வாழ்க்கை சரிதை
மிஷனரி ஆசையும் யெகோவாவின் அளவற்ற ஆசியும்
ஷீலா வின்ஃபீல்ட் டா கோன்ஸேஸாங் சொன்னபடி
ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒரு மிஷனரி சகோதரி, அங்கே ஊழியத்தில் தான் சந்தித்த எல்லாருமே வீட்டிற்குள் அழைத்து கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை ஆர்வமாகக் கேட்டதாக ஒருமுறை சொன்னார். ‘ஆஹா, அந்தமாதிரி இடத்தில் ஊழியம் செய்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!’ என்று நினைத்தேன். அப்போது எனக்கு 13 வயது. அவருடைய வார்த்தைகள் மிஷனரி ஆசையை என் உள்ளத்தில் விதைத்தன.
இந்தச் சம்பவம் நடந்ததற்கு வெகுமுன்னதாகவே நாங்கள் யெகோவாவின் சாட்சிகளாக ஆகியிருந்தோம். எப்படியென்றால், இங்கிலாந்தின் லண்டன் மாநகருக்கு அடுத்தாற்போல் அமைந்துள்ள ஹிமல் ஹெம்ப்ஸ்டட் நகர்ப்பகுதியில் வசித்துவந்தோம். 1939-ம் ஆண்டு, காலை நேரம். நன்கு உடையணிந்திருந்த இரண்டு பேர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள். அப்போது நான் ஒரு வயதுக் குழந்தை. அதனால் அவர்கள் வந்துபோனதைப் பற்றியெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. அவர்களை அனுப்பிவிட அம்மா ஓர் ஐடியா செய்தார்: ‘நீங்க சொல்றத இவங்க அப்பா ஒருவேளை கேட்பார், ஆனா, அவர் ராத்திரி 9 மணிக்குத்தானே வருவார்!’ என்று சொல்லிவிட்டார். சொன்ன நேரத்திற்கு அவர்கள் வந்ததைப் பார்த்தபோது அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம்! வீட்டுக்கு வந்திருந்தவர்கள் அரசியல் விவகாரங்களிலும் நாட்டுப்பற்று சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் நடுநிலை வகிப்பவர்களா என்பதை என் அப்பா ஹென்றி வின்ஃபீல்ட் முதலில் கேட்டுத் தெரிந்துகொண்டார். அதன் பின்பே அவர்களை வீட்டிற்குள் அழைத்தார். பைபிள் படிப்புக்கும் ஒப்புக்கொண்டார். சீக்கிரமாகவே படித்து முன்னேறி முழுக்காட்டுதலும் எடுத்துவிட்டார். சில வருடங்கள் கழித்து என் அம்மா கத்லீனும் பைபிள் படிக்க ஆரம்பித்தார். 1946-ல் முழுக்காட்டுதல் எடுத்தார்.
1948-ம் வருடத்திலிருந்து நான் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி தவறாமல் பிரசங்கிக்க ஆரம்பித்தேன். வெளி ஊழிய மணிநேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்காக எனக்கு ஒரு வாட்ச் அவசியமென நினைத்தேன். அப்போதெல்லாம் நாங்கள் குறும்பு பண்ணாமல் இருந்தால் ஒவ்வொரு சனிக்கிழமையும் வீட்டில் எங்களுக்குக் காசு கொடுப்பார்கள்; ஒவ்வொருவருக்கும் ஒரு சிக்ஸ்பென்ஸ் (ஆறு பென்னிகள் மதிப்புள்ள ஒரு நாணயம்) கிடைத்தது. விலை குறைந்த வாட்ச் ஒன்றை வாங்குவதற்காக எனக்குக் கிடைத்த காசையெல்லாம் கிட்டத்தட்ட இரண்டு வருடம் சேர்த்து வைத்தேன். என் இரண்டு தம்பிமாரில் சின்னவன் பெயர் ரே; ஒரு சிக்ஸ்பென்ஸ் நாணயத்திற்குப் பதிலாக இரண்டு த்ரீபென்ஸ் நாணயங்களைத் (மூன்று பென்னிகள் மதிப்புள்ள ஒரு நாணயம்) தரச்சொல்லி அவன் எப்பொழுதும் அடம்பிடிப்பான். ஒருநாள் அப்பாவுக்குக் கோபம் வருமளவுக்கு ரொம்பவே அடம்பிடித்தான். பிறகு அழ ஆரம்பித்துவிட்டான். யெகோவாவுக்கும் தனக்கும் இடையில் ஒரு ரகசியம் இருப்பதாலேயே தான் இரண்டு காசுகளைக் கேட்பதாகச் சொல்லி அழுதான். கடைசியில் அந்த ரகசியத்தையும் சொல்லிவிட்டான்: “ஒரு காசு [த்ரீபென்ஸ்] நன்கொடைப் பெட்டியில் போட, இன்னொரு காசு எனக்காக . . . ” என்றான். அதைக் கேட்டதும் அம்மா சந்தோஷத்தில் கண்ணீர் வடித்தார்; அப்பாவும் உடனே சில்லறை மாற்றிவரச் செய்து இரண்டு காசுகளை அவனிடம் கொடுத்தார். இதிலிருந்து, ராஜ்ய வேலைக்காக நன்கொடைகளைக் கொடுப்பது எவ்வளவு அவசியம் என்பதை நானும் புரிந்துகொண்டேன்.
