நீங்கள் யாருக்குக் கீழ்ப்படிகிறீர்கள்—கடவுளுக்கா மனிதருக்கா?
“மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.”—அப்போஸ்தலர் 5:29.
1. (அ) இந்தக் கட்டுரையின் முக்கிய வசனம் எது? (ஆ) அப்போஸ்தலர்கள் ஏன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்?
யூத உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகள் கோபத்தில் கொதித்தெழுந்திருக்க வேண்டும். ஏன்? கைதிகளைக் காணவில்லை. இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களே அந்தக் கைதிகள்; சில வாரங்களுக்கு முன்புதான் உயர்நீதி மன்றம் இயேசு கிறிஸ்துவுக்கு மரண தண்டனை அளித்திருந்தது. இப்பொழுது, அவருக்கு நெருக்கமான சீஷர்களை விசாரிப்பதற்கு அந்த நீதிமன்றம் தயாராக இருந்தது. ஆனால் அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவர சேவகர்கள் சென்றபோது சிறை அறைகள் காலியாக இருப்பதைக் கண்டார்கள், ஆனால் கதவுகள் பூட்டப்பட்டுதான் இருந்தன. அந்த அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி எருசலேம் ஆலயத்தில் பயமின்றி மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்ததை சேவகர்கள் சீக்கிரத்தில் அறிந்துகொண்டார்கள்—அவர்கள் கைது செய்யப்பட்டதே அப்படிப் போதித்ததற்குத்தான்! அந்தச் சேவகர்கள் நேராக ஆலயத்திற்குச் சென்று, அவர்களைப் பிடித்து, மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தார்கள்.—அப்போஸ்தலர் 5:17-27.
2. அப்போஸ்தலர்களுக்குத் தேவதூதன் என்ன கட்டளை கொடுத்திருந்தார்?
2 அந்த அப்போஸ்தலர்களைத் தேவதூதன் ஒருவர் சிறையிலிருந்து விடுதலை செய்திருந்தார். துன்புறுத்தலிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காகவா? இல்லை. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எருசலேம் நகரத்தார் கேள்விப்பட வேண்டும் என்பதற்காக. ‘இந்த ஜீவ வார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்கு [“தொடர்ந்து,” NW] சொல்ல’ வேண்டும் என்பதே அப்போஸ்தலர்களுக்கு அந்தத் தேவதூதன் கொடுத்திருந்த கட்டளை. (அப்போஸ்தலர் 5:19, 20) அதனால்தான் ஆலய சேவகர்கள் அவர்களைப் பிடிக்க வந்தபோது, அப்போஸ்தலர்கள் அந்தக் கட்டளையைக் கீழ்ப்படிதலுடன் நிறைவேற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்.
3, 4. (அ) பிரசங்கிப்பதை நிறுத்தச் சொல்லி கட்டளையிடப்பட்டபோது, பேதுருவும் யோவானும் எப்படிப் பதில் அளித்தார்கள்? (ஆ) மற்ற அப்போஸ்தலர்கள் எப்படிப் பதில் அளித்தார்கள்?
3 உறுதியான நெஞ்சம் கொண்ட அந்தப் பிரசங்கிகளில் இருவரான அப்போஸ்தலர் பேதுருவும் யோவானும் முதன்மை நீதிபதி யோசேப்பு காய்பாவுக்கு முன் நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒருமுறை ஆஜராகியிருந்தார்கள். அவர்களுக்கு காய்பா இவ்வாறு கண்டிப்புடன் நினைப்பூட்டியிருந்தார்: ‘நீங்கள் [இயேசுவின்] நாமத்தைக் குறித்துப் போதகம் பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பியிருக்கிறீர்கள்.’ (அப்போஸ்தலர் 5:28) பேதுருவும் யோவானும் மீண்டும் நீதிமன்றத்தில் நிற்பதைப் பார்த்து காய்பா ஆச்சரியப்பட்டிருக்கக் கூடாது. ஏனெனில் பிரசங்கிப்பதை நிறுத்தும்படி முதல் தடவை கட்டளையிட்டபோதே அவர்கள் இவ்வாறு பதில் அளித்திருந்தார்கள்: ‘தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப் பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப் பாருங்கள். நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக் கூடாதே.’ பூர்வகால தீர்க்கதரிசியான எரேமியாவைப் போல, பேதுருவுக்கும் யோவானுக்கும் பிரசங்க வேலையை நிறுத்தவே முடியவில்லை.—அப்போஸ்தலர் 4:18-20; எரேமியா 20:9.
