உங்களுடைய கண்கள் யெகோவாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறதா?
“பரலோக சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவரே, என் கண்கள் உங்களை ஏறெடுத்துப் பார்க்கின்றன.”—சங். 123:1.
1, 2. யெகோவாவைப் பார்த்துக்கொண்டிருப்பது என்றால் என்ன?
“சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்! (2 தீ. 3:1) இந்த மோசமான உலகத்தை அழித்துவிட்டு, உண்மையான சமாதானத்தை யெகோவா கொண்டுவருவதற்குள், உலக நிலைமைகள் இன்னும் மோசமாகிக்கொண்டேதான் போகும்! அதனால், ‘உதவிக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் என்னுடைய கண்கள் யாரைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன?’ என்று நம்மையே கேட்டுக்கொள்வது முக்கியம். இந்தக் கேள்விக்கு, “யெகோவாவைத்தான்!” என்று நாம் உடனடியாகப் பதில் சொல்லலாம். அந்தப் பதில்தான் சரியானது என்பதில் சந்தேகமே இல்லை.
2 ஆனால், யெகோவாவைப் பார்த்துக்கொண்டிருப்பது என்றால் என்ன? கஷ்டங்களை அனுபவிக்கும்போது, நம் கண்கள் தொடர்ந்து யெகோவாவைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் எப்படிக் காட்டலாம்? உதவி தேவைப்படும் சமயத்தில் யெகோவாவை நம்பியிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை, ரொம்பக் காலத்துக்கு முன்பே சங்கீதக்காரர் சொன்னார். (சங்கீதம் 123:1-4-ஐ வாசியுங்கள்.) யெகோவாவைப் பார்க்கும்போது, நாம் யாரைப் போல் இருப்பதாக அவர் சொல்கிறார்? எஜமானைப் பார்க்கும் வேலைக்காரர்களைப் போல் இருப்பதாகச் சொல்கிறார்! எப்படி? உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும், வேலைக்காரர்கள் தங்களுடைய எஜமானைத்தான் நம்பியிருப்பார்கள். ஆனால், இன்னொரு விஷயத்துக்காகவும் அவர்கள் எஜமானைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அதாவது, தங்களிடமிருந்து எஜமான் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, தொடர்ந்து அவர்கள் எஜமானைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்; எஜமான் சொன்னதைச் செய்ய வேண்டும். அதேபோல், யெகோவா நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்று தெரிந்துகொள்வதற்காக, தினமும் நாம் பைபிளை கவனமாகப் படிக்க வேண்டும்; பிறகு, அதன்படி செய்ய வேண்டும். அப்போது, உதவி தேவைப்படும்போது யெகோவா நமக்குக் கைகொடுப்பார் என்பதில் நாம் உறுதியாக இருக்க முடியும்.—எபே. 5:17.
3. நாம் தொடர்ந்து யெகோவாவைப் பார்த்துக்கொண்டிருக்காதபடி எது நம் கவனத்தை திசைதிருப்பலாம்?
3 எப்போதுமே நாம் யெகோவாவைத்தான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும், சிலசமயங்களில் நம் கவனம் திசைதிரும்பிவிடலாம். இயேசுவின் நெருங்கிய தோழியான மார்த்தாளுக்கு இதுதான் நடந்தது! ‘நிறைய வேலைகளை மும்முரமாகச் செய்துகொண்டிருந்ததன்’ மூலம், அவளுடைய கவனம் திசைதிரும்பியது. (லூக். 10:40-42) விசுவாசமுள்ள பெண்ணாகிய மார்த்தாளுடைய கவனமே திசைதிரும்பியிருக்கிறது என்றால், நம்முடைய கவனமும் திசைதிரும்புவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன, இல்லையா? அப்படியென்றால், யெகோவாமீது நம் கண்களைப் பதிய வைப்பதிலிருந்து எது நம்மைத் திசைதிருப்பலாம்? இந்தக் கட்டுரையில், மற்றவர்கள் செய்வதைப் பார்த்து நம் கவனம் திசைதிரும்புவதற்கு எப்படி வாய்ப்பிருக்கிறது என்று பார்ப்போம். அதோடு, தொடர்ந்து யெகோவாவையே பார்த்துக்கொண்டிருப்பது எப்படி என்றும் சிந்திப்போம்.
விசுவாசமுள்ள ஒரு மனிதர் தன் பாக்கியத்தை இழக்கிறார்
4. வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் நுழையும் வாய்ப்பை மோசே இழந்தது நமக்கு ஏன் ஆச்சரியத்தைத் தரலாம்?
