வாழ்க்கைக்கு எது திருப்தி அளிக்கிறது?
‘தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.’—பிர. 12:13.
1, 2. பிரசங்கி புத்தகத்தைக் கலந்தாராய்வதால் நமக்கு என்ன பயன்?
சகல சௌகரியங்களுடன் சந்தோஷமாய் வாழும் ஒரு நபரைக் கற்பனை செய்துபாருங்கள். இவர், அரசியல் செல்வாக்குப் பெற்றவர்; உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவர். அதுமட்டுமா, மிகப் பெரிய ஞானியும்கூட. இத்தனை அரும்பெரும் சாதனைகளைப் படைத்த பிறகும், அவர் தன்னையே இவ்வாறு கேட்டுக்கொள்கிறார்: ‘வாழ்க்கைக்கு எது திருப்தி அளிக்கிறது?’
2 இப்படிப்பட்ட ஒருவர் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உண்மையிலேயே வாழ்ந்தார். அவருடைய பெயர்தான் சாலொமோன். வாழ்க்கையில் திருப்தி காண தான் என்னவெல்லாம் செய்தார் என்பதை பிரசங்கி புத்தகத்தில் அவரே விவரித்திருப்பதை நாம் வாசிக்கிறோம். (பிர. 1:13) சாலொமோனின் அனுபவத்திலிருந்து நாம் அநேக விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். பிரசங்கி புத்தகத்திலுள்ள ஞானம் பொதிந்த வார்த்தைகள், வாழ்க்கையில் திருப்தி அளிக்கும் இலக்குகளை வைக்க நமக்கு உண்மையிலேயே உதவலாம்.
‘காற்றைப் பிடிக்க முயல்வது’
3. நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட, சிந்திக்க வைக்கும் எந்த உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்?
3 கடவுள் இந்தப் பூமியில், அருமையான எண்ணற்ற பொருள்களைப் படைத்திருக்கிறார். இவை, நம் ஆர்வப் பசியைக் கிளறிவிட்டு, நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இவை ஒவ்வொன்றையும் நாம் அனுபவித்து மகிழ வேண்டுமென்றால் நம் வாழ்நாள் காலம் நமக்குப் போதாது என்கிறார் சாலொமோன். இன்னும் சொல்லப்போனால், கடவுளுடைய படைப்புகளை ஆராய்ந்தறிய நாம் ஆரம்பிக்கக்கூட முடியாது. ஏனெனில், நம் வாழ்நாள் அந்தளவு குறுகியது. (பிர. 3:11; 8:17) பைபிள் சொல்கிறபடி, நம் வாழ்நாள் குறுகியது, அது வேகமாய்க் கடந்து செல்கிறது. (யோபு 14:1, 2; பிர. 6:12) சிந்திக்க வைக்கும் இந்த உண்மை, நம்முடைய வாழ்க்கையைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்த நம்மைத் தூண்ட வேண்டும். ஆனால், சாத்தானின் உலகம் தவறான பாதையில் செல்ல நம்மைத் தூண்ட வாய்ப்பிருப்பதால் இது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமல்ல.
4. (அ) “மாயை” என்பது எவ்வாறு விளக்கப்படுகிறது? (ஆ) வாழ்க்கையின் என்ன இலட்சியங்களைக் குறித்து நாம் இப்போது சிந்திக்கப் போகிறோம்?
