய அறுவடைக்காரர்களுக்கு, முக்கியமாய் துன்புறுத்துதலை சகிப்பவர்களுக்கு, சங்கீதம் 126:5, 6-லுள்ள இந்த வார்த்தைகள் பெரும் ஆறுதலை அளிக்கின்றன: “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.” விதைப்பையும் அறுப்பையும் பற்றிய சங்கீதக்காரனின் இந்த வார்த்தைகள், பூர்வ பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த மீதிபேரிடம் யெகோவா காட்டிய கரிசனையையும், அவருடைய ஆசீர்வாதத்தையும் விளக்குகின்றன. அவர்கள் தங்கள் விடுதலையைக் குறித்து பெரிதும் மகிழ்ந்தனர், ஆனால் நாடு கடத்தப்பட்டிருந்த அந்த 70 ஆண்டு காலத்தில் பயிரிடப்படாமல் பாழாய்க் கிடந்த நிலத்தில் மீண்டும் விதை விதைக்கையில் அவர்கள் அழுதிருக்கலாம். எனினும், சோர்ந்துவிடாமல் தங்கள் விதைப்பிலும் கட்டுமான பணியிலும் ஈடுபட்டவர்கள் தங்கள் உழைப்பின் பலனையும், மனத்திருப்தியையும் அனுபவித்து மகிழ்ந்தனர்.
14 சோதனையை எதிர்ப்படுகையில் அல்லது நாமோ நம் சக விசுவாசிகளோ நீதியினிமித்தம் துன்பப்படுகையில் ஒருவேளை கண்ணீர் சிந்தலாம். (1 பேதுரு 3:14) நம்முடைய அறுவடை வேலையைப் பொறுத்தமட்டில், ஆரம்பத்தில் நமக்கு கடினமாக இருக்கலாம், ஏனெனில் ஊழியத்தில் நாம் பட்ட பிரயாசத்திற்கு பலன் என சொல்லிக்கொள்ள நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லாதிருக்கலாம். ஆனால் நாம் தொடர்ந்து விதை விதைத்து, நீர் பாய்ச்சி வந்தால், நாம் எதிர்பாராத அளவுக்கு கடவுள் வளரச் செய்வார். (1 கொரிந்தியர் 3:6) பைபிள்களையும் பைபிள் பிரசுரங்களையும் நாம் விநியோகிப்பதால் கிடைக்கும் பலன்களில் இது நன்கு சித்தரித்துக் காட்டப்படுகிறது.
15. அறுவடை வேலையில் கிறிஸ்தவ பிரசுரங்கள் பயனுள்ளவையாய் இருப்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
15 ஜிம் என்பவரின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவருடைய அம்மா இறந்த பின்பு அவர்களுடைய உடைமைகளில் உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?a ஆங்கில புத்தகத்தின் ஒரு பிரதியைக் கண்டார். அதை அவர் ஆர்வத்துடன் வாசித்தார். தெருவில் அவரை சந்தித்து சம்பாஷித்த சாட்சியிடம் மறுசந்திப்புக்கு ஜிம் ஒப்புக்கொண்டார், இது பைபிள் படிப்புக்கு வழிநடத்தியது. ஜிம் விரைவாக ஆவிக்குரிய முன்னேற்றம் செய்து, தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றார். தான் கற்றுக்கொண்டதை குடும்பத்தாருக்கும் சொன்னார். இதன் பலனாக, அவருடைய அக்காவும், அண்ணனும் யெகோவாவின் சாட்சிகளானார்கள். பின்னர், லண்டனிலுள்ள பெத்தேலில் முழுநேர ஊழியராக சேவிக்கும் சிலாக்கியத்தையும் ஜிம் பெற்றார்.
துன்புறுத்தப்பட்ட போதும் மகிழ்ச்சி
16. (அ) அறுவடை வேலை வெற்றி அடைந்திருப்பதற்கு காரணம் என்ன? (ஆ) நற்செய்தி செயல்படும் விதத்தைக் குறித்து என்ன எச்சரிக்கையை இயேசு கொடுத்தார், ஆனால் என்ன மனப்பான்மையுடன் நாம் ஜனங்களை அணுகுகிறோம்?
16 அறுவடை வேலை இத்தகைய வெற்றியை அடைந்திருப்பதற்கு காரணம் என்ன? அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களுடைய தோழர்களும் இயேசுவின் இந்த அறிவுரைக்கு செவிசாய்த்திருப்பதே காரணம்: “நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை வெளிச்சத்திலே சொல்லுங்கள்; நீங்கள் காதுக்குள் கேட்கிறதை வீடுகளின்மேல் நின்று பிரசித்தஞ் செய்யுங்கள்.” (மத்தேயு 10:27, தி.மொ.) எனினும் நாம் துன்பங்களை எதிர்பார்க்கலாம். ஏனெனில், இயேசு இவ்வாறு எச்சரித்தார்: “சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலை செய்வார்கள்.” மேலுமாக, “பூமியின்மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்” என இயேசு சொன்னார். (மத்தேயு 10:21, 34) குடும்பங்களை வேண்டுமென்றே பிரிக்கும் எண்ணம் இயேசுவுக்கு இருக்கவில்லை. ஆனால், நற்செய்தி சில சமயங்களில் அத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது. இன்று கடவுளுடைய ஊழியர்களைப் பொறுத்ததிலும் அதுவே உண்மை. நாம் குடும்பங்களைச் சந்திக்கையில் அவற்றில் பிரிவினையை உண்டு பண்ணுவது நம் எண்ணமல்ல. எல்லாரும் நற்செய்தியை ஏற்க வேண்டும் என்பதே நம் ஆசை. ஆகையால், ‘நித்திய ஜீவனிடமாக சரியான மனச்சாய்வு உடையவர்களில்’ நம்முடைய செய்தி ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக கனிவோடும் பரிவோடும் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் பேச முயலுகிறோம்.—அப்போஸ்தலர் 13:48, NW.
