அன்புக்கு உண்டோ அழிவு
“முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.”—1 கொரிந்தியர் 12:31.
1-3. (அ) அன்புகாட்ட பழகுவது எவ்வாறு வேறொரு பாஷையைக் கற்பதைப் போன்றது? (ஆ) அன்புகாட்ட பழகுவதை சவாலாக்கும் சில விஷயங்கள் யாவை?
நீங்கள் எப்போதாவது வேறொரு பாஷையைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்திருக்கிறீர்களா? அது மிகப்பெரிய சாதனை என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் சிறு குழந்தைக்கோ, கேள்விஞானமே போதும், பாஷையைக் கற்றுக்கொள்ள. அதன் மூளை, வார்த்தைகளின் தொனிகளையும் அர்த்தங்களையும் நன்கு கிரகித்துக்கொள்கிறது. கொஞ்ச நாட்களுக்குள் பேச்சு சரளமாக வந்துவிடுகிறது. சிலசமயம் நிறுத்தாமல்கூட பேசிக்கொண்டே இருக்கும். பெரியவர்களோ அப்படியில்லை. சில முக்கிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதற்கே சதா டிக்ஷ்னரியை புரட்ட வேண்டியிருக்கிறது. ஆனாலும் காலப்போக்கில், பழகப் பழக அந்தப் பாஷையிலேயே யோசிக்க ஆரம்பிக்கிறோம். அதன்பின் பேசுவது சுலபமாகிவிடுகிறது.
2 அன்புகாட்ட பழகுவது வேறொரு பாஷையைக் கற்றுக் கொள்வதைப் போன்றதுதான். அன்பென்னும் தெய்வீக குணம் மனிதர்களிடம் ஓரளவுக்கு இயல்பாகவே இருப்பது உண்மை. (ஆதியாகமம் 1:27; ஒப்பிடுக: 1 யோவான் 4:8.) இருந்தாலும் அன்பு காட்ட கற்றுக்கொள்வதற்கு அசாதாரண முயற்சி தேவை, அதுவும் பாசத்திற்குப் பஞ்சப்பாட்டு பாட வேண்டிய இந்தக் காலத்தில்! (2 தீமோத்தேயு 3:1-5) சிலசமயம் குடும்பத்திலேயே பாசத்தை வலைபோட்டுத் தேட வேண்டிய நிலை. வீட்டிலுள்ளவர்கள் அன்பாக நாலு வார்த்தை சொல்லி கேட்காத, ‘கல்நெஞ்ச’ சூழலில் வளர்கிறார்கள் அநேகர். (எபேசியர் 4:29-31; 6:4) நமக்கே யாரும் அன்புகாட்டியதில்லை எனும்போது நாம் எப்படி மற்றவர்களுக்கு அன்புகாட்ட பழகுவது?
3 நம் உதவிக்கு வருகிறது பைபிள். 1 கொரிந்தியர் 13:4-8-ல், அன்புக்கு பவுல் சொற்பொருள் விளக்கம் தருவதில்லை. மாறாக, இந்த உயரிய குணம் செயல்படும் விதத்தை தத்ரூபமாய் விவரிக்கிறார். இவ்வசனங்களை சிந்திப்பது, இத்தெய்வீக குணத்தை சரிவர புரிந்துகொண்டு அதை வெளிகாட்ட நம்மை பக்குவப்படுத்தும். பவுல் காட்டும் அன்பின் சில கோணங்களை கவனிக்கலாம். இவற்றை பொதுவாக மூன்று பிரிவுகளாக்கலாம். (1) நம் நடத்தை; (2) குறிப்பாக, மற்றவர்களோடு உள்ள நம் உறவு; (3) சகிப்புத்தன்மை.
அன்பு கர்வத்தை வெல்லும்
4. பொறாமையைப் பற்றி பைபிள் சொல்வதென்ன?
4 அன்பை அறிமுகப்படுத்திய பிற்பாடு, “அன்புக்குப் பொறாமையில்லை” என பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதினார். (1 கொரிந்தியர் 13:4) பொறாமை என்பது மற்றவர்கள் சீரும் சிறப்புமாக இருப்பதைப் பார்த்து அல்லது அவர்களது சாதனைகளைப் பார்த்து வயிறு எரிவது. இப்படிப்பட்ட பொறாமை சரீர ரீதியிலும் மன ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் நம்மை சீரழிக்கும்.—நீதிமொழிகள் 14:30; ரோமர் 13:13; யாக்கோபு 3:14-16.
