பெரிய மோசேயை மதித்துணருதல்
“கடவுளாகிய யெகோவா உங்கள் சகோதரர்கள் மத்தியிலிருந்து என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார். அந்தத் தீர்க்கதரிசி சொல்கிற எல்லாவற்றையும் நீங்கள் செவிகொடுத்துக் கேட்க வேண்டும்.”—அப். 3:22.
1. இயேசு கிறிஸ்து எவ்வாறு சரித்திரத்தை மாற்றினார்?
இரண்டாயிரம் வருடங்களுக்குமுன் ஓர் ஆண் குழந்தை பிறந்தபோது, திரளான தேவதூதர்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்ததைச் சில மேய்ப்பர்கள் கேட்டார்கள். (லூக். 2:8-14) அந்தக் குழந்தை வளர்ந்து வாலிபரானது; அந்த வாலிபர் முப்பதாம் வயதில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அவரது ஊழியம் மூன்றரை ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்தபோதிலும் சரித்திரத்தையே மாற்றிவிட்டது. அவரைப் பற்றி 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஃபிலிப் ஷாஃப் என்ற சரித்திராசிரியர் இவ்வாறு குறிப்பிட்டார்: “அவர் ஒரு வரிகூட எழுதாவிட்டாலும் எத்தனையோ பேரை எழுத வைத்தார்; அக்கால இக்கால மாமனிதர்கள் அத்தனை பேரின் செல்வாக்குக்கும் ஈடாக முடியாதளவிற்குச் செல்வாக்கு செலுத்தி, எண்ணற்ற பிரசங்கங்கள், சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், அறிவுப்பூர்வமான தொகுப்புகள், கலைப் படைப்புகள், பக்திப் பாடல்கள் ஆகியவை உருவாகக் காரணமானார்.” இந்த அசாதாரண வாலிபர் வேறு யாரும் அல்ல, இயேசு கிறிஸ்துதான்.
2. இயேசுவையும் அவருடைய ஊழியத்தையும் பற்றி அப்போஸ்தலன் யோவான் என்ன சொன்னார்?
2 அப்போஸ்தலன் யோவான் இயேசுவின் மூன்றரை வருட ஊழியத்தைப் பற்றி எழுதியபோது முடிவில் இப்படிச் சொன்னார்: “இயேசு வேறுபல காரியங்களையும் செய்தார்; அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் சுருள்களை உலகமே கொள்ளாது என்று நினைக்கிறேன்.” (யோவா. 21:25) குறிப்பிடத்தக்க அந்தக் காலப்பகுதியின்போது இயேசு சொன்னதும் செய்ததுமான ஏராளமான விஷயங்களில் துளியளவு மட்டுமே தன்னால் எழுத முடியும் என யோவான் அறிந்திருந்தார். என்றாலும், யோவான் தன்னுடைய சுவிசேஷத்தில் எழுதியுள்ள சரித்திர சம்பவங்கள் ஒவ்வொன்றும் மிகுந்த மதிப்புள்ளவை.
3. கடவுளுடைய நோக்கத்தில் இயேசு வகிக்கும் பங்கை எப்படி இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்?
3 முக்கியமான நான்கு சுவிசேஷங்கள் தவிர பைபிளிலுள்ள மற்ற பதிவுகளும் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை அளிக்கின்றன; அவை நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, இயேசுவின் காலத்திற்குமுன் வாழ்ந்த விசுவாசமுள்ள சில மனிதர்களைப் பற்றிய பைபிள் பதிவுகள், கடவுளுடைய நோக்கத்தில் இயேசு வகிக்கும் பங்கை இன்னும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது நாம் கவனிக்கலாம்.
கிறிஸ்துவுக்கு முன்நிழலாக இருந்த விசுவாசிகள்
4, 5. இயேசுவுக்கு முன்நிழலாக இருந்தவர்கள் யார், எவ்விதங்களில்?