4 இப்பொழுது, பேதுருவுக்கும் யோவானுக்கும் மட்டுமல்ல, அப்போஸ்தலர்கள் அனைவருக்குமே—புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியா உள்ளிட்ட அனைவருக்குமே—நீதிமன்றத்தில் தங்களுடைய நிலையைப் பகிரங்கமாக அறிவிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. (அப்போஸ்தலர் 1:21-26) பிரசங்கிப்பதை நிறுத்தச் சொல்லி கட்டளையிடப்பட்டபோது, ‘மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது’ என்று அவர்களும் தைரியமாகச் சொன்னார்கள்.—அப்போஸ்தலர் 5:29.
கடவுளுக்குக் கீழ்ப்படிவதா மனிதருக்குக் கீழ்ப்படிவதா?
5, 6. நீதிமன்றத்தின் ஆணைக்கு அப்போஸ்தலர்கள் ஏன் கீழ்ப்படியவில்லை?
5 சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் அந்த அப்போஸ்தலர்கள் பொதுவாக நீதிமன்ற ஆணைக்குக் கீழ்ப்படியாமல் இருக்க மாட்டார்கள். என்றாலும், கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியக் கூடாதென ஆணையிடுவதற்கு எந்த மனிதனுக்கும் அதிகாரம் இல்லை, அவர் எவ்வளவு அதிகாரமிக்கவராக இருந்தாலும் சரி. யெகோவாவே “பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்.” (சங்கீதம் 83:17) அவர் “சர்வலோகத்தின் நியாயாதிபதி” மட்டுமல்ல, அவர் உன்னத சட்டப்பிரமாணிகர், நித்தியத்தின் ராஜா. கடவுளுடைய கட்டளையை ரத்துசெய்ய முயலும் எந்தவொரு நீதிமன்ற ஆணையும் கடவுளுடைய பார்வையில் செல்லுபடியாகாது.—ஆதியாகமம் 18:25; ஏசாயா 33:22.
6 இந்த உண்மையை மிகச் சிறந்த சட்ட நிபுணர்கள் சிலரும்கூட ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, எந்தவொரு மனித சட்டமும் பைபிளின் “வெளிப்படுத்தப்பட்ட சட்டத்திற்கு” முரணாகச் செல்ல அனுமதிக்கக் கூடாதென 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல நீதிபதி வில்லியம் பிளாக்ஸ்டோன் எழுதினார். ஆகவே, பிரசங்கிப்பதை நிறுத்தச் சொல்லி யூத நியாயசங்கம் அந்த அப்போஸ்தலர்களுக்கு ஆணையிட்டபோது அது அத்துமீறி நடந்துகொண்டது. அதனால், அந்த ஆணைக்கு அப்போஸ்தலர்களால் கீழ்ப்படிய முடியவில்லை.
7. பிரசங்க வேலை ஏன் பிரதான ஆசாரியர்களுக்குச் சினமூட்டியது?
7 பிரசங்கிப்பதில் அப்போஸ்தலர்கள் மனவுறுதியுடன் இருந்தது பிரதான ஆசாரியர்களுக்குச் சினமூட்டியது. காய்பா உள்ளிட்ட ஆசாரியர்கள் சிலர் சதுசேயர்களாக இருந்தார்கள், அவர்கள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைக்கவில்லை. (அப்போஸ்தலர் 4:1, 2; 5:17) என்றாலும், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என அந்த அப்போஸ்தலர்கள் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்கள். ரோம அதிகாரிகளின் தயவைப் பெற பிரதான ஆசாரியர்களில் சிலரும்கூட பெருமளவு முயற்சி செய்திருந்தார்கள். அதனால்தான் இயேசுவை விசாரணை செய்த சமயத்தில், அவரைத் தங்களுடைய ராஜாவாக ஏற்றுக்கொள்கிறார்களா என பிலாத்து கேட்டபோது, “இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை” என்று கூக்குரல் போடுமளவுக்குச் சென்றார்கள். (யோவான் 19:15)a இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என அப்போஸ்தலர்கள் உறுதியாகச் சொன்னதுமின்றி, “நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” என்றும் போதித்து வந்தார்கள். (அப்போஸ்தலர் 2:36; 4:12) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை தங்களுடைய தலைவராக மக்கள் கருத ஆரம்பித்துவிட்டால், ரோமர்கள் வந்து ‘தங்களுடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும்’ பறித்துவிடுவார்கள் என அந்த யூத தலைவர்கள் பயந்தார்கள்.—யோவான் 11:48.