4 மோசே, வழிநடத்துதலுக்காக யெகோவாவையே பார்த்துக்கொண்டிருந்தார் என்பதில் சந்தேகமே இல்லை. “பார்க்க முடியாதவரைப் பார்ப்பதுபோல் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாக இருந்தார்” என்று அவரைப் பற்றி பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:24-27-ஐ வாசியுங்கள்.) அதோடு, “யெகோவா மிக நன்றாக தெரிந்து வைத்திருந்த மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலில் இருந்ததே இல்லை” என்றும் பைபிள் சொல்கிறது. (உபா. 34:10) யெகோவாவின் நெருங்கிய நண்பராக இருந்தபோதிலும், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் காலடியெடுத்து வைக்கும் பாக்கியத்தை மோசே இழந்தார். (எண். 20:12) ஏன்?
5-7. இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட கொஞ்ச நாட்களுக்குள் என்ன நடந்தது, அப்போது மோசே என்ன செய்தார்?
5 எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் விடுதலையாகி இரண்டு மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை, அவர்கள் இன்னும் சீனாய் மலைக்குப் போய்ச் சேரக்கூடவில்லை. அந்தச் சமயத்தில், தண்ணீர் இல்லையென்று சொல்லி இஸ்ரவேலர்கள் குறைசொல்ல ஆரம்பித்தார்கள்; மோசேக்கு எதிராக முணுமுணுத்தார்கள். அப்போது, மோசேக்கு பயங்கரக் கோபம் வந்தது. அவர் யெகோவாவிடம், “‘இந்த ஜனங்களை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்? கொஞ்ச நேரத்தில் என்னைக் கல்லெறிந்து கொன்றுவிடுவார்கள் போலிருக்கிறதே!’ என்று அலறினார்.” (யாத். 17:4) அப்போது, யெகோவா தெளிவான அறிவுரைகளை மோசேக்கு கொடுத்தார். கோலை எடுத்து ஓரேபிலிருந்த கற்பாறையை அடிக்கச் சொன்னார். மோசே என்ன செய்தார்? “இஸ்ரவேலின் பெரியோர்களுக்கு முன்பாக மோசே அப்படியே செய்தார்” என்று பைபிள் சொல்கிறது. அவர் அடித்ததும் தண்ணீர் பாய்ந்துவந்தது, குடிப்பதற்குத் தாராளமாகத் தண்ணீர் கிடைத்தது; அந்தப் பிரச்சினையும் தீர்ந்தது.—யாத். 17:5, 6.
6 அந்த இடத்துக்கு மாசா என்று மோசே பெயர் வைத்தார்; அதற்கு, “சோதித்துப் பார்த்தல்” என்று அர்த்தம். மேரிபா என்றும் அதற்குப் பெயர் வைத்தார்; அதற்கு, “தகராறு செய்தல்” என்று அர்த்தம். ஏன் அப்படி பெயர் வைத்தார்? ஏனென்றால், ‘இஸ்ரவேலர்கள் தகராறு செய்தார்கள். “யெகோவா நம்மோடு இருக்கிறாரா இல்லையா?” என்று சொல்லி யெகோவாவைச் சோதித்துப் பார்த்தார்கள்.’—யாத். 17:7.
7 மேரிபாவில் நடந்ததைப் பற்றி யெகோவா எப்படி உணர்ந்தார்? இஸ்ரவேலர்கள் மோசேக்கு எதிராக மட்டுமல்ல, தனக்கும் தன்னுடைய அதிகாரத்துக்கு எதிராகவும் தகராறு செய்ததாக அவர் உணர்ந்தார். (சங்கீதம் 95:8, 9-ஐ வாசியுங்கள்.) இஸ்ரவேலர்கள் செய்தது மிகப் பெரிய தவறு! ஆனால், மோசே சரியானதைச் செய்தார். அதாவது, வழிநடத்துதலுக்காக அவர் யெகோவாவை நம்பியிருந்தார்; அவருடைய அறிவுரைகளைக் கவனமாகப் பின்பற்றினார்.
8. வனாந்தரத்தின் வழியாக இஸ்ரவேலர்கள் செய்த பயணம் முடிவுக்கு வரவிருந்த சமயத்தில் என்ன நடந்தது?
8 இதேபோன்ற சம்பவம் 40 வருஷங்களுக்குப் பிறகு மறுபடியும் நடந்தது. வனாந்தரத்தின் வழியாக இஸ்ரவேலர்கள் செய்த பயணம் முடிவுக்கு வரவிருந்த சமயம் அது! வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தின் எல்லையோரத்தில் இருந்த காதேசுக்குப் பக்கத்தில் அவர்கள் போய்ச் சேர்ந்திருந்தார்கள். இந்த இடமும் பிற்பாடு மேரிபா என்று அழைக்கப்பட்டது.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஏன்? ஏனென்றால், தண்ணீர் இல்லையென்று சொல்லி மறுபடியும் இஸ்ரவேலர்கள் குறைசொல்ல ஆரம்பித்தார்கள். (எண். 20:1-5) ஆனால், இப்போது மோசே என்ன செய்தார்? மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டார்!
