ஆன்மீகப் பொக்கிஷங்களை உயர்வாக மதியுங்கள்!
“உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உங்கள் இதயமும் இருக்கும்.”—லூக். 12:34.
1, 2. (அ) யெகோவா நமக்கு என்ன மூன்று ஆன்மீகப் பொக்கிஷங்களைக் கொடுத்திருக்கிறார்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி சிந்திப்போம்?
இந்தப் பிரபஞ்சத்திலேயே யெகோவாதான் மிகப் பெரிய பணக்காரர்! எல்லாமே அவருக்குத்தான் சொந்தம்! (1 நா. 29:11, 12) ஆன்மீகப் பொக்கிஷங்களின் மதிப்பை உணர்ந்தவர்களுக்கு யெகோவா அவற்றை தாராளமாகக் கொடுக்கிறார். அதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! அந்தப் பொக்கிஷங்களில் இவையெல்லாம் அடங்குகின்றன: (1) கடவுளுடைய அரசாங்கம், (2) ஊழியம், (3) பைபிளில் இருக்கிற விலை மதிப்புள்ள சத்தியங்கள். நாம் கவனமாக இல்லை என்றால், இவையெல்லாம் எந்தளவு மதிப்புள்ளவை என்பதை நாம் மறந்துவிடுவோம். காலப்போக்கில், அவற்றைத் தூக்கி எறிந்து விடுவோம். நம்மிடமுள்ள பொக்கிஷங்களை நாம் இழந்துவிடாமல் இருக்க வேண்டும் என்றால், அவை எந்தளவு மதிப்புள்ளவை என்பதைப் பற்றி நாம் அடிக்கடி யோசித்துப் பார்க்க வேண்டும். அதோடு, அவற்றின் மேலுள்ள அன்பை இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உங்கள் இதயமும் இருக்கும்” என்று இயேசு சொன்னார்.—லூக். 12:34.
2 கடவுளுடைய அரசாங்கம், ஊழியம் மற்றும் பைபிள் சத்தியங்கள் மேலுள்ள அன்பையும் நன்றியையும் நாம் எப்படிக் காத்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் சிந்திப்போம். அப்படிச் சிந்திக்கும்போது, இந்த ஆன்மீகப் பொக்கிஷங்கள் மேலுள்ள அன்பை நீங்கள் எப்படி இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பாருங்கள்.
கடவுளுடைய அரசாங்கம் விலை உயர்ந்த முத்து போன்றது
3. இயேசுவின் உதாரணத்தில் வரும் அந்த நபர், முத்தை வாங்குவதற்காக என்ன செய்ய தயாராக இருந்தார்? (ஆரம்பப் படம்)
3 மத்தேயு 13:45, 46-ஐ வாசியுங்கள். முத்துக்களைத் தேடிப் பயணம் செய்கிற ஒரு வியாபாரியைப் பற்றிய உதாரணத்தை இயேசு சொன்னார். அந்த வியாபாரி, பல வருஷங்களாக நூற்றுக்கணக்கான முத்துக்களை வாங்கியிருக்கிறார், விற்றிருக்கிறார். ஆனால் ஒரு நாள், இதுவரை பார்க்காத, விலை உயர்ந்த ஒரு முத்தை அவர் பார்த்தார். அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பதற்காக, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அவர் விற்றார். அப்படியென்றால், அந்த முத்து அவருக்கு எவ்வளவு மதிப்புள்ளதாக இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
4. கடவுளுடைய அரசாங்கத்துக்காக நாம் என்ன செய்ய தயாராக இருக்கிறோம்?
4 இயேசுவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியம், அந்த விலை உயர்ந்த முத்தைப் போல இருக்கிறது. அந்த வியாபாரி, அந்த முத்தை மதிப்புள்ளதாக நினைத்தது போல நாமும் கடவுளுடைய அரசாங்கத்தை மதிப்புள்ளதாக நினைத்தால், அந்த அரசாங்கத்தின் குடிமக்களாக ஆவதற்கு, நம்மிடம் இருக்கிற எல்லாவற்றையும் கொடுக்க தயாராக இருப்போம். (மாற்கு 10:28-30-ஐ வாசியுங்கள்.) அப்படிச் செய்த 2 பேரைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
5. கடவுளுடைய அரசாங்கத்துக்காக சகேயு என்ன செய்ய தயாராக இருந்தார்?
5 சகேயு என்பவர் வரிவசூலிப்பவராக இருந்தார். மற்றவர்களிடம் பணத்தை அபகரித்ததன் மூலம் அவர் பெரிய பணக்காரராக ஆகியிருந்தார். (லூக். 19:1-9) ஒரு நாள், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்ததை அவர் கேட்டார். அந்த விஷயம் அவருக்கு ரொம்ப பிடித்திருந்ததால், தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். “எஜமானே, இதோ! என் சொத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; மற்றவர்களிடமிருந்து அபகரித்ததையெல்லாம் நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்று சொன்னார். சொன்னது போலவே, மக்களிடமிருந்து வசூலித்த பணத்தை அவர் திருப்பிக் கொடுத்தார்; பேராசைப்படுவதையும் நிறுத்தினார்.
6. ஒரு பெண் என்ன மாற்றம் செய்தார், எதனால் அப்படிச் செய்தார்?
6 சில வருஷங்களுக்கு முன்பு, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த ஒரு பெண், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி கேள்விப்பட்டார். அவர் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு சங்கத்தின் தலைவியாகவும் இருந்தார். ஆனால், பைபிளைப் படிக்க ஆரம்பித்தவுடன், கடவுளுடைய அரசாங்கம் எந்தளவு மதிப்புள்ளது என்பதை அவர் புரிந்துகொண்டார். தன் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்பதையும் புரிந்துகொண்டார். (1 கொ. 6:9, 10) யெகோவாமேல் இருந்த அன்பால், அந்தச் சங்கத்தை விட்டு வெளியேறினார்; ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதையும் நிறுத்தினார். பிறகு, 2009-ல் ஞானஸ்நானம் எடுத்தார். அதற்கு அடுத்த வருஷமே ஒரு ஒழுங்கான பயனியராக ஆனார். ஒழுக்கங்கெட்ட பழக்கத்தை நேசித்ததைவிட யெகோவாவை அதிகமாக நேசித்ததால், தன் வாழ்க்கையில் அவரால் பெரிய மாற்றங்களைச் செய்ய முடிந்தது.—மாற். 12:29, 30.
7. கடவுளுடைய அரசாங்கத்தின் மேலுள்ள அன்பை நாம் எப்படிக் காத்துக்கொள்ளலாம்?
7 கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக ஆவதற்காக, நம்மில் நிறைய பேர், நம் வாழ்க்கையை முழுமையாக மாற்றியிருக்கிறோம். (ரோ. 12:2) ஆனால், நம் போராட்டம் அதோடு நின்றுவிடுவதில்லை. பொருளாசை, முறையற்ற பாலியல் ஆசைகள் என எந்தவொரு விஷயமும் கடவுளுடைய அரசாங்கத்தின் மேல் நமக்கு இருக்கும் அன்பைக் குறைத்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். (நீதி. 4:23; மத். 5:27-29) கடவுளுடைய அரசாங்கத்தின் மேலுள்ள அன்பைத் தொடர்ந்து காத்துக்கொள்வதற்கு உதவுகிற இன்னொரு மதிப்புள்ள பொக்கிஷத்தை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார்.
உயிர்காக்கும் ஊழியம்
8. (அ) ஊழியத்தை மண்பாத்திரங்களில் இருக்கிற பொக்கிஷம் என்று பவுல் ஏன் சொன்னார்? (ஆ) ஊழியத்தை நேசித்ததை பவுல் எப்படிக் காட்டினார்?
8 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிற பொறுப்பையும், அதைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிற பொறுப்பையும் இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார். (மத். 28:19, 20) ஊழியத்தை, மண்பாத்திரங்களில் அல்லது மண் ஜாடிகளில் இருக்கிற பொக்கிஷம் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (2 கொ. 4:7; 1 தீ. 1:12) நாம் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால், நாம் மண் ஜாடிகளைப் போல இருக்கிறோம். ஆனால், நாம் பிரசங்கிக்கிற செய்தி மதிப்புள்ள ஒரு பொக்கிஷம் போல் இருக்கிறது. ஏனென்றால், அந்தச் செய்தியைப் பிரசங்கிக்கிற நமக்கும் அதைக் கேட்கிற மற்றவர்களுக்கும் அது முடிவில்லாத வாழ்வைத் தருகிறது. அதனால்தான், “நல்ல செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்காக எல்லாவற்றையும் நல்ல செய்திக்காகவே செய்கிறேன்” என்று பவுல் சொன்னார். (1 கொ. 9:23) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதற்காக பவுல் கடினமாக உழைத்தார். (ரோமர் 1:14, 15-ஐயும், 2 தீமோத்தேயு 4:2-ஐயும் வாசியுங்கள்.) ஊழியத்தை பவுல் அதிகமாக நேசித்தார். அதனால்தான், கொடூரமான துன்புறுத்தல் மத்தியிலும் அவர் தொடர்ந்து பிரசங்கித்தார். (1 தெ. 2:2) நாமும் பவுலைப் போலவே எப்படி ஊழியத்தை நேசிக்கலாம்?
9. ஊழியத்தை நாம் நேசிக்கிறோம் என்பதை என்ன சில வழிகளில் காட்டுகிறோம்?
9 ஊழியத்தின் மேல் தனக்கு இருந்த அன்பை பவுல் பல வழிகளில் காட்டினார். அதில் ஒரு வழி, மற்றவர்களிடம் பேசுவதற்குக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டதுதான்! பவுல் மற்றும் ஆரம்பக் கால கிறிஸ்தவர்களைப் போல, நாமும் வீடு வீடாகவும், பொது இடங்களிலும், மக்கள் இருக்கிற மற்ற இடங்களிலும் நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிறோம். (அப். 5:42; 20:20) நல்ல செய்தியைப் பற்றி எத்தனை பேருக்குச் சொல்ல முடியுமோ அத்தனை பேருக்கும் சொல்ல முயற்சி செய்கிறோம். முடிந்தபோதெல்லாம், துணைப் பயனியராகவோ ஒழுங்கான பயனியராகவோ சேவை செய்கிறோம். அல்லது ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொண்டு, வேறொரு நாட்டுக்கோ நம் நாட்டிலேயே இருக்கிற இன்னொரு இடத்துக்கோ போய் ஊழியம் செய்கிறோம்.—அப். 16:9, 10.
10. நல்ல செய்தியைப் பிரசங்கிக்க ஐரீன் எடுத்த முயற்சிக்கு என்ன பலன்கள் கிடைத்தன?
10 அமெரிக்காவைச் சேர்ந்த ஐரீன் என்ற மணமாகாத சகோதரியின் உதாரணத்தைக் கவனியுங்கள். ரஷ்ய மொழி பேசுகிற மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும் என்று இவர் ஆசைப்பட்டார். அதனால், 1993-ல், நியு யார்க் நகரத்தில் இருந்த ரஷ்ய மொழி தொகுதிக்குப் போக ஆரம்பித்தார். அப்போது, அந்தத் தொகுதியில் வெறும் 20 பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். 20 வருஷங்களுக்குப் பிறகு ஐரீன் இப்படிச் சொல்கிறார்: “எனக்கு இப்போகூட ரஷ்ய மொழி நல்லா பேச வராது.” இருந்தாலும், ரஷ்ய மொழி பேசுகிறவர்களுக்குப் பிரசங்கிக்க ஐரீனுக்கும் மற்ற பிரஸ்தாபிகளுக்கும் யெகோவா உதவியிருக்கிறார். அதனால், நியு யார்க் நகரத்தில், இன்று மொத்தம் 6 ரஷ்ய மொழி சபைகள் இருக்கின்றன. ஐரீன் நிறைய பேருக்குப் பைபிள் படிப்பு நடத்தியிருக்கிறார். அவர்களில் 15 பேர் ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார்கள். அவர்களில் சிலர், பெத்தேல் ஊழியர்களாகவும் பயனியர்களாகவும் மூப்பர்களாகவும் சேவை செய்கிறார்கள். “நான் வேற எந்த குறிக்கோள அடைய நினைச்சிருந்தாலும், எனக்கு இந்தளவு சந்தோஷம் கிடைச்சிருக்காது” என்று ஐரீன் சொல்கிறார்.
11. துன்புறுத்தல் மத்தியிலும் தொடர்ந்து பிரசங்கித்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?