4 வருங்கால ராஜாவாக கடவுளால் நியமிக்கப்பட்ட இயேசுவுக்கு முன்நிழலாக மோசே, தாவீது, சாலொமோன் ஆகியோர் இருந்தார்களென யோவானும் மற்ற சுவிசேஷ எழுத்தாளர்களும் சுட்டிக்காட்டினார்கள். கடவுளுடைய பூர்வகால ஊழியர்களான அவர்கள் எவ்விதத்தில் இயேசுவுக்கு முன்நிழலாக இருந்தார்கள்? அவர்களைப் பற்றிய பதிவுகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
5 சுருக்கமாகச் சொன்னால், மோசே ஒரு தீர்க்கதரிசியாகவும் மத்தியஸ்தராகவும் மீட்பராகவும் இருந்தாரென பைபிள் சொல்கிறது. இயேசுவும் அவ்வாறே இருக்கிறார். தாவீது ஒரு மேய்ப்பராகவும் இஸ்ரவேலரின் எதிரிகளை வென்ற ராஜாவாகவும் இருந்தார். இயேசுகூட ஒரு மேய்ப்பராகவும் வெற்றிவாகை சூடும் ராஜாவாகவும் இருக்கிறார். (எசே. 37:24, 25) சாலொமோன் உண்மையுடன் நிலைத்திருந்த வரையில் ஞானமுள்ள ஆட்சியாளராக இருந்தார். அவருடைய ஆட்சியின்போது இஸ்ரவேலில் சமாதானம் நிலவியது. (1 இரா. 4:25, 29) இயேசுவும் ஞானத்தில் தலைசிறந்து விளங்குகிறார்; அதோடு, “சமாதானப்பிரபு” என அழைக்கப்படுகிறார். (ஏசா. 9:6) ஆகவே, கிறிஸ்து இயேசு வகிக்கும் பங்கு அந்தப் பூர்வகால ஊழியர்கள் வகித்த பங்குக்கு ஒத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், கடவுளுடைய நோக்கத்தில் இயேசு வகிக்கும் பங்கு அவர்கள் வகித்த பங்கைவிட பல மடங்கு மேன்மையானது. முதலாவதாக, இயேசுவை மோசேயுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்; கடவுளுடைய நோக்கத்தில் இயேசு வகிக்கும் பங்கை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள இது எப்படி உதவுகிறது என்றும் பார்க்கலாம்.
மோசே—இயேசுவுக்கு முன்நிழல்
6. இயேசுவுக்குச் செவிகொடுப்பதன் அவசியத்தை அப்போஸ்தலன் பேதுரு எவ்வாறு விளக்கினார்?
6 பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குச் சற்று பின்னர், இயேசு கிறிஸ்துவில் நிறைவேறிய மோசேயின் தீர்க்கதரிசனம் ஒன்றை அப்போஸ்தலன் பேதுரு மேற்கோள் காட்டினார். வணக்கத்திற்காக ஆலயத்தில் கூடியிருந்த யூதர்களுக்கு முன்பாக பேதுரு நின்றுகொண்டிருந்தார். பிறவியிலேயே முடமாயிருந்த ஒரு பிச்சைக்காரனை பேதுருவும் யோவானும் குணப்படுத்தியபோது அந்த யூதர்கள் “ஆச்சரியம் தாங்காமல்,” நடந்ததை விசாரிக்க ஓடிவந்தார்கள். இயேசு கிறிஸ்து மூலமாய் அருளப்பட்ட யெகோவாவின் சக்தியினால்தான் இந்த அற்புதம் நிகழ்ந்ததென பேதுரு விளக்கினார். பின்பு எபிரெய வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டி இவ்வாறு சொன்னார்: “மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.”—அப். 3:11, 22, 23; உபாகமம் 18:15, 18, 19-ஐ வாசியுங்கள்.
7. மோசேயைவிட பெரிய தீர்க்கதரிசியைப் பற்றி பேதுரு சொன்ன விஷயங்களை அங்கு கூடியிருந்தவர்களால் ஏன் புரிந்துகொள்ள முடிந்தது?
7 பேதுரு பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் மோசேயின் அந்த வார்த்தைகளை ஏற்கெனவே அறிந்திருந்தார்கள். யூதர்களான அவர்கள் மோசேயை உயர்வாக மதித்து வந்திருந்தார்கள். (உபா. 34:12) மோசேயைவிட பெரிய தீர்க்கதரிசி ஒருவரின் வருகைக்காக அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அந்தத் தீர்க்கதரிசி மோசேயைப் போல் யெகோவா தேவனால் நியமிக்கப்பட்டவராக மட்டுமல்ல, ‘அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்துவாகவும்,’ அதாவது மேசியாவாகவும் இருக்கவிருந்தார்.—லூக். 23:35; எபி. 11:26, அடிக்குறிப்பு.