5. சபையில் ஏதாவது பொறுப்புகள் கிடைக்கவில்லை என நினைத்தால் எவ்வாறு பொறாமையை அன்பினால் வெல்லலாம்?
5 இதை மனதில் வைத்து, ‘எனக்கு சபையில் சில பொறுப்புகள் கிடைக்கவில்லை என்று பொறாமைப்படுகிறேனா?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். ஆமாம் என்ற பதில் கிடைத்தால் சோர்ந்துவிடாதீர்கள். “பொறாமைப்படும் இயல்பு” எல்லா அபூரண மனிதர்களுக்கும் உண்டு என பைபிள் எழுத்தாளரான யாக்கோபு நினைவூட்டுகிறார். (யாக்கோபு 4:5, NW) உங்கள் சகோதரர் மீதுள்ள பொறாமையை அன்பினால் வெல்லலாம். சந்தோஷப்படுகிறவர்களோடு சேர்ந்து சந்தோஷப்பட அது உங்களுக்கு உதவும். மற்றவர்களுக்கு நல்லது நடக்கும்போது அல்லது பாராட்டு கிடைக்கும்போது வெந்துபோகவும் மாட்டீர்கள்.—1 சாமுவேல் 18:7-9-ஐ ஒப்பிடுக.
6. முதல் நூற்றாண்டு கொரிந்திய சபையில் படுமோசமான என்ன நிலைமை ஏற்பட்டது?
6 அன்பு “தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது” என்றும் பவுல் சொல்கிறார். (1 கொரிந்தியர் 13:4) நம்மிடம் ஏதோ ஒரு திறமை அல்லது சாமர்த்தியம் இருக்கிறது என்பதற்காக ஜம்பமடிக்கக்கூடாது. பண்டைய கொரிந்திய சபைக்குள் நுழைந்திருந்த புகழ்வெறிபிடித்த சிலர் இதைத்தான் செய்தார்கள். கருத்துக்களை விளக்குவதில் அல்லது சாமர்த்தியமாய் செயல்படுவதில் அவர்கள் கில்லாடிகளாய் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் தங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தது, சபையில் பிரிவினைகள் உண்டாகக் காரணமானது. (1 கொரிந்தியர் 3:3, 4; 2 கொரிந்தியர் 12:20, NW) அதன்பின் நிலைமை படு மோசமானதால், ‘புத்தியில்லாதவர்களைச் சகித்ததற்காக’ கொரிந்தியர்களை பவுல் கண்டித்தார். ‘மகா பிரதான அப்போஸ்தலர்கள்’ என புகழ்வெறிபிடித்தவர்களை நக்கலாகவும் குறிப்பிட்டார்.—2 கொரிந்தியர் 11:5, 19, 20.
7, 8. இயல்பாய் நமக்கிருக்கும் திறமைகளை அனைவரது ஒற்றுமைக்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பைபிளிலிருந்து காட்டுக.
7 இன்றும் அதே நிலைமை ஏற்படலாம். உதாரணத்திற்கு, ஊழியத்தில் தங்கள் சாதனைகளைக் குறித்தோ கடவுளது அமைப்பில் தங்களுக்கிருக்கும் சிலாக்கியங்களைக் குறித்தோ சிலர் பெருமையடித்துக் கொள்ளலாம். அப்படியே சபையில் மற்றவர்களுக்கு இல்லாத திறமையோ சாமர்த்தியமோ நமக்கு இருக்கிறது என்றாலும் தலைகால் தெரியாமல் நடந்துகொள்ள அவசியமிருக்கிறதா என்ன? சொல்லப்போனால், இயல்பாய் நமக்கிருக்கும் திறமைகளை, நம்முடைய உயர்வுக்காக அல்ல அனைவரது ஒற்றுமைக்காகவே பயன்படுத்த வேண்டும்.—மத்தேயு 23:12; 1 பேதுரு 5:6.
