“யார் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள்?”
“உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும், அவருக்கு மட்டும்தான் சேவை செய்ய வேண்டும், அவரையே உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.” —உபா. 10:20.
1, 2. (அ) யெகோவாவின் பக்கம் இருப்பது ஏன் ஞானமானது? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?
யெகோவாவிடம் நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்வதுதான் ஞானமானது! அவரைவிட சக்தியும் ஞானமும் அன்பும் கொண்டவர்கள் வேறு யாருமே கிடையாது! எப்போதுமே அவருக்கு உண்மையாக நடந்துகொள்ளவும், அவருடைய பக்கம் இருக்கவும்தான் நாம் ஆசைப்படுகிறோம். (சங். 96:4-6) ஆனால், யெகோவாவை வணங்கிய சிலர் அப்படியிருக்கத் தவறியிருக்கிறார்கள்.
2 யெகோவாவின் பக்கம் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அவர் வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டு இருந்தவர்களுடைய உதாரணங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற பாடங்கள், தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நமக்கு உதவும்.
யெகோவா நம் இதயத்தை ஆராய்கிறார்
3. காயீனுக்கு உதவ யெகோவா ஏன் முயற்சி செய்தார், அவனிடம் அவர் என்ன சொன்னார்?
3 காயீனுடைய உதாரணத்தை இப்போது பார்க்கலாம். அவன் ஒன்றும் பொய்த் தெய்வங்களைக் கும்பிடவில்லை; இருந்தாலும், அவனுடைய வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்? அவனுடைய இதயத்தில், பொல்லாத நச்சு விதைகள் வேரூன்றியிருந்தன. (1 யோ. 3:12) “நீ மனம் மாறி நல்லது செய்தால், உன்னை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேனா? நீ நல்லது செய்யவில்லை என்றால், இதோ, பாவம் உன் கதவுக்கு வெளியில் பதுங்கியிருக்கிறது. அது உன்மேல் பாய்வதற்குக் காத்திருக்கிறது. ஆனால், நீ அதை அடக்க வேண்டும்” என்று யெகோவா அவனை எச்சரித்தார். (ஆதி. 4:6, 7) காயீன் மனம் திருந்தி தன் பக்கம் வந்தால், தானும் அவனுடைய பக்கம் போகத் தயாராக இருப்பதை யெகோவா தெளிவுபடுத்தினார்.
4. யெகோவாவின் பக்கம் இருப்பதற்கான வாய்ப்பு தரப்பட்டபோது, காயீன் என்ன செய்தான்?
4 தான் யோசிக்கும் விதத்தை காயீன் மாற்றிக்கொண்டிருந்தால், அவனுடைய வணக்கத்தை யெகோவா மறுபடியும் ஏற்றுக்கொண்டிருப்பார். ஆனால், யெகோவா சொன்னதை அவன் கேட்கவில்லை; அவனுடைய தவறான யோசனைகளும் சுயநலமான ஆசைகளும் பாவம் செய்ய அவனைத் தூண்டியது. (யாக். 1:14, 15) யெகோவாவுக்கு எதிராக ஒருநாள் அவன் செயல்படுவான் என்று இளவயதில் ஒருவேளை அவன் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டான்! ஆனால் இப்போது, கடவுளுக்கு எதிராக அவன் கலகம் செய்தான், சொந்தத் தம்பியையே கொலை செய்தான்!
5. எப்படிப்பட்ட யோசனைகள், யெகோவாவின் தயவு நமக்குக் கிடைக்காதபடி செய்துவிடலாம்?
5 இன்றும், ஒரு கிறிஸ்தவர், காயீனைப் போல நடந்துகொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. எப்படி? யெகோவாவை வணங்குவதாகச் சொல்லிக்கொண்டு, அவர் வெறுக்கிற காரியங்களை அந்தக் கிறிஸ்தவர் செய்துகொண்டிருக்கலாம். (யூ. 11) ஒருவேளை அவர் ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடலாம், தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம். ஆனால், ஒழுக்கங்கெட்ட யோசனைகளையும் பேராசை பிடித்த எண்ணங்களையும் தன் மனதில் அசைபோட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது யாராவது ஒரு சகோதரரிடமோ சகோதரியிடமோ கசப்புணர்ச்சியை வளர்த்துக்கொண்டிருக்கலாம். (1 யோ. 2:15-17; 3:15) இந்த யோசனைகள், பாவம் செய்ய அவரைத் தூண்டலாம். நம்முடைய செயல்களும் யோசனைகளும் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், யெகோவாவுக்கு எல்லாமே தெரியும். முழு மனதோடு நாம் அவருடைய பக்கம் இல்லையென்றால், அதையும் அவர் கண்டுபிடித்துவிடுவார்.—எரேமியா 17:9, 10-ஐ வாசியுங்கள்.
6. கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட யெகோவா எப்படி உதவுகிறார்?
6 நாம் தவறுகள் செய்யும்போது, உடனடியாக நம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை யெகோவா இழந்துவிடுவதில்லை. ஆபத்தான பாதையில் நாம் போகும்போது, “என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது நானும் உங்களிடம் திரும்பி வருவேன்” என்று யெகோவா நம்மை அழைக்கிறார். (மல். 3:7) நம்மிடம் பலவீனங்கள் இருக்கின்றன என்பதும், அதை எதிர்த்து நாம் போராட வேண்டியிருக்கிறது என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். அதேசமயத்தில், நாம் உறுதியாக இருக்க வேண்டுமென்றும், கெட்டதை எதிர்த்துப் போராட வேண்டுமென்றும் அவர் விரும்புகிறார். (ஏசா. 55:7) நாம் அப்படிச் செய்தால், நமக்கு உதவுவதாகவும் கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடத் தேவையான பலத்தைத் தருவதாகவும் அவர் வாக்குக் கொடுக்கிறார்.—ஆதி. 4:7.
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்!
7. கடவுளிடமிருந்த நட்பை சாலொமோன் எப்படி இழந்தார்?
7 தன்னுடைய இளவயதில், சாலொமோனுக்கு யெகோவாவோடு நல்ல பந்தம் இருந்தது. அவருக்கு நிறைய ஞானத்தையும், எருசலேமில் அழகான ஒரு ஆலயத்தைக் கட்டும் முக்கியமான வேலையையும் யெகோவா தந்தார். ஆனால், யெகோவாவோடு தனக்கு இருந்த நட்பை அவர் இழந்தார். (1 ரா. 3:12; 11:1, 2) “ராஜாவின் இதயம் கடவுளைவிட்டு விலகாமல் இருக்க வேண்டுமானால் அவர் நிறைய மனைவிகளை வைத்துக்கொள்ளக் கூடாது” என்று கடவுளுடைய சட்டம் சொல்லியிருந்தது. (உபா. 17:17) ஆனால் இந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படியாமல், 700 பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டார்; 300 மறுமனைவிகளை வைத்துக்கொண்டார். (1 ரா. 11:3) அதுவும், அவர்களில் நிறைய பேர், பொய்த் தெய்வங்களைக் கும்பிட்ட வேறு தேசத்துப் பெண்கள்! இதிலிருந்து, வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்யக் கூடாதென்று கடவுள் போட்டிருந்த சட்டத்துக்கும் அவர் கீழ்ப்படியவில்லை என்று தெரிகிறது.—உபா. 7:3, 4.
8. சாலொமோன் எப்படி யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தார்?
8 யெகோவாவுடைய சட்டங்களின் மேலிருந்த அன்பை சாலொமோன் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டே வந்தார். கடைசியில், மிக மோசமான தவறுகளைச் செய்தார். பொய்த் தெய்வங்களாகிய கேமோஷுக்கும், அஸ்தரோத் தேவிக்கும் பலிபீடங்களைக் கட்டினார். பிறகு, தன்னுடைய மனைவிகளோடு சேர்ந்து அந்தத் தெய்வங்களைக் கும்பிடவும் ஆரம்பித்தார். எருசலேமுக்கு எதிரிலிருந்த மலையிலேயே அந்தத் தெய்வங்களுக்குப் பலிபீடங்களைக் கட்டினார். அந்த எருசலேமில்தான் அவர் யெகோவாவின் ஆலயத்தையும் கட்டியிருந்தார்! (1 ரா. 11:5-8; 2 ரா. 23:13) ஆலயத்தில் பலி செலுத்தும்வரை, தான் என்ன தவறு செய்தாலும் யெகோவா கண்டுகொள்ள மாட்டார் என்று சாலொமோன் தப்புக்கணக்கு போட்டிருக்கலாம்; அதன் மூலம், அவர் தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டார்.
9. கடவுளுடைய எச்சரிக்கைகளுக்கு சாலொமோன் கீழ்ப்படியாதபோது என்ன நடந்தது?
