ரோமருக்குக் கடிதம்
1 ரோமில் இருக்கிற கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் கிறிஸ்து இயேசுவின் அடிமையாகிய பவுல் எழுதுவது:
பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.
2 நீங்கள் எல்லாரும் கடவுளுடைய அன்பைப் பெற்றவர்கள், பரிசுத்தவான்களாவதற்கு அழைப்புப் பெற்றவர்கள். நானும் அப்போஸ்தலனாவதற்கு அழைப்புப் பெற்றவன், கடவுளுடைய நல்ல செய்தியை அறிவிப்பதற்கு நியமிக்கப்பட்டவன்.*+ 3 கடவுள் தன்னுடைய மகனைப் பற்றிய அந்த நல்ல செய்தியைத் தன்னுடைய தீர்க்கதரிசிகள் மூலம் பரிசுத்த வேதாகமத்தில் முன்கூட்டியே வாக்குறுதி கொடுத்திருந்தார். 4 அந்த மகன் தாவீதின் சந்ததியில்+ மனிதனாகப் பிறந்தார். 5 உயிரோடு எழுப்பப்பட்டதன் மூலம்+ கடவுளுடைய மகன்+ என்று பரிசுத்த சக்தியின் வல்லமையால் நிரூபிக்கப்பட்டார். அந்த மகன்தான் நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்து. 6 அவருடைய பெயர் புகழப்படும்படி, மற்ற தேசத்து மக்கள் எல்லாரும் அவர்மேல் விசுவாசம் வைத்துக் கீழ்ப்படிய வேண்டும்.+ இதற்காகத்தான் அவர் மூலம் அளவற்ற கருணையையும் அப்போஸ்தலப் பணியையும் நாங்கள் பெற்றோம்.+ 7 மற்ற தேசத்து மக்கள் மத்தியிலிருந்து நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்களாக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
8 முதலாவதாக, உங்கள் எல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்துவின் மூலம் என் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். ஏனென்றால், உங்களுடைய விசுவாசத்தைப் பற்றி உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 9 நான் உங்களுக்காக எப்போதும் ஜெபம் செய்கிறேன்.+ கடவுளுடைய மகனைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிப்பதன் மூலம் நான் முழு இதயத்தோடு பரிசுத்த சேவை செய்துவருகிற கடவுள்தான் இதற்குச் சாட்சி. 10 கடவுளுக்கு விருப்பமானால் இப்போதாவது நான் உங்களிடம் நல்லபடியாக வந்துசேர வேண்டும் என்று அவரிடம் கெஞ்சிக் கேட்கிறேன். 11 உங்களைப் பார்ப்பதற்கும், கடவுள் தரும்* அன்பளிப்பைக் கொடுத்து உங்களைப் பலப்படுத்துவதற்கும் ஏங்குகிறேன். 12 சொல்லப்போனால், உங்களுடைய விசுவாசத்தால் நானும் என்னுடைய விசுவாசத்தால் நீங்களும், ஒருவருக்கொருவர் உற்சாகம் பெற வேண்டும்+ என்று ஏங்குகிறேன்.
13 சகோதரர்களே, மற்ற தேசத்தார் மத்தியில் என் ஊழியத்துக்குப் பலன் கிடைத்ததுபோல் உங்கள் மத்தியிலும் பலன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் உங்களிடம் வருவதற்குப் பல தடவை விரும்பினேன். ஆனால், ஒவ்வொரு தடவையும் தடங்கல் ஏற்பட்டது; இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். 14 கிரேக்கர்களுக்கும் கிரேக்கர்களாக இல்லாதவர்களுக்கும், ஞானம் உள்ளவர்களுக்கும் ஞானம் இல்லாதவர்களுக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். 15 அதனால், ரோமில் இருக்கிற உங்களுக்கும் நல்ல செய்தியைச் சொல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.+ 16 நல்ல செய்தியைச் சொல்வதற்கு நான் வெட்கப்படுவதில்லை.+ ஏனென்றால், அது கடவுளுடைய வல்லமையின் வெளிக்காட்டாக இருக்கிறது. முதலில் யூதர்களையும்+ பின்பு கிரேக்கர்களையும்,+ சொல்லப்போனால், விசுவாசம் வைக்கிற எல்லாரையும்,+ மீட்பதற்கு அவர் செய்திருக்கிற ஏற்பாடாக இருக்கிறது. 17 அந்த நல்ல செய்தியின் மூலம் கடவுள் தன்னுடைய நீதியை வெளிப்படுத்துகிறார், இதை விசுவாசமுள்ளவர்கள் பார்க்கிறார்கள்,+ இதனால் அவர்களுடைய விசுவாசம் பலப்படுகிறது. ஏனென்றால், “விசுவாசத்தால் நீதிமான் வாழ்வு பெறுவான்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+