இச்சூழ்நிலையில், ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்படுகிற பகுதிக்கு மாறிச்செல்ல அப்பா ஏற்பாடுகளைச் செய்துவந்தார். 1949-ல் வயலை விற்றார்; மணலும் சரளைக்கல்லும் தோண்டியெடுக்கிற சுரங்கப் பகுதியையும் விற்றுவிட்டார். ஒரு பயனியராக முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தார். யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்ததற்கு அடையாளமாக நான் 1950, செப்டம்பர் 24 அன்று முழுக்காட்டுதல் எடுத்தேன். அப்போதிலிருந்து கோடை விடுமுறைகளில் வெக்கேஷன் பயனியர் (தற்போது துணைப் பயனியர்) சேவை செய்துவந்தேன். மாதம் 100 மணிநேரத்தை ஊழியத்தில் செலவிட்டேன். ஆனால் அது வெறும் ஓர் ஆரம்பமே. உண்மை வணக்கத்தைப் பற்றி பிரசங்கிக்க ஊழியத்தில் இன்னும் அதிகமாக ஈடுபட வேண்டுமென்ற பலமான ஆசை சீக்கிரத்திலேயே என் இதயத்தில் துளிர்த்தது.
மிஷனரி ஆசை
1951-ல் நார்த் டிவனிலுள்ள பைடஃபர்ட் நகர்ப்பகுதியில் சேவை செய்யும்படி அப்பா நியமிக்கப்பட்டார். நாங்கள் அங்கு போன புதிதில், ஆப்பிரிக்காவில் மிஷனரியாக இருந்த அந்த சகோதரி எங்கள் சபைக்கு வந்திருந்தார். அதன் பிறகு, மிஷனரி ஆசையை மனதில் வைத்தே மற்ற எல்லா தீர்மானங்களையும் செய்தேன். என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் எல்லாருக்கும் என் லட்சியம் தெரியவந்தது; ஆன்மீக லட்சியத்தை விட்டுவிட்டு, வாழ்க்கையில் முன்னேறுகிற வழியைப் பார்க்கும்படி முடிந்தவரை எனக்கு ‘புத்திமதி’ கூறினார்கள். பள்ளிப்படிப்பை முடித்து கடைசியாக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நான் ஸ்டாஃப் ரூமிற்குப் போயிருந்தேன். அங்கிருந்த ஆசிரியர்களில் ஒருவர் சொன்னார்: “நீ ஒருத்திதான் வாழ்க்கையில் திட்டவட்டமான ஒரு லட்சியத்தை வைத்திருக்கிறாய். உன் லட்சியம் கைகூட வாழ்த்துக்கள்!”
நாட்களை வீணடிக்காமல் சீக்கிரத்திலேயே பகுதி-நேர வேலையைத் தேடிக்கொண்டேன்; டிசம்பர் 1, 1955-ல் ஒழுங்கான பயனியர் ஆனேன். அதன்பிறகு அம்மாவும் என் தம்பிமாரும் பயனியர்கள் ஆனார்கள். ஆக, அநேக வருடங்களுக்கு எங்கள் குடும்பத்தில் எல்லாருமே முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டிருந்தோம்.