8 சபையில் அநேக அங்கத்தினர்கள் இருந்தாலும் ‘தேவனே . . . சரீரத்தை அமைத்திருக்கிறார்’ என பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 12:19-26) ‘அமைத்திருக்கிறார்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, பல வர்ணங்களை பிரித்தறிய முடியாதபடி ஒன்றரக் கலப்பதைப் போன்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. ஆகவே சபையிலுள்ள எவரும் தனது திறமைகளைக் குறித்து செருக்கடைந்து, மற்றவர்கள்மேல் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. கர்வத்திற்கும் புகழ்வெறிக்கும் கடவுளுடைய அமைப்பில் ஏது இடம்!—நீதிமொழிகள் 16:19; 1 கொரிந்தியர் 14:12; 1 பேதுரு 5:2, 3.
9. நம்மை எச்சரிக்க, தன்னலத்தையே நாடிய எந்த நபர்களின் உதாரணத்தை பைபிள் அளிக்கிறது?
9 அன்பு “தன்னலம் நாடாது.” (1 கொரிந்தியர் 13:5, பொ.மொ.) அன்புள்ள ஒருவர் தன் காரியத்தை சாதிப்பதற்காக மற்றவர்களை சொந்த ஆதாயத்திற்காக வசப்படுத்திக்கொள்ள மாட்டார். இந்த விஷயத்தில் பைபிள் எச்சரிக்கையூட்டும் உதாரணங்களைத் தருகிறது. தன்னல நோக்கோடு மற்றவர்களை வசப்படுத்திக்கொண்ட தெலீலாள், யேசபேல், அத்தாலியாள் ஆகிய பெண்களைப் பற்றி அது சொல்கிறது. (நியாயாதிபதிகள் 16:16; 1 இராஜாக்கள் 21:25; 2 நாளாகமம் 22:10-12) தாவீது ராஜாவின் மகனான அப்சலோம் மற்றொரு உதாரணம். எருசலேமுக்கு நியாயங்கேட்டு வரும் மக்களை அவன் சந்தித்து, அக்கறையாக அவர்களது பிரச்சினைகளைக் கேட்டுத் தீர்த்துவைக்க ராஜாவின் நியாயசங்கத்தில் ஒருவரும் இல்லை என நயமாய் பேசி மடக்குவான். பின், தன்னைப் போன்ற அன்பே உருவான ஒருவர்தான் நியாயம் விசாரிக்க தேவை என நேரடியாகவே சொல்லிவிடுவான்! (2 சாமுவேல் 15:2-4) உண்மையில், அப்சலோமுக்கு, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது அல்ல, தன்மீது மட்டுமே கரிசனை. ராஜாபோல் நடந்துகொண்டு, அநேகரது மனதை தன்வசம் திருப்பினான். ஆனால் அப்சலோம் படுதோல்வி கண்ட சமயமும் வந்தது. அவன் செத்தபோது முறைப்படி அடக்கம் செய்யப்படக்கூட நாதியில்லாமல் போனான்.—2 சாமுவேல் 18:6-17.
10. மற்றவர்களின் நலனில் அக்கறைகொள்கிறோம் என்பதை எவ்வாறு காட்டலாம்?
10 இன்று இது கிறிஸ்தவர்களுக்கு ஒரு எச்சரிப்புப் பாடம். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், நமக்கு இயல்பாகவே வயப்படுத்தக்கூடிய சக்தி இருக்கலாம். நாலு பேர் கூடியிருக்கையில் முந்திக்கொண்டு பேசுவதும், ஒத்துக்கு மத்தாளம் போடாதவர்களின் ‘மூக்கை உடைப்பதும்’ நமக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனாலும் உண்மையான அன்பிருந்தால், நாம் மற்றவர்களின் நலனிலும் அக்கறைகொள்வோம். (பிலிப்பியர் 2:2-4) மற்றவர்களை வசப்படுத்திக்கொள்ள மாட்டோம். அல்லது கடவுளுடைய அமைப்பில் நாம் வெகு காலம் இருப்பதாலோ நமக்கிருக்கும் அதிகாரத்தாலோ நாம் நினைப்பது மட்டுமே சரி என்பதுபோல் சந்தேகத்திற்குரிய சொந்த கருத்துக்களை புகுத்த மாட்டோம். அதற்கு மாறாக, “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என்ற பைபிள் நீதிமொழியை எப்போதும் நினைவில் வைத்திருப்போம்.—நீதிமொழிகள் 16:18.
