‘சமாதானத்தை உண்டாக்குகிற காரியங்களை நாடிச்செல்லுங்கள்’
புத்தம்புதிய சாலை, பார்ப்பதற்குப் படு உறுதியாகத் தெரியும், அது பழுதே அடையாது என்றுதான் தோன்றும். ஆனாலும் போகப்போக, விரிசல்கள் ஏற்பட்டு அது குண்டும்குழியுமாய் ஆகிவிடலாம். அதைப் பழுதுபார்த்தால்தான் நம்முடைய உயிரையும் பாதுகாக்க முடியும், சாலையையும் பராமரிக்க முடியும்.
அதுபோலவே, நாம் மற்றவர்களோடு வைத்திருக்கும் உறவில் சில சமயம் விரிசல் ஏற்படலாம், ஒருவேளை அது முறிந்தே போகலாம். ரோமக் கிறிஸ்தவர்களிடையே மனஸ்தாபங்கள் இருந்ததை அப்போஸ்தலன் பவுல் ஒப்புக்கொண்டார். சக கிறிஸ்தவர்களாகிய அவர்களுக்குப் பின்வருமாறு அறிவுரை கூறினார்: “சமாதானத்தை உண்டாக்குகிற காரியங்களையும் ஒருவரையொருவர் பலப்படுத்துகிற காரியங்களையும் நாடிச்செல்வோமாக.” (ரோ. 14:13, 19, NW) ஆகவே, நாம் ‘சமாதானத்தை உண்டாக்குகிற காரியங்களை நாடிச்செல்வது’ ஏன் அவசியம்? நாம் எப்படித் தைரியமாகவும் திறம்படவும் சமாதானத்தை நாடலாம்?
ஏன் சமாதானத்தை நாட வேண்டும்?
சாலையிலுள்ள சிறுசிறு விரிசல்களைச் சரிசெய்யாவிட்டால், அவை குண்டும்குழியுமாக மாறி, விபரீதத்தை ஏற்படுத்திவிடலாம். அவ்வாறே, மனஸ்தாபங்களைச் சரிசெய்யாவிட்டால் அது விபரீதத்தில்போய் முடியலாம். அப்போஸ்தலன் யோவான் இப்படிச் சொன்னார்: “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” (1 யோ. 4:20) ஒரு கிறிஸ்தவர், மனஸ்தாபத்தைச் சரிசெய்யாவிட்டால் தன் சகோதரனைப் பகைக்கும் அளவுக்குப் போய்விடலாம்.
நாம் மற்றவர்களோடு சமாதானம் செய்துகொள்ளாவிட்டால் நம் வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்ள மாட்டாரென்று இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டினார். “நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” என்று அவர் தம் சீஷர்களுக்கு அறிவுரை கொடுத்தார். (மத். 5:23, 24) ஆம், நாம் சமாதானத்தை நாடுவதற்கான முக்கியக் காரணம், யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துகொள்ள விரும்புவதுதான்.a
நாம் சமாதானத்தை நாடுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு; அதை, பிலிப்பி சபையில் உருவான ஒரு சூழ்நிலையிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். எயோதியாள், சிந்திகேயாள் என்ற கிறிஸ்தவ சகோதரிகளுக்கு இடையே ஏதோவொரு பிரச்சினை ஏற்பட்டது; அது முழு சபையின் சமாதானத்தையே குலைத்துவிடும்போல் தெரிந்தது. (பிலி. 4:2, 3) நாமும், மனஸ்தாபத்தைப் பேசித் தீர்த்துக்கொள்ளாவிட்டால் அது சீக்கிரத்தில் சபையிலுள்ள எல்லாருக்குமே தெரியவந்துவிடும். ஆகவே, சபையில் அன்பையும் ஐக்கியத்தையும் கட்டிக்காக்க நாம் விரும்புவதே சமாதானத்தை நாடுவதற்கான இன்னொரு காரணமாகும்.
“சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்றார் இயேசு. (மத். 5:9) சமாதானத்தை நாடுவது சந்தோஷத்தையும் திருப்தியையும் அளிக்கும். அதோடு, உடல் ஆரோக்கியத்தைத் தரும்; ஏனென்றால், “சொஸ்தமனம் [அதாவது, மன அமைதி] உடலுக்கு ஜீவன்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 14:30) ஆனால், மனக்கசப்பை வளர்ப்பது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
சமாதானத்தை நாடுவது அவசியம் என்பதைக் கிட்டத்தட்ட எல்லாக் கிறிஸ்தவர்களும் ஒப்புக்கொள்வார்கள்; ஆனால், மனஸ்தாபத்தை எப்படிச் சரிசெய்வது என நீங்கள் யோசிக்கலாம். இதற்கு உதவும் பைபிள் நியமங்களை இப்போது சிந்திப்போம்.