17. கடவுளுடைய அரசதிகாரத்தை ஆதரிக்கிறவர்கள் எவ்வாறு தனியே பிரித்து வைக்கப்படுகிறார்கள், இதற்கு ஓர் உதாரணம் எது?
17 கடவுளுடைய அரசதிகாரத்தை ஆதரிப்பவர்களை ராஜ்ய செய்தி தனியே பிரித்து வைத்திருக்கிறது. உதாரணமாக, ஜெர்மனியில் நேஷனல் சோஷியலிஸ ஆட்சி காலத்தில் நம் உடன் வணக்கத்தார், ‘இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்தியதால்’ வித்தியாசமானவர்களாக தனித்து விளங்கியதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். (லூக்கா 20:25) மதத் தலைவர்களுக்கும் சர்ச்சுக்குப் போகும் கிறிஸ்தவர்களுக்கும் நேர்மாறாக, யெகோவாவின் ஊழியர்கள் பைபிள் நியமங்களை மீற மறுத்து உறுதியான நிலைநிற்கை எடுத்தனர். (ஏசாயா 2:4; மத்தேயு 4:10; யோவான் 17:16) நாசி அரசும் புதிய மதங்களும் என்ற ஆங்கில புத்தகத்தில் பேராசிரியை கிறிஸ்டீன் கிங் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “சாட்சிகளுக்கு எதிராக மாத்திரமே [நாசி] அரசாங்கம் வெற்றியடைய முடியவில்லை; ஏனெனில் ஆயிரக்கணக்கானோரை அவர்கள் கொன்றிருந்த போதிலும் சாட்சிகளின் வேலை தொடர்ந்தது, மே 1945-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய இயக்கம் தொடர்ந்தது, நேஷனல் சோஷியலிஸமோ இருந்த இடம் தெரியாமல் போனது.”
18. துன்புறுத்துதலின் மத்தியிலும் யெகோவாவின் ஜனங்கள் என்ன மனப்பான்மையை வெளிக்காட்டுகின்றனர்?
18 துன்புறுத்துதலை எதிர்ப்படுகையில் யெகோவாவின் ஜனங்களுடைய மனப்பான்மை உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. உலக அதிகாரிகள் நம் விசுவாசத்தைக் கண்டு மனம் கவரப்படலாம், நம்மிடம் வன்மமோ பகைமையோ இல்லாததைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். உதாரணமாக, நாசி படுகொலையை தப்பிப்பிழைத்த சாட்சிகள், தங்கள் கடந்த கால அனுபவங்களை எண்ணிப் பார்க்கையில் அடிக்கடி மகிழ்ச்சியையும் திருப்தியையும் வெளிப்படுத்துகிறார்கள். ‘இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையை’ யெகோவாவே தங்களுக்குக் கொடுத்தாரென அறிந்திருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 4:7, NW) நம் மத்தியில் இருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு, ‘தங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருக்கும்’ அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. (லூக்கா 10:20, NW) அவர்களுடைய சகிப்புத்தன்மை பிறப்பிக்கும் நம்பிக்கை ஏமாற்றத்திற்கு வழிநடத்தாது. பூமிக்குரிய எதிர்பார்ப்புகளை உடைய உண்மையுள்ள அறுவடைக்காரர்களும் அதைப் போன்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.—ரோமர் 5:4, 5.
அறுவடையில் முன்னேறுங்கள்
19. கிறிஸ்தவ ஊழியத்தில் பின்பற்றத்தக்க என்ன முறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன?