அயர்லாந்துக்கு
ஒரு வருடம் கழித்து, அயர்லாந்தில் சேவை செய்வதற்கான அழைப்பு கிடைத்தது. என் மிஷனரி ஆசை நிறைவேற இது ஒரு முன்னேற்றப் படியாகவே இருந்தது. 1957, பிப்ரவரியில் இளம் பயனியர்களான ஜூன் நேப்பியர், பெரில் பார்க்கர் ஆகியோருடன் அயர்லாந்தின் தென்பகுதியிலுள்ள கார்க் நகருக்குச் சென்றேன்.
அயர்லாந்தில் வெளி ஊழியம் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்தை ரோமன் கத்தோலிக்க சர்ச் கடுமையாக எதிர்த்து வந்தது. ஊழியம் செய்யும்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அங்கிருந்து பத்திரமாக வெளியேறுவது எப்படி என்பதை ஒரு அபார்ட்மென்ட்டிலோ, ஹவுஸிங் காலனியிலோ நுழையும்போதே நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. எங்கள் சைக்கிள்களை சற்று தூரத்திலேயே மறைவாக வைத்துவிட்டுச் செல்வோம். அப்படியும் யாராவது அதைக் கண்டுபிடித்து, டயர்களைக் கிழித்துவிடுவார்கள் அல்லது காற்றைப் பிடுங்கிவிடுவார்கள்.
ஒருமுறை நானும் பெரிலும் ஒரு பெரிய ஹவுஸிங் காலனியில் ஊழியம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அங்கிருந்த பிள்ளைகளெல்லாம் எங்களைத் தரக்குறைவாகப் பேசி, எங்கள்மீது கல்லெறிந்தார்கள். அதனால் நாங்கள் சட்டென ஒரு கடைக்குள் நுழைந்துவிட்டோம், அது ஒருவருடைய வீட்டிலேயே இருந்தது; அங்கு பால் விற்கப்பட்டது. கடைக்கு வெளியே ஒரு கலகக் கும்பல் சேர ஆரம்பித்தது. பெரிலுக்கு பால் ரொம்பப் பிடிக்குமென்பதால் இரண்டு மூன்று கிளாஸ் பாலை வாங்கி மெதுவாகக் குடித்துக்கொண்டிருந்தாள்; அதற்குள் அந்தக் கூட்டம் கலைந்துவிடும் என்று நினைத்தோம். கூட்டமோ கலைந்தபாடில்லை. அந்தச் சமயம்பார்த்து, இளம் பாதிரியார் ஒருவர் அந்தக் கடைக்குள் நுழைந்தார். எங்களை சுற்றுலாப் பயணிகள் என்று அவர் நினைத்துக்கொண்டார்; அதனால், எல்லாவற்றையும் சுற்றிக்காட்டுவதாகச் சொல்லி அங்கிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு சென்றார். என்றாலும், முதலில் அந்த வீட்டிலிருந்த இன்னொரு அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு முதியவர் மரணப் படுக்கையில் கிடந்தார். நாங்கள் அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டோம்; அந்த முதியவருக்கு பாதிரி ஏறெடுப்பு ஜெபம் செய்தார். அவர் கிளம்பியபோது கூடவே நாங்களும் அங்கிருந்து புறப்பட்டோம். அவரோடு பேசிக்கொண்டே சென்றதைப் பார்த்ததும் அந்தக் கும்பல் அப்படியே கலைந்துவிட்டது.
கிலியட்டுக்கு
1958-ல் “தெய்வீக சித்தம்” சர்வதேச மாநாடு நியு யார்க்கில் நடக்கவிருந்தது. அப்பா அதில் கலந்துகொள்ளவிருந்தார். எனக்கும் அவரோடு போக ஆசையாக இருந்தது; கையிலோ பணமில்லை. அந்தச் சமயத்தில்தான் என் பாட்டியம்மா திடீரென இறந்துபோனார்; 100 பவுண்டை (280 அமெரிக்க டாலர்) எனக்கென்று விட்டுச் சென்றிருந்தார். அந்த மாநாட்டிற்குப் போய்வர மொத்தம் 96 பவுண்டு மட்டுமே தேவைப்பட்டதால் விமான டிக்கெட் எடுப்பதற்கு உடனே ஏற்பாடு செய்தேன்.