9. என்ன அறிவுரையை யெகோவா மோசேக்குக் கொடுத்தார், ஆனால் மோசே என்ன செய்தார்? (ஆரம்பப் படம்)
9 மக்கள் கலகம் செய்தபோது மோசே என்ன செய்தார்? வழிநடத்துதலுக்காக மறுபடியும் அவர் யெகோவாவிடம்தான் போனார். இந்தத் தடவை கற்பாறையை அடிக்கும்படி யெகோவா சொல்லவில்லை. கோலை எடுத்துக்கொள்ளும்படியும், மக்களை கற்பாறைக்குப் பக்கத்தில் ஒன்றுகூட்டும்படியும், பிறகு கற்பாறையைப் பார்த்துப் பேசும்படியும் சொன்னார். (எண். 20:6-8) யெகோவா சொன்னபடி மோசே செய்தாரா? இல்லை! அவர் பயங்கர எரிச்சலாக இருந்ததால் மக்களைப் பார்த்து, “அடங்காதவர்களே! இந்தக் கற்பாறையிலிருந்து நாங்கள் உங்களுக்குத் தண்ணீர் தர வேண்டுமா?” என்று கத்தினார். பிறகு, ஒரு தடவை அல்ல, இரண்டு தடவை கற்பாறையை அடித்தார்.—எண். 20:10, 11.
10. மோசே நடந்துகொண்டதைப் பார்த்து யெகோவா என்ன செய்தார்?
10 யெகோவாவுக்கு மோசேமீது பயங்கரக் கோபம் வந்தது. (உபா. 1:37; 3:26) யெகோவா கோபப்பட்டதற்கு என்ன காரணம்? அவர் கொடுத்த புதிய வழிநடத்துதலுக்கு மோசே கீழ்ப்படியாதது, ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
11. யெகோவா செய்த அற்புதத்தால் தண்ணீர் வரவில்லை என்று இஸ்ரவேலர்கள் நினைப்பதற்கு, மோசே எப்படிக் காரணமானார்?
11 யெகோவா கோபப்பட்டதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். முதல் சம்பவம் நடந்த மேரிபாவில் இருந்தவை, திடமான க்ரானைட் பாறைகள்! அதனால், எவ்வளவு பலமாக அடித்தாலும், அந்தப் பாறைகளிலிருந்து தண்ணீர் வருமென்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால், இரண்டாவது சம்பவம் நடந்த மேரிபாவில் இருந்தவையோ, பெரும்பாலும் சுண்ணாம்புக்கல் பாறைகள்! சுண்ணாம்புக்கற்களுக்கு மிருதுவான தன்மை இருப்பதால், அவை தண்ணீரை உறிஞ்சி, பூமிக்கடியில் சேகரித்து வைத்துக்கொள்ளும். அதனால், அவற்றில் துவாரங்களைப் போட்டு தண்ணீரை எடுக்க முடியும். இப்போது மோசேயின் விஷயத்துக்கு வரலாம். கற்பாறையைப் பார்த்துப் பேசுவதற்குப் பதிலாக, அவர் அதை அடித்ததால், யெகோவா செய்த அற்புதத்தால் தண்ணீர் வரவில்லையென்றும், இயல்பாகத்தான் வந்ததென்றும் இஸ்ரவேலர்கள் நினைப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்குமா?b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) நமக்கு உறுதியாகத் தெரியாது.
மோசே எப்படிக் கலகம் செய்தார்?
12. மோசேமீதும் ஆரோன்மீதும் யெகோவா கோபப்பட்டதற்கு இன்னொரு காரணம் என்னவாக இருக்கலாம்?
12 மோசேமீதும் ஆரோன்மீதும் யெகோவா அந்தளவு கோபப்பட்டதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். மோசே மக்களிடம், “இந்தக் கற்பாறையிலிருந்து நாங்கள் உங்களுக்குத் தண்ணீர் தர வேண்டுமா?” என்று கேட்டார். “நாங்கள்” என்று மோசே சொன்னபோது, அவரையும் ஆரோனையும் சேர்த்துச் சொன்னதாகத் தெரிகிறது. அப்படிச் சொன்னதன் மூலம் யெகோவாவுக்கு அவர் மரியாதை காட்டவில்லை. ஏனென்றால், அந்த அற்புதத்துக்கான எல்லா புகழையும் அவர் யெகோவாவுக்குக் கொடுக்கவில்லை. சங்கீதம் 106:32, 33 இப்படிச் சொல்கிறது: “மேரிபாவின் தண்ணீருக்குப் பக்கத்தில் அவர்கள் கடவுளைக் கோபப்படுத்தினார்கள். அவர்களால் மோசேக்குப் பயங்கர பிரச்சினை வந்தது. அந்த மக்கள் அவருக்கு எரிச்சலூட்டினார்கள். அதனால், அவர் ஆத்திரப்பட்டுப் பேசிவிட்டார்.”c (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (எண். 27:14) யெகோவாவுக்குத் தரவேண்டிய மகிமையை மோசே தரவில்லை. மோசேயிடமும் ஆரோனிடமும், “நீங்கள் இரண்டு பேