“விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு”
போர்க்காலத்தில் எந்தவொரு படைவீரனையாவது அழைத்து, “நீ வீட்டுக்குப் போய் உன் மனைவி மக்களோடு சந்தோஷமாக இரு” என்று கட்டளையிட்டால் எவராவது போகத் தயங்குவாரா?
இஸ்ரவேலின் அரசனாகிய தாவீதின் காலத்தில் இப்படித்தான் ஒரு படைவீரனுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. ஏத்தியனாகிய உரியாவை அரசனே அழைத்து, வீட்டுக்குப் போகச் சொல்லி ஊக்கமூட்டினார். ஆனால் உரியாவோ வீட்டுக்குப் போக மறுத்துவிட்டான். அவன் இப்படி வித்தியாசமாக நடந்து கொண்டதற்கான காரணத்தைக் கேட்டபோது, கடவுளுடைய பிரசன்னத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிற உடன்படிக்கைப் பெட்டியும் இஸ்ரவேல் சேனையும் போர்க்களத்தில் இருக்கும்போது, “நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனா?” என்று அவன் சொன்னான். அத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் இப்படி செய்வதை உரியாவால் துளிகூட நினைத்துப்பார்க்க முடியவில்லை.—2 சாமுவேல் 11:8-11.
உரியா நடந்துகொண்ட விதம் முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது, ஏனென்றால் நாமும் போர் நடக்கிற ஒரு காலத்தில் வாழ்ந்து வருகிறோம். தேசங்கள் இதுவரை ஈடுபட்ட போர்களிலேயே வித்தியாசமான ஒரு போர் இப்பொழுது சீற்றத்துடன் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரை இரண்டு உலகப் போர்களுடன் ஒப்பிட்டால் அவை ஒன்றுமே இல்லை. இப்போரில் நீங்களும் உட்பட்டுள்ளீர்கள். ஆபத்து மிகப் பெரியது, விரோதியோ பயங்கரமானவன். இந்தப் போரில், துப்பாக்கிச் சத்தங்கள் முழங்காது, குண்டுமழை பொழியாது, ஆனால் போர் தந்திரத்தின் தீவிரமோ எவ்விதத்திலும் குறையாது.
ஒரு போர்வீரனாக இந்தப் போரில் கலந்துகொள்வதற்குமுன், அது தார்மீக ரீதியில் சரியானதா என்பதையும் எதற்காக சண்டையிடுகிறீர்கள் என்பதையும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் போருக்கு செலுத்தும் விலை உண்மையிலேயே தகுதியானதா? தனிச்சிறப்புமிக்க இந்தப் போரின் நோக்கத்தை தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் தெளிவாக்கினார்: “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு.” ஆம், இந்தப் போரில் ஒரு கோட்டையை காப்பதற்காக அல்ல, ஆனால் ‘விசுவாசத்தை’—பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள முழு கிறிஸ்தவ சத்தியத்தை—காப்பதற்காக நீங்கள் போராட வேண்டும். இப்படி விசுவாசத்திற்காக நீங்கள் போரிட்டு ஜெயிப்பதற்கு அந்த ‘விசுவாசத்தை’ முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் சந்தேகமேயில்லை.—1 தீமோத்தேயு 6:12.
ஞானமான போர்வீரன் தனது விரோதியை அடையாளம் கண்டுகொள்ள முயல்கிறான். இந்தப் போரில், உங்களுடைய விரோதிக்கு போர் தந்திரத்தில் நெடுநாள் அனுபவம் இருக்கிறது, அவனிடம் படைபலமும் அதற்குரிய வளஆதாரங்களும் பெருமளவில் இருக்கின்றன. அவன் மீமானிட சக்தி படைத்தவன், கொடியவன், மூர்க்கமானவன், எந்த பழிபாவங்களுக்கும் அஞ்சாதவன். யார் அவன்? அவனே சாத்தான். (1 பேதுரு 5:8) இந்த விரோதிக்கு முன்னால் எப்பேர்ப்பட்ட போராயுதமும் மனித தந்திரமும் சூழ்ச்சியும் பலிக்காது. (2 கொரிந்தியர் 10:4) அப்படியானால், இந்தப் போரில் ஈடுபட எதை பயன்படுத்துவது?
