லூக்கா எழுதியது
1 மாண்புமிகு தெயோப்பிலு+ அவர்களே, நாம் முழுமையாக நம்புகிற உண்மைச் சம்பவங்களைத் தொகுத்து எழுத நிறைய பேர் அதிக முயற்சி எடுத்திருக்கிறார்கள்.+ 2 கடவுளுடைய செய்தியை அறிவிக்கிற ஊழியர்கள் தாங்கள் ஆரம்பத்திலிருந்து நேரில் பார்த்த+ அந்த உண்மைச் சம்பவங்களை நம்மிடம் சொன்னார்கள்.+ 3 எல்லா விஷயங்களையும் ஆரம்பத்திலிருந்தே நான் துல்லியமாக ஆராய்ந்திருப்பதால், நானும்கூட அவற்றை சரியான வரிசையில் உங்களுக்கு எழுதத் தீர்மானித்தேன். 4 வாய்மொழியாக உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட விஷயங்கள்+ எவ்வளவு நம்பகமானவை என்பதை இந்தப் பதிவிலிருந்து நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்வீர்கள்.
5 யூதேயாவின் ராஜாவாகிய ஏரோதுவின்* காலத்தில்,+ சகரியா என்ற ஆலய குரு ஒருவர் இருந்தார்; அவர் அபியா+ என்ற குருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்; அவருடைய மனைவியின் பெயர் எலிசபெத்; அவள் ஆரோனின் வம்சத்தில் வந்தவள். 6 அவர்கள் இரண்டு பேரும் யெகோவாவுக்கு* முன்னால் நீதியுள்ளவர்களாக இருந்தார்கள், குற்றமற்றவர்களாக நடந்தார்கள்; ஏனென்றால், அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் அவர்கள் கீழ்ப்படிந்தார்கள். 7 ஆனால், அவர்களுக்குக் குழந்தை இல்லை; ஏனென்றால், எலிசபெத் கருத்தரிக்க முடியாதவளாக இருந்தாள்; அதோடு, அவர்கள் இரண்டு பேரும் ரொம்ப வயதானவர்களாக இருந்தார்கள்.
8 சகரியாவுடைய குருத்துவப் பிரிவின்+ முறை வந்தபோது, அவர் கடவுளுக்கு முன்னால் குருவாகச் சேவை செய்துகொண்டிருந்தார். 9 குருத்துவப் பணியின் வழக்கப்படி, தூபம் காட்டுவதற்கு+ சகரியாவின் முறை வந்தபோது அவர் யெகோவாவின்* ஆலயத்துக்குள்+ போனார். 10 தூபம் காட்டப்படுகிற நேரத்தில், திரண்டு வந்திருந்த மக்கள் எல்லாரும் வெளியே ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள். 11 அப்போது, தூபபீடத்தின் வலது பக்கத்தில் சகரியாவுக்கு முன்னால் யெகோவாவின்* தூதர் வந்து நின்றார். 12 அவரைப் பார்த்ததும் சகரியா குழப்பமும் பயமும் அடைந்தார். 13 ஆனால் தேவதூதர் அவரிடம், “சகரியாவே, பயப்படாதே; உன்னுடைய மன்றாட்டைக் கடவுள் கேட்டார்; உன் மனைவி எலிசபெத்துக்கு ஒரு மகன் பிறப்பான்; நீ அவனுக்கு யோவான் என்று பெயர் வைக்க வேண்டும்.+ 14 நீ சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போவாய்; அவனுடைய பிறப்பால் நிறைய பேர் சந்தோஷப்படுவார்கள்.+ 15 யெகோவாவின்* பார்வையில் அவன் உயர்ந்தவனாக இருப்பான்.+ திராட்சமதுவையோ வேறெந்த மதுவையோ அவன் குடிக்கக் கூடாது.+ தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே கடவுளுடைய சக்தியால் அவன் நிரப்பப்பட்டிருப்பான்.+ 16 இஸ்ரவேலர்களில் நிறைய பேரை அவர்களுடைய கடவுளாகிய யெகோவாவின்* பக்கம் மறுபடியும் கொண்டுவருவான்.+ 17 அதோடு, கடவுளுக்கு முன்னே போய், எலியாவுக்கு இருந்த அதே ஆர்வத்துடிப்போடும் வல்லமையோடும் செயல்படுவான்;+ தகப்பன்களின் உள்ளத்தைப் பிள்ளைகளுடைய உள்ளத்தைப் போல மாற்றுவான்;*+ கீழ்ப்படியாதவர்களைத் திருத்தி நீதிமான்களைப் போல் ஞானமாக நடப்பதற்கு உதவி செய்வான்; இப்படி, யெகோவாவுக்கு* ஏற்ற ஒரு ஜனத்தைத் தயார்படுத்துவான்”+ என்று சொன்னார்.
18 சகரியா அந்தத் தேவதூதரிடம், “இதை நான் எப்படி நம்புவேன்? நான் வயதானவன், என் மனைவிக்கும் வயதாகிவிட்டதே” என்று சொன்னார். 19 அதற்கு அந்தத் தேவதூதர், “நான் காபிரியேல்;+ கடவுளுடைய முன்னிலையில் நிற்பவன்;+ உன்னிடம் பேசுவதற்கும் இந்த நல்ல செய்தியை உனக்குச் சொல்வதற்கும் அனுப்பப்பட்டேன். 20 இதோ! குறித்த காலத்தில் நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ நம்பாததால், இவையெல்லாம் நடக்கும் நாள்வரை பேச முடியாமல் ஊமையாக இருப்பாய்” என்று சொன்னார். 21 இதற்கிடையே, சகரியாவுக்காக மக்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்; ரொம்ப நேரமாகியும் அவர் ஆலயத்திலிருந்து வெளியே வராததால் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். 22 அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் அவரால் பேச முடியவில்லை; அதனால், ஆலயத்துக்குள் அவர் ஓர் அற்புதக் காட்சியை* பார்த்திருக்க வேண்டுமென்று அவர்கள் புரிந்துகொண்டார்கள்; அவர் அவர்களிடம் சைகைகளாலேயே பேசிவந்தார், அவருக்குப் பேச்சே வரவில்லை. 23 பரிசுத்த சேவை செய்கிற நாட்கள் முடிவடைந்தபோது, அவர் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனார்.
24 சில நாட்களுக்குப் பின்பு, அவருடைய மனைவி எலிசபெத் கர்ப்பமானாள்; ஐந்து மாதங்களுக்கு வெளியே போகாமல் வீட்டிலேயே இருந்தாள். 25 “யெகோவா* என்னை இப்போது ஆசீர்வதித்திருக்கிறார்; என்னுடைய நிலைமையைப் பார்த்து, மக்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட அவமானத்தை நீக்கிவிட்டார்”+ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
26 ஆறாவது மாதத்தில், கலிலேயாவில் இருக்கிற நாசரேத் என்ற நகரத்தில் குடியிருந்த ஒரு கன்னிப்பெண்ணிடம் காபிரியேல் தேவதூதரைக்+ கடவுள் அனுப்பினார். 27 தாவீதின் வம்சத்தில் வந்த யோசேப்புக்கும் அவளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது; அந்தக் கன்னிப்பெண்ணின்+ பெயர் மரியாள்.+ 28 மரியாளிடம் தேவதூதர் வந்து, “கடவுளுக்கு மிகவும் பிரியமானவளே, வாழ்த்துக்கள்! யெகோவா* உன்னோடு இருக்கிறார்” என்று சொன்னார். 29 அவர் சொன்னதைக் கேட்டு அவள் மிகவும் கலக்கமடைந்து, அந்த வாழ்த்துதலுக்கு என்ன அர்த்தம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். 30 அதனால் தேவதூதர் அவளிடம், “மரியாளே, பயப்படாதே; நீ கடவுளுக்குப் பிரியமானவள். 31 இதோ! நீ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்;+ அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும்.+ 32 அவர் உயர்ந்தவராக இருப்பார்;+ உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்;+ அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா* அவருக்குக் கொடுப்பார்.+ 33 அவர் ராஜாவாக யாக்கோபுடைய வம்சத்தை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய ஆட்சிக்கு முடிவே இருக்காது”+ என்று சொன்னார்.
34 அப்போது மரியாள், “இது எப்படி நடக்கும்? நான் கன்னிப்பெண்ணாக இருக்கிறேனே”*+ என்றாள். 35 அதற்கு அவர், “கடவுளுடைய சக்தி உன்மேல் வரும்;+ உன்னதமான கடவுளுடைய வல்லமை உன்மேல் தங்கும். அதனால், உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும்,+ கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படும்.+ 36 இதோ! உன் சொந்தக்காரப் பெண் எலிசபெத்தும் வயதான காலத்தில் ஒரு மகனை வயிற்றில் சுமக்கிறாள்; மலடி என்று அழைக்கப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம். 37 கடவுளால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி* எதுவுமே இல்லை”+ என்று சொன்னார். 38 அதற்கு மரியாள், “இதோ! நான் யெகோவாவின்* அடிமைப் பெண்! நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்போது, தேவதூதர் அவளைவிட்டுப் போனார்.
39 மரியாள் உடனடியாகப் புறப்பட்டு, மலைப்பகுதியில் இருக்கிற யூதாவிலுள்ள ஒரு நகரத்துக்கு வேகமாகப் போனாள். 40 அவள் சகரியாவின் வீட்டுக்குள் போய், எலிசபெத்துக்கு வாழ்த்துச் சொன்னாள். 41 மரியாள் சொன்ன வாழ்த்தை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய வயிற்றிலிருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டு, 42 “நீ பெண்களிலேயே மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள்; உன் வயிற்றிலுள்ள குழந்தையும் ஆசீர்வதிக்கப்பட்டது! 43 என் எஜமானுடைய தாய் என்னைப் பார்க்க வருவதற்கு நான் என்ன பாக்கியம் செய்தேன்! 44 இதோ! நீ வாழ்த்திய சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள குழந்தை சந்தோஷத்தில் துள்ளியது. 45 யெகோவாவின்* வார்த்தையை நம்பிய நீ சந்தோஷமானவள்; அவர் உனக்குச் சொன்னதெல்லாம் முழுமையாக நிறைவேறும்” என்று உரத்த குரலில் சொன்னாள்.
46 அப்போது மரியாள், “யெகோவாவை* நான் மகிமைப்படுத்துகிறேன்.+ 47 என் மீட்பராகிய கடவுளை நினைத்து என் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்குகிறது.+ 48 ஏனென்றால், அவர் தன்னுடைய அடிமைப் பெண்ணின் தாழ்ந்த நிலையைக் கவனித்திருக்கிறார்.+ இதுமுதல் எல்லா தலைமுறையினரும் என்னைச் சந்தோஷமானவள்+ என்று புகழ்வார்கள். 49 ஏனென்றால், வல்லமையுள்ள கடவுள் எனக்காக அற்புதமான செயல்களைச் செய்திருக்கிறார்; அவருடைய பெயர் பரிசுத்தமானது.+ 50 அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காட்டுகிறார்.+ 51 அவர் தன்னுடைய கைகளால் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறார். இதயத்தில் கர்வமுள்ளவர்களைச் சிதறிப்போக வைத்திருக்கிறார்.+ 52 அதிகாரமுள்ளவர்களைச் சிம்மாசனங்களிலிருந்து இறக்கியிருக்கிறார்,+ தாழ்ந்தவர்களை உயர்த்தியிருக்கிறார்.+ 53 ஏழைகளுக்கு* நல்ல நல்ல காரியங்களைக் கொடுத்து முழுமையாகத் திருப்திப்படுத்தியிருக்கிறார்;+ பணக்காரர்களை வெறுங்கையோடு அனுப்பியிருக்கிறார். 54 ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் என்றென்றும் இரக்கம் காட்டுவதாக+ நம்முடைய முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைத்துப் பார்த்து,+ 55 தன்னுடைய ஊழியனான இஸ்ரவேலுக்கு உதவி செய்திருக்கிறார்” என்று சொன்னாள். 56 மரியாள் சுமார் மூன்று மாதங்கள் அவளோடு தங்கிவிட்டு, தன் வீட்டுக்குத் திரும்பி வந்தாள்.
57 எலிசபெத்துக்குப் பிரசவ நேரம் வந்தது, அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். 58 அவளுக்கு யெகோவா* மிகுந்த இரக்கம் காட்டியதை அக்கம்பக்கத்தாரும் சொந்தக்காரர்களும் கேள்விப்பட்டபோது, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.+ 59 எட்டாம் நாளில் அந்தக் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்வதற்காக+ அவர்கள் எல்லாரும் கூடிவந்தார்கள்; அதற்கு சகரியா என்று அதன் அப்பாவின் பெயரையே வைக்கலாம் என்று நினைத்தார்கள். 60 ஆனால் குழந்தையின் அம்மா, “வேண்டாம்! இவனுக்கு யோவான் என்று பெயர் வைக்க வேண்டும்” என்று சொன்னாள். 61 அதற்கு அவர்கள், “உன் சொந்தக்காரர்களில் யாருக்குமே இந்தப் பெயர் இல்லையே” என்று சொன்னார்கள். 62 பின்பு, குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறார் என்று அதன் அப்பாவிடம் சைகையால் கேட்டார்கள். 63 அவர் ஒரு பலகையைக் கொண்டுவரச் சொல்லி, “யோவான் என்று பெயர் வைக்க வேண்டும்”+ என்று எழுதினார். அதைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். 64 அந்த நொடியே அவருக்குப் பேச்சு வந்துவிட்டது;+ அவர் கடவுளைப் போற்றிப் புகழ ஆரம்பித்தார். 65 அக்கம்பக்கத்தார் எல்லாரும் பயந்துபோனார்கள்; நடந்த விஷயங்களெல்லாம் யூதேயா மலைப்பகுதியெங்கும் பேசப்பட்டது. 66 அவற்றைக் கேள்விப்பட்ட எல்லாரும் அவற்றை மனதில் வைத்துக்கொண்டு, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்ட ஆளாக ஆவானோ?” என்று சொல்லிக்கொண்டார்கள். உண்மையிலேயே, யெகோவா* அந்தக் குழந்தையோடு இருந்தார்.*
67 அதன் அப்பாவாகிய சகரியா கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டு இப்படித் தீர்க்கதரிசனம் சொன்னார்: 68 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா* புகழப்படட்டும்.+ ஏனென்றால், அவர் தன்னுடைய மக்கள்மேல் கவனத்தைத் திருப்பி, அவர்களுக்கு விடுதலை கொடுத்திருக்கிறார்.+ 69 பண்டைய காலம்முதல் தன்னுடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலம் சொன்னபடியே,+ 70 பலம்படைத்த மீட்பர் ஒருவரை*+ தன்னுடைய ஊழியனாகிய தாவீதின் வம்சத்தில்+ நமக்காக வர வைத்திருக்கிறார்; 71 நம் எதிரிகளிடமிருந்தும் நம்மை வெறுக்கிற எல்லாரிடமிருந்தும் மீட்பதற்காகவும்,+ 72 நம் முன்னோர்களுக்கு இரக்கம் காட்டுவதாக அவர் கொடுத்த வாக்குறுதியை+ நிறைவேற்றுவதற்காகவும் அந்த மீட்பரை வர வைத்திருக்கிறார். 73 நம் மூதாதையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்த பரிசுத்த ஒப்பந்தத்தை+ நினைத்துப் பார்ப்பதற்காகவும், 74 ஆணையிட்டுக் கொடுத்தபடி, எதிரிகளுடைய கைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றி, 75 நாம் உயிரோடிருக்கிற காலமெல்லாம் உண்மையோடும்* நீதியோடும் தைரியத்தோடும் அவர்முன் பரிசுத்த சேவை செய்கிற பாக்கியத்தை நமக்குக் கொடுப்பதற்காகவும் அவரை வர வைத்திருக்கிறார். 76 குழந்தையே, நீ உன்னதமான கடவுளுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; யெகோவாவுக்கு* முன்னே போய் அவருக்காக வழிகளைத் தயார்படுத்துவாய்.+ 77 நம் கடவுள் காட்டுகிற கரிசனையால் அவருடைய மக்களுக்குப் பாவ மன்னிப்பின் மூலம் கிடைக்கிற மீட்பைப் பற்றிச் சொல்வாய்.+ 78 இந்தக் கரிசனையால், சூரிய உதயத்தைப் போன்ற ஓர் ஒளி மேலே இருந்து நம்மிடம் வந்து, 79 இருட்டிலும் மரணத்தின் நிழலிலும் உட்கார்ந்திருப்பவர்களுக்கு வெளிச்சத்தைத் தரும்;+ அதோடு, நம்முடைய கால்களைச் சமாதான வழியில் கொண்டுபோகும்.”
80 குழந்தையாக இருந்த யோவான் வளர்ந்து ஆளானார், மனவலிமை பெற்றார்; இஸ்ரவேலர்களுக்குப் பிரசங்கிக்க ஆரம்பிக்கும்வரை வனாந்தரத்திலேயே வாழ்ந்துவந்தார்.