போரின் புதிய முகம்
போர் எப்பொழுதும் இரத்தத்தை உறைய வைத்திருக்கிறது. அது படைவீரர்களுடைய வாழ்க்கையை நாசமாக்கியிருக்கிறது, மக்களுக்கு சொல்லொணா துன்பத்தை இழைத்திருக்கிறது. ஆனால் சமீப வருடங்களில், போரின் முகம் மாறியிருக்கிறது. எந்த விதத்தில்?
இன்றைக்கு நடைபெறும் போர்கள் முக்கியமாக உள்நாட்டுப் போர்களே, அதாவது ஒரே நாட்டைச் சேர்ந்த எதிரெதிர் அணியினருக்கு இடையே நடக்கும் போர்களே. உள்நாட்டுப் போர்கள் பெரும்பாலும் நீண்ட காலத்திற்கு நடைபெறுகின்றன, பொது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, நாடுகளுக்கு நடுவில் மூளும் போர்களைவிட பெரும் நாசங்களை ஏற்படுத்துகின்றன. “உள்நாட்டுப் போர்கள் கொடூரமானவை; இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான மரணங்கள், பாலியல் பலாத்காரங்கள், நாட்டைவிட்டு பலவந்தமாக வெளியேற்றப்படுதல், சில சமயங்களில் இனப் படுகொலைகள் ஆகியவை நடக்கின்றன” என ஸ்பானிய சரித்திராசிரியர் ஹூலியான் காஸநோவா குறிப்பிடுகிறார். சொல்லப்போனால், அக்கம்பக்கத்தில் வசிக்கும் தொகுதியினர் ஒருவருக்கொருவர் அட்டூழியங்கள் செய்யும்போது உண்டாகும் மனக்காயங்கள் ஆறுவதற்கு நூற்றாண்டுகள் ஆகலாம்.
பனிப் போர் முடிவடைந்தது முதல், வெவ்வேறு தேசங்களுக்கு இடையே வெகுசில போர்களே நடைபெற்றிருக்கின்றன. “1990-2000 ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட பெரிய போர்களில் மூன்றைத் தவிர மற்றெல்லாம் உள்நாட்டுப் போர்களே” என ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) அறிவிக்கிறது.
உண்மைதான், உள்நாட்டு சண்டைகள் அதிக பீதியை உண்டாக்காமல் இருப்பதுபோல தோன்றலாம், சர்வதேச செய்திகளில் அடிபடாமல் இருக்கலாம், ஆனால் இத்தகைய சண்டைகளால் உண்டாகும் துயரங்களும் நாசமோசங்களும் படு பயங்கரமானவையே. உள்நாட்டு சண்டைகளால் கோடிக்கணக்கானோர் செத்து மடிந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், கடந்த இரு பத்தாண்டுகளில், போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட நாடுகளில் மூன்றை மட்டும் எடுத்துக்கொண்டால், அதாவது ஆப்கானிஸ்தான், காங்கோ மக்கள் குடியரசு, சூடான் ஆகியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டால், கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பால்கனில், வெறித்தனமான இனச் சண்டைகளில் ஏறக்குறைய 2,50,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், கொலம்பியாவில் பல காலமாக நடைபெற்றுவந்த கொரில்லா போர் 1,00,000 பேரை பலிவாங்கியிருக்கிறது.
உள்நாட்டுப் போர் எந்தளவுக்கு கொடூரமானது என்பது, சிறுபிள்ளைகள் மீது அது ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. கடந்த பத்தாண்டில், உள்நாட்டு சண்டைகளால் 20 லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் மாண்டனர் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையர் அறிவிக்கிறார். அது தவிர, 60 லட்சம் பேர் காயமுற்றனர். பிள்ளைகள் போராளிகளாக மாறுவது அதிகரித்துக் கொண்டே போகிறது. குழந்தைப் போராளி ஒருவன் இவ்வாறு சொல்கிறான்: ‘எனக்கு பயிற்சி கொடுத்தாங்க. கையில் துப்பாக்கி கொடுத்தாங்க. நான் போதைப் பொருட்களை சாப்பிட்டேன். ஆட்களை சரமாரியாக சுட்டுத்தள்ளினேன். அது வெறும் போர்தான் . . . எனக்கு ஆர்டர் கொடுத்தபடி செய்தேன். அது தப்புன்னு எனக்குத் தெரியும். சொல்லப்போனா அத செய்ய நான் விரும்பல.’
உள்நாட்டுப் போர் சகஜமாக நடைபெறும் நாடுகளில் வாழும் பிள்ளைகள் அநேகர் சமாதானம் என்றாலே என்னவென்று தெரியாமல் வளர்ந்து வருகிறார்கள். பள்ளிக்கூடங்கள் எல்லாம் தகர்த்தெறியப்பட்டு கிடக்கும் ஓர் உலகில், துப்பாக்கிகளே பேசுகிற ஓர் உலகில் அவர்கள் வாழ்கிறார்கள். டியூன்ஜா என்ற 14 வயது பெண் இவ்வாறு கூறுகிறாள்: “எக்கச்சக்கமான ஆட்களை கொன்று குவிச்சுட்டாங்க . . . இனிமே பறவை பாடுற சத்தத்தை நீங்க கேட்க முடியாது, அம்மா அப்பாவையோ அண்ணன் தங்கச்சியையோ இழந்து தவிக்கும் பிள்ளைங்க சத்தத்தைத்தான் கேட்க முடியும்.”
காரணங்கள் யாவை?