‘தேவ வசனமாகிய ஆவியின் பட்டயமே’ பிரதான ஆயுதம். (எபேசியர் 6:17) இது எவ்வளவு வலிமைமிக்கது என்பதை அப்போஸ்தலன் பவுல் காட்டுகிறார்: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12) ஒருவருடைய அடிமனதின் யோசனைகளையும் எண்ணங்களையும் ஊடுருவிச் செல்லக்கூடிய மிகவும் கூர்மையான, குறிதவறாத ஓர் ஆயுதத்தை நிச்சயமாகவே திறமையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும்.
ஓர் இராணுவத்திடம் அதிநவீன ஆயுதங்கள் இருக்கும் என்பதை ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம், ஆனால் அந்த இராணுவ வீரர்களுக்கு அவற்றை பயன்படுத்தும் திறமை இல்லையென்றால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அதைப் போல, உங்களுடைய பட்டயத்தை திறம்பட பயன்படுத்துவதற்கும் உங்களுக்கு அறிவுரைகள் தேவை. மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், மிகவும் அனுபவமிக்க போர்வீரர்களுடைய பயிற்சி உங்களுக்கு கிடைக்கும். அனுபவமிக்க இந்தப் போர்-பயிற்சியாளர்களை “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” என இயேசு அழைத்தார்; தம்மை பின்பற்றுகிறவர்களுக்கு காலத்திற்கேற்ற ஆவிக்குரிய உணவு, அதாவது அறிவுரை வழங்கும் பொறுப்பு இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (மத்தேயு 24:45, NW) இந்த அடிமை வகுப்பார் போதனை வழங்க எடுக்கும் ஊக்கமான முயற்சியையும் எதிரியின் உத்திகளைப் பற்றி தெரிவிக்கும் காலத்திற்கேற்ற எச்சரிக்கைகளையும் வைத்து அவர்களை உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். இவர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட அங்கத்தினர்கள் என்பதை அத்தாட்சிகள் காட்டுகின்றன.—வெளிப்படுத்துதல் 14:1.
இந்த அடிமை வகுப்பார் வெறுமனே அறிவுரை வழங்குவதோடு நிறுத்திக்கொள்வதில்லை. தெசலோனிக்கேய சபைக்கு பின்வருமாறு எழுதிய அப்போஸ்தலன் பவுலின் மனப்பான்மையை அவர்கள் காண்பித்திருக்கிறார்கள்: “உங்களிடத்தில் பட்சமாய் நடந்து கொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறது போல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.” (1 தெசலோனிக்கேயர் 2:7, 8) கொடுக்கப்படும் இந்த அன்பான பயிற்சியை பயன்படுத்திக்கொள்வது ஒவ்வொரு கிறிஸ்தவ வீரருடைய பொறுப்பாகும்.
சர்வாயுதவர்க்கம்
உங்களுடைய தற்காப்புக்காக அடையாளப்பூர்வ சர்வாயுதவர்க்கம் கிடைக்கிறது. எபேசியர் 6:13-18-ல் இந்த ஆயுதங்களின் பட்டியலை பார்க்கலாம். ஜாக்கிரதையுள்ள எந்தவொரு படைவீரனும் தனது ஆவிக்குரிய ஆயுதங்களில் ஏதாவது ஒன்று இல்லாமலோ அல்லது அதை சரியாக பழுதுபார்க்காமலோ சண்டையில் துணிந்திறங்க மாட்டார்.