8. நியாயசங்கத்திற்கு கமாலியேல் கூறிய ஞானமான அறிவுரை என்ன?
8 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுக்கு எதிர்காலம் இருண்டதாகத் தோன்றியது. நியாயசங்கத்தைச் சேர்ந்த நீதிபதிகள் இவர்களைத் தீர்த்துக் கட்டுவதற்கு உறுதிபூண்டிருந்தார்கள். (அப்போஸ்தலர் 5:33) என்றாலும், எதிர்பாராத மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. நியாயப்பிரமாணத்தில் நிபுணரான கமாலியேல் எழுந்து, அவசரப்பட்டு செயல்பட வேண்டாமென நியாயசங்க உறுப்பினர்களை எச்சரித்தார். அவர் ஞானமாய் இவ்வாறு கூறினார்: “இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்; தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது.” கமாலியேல் மேலும் இவ்வாறு கூறியது குறிப்பிடத்தக்கதாகும்: “தேவனோடே போர் செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்.”—அப்போஸ்தலர் 5:34, 38, 39.
9. அப்போஸ்தலர்கள் செய்த வேலை கடவுளிடமிருந்து வந்தது என்பதை எது நிரூபிக்கிறது?
9 ஆச்சரியகரமாக, கமாலியேலின் யோசனையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. நியாயசங்கத்தார் “அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.” என்றாலும், அந்த அப்போஸ்தலர்கள் துளிகூட அஞ்சவில்லை, பிரசங்கிக்கும்படி தேவதூதன் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படியவே உறுதிபூண்டிருந்தார்கள். எனவே, அவர்கள் விடுதலையான பிறகு, “தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம் பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.” (அப்போஸ்தலர் 5:40, 42) அவர்களுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்தார். எந்தளவுக்கு? “தேவ வசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று.” சொல்லப்போனால், “ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.” (அப்போஸ்தலர் 6:7) பிரதான ஆசாரியர்களுக்கு அது எப்பேர்ப்பட்ட தோல்வியாக இருந்திருக்கும்! அப்போஸ்தலர்கள் செய்த வேலை உண்மையிலேயே கடவுளிடமிருந்து வந்த வேலை என்பதற்கு அத்தாட்சி மலைபோல் குவிந்துகொண்டே வந்தது!
கடவுளை எதிர்த்து போரிடுவோர் வெற்றிபெற முடியாது
10. மனித கண்ணோட்டத்தில், காய்பா தனது பதவியில் பாதுகாப்பாய் இருப்பதுபோல் ஏன் உணர்ந்திருக்கலாம், ஆனால் அவருடைய நம்பிக்கை ஏன் வீண்போனது?