அதன்பிறகு சீக்கிரத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரிட்டன் கிளை அலுவலகப் பிரதிநிதி ஒருவர் எங்களைச் சந்தித்தார். மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த விசேஷ பயனியர்களாகிய எங்கள் எல்லாரையும் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியில் மிஷனரி பயிற்சி பெற விண்ணப்பிக்குமாறு ஊக்கப்படுத்தினார். என்னால் நம்பவே முடியவில்லை! ஆனால் என்னைத் தவிர எல்லாருக்கும் விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்தார். நான் சின்னப் பெண்ணாக இருந்ததால் எனக்கு மட்டும் தரவில்லை. ஆனால், நான் விடவில்லை, எனக்கும் ஒரு படிவம் வேண்டுமென்று கேட்டேன்; அயல்நாட்டில் ஊழியம் செய்துவந்ததால் ஏறக்குறைய ஒரு மிஷனரிபோலவே இருந்ததை விளக்கினேன். நான் அந்தளவு உறுதியாக இருந்ததைப் பார்த்த பிறகு எனக்கும் ஒரு படிவத்தைக் கொடுத்தார். கிலியட் பள்ளியில் எப்படியாவது இடம் கிடைக்கவேண்டுமென்று ஜெபித்துக் கொண்டேயிருந்தேன். என் ஜெபத்திற்கு சீக்கிரத்திலேயே பதில் கிடைத்தது. ஆம், கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது.
ஆக, 14 நாடுகளிலிருந்து வந்த 81 பயனியர்களோடு 33-வது கிலியட் வகுப்பில் நானும் சேர்த்துக்கொள்ளப்பட்டபோது சந்தோஷத்தில் மிதந்தேன். வகுப்பு நடந்த ஐந்து மாதங்களும் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. வகுப்பு முடியவிருந்தபோது, சகோதரர் நேதன் ஹெச். நார் நான்கு மணிநேரப் பேச்சைக் கொடுத்தார். அது எங்களை ரொம்பவே உந்துவித்தது. அதில், முடிந்தால் திருமணம் செய்துகொள்ளாமலே இருந்துவிடும்படியாக அவர் ஊக்கப்படுத்தினார். (1 கொரிந்தியர் 7:37, 38) அதேசமயத்தில், திருமணம் செய்துகொள்ள விரும்பிய என்னைப் போன்றவர்களுக்கும் ஓர் ஆலோசனை வழங்கினார். அதாவது, எங்களுடைய வருங்காலத் துணைவரிடம் நாங்கள் எதையெல்லாம் எதிர்பார்க்கிறோம் என்பதை முதலில் பட்டியலிடச் சொன்னார். அந்தப் பட்டியலுக்குப் பொருந்திப் போகிறவரைத் திருமணம் செய்துகொள்வது நல்லது என்றார்.
என் பட்டியலில் இடம்பெற்றிருந்தவை: என்னவர் ஒரு மிஷனரியாகவும், யெகோவாவை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும்; பைபிள் சத்தியத்தை என்னைவிட நன்றாகத் தெரிந்தவராய் இருக்க வேண்டும்; முழுநேர ஊழியத்தைத் தொடருவதற்காக அர்மகெதோன்வரை குழந்தை பெற விரும்பாதவராய் இருக்க வேண்டும்; சரளமாக ஆங்கிலம் பேசுபவராயும், என்னைவிட மூத்தவராயும் இருக்க வேண்டும். தொலைதூர தேசத்திற்கு மிஷனரியாகச் செல்லவிருந்த 20 வயதுப் பெண்ணாகிய எனக்கு, இந்தப் பட்டியல் ரொம்பவே கைகொடுத்தது.