அன்பிருக்கும் இடத்தில் சுமூகமுண்டு
11. (அ) அன்பு தயவுள்ளது, அயோக்கியமானதைச் செய்யாது என்பதை எந்தெந்த விதங்களில் காட்டலாம்? (ஆ) நாம் அநியாயத்தில் சந்தோஷப்படுவதில்லை என எப்படிக் காட்டலாம்?
11 அன்பு ‘தயவுள்ளது,’ ‘அயோக்கியமானதை செய்யாது’ என்றும் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 13:4, 5) ஆம், அன்பிருந்தால் முரட்டுத்தனமாக, மட்டரகமாக அல்லது அவமரியாதையாக நடந்துகொள்ள மாட்டோம். மாறாக, மற்றவர்களது மனதை நோகடிக்காதவாறு பார்த்துக்கொள்வோம். உதாரணத்திற்கு, மற்றவர்களின் மனசாட்சியைப் புண்படுத்தும் செயல்களை செய்யமாட்டோம். (1 கொரிந்தியர் 8:13-ஐ ஒப்பிடுக.) அன்பு “அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.” (1 கொரிந்தியர் 13:6) நாம் யெகோவாவின் சட்டதிட்டங்களை நேசித்தால், ஒழுக்கக்கேட்டை கண்டுங்காணாதிருக்க மாட்டோம். கடவுள் வெறுக்கும் காரியங்களை கண்டுகளிக்கவும் மாட்டோம். (சங்கீதம் 119:97) மற்றவர்களை தட்டிவீழ்த்துவதில் அல்ல, தட்டிக்கொடுப்பதிலேயே சந்தோஷப்படும் அன்பு.—ரோமர் 15:2; 1 கொரிந்தியர் 10:23, 24; 14:26.
12, 13. (அ) எவராவது நம்மைப் புண்படுத்திவிட்டால் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? (ஆ) நியாயமான கோபம்கூட முட்டாள்தனமான செயல்களில் போய் முடிவடையும் என்பதற்கு பைபிளிலிருந்து உதாரணங்களைத் தருக.
12 அன்பு “சினமடையாது” (“முன்கோபப்படாது,” பிலிப்ஸ் மொழிபெயர்ப்பு) என பவுல் எழுதுகிறார். (1 கொரிந்தியர் 13:5) ஒருவர் மனதைப் புண்படுத்தும்போது கலக்கமடைவதோ ஓரளவு கோபப்படுவதோ அபூரண மனிதர்களான நமக்கு சகஜம்தான். இருந்தாலும் வெகுநாள் மனக்கசப்பை வளர்த்துக்கொள்வதும் தணியாத கோபம் கொள்வதும் தவறு. (சங்கீதம் 4:4; எபேசியர் 4:26) நியாயமான கோபத்தையும் கட்டுப்படுத்தாவிட்டால், முட்டாள்தனமான செயல்களில் போய் முடிவடையும். அதற்காக யெகோவாவிற்கு பதில்சொல்ல வேண்டிவரும்.—ஆதியாகமம் 34:1-31; 49:5-7; எண்ணாகமம் 12:3; 20:10-12; சங்கீதம் 106:32, 33.
13 சிலர் மற்றவர்களது அபூரணத்தால் இடறலடைந்து, கிறிஸ்தவ கூட்டங்களுக்கோ வெளி ஊழியத்திற்கோ செல்வதை நிறுத்திவிடுகிறார்கள். இவர்களில் அநேகர் ஒருகாலத்தில் விசுவாசத்திற்காக அதிகம் போராடியிருக்கிறார்கள். குடும்ப எதிர்ப்பு, வேலைபார்க்கும் இடத்தில் ஏளனப்பேச்சு போன்றவற்றை அவர்கள் சகித்திருக்கலாம். காரணம், அவற்றை தங்கள் விசுவாசத்திற்கான பரீட்சைகளாக கருதியதே. அவ்வாறு அவர்கள் கருதியது சரியும்கூட. ஆனால் இன்னொரு கிறிஸ்தவர் தயவற்ற விதத்தில் எதையாவது சொல்லிவிட்டால் அல்லது செய்துவிட்டால்? இதுவும் விசுவாசத்திற்கான பரீட்சை அல்லவா? ஆம் இதுவும் பரீட்சைதான். ஏனென்றால் நாம் தணியாத கோபங்கொண்டால் ‘பிசாசுக்கு இடங்கொடுத்து’விடுவோமே!—எபேசியர் 4:27.