10 முதல் நூற்றாண்டில், யூத பிரதான ஆசாரியர்கள் ரோம அதிகாரிகளால் நியமிக்கப்பட்டார்கள். செல்வந்தரான யோசேப்பு காய்பா பிரதான ஆசாரியராக வாலெரியுஸ் கிராட்டுஸ் என்பவரால் நியமிக்கப்பட்டிருந்தார். தனக்கு முன்பிருந்த பலரைவிட வெகு காலத்திற்கு அவர் தனது பதவியை தக்கவைத்துக் கொண்டார். கடவுள் அல்ல, ஆனால் தனது அரசியல் தந்திரமும் பிலாத்துவுடன் வைத்திருந்த நெருங்கிய நட்புறவுமே இதற்குக் காரணமென அவர் நினைத்திருக்கலாம். எப்படியிருந்தாலும், மனிதர்மீது அவர் வைத்த நம்பிக்கை வீண்போனது. ஏனென்றால், நியாயசங்கத்திற்கு முன்பு அப்போஸ்தலர்கள் ஆஜரானதற்கு மூன்றே ஆண்டுகளுக்குப் பிறகு, ரோம அதிகாரிகளுடைய தயவை அவர் இழந்தார், அதனால் பிரதான ஆசாரியன் என்ற பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
11. பிலாத்துவுக்கும் யூத ஒழுங்குமுறைக்கும் வந்த முடிவு என்ன, இதிலிருந்து நீங்கள் என்ன முடிவுக்கு வருகிறீர்கள்?
11 காய்பாவைப் பதவியிலிருந்து நீக்கும்படியான அந்த உத்தரவு, பிலாத்துவின் மேலதிகாரியான சிரியாவின் ஆளுநர் லுகியுஸ் விட்டெலியுஸ் என்பவரிடமிருந்து வந்தது, அதனால் காய்பாவின் நெருங்கிய நண்பரான பிலாத்துவினால் அதைத் தடுக்க முடியவில்லை. சொல்லப்போனால், காய்பா பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஒரே ஆண்டுக்குப் பின், பிலாத்துவும் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், அவர்மீது சுமத்தப்பட்ட பயங்கர குற்றச்சாட்டுகளுக்கு உத்தரவு சொல்லும்படி ரோமுக்கு அழைக்கப்பட்டார். இராயன்மீது நம்பிக்கை வைத்த யூத தலைவர்களுக்கு என்ன நேரிட்டது? ‘ரோமர்கள் அவர்களுடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும்’ பறித்துக் கொண்டார்கள். இது பொ.ச. 70-ல் சம்பவித்தது, அப்பொழுது ஆலயம், நியாயசங்கம் உட்பட, எருசலேம் நகரம் முழுவதையும் ரோம படைகள் தகர்த்தெறிந்தன. “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்” என்ற சங்கீதக்காரனுடைய வார்த்தைகள் அவர்களுடைய விஷயத்தில் எவ்வளவு உண்மையாக ஆனது!—யோவான் 11:48; சங்கீதம் 146:3.
12. கடவுளுக்குக் கீழ்ப்படிவதே ஞானமான செயல் என்பது இயேசுவின் விஷயத்தில் எப்படி நிரூபணமாகிறது?
12 அதற்கு நேர்மாறாக, உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவை ஆவிக்குரிய பெரிய ஆலயத்தின் பிரதான ஆசாரியராக கடவுளே நியமித்தார். அந்த நியமிப்பை எந்தவொரு மனிதனும் ரத்துசெய்ய முடியாது. சொல்லப்போனால், இயேசு ‘எந்தவொரு வாரிசுகளும் இல்லாத ஆசாரியத்துவத்தைப் பெற்றிருக்கிறார்.’ (எபிரெயர் 2:9; 7:17, 24, NW; 9:11) அதோடு, ஜீவனுள்ளோருக்கும் மரித்தோருக்கும்கூட நியாயாதிபதியாக கடவுளால் நியமிக்கப்பட்டிருக்கிறார். (1 பேதுரு 4:5) ஆகையால், யோசேப்பு காய்பாவுக்கும் பொந்தியு பிலாத்துவுக்கும் எதிர்கால வாழ்க்கை கிடைக்குமா கிடைக்காதா என்பதை நியாயாதிபதியான இயேசுவே தீர்மானிப்பார்.—மத்தேயு 23:33; அப்போஸ்தலர் 24:15.
தைரியமான நவீனகால ராஜ்ய பிரசங்கிகள்
13. நவீன காலங்களில், மனிதரிடமிருந்து வந்த வேலையாக எது நிரூபித்தது, கடவுளிடமிருந்து வந்த வேலையாக எது நிரூபித்தது, உங்களுக்கு எப்படித் தெரியும்?