சாந்தமாகப் பேசினால் சமாதானம் சாத்தியம்
சாலையில் ஏற்படும் சிறுசிறு விரிசல்களைக் கல்லும் மண்ணும் போட்டு மூடிச் சரிசெய்துவிடலாம். அதுபோல, நம் சகோதரர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளை நம்மால் மன்னித்து, “மூடிவிட” முடியுமா? அப்படிச் செய்தால் பெரும்பாலான மனஸ்தாபங்களைச் சரிசெய்துவிடலாம்; ஏனென்றால், “அன்பு திரளான பாவங்களை மூடும்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்.—1 பே. 4:8.
என்றாலும், சில சமயங்களில், ‘போனால் போகிறது’ என விட்டுவிட முடியாதளவுக்குப் பிரச்சினை பெரிதாகத் தெரியலாம். வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தில் கால்வைத்ததற்குச் சற்றுப் பின்னர் இஸ்ரவேலர் மத்தியில் நடந்ததைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். “ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும்,” யோர்தான் நதியின் அக்கறைக்குச் செல்வதற்கு முன்பு, “பார்வைக்குப் பெரிதான” ஒரு பீடத்தைக் கட்டினார்கள். அவர்கள் விக்கிரக வணக்கத்திற்காகத்தான் இதைக் கட்டியிருப்பார்கள் என்றும், இந்தக் காரியத்தை லேசாக விடமுடியாது என்றும் இஸ்ரவேலின் மற்ற கோத்திரத்தார் நினைத்தார்கள். அதனால் அவர்களுக்கு எதிராகப் போர்செய்யத் தயாரானார்கள்.—யோசு. 22:9–12.
அவர்கள் குற்றம் செய்ததற்குப் போதிய அத்தாட்சி இருந்ததாகவும், திடீரென்று போய் அவர்களைத் தாக்கினால் தங்கள் மத்தியில் உயிர்ச்சேதம் அதிகம் ஏற்படாது என்றும் இஸ்ரவேலரில் சிலர் நினைத்திருக்கலாம். என்றாலும், யோர்தான் நதியின் மேற்குப் பகுதியிலிருந்த கோத்திரத்தார் அவசரப்பட்டு எதையாவது செய்துவிடுவதற்குப் பதிலாக, பிரச்சினையைப் பற்றி தங்கள் சகோதரர்களோடு பேச ஆட்களை அனுப்பினார்கள். அந்த ஆட்கள் போய், “நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு, . . . இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன?” என்று கேட்டார்கள். உண்மையில், அந்தக் கோத்திரத்தார் யெகோவாவுக்குத் துரோகம் செய்யும் நோக்கத்தோடு அந்தப் பீடத்தைக் கட்டியிருக்கவில்லை. இருந்தபோதிலும், தங்கள்மீது குற்றம் சுமத்தியவர்களிடம் என்ன பதில் சொன்னார்கள்? முகத்தில் அடித்தாற்போல் பேசினார்களா, அல்லது முகம்கொடுத்துப் பேச மறுத்தார்களா? உண்மையில் அவர்கள் சாந்தமாகப் பதில் சொன்னார்கள்; யெகோவாவைச் சேவிக்கும் ஆசையில்தான் அப்படிச் செய்ததாய்த் தெளிவாக எடுத்துச்சொன்னார்கள். இப்படிப் பேசியதால், கடவுளோடு இருந்த உறவையும் காத்துக்கொள்ள முடிந்தது, ஏராளமான உயிர்களையும் காத்துக்கொள்ள முடிந்தது. அவர்கள் சாந்தமாகப் பேசியதால் பிரச்சினை தீர்ந்தது, மீண்டும் சமாதானம் பிறந்தது.—யோசு. 22:13–34.