14, 15. (அ) ‘தீங்கை கணக்கு வைப்பதன்’ அர்த்தம் என்ன? (ஆ) மன்னிப்பதில் எவ்வாறு நாம் யெகோவாவை பின்பற்றலாம்?
14 அன்பு “தீங்கை கணக்கு வைக்காது” என நல்ல காரணத்தோடுதான் பவுல் சொல்கிறார். (1 கொரிந்தியர் 13:5, NW) கணக்குப்பதிவியல் சம்பந்தமான வார்த்தையை இங்கே அவர் பயன்படுத்துகிறார். தனக்கு இழைக்கப்பட்ட தீங்கை மறவாதிருக்க லெட்ஜர் புக்கில் எழுதிவைப்பதை அது குறிக்கிறது. சொல்லிலோ செயலிலோ நம்மை எவராவது புண்படுத்தியிருந்தால், என்றாவது ஒருநாள் குத்திக்காண்பிப்பதற்காக அதை மனதில் நிரந்தரமாக பதியவைப்பது அன்புக்குரிய காரியமாகுமா? யெகோவா நம்மை இப்படி இரக்கமற்ற விதத்தில் பரிசோதிக்காததற்கு எவ்வளவு சந்தோஷப்படலாம்! (சங்கீதம் 130:3) ஆம், நாம் மனந்திரும்புகையில் நம் தவறுகளை அவர் முழுமையாய் துடைத்தழித்து விடுகிறார்.—அப்போஸ்தலர் 3:19, 20.
15 இந்த விஷயத்தில் நாம் யெகோவாவை பின்பற்றலாம். எவராவது நம்மை மட்டமாக நடத்துவதாக நினைத்தால், சட்டென்று கோபப்பட்டு நிலைகுலைந்துவிடக் கூடாது. அந்நினைப்பு நம் மனதை ரணமாக்கிவிடும். அந்நபரால் நம்மை புண்படுத்த முடிந்தது கையளவு என்று எடுத்துக்கொண்டால், நம்மை நாமே புண்படுத்துவது கடலளவு ஆகிவிடும். (பிரசங்கி 7:9, 22) ஆகவே அன்பு “சகலத்தையும் விசுவாசிக்கும்” என்பதை நினைவில் கொள்ளவேண்டும். (1 கொரிந்தியர் 13:7) நாம் யாருமே ஏமாற விரும்புவதில்லைதான். ஆனால் அதற்காக நம் சகோதரர்களை அநாவசியமாய் சந்தேகக் கண்களோடு பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். முடிந்தளவு மற்றவர்களை நல்லவர்களாகவே நினைப்போமாக.—கொலோசெயர் 3:13.
அன்பிருந்தால் சகித்திருப்போம்
16. எந்தச் சந்தர்ப்பங்களில் அன்பு பொறுமையாய் இருக்க உதவும்?
16 “அன்பு பொறுமையுள்ளது” என பவுல் சொல்கிறார். (1 கொரிந்தியர் 13:4, பொ.மொ.) அது சோதனைகளை, வெகு காலத்திற்கும்கூட சகித்திருக்க நமக்கு உதவும். உதாரணத்திற்கு, வித்தியாசப்பட்ட மத நம்பிக்கையுள்ள குடும்ப அங்கத்தினர்களோடு அநேக கிறிஸ்தவர்கள் வருடக்கணக்காக வாழ்ந்து வருகின்றனர். மற்றவர்களோ திருமணமாகாமல் இருக்கின்றனர். இது அவர்களாகவே தெரிவு செய்தது அல்ல, ஆனால் ‘கர்த்தருக்குட்பட்ட’ ஏற்ற துணை கிடைக்காததாலேயே. (1 கொரிந்தியர் 7:39; 2 கொரிந்தியர் 6:14) இன்னும் பலர் சோர்வூட்டும் உடல்நலப் பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கின்றனர். (கலாத்தியர் 4:13, 14; பிலிப்பியர் 2:25-30) இந்த அபூரண உலகில் வாழ்க்கையை ஓட்ட எப்படியும் சகிப்புத்தன்மை தேவை.—மத்தேயு 10:22; யாக்கோபு 1:12.