9 ஆனால், பாவத்தை யெகோவா கண்டும்காணாமல் இருக்க மாட்டார். “சாலொமோனின் இதயம் இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைவிட்டு வழிவிலகிப்போனதால் யெகோவாவுக்கு அவர்மீது பயங்கர கோபம் வந்தது” என்று பைபிள் சொல்கிறது. சாலொமோனுக்கு உதவ யெகோவா முயற்சி செய்தார். எப்படி? “அவர் இரண்டு தடவை தரிசனம் தந்திருந்தார், மற்ற தெய்வங்களை வணங்கக் கூடாது என்று எச்சரித்திருந்தார். அப்படி எச்சரித்திருந்தும் யெகோவாவுடைய கட்டளைக்கு சாலொமோன் கீழ்ப்படியவில்லை.” அதனால், கடவுளுடைய தயவையும் ஆதரவையும் அவர் இழந்தார்! அவருடைய வம்சத்தில் வந்தவர்களுக்கு, முழு இஸ்ரவேல் ராஜ்யத்தை ஆளும் வாய்ப்பை யெகோவா கொடுக்கவில்லை; நூற்றுக்கணக்கான வருஷங்களாக, கஷ்டங்கள் அவர்களை வாட்டியெடுத்தன.—1 ரா. 11:9-13.
10. யெகோவாவோடு நமக்கு இருக்கிற நட்புக்கு ஆபத்து வர எது காரணமாகிவிடலாம்?
10 கடவுளுடைய தராதரங்களைப் புரிந்துகொள்ளாதவர்களிடமும், அவற்றை மதிக்காதவர்களிடமும் நாம் நட்பு வைத்துக்கொண்டால், நாம் சிந்திக்கும் விதம் பாதிக்கப்படும். அதோடு, யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பும் கெட்டுவிடும். அப்படிப்பட்டவர்கள், யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ளாத சபை அங்கத்தினர்களாக இருக்கலாம்; அல்லது, யெகோவாவை வணங்காத நம்முடைய சொந்தக்காரர்களாகவோ, அக்கம்பக்கத்தாராகவோ, கூடவேலை செய்பவர்களாகவோ, அல்லது கூடப்படிக்கிறவர்களாகவோ இருக்கலாம். யெகோவாவின் தராதரங்களின்படி வாழாதவர்களோடு நாம் நிறைய நேரம் செலவு செய்தால், கடவுளோடு நமக்கு இருக்கிற அருமையான பந்தத்தை இழந்துவிடும் ஆபத்து வந்துவிடலாம்; அந்தளவுக்கு அவர்களோடு இருக்கும் நட்பு நம்மைப் பாதித்துவிடும்!
11. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்வது நல்லது?
11 ஒன்று கொரிந்தியர் 15:33-ஐ வாசியுங்கள். நிறைய மக்களிடம் சில நல்ல குணங்கள் இருக்கின்றன. யெகோவாவை வணங்காதவர்கள் எப்போதுமே கெட்ட காரியங்களைத்தான் செய்வார்கள் என்று சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்டவர்கள் சிலரை ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதற்காக, அவர்களோடு நட்பு வைத்துக்கொள்ளலாம் என்று அர்த்தமா? இப்போது, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அவங்ககிட்ட நான் வைச்சிருக்கிற நட்பு, யெகோவாகிட்ட எனக்கு இருக்கிற நட்பை எப்படி பாதிக்கலாம்? கடவுள்கிட்ட நெருங்கிப் போறதுக்கு அவங்க உதவுறாங்களா? வாழ்க்கையில அவங்க எதுக்கு முக்கியத்துவம் தர்றாங்க? எதை பத்தி அவங்க அதிகமா பேசுறாங்க? ஆடை அலங்காரம்... பணம்... எல்க்ட்ரானிக் சாதனங்கள்... பொழுதுபோக்கு... இந்த மாதிரியான விஷயங்களை பத்திதான் எப்பவும் பேசுறாங்களா? மத்தவங்கள பத்தி எப்பவுமே குறை சொல்றாங்களா? ஆபாசமான ஜோக்குகள சொல்றாங்களா?’ “இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது” என்று இயேசு எச்சரித்தார். (மத். 12:34) நீங்கள் யாரோடு சேர்ந்து நேரம் செலவு செய்கிறீர்களோ, அவர்கள், யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் நட்புக்கு உலைவைக்கிறார்களா? அப்படியென்றால், உடனடியாக நடவடிக்கை எடுங்கள்! அவர்களோடு செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால், அந்த நட்புக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!—நீதி. 13:20.
தன்னிடம் உண்மையாக நடந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்
12. (அ) எகிப்திலிருந்து விடுதலையான கொஞ்ச நாட்களுக்குள் யெகோவா இஸ்ரவேலர்களிடம் என்ன சொன்னார்? (ஆ) தனக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று யெகோவா சொன்னபோது இஸ்ரவேலர்கள் என்ன சொன்னார்கள்?
12 எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களை யெகோவா விடுதலை செய்த பிறகு நடந்த சில சம்பவங்களிலிருந்தும் நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். சீனாய் மலைக்கு முன்பாக இஸ்ரவேலர்கள் ஒன்றுகூடியபோது, அவர்கள் எல்லாரும் பிரமித்துப்போகும் விதத்தில் யெகோவா தன்னை வெளிப்படுத்தினார். அப்போது மலைமேல் கார்மேகம் சூழ்ந்தது, மின்னல் வெட்டியது, புகை எழும்பியது. பிறகு, இடி இடித்தது, ஊதுகொம்பின் சத்தத்தைப் போன்ற ஒரு சத்தம் பலமாக முழங்கியது. (யாத். 19:16-19) அதற்குப் பிறகு யெகோவா அவர்களிடம், “நீங்கள் என்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார். அதோடு, தன்னை நேசித்து, தனக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு, தான் எப்போதும் உண்மையாக இருப்பதாகவும் வாக்குக் கொடுத்தார். (யாத்திராகமம் 20:1-6-ஐ வாசியுங்கள்.) அதாவது, இஸ்ரவேலர்கள் தன் பக்கம் இருந்தால், தானும் அவர்கள் பக்கம் இருப்பதாகச் சொன்னார். அந்தக் கூட்டத்தில் நீங்கள் ஒருவேளை இருந்திருந்தால், யெகோவா சொன்னதைக் கேட்டு எப்படி உணர்ந்திருப்பீர்கள்? “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்” என்று சொன்ன இஸ்ரவேலர்களைப் போலவே நீங்களும் சொல்லியிருப்பீர்கள். (யாத். 24:3) ஆனால், இஸ்ரவேலர்களின் உண்மைத்தன்மைக்கு சீக்கிரத்திலேயே சோதனை வந்தது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
13. இஸ்ரவேலர்களின் உண்மைத்தன்மைக்கு என்ன சோதனை வந்தது?
13 கடவுளுடைய வல்லமை பிரமாண்டமான விதத்தில் வெளிப்படுத்தப்பட்டதைப் பார்த்து, இஸ்ரவேலர்கள் நடுநடுங்கிப் போனார்கள். அதனால் மோசே, மலைமீது ஏறிப்போய் அவர்கள் சார்பாக யெகோவாவிடம் பேசினார். (யாத். 20:18-21) ஆனால், ரொம்ப நாட்கள் ஆகியும் மோசே கீழே வரவில்லை. தங்களை வழிநடத்த ஒரு தலைவர் இல்லாமல், வனாந்தரத்தில் அவர்கள் திக்குத்தெரியாமல் நிற்பதுபோல தோன்றியது. இப்போது அவர்கள் என்ன செய்வார்கள்? கடவுளைவிட மனிதத் தலைவரான மோசேயை அவர்கள் அதிகம் சார்ந்திருந்ததாகத் தெரிகிறது! அதனால், அவர்கள் பதறிப்போய் ஆரோனிடம், “எகிப்திலிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. எங்களை வழிநடத்துவதற்கு ஒரு தெய்வத்தைச் செய்துகொடுங்கள்” என்று சொன்னார்கள்.—யாத். 32:1, 2.
14. இஸ்ரவேலர்கள் எப்படித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டார்கள், அவர்கள் செய்ததைப் பார்த்தபோது யெகோவாவுக்கு எப்படி இருந்தது?
14 சிலைகளை வணங்குவது தவறு என்பது இஸ்ரவேலர்களுக்குத் தெரிந்திருந்தது. (யாத். 20:3-5) அப்படியிருந்தும், தங்கத்தால் செய்யப்பட்ட கன்றுக்குட்டி சிலையை எவ்வளவு எளிதில் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள்! யெகோவாவுடைய கட்டளையை மீறியிருந்தும், இன்னமும் தாங்கள் யெகோவாவின் பக்கம் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டார்கள். ஆரோன் இன்னும் ஒரு படி மேலே போய், ‘யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாடுவோம்’ என்று அறிவித்தார். இதைப் பார்த்தபோது யெகோவாவுக்கு எப்படி இருந்தது? அவர் மோசேயிடம், இந்த “ஜனங்கள் தறிகெட்டுப் போய்விட்டார்கள் . . . என் வழியைவிட்டு விலகிவிட்டார்கள்!” என்று சொன்னார். அந்த முழு தேசத்தையும் அடியோடு அழிக்க நினைக்குமளவுக்கு யெகோவாவுக்குப் பயங்கரக் கோபம் வந்தது.—யாத். 32:5-10.
15, 16. தாங்கள் முழுமையாக யெகோவாவின் பக்கம் இருப்பதை மோசேயும் ஆரோனும் எப்படிக் காட்டினார்கள்? (ஆரம்பப் படம்)
15 யெகோவா இரக்கமுள்ள கடவுள்! அதனால், அந்தத் தேசத்தை அழிப்பதற்குப் பதிலாக, அவர்கள் தன்னுடைய பக்கம் இருப்பதைக் காட்டுவதற்கான வாய்ப்பை அவர்களுக்குத் தந்தார். (யாத். 32:14) கன்றுக்குட்டி சிலைக்கு முன்பாக மக்கள் ஆடிப்பாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்த மோசே, அந்தச் சிலையை நொறுக்கி பொடிப் பொடியாக்கினார். பிறகு சத்தமாக, “‘யார் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள்? என்னிடம் வாருங்கள்!’ என்றார். உடனே, லேவியர்கள் எல்லாரும் அவரிடம் கூடிவந்தார்கள்.”—யாத். 32:17-20, 26.
16 தான் அந்தக் கன்றுக்குட்டி சிலையைச் செய்திருந்தபோதிலும், ஆரோன் மனம் திருந்தினார். மற்ற லேவியர்களோடு சேர்ந்து, தானும் யெகோவாவின் பக்கம் இருப்பதென்று முடிவெடுத்தார். தாங்கள் பாவிகளின் பக்கம் இல்லை என்பதை இந்த உண்மையுள்ள ஆட்கள் தெளிவாகக் காட்டினார்கள். இது ஒரு ஞானமான தீர்மானம்! ஏனென்றால், கன்றுக்குட்டி சிலையை வணங்கிய ஆயிரக்கணக்கானவர்கள் அந்த நாளிலேயே இறந்துபோனார்கள். யெகோவாவின் பக்கம் இருந்தவர்கள் மட்டும்தான் காப்பாற்றப்பட்டார்கள். அவர்களை ஆசீர்வதிப்பதாகவும் யெகோவா வாக்குக் கொடுத்தார்.—யாத். 32:27-29.
17. கன்றுக்குட்டி சிலையைப் பற்றி பவுல் எழுதியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
17 இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? கன்றுக்குட்டி வணக்கத்தை மனதில் வைத்து பவுல் இப்படி எச்சரித்தார்: “இவை நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன. அவர்களில் சிலரைப் போல் நாமும் சிலைகளை வணங்காமல் இருப்போமாக; . . . இந்த உலகத்தின் முடிவு காலத்தில் வாழ்கிற நம்மை எச்சரிப்பதற்காக [அவை] எழுதப்பட்டிருக்கின்றன. அதனால், தான் நிற்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறவன் விழுந்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.” (1 கொ. 10:6, 7, 11, 12) யெகோவாவை வணங்குகிறவர்கள்கூட தவறான விஷயங்களைச் செய்ய ஆரம்பித்துவிடலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது. அப்படிப்பட்டவர்கள், தங்களுக்கு யெகோவாவின் அங்கீகாரம் இருப்பதாகக்கூட நினைக்கலாம். ஆனால், ஒருவர் யெகோவாவின் நண்பராக இருக்க ஆசைப்படுகிறார் என்பதற்காகவோ, யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார் என்பதற்காகவோ, யெகோவா அவரை அங்கீகரிக்கிறார் என்று அர்த்தம் கிடையாது.—1 கொ. 10:1-5.
18. நாம் எப்படி யெகோவாவைவிட்டு விலகிப் போய்விடலாம்? அதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படலாம்?
18 தாங்கள் எதிர்பார்த்ததுபோல், சீனாய் மலையிலிருந்து மோசே சீக்கிரம் கீழே வராததால் இஸ்ரவேலர்கள் கவலைப்பட்டார்கள். அதேபோல, நாம் எதிர்பார்த்த நேரத்தில் இந்த உலகத்துக்கு முடிவு வராததால் நமக்கும் கவலை வரலாம். அருமையான ஒரு எதிர்காலத்தைப் பற்றி யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் நிறைவேறுவதற்கு இன்னும் ரொம்பக் காலம் போக வேண்டுமென்று நாம் நினைக்க ஆரம்பித்துவிடலாம். அல்லது அவையெல்லாம் உண்மையிலேயே நிறைவேறுமா என்று சந்தேகிக்கவும் ஆரம்பித்துவிடலாம். அதோடு, யெகோவாவின் விருப்பத்தைவிட நம் விருப்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிடலாம். நாம் கவனமாக இல்லையென்றால், யெகோவாவைவிட்டு நாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போக வாய்ப்பிருக்கிறது. ஏன், நாம் செய்வோம் என்று நினைத்துப் பார்க்காத விஷயங்களைக்கூட நாம் செய்துவிடலாம்.
19. நாம் எப்போதும் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும், ஏன்?
19 தனக்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டுமென்றும், தன்னை மட்டும்தான் வணங்க வேண்டுமென்றும் யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிறார். (யாத். 20:5) ஏனென்றால், அவர் நம்மை நேசிக்கிறார். நாம் யெகோவாவின் விருப்பத்தைச் செய்யவில்லை என்றால், சாத்தானுடைய விருப்பத்தைச் செய்ய ஆரம்பித்துவிடுவோம். அது நம்மை அழிவில் கொண்டுபோய் விட்டுவிடும்! அதனால்தான், “யெகோவாவின் கிண்ணத்திலும் பேய்களின் கிண்ணத்திலும் நீங்கள் குடிக்க முடியாதே; ‘யெகோவாவின் மேஜையிலும்’ பேய்களின் மேஜையிலும் நீங்கள் சாப்பிட முடியாதே” என்று பவுல் சொன்னார்.—1 கொ. 10:21.
யெகோவாவை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்
20. நாம் தவறு செய்திருந்தாலும் யெகோவா நமக்கு எப்படி உதவுகிறார்?
20 காயீன்... சாலொமோன்... இஸ்ரவேலர்கள்... இவர்கள் எல்லாருக்குமே மனம் திருந்தவும், தங்கள் குணங்களை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு இருந்தது. (அப். 3:19) தன்னுடைய மக்கள் தவறு செய்யும்போது, அவர்கள்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை யெகோவா உடனடியாக இழந்துவிடுவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆரோனை அவர் மன்னித்ததைப் பற்றி யோசித்துப்பாருங்கள். நாம் தவறு செய்துவிடக் கூடாது என்பதற்காக, இன்றும் யெகோவா நம்மை அன்போடு எச்சரிக்கிறார். அதற்காக, பைபிளையும் நம் பிரசுரங்களையும் மற்ற சகோதர சகோதரிகளையும் பயன்படுத்துகிறார். அவர் கொடுக்கும் எச்சரிப்புகளைக் கேட்டு நடந்தால், கண்டிப்பாக நம்மேல் இரக்கம் காட்டுவார்.
21. நம்முடைய உண்மைத்தன்மைக்குச் சோதனை வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
21 கடவுள் நம்மேல் அளவற்ற கருணை காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. (2 கொ. 6:1) ‘கடவுள்பக்தியற்ற நடத்தையையும் உலக ஆசைகளையும் விட்டுவிடுவதற்கான’ வாய்ப்பை அது நமக்குக் கொடுக்கிறது. (தீத்து 2:11-14-ஐ வாசியுங்கள்.) இந்த உலகத்தில், நம்முடைய உண்மைத்தன்மைக்கு சோதனைகள் வந்துகொண்டேதான் இருக்கும். அதனால், கடவுளுடைய பக்கம் இருப்பதற்கு நாம் தீர்மானமாக இருக்க வேண்டும். ‘யெகோவாவுக்கு பயந்து நடக்கவும், அவருக்கு மட்டுமே சேவை செய்யவும், அவரையே உறுதியாகப் பிடித்துக்கொள்ளவும் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது!’—உபா. 10:20.