இயேசுவுக்கும் மோசேக்கும் உள்ள ஒற்றுமைகள்
8. மோசேயின் வாழ்க்கைக்கும் இயேசுவின் வாழ்க்கைக்கும் உள்ள சில ஒற்றுமைகள் யாவை?
8 இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கை சிலவிதங்களில் மோசேயின் வாழ்க்கையோடு ஒத்திருந்தது. உதாரணத்திற்கு, மோசேயும் சரி இயேசுவும் சரி, குழந்தைகளாக இருந்தபோது ஒரு கொடுங்கோலனின் கையிலிருந்து உயிர்தப்பினார்கள். (யாத். 1:22–2:10; மத். 2:7-14) அதோடு, இருவருமே ‘எகிப்திலிருந்து வரவழைக்கப்பட்டார்கள்.’ “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று ஓசியா தீர்க்கதரிசி குறிப்பிட்டிருந்தார். (ஓசி. 11:1) கடவுளால் நியமிக்கப்பட்ட மோசேயின் தலைமையின்கீழ் இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறிய சமயத்தைக் குறித்து ஓசியா அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். (யாத். 4:22, 23; 12:29-37) என்றாலும் அவருடைய வார்த்தைகள், நடந்து முடிந்த சம்பவத்தை மட்டுமல்ல, நடக்கவிருந்த ஒரு சம்பவத்தையும் சுட்டிக்காட்டின. அவருடைய தீர்க்கதரிசன வார்த்தைகள், ஏரோது ராஜா இறந்தபின் யோசேப்பும் மரியாளும் இயேசுவை அழைத்துக்கொண்டு எகிப்திலிருந்து திரும்பியபோது நிறைவேறின.—மத். 2:15, 19-23.
9. (அ) மோசேயும் இயேசுவும் என்னென்ன அற்புதங்களைச் செய்தார்கள்? (ஆ) இயேசுவுக்கும் மோசேக்கும் உள்ள மற்ற ஒற்றுமைகளைக் குறிப்பிடுங்கள். (“இயேசுவுக்கும் மோசேவுக்கும் உள்ள கூடுதலான ஒற்றுமைகள்” என்ற பெட்டியைப் பக்கம் 26-ல் காண்க.)
9 மோசே, இயேசு ஆகிய இருவருமே அற்புதங்களைச் செய்து, யெகோவாவின் ஆதரவு தங்களுக்கு இருந்ததைக் காட்டினார்கள். சொல்லப்போனால், அற்புதங்களைச் செய்த முதல் மனிதன் மோசேதான் என்று பைபிள் காட்டுகிறது. (யாத். 4:1-9) உதாரணத்திற்கு, அவர் தண்ணீர் சம்பந்தப்பட்ட அற்புதங்களைச் செய்தார்; அதாவது, நைல் நதியையும் அதன் குளங்களையும் இரத்தமாக்கினார், செங்கடலைப் பிளந்தார், வனாந்தரத்திலிருந்த கற்பாறையிலிருந்து தண்ணீர் பாய்ந்துவரும்படிச் செய்தார். (யாத். 7:19-21; 14:21; 17:5-7) இயேசுவும் தண்ணீர் சம்பந்தப்பட்ட அற்புதங்களைச் செய்தார். சொல்லப்போனால், அவருடைய முதல் அற்புதமே ஒரு திருமண விருந்தின்போது தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றியதுதான். (யோவா. 2:1-11) பிற்பாடு, கொந்தளித்துக்கொண்டிருந்த கலிலேயாக் கடலை அவர் அமைதிப்படுத்தினார். ஒருசமயம், தண்ணீர்மீது நடந்துகூட போனார்! (மத். 8:23-27; 14:23-25) மோசேக்கும் பெரிய மோசேயான இயேசுவுக்கும் உள்ள மற்ற ஒற்றுமைகளைப் பக்கம் 26-ல் உள்ள பெட்டியில் பார்க்கலாம்.
கிறிஸ்துவை ஒரு தீர்க்கதரிசியாக மதித்துணருதல்
10. உண்மையான தீர்க்கதரிசியை எப்படி விவரிக்கலாம், மோசே எவ்விதத்தில் அப்படிப்பட்ட தீர்க்கதரிசியாக இருந்தார்?