11 ஊழியத்தை நாம் பொக்கிஷமாக நினைத்தால், அப்போஸ்தலன் பவுலைப் போலவே நாமும் துன்புறுத்தல் மத்தியிலும் தொடர்ந்து பிரசங்கிப்போம். (அப். 14:19-22) உதாரணத்துக்கு, 1930-க்கும் 1944-க்கும் இடைப்பட்ட காலத்தில், அமெரிக்காவில் இருந்த நம் சகோதரர்கள் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டார்கள். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து பிரசங்கித்தார்கள். அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தபோது, நம் சகோதரர்கள் நீதிமன்றத்துக்குப் போனார்கள்; நிறைய வழக்குகளில் ஜெயித்தார்கள். அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நமக்குக் கிடைத்த நிறைய வெற்றிகளில் ஒரு வெற்றியைப் பற்றி 1943-ல் சகோதரர் நார் சொன்னார். சகோதரர்கள் தொடர்ந்து பிரசங்கிக்காமல் இருந்திருந்தால், எந்த வழக்கும் நீதிமன்றத்துக்கு வந்திருக்காது என்று அவர் சொன்னார். உலகம் முழுவதும் இருக்கிற சகோதரர்கள் தொடர்ந்து பிரசங்கித்ததன் மூலம் எந்தத் துன்புறுத்தலும் தங்களுடைய வேலையை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதை அவர்கள் நிரூபித்தார்கள் என்றும் சொன்னார். மற்ற நாடுகளிலிருக்கிற சகோதரர்களுக்கும் இது போன்ற வழக்குகளில் வெற்றி கிடைத்திருக்கிறது. நாம் ஊழியத்தை நேசித்தால், துன்புறுத்தல் மத்தியிலும் தொடர்ந்து பிரசங்கிப்போம்.
12. நீங்கள் என்ன செய்ய தீர்மானமாக இருக்கிறீர்கள்?
12 ஊழியத்தை நாம் பொக்கிஷமாக நினைத்தால், மணிநேரத்துக்காக மட்டுமே ஊழியம் செய்ய மாட்டோம். அதற்குப் பதிலாக, ‘நல்ல செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுக்க’ நம்மால் முடிந்ததையெல்லாம் செய்வோம். (அப். 20:24; 2 தீ. 4:5) ஆனால், மற்றவர்களுக்கு நாம் எதைப் பற்றி சொல்லித்தருவோம்? அதைத் தெரிந்துகொள்ள கடவுள் கொடுத்திருக்கும் இன்னொரு பொக்கிஷத்தைப் பற்றி பார்க்கலாம்.
விலை மதிப்புள்ள சத்தியங்கள்
13, 14. மத்தேயு 13:52-ல் இயேசு சொன்ன அந்த ‘பொக்கிஷம்’ எது, நாம் எப்படி அதில் இன்னும் அதிகமாகச் சேர்த்துவைக்கலாம்?
13 நாம் கற்றுக்கொண்ட சத்தியங்கள்தான் யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற மூன்றாவது பொக்கிஷம். யெகோவா சத்தியத்தின் கடவுள்! (2 சா. 7:28; சங். 31:5) தாராள குணமுள்ள நம் அப்பா யெகோவா, இந்தச் சத்தியங்களை நமக்குச் சொல்லித்தருகிறார். பைபிளையும் நம் பிரசுரங்களையும் படிப்பதன் மூலமும், மாநாடுகள் மற்றும் வாராவாரம் நடக்கிற கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலமும் இந்தச் சத்தியங்களை நாம் கற்றுக்கொண்டோம். அதிகமதிகமான சத்தியங்களைக் கற்றுக்கொள்ளும்போது, இயேசு சொன்னது போல, புதிய மற்றும் பழைய சத்தியங்கள் அடங்கிய ‘பொக்கிஷத்தை’ நாம் சேர்த்துவைப்போம். (மத்தேயு 13:52-ஐ வாசியுங்கள்.) மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களைத் தேடுவது போல இந்தச் சத்தியங்களைத் தேடினால், புதிய சத்தியங்களை நம் ‘பொக்கிஷத்தில்’ சேர்த்துவைக்க யெகோவா நமக்கு உதவுவார். (நீதிமொழிகள் 2:4-7-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், நாம் எப்படி இந்தச் சத்தியங்களைத் தேடலாம்?
14 பைபிளையும் நம் பிரசுரங்களையும் நாம் தவறாமல் படிக்க வேண்டும், அவற்றைக் கவனமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், இதுவரை நமக்குத் தெரியாத “புதிய” சத்தியங்களை நம்மால் கண்டுபிடிக்க முடியும். (யோசு. 1:8, 9; சங். 1:2, 3) ஜூலை 1879-ல் முதல் முதலில் வெளிவந்த காவற்கோபுர பத்திரிகை, சத்தியத்தை களைகளுக்கு நடுவில் மறைந்திருக்கிற ஒரு பூவுக்கு ஒப்பிட்டது. அப்படிப்பட்ட ஒரு பூவைக் கண்டுபிடிக்க, ஒருவர் கவனமாக தேட வேண்டும். ஒரே ஒரு பூவைக் கண்டுபிடித்ததும் திருப்தியடைந்துவிடக் கூடாது. அதுபோன்ற இன்னும் நிறைய பூக்களைக் கண்டுபிடிக்க தொடர்ந்து தேட வேண்டும். அதே போல, நாமும் ஒரே ஒரு சத்தியத்தைக் கண்டுபிடித்ததோடு திருப்தியடைந்துவிடக் கூடாது. இன்னும் நிறைய சத்தியங்களைக் கண்டுபிடிக்க தொடர்ந்து ஆர்வமாகத் தேட வேண்டும்.