19 அடையாள அர்த்தமுள்ள இந்த அறுவடை வேலையை இன்னும் நாம் எவ்வளவு காலத்திற்கு செய்ய யெகோவா விரும்புகிறார் என்பது தெரியாது. இதற்கிடையில், அறுவடைக்காரர்கள் தங்கள் வேலையைச் செய்ய விசேஷித்த முறைகளை பின்பற்றுகிறார்கள் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். அவ்வாறே நாமும் பிரசங்கிப்பதற்கு பரிசோதித்து கண்டறியப்பட்ட முறைகளை சரிவர பின்பற்றுகையில் அவை பயன்தரும் என உறுதியாய் இருக்கலாம். “என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்” என உடன் கிறிஸ்தவர்களிடம் பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 4:16) மிலேத்துவில் எபேசிய மூப்பர்களை பவுல் சந்தித்துப் பேசினபோது, தான் எதையும் மறைத்து வைக்காமல், “வெளியரங்கமாக வீடுகள்தோறும்” அவர்களுக்குப் போதித்ததை நினைப்பூட்டினார். (அப்போஸ்தலர் 20:20, 21) பவுலின் தோழரான தீமோத்தேயு இந்த அப்போஸ்தலர் பின்பற்றிய முறைகளை அறிந்திருந்தார். எனவே அவற்றை கொரிந்தியர்களுக்கு சொல்லிக் கொடுக்க முடிந்தது. (1 கொரிந்தியர் 4:17) பவுலின் போதிக்கும் முறைகளை கடவுள் ஆசீர்வதித்தார். அவ்வாறே நாமும், வெளியரங்கமாக வீடுவீடாகவும், மறுசந்திப்புகளிலும், வீட்டு பைபிள் படிப்புகளிலும், ஆட்கள் காணப்படும் எல்லா இடங்களிலும் நற்செய்தியை பிரசங்கிப்பதில் முன்னேறுகையில் அவர் ஆசீர்வதிப்பார்.—அப்போஸ்தலர் 17:17.
20. பெருமளவில் ஆவிக்குரிய அறுவடை செய்ய வேண்டியிருப்பதை இயேசு எப்படி காட்டினார், சமீப ஆண்டுகளில் இது எவ்வாறு உண்மையாக நிரூபித்திருக்கிறது?
20 பொ.ச. 30-ல் சீகாருக்கு அருகில் ஒரு சமாரிய ஸ்திரீக்கு இயேசு சாட்சி கொடுத்த பின்பு, ஆவிக்குரிய அறுவடையைப் பற்றி அவர் சொன்னார். “இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்” என அவர் தம் சீஷரிடம் சொன்னார். (யோவான் 4:34-36) சமாரிய ஸ்திரீயுடன் பேசியதால் கிடைத்த பலனை—அவள் சான்றளித்ததால் பலர் அவர்மீது விசுவாசம் வைத்ததை—இயேசு ஏற்கெனவே கண்டிருந்தார். (யோவான் 4:39) சமீப ஆண்டுகளில், பல நாடுகள் யெகோவாவின் சாட்சிகள் மீது போட்ட தடையுத்தரவுகளை விலக்கியிருக்கின்றன அல்லது அவர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்திருக்கின்றன; எனவே அறுவடைக்கு புதிய ‘வயல்கள்’ தயாராகின்றன. இதன் பலனாக பெருமளவில் ஆவிக்குரிய அறுவடை நடைபெற்று வருகிறது. ஆவிக்குரிய அறுவடையில் நாம் மகிழ்ச்சியுடன் தொடர்ந்து ஈடுபடுவதால், உண்மையாகவே உலகம் முழுவதிலும் அபரிமிதமான ஆசீர்வாதங்களைக் காண்கிறோம்.
21. மகிழ்ச்சியுள்ள அறுவடைக்காரர்களாக முன்னேறுவதற்கு நமக்கு ஏன் காரணம் இருக்கிறது?
21 கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராயிருக்கையில், வேலையாட்கள் அவசரத் தன்மையுடன் செயல்பட வேண்டும். அவர்கள் காலம் தாழ்த்தாமல் பாடுபட வேண்டும். இன்று நாம் ‘முடிவு காலத்தில்’ வாழ்வதால் சுறுசுறுப்போடும் அவசர உணர்வோடும் உழைக்க வேண்டும். (தானியேல் 12:4) ஆம், நாம் சோதனைகளை எதிர்ப்படுகிறோம், ஆனால், யெகோவாவின் வணக்கத்தாருடைய அறுவடையோ எப்போதும் இல்லாததைவிட மிகுதியாக உள்ளது. ஆகையால் இது களிகூருவதற்கான நாள். (ஏசாயா 9:3) அப்படியானால் மகிழ்ச்சியுள்ள வேலையாட்களாக நாம் அறுவடை வேலையில் முன்னேறுவோமாக!
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• அதிகமான வேலையாட்களுக்கான வேண்டுதலுக்கு அறுவடையின் எஜமானர் எவ்வாறு பதிலளித்திருக்கிறார்?
• நாம் ‘பகைக்கப்படுகிற’ போதிலும் என்ன மனநிலையைக் காத்துக்கொள்கிறோம்?
• நாம் துன்புறுத்தப்பட்டாலும் ஏன் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்?
• நாம் ஏன் அறுவடை வேலையில் அவசர உணர்வுடன் முன்னேற வேண்டும்?
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
ஆவிக்குரிய அறுவடையில் ஈடுபட்டிருப்போருக்கு தேவதூதரின் ஆதரவு உள்ளது
[பக்கம் 18-ன் படம்]
அறிவிப்பு ஊர்வலங்கள் பலருடைய கவனத்தை ராஜ்ய செய்தியிடம் திருப்பின
[பக்கம் 18-ன் படம்]
நாம் விதை விதைத்து நீர் பாய்ச்சுகிறோம், கடவுளே வளரச் செய்கிறார்