பிரேசிலுக்கு
பட்டமளிப்பு விழா 1959, ஆகஸ்ட் 2, ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. அன்றுதான் எங்களுக்கு நியமிப்பும் கிடைத்தது. வீயனூஷ் யாஸெட்ஜியங், சாரா கிரீகோ, ரே மற்றும் இங்கர் ஹட்ஃபீல்ட், சோன்யா ஸ்பிரிங்கேட், டாரீன் ஹைன்ஸ் ஆகியோரோடு சேர்ந்து நானும் பிரேசிலுக்குச் செல்ல நியமிக்கப்பட்டேன். எங்கள் அனைவரின் உள்ளமும் உற்சாகத்தில் துள்ளியது. காடுகளையும், பாம்புகளையும், ரப்பர் மரங்களையும், அங்கு வாழ்ந்துவரும் பரம்பரை இந்தியர்களையும் பார்க்கப் போவதாகவே கற்பனை செய்துகொண்டிருந்தேன். அங்கு போய்ச் சேர்ந்தபோதோ ஆச்சரியம் காத்திருந்தது! ஏனெனில், நாங்கள் சென்ற இடம் அமேஸான் மலைக்காடுகள் அல்ல; சூரிய ஒளியில் பளிச்சென்று தெரிகிற நவீன மாநகரான ரியோ டி ஜெனிரோ. அதுவே அந்நாட்டின் அப்போதைய தலைநகராய் இருந்தது.
போர்ச்சுகீஸ் மொழியைக் கற்றுக்கொள்வதுதான் எங்களுக்கிருந்த பெரிய சவால். அதற்காக முதல் மாதத்தில் ஒவ்வொரு நாளும் 11 மணிநேரத்தை ஒதுக்கினோம். கொஞ்ச காலம் ரியோவில் ஊழியம் செய்தேன், கிளை அலுவலகத்தில் தங்கியிருந்தேன்; அதைத் தொடர்ந்து சாவோ பாலோ மாநிலத்தைச் சேர்ந்த பிராசீகாபா நகரிலிருந்த மிஷனரி ஹோமுக்கு அனுப்பப்பட்டேன். அடுத்ததாக, ரியோ கிராண்டி டோ சுல் மாநிலத்தைச் சேர்ந்த பார்ட்டூ ஆலேக்ரி நகரிலிருந்த மிஷனரி ஹோமுக்கு அனுப்பப்பட்டேன்.
1963-ன் ஆரம்பத்தில், கிளை அலுவலகத்திலுள்ள மொழிபெயர்ப்பு இலாகாவில் சேவை செய்வதற்கான அழைப்பு கிடைத்தது. எங்களுக்கு போர்ச்சுகீஸ் மொழியை முதன்முதலாகக் கற்றுக்கொடுத்த சகோதரரான ஃப்ளோரியானு இக்னேஸ் டா கோன்ஸேஸாங் அந்த இலாகாவின் பொறுப்பை ஏற்றிருந்தார். அவர் 1944-ல், பிரேசிலில் சுமார் 300 சாட்சிகள் மட்டுமே இருந்த காலத்தில் சத்தியத்திற்கு வந்தவர். 22-வது கிலியட் வகுப்பில் பயிற்சி பெற்றவர். நான் கிளை அலுவலகத்தில் சேவை செய்ய ஆரம்பித்து சில மாதங்கள் உருண்டோடியிருந்தன; அந்தச் சமயத்தில், சகோதரர் கோன்ஸேஸாங் என்னிடம் மதிய உணவுக்கான மணியடித்தபின் சற்றுநேரம் இருந்துவிட்டுப் போகும்படி சொன்னார். ஏதோ பேசவேண்டும் என்றார். ‘நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனோ?’ என்று முதலில் பயந்தேன். மணியடித்தபின், என்ன விஷயம் என அவரிடம் கேட்டேன். “என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா?” என்றார். நான் அப்படியே வாயடைத்துப் போய்விட்டேன். யோசித்துப் பதில் சொல்வதாகச் சொல்லிவிட்டு சாப்பாட்டுக்கு விரைந்தேன்.