18 சில ஆட்கள் உண்மையை அநியாயமாக மூடிமறைக்கிறார்கள், எல்லா விதமான கடவுள்பக்தியற்ற செயல்களையும் அநீதியான செயல்களையும் செய்கிறார்கள்,+ அவர்கள்மேல் கடவுளுடைய கடும் கோபம்+ பரலோகத்திலிருந்து வருகிறது. 19 ஏனென்றால், கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளக்கூடிய விஷயங்கள் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவற்றைக் கடவுளே அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.+ 20 பார்க்க முடியாத அவருடைய குணங்களை, அதாவது நித்திய வல்லமை,+ கடவுள்தன்மை+ ஆகியவற்றை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகப் பார்க்க முடிகிறது.+ அதனால், அவர்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது. 21 கடவுளைப் பற்றித் தெரிந்திருந்தும் அவருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையை அவர்கள் கொடுக்கவில்லை; அவருக்கு நன்றி சொல்லவுமில்லை. அவர்களுடைய யோசனை அர்த்தமில்லாததாக இருக்கிறது. அவர்களுடைய புத்திகெட்ட உள்ளம் இருண்டுபோயிருக்கிறது.+ 22 அவர்கள் தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொண்டாலும் முட்டாள்களாக ஆனார்கள். 23 அழிந்துபோகாத கடவுளை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக அழிந்துபோகிற மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகியவற்றின் உருவங்களை மகிமைப்படுத்துகிறார்கள்.+
24 அதனால், தங்களுடைய உள்ளத்திலுள்ள ஆசைகளின்படி அசுத்தமான உறவில் ஈடுபட்டுத் தங்களுடைய உடல்களை அவமானப்படுத்துவதற்குக் கடவுள் அவர்களை விட்டுவிட்டார். 25 அப்படிப்பட்டவர்கள் கடவுளைப் பற்றிய உண்மையை நம்பாமல் பொய்யை நம்பினார்கள். படைப்புகளை வணங்கி, அவற்றுக்குப் பூஜை செய்தார்கள், படைத்தவரையோ விட்டுவிட்டார்கள். அவருக்கே என்றென்றும் புகழ் சேருவதாக. ஆமென்.* 26 அதனால்தான், கேவலமான காமப்பசிக்கு+ இணங்கிவிடும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். அவர்கள் மத்தியிலுள்ள பெண்கள் இயல்பான முறையில் உறவுகொள்வதை விட்டுவிட்டு இயல்புக்கு மாறான முறையில் உறவுகொண்டார்கள்.+ 27 அதேபோல், ஆண்களும் இயல்பான முறையில் பெண்களோடு உறவுகொள்வதை விட்டுவிட்டு, ஒருவர்மீது ஒருவர் மோகம்கொண்டு காமத்தீயில் பற்றியெரிந்தார்கள். ஆண்கள் ஆண்களோடு ஆபாசமாக நடந்து,+ தங்களுடைய தவறுக்குத் தகுந்த தண்டனையை முழுமையாகப் பெற்றார்கள்.+
28 கடவுளைப் பற்றித் திருத்தமாகத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு விருப்பம் இல்லாததால், கெட்ட விஷயங்களை யோசிப்பதற்கும் முறைகேடான செயல்களைச் செய்வதற்கும் கடவுள் அவர்களை விட்டுவிட்டார்.+ 29 அவர்கள் எல்லா விதமான அநீதியும்+ கெட்ட குணமும் பேராசையும்+ தீமையும் நிறைந்தவர்களாக இருந்தார்கள். பொறாமையும்+ கொலைவெறியும்+ வஞ்சகமும் வன்மமும்+ நிறைந்தவர்களாக இருந்தார்கள். சண்டை சச்சரவு செய்கிறவர்களாகவும்,+ கிசுகிசுக்கிறவர்களாகவும்,* 30 புண்படுத்திப் பேசுகிறவர்களாகவும்,+ கடவுளை வெறுக்கிறவர்களாகவும், திமிர்பிடித்தவர்களாகவும், கர்வமுள்ளவர்களாகவும், ஆணவமுள்ளவர்களாகவும், சதித்திட்டம் தீட்டுகிறவர்களாகவும், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும்,+ 31 அறிவில்லாதவர்களாகவும்,+ வாக்குத் தவறுகிறவர்களாகவும், பந்தபாசம் இல்லாதவர்களாகவும், ஈவிரக்கம் இல்லாதவர்களாகவும் இருந்தார்கள். 32 இப்படியெல்லாம் செய்துவருகிறவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும்+ என்ற கடவுளுடைய நீதியான தீர்ப்பை நன்றாகத் தெரிந்திருந்தும் அவற்றைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவற்றைச் செய்துவருகிற மற்றவர்களை மனதார ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்.