பாதுகாப்புக்காக எல்லா ஆயுதமும் ஒரு கிறிஸ்தவனுக்குத் தேவை என்றாலும், பெரிய கேடகமாகிய விசுவாசம் முக்கியமான ஒன்று. அதனால்தான் பவுல் இவ்வாறு எழுதினார்: “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள்.”—எபேசியர் 6:16.
முழு உடலையும் மறைக்கிற பெரிய கேடகம் விசுவாசத்தின் தரத்தைக் குறிக்கிறது. யெகோவாவின் வழிநடத்துதலில் உங்களுக்கு பலமான விசுவாசம் வேண்டும், அவருடைய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும் என சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். அந்த வாக்குறுதிகள் ஏற்கெனவே நிறைவேற்றமடைந்ததைப் போல நீங்கள் உணர வேண்டும். சாத்தானுடைய முழு உலகமும் அழிக்கப்படுமா, இந்தப் பூமி பரதீஸாக மாற்றப்படுமா, கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதி காட்டும் மக்கள் பரிபூரணத்திற்கு கொண்டுவரப்படுவார்களா என்ற சந்தேகங்கள் துளிகூட இருக்கக் கூடாது.—ஏசாயா 33:24; 35:1, 2; வெளிப்படுத்துதல் 19:17-21.
ஆனால் தற்பொழுது நீங்கள் ஈடுபட்டு வரும் இந்த வித்தியாசமான போராட்டத்தில் உங்களுக்கு வேறொன்றும் தேவை, அதாவது ஒரு நண்பர் தேவை. சக வீரர்கள் தரும் ஊக்கமும் பரஸ்பர பாதுகாப்பும் போர்க்காலத்தில் நெருங்கிய பந்தத்தை உருவாக்குகிறது; சிலசமயங்களில் மரணத்திலிருந்தும்கூட வீரர்கள் ஒருவரையொருவர் காப்பாற்றுகிறார்கள். ஆகவே, சக மனிதர்களின் தோழமை மதிப்புமிக்கதே, என்றாலும் இந்தப் போரில் தப்பிப்பிழைக்க உங்களுக்கு யெகோவாவின் நட்பு நிச்சயம் தேவை. அதனால்தான் பவுல் தனது ஆயுதங்களின் பட்டியலை இந்த வார்த்தைகளில் முடிக்கிறார்: ‘எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணுங்கள்.’—எபேசியர் 6:18.
நெருங்கிய நண்பரின் அருகே இருப்பதை நாம் அனுபவித்து மகிழ்கிறோம். அவருடைய தோழமையை நாடுகிறோம். யெகோவாவிடம் தவறாமல் ஜெபத்தில் பேசும்போது அவர் நமக்கு நிஜமானவராக, நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பராக ஆகிறார். “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என சீஷனாகிய யாக்கோபு நம்மை உற்சாகப்படுத்துகிறார்.—யாக்கோபு 4:8, NW.
விரோதி பயன்படுத்தும் உத்திகள்
சில சமயங்களில், இந்த உலகத்துடன் போராடுவது என்பது கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட ஓர் இடத்தில் நடந்து செல்வது போல இருக்கலாம். எப்படியென்றால், தாக்குதல் எந்த இடத்திலிருந்தும் வரலாம், அதோடு விரோதி எதிர்பாராத விதத்தில் உங்களை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறான். ஆனால் உங்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பையும் யெகோவா தந்திருக்கிறார் என்ற உறுதியுடனிருங்கள்.—1 கொரிந்தியர் 10:13.
உங்களுடைய விசுவாசத்திற்கு அடிப்படையான பைபிள் சத்தியங்களைத் தாக்குவதன் மூலம் விரோதி உங்கள் மீது குறிவைக்கலாம். உங்களை வீழ்த்துவதற்கு விசுவாச துரோகிகள் நயமாக பேசலாம், முகஸ்துதி செய்யலாம், புரட்டலாக நியாயவிவாதம் செய்யலாம். ஆனால் அந்த விசுவாச துரோகிகளுக்கு உங்களுடைய நலனில் அக்கறையில்லை. நீதிமொழிகள் 11:9 இவ்வாறு குறிப்பிடுகிறது: “மாயக்காரன் [“விசுவாச துரோகி,” NW] தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.”