10 எதிர்காலத்தை முன்னறிவிப்பவரே தீர்க்கதரிசி என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள்; ஆனால், அது தீர்க்கதரிசியின் ஒரு பொறுப்பு மட்டும்தான். உண்மையான தீர்க்கதரிசி யெகோவாவின் சக்தியால் தூண்டப்பட்ட அவருடைய பேச்சாளராக இருக்கிறார்; “கடவுளுடைய மகத்தான செயல்களை” அறிவிக்கிறார். (அப். 2:11, 16, 17) நடக்கவிருக்கும் சம்பவங்களை முன்னுரைப்பது, யெகோவாவின் நோக்கங்களை வெளிப்படுத்துவது, அவருடைய நியாயத்தீர்ப்புகளை அறிவிப்பது போன்றவை தீர்க்கதரிசியின் வேலைகள். மோசே அப்படிப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். எகிப்தைத் தாக்கிய பத்து வாதைகள் ஒவ்வொன்றையும் அவர் முன்னறிவித்தார். சீனாயில் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராக இருந்தார். கடவுளுடைய சித்தத்தை இஸ்ரவேலருக்கு விளக்கினார். இருந்தாலும், மோசேயைவிட ஒரு பெரிய தீர்க்கதரிசி வரவிருந்தார்.
11. இயேசு எவ்வாறு மோசேயைவிட பெரிய தீர்க்கதரிசியாகச் செயல்பட்டார்?
11 பொ.ச.மு. முதல் நூற்றாண்டில் சகரியா ஒரு தீர்க்கதரிசியாகச் செயல்பட்டு, தன்னுடைய மகன் யோவானைக் குறித்த கடவுளுடைய நோக்கத்தை அறிவித்தார். (லூக். 1:76) அந்த மகன்தான் யோவான் ஸ்நானகராக ஆனார்; வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த பெரிய மோசேயான இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றி அவர் அறிவித்தார். (யோவா. 1:23-36) இயேசுவும் ஒரு தீர்க்கதரிசியாக பல காரியங்களை முன்னறிவித்தார். உதாரணத்திற்கு, அவர் எப்படிச் சாவார், எங்கே சாவார், யாரால் சாகடிக்கப்படுவார் என்பதையெல்லாம் முன்கூட்டியே சொன்னார். (மத். 20:17-19) எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்படும் என்ற அதிர்ச்சியான விஷயத்தையும்கூட முன்னறிவித்தார். (மாற். 13:1, 2) நம் நாள்வரையாக நிறைவேறிக்கொண்டிருக்கும் தீர்க்கதரிசனங்களை அவர் சொன்னார்.—மத். 24:3-41.
12. (அ) உலகெங்கும் நடந்துவருகிற பிரசங்க வேலைக்கு இயேசு எவ்வாறு அஸ்திவாரம் போட்டார்? (ஆ) இன்று நாம் ஏன் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம்?
12 இயேசு ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமல்ல, பிரசங்கிப்பாளராகவும் போதகராகவும் இருந்தார். அவர் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்தார்; அவரைவிட தைரியமாக யாரும் பேசியதில்லை. (லூக். 4:16-21, 43) போதிப்பதில், அவருக்கு நிகர் யாரும் இருக்கவில்லை. அவர் பேசியதைக் கேட்ட சிலர், “அந்த மனிதர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை” என்றார்கள். (யோவா. 7:46) அவர் நற்செய்தியைப் பக்திவைராக்கியத்துடன் எங்கும் பிரசங்கித்தார்; அதே பக்திவைராக்கியத்தைக் காட்டும்படி தம்மைப் பின்பற்றியவர்களையும் தூண்டினார். இவ்வாறு, இன்றுவரையாக உலகெங்கும் நடந்துவருகிற பிரசங்க வேலைக்கும் போதிக்கும் வேலைக்கும் அஸ்திவாரம் போட்டார். (மத். 28:18-20; அப். 5:42) கடந்த வருடம், கிறிஸ்துவைப் பின்பற்றுகிற சுமார் எழுபது லட்சம் பேர் கிட்டத்தட்ட 150 கோடி மணிநேரங்களை நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு பைபிள் சத்தியங்களைப் போதிப்பதிலும் செலவிட்டிருக்கிறார்கள். நீங்கள் இந்த வேலையில் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குப் பங்குகொள்கிறீர்களா?
13. ‘விழிப்போடு இருக்க’ எது நமக்கு உதவும்?
13 மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை அனுப்பப்போவதாகச் சொல்லியிருந்த தீர்க்கதரிசனத்தை யெகோவா நிறைவேற்றினார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இது உங்களை எப்படிப் பாதிக்கிறது? விரைவில் நிறைவேறப்போகும் தீர்க்கதரிசனங்கள் மீதுள்ள உங்கள் நம்பிக்கையைக் கூட்டுகிறதா? ஆம், பெரிய மோசேயின் முன்மாதிரியை ஆழ்ந்து யோசிப்பது, கடவுள் சீக்கிரத்தில் செய்யவிருக்கும் காரியங்களைக் குறித்து “விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க” நம்மைத் தூண்டுகிறது.—1 தெ. 5:2, 6.
கிறிஸ்துவை மத்தியஸ்தராக மதித்தல்
14. மோசே எவ்வாறு இஸ்ரவேலருக்கும் கடவுளுக்கும் மத்தியஸ்தராக இருந்தார்?
14 மோசேயைப் போல இயேசு ஒரு மத்தியஸ்தராக இருந்தார். இரு சாராரை இணைக்கும் பாலமாக இருப்பவரே மத்தியஸ்தர். யெகோவா இஸ்ரவேலரோடு செய்த நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு மோசே மத்தியஸ்தராக இருந்தார். யாக்கோபின் குமாரர்கள் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் அவர்கள் கடவுளுடைய விசேஷித்த சொத்தாக, அவருடைய சபையாக நிலைத்திருந்திருப்பார்கள். (யாத். 19:3-8) அந்த உடன்படிக்கை பொ.ச.மு. 1513-லிருந்து பொ.ச. முதல் நூற்றாண்டுவரை அமலில் இருந்தது.
15. இயேசு எப்படித் தலைசிறந்த மத்தியஸ்தராக இருக்கிறார்?
15 பொ.ச. 33-ல், யெகோவா புதிய இஸ்ரவேலரான ‘கடவுளுடைய இஸ்ரவேலரோடு’ மேம்பட்ட ஓர் உடன்படிக்கையைச் செய்தார்; இவர்கள் பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களைக் கொண்ட உலகளாவிய சபையாக ஆனார்கள். (கலா. 6:16) மோசேயை மத்தியஸ்தராகக் கொண்டு செய்யப்பட்ட உடன்படிக்கையில் கற்பலகையின்மேல் கடவுள் எழுதிய சட்டங்கள் அடங்கியிருந்தன; ஆனால், இயேசுவை மத்தியஸ்தராகக் கொண்டு செய்யப்பட்ட உடன்படிக்கை அதைவிட மேம்பட்டது. எப்படியெனில், அதன் சட்டங்களை மனிதருடைய இருதயங்களில் கடவுள் எழுதுகிறார். (1 தீமோத்தேயு 2:5, 6-ஐயும் எபிரெயர் 8:10-ஐயும் வாசியுங்கள்.) இவ்வாறு, ‘கடவுளுடைய இஸ்ரவேலர்கள்’ இப்போது கடவுளுடைய விசேஷித்த சொத்தாக, மேசியானிய ராஜ்யத்தின் ‘கனிகளைத் தருகிற மக்களாக’ இருக்கிறார்கள். (மத். 21:43) இந்த அடையாளப்பூர்வ இஸ்ரவேலர்கள் அந்தப் புதிய உடன்படிக்கையின் பங்காளிகளாய் இருக்கிறார்கள். என்றாலும், அதிலிருந்து பயனடையப் போகிறவர்கள் இவர்கள் மட்டுமல்ல. மரித்த அநேகர் உட்பட திரளானோர் அந்த உன்னத உடன்படிக்கையின் மூலம் நித்திய ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.
கிறிஸ்துவை மீட்பராக மதித்துணருதல்
16. (அ) இஸ்ரவேலர்களை மீட்க யெகோவா எவ்விதங்களில் மோசேயைப் பயன்படுத்தினார்? (ஆ) யாத்திராகமம் 14:13-ன்படி இரட்சிப்பு அளிப்பவர் யார்?