கோர முகம் காட்டும் இத்தகைய உள்நாட்டுப் போர்களுக்கு எண்ணெய் வார்ப்பவை எவை? இனப் பகைமை, மத வேறுபாடு, அநீதி, அரசியல் குழப்பம் ஆகியவை முக்கிய காரணிகள். மற்றொரு அடிப்படை காரணம் பேராசை—பணம், பதவிக்கான பேராசை. இந்தப் பேராசையின் காரணமாகவே அரசியல் தலைவர்கள் பகைமையை தூண்டிவிடுகிறார்கள், அதனால் சண்டை வலுப்பெறுகிறது. துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடும் அநேகர் “சுய லாபத்திற்காக” அப்படி செய்கிறார்கள் என SIPRI வெளியிட்ட ஓர் அறிக்கை கூறுகிறது. அது தொடர்ந்து இவ்வாறு கூறுகிறது: “இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் பெரிய அளவில் நடத்தும் வைர வியாபாரம் முதல் இளைஞர்கள் கிராம அளவில் துப்பாக்கி முனையில் அடிக்கும் கொள்ளைகள் வரை, பேராசை பல விதங்களில் விஸ்வரூபம் எடுக்கிறது.”
பயங்கரமான ஆயுதங்கள் மலிவாக கிடைப்பதும் இந்தப் படுகொலைகளுக்கு காரணமாகும். ஓராண்டில் ஏற்படும் சுமார் 5,00,000 சாவுகளுக்கு—முக்கியமாக பெண்கள், பிள்ளைகளின் சாவுகளுக்கு—காரணம் கைத்துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும்தான். ஓர் ஆப்பிரிக்க நாட்டில், ஏகே-47 துப்பாக்கியை ஒரு கோழியின் விலைக்கு வாங்கிவிடலாம். சில இடங்களில், இந்தக் கோழிகளைப் போலவே துப்பாக்கிகளும் எக்கச்சக்கமாக கிடைக்கின்றன என்பது வருந்தத்தக்க விஷயம். இன்றைக்கு உலகம் முழுவதிலும் சுமார் 50 கோடி சிறுசிறு ஆயுதங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது—12 பேருக்கு ஒன்று என்ற வீதத்தில்!
பகைமைமிக்க உள்நாட்டுப் போர்கள் இந்த 21-ம் நூற்றாண்டின் சிறப்பம்சமாக ஆகிவிடுமா? உள்நாட்டு சண்டைகளைக் கட்டுப்படுத்த முடியுமா? ஒருவரையொருவர் கொலை செய்வதை மக்கள் என்றாவது நிறுத்துவார்களா? இந்தக் கேள்விகளை பின்வரும் கட்டுரை அலசும்.
[பக்கம் 4-ன் பெட்டி]
உள்நாட்டுப் போர்கள் கொண்ட காவு
எளிய ஆயுதங்களைப் பயன்படுத்தி கொடூரமாக நடத்தப்படும் உள்நாட்டுப் போர்களில் பலியாகும் 90 சதவீதத்தினர் போர்வீரர்கள் அல்ல, அப்பாவி மக்களே. “சண்டையில் பெரும்பாலும் சிறுபிள்ளைகள் குறிவைத்துக் கொல்லப்படுகிறார்கள், அவர்கள் வெறுமனே தற்செயலாக பலியாவதில்லை என்பது அப்பட்டமாய் தெரிகிறது” என கிராஸா மாஷெல் என்ற பெண்மணி குறிப்பிடுகிறார்; ஆயுதச் சண்டைகள் பிள்ளைகள் மீது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஐக்கிய நாடுகள் பொதுச் செயலரின் தலைமையிலான ஆராய்ச்சி நிபுணர் இவர்.
கற்பழிப்பது வேண்டுமென்றே செய்யப்படும் இராணுவ யுக்தியில் ஒன்றாக ஆகியிருக்கிறது. போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட இடங்களில், போராளிகள் தாங்கள் கைப்பற்றும் கிராமங்களிலுள்ள கிட்டத்தட்ட எல்லா இளம் பெண்களையும் கற்பழிக்கிறார்கள். கற்பழிக்கிறவர்களுடைய இலக்கே திகிலை ஏற்படுத்துவதாகும் அல்லது இன விரோதிகள் மத்தியில் குடும்ப பந்தங்களை சீர்குலைப்பதாகும்.
பஞ்சமும் வியாதியுமே போரின் பலாபலன்கள். உள்நாட்டுச் சண்டையால் விவசாயம் பாதிக்கப்படும், மருத்துவ வசதி பெரும்பாலும் கிடைக்காது, கஷ்டப்படுகிறவர்களுக்கு சர்வதேச உதவி கிடைப்பதும் அரிதே. ஆப்பிரிக்க உள்நாட்டு சண்டையைப் பற்றிய ஓர் ஆய்வின்படி, பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதத்தினர் வியாதியால் இறந்தனர், 78 சதவீதத்தினர் பசியால் மடிந்தனர். ஆனால் சண்டைக்கு நேரடியாக பலியானவர்கள் வெறும் 2 சதவீதத்தினரே.
சராசரியாக, 22 நிமிடங்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் கண்ணிவெடியில் கால்வைத்து ஆட்கள் ஊனமாகிறார்கள் அல்லது உயிரிழக்கிறார்கள். 60-க்கும் அதிகமான நாடுகளில் ஆறு முதல் ஏழு கோடி வரையிலான கண்ணிவெடிகள் ஆங்காங்கே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு ஓடும்படி பலவந்தப்படுத்தப்படுகிறார்கள். இப்பொழுது உலகெங்கிலும், அகதிகளும் வீடுவாசலை விட்டு தப்பியோடியவர்களும் சுமார் ஐந்து கோடி பேர் இருக்கிறார்கள்—அவர்களில் பாதிப்பேர் சின்னஞ்சிறுசுகள்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
அட்டைப்படம்: சிறுவன்: Photo by Chris Hondros/Getty Images
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Photo by Chris Hondros/Getty Images