4 பயனற்ற காரியங்களில் ஈடுபட்டு நம் வாழ்க்கையை வீணடிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை வலியுறுத்துவதற்காக ‘மாயை’ என்ற வார்த்தையை சாலொமோன் 30-க்கும் அதிகமான முறை பிரசங்கி புத்தகத்தில் பயன்படுத்தியிருக்கிறார். “மாயை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை, வெறுமையானது, வீணானது, பயனற்றது, நிரந்தர நன்மை அளிக்காதது என்றெல்லாம் விளக்கப்படுகிறது. (பிர. 1:2, 3) “மாயை” என்பது, “காற்றைப் பிடிக்க முயல்வதற்கு” சமமானது என்றும் சாலொமோன் சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். (பிர. [சபை உரையாளர்] 1:14; 2:11; பொது மொழிபெயர்ப்பு) காற்றைப் பிடிக்க முயற்சி செய்வது வீணான செயல் என்பதில் சந்தேகமே இல்லை. யாராவது காற்றைப் பிடிக்க முயற்சி செய்தாலும் அது அவர்கள் கைக்குக் கிடைக்காது. பயனற்ற இலட்சியங்களை அடைய முயற்சி செய்வதும் அப்படித்தான் இருக்கிறது. இதில், விரக்தி தவிர வேறொன்றும் அவர்களுக்கு மிஞ்சாது. இந்தப் பொல்லாத உலகில் நம்முடைய வாழ்நாள் மிகவும் குறுகியதாக இருப்பதால், துளியும் பயன் அளிக்காத காரியங்களில் ஈடுபடுவது ஞானமற்ற செயல். எனவே, அந்தத் தவறை நாம் செய்யாதிருக்க, சாலொமோன் தரும் சில உதாரணங்களைச் சிந்தித்துப் பார்ப்பது பிரயோஜனமாய் இருக்கும். வாழ்க்கையில் பொதுவாக அனைவருக்கும் இருக்கும் இலட்சியங்களைக் குறித்து சாலொமோன் விளக்குவதை நாம் இப்போது சிந்திக்கலாம். முதலாவதாக, சுகபோகத்தையும் சொத்துசுகங்களையும் பெற கடினமாய்ப் பாடுபடுவதைக் குறித்து சிந்திக்கலாம். அதன் பிறகு, கடவுளுக்குப் பிரியமான வேலையைச் செய்வதன் முக்கியத்துவத்தைக் குறித்து ஆராயலாம்.
சுகபோகம் சந்தோஷம் தருமா?
5. வாழ்க்கையில் திருப்தி காண சாலொமோன் என்னவெல்லாம் செய்தார்?
5 இன்றுள்ள அநேகரைப் போலவே சாலொமோனும், சுகபோக வாழ்க்கையில் சந்தோஷத்தைப் பெற முயற்சி செய்தார். “ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை” என்று அவர் சொல்கிறார். (பிர. 2:10) சுகபோக வாழ்க்கைக்காக அவர் என்னவெல்லாம் செய்தார்? பிரசங்கி இரண்டாம் அதிகாரம் குறிப்பிடுகிறபடி, அவர் ‘தன் தேகத்தை மதுபானத்தால் சீராட்டினார்,’ ஆனால் சமநிலையுடன். அதோடு, நிலப்பரப்பை அழகுபடுத்தினார், மாளிகைகளை வடிவமைத்தார், இன்னிசையைக் கேட்டுத் திளைத்தார்; ஏன், ருசியான உணவுப் பதார்த்தங்களையும்கூட உண்டு மகிழ்ந்தாரே.
6. (அ) வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்களை அனுபவிப்பதில் ஏன் தவறில்லை? (ஆ) பொழுதுபோக்கு விஷயத்தில் ஏன் சமநிலை தேவை?