16 எகிப்திலிருந்து புறப்படுவதற்கு முந்தின இரவு இஸ்ரவேலரின் பிள்ளைகள் சிலர் பயங்கரமான ஆபத்தில் இருந்தார்கள். சீக்கிரத்தில், கடவுளுடைய தூதர் தலைப்பிள்ளைகளைக் கொலை செய்வதற்கு எகிப்து தேசத்தைக் கடந்து செல்லவிருந்தார். இஸ்ரவேலர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை வீட்டுவாசலின் நிலைக்கால்களிலும் அதன் மேற்சட்டத்திலும் தெளித்தால் இஸ்ரவேலரின் தலைப்பிள்ளைகள் காப்பாற்றப்படுவார்கள் என மோசேயிடம் யெகோவா சொன்னார். (யாத். 12:1-13, 21-23) அவர் சொன்னபடியே நடந்தது. பிற்பாடு, இஸ்ரவேலர் எல்லாருமே பெரிய ஆபத்தில் இருந்தார்கள். அவர்கள் சிவந்த சமுத்திரத்துக்கும் எகிப்தியரின் போர் இரதங்களுக்கும் இடையே மாட்டிக்கொண்டார்கள். யெகோவா அற்புதமாய் அந்தச் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து மறுபடியும் மோசேயின் மூலமாக அவர்களை மீட்டார்.—யாத். 14:13, 21.
17, 18. இயேசு எவ்விதங்களில் மோசேயைவிட பெரிய மீட்பராய் இருக்கிறார்?
17 மோசேயின் மூலம் யெகோவா அளித்த மீட்பு மகத்தானது; இயேசு மூலமாக யெகோவா அளிக்கிற மீட்பு அதைவிட மகத்தானது. இயேசுவின் மூலமே கீழ்ப்படிதலுள்ள மனிதகுலம் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. (ரோ. 5:12, 18) அந்த மீட்பு, ‘நிரந்தர விடுதலையாக’ இருக்கிறது. (எபி. 9:11, 12) இயேசு என்ற பெயரின் அர்த்தம் “யெகோவாவே இரட்சிப்பு” என்பதாகும். நமது மீட்பராகவும் இரட்சகராகவும் இருக்கிற இயேசு, கடந்தகால பாவங்களிலிருந்து நம்மை விடுவிப்பதோடு, சிறந்த எதிர்காலத்திற்கான வழியையும் திறந்துவைக்கிறார். பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பதன் மூலம் தம்மைப் பின்பற்றுவோரைக் கடவுளுடைய கோபத்திலிருந்து காப்பாற்றுகிறார்; அவர்கள் யெகோவாவுடன் பாசத்தில் பிணைக்கப்பட உதவுகிறார்.—மத். 1:21.
18 பாவத்திலிருந்து இயேசு மீட்பு அளிப்பது, அதன் கொடிய பாதிப்புகளாகிய வியாதியிலிருந்தும் மரணத்திலிருந்தும்கூட சீக்கிரத்தில் விடுதலை அளிப்பதை உட்படுத்துகிறது. அது எப்படி இருக்கும் என்பதைக் கற்பனைசெய்து பார்ப்பதற்கு, யவீரு என்பவருடைய வீட்டிற்கு இயேசு சென்றபோது என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். யவீருவுடைய 12 வயது மகள் இறந்துபோயிருந்தாள். இயேசு அவரிடம், “பயப்படாதே, விசுவாசம் வை; அவள் பிழைப்பாள்” என்று நம்பிக்கையூட்டினார். (லூக். 8:41, 42, 49, 50) இயேசு சொன்னபடியே, அந்தச் சிறுமி உயிர்த்தெழுந்தாள்! அவளுடைய பெற்றோரின் பூரிப்பை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அப்படியானால், ‘கல்லறைகளில் உள்ள அனைவரும் [இயேசுவின்] குரலைக் கேட்டு வெளியே வரும்போது’ எந்தளவு பூரிப்பு உண்டாகும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியும். (யோவா. 5:28, 29) இயேசு, உண்மையிலேயே நம் இரட்சகரும் மீட்பருமாய் இருக்கிறார், அல்லவா?—அப்போஸ்தலர் 5:31-ஐ வாசியுங்கள்; தீத். 1:1; வெளி. 7:10.