இஸ்ரவேலின் மற்ற கோத்திரத்தார் பெரிதாக ஏதாவது நடவடிக்கை எடுப்பதற்குமுன், ரூபன் கோத்திரத்தார், காத் கோத்திரத்தார், மனாசேயின் பாதி கோத்திரத்தார் ஆகியோரிடம் புத்திசாலித்தனமாகப் பிரச்சினையைக் குறித்துப் பேசினார்கள். பைபிளும் இதையே சிபாரிசு செய்கிறது: “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.” (பிர. 7:9) ஆகவே, மனஸ்தாபங்கள் பெரியளவில் ஏற்பட்டுவிட்டால், சாந்தமாகவும் மனம்விட்டும் அவற்றைப் பேசித் தீர்ப்பதுதான் பைபிளின்படி சரியானதாகும். மாறாக, மனக்கசப்பை வளர்த்துக்கொண்டு, நம் மனதைப் புண்படுத்தியவரிடம் போய்ப் பேசாமல் இருந்தால், யெகோவாவின் ஆசீர்வாதத்தை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
மறுபட்சத்தில், சக கிறிஸ்தவர் ஒருவர் ஏதாவது ஒரு பிரச்சினையைப் பற்றி நம்மிடம் பேச வந்தால், ஒருவேளை நம்மீது அபாண்டமாகப் பழிசுமத்தினால், என்ன செய்வது? “மெதுவான பிரதியுத்தரம் [அதாவது, சாந்தமான பதில்] உக்கிரத்தை மாற்றும்” என பைபிள் சொல்கிறது. (நீதி. 15:1) பீடத்தைக் கட்டிய கோத்திரத்தார், அப்படிச் செய்ததற்கான காரணத்தைச் சாந்தமாக, அதே சமயத்தில் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்; இவ்வாறு, எரிமலையாக வெடிக்கவிருந்த உணர்ச்சிக் கொந்தளிப்பைத் தணித்துவிட்டார்கள். ஆகவே, ஒரு பிரச்சினையைக் குறித்துப் பேசுவதற்காக நாம் ஒரு சகோதரரை அணுகினாலும் சரி அவர் நம்மை அணுகினாலும் சரி, பின்வருமாறு யோசித்துச் செயல்படுவது ஞானமானது: ‘சமாதானம் குலையாதிருக்க, என் வார்த்தையும் தொனியும் தோரணையும் எப்படி இருக்க வேண்டும்?’
நாவை ஞானமாக உபயோகியுங்கள்
மனிதர்கள் தங்கள் மனதில் உள்ளதை வாய்விட்டுச் சொல்வது அவசியம்தான் என்பதை யெகோவா புரிந்துகொள்கிறார். ஆனால், ஒருவரோடு நமக்குள்ள மனஸ்தாபத்தைச் சரிசெய்யாமல் விட்டுவிட்டால், அதைக் குறித்து மூன்றாவது ஆளிடம்போய்ப் பேச நாம் துடிக்கலாம். ஒருவர்மீது நாம் மனக்கசப்பை வளர்த்தால், தொட்டதற்கெல்லாம் அவரைப் பற்றிக் குறைசொல்ல ஆரம்பிப்போம். நாவைத் தவறாக உபயோகிப்பது குறித்து நீதிமொழிகள் 11:11 இவ்வாறு கூறுகிறது: ‘துன்மார்க்கருடைய வாயினால் ஒரு பட்டணம் இடிந்துவிழும்.’ அதுபோல, சக கிறிஸ்தவரைப் பற்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவது, பட்டணம்போன்ற சபையின் சமாதானத்தைக் குலைத்துவிடும்.
நாம் சமாதானத்தை நாட வேண்டும் என்பதற்காக, நம் சகோதர சகோதரிகளைப் பற்றி எதுவுமே பேசக் கூடாது என நினைக்க வேண்டியதில்லை. “நீங்கள் பேசும்போது தீயவற்றைச் சொல்லாதீர்கள்” என்று சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் ஆலோசனை கொடுத்தார். அதே சமயத்தில், “மற்றவர்களுக்குப் பயன்தருவதும், மற்றவர்களைப் பலப்படுத்துவதுமான காரியங்களை மட்டும் பேசுங்கள். . . . ஒருவருக்கொருவர் தயவாயும், மன உருக்கமாயும் இருங்கள். . . . மற்றவர்களை மன்னித்துவிடுங்கள்” என்றும் சொன்னார். (எபே. 4:29–32, ஈஸி டு ரீட் வர்ஷன்) உங்கள் பேச்சோ நடத்தையோ தன்னைப் புண்படுத்திவிட்டதாக ஒரு சகோதரர் உங்களிடம் சொல்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள்; அவர் உங்களைப் பற்றி நல்லதையே பேசிவந்த சகோதரர் என்றால், அவரிடம் மன்னிப்புகேட்டுச் சமாதானம் ஆகிக்கொள்வது எளிதாக இருக்கும், அல்லவா? அதுபோல நாமும் சக கிறிஸ்தவர்களைப் பற்றி எப்பொழுதும் நல்லதையே பேசிவந்தால், மனஸ்தாபங்களைச் சரிசெய்து சமாதானமாகிக்கொள்வது எளிதாக இருக்கும், அல்லவா?—லூக். 6:31.