6 நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாய் பொழுதைக் கழிப்பது தவறு என்று பைபிள் சொல்கிறதா? இல்லவே இல்லை. உதாரணத்திற்கு, நாள் முழுவதும் கடினமாக உழைத்துவிட்டு, பிறகு நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட்டு மகிழ்வது கடவுள் தரும் ஆசீர்வாதம் என்று சாலொமோன் சொல்கிறார். (பிரசங்கி 2:24; 3:12, 13-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, “சந்தோஷப்படு, . . . உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்” என்று யெகோவாவே இளைஞர்களிடம் கூறுகிறார். அதேசமயம், அவர்களுடைய செயல்களுக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். (பிர. 11:9) நமக்கு ஓய்வும் நல்ல பொழுதுபோக்கும் அவசியம்தான். (மாற்கு 6:31-ஐ ஒப்பிடவும்.) என்றாலும், பொழுதுபோக்கே நம் வாழ்க்கையில் முக்கியமானதாய் ஆகிவிடக்கூடாது. பொழுதுபோக்கு என்பது, உணவுக்குப் பிறகு நாம் சாப்பிடுகிற இனிப்புபோல் இருக்க வேண்டும்; அதுவே உணவாகிவிடக் கூடாது. இனிப்பு பண்டங்களை நீங்கள் எவ்வளவுதான் ஆசை ஆசையாகச் சாப்பிட்டாலும், அதையே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் உங்களுக்குத் திகட்டிவிடும். மேலும், அது உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்காது. அதுபோல, சுகபோகமே வாழ்க்கையில் முக்கியமானதாய் இருந்தால், அது, ‘காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாய்’ இருக்கும் என்பதை சாலொமோன் அனுபவத்தில் கண்டார்.—பிர. [சபை உரையாளர்] 2:10, 11, பொ.மொ.
7. பொழுதுபோக்கை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நாம் ஏன் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்?
7 அதுமட்டுமல்ல, எல்லா விதமான பொழுதுபோக்குகளும் நன்மையானவை என சொல்ல முடியாது. அவற்றில் பல, யெகோவாவிடம் உள்ள நம் உறவை சிதைத்து சின்னாபின்னமாக்கி, ஒழுக்கங்கெட்ட காரியங்களில் நம்மை ஈடுபட வைக்கலாம். லட்சோப லட்சம் பேர், ‘மனம்போல் வாழ வேண்டும்’ என்ற ஒரே காரணத்திற்காக போதைப் பொருள்களையும் மதுபானத்தையும் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்; ஏன், சூதாட்டத்திலும்கூட ஈடுபட்டிருக்கிறார்கள். அதன் விளைவாக, தங்கள் வாழ்க்கையையே தொலைத்திருக்கிறார்கள். தீமை செய்யும்படி நம் கண்களோ இருதயமோ நம்மைத் தூண்டுவதற்கு இடங்கொடுத்தால், அதன் பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்று யெகோவா நம்மை அன்புடன் எச்சரிக்கிறார்.—கலா. 6:7.
8. நம் வாழ்க்கையை சுயபரிசோதனை செய்வது ஏன் பயனுள்ளது?
8 அதோடுகூட, சுகபோக வாழ்க்கைக்கு நாம் மட்டுக்குமீறிய கவனம் செலுத்துவது, அதிமுக்கியமான காரியங்களை தட்டிக்கழிக்க செய்துவிடும். நம்முடைய வாழ்நாள் காலம் வேகமாய் உருண்டோடுகிறது; இந்த அற்ப ஆயுசு காலத்தில் நாம் எப்போதுமே ஆரோக்கியமாகவும் கவலையின்றி சந்தோஷமாகவும் இருப்போம் என்ற நிச்சயமில்லை என்பதை நினைவில் வையுங்கள். அதனால்தான், சாலொமோன் தொடர்ந்து சொன்னபடி, ‘களிப்பு வீட்டிற்கு’ போவதற்குப் பதிலாக துக்க வீட்டுக்குப் போவதால் நாம் அதிக நன்மை அடைவோம். முக்கியமாக, கடவுளுக்கு உண்மையுள்ளவராய் இருந்து இறந்துபோன ஒரு சகோதரருடைய அல்லது சகோதரியுடைய சவ அடக்கத்திற்குச் செல்வதால் நாம் அதிக நன்மை பெறுவோம். (பிரசங்கி 7:2, 4-ஐ வாசியுங்கள்.) சாலொமோன் ஏன் அப்படிச் சொல்கிறார்? சவ அடக்கப் பேச்சை கேட்கும்போது, கடவுளுக்கு உண்மையாய் இருந்து இறந்துபோன அந்த ஊழியரின் வாழ்க்கையை சற்று யோசித்துப் பார்ப்போம். இதனால், நம்முடைய வாழ்க்கையைக் கொஞ்சம் சுயபரிசோதனை செய்யத் தூண்டப்படலாம். அதன் விளைவாக, நம் வாழ்க்கையின் மீதமுள்ள காலத்தைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்த நம்முடைய இலட்சியங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்ற முடிவுக்கு வரலாம்.—பிர. 12:1.