19, 20. (அ) பெரிய மோசேயாக இயேசு வகிக்கிற பங்கை ஆழ்ந்து சிந்திப்பது நமக்கு எப்படி உதவுகிறது? (ஆ) அடுத்தக் கட்டுரையில் நாம் எதைப் பார்க்கலாம்?
19 இயேசு அளிக்கிற இரட்சிப்பிலிருந்து நன்மையடைய மற்றவர்களுக்கு நம்மால் உதவ முடியும் என்பதை அறிவது, பிரசங்க வேலையிலும் போதிக்கும் வேலையிலும் ஈடுபட நம்மைத் தூண்டுகிறது. (ஏசா. 61:1-3) அதுமட்டுமல்ல, பெரிய மோசேயாக இயேசு வகிக்கும் பங்கை ஆழ்ந்து சிந்திப்பது, பொல்லாதவர்களை அழிப்பதற்காக அவர் வருகையில் தம்மைப் பின்பற்றுவோரை அவர் மீட்பார் என்ற நம் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது.—மத். 25:31-34, 41, 46; வெளி. 7:9, 14.
20 ஆம், இயேசுதான் பெரிய மோசே. மோசேயால் செய்திருக்க முடியாத எத்தனையோ மாபெரும் காரியங்களை அவர் செய்தார். தீர்க்கதரிசியாக அவர் சொன்ன வார்த்தைகளும் ஒரு மத்தியஸ்தராக அவர் செய்த செயல்களும் மனிதகுலம் அனைத்திற்கும் நன்மை அளிக்கின்றன. இயேசு ஒரு மீட்பராக, மனிதகுலத்திற்குத் தற்காலிக இரட்சிப்பை அல்ல, நித்திய இரட்சிப்பை அளிக்கிறார். உண்மையில், பூர்வகால விசுவாசிகளிடமிருந்து இயேசுவைப் பற்றி இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள முடியும். அவர் எப்படிப் பெரிய தாவீதாகவும் பெரிய சாலொமோனாகவும் இருக்கிறார் என்பதை அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
விளக்க முடியுமா?
இயேசு எப்படிப் பின்வரும் ஸ்தானங்களில் மோசேயைவிட பெரியவராக இருக்கிறார்?
• ஒரு தீர்க்கதரிசியாக
• ஒரு மத்தியஸ்தராக
• ஒரு மீட்பராக
[பக்கம் 26-ன் பெட்டி/படம்]
இயேசுவுக்கும் மோசேக்கும் உள்ள கூடுதலான ஒற்றுமைகள் ◻ இருவருமே யெகோவாவுக்கும் அவருடைய மக்களுக்கும் சேவை செய்வதற்காக உயர்ந்த ஸ்தானங்களை விட்டுவிட்டார்கள்.—2 கொ. 8:9; பிலி. 2:5-8; எபி. 11:24-26. ◻ இருவருமே ‘கிறிஸ்துக்களாக,’ அதாவது கடவுளால் நியமிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள்.—மாற். 14:61, 62; யோவா. 4:25, 26; எபி. 11:26, அடிக்குறிப்பு. ◻ இருவருமே யெகோவாவின் பெயரில் வந்தார்கள்.—யாத். 3:13-16; யோவா. 5:43; 17:4, 6, 26. ◻ இருவருமே சாந்தகுணத்தைக் காட்டினார்கள்.—எண். 12:3; மத். 11:28-30. ◻ இருவருமே திரளானோருக்கு உணவளித்தார்கள்.—யாத். 16:12; யோவா. 6:48-51. ◻ இருவருமே நியாயாதிபதிகளாகவும் கடவுளுடைய சட்டங்களை அளிப்பவர்களாகவும் இருந்தார்கள்.—யாத். 18:13; மல். 4:4; யோவா. 5:22, 23; 15:10. ◻ இருவருமே கடவுளுடைய வீட்டின் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள்.—எண். 12:7 NW; எபி. 3:2-6. ◻ இருவருமே யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளாக விவரிக்கப்படுகிறார்கள்.—எபி. 11:24-29; 12:1; வெளி. 1:5. ◻ மோசேயும் மனிதனாக இருந்த இயேசுவும் இறந்தபிறகு அவர்களுடைய சடலங்களைக் கடவுள் மறைத்துவிட்டார்.—உபா. 34:5, 6; லூக். 24:1-3; அப். 2:31; 1 கொ. 15:50; யூ. 9.