அன்போடு கவனித்துக் கேட்பது ஒரு கலை
“இவ்வளவு நேரம் நான் சொன்னதையெல்லாம் கேட்டதற்கு ரொம்ப நன்றி.” சமீபத்தில் யாராவது இப்படி உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா? இது நன்றி மட்டுமல்ல, எப்பேர்ப்பட்ட பாராட்டு! கவனித்துக் கேட்பவரை அநேகமாக எல்லோருக்குமே பிடிக்கும். கவனித்துக் கேட்பது—மனமுடைந்தவர்களுக்கும் சரி, பிரச்சினைகளால் பாரமடைந்தவர்களுக்கும் சரி—புத்துணர்ச்சி அளிக்கிறது. அவ்வாறு கவனித்துக் கேட்பது மற்றவர்களை நெஞ்சார நேசிக்க நமக்கும் உதவும், அல்லவா? கிறிஸ்தவ சபையில், ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதில்,’ மற்றவர்கள் பேசுவதை அன்போடு கேட்பதும் முக்கிய பங்கு வகிக்கிறது.—எபிரெயர் 10:24.
ஆனால் மற்றவர்கள் பேசுவதை பலர் ஒழுங்காகக் கேட்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, அறிவுரை கொடுக்கவோ தங்களுடைய அனுபவத்தைச் சொல்லவோ அல்லது தங்களுடைய கருத்தைச் சொல்லவோதான் விரும்புவார்கள். மற்றவர்கள் சொல்வதைக் கவனித்துக் கேட்பது ஒரு கலை. அன்போடு கவனித்துக் கேட்க நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?
ஒரு முக்கிய அம்சம்
யெகோவா நம்முடைய “மகத்தான போதகர்.” (ஏசாயா 30:20, NW) எப்படிக் கவனித்துக் கேட்கலாம் என்பதை அவரால்தான் சொல்லித்தர முடியும். எலியா தீர்க்கதரிசிக்கு அவர் எப்படி உதவினார் என்பதைக் கவனியுங்கள். யேசபேல் ராணியின் மிரட்டலுக்குப் பயந்து எலியா வனாந்தரத்திற்கு ஓடிப்போனார்; இப்படிப் பயந்து பயந்து வாழ்வதற்குப் பதிலாக செத்துப்போகலாம் என்று புலம்பினார். அங்கே கடவுளுடைய தூதன் அவரோடு பேசினார். எலியா தன்னுடைய பயங்களைப் பற்றியெல்லாம் யெகோவாவிடம் சொன்னபோது அவர் கவனித்துக் கேட்டார்; பிறகு தமது மகா பலத்தை வெளிக்காட்டினார். விளைவு? பயம் தெளிந்து, தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்ய எலியா திரும்பிப் போனார். (1 இராஜாக்கள் 19:2-15) யெகோவா தேவன் தமது ஊழியர்கள் சொல்கிற கவலைகளையெல்லாம் ஏன் நேரமெடுத்துக் கேட்கிறார்? ஏனெனில் அவர்கள்மீது அவர் கரிசனையுள்ளவராக இருக்கிறார். (1 பேதுரு 5:7, NW) ஆகவே, கவனித்துக் கேட்பதன் ஒரு முக்கிய அம்சம், மற்றவர்கள்மீது கரிசனையும் உண்மையான அக்கறையும் காட்டுவதாகும்.
பொலிவியாவைச் சேர்ந்த ஒருவர் பெரிய தவறு ஒன்றைச் செய்துவிட்டார்; அந்தச் சமயத்தில் சக விசுவாசி ஒருவர் அவரைக் கரிசனையோடு நடத்தியதை அவர் மனதாரப் போற்றினார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “அப்போது நான் ரொம்பவே நிலைகுலைந்து போயிருந்தேன். அந்தச் சகோதரர் நான் சொன்னதையெல்லாம் நேரமெடுத்துக் கேட்டார்; அவர் மட்டும் அப்படிச் செய்திருக்கவில்லையென்றால் நான் யெகோவாவைச் சேவிப்பதையே விட்டுவிட்டிருப்பேன். அவர் ரொம்ப பேசவில்லை, ஆனால் நான் சொன்னதைக் கரிசனையோடு கேட்டார், அதுதான் என்னைப் பலப்படுத்தியது. என் பிரச்சினைக்கெல்லாம் அவர் ஒரு வழி சொல்ல வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை; ஏனெனில் நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால், என் உணர்ச்சிகளை யாராவது புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்த்தேன். அவர் கவனித்துக் கேட்டது, கவலையிலேயே மூழ்கிப்போய்விடாதபடி என்னைக் காப்பாற்றியது.”