சொத்துசுகங்கள் சந்தோஷம் தருமா?
9. சொத்து சேர்க்கும் விஷயத்தில் சாலொமோன் எதை அனுபவத்தில் கண்டார்?
9 பிரசங்கி புத்தகத்தை எழுதினபோது சாலொமோன், உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவராய் இருந்தார். (2 நா. 9:22) தான் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அடையுமளவுக்கு அவரிடம் செல்வம் இருந்தது. “என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை” என்று அவர் எழுதினார். (பிர. 2:10) இருந்தாலும், பொருள் செல்வங்கள் மட்டுமே ஒருவருக்குத் திருப்தியைத் தராது என்பதையும் அவர் அனுபவத்தில் கண்டார். “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை” என்று அவரே எழுதினார்.—பிர. 5:10.
10. உண்மையான திருப்தியையும் நிலையான செல்வத்தையும் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
10 பொருள் செல்வங்கள் நிலையற்றவையாய் இருந்தாலும், அவை காந்தம் போல் மக்களை தம்வசம் இழுக்கின்றன. சமீபத்தில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்போது, பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர், “பணக்காரர்களாக” ஆவதே வாழ்க்கையில் தங்கள் இலட்சியம் என்று கூறினார்கள். ஒருவேளை அந்த இலட்சியத்தை அவர்கள் அடைந்தாலும் உண்மையிலேயே சந்தோஷமாய் இருப்பார்களா? இருக்கலாம், இல்லாமலும் போகலாம். தன் வாழ்க்கையில் ஒருவர் பொருள்களை வாங்கிக் குவிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் அவர் சந்தோஷத்தையும் திருப்தியையும் பெறுவது கடினம் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள். வெகு காலத்திற்கு முன்பே சாலொமோன் அந்த முடிவுக்கு வந்துவிட்டார். ‘வெள்ளியையும் பொன்னையும், ராஜ சம்பத்தையும் . . . சம்பாதித்தேன். இதோ எல்லாம் மாயை,’ ‘காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகவும் இருக்கின்றன’ என்று அவர் எழுதினார்.a (பிர. [சபை உரையாளர்] 2:8, 11; பொ.மொ.) மாறாக, முழு இருதயத்துடன் யெகோவாவைச் சேவிப்பதை நம் வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோளாக வைக்கும்போது, அவருடைய ஆசீர்வாதத்தால் நாம் நிலையான செல்வத்தைப் பெறுவோம்.—நீதிமொழிகள் 10:22-ஐ வாசியுங்கள்.
என்ன விதமான வேலை உண்மையான திருப்தி அளிக்கும்?
11. முக்கிய நோக்கத்தை நிறைவேற்றும் வேலையைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது?
11 “என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்துவருகிறார், நானும் கிரியை செய்துவருகிறேன்” என்றார் இயேசு. (யோவா. 5:17) யெகோவாவும் இயேசுவும் வேலை செய்வதில் திருப்தி காண்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. படைப்பு வேலையில் யெகோவா அடைந்த திருப்தியைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதி. 1:31) கடவுளுடைய படைப்புகள் அனைத்தையும் கண்டு தேவதூதர்கள் ‘கெம்பீரித்தார்கள்.’ (யோபு 38:4-7) முக்கிய நோக்கத்தை நிறைவேற்றும் வேலை மகத்தான வேலை என்பதை சாலொமோனும் உணர்ந்திருந்தார்.—பிர. 3:13.
12, 13. (அ) கடின உழைப்பில் கிடைக்கும் திருப்தியைக் குறித்து இரண்டு பேர் என்ன சொல்கிறார்கள்? (ஆ) நம் பிழைப்பிற்காக செய்யும் வேலை ஏன் சில சமயங்களில் விரக்தி அளிக்கலாம்?