விசுவாச துரோகிகளுடைய விவாதங்களை தவறென நிரூபிப்பதற்கு அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்றோ அவர்களுடைய புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றோ நினைப்பது தவறு. அவர்களுடைய புரட்டலான, விஷமிக்க நியாயவிவாதம் ஆவிக்குரிய தீங்குண்டாக்கும், வேகமாக பரவும் சதையழுகல் நோயைப் போல உங்களுடைய விசுவாசத்தைக் அரித்துத் தின்றுவிடும். (2 தீமோத்தேயு 2:16, 17, பொ.மொ.) மாறாக, விசுவாச துரோகிகளிடம் கடவுள் காட்டும் பிரதிபலிப்பைப் பின்பற்றுங்கள். “மாயக்காரனோ [“விசுவாச துரோகியோ,” NW] அவர் சந்நிதியில் சேரான்” என யெகோவாவைப் பற்றி யோபு கூறினார்.—யோபு 13:16.
விரோதி ஒருவேளை வித்தியாசமான ஓர் உத்தியை, ஓரளவு வெற்றி தந்திருக்கிற ஒன்றை முயன்று பார்க்கலாம். அணிவகுத்துச் செல்லும் படையினர் சிற்றின்ப அல்லது ஒழுக்கயீனமான நடத்தையை நாடிச் சென்றால் அவர்களுடைய அணிவகுப்பின் ஒழுங்கு கலைந்து விடலாம்.
ஒழுக்கக்கேடான படங்கள், டெலிவிஷன் காட்சிகள், காட்டுக்கத்தலான இசை போன்ற உலகியல் பொழுதுபோக்குகளே திறமிக்க கண்ணியாக இருக்கின்றன. ஒழுக்கயீனமான காட்சிகளைப் பார்த்தாலோ அத்தகைய புத்தகங்களை வாசித்தாலோ எந்த பாதிப்பும் ஏற்படாது என சிலர் வாதாடலாம். ஆனால் அப்பட்டமான பாலியல் காட்சிகள் நிறைந்த படங்களைப் பார்த்த ஒருவர் இவ்வாறு வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்: “அந்தக் காட்சிகள் உங்களுடைய மனதைவிட்டுப் போகவே போகாது. அவற்றைப் பற்றி நீங்கள் எந்தளவுக்கு சிந்திக்கிறீர்களோ அந்தளவுக்கு நீங்கள் பார்த்ததை செய்வதற்கு தூண்டப்படுவீர்கள் . . . ஏதோவொன்றை நீங்கள் அனுபவிக்கத் தவறுவதைப் போல அந்தத் திரைப்படம் உங்களை உணரச் செய்யும்.” சூழ்ச்சிமிக்க இந்தத் தாக்குதலுக்குள் விழுந்து உங்களை ஆபத்திற்குள்ளாக்குவது தகுந்ததா?
விரோதியின் படைக்கலத்திலுள்ள மற்றொரு ஏவுகணை பொருளாசை. நம் அனைவருக்கும் பொருளாதார தேவைகள் இருப்பதால் இந்த ஆபத்தைப் பகுத்துணருவது ஒருவேளை கடினமாக இருக்கலாம். உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை நமக்கு அவசியம்; நல்ல நல்ல பொருட்களை வைத்திருப்பதிலும் எந்தத் தவறும் இல்லை. ஆனால் இவற்றைக் குறித்த நம் கண்ணோட்டத்தில்தான் ஆபத்தே பதுங்கியிருக்கிறது. ஆவிக்குரிய காரியங்களைவிட பணம் நமக்கு அதிக முக்கியமாகிவிடலாம். நாம் பண ஆசையுள்ளவர்களாய் மாறிவிடலாம். ஆகவே செல்வத்தின் வரம்புகளை நமக்கு நினைப்பூட்டிக் கொள்வது நல்லது. அது நிலையற்றது, ஆவிக்குரிய செல்வமே என்றும் நிலைத்திருப்பது.—மத்தேயு 6:19, 20.
படையினரின் நம்பிக்கை குன்றினால், வெற்றி வாய்ப்புகள் சரியும். “ஆபத்துக் காலத்தில் நீ சோர்ந்து [“நம்பிக்கையிழந்து,” NW] போவாயானால், உன் பெலன் குறுகினது.” (நீதிமொழிகள் 24:10) நம்பிக்கையிழந்த நிலை என்பது சாத்தான் திறம்பட பயன்படுத்தியுள்ள ஓர் ஆயுதமாகும். “இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவை” அணிந்திருப்பது நம்பிக்கையிழந்த நிலையை வெல்ல உங்களுக்கு உதவும். (1 தெசலோனிக்கேயர் 5:8) ஆபிரகாமைப் போல உங்களுடைய நம்பிக்கையை முடிந்தளவு பலமாக வைத்துக்கொள்ளுங்கள். தனது ஒரே மகனை பலியாக தரும்படி கடவுள் கேட்டபோது அவர் தயங்கவில்லை. மாறாக, தனது சந்ததியின் மூலம் எல்லா தேசத்தாரையும் ஆசீர்வதிக்கப்போவதாக கடவுள் தந்த வாக்குறுதி நிறைவேறும் என்பதையும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தேவைப்பட்டால் ஈசாக்கை மரணத்திலிருந்தும் கடவுளால் உயிர்த்தெழுப்ப முடியும் என்பதையும் அவர் நம்பினார்.—எபிரெயர் 11:17-19.
இந்தப் போராட்டத்தில் தளர்ந்துவிடாதீர்கள்
நீண்ட காலமாக தைரியத்துடன் போராடிய சிலர் தளர்ந்துபோய் விடலாம், முன்புபோல் அதே விழிப்புடன் போராடாமலிருக்கலாம். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட உரியாவின் உதாரணம், இந்தப் போரில் ஈடுபட்டுள்ள அனைவரும் சரியான கண்ணோட்டத்தை காத்துக்கொள்ள உதவுகிறது. நமது சக கிறிஸ்தவ வீரர்கள் அநேகர் அன்றாட தேவைகளின்றி, குளிரையும் பசியையும் சகித்திருக்க வேண்டியிருக்கிறது, ஆபத்துக்களை எதிர்ப்பட வேண்டியிருக்கிறது. உரியாவைப் போல, இப்பொழுது நாம் அனுபவிக்க சாத்தியமுள்ள எல்லா செளகரியங்களையும் நாடாமலிருப்பது அல்லது சொகுசான வாழ்க்கை வாழ ஆசைப்படாமலிருப்பது நல்லது. யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ள உலகளாவிய வீரர்களுடன் நிலைத்திருக்கவும் நமக்காக வைக்கப்பட்டுள்ள அருமையான ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் வரை தொடர்ந்து போராடவும் நாம் விரும்புகிறோம்.—எபிரெயர் 10:32-34.
கடைசி தாக்குதல் வெகுகாலம் கழித்துத்தான் வரும் என ஒருவேளை நினைத்துக்கொண்டு நாம் விழிப்புடனிருப்பதை நிறுத்திவிடுவது ஆபத்தானது. தாவீது ராஜாவின் உதாரணம் இந்த ஆபத்தை நன்கு புலப்படுத்துகிறது. ஏதோ காரணத்தினிமித்தம் போர்க்களத்திலிருந்த தனது படைகளுடன் அவர் சேர்ந்திருக்கவில்லை. அதன் விளைவாக, வாழ்க்கை பூராவும் வேதனையையும் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டிய பெரும் பாவத்தை தாவீது செய்துவிட்டார்.—2 சாமுவேல் 12:10-14.