17. எல்லாவற்றையும் சகிக்க எது உதவும்?
17 அன்பு “சகலத்தையும் தாங்கும், . . . சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்” என பவுல் நமக்கு உறுதியளிக்கிறார். (1 கொரிந்தியர் 13:7) யெகோவாவின் மீதிருக்கும் அன்பு, நீதியின் நிமித்தம் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளிக்க நமக்கு உதவும். (மத்தேயு 16:24; 1 கொரிந்தியர் 10:13) உயிர்த் தியாகம் செய்வது அல்ல, ஆனால் சமாதானமும் சாந்தமும் நிறைந்த வாழ்க்கை வாழ்வதே நம் குறிக்கோள். (ரோமர் 12:18; 1 தெசலோனிக்கேயர் 4:11, 12) இருந்தாலும் நம் விசுவாசம் பரீட்சிக்கப்படுகையில், கிறிஸ்துவின் சீஷர்கள் எதிர்ப்பட வேண்டிய ஒன்று என கருதி சந்தோஷத்தோடு சகிக்கிறோம். (லூக்கா 14:28-33) அவ்வாறு சகித்திருக்கையில், சோதனைகள் நன்மைக்கே என்ற நம்பிக்கையோடு இருக்க முயலுகிறோம்.
18. சோதனைகள் இல்லாத சமயத்திலும்கூட சகிப்புத்தன்மை தேவை என்பதை எப்படி விளக்குவீர்கள்?
18 கஷ்டங்கள் மத்தியில்தான் சகித்திருக்க வேண்டும் என்பதில்லை. சிலசமயங்களில் சகித்திருப்பது என்பது, வெறுமனே நிலைத்திருப்பது, அதாவது சோதனைகள் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி நம் பாதையில் தொடர்ந்து செல்வதைக் குறிக்கிறது. ஆவிக்குரிய பழக்கவழக்கங்களை தவறாமல் கடைப்பிடிப்பதும் சகிப்புத்தன்மையைக் காட்டுகிறது. உதாரணத்திற்கு, உங்கள் சூழ்நிலைக்கேற்ப முழுமையாய் ஊழியத்தில் பங்கு கொள்கிறீர்களா? கடவுளுடைய வார்த்தையைப் படித்து தியானித்து, பரலோக தந்தையோடு ஜெபத்தில் பேசுகிறீர்களா? சபைக் கூட்டங்களுக்கு தவறாமல் சென்று, உடன் விசுவாசிகளை உற்சாகப்படுத்துவதோடு நீங்களும் உற்சாகமடைகிறீர்களா? இவ்வாறெல்லாம் செய்தால், சோதனைகள் இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி நீங்கள் சகித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என அர்த்தம். ஒருபோதும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள். ஏனென்றால் “நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.”—கலாத்தியர் 6:9.
அன்பு—“மேன்மையான வழி”
19. எவ்வாறு அன்பு “மேன்மையான வழி”?
19 பவுல் இத்தெய்வீக குணத்தை, “மேன்மையான வழி” என அழைப்பதன் மூலம் அன்புகாட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். (1 கொரிந்தியர் 12:31) எந்த விதத்தில் அது ‘மேன்மையானது’? இதற்கு முன்னர், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பெற்றிருந்த ஆவியின் வரங்களை பவுல் பட்டியலிட்டிருந்தார். சிலரால் தீர்க்கதரிசனம் உரைக்க முடிந்தது, மற்றவர்களால் வியாதியைக் குணப்படுத்த முடிந்தது, இன்னும் பலரால் அந்நிய பாஷையில் பேச முடிந்தது. சந்தேகமின்றி, இவை திகைக்கவைக்கும் வரங்கள்! இருந்தாலும் பவுல் கொரிந்தியர்களுக்குச் சொன்னார்: “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.” (1 கொரிந்தியர் 13:1, 2) ஆம், கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் நாம் செய்யும் மதிப்புள்ள செயல்கள்கூட, அன்பினால் தூண்டப்படவில்லை என்றால் ‘செத்த கிரியைகள்’ ஆகிவிடும்.—எபிரெயர் 6:1.