12 கடின உழைப்பில் கிடைக்கும் திருப்தியை அநேகர் ருசித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, புகழ்பெற்ற ஓவியரான ஹோசே சொல்வதாவது: “உங்கள் மனதில் உள்ள காட்சியை அப்படியே உங்களால் கேன்வஸ் துணியில் வரைய முடிந்தால், ஓர் இமாலய சாதனை படைத்த திருப்தியைப் பெறுவீர்கள்.” தொழிலதிபரான மிகெல்b சொல்வதாவது: “வேலை செய்து சம்பாதிப்பதால், நம் குடும்பத்தைப் பராமரிக்க முடிகிறது. எனவே, திருப்தியையும், அதோடுகூட எதையோ சாதித்த உணர்வையும் பெற முடிகிறது.”
13 மறுபட்சத்தில், அநேக வேலைகள் இயந்திரத்தனமானவையாய் இருக்கின்றன; சாதனைக்கு அவற்றில் பெரும் வாய்ப்புகள் இல்லாதிருக்கின்றன. சில சமயங்களில் வேலைசெய்யும் இடங்களில், சண்டைச் சச்சரவுகள் அதிகமாய் இருக்கலாம், அநீதி கொடிகட்டிப் பறக்கலாம். சாலொமோன் சொல்கிறபடி, சோம்பேறியாய் இருப்பவன் ஒருவேளை செல்வாக்குமிக்கவர்களுடன் உள்ள சகவாசத்தால், கடினமாய் உழைப்பவனுக்குரிய வெகுமதியைப் பெறலாம். (பிர. 2:21) வேறு காரணங்களாலும் வேலையில் விரக்தி அடைய நமக்கு வாய்ப்பிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியால் அல்லது எதிர்பாராத சம்பவங்களால், அமோகமாக நடந்த வியாபாரம் படுத்துவிடலாம். “நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் எதிர்பாராத சம்பவமும் நேரிடுகிறது.” (பிரசங்கி 9:11; NW) வெற்றி பெற நினைக்கும் நபர், அநேக சந்தர்ப்பங்களில் தோல்வியால் விரக்தி அடைகிறார். இத்தனை காலமாக தான் ‘காற்றுக்குப் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்ததை’ கடைசியில்தான் உணருகிறார்.—பிர. 5:16.
14. என்ன விதமான வேலை எப்போதுமே உண்மையான திருப்தியை அளிக்கிறது?
14 ஏமாற்றமே அளிக்காத வேலை ஏதாவது இருக்கிறதா? முன்பு குறிப்பிடப்பட்ட ஓவியரான ஹோசே இவ்வாறு சொல்கிறார்: “நாட்கள் உருண்டோடுகையில் ஓவியங்கள் தொலைந்து போகலாம், அல்லது அழிந்து போகலாம். ஆனால், கடவுளுடைய ஊழியத்தில் நாம் செய்யும் காரியங்கள் அப்படியல்ல. யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, நற்செய்தியைப் பிரசங்கிப்பதன்மூலம் மற்றவர்கள் பயபக்தியுள்ள கிறிஸ்தவர்களாக ஆவதற்கு உதவி செய்திருக்கிறேன். இது அவர்களுக்கு நிரந்தர நன்மையை அளிக்கிறது. இதை உண்மையிலேயே மதிப்புமிக்க வேலையாகக் கருதுகிறேன்.” (1 கொ. 3:9-11) மிகெலும் அப்படியே உணருகிறார். மனிதருக்கு வேலை செய்வதைவிடவும், ராஜ்ய செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையில் ஈடுபடுவதே தனக்கு அதிக திருப்தி அளிப்பதாக அவர் சொல்கிறார். “நீங்கள் பைபிள் சத்தியத்தை யாரிடமாவது சொல்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள், அது அவருடைய மனதை ஆழமாகத் தொட்டிருப்பதை உணருகையில் அதில் கிடைக்கும் சந்தோஷமே தனி, அது வேறெதிலுமே கிடைக்காது” என்கிறார் அவர்.
“உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு”
15. உண்மையில் வாழ்க்கைக்கு எதுதான் திருப்தி அளிக்கிறது?
15 அப்படியென்றால், நம் வாழ்க்கைக்கு எதுதான் திருப்தி அளிக்கிறது? நன்மை செய்து யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவதே திருப்தி அளிக்கிறது. இந்த உலகத்தில் நமக்கு மீந்திருக்கும் கொஞ்ச காலத்தை அவ்வாறு பயன்படுத்தினால் உண்மையான திருப்தியைப் பெறுவோம். கடவுளிடம் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்வோம்; பைபிளின் நெறிமுறைகளை நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவோம்; யெகோவாவைப்பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள உதவுவோம்; நம்முடைய சகோதர சகோதரிகளுடன் என்றும் அழியாத நட்பை வளர்த்துக்கொள்வோம். (கலா. 6:10) இவை அனைத்துமே நிரந்தர நன்மை அளிப்பவை. இவற்றை செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நன்மை செய்வதிலுள்ள முக்கியத்துவத்தை விவரிப்பதற்காக சாலொமோன் சுவாரஸ்யமான ஓர் ஒப்புமையைப் பயன்படுத்தினார். “உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்” என்று அவர் சொன்னார். (பிர. 11:1) “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்” என்று தம் சீஷர்களுக்கு இயேசு அறிவுறுத்தினார். (லூக். 6:38) மேலும், மற்றவர்களுக்கு நன்மை செய்கிறவர்களை தாம் ஆசீர்வதிப்பதாக யெகோவாவே வாக்குறுதி அளிக்கிறார்.—நீதி. 19:17; எபிரெயர் 6:10-ஐ வாசியுங்கள்.
16. நம் வாழ்க்கையை எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்பதற்கு எது ஏற்ற காலம்?
16 நம் வாழ்க்கையை எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பதை வாலிப வயதிலேயே தீர்மானிக்கும்படி பைபிள் நமக்கு அறிவுரை கூறுகிறது. அப்படிச் செய்தால், பிற்காலத்தில் நாம் வருந்தாதிருப்போம். (பிர. 12:1) உலக கவர்ச்சியில் மனதைப் பறிகொடுத்து, நம் வாலிபப் பருவத்தை வீணடித்துவிட்டு, பிறகு அது காற்றைப்போல் நிலையற்றது என்பதை உணர்ந்து வருத்தப்படுவது எவ்வளவு வேதனை தருவதாய் இருக்கும்!
17. மிகச் சிறந்த வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு எது உதவும்?
17 வாழ்க்கையில் தன் பிள்ளைகள் திருப்தியையும் சந்தோஷத்தையும் பெற்று, நன்மை செய்து, தேவையில்லாத துன்பங்களைத் தவிர்க்க வேண்டுமென அன்பான ஒரு தகப்பன் விரும்புவது போலவே யெகோவாவும் விரும்புகிறார். (பிர. 11:9, 10) அவ்வாறு செய்ய உங்களுக்கு எது உதவும்? ஆன்மீக இலக்குகளை வைத்து அவற்றை அடைய கடினமாய்ப் பாடுபடுங்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு சாவ்யர் என்பவர், மருத்துவ துறையா அல்லது முழுநேர ஊழியமா என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. “மருத்துவ சேவை ஓரளவு திருப்தி அளிக்கலாம் என்றாலும், சத்தியத்தைக் கற்றுக்கொள்ள அநேகருக்கு உதவியபோது கிடைத்த சந்தோஷத்துடன் ஒப்பிட அது ஒன்றுமே இல்லை. வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து மகிழ முழுநேர ஊழியம் எனக்கு உதவியிருக்கிறது. அதை வெகு முன்னதாகவே ஆரம்பிக்காமல் போய்விட்டேனே என்பதுதான் என்னுடைய ஒரே வருத்தம்” என்கிறார் அவர்.
18. இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கை அவருக்கு ஏன் அந்தளவு திருப்தி அளித்தது?