13 முதல் நூற்றாண்டைப் போலவே, நம்முடைய நாளிலும் ‘தேவனை எதிர்த்துப் போரிடுகிறவர்களுக்குப்’ பஞ்சமே இல்லை. (அப்போஸ்தலர் 5:39) உதாரணமாக, ஜெர்மனியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் அடால்ஃப் ஹிட்லரை தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்தபோது, அவர்களைப் பூண்டோடு ஒழிக்கப்போவதாக ஹிட்லர் சபதமிட்டான். (மத்தேயு 23:10) இதைச் சாதிப்பதற்குத் தேவையான பலம் அவனுடைய திறமையான “மரண இயந்திரத்திற்கு,” அதாவது அவனுடைய கொலைகார அமைப்புக்கு, இருந்ததுபோல் தோன்றியது. ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளை வளைத்துப் பிடித்து, சித்திரவதை முகாம்களுக்குள் தள்ளுவதில் நாசிக்கள் வெற்றி பெற்றார்கள். சிலரைக் கொலையும் செய்தார்கள். என்றாலும், கடவுளை மாத்திரமே வணங்குவோம் என்று சொன்ன சாட்சிகளுடைய மனவுறுதியைக் குலைப்பதில் நாசிக்கள் தோல்வி அடைந்தார்கள், ஒரு தொகுதியாக கடவுளுடைய ஊழியர்களை ஒழித்துக் கட்டுவதிலும் அவர்கள் தோல்வி கண்டார்கள். இந்தக் கிறிஸ்தவர்களுடைய வேலை மனிதனிடமிருந்து அல்ல, ஆனால் கடவுளிடமிருந்து வந்த வேலை. ஆகவே, கடவுளுடைய வேலையை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது. அறுபது ஆண்டுகளுக்குப்பின், ஹிட்லருடைய சித்திரவதை முகாம்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் இன்றும் யெகோவாவை ‘முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் மனதோடும்’ சேவித்து வருகிறார்கள்; ஆனால் ஹிட்லரும் அவனுடைய நாசி ஆட்களும் இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோனார்கள், அவர்களுடைய கெட்ட பெயர் மட்டுமே நிலைத்திருக்கிறது.—மத்தேயு 22:37.
14. (அ) கடவுளுடைய ஊழியர்களைப் பழிதூற்றுவதற்கு எதிரிகள் என்னென்ன முயற்சிகள் செய்திருக்கிறார்கள், அதன் விளைவு என்ன? (ஆ) இத்தகைய முயற்சிகள் கடவுளுடைய மக்களுக்கு ஏதாவது நிரந்தர தீங்கை ஏற்படுத்துமா? (எபிரெயர் 13:5, 6)
14 நாசிக்களின் காலம் முதற்கொண்டு, யெகோவாவுக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராகத் தொடுக்கப்படுகிற போரில்—தோல்வியைத் தழுவும் போரில்—மற்றவர்களும் சேர்ந்திருக்கிறார்கள். அநேக ஐரோப்பிய நாடுகளில், தந்திரமான மத மற்றும் அரசியல் சக்திகள் யெகோவாவின் சாட்சிகளை ‘ஆபத்தான மதப்பிரிவினர்’ என முத்திரை குத்த முயற்சி செய்திருக்கின்றன; இதே குற்றச்சாட்டுதான் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மீதும் சுமத்தப்பட்டது. (அப்போஸ்தலர் 28:22) உண்மை என்னவென்றால், மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றம் யெகோவாவின் சாட்சிகளை ஒரு மதப் பிரிவினராக அல்ல, ஆனால் ஒரு மதமாக அங்கீகரித்திருக்கிறது. எதிரிகளுக்கும் அது நன்றாகத் தெரியும். என்றாலும், சாட்சிகளை அவர்கள் பழிதூற்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதன் விளைவாக, இந்தக் கிறிஸ்தவர்களில் சிலர் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளோ பள்ளிகளில் பல தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். பைபிள் கூட்டங்கள் நடத்துவதற்கு சாட்சிகள் வெகு காலமாகப் பயன்படுத்தி வந்த கட்டடங்களுக்குரிய ஒப்பந்தங்களை அவற்றின் சொந்தக்காரர்கள் ரத்து செய்திருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் என்ற ஒரே காரணத்திற்காக சிலருக்குக் குடியுரிமை தருவதற்கும்கூட அரசாங்க ஏஜன்ஸிகள் மறுத்திருக்கின்றன! என்றாலும், அவர்கள் சோர்ந்துபோவதில்லை.