20. அன்பை வளர்த்துக்கொள்ள ஏன் விடாமுயற்சி தேவை?
20 அன்பென்னும் தெய்வீக குணத்தை வளர்த்துக்கொள்வதற்கான மற்றொரு காரணத்தை இயேசு சொல்கிறார். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாய் இருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) ‘இருந்தால்’ என்ற வார்த்தை, அன்புகாட்ட பழகிக்கொள்வதா வேண்டாமா என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரது கையிலும் விட்டுவிடுகிறது. வேறொரு நாட்டில் வாழ்கிறோம் என்பதுதானே அந்தப் பாஷையைக் கட்டாயம் கற்றுக்கொள்வோம் என அர்த்தப்படுத்தாது. அதேபோல் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்குச் செல்வதாலும் உடன் கிறிஸ்தவர்களோடு கூட்டுறவு கொள்வதாலும் தானாகவே அன்புகாட்ட பழகிக்கொள்வோம் என அர்த்தப்படுத்தாது. இந்தப் “பாஷையைக்” கற்றுக்கொள்வதற்கு விடாமுயற்சி தேவை.
21, 22. (அ) பவுல் விவரிக்கும் அன்பின் சில கோணங்களைக் கடைப்பிடிப்பது கடினமாய் இருந்தால் என்ன செய்வது? (ஆ) எந்த விதத்தில் “அன்பு ஒருக்காலும் ஒழியாது”?
21 பவுல் விவரிக்கும் அன்பின் சில கோணங்களைக் கடைப்பிடிப்பது சிலசமயம் உங்களுக்கு கடினமாய் இருக்கலாம். ஆனால் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். பொறுமையோடு முயற்சி செய்யுங்கள். பைபிளைத் தவறாமல் படித்து, மற்றவர்களோடு பழகுகையில் அதன் நியமங்களைப் பொருத்துங்கள். யெகோவாவின் முன்மாதிரியை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். பவுல் எபேசியர்களுக்கு இவ்வாறு அறிவுரை வழங்கினார்: “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”—எபேசியர் 4:32.
22 காலம் செல்லச்செல்ல வேறு பாஷையில் பேசுவது சுலபமாகிவிடுவது போலவே, அன்பு காட்டுவதும் காலப்போக்கில் சுலபமாகிவிடும். “அன்பு ஒருக்காலும் ஒழியாது” என பவுல் உறுதியளிக்கிறார். (1 கொரிந்தியர் 13:8) ஆவியின் அற்புத வரங்கள் ஒருசமயத்தில் முடிவுக்கு வந்தன. அன்புக்கோ முடிவே இல்லை. ஆகவே இத்தெய்வீக குணத்தைக் காட்ட தொடர்ந்து பழகிக்கொள்ளுங்கள். பவுல் சொன்ன விதமாகவே அது “மேன்மையான வழி.”
உங்களால் விளக்க முடியுமா?
◻ அன்பினால் எவ்வாறு கர்வத்தை வெல்லலாம்?
◻ சபையில் சமாதானத்தை முன்னேற்றுவிக்க அன்பு எந்தெந்த விதங்களில் உதவும்?
◻ அன்பு எவ்வாறு சகித்திருப்பதற்கு உதவும்?
◻ அன்பு எவ்வாறு “மேன்மையான வழி”?
[பக்கம் 19-ன் படம்]
அன்பிருந்தால், சகோதர சகோதரிகளின் குறைகளை பெரிதுபடுத்த மாட்டோம்
[பக்கம் 23-ன் படம்]
தேவராஜ்ய பழக்கவழக்கங்களை தவறாமல் கடைப்பிடிப்பதே சகிப்புத்தன்மைக்கு அழகு