ஆவிக்குரிய போரில் ஈடுபட்டு, அதனால் வரும் கஷ்டநஷ்டங்களையும் கேலிப் பேச்சுக்களையும் சகித்து, கேள்விக்குரிய உலகியல் இன்பங்களையெல்லாம் துறப்பதில் ஏதாவது பிரயோஜனம் உண்டா? இந்த உலகம் தருவது பகட்டாக மின்னும் ஜரிகை போல கவர்ச்சியாக தோன்றலாம், ஆனால் பக்கத்தில் போய் உற்றுப் பார்க்கும்போது அதற்கு ஒரு மதிப்புமில்லை என்பதை இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக செய்து வருகிறவர்கள் ஒத்துக்கொள்கின்றனர். (பிலிப்பியர் 3:8, 11) அதோடு, அந்த இன்பங்கள் பெரும்பாலும் வேதனையிலும் ஏமாற்றத்திலும்தான் கொண்டுபோய் விடுகின்றன.
இந்த ஆவிக்குரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவர் உண்மையான நண்பர்களுடன் நெருங்கிய உறவையும் சுத்தமான மனசாட்சியையும் அருமையான நம்பிக்கையையும் அனுபவித்து மகிழ்கிறார். ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவுடன் பரலோகத்தில் அழியாத வாழ்க்கை வாழ்வதை எதிர்நோக்கியிருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 15:54) பெரும்பான்மையான கிறிஸ்தவ வீரர்கள் பூமிக்குரிய பரதீஸில் பரிபூரண வாழ்க்கையை எதிர்பார்த்திருக்கிறார்கள். நிச்சயமாகவே வேறெந்த பரிசையும்விட இப்படிப்பட்ட பரிசுகள் மதிப்புமிக்கவை. உலகப் போர்களைப் போலில்லாமல், உண்மையுடன் நிலைத்திருந்தால் இந்தப் போரில் நமக்கு வெற்றி நிச்சயம். (எபிரெயர் 11:1) ஆனால் சாத்தானிய கட்டுப்பாட்டிலுள்ள இந்த ஒழுங்குமுறைக்கு வரும் முடிவோ ஒட்டுமொத்த அழிவு.—2 பேதுரு 3:10.
இந்தப் போரில் நீங்கள் ஈடுபட்டு வருகையில், இயேசுவின் பின்வரும் வார்த்தைகளை நினைவிற்கொள்ளுங்கள்: “திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.” (யோவான் 16:33) சோதனையின்போது விழித்திருப்பதன் மூலமும் உத்தமத்தைக் காத்துக்கொள்வதன் மூலமும் அவர் ஜெயித்தார். அதையே நாமும் செய்வோமாக.
[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]
துப்பாக்கிச் சத்தங்கள் முழங்காது, குண்டுமழை பொழியாது, ஆனால் போர் தந்திரத்தின் தீவிரமோ எவ்விதத்திலும் குறையாது
[பக்கம் 30-ன் சிறு குறிப்பு]
உண்மையுடன் நிலைத்திருந்தால் இந்தப் போரில் நமக்கு வெற்றி நிச்சயம்
[பக்கம் 26-ன் படம்]
நம்பிக்கையிழந்த நிலையை எதிர்த்துப் போராட இரட்சிப்பின் தலைச்சீரா நமக்கு உதவும்
சாத்தானுடைய “அக்கினியாஸ்திரங்களை” தடுப்பதற்கு விசுவாசமெனும் பெரிய கேடகத்தைப் பயன்படுத்துங்கள்
[பக்கம் 28-ன் படம்]
“யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்”
[பக்கம் 29-ன் படம்]
கடவுளுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தில் நாம் விசுவாசம் வைக்க வேண்டும்