18 அப்படியென்றால், மதிப்புமிக்க எதைப் பெற நாம் முயற்சி செய்ய வேண்டும்? ‘பரிமள தைலத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப் பார்க்கிலும் மரணநாளும் நல்லது’ என்று பிரசங்கி புத்தகம் சொல்கிறது. (பிர. 7:1) இயேசுவின் வாழ்க்கை இதற்குத் தலைசிறந்த உதாரணம். அவர் யெகோவாவிடம் உண்மையிலேயே நல்ல பெயர் எடுத்திருந்தார். கடைசிவரை உண்மையுள்ளவராய் இருந்து மரித்தபோது, தம் தந்தையின் உன்னத அரசதிகாரமே சரியென நிரூபித்தார். அதோடு, மீட்கும் பலியாகத் தம்மையே அர்ப்பணித்தார்; இதன்மூலம் நாம் இரட்சிப்பு அடைய வழியைத் திறந்து வைத்தார். (மத். 20:28) பூமியில் தாம் இருந்த கொஞ்ச காலத்தில் மிகத் திருப்தியாக வாழ்ந்ததில் இயேசு சிறந்த முன்மாதிரி வைத்தார். அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற இன்று நாம் கடினமாய் முயற்சி செய்கிறோம்.—1 கொ. 11:1; 1 பே. 2:21.
19. ஞானமான என்ன அறிவுரையை சாலொமோன் வழங்கினார்?
19 நாமும்கூட கடவுளிடம் நல்ல பெயர் எடுக்க முடியும். யெகோவாவிடம் நல்ல பெயர் எடுப்பது, சொத்துசுகங்களைப் பெறுவதைவிடவும் பன்மடங்கு மதிப்புமிக்கது. (மத்தேயு 6:19-21-ஐ வாசியுங்கள்.) ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்குப் பிரியமான காரியங்களைச் செய்ய நாம் வழிகளைத் தேடலாம். அது நம் வாழ்க்கைக்குத் திருப்தியும் சந்தோஷத்தையும் அளிக்கும். உதாரணத்திற்கு, மற்றவர்களுக்குப் போய் நற்செய்தியைச் சொல்லலாம்; நம் திருமண பந்தத்தையும் குடும்ப உறவுகளையும் பலப்படுத்திக்கொள்ளலாம்; தனிப்பட்ட படிப்பு, கூட்டங்கள் ஆகியவற்றின் மூலமாக யெகோவாவிடம் இன்னும் நெருங்கிச் செல்லலாம். (பிர. 11:6; எபி. 13:16) ஆகவே, வாழ்க்கையில் திருப்தியையும் சந்தோஷத்தையும் பெற நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால், சாலொமோனின் அறிவுரையின்படி எப்போதும் நடவுங்கள்: ‘தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.’—பிர. 12:13.
[அடிக்குறிப்புகள்]
a சாலொமோனுக்கு ஒவ்வொரு வருடமும் 666 தாலந்து (22,000 கிலோகிராமுக்கும் அதிக) எடையுள்ள தங்கம் வருவாயாகக் கிடைத்தது.—2 நா. 9:13.
b பெயர் மாற்றப்பட்டுள்ளது.
உங்கள் பதில்?
• வாழ்க்கையில் நம் இலட்சியங்களைக் குறித்து ஆழ்ந்து யோசிக்க எது நம்மைத் தூண்ட வேண்டும்?
• சுகபோகத்தையும் சொத்துசுகங்களையும் பெறுவதை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
• என்ன விதமான வேலை நமக்கு உண்மையான திருப்தியை அளிக்கும்?
• மதிப்புமிக்க எதைப் பெற நாம் கடினமாய்ப் பாடுபட வேண்டும்?
[பக்கம் 23-ன் படம்]
நம் வாழ்க்கையில் பொழுதுபோக்கை எந்த இடத்தில் வைக்க வேண்டும்?
[[பக்கம் 24-ன் படம்]
பிரசங்க வேலை ஏன் மிகுந்த திருப்தி அளிக்கிறது?