15, 16. தங்களுடைய கிறிஸ்தவ வேலைக்கு எதிர்ப்பு வந்தபோதிலும், பிரான்சில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் எப்படிப் பிரதிபலித்திருக்கிறார்கள், அவர்கள் ஏன் தொடர்ந்து பிரசங்கிக்கிறார்கள்?
15 உதாரணமாக, பிரான்சு நாட்டு மக்கள் பொதுவாக நியாயத்தோடும் நேர்மையோடும் நடப்பவர்கள். என்றாலும், ராஜ்ய பிரசங்க வேலையை முடக்குவதற்கு எதிரிகள் சிலர் சட்டங்கள் வகுத்திருக்கிறார்கள். இதற்கு அங்குள்ள யெகோவாவின் சாட்சிகள் எப்படிப் பிரதிபலித்திருக்கிறார்கள்? இதுவரை செய்யப்படாத அளவுக்குப் பிரசங்க வேலையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள், அதனால் மெய் சிலிர்க்க வைக்கும் பலன்களைப் பெற்றிருக்கிறார்கள். (யாக்கோபு 4:7) ஏன், அந்நாட்டில் நடத்தப்படும் பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை ஆச்சரியமூட்டும் விதமாக ஆறே மாதங்களில் 33 சதவீதம் அதிகரித்ததே! பிரான்சில் உள்ள நல்மனம் படைத்த ஆட்கள் நற்செய்திக்குச் செவிசாய்ப்பதைப் பார்த்து பிசாசாகிய சாத்தான் கட்டாயம் சீற்றமடைந்திருப்பான். (வெளிப்படுத்துதல் 12:17) ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் தங்களுடைய விஷயத்தில் உண்மையே என்பதில் பிரான்சில் உள்ள சக கிறிஸ்தவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்.”—ஏசாயா 54:17.
16 துன்புறுத்தப்படுவதை யெகோவாவின் சாட்சிகள் விரும்புவதில்லை. என்றாலும், கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவுள் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிவதால் தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி அவர்களால் பேசாதிருக்க முடியாது, அப்படிப் பேசாதிருக்கவும் மாட்டார்கள். நல்ல குடிமக்களாக வாழவே அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால், கடவுளுடைய சட்டமும் மனிதனுடைய சட்டமும் முரண்படுகையில், கடவுளுக்கே அவர்கள் கீழ்ப்படிவார்கள்.
அவர்களுக்கு அஞ்சாதீர்கள்
17. (அ) விரோதிகளுக்கு நாம் ஏன் அஞ்ச வேண்டியதில்லை? (ஆ) துன்புறுத்துகிறவர்களிடம் நாம் எத்தகைய மனப்பான்மையைக் காட்ட வேண்டும்?
17 நம்முடைய விரோதிகள் மிக ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் கடவுளுக்கு விரோதமாகப் போரிடுகிறார்கள். ஆகவே, அவர்களுக்குப் பயப்படுவதற்குப் பதில், நம்மை துன்புறுத்துகிற அவர்களுக்காக இயேசுவின் கட்டளைக்கு இசைய நாம் ஜெபிக்கிறோம். (மத்தேயு 5:44) தர்சு பட்டணத்து சவுலைப் போல், அறியாமையால் யாராவது யெகோவாவை எதிர்த்தால், அன்புடன் அவர்களுடைய கண்களைத் திறந்து, சத்தியத்தைப் புரியவைக்கும்படி அவரிடம் நாம் ஜெபம் செய்கிறோம். (2 கொரிந்தியர் 4:4) சவுல் கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுலாக மாறியபோது, தனது நாளிலிருந்த அதிகாரிகளுடைய கைகளில் பெரும் துன்பப்பட்டார். என்றாலும், “துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், ஒருவனையும் [படுபயங்கரமாய்த் துன்புறுத்தியவர்களையும்கூட] தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும்” சக விசுவாசிகளுக்கு அவர் நினைப்பூட்டினார். (தீத்து 3:1, 2) பிரான்சிலும் மற்ற இடங்களிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் இந்த அறிவுரைக்குக் கீழ்ப்படிய முயலுகிறார்கள்.