இதே கேள்வியை ஏற்கெனவே அநேகர் என்னிடம் கேட்டிருந்தார்கள். என்றாலும், அவர்களில் யாருமே என் பட்டியலுடன் நூற்றுக்கு நூறு பொருந்திப் போகவில்லை. நான் தவறான தெரிவைச் செய்துவிடாதபடி அந்தப் பட்டியலே என்னைக் காப்பாற்றியது எனலாம். ஆனால் இந்த முறை சூழ்நிலை வித்தியாசமாக இருந்தது. ஏனெனில், ஃப்ளோரியானு என் பட்டியலுக்கு கச்சிதமாகப் பொருந்தினார்! ஆகவே, 1965, மே 15 அன்று நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
சுகவீனத்தைச் சமாளித்தல்
பிரச்சினைகளின் மத்தியிலும் எங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாகக் கழிந்திருக்கிறது. அந்தப் பிரச்சினைகளில் ஒன்று, திருமணத்திற்கு முன்பே ஃப்ளோரியானுவுக்கு ஏற்பட்டிருந்த உடல்நலக் கோளாறு. சில வருடங்களுக்கு முன் அவருடைய இடது பக்க நுரையீரல் செயலிழந்திருந்தது; அதன் பாதிப்புகளால் திருமணத்திற்குப் பின் அவர் மிகவும் அவதிப்பட்டார். அதனால் பெத்தேல் சேவையை விட்டு விசேஷ பயனியர்களாக டேரேஸாப்பூலிஸ் என்ற நகரத்திற்குச் சென்றோம்; இது ரியோ டி ஜெனிரோ மாநிலத்திலுள்ள ஒரு மலைப்பகுதியாகும். அந்தச் சீதோஷ்ணநிலை அவர் குணமடைய உதவுமென்று நம்பினோம்.
1965, டிசம்பரில் என் அம்மா தீவிரப் புற்றுநோயால் அவதிப்படுவதாக செய்தி வந்தது; இது அடுத்த பிரச்சினையாக இருந்தது. நானும் அம்மாவும் ஒருவருக்கொருவர் தவறாமல் கடிதம் எழுதிக்கொண்டோம்; ஆனால் அவரை நேரில் பார்த்து ஏழு வருடங்களாகிவிட்டன. ஆகவே, இங்கிலாந்துக்கு வந்து தன்னைப் பார்ப்பதற்காக அம்மாவே எனக்குப் பணம் அனுப்பிவைத்தார். அம்மாவுக்கு ஆப்பரேஷன் நடந்தது. ஆனால் அந்தப் புற்றுநோய்க் கட்டியை டாக்டர்களால் முழுமையாக அகற்ற முடியவில்லை. அம்மா படுத்த படுக்கையாகிவிட்டார்; என்றாலும், பிரசங்க வேலையில் ஈடுபட வேண்டுமென்ற தணியாத ஆவலால் கடிதம் மூலம் சாட்சி கொடுத்து வந்தார். எப்படியெனில், அவர் சொல்லச் சொல்ல, அவரது படுக்கை அறையில் இருந்த டைப்ரைட்டரை உபயோகித்து யாராவது கடிதத்தை டைப் செய்வார்கள். தன்னைப் பார்க்க வருபவர்களிடமும் சுருக்கமாக சாட்சிகொடுத்து வந்தார். 1966, நவம்பர் 27 அன்று இறந்துவிட்டார். அந்த மாதத்திலும்கூட 10 மணிநேரத்தை வெளி ஊழிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்! அப்பாவோ, 1979-ல் இறக்கும்வரையில் பயனியர் ஊழியத்தைத் தொடர்ந்து செய்துவந்தார்.
அம்மா இறந்தபிறகு நானும் ஃப்ளோரியானுவும் பிரேசிலுக்குத் திரும்பினோம்; அப்போதிலிருந்து ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில்தான் சேவை செய்துகொண்டிருக்கிறோம். முதலில் அதன் தலைநகரில் வட்டார ஊழியம் செய்யும்படி நியமிக்கப்பட்டோம். ஆனால் இந்தச் சந்தோஷம் வெகுநாள் நீடிக்கவில்லை, ஏனெனில் ஃப்ளோரியானுவின் உடல்நிலை மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டேரேஸாப்பூலிஸ் நகருக்கே விசேஷ பயனியர்களாகச் சென்றோம்.