15. சில சத்தியங்களை நாம் ஏன் “பழைய” சத்தியங்கள் என்று சொல்கிறோம், அவற்றில் நீங்கள் எதை ரொம்ப உயர்வாக மதிக்கிறீர்கள்?
15 நாம் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, சில அருமையான சத்தியங்களைக் கற்றுக்கொண்டோம். அவற்றை ஆரம்பத்தில் கற்றுக்கொண்டதால், அந்தச் சத்தியங்களை ‘பழைய’ சத்தியங்கள் என்று சொல்லலாம். யெகோவா நம் படைப்பாளர் என்பதையும், மனிதர்களை ஒரு நோக்கத்தோடுதான் படைத்தார் என்பதையும் நாம் ஆரம்பத்தில் தெரிந்துகொண்டோம். பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுதலை செய்வதற்காக, தன் மகனை மீட்புப் பலியாக இந்தப் பூமிக்கு அனுப்பினார் என்பதையும் தெரிந்துகொண்டோம். எல்லா கஷ்டங்களுக்கும் கடவுளுடைய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், சந்தோஷமாகவும் சமாதானமாகவும் நாம் என்றென்றும் இந்தப் பூமியில் வாழ்வோம் என்றும் தெரிந்துகொண்டோம். இவையெல்லாம் பழைய சத்தியங்களில் அடங்கும்.—யோவா. 3:16; வெளி. 4:11; 21:3, 4.
16. பைபிள் சத்தியங்களைப் பற்றிய புரிந்துகொள்ளுதலில் மாற்றம் ஏற்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
16 சில சமயங்களில், ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் அல்லது ஒரு பைபிள் வசனம் சம்பந்தமான நம் புரிந்துகொள்ளுதலில் மாற்றம் ஏற்படலாம். அப்போது, அந்த மாற்றத்தைப் பற்றி படிக்கவும், அதைப் பற்றி ஆழ்ந்து யோசிக்கவும் நாம் நேரம் ஒதுக்க வேண்டும். (அப். 17:11; 1 தீ. 4:15) பழைய புரிந்துகொள்ளுதலுக்கும் புதிய புரிந்துகொள்ளுதலுக்கும் இருக்கிற முக்கியமான வித்தியாசத்தைத் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. புதிய புரிந்துகொள்ளுதலில் இருக்கிற நுணுக்கமான விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படிக் கவனமாகப் படித்தால், ஏற்கனவே சேர்த்துவைத்திருக்கிற பொக்கிஷத்தோடு இந்தப் புதிய சத்தியங்களையும் நம்மால் சேர்த்துவைக்க முடியும். இப்படிப் படிப்பதற்கு முயற்சி எடுப்பது ஏன் நல்லது?
17, 18. கடவுளுடைய சக்தி நமக்கு எப்படி உதவும்?
17 ஏற்கனவே படித்த விஷயங்களை ஞாபகத்துக்குக் கொண்டுவர கடவுளுடைய சக்தி நமக்கு உதவும் என்று இயேசு சொன்னார். (யோவா. 14:25, 26) நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும்போது இது எப்படி உதவியாக இருக்கும்? பீட்டர் என்ற சகோதரரின் உதாரணத்தைக் கவனியுங்கள். 1970-ல் அவருக்கு 19 வயது; அப்போதுதான் அவர் பிரிட்டன் பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்திருந்தார். ஒரு சமயம் வீட்டுக்கு வீடு ஊழியத்தில், தாடியோடு இருந்த ஒரு நடுத்தர வயது நபரை அவர் பார்த்தார். பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பம் இருக்கிறதா என்று பீட்டர் அவரிடம் கேட்டார். அந்த நபர் ஒரு யூத ரபீ! ஒரு இளைஞன் தனக்கு பைபிள் கற்றுத்தருவதாகச் சொன்னதைக் கேட்டது அந்த ரபீக்கு அதிர்ச்சியாக இருந்தது. பீட்டரைச் சோதிப்பதற்காக, “அப்படியா தம்பி, முதல்ல தானியேல் புத்தகத்தை எந்த மொழியில எழுதுனாங்கனு சொல்லு பார்க்கலாம்” என்று அவர் கேட்டார். அதற்கு பீட்டர், “அந்த புத்தகத்தோட ஒரு பகுதிய அரமேயிக் மொழியில எழுதுனாங்க” என்று சொன்னார். அந்தச் சம்பவத்தைப் பற்றி பீட்டர் இப்படிச் சொல்கிறார்: ‘எனக்கு பதில் தெரிஞ்சிருந்தத பார்த்து அந்த ரபீ ரொம்ப ஆச்சரியப்பட்டார். ஆனா, அவரவிட எனக்குதான் ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு! எனக்கு எப்படி பதில் தெரிஞ்சதுனு நான் யோசிச்சேன். வீட்டுக்கு போனதும், சில மாசத்துக்கு முன்னாடி வந்திருந்த காவற்கோபுர பத்திரிகைகளையும் விழித்தெழு! பத்திரிகைகளையும் எடுத்து பார்த்தேன். அப்போ, தானியேல் புத்தகம் அரமேயிக் மொழியில எழுதப்பட்டிருந்தத பத்தி விளக்குற ஒரு கட்டுரை இருந்துச்சு.’ (தானி. 2:4, அடிக்குறிப்பு) இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? நாம் ஏற்கனவே படித்து, நம் பொக்கிஷத்தில் சேர்த்துவைத்திருக்கிற விஷயங்களை ஞாபகத்துக்குக் கொண்டுவர கடவுளுடைய சக்தி நமக்கு உதவும்!—லூக். 12:11, 12; 21:13-15.
18 யெகோவாவிடமிருந்து கற்றுக்கொண்ட சத்தியங்களை நாம் நேசித்தால், அவற்றை உயர்வாக மதித்தால், புதிய சத்தியங்களையும் பழைய சத்தியங்களையும் தொடர்ந்து நம் பொக்கிஷத்தில் சேர்த்துவைக்க நாம் ஆசைப்படுவோம். நாம் எந்தளவு சேர்த்துவைக்கிறோமோ அந்தளவு மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத் தயாராக இருப்போம்.
பொக்கிஷங்களைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
19. நம் ஆன்மீகப் பொக்கிஷங்களை நாம் ஏன் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்?
19 ஆன்மீகப் பொக்கிஷங்களை உயர்வாக மதிப்பது எந்தளவு முக்கியம் என்பதை நாம் இந்தக் கட்டுரையிலிருந்து தெரிந்துகொண்டோம். சாத்தானும் இந்த உலகமும், ஆன்மீகப் பொக்கிஷங்களின் மேல் நமக்கு இருக்கிற அன்பைக் குறைத்துவிடாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் கவனமாக இல்லை என்றால், கை நிறைய பணம் கிடைக்கும் வேலை அல்லது ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசை அல்லது நமக்கு இருக்கிற பொருள் வசதிகளைப் பகட்டாகக் காட்டிக்கொள்ளும் குணம் ஆகியவற்றால் நாம் ஏமாந்து விடலாம். இந்த உலகமும் அதன் ஆசையும் ஒழிந்துபோகும் என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு ஞாபகப்படுத்துகிறார். (1 யோ. 2:15-17) அதனால், நம் ஆன்மீகப் பொக்கிஷங்களை நாம் உயர்வாக மதிக்க வேண்டும், அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
20. உங்கள் ஆன்மீகப் பொக்கிஷங்களைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய்ய தீர்மானித்திருக்கிறீர்கள்?
20 கடவுளுடைய அரசாங்கத்தின் மேல் நீங்கள் வைத்திருக்கிற அன்பை எதுவும் குறைத்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; அதற்காக எதையும் கொடுப்பதற்குத் தயாராக இருங்கள். ஆர்வமாகப் பிரசங்கிக்க தீர்மானமாக இருங்கள்; ஊழியத்தின் மேல் இருக்கிற அன்பை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள். பைபிள் சத்தியங்களைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருங்கள். இவற்றையெல்லாம் செய்யும்போது, ‘உங்களால் பொக்கிஷத்தைப் பரலோகத்தில் சேர்த்துவைக்க முடியும். அங்கே திருடனும் நெருங்க மாட்டான், பூச்சியும் அரிக்காது. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உங்கள் இதயமும் இருக்கும்.’—லூக். 12:33, 34.