“ஒருமனப்பட்டு” கடவுளைச் சேவியுங்கள்
பொதுவாக, ஒருவர் நம்மைப் புண்படுத்திவிட்டால் அவரிடம் ஒட்டாமல் ஒதுங்கிப்போவது நம்முடைய பாவ இயல்பாக உள்ளது. ஆனால், அப்படிச் செய்வது சரியல்ல. (நீதி. 18:1) ஒன்றுபட்ட ஜனமாய் யெகோவாவைத் துதிக்கிற நாம், ‘ஒருமனப்பட்டு அவருக்கு’ சேவை செய்யத் தீர்மானமாய் இருக்கிறோம்.—செப். 3:9.
மற்றவர்களுடைய தவறான பேச்சோ நடத்தையோ, தூய வணக்கத்திடம் நமக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைத் தணித்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது. இயேசுவின் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் கவனியுங்கள். ஆலயத்தில் செலுத்தப்பட்டு வந்த பலிகளுக்கு அவர் தம்முடைய பலியினால் முற்றுப்புள்ளி வைப்பதற்குச் சில நாட்களே இருந்தன; அதே சமயத்தில் வேதபாரகர்களை அவர் வன்மையாகக் கண்டித்துச் சில நாட்களே ஆகியிருந்தன. அப்போது ஓர் ஏழை விதவை வந்து, ஆலயத்தின் உண்டியலில் “தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.” இயேசு அவளைத் தடுக்கப் பார்த்தாரா? இல்லை; அதற்கு மாறாக, அப்போதிருந்த யெகோவாவின் சபைக்கு அவள் உண்மையோடு ஆதரவு அளித்ததைப் பாராட்டிப் பேசினார். (லூக். 21:1–4) மற்றவர்கள் அநியாயங்கள் செய்தபோதிலும், யெகோவாவின் வணக்கத்திற்கு ஆதரவு காட்ட வேண்டிய கடமை இன்னும் அவளுக்கு இருந்ததை இது காட்டுகிறது.
ஒரு சகோதரரோ சகோதரியோ நமக்கு எதிராய் எதையாவது செய்திருப்பதாக நாம் நினைத்தால், அநியாயம் செய்திருப்பதாகவே நினைத்தாலும், எப்படி நடந்துகொள்வோம்? யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு நாம் செய்யும் சேவையில் குறுக்கிட அதை அனுமதிப்போமா? அல்லது, இன்று சபையில் நிலவுகிற அருமையான சமாதானத்தைக் காத்துக்கொள்வதற்காக, தைரியமாய் எந்தவொரு மனஸ்தாபத்தையும் தீர்த்துக்கொள்வோமா?
“கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” என்று பைபிள் நமக்கு புத்திமதி கூறுகிறது. (ரோ. 12:18) நாம் அவ்வாறு செய்யத் தீர்மானமாய் இருந்து, ஜீவனுக்கான ‘சாலையில்’ பத்திரமாகத் தொடர்ந்து செல்வோமாக.
[அடிக்குறிப்பு]
a மத்தேயு 18:15-17-ல் இயேசு கொடுத்த புத்திமதிக்கான விளக்கத்திற்கு, அக்டோபர் 15, 1999 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 17-22-ஐப் பாருங்கள்.
[பக்கம் 17-ன் படம்]
எயோதியாளும் சிந்திகேயாளும் சமாதானத்தை நாட வேண்டியிருந்தது
[பக்கம் 18-ன் படம்]
சமாதானம் செழித்தோங்க, நம் வார்த்தையும் தொனியும் தோரணையும் எப்படி இருக்க வேண்டும்?