18. (அ) என்னென்ன வழிகளில் யெகோவா நம்மை விடுவிக்கலாம்? (ஆ) இறுதி பலன் என்ன?
18 “உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று தீர்க்கதரிசியான எரேமியாவிடம் கடவுள் கூறினார். (எரேமியா 1:8) இன்று துன்புறுத்தலிலிருந்து யெகோவா எவ்வாறு நம்மை விடுவிக்கலாம்? கமாலியேலைப் போன்ற நேர்மையான நீதிபதியை எழுப்பலாம். ஊழல் மிகுந்த அல்லது எதிர்க்கும் அதிகாரிகளை நீக்கிவிட்டு நேர்மையானவர்களை அந்த இடத்தில் வைக்கலாம். ஆனால், சிலசமயங்களில், துன்புறுத்தலை யெகோவா தொடர்ந்து அனுமதிக்கலாம். (2 தீமோத்தேயு 3:12) அப்படி நாம் துன்புறுத்தப்படுவதற்குக் கடவுள் அனுமதித்தாலும், துன்புறுத்தலைச் சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தை அவர் எப்பொழுதும் நமக்குத் தருவார். (1 கொரிந்தியர் 10:13) கடவுள் எதை அனுமதித்தாலும், இறுதி பலனைக் குறித்து நமக்கு எந்தச் சந்தேகமுமில்லை: கடவுளுடைய மக்களுக்கு விரோதமாகப் போரிடுகிறவர்கள் உண்மையில் கடவுளுக்கு விரோதமாகவே போரிடுகிறார்கள், அப்படிப்பட்டவர்கள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள்.
19. 2006 வருடாந்தர வசனம் என்ன, அது ஏன் பொருத்தமானது?
19 உபத்திரவத்தை எதிர்பார்க்கும்படி இயேசு தமது சீஷர்களிடம் கூறினார். (யோவான் 16:33) இதைக் குறித்து, அப்போஸ்தலர் 5:29-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வார்த்தைகள் காலத்திற்கு ஏற்றவையாக இருக்கின்றன: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” இதன் காரணமாகவே, மெய்சிலிர்க்க வைக்கும் இந்த வார்த்தைகள் யெகோவாவின் சாட்சிகளுடைய 2006 வருடாந்தர வசனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. என்ன நேரிட்டாலும் சரி, வருகிற ஆண்டிலும் எப்பொழுதும் தேவனுக்குக் கீழ்ப்படிவதே நம் திடத்தீர்மானமாய் இருப்பதாக!
[அடிக்குறிப்பு]
a ‘இராயன்’ என அந்தச் சந்தர்ப்பத்தில் பிரதான ஆசாரியர்கள் வெளிப்படையாக ஆதரித்தது ரோம பேரரசரான திபேரியுவை ஆகும், இவன் ஒரு மாய்மாலக்காரன், கொலைபாதகன். இழிவான பாலியல் பழக்கங்களுக்கும் பேர்போனவன்.—தானியேல் 11:15, 21.
உங்களால் பதிலளிக்க முடியுமா?
• எதிர்ப்பைச் சந்திக்கும் விஷயத்தில் அப்போஸ்தலர்கள் நமக்கு வைத்திருக்கிற ஊக்கமூட்டும் முன்மாதிரி என்ன?
• நாம் எப்பொழுதும் ஏன் கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டும்?
• நம் எதிரிகள் உண்மையில் யாருக்கு எதிராகப் போரிடுகிறார்கள்?
• துன்புறுத்தலைச் சகித்திருப்போருக்கு என்ன பலன் கிடைக்கும்?
[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]
2006 வருடாந்தர வசனம்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.”—அப்போஸ்தலர் 5:29.
[பக்கம் 19-ன் படம்]
“மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது”
[பக்கம் 21-ன் படம்]
கடவுள்மீது நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, மனிதர்மீது காய்பா நம்பிக்கை வைத்தார்