வேதனை தரும் சிகிச்சைகள் அடுத்தடுத்து அளிக்கப்பட்டன. கடைசியாக 1974-ல், ஃப்ளோரியானுவின் இடது பக்க நுரையீரலை டாக்டர்கள் அகற்றிவிட்டார்கள். அப்போது, நடத்தும் கண்காணியாகவோ விசேஷ பயனியராகவோ அவரால் சேவை செய்ய முடியவில்லை. ஆனால் ஆஸ்பத்திரியில் பார்வையாளர்கள் நேரத்தில் பைபிள் படிப்புகளை அவர் நடத்தினார். இப்படித்தான் ஓய்வுபெற்றிருந்த அமெரிக்கரான பாப் என்பவருக்கு ஆங்கிலத்தில் படிப்பு நடத்தினார். பாப் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, பின்னர் முழுக்காட்டுதலும் பெற்றார். ஃப்ளோரியானுவின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது, அப்போதிலிருந்து இப்போதுவரை ஓர் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்து வருகிறார்.
யெகோவாவின் ஆசி
தற்போது பல வருடங்களாக நான் தொடர்ந்து ஒரு விசேஷ பயனியராக சேவை செய்து வருகிறேன், யெகோவா என் ஊழியத்தை ஆசீர்வதித்திருக்கிறார். டேரேஸாப்பூலிஸ் நகரில் 60-க்கும் அதிகமானோர் தங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க உதவிய பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவர்களில் ஸூப்பீரா என்ற பெண்ணும் ஒருவர்; அவருக்கு வாசிக்கவும் நான் சொல்லிக்கொடுத்திருந்தேன். காலப்போக்கில் இவருடைய வயதுவந்த எட்டுப் பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பு நடத்தினேன். இதன் பலனாக, இன்று ஸூப்பீராவும் அவருடைய குடும்பத்தில் 20-க்கும் அதிகமானவர்களும் யெகோவாவுக்கு மும்முரமாகச் சேவை செய்துவருகிறார்கள். இவர்களில் ஒருவர் மூப்பராகவும் மூன்று பேர் உதவி ஊழியர்களாகவும் இருக்கிறார்கள்; இரண்டு பேர் பயனியர்களாக சேவை செய்கிறார்கள்.
ஜனங்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நல்ல மனநிலையை வளர்த்துக்கொள்வது அவசியம் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஒரு சந்தர்ப்பத்தில் ஆல்ஸமீரா என்ற இளம் பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்தினேன். ஒரு நாள் அவருடைய கணவரான ஆன்டான்யூ, என்னை அங்கிருந்து உடனே வெளியேறிவிடும்படியும், இல்லாவிட்டால், இரண்டு பெரிய நாய்களை அவிழ்த்து விடப்போவதாகவும் மிரட்டினார். அதன் பிறகு, ஆல்ஸமீராவை எப்போதாவது மட்டுமே நான் சந்தித்துவந்தேன். இது நடந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு, எப்படியோ ஒரு வழியாக ஆன்டான்யூவின் அனுமதியோடு ஆல்ஸமீராவுக்கு மீண்டும் பைபிள் படிப்பைத் தொடங்கினேன். ஆனால், தன்னிடம் பைபிளைப் பற்றிப் பேச வேண்டாமென்று ஆன்டான்யூ சொல்லிவிட்டார். இருந்தாலும், ஒரு நாள் சோவென மழை கொட்டிக்கொண்டிருந்தபோது ஆன்டான்யூவை எங்களோடு சேர்ந்து படிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அப்போதுதான் அத்தனை நாளும் அவர் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததற்கான காரணம் புரிந்தது; என்னவென்றால், அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அப்போதிலிருந்து, ஃப்ளோரியானுவும் மற்றவர்களும் அவருக்கு பைபிள் படிப்பு நடத்தியதுடன் வாசிக்கவும் கற்றுக்கொடுத்தார்கள். இப்போது ஆல்ஸமீரா, ஆன்டான்யூ இருவருமே முழுக்காட்டுதல் பெற்றுவிட்டார்கள். சபைக்கு ஆன்டான்யூ பெரும் உதவியாக இருக்கிறார். அநேக இளைஞர்களோடு சேர்ந்து ஊழியத்தில் கலந்துகொள்கிறார்.