அன்போடு கவனித்துக் கேட்கும் கலையில் சிறந்த முன்மாதிரி இயேசு கிறிஸ்து. அவர் மரணமடைந்த சில நாட்களுக்கு பின், அவருடைய இரண்டு சீஷர்கள் எருசலேமிலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு கிராமத்துக்குப் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் சோகமாக இருந்தார்கள். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து அப்போது அவர்களுடன் சேர்ந்து நடந்தார். அவர்கள் மனதிலுள்ள காரியங்களை வெளியே கொண்டுவரும் விதத்தில் குறிப்பான சில கேள்விகளைக் கேட்டார். அவர்களும் பதில் அளித்தார்கள். அவர்களுக்கிருந்த நம்பிக்கைகளைப் பற்றியும், இப்போது தாங்கள் அடைந்துள்ள ஏமாற்றத்தைப் பற்றியும், குழப்பத்தைப் பற்றியும் சொன்னார்கள். இயேசு அவர்களிடம் கரிசனையோடு நடந்துகொண்டார். அவர் அன்போடு கவனித்துக் கேட்டது, அந்த இரு சீஷர்களும் இயேசு சொல்வதைக் கவனித்துக் கேட்க உதவியது. இதன் காரணமாக, இயேசுவால் ‘வேத வாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பிக்க முடிந்தது.’—லூக்கா 24:13-27.
நாம் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டுமென்றால், முதலில் நாம் அவர்கள் சொல்வதை அன்போடு கவனித்துக் கேட்க வேண்டும். பொலிவியாவைச் சேர்ந்த ஒரு பெண் இவ்வாறு சொல்கிறார்: “நான் என் பிள்ளைகளை வளர்க்கும் விதம் என் பெற்றோருக்கும் என் மாமனார் மாமியாருக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் என்ன சொன்னாலும் எனக்கு எரிச்சலாக இருக்கும். அதே நேரத்தில், நான் ஒரு நல்ல தாயாக இருக்கிறேனா என்று எனக்கே குழப்பமாகிவிடும். அந்தச் சமயத்தில்தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்னைச் சந்தித்து பேசினார். கடவுளுடைய வாக்குறுதிகளைப் பற்றியெல்லாம் சொன்னார். அதைப் பற்றி என்னுடைய கருத்தையும் கேட்டார்; கேட்ட விதத்திலிருந்தே, நான் சொல்வதைக் கேட்பதற்கு அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். அவரை வீட்டுக்குள் அழைத்தேன். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் என் பிரச்சினையை அவரிடம் கொட்டித் தீர்க்க ஆரம்பித்தேன். நான் சொல்வதை அவர் பொறுமையாகக் கேட்டார். என் பிள்ளைகளைப் பற்றி என்னுடைய கனவு என்னவென்றும் அதைப் பற்றி என்னுடைய கணவர் என்ன நினைக்கிறார் என்றும் கேட்டார். என்னைப் புரிந்துகொள்ள உண்மையான முயற்சியெடுத்த ஒருவரோடு பேசியது எவ்வளவு ஆறுதலாக இருந்தது தெரியுமா? குடும்ப வாழ்க்கை பற்றி பைபிளின் கருத்தை அவர் சொன்னார், என் சூழ்நிலையைப் பற்றி அதிக அக்கறையுள்ள ஒருவரிடம்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை அப்போது புரிந்துகொண்டேன்.”
“அன்பு . . . தற்பொழிவை நாடாது” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 13:4, 5) அன்போடு கவனித்துக் கேட்பது, நம்முடைய சொந்த விருப்பங்களையெல்லாம் ஓரங்கட்டி வைப்பதை அர்த்தப்படுத்துகிறது. யாராவது மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போது டிவி, செய்தித்தாள், அல்லது செல் ஃபோன் எதுவும் நம் கவனத்தைச் சிதறடிக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அன்போடு கவனித்துக் கேட்பது, பேசுபவரின் எண்ணங்களுக்கு ஆழ்ந்த அக்கறை காட்டுவதை அர்த்தப்படுத்துகிறது. அந்தச் சமயத்தில், நம்மைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும்; உதாரணத்திற்கு, “நீங்கள் இப்படிச் சொன்னதும், கொஞ்ச காலத்திற்கு முன்னால் இதேபோல எனக்கு நடந்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது” என்றெல்லாம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களுடன் பேசும்போது இப்படிச் சொல்வதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் மற்றவர்கள் முக்கியமான ஒரு பிரச்சினையைப் பற்றி பேசும்போது நம்முடைய சொந்த காரியங்களைப் பற்றி சொல்வதைத் தவிர்க்க வேண்டும். வேறொரு வழியிலும் மற்றவர்கள்மீது நமக்கிருக்கும் உண்மையான அக்கறையை நாம் வெளிக்காட்டலாம்.
உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள கவனித்துக் கேட்டல்
யோபுவின் நண்பர்கள் குறைந்தது பத்து முறையாவது அவர் பேசியதைக் கேட்டிருப்பார்கள். இருந்தாலும், “ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்” என்று யோபு புலம்பினார். (யோபு 31:35) ஏன்? ஏனெனில் அவர்கள் கேட்டது அவருக்கு ஆறுதலை அளிக்கவில்லை. அவர்களுக்கு யோபுவின் மீது அக்கறையும் இருக்கவில்லை, அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள விருப்பமும் இருக்கவில்லை. அனுதாபத்தோடு கூர்ந்து கேட்கும் குணம் அவர்களுக்குத் துளியும் இருக்கவில்லை. ‘நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும் [அதாவது, அனுதாபமுள்ளவர்களும்], சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருக்க வேண்டும்’ என்று அப்போஸ்தலன் பவுல் அறிவுறுத்தினார். (1 பேதுரு 3:8) நாம் எப்படி நம்முடைய அனுதாபத்தைக் காட்டலாம்? அதைக் காட்டுவதற்கு ஒரு வழி மற்றவர்களுடைய உணர்ச்சிகளில் அக்கறை காண்பித்து, அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான். “அது உங்களை ரொம்பவே பாதித்திருக்கும் என்று நினைக்கிறேன்” அல்லது “உங்களைத் தவறாக எடைபோட்டுவிட்டார்களே என்று வருத்தப்பட்டிருப்பீர்கள் இல்லையா” என்றெல்லாம் இரக்கத்தோடு சொல்வது நாம் மற்றவர்கள்மீது அக்கறை காட்டுவதற்கான ஒரு வழியாகும். மற்றொரு வழி அந்த நபர் சொல்வதை நம்முடைய சொந்த வார்த்தைகளில் திரும்பச் சொல்வது. இப்படிச் செய்வது நாம் அவரைப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை அர்த்தப்படுத்தும். அன்போடு கவனித்துக் கேட்பதென்பது வெறும் வார்த்தைகளுக்கு மட்டுமல்ல, வெளிக்காட்டப்படாத அவர்களுடைய உணர்ச்சிகளுக்கும் செவி கொடுப்பதாகும்.
ராபர்ட்a முழுநேர ஊழியத்தில் அனுபவமிக்க ஒரு யெகோவாவின் சாட்சி. அவர் இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய ஊழியத்தை நினைத்து ஒரு கட்டத்தில் நான் ரொம்பவும் மனசோர்வடைந்தேன். இதைப் பற்றி பயணக் கண்காணியிடம் பேச விரும்பினேன். நான் சொன்னதை அவர் கூர்ந்து கேட்டார், அதோடு என்னுடைய உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள முயற்சித்தார். இப்படியெல்லாம் பேசுவதைக் கேட்டு அவர் என்னைத் தவறாக நினைத்துவிடுவாரோ என்று நான் பயப்பட்டதைக்கூட புரிந்துகொண்டார். என்னுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடிவதாகவும், தானும் அதேபோல ஒருகாலத்தில் உணர்ந்ததாகவும் சொன்னார். இது என்னுடைய சேவையைத் தொடர்ந்து செய்ய பெரிதும் உதவியது.”
மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளாமலேயே நம்மால் வெறுமனே காதுகொடுத்துக் கேட்க முடியுமா? மனந்திறந்து பேசியதற்காக ஒருவரிடம் நம்மால் நன்றிசொல்ல முடியுமா? முடியும். உங்களுடைய இளம் மகன் பள்ளியில் சண்டைபோட்டதாகச் சொன்னால் அல்லது உங்கள் டீனேஜ் மகள் ஒருவரை விரும்புவதாகச் சொன்னால் நீங்கள் என்ன செய்யலாம்? எது சரி, எது தவறு என்று சொல்வதற்கு முன், ஒரு பெற்றோராக அவர்கள் சொல்வதைக் கவனித்துக் கேட்டு அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்துகொள்வது எவ்வளவோ நன்றாக இருக்கும், அல்லவா?
“மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர் போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்” என்று நீதிமொழிகள் 20:5 சொல்கிறது. ஞானமும் அனுபவமும் நிறைந்த ஒருவர், கேட்டால்தான் அறிவுரை சொல்வார் என்றால் அவர் மனதிலுள்ள அறிவுரைகளை மொண்டெடுக்க நாம் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். அதேபோல், அன்போடு கவனித்துக் கேட்பவரும், சொல்பவரின் மனதிலுள்ளதை மொண்டெடுக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படி மொண்டெடுக்க அவருக்குப் பகுத்தறிவு தேவை. கேள்விகள் கேட்பது அதற்கு உதவும். ஆனால், அவருடைய சொந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் துருவித்துருவி கேட்காமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். சொல்பவர், தான் சொல்ல நினைப்பதை எதிலிருந்து ஆரம்பித்தால் அவருக்குச் சுலபமாக இருக்குமோ அதிலிருந்து ஆரம்பிக்கச் சொல்லலாம். உதாரணத்திற்கு, ஒரு மனைவி தன்னுடைய குடும்ப வாழ்க்கையிலுள்ள பிரச்சினைகளைப் பற்றி பேச விரும்பினால் அவளும் அவளுடைய கணவனும் எப்படிச் சந்தித்துத் திருமணம் செய்துகொண்டார்கள் என்பதிலிருந்து ஆரம்பிப்பது அவளுக்குச் சுலபமாக இருக்கலாம். கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்வதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்ட ஒருவர் தான் சத்தியத்திற்கு எப்படி வந்தார் என்பதிலிருந்து ஆரம்பிக்கும்போது மனந்திறந்து பேச அவருக்குச் சுலபமாக இருக்கலாம்.
அன்போடு கவனித்துக் கேட்பது—ஒரு சவால்
யாராவது நம்மீது கோபமாக இருந்தால், நம் பங்கில் எந்தத் தவறுமில்லை என்றுதான் நாம் பொதுவாக வாதாடுவோம். அந்தச் சமயத்தில் அந்நபர் சொல்வதைக் கேட்பது நமக்கு ஒரு சவாலாக இருக்கலாம். ஆனால், இந்தச் சவாலை எப்படிச் சமாளிப்பது? “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்” என்று நீதிமொழிகள் 15:1 சொல்கிறது. கனிவோடு அவரைப் பேச அழைப்பதும், நம்மேல் ஏற்பட்டிருக்கும் மனவருத்தத்தை அவர் விளக்குகையில் பொறுமையாகக் கேட்பதும், மெதுவான பிரதியுத்தரம் சொல்வதற்கு ஒரு வழியாகும்.
பலத்த வாக்குவாதம் செய்யும் இருவர், பெரும்பாலும் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஏனெனில் ஒருவர் சொல்வதை மற்றொருவர் கேட்கவில்லை என்று இருவருமே நினைத்துக்கொள்வார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் சண்டைபோடுவதை நிறுத்திவிட்டு மற்றொருவர் சொல்வதை உண்மையிலேயே கவனித்துக் கேட்டால், எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால், அதற்கு தன்னடக்கம் மிக அவசியம். அதே சமயத்தில் விவேகத்தோடும் அன்போடும் பேசுவதும் அவசியம். “தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 10:19.
அன்போடு கவனித்துக் கேட்பது யாருக்குமே இயல்பாக வந்துவிடாது. இருந்தாலும், அது ஒரு கலை. முயற்சியோடும் சுயகட்டுப்பாட்டோடும் இந்தக் கலையை நம்மால் கற்றுக்கொள்ள முடியும். நிச்சயமாகவே இது ரொம்பவும் பிரயோஜனமான கலையாகும். மற்றவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பது நாம் அவர்கள்மீது அன்பு செலுத்துவதைக் காட்டுகிறது. அதுமட்டுமல்ல, நமக்கும் சந்தோஷத்தை அளிக்கிறது. அப்படியானால், அன்போடு கவனித்துக் கேட்கும் கலையை வளர்த்துக்கொள்வது எவ்வளவு ஞானமானது!
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
[பக்கம் 11-ன் படம்]
கவனித்துக் கேட்கையில், சொந்த விருப்பங்களையெல்லாம் ஓரங்கட்ட வேண்டும்
[பக்கம் 12-ன் படம்]
நம்மீது கோபமாக இருக்கும் ஒருவர் பேசுவதைக் கவனித்துக் கேட்பது சவாலாக இருக்கலாம்