இவையெல்லாம் நாங்கள் டேரேஸாப்பூலிஸ் நகரில் 20 வருடத்திற்கும் மேலாக ஊழியம் செய்தபோது கிடைத்த அனுபவங்களில் ஓரிரண்டு மட்டுமே. 1988-ன் ஆரம்பத்தில் நிட்டெராய் நகருக்குச் செல்லும்படி நியமிக்கப்பட்டோம்; அங்கு ஐந்து வருடங்கள் ஊழியம் செய்த பின்னர் ஸாண்டூ ஆலேஷூ நகருக்குச் சென்றோம். அங்கிருந்து மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்திருந்த ஸாப்பூயிபா சபைக்கு மாறிச் சென்றோம். அங்கிருக்கையில் ரீபேரா சபையை ஸ்தாபிக்கும் பாக்கியத்தைப் பெற்றோம்.
எளிமையாயினும் பலனுள்ள வாழ்க்கை
கடந்த பல வருடங்களில் நானும் ஃப்ளோரியானுவும் சேர்ந்து 300-க்கும் அதிகமானோர் தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க உதவும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். அவர்களில் சிலர் தற்போது கிளை அலுவலகத்திலும், சிலர் பயனியர்களாகவும், சிலர் மூப்பர்களாகவும், இன்னும் சிலர் உதவி ஊழியர்களாகவும் சேவை செய்கிறார்கள். இத்தனைப் பேருக்கு உதவ தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாகக் கடவுள் எங்களைப் பயன்படுத்தியிருப்பதற்கு நான் அவருக்கு எவ்வளவு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்!—மாற்கு 10:29, 30.
ஃப்ளோரியானு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டிருப்பது உண்மைதான். அந்தப் பிரச்சினைகளின் மத்தியிலும் அவர் தளரா நெஞ்சத்துடன் மகிழ்ச்சியோடு இருக்கிறார்; யெகோவாமீது நம்பிக்கையுடனும் இருக்கிறார். அவர் எப்போதும் இப்படிச் சொல்வார்: “இந்த காலத்தில் பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சந்தோஷமான வாழ்க்கை எனச் சொல்லமுடியாது. பிரச்சினைகளை யெகோவாவின் உதவியோடு சமாளிப்பதில்தான் சந்தோஷமே.”—சங்கீதம் 34:19.
2003-ல், என் இடது கண்ணில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. ஆப்பரேஷன் செய்து அந்தக் கண் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக செயற்கைக் கண் பொருத்தப்பட்டது; இதனால் ஒவ்வொரு நாளும் பலமுறை அதைச் சுத்தப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையிலும், ஒரு விசேஷ பயனியராக நான் தொடர்ந்து சேவை செய்வதற்குத் தேவையான சக்தியைத் தந்து யெகோவா என்னை ஆசீர்வதித்திருக்கிறார்.
பொருள் செல்வத்தைப் பொறுத்தவரையில் என் வாழ்க்கை எளிமையானதாகவே இருந்திருக்கிறது. ஆனால் என் ஊழிய நியமிப்பில் யெகோவாவின் ஆசியால் ஆன்மீக ஐசுவரியத்திற்குக் குறைவே இல்லை. ஆப்பிரிக்காவில் ஊழியம் செய்தபோது சூழ்நிலை எப்படி இருந்ததென்று அந்த மிஷனரி சகோதரி சொன்னாரோ, அப்படியே நாங்கள் ஊழியம் செய்கிற பிரேசிலிலும் இருக்கிறது. ஆம், என் மிஷனரி ஆசையும் நிறைவேறியது, யெகோவாவின் ஆசியும் அளவின்றி கிடைத்தது!
[பக்கம் 9-ன் படம்]
1953-ல் என் குடும்பத்தாருடன்
[பக்கம் 9-ன் படம்]
1957-ல் அயர்லாந்தில் ஊழியம் செய்தபோது
[பக்கம் 10-ன் படம்]
1959-ல் பிரேசிலில் சக மிஷனரிகளுடன். இடமிருந்து வலம்: நான், இங்கர் ஹட்ஃபீல்ட், டாரீன் ஹைன்ஸ், சோன்யா ஸ்பிரிங்கேட்
[பக்கம் 10-ன் படம்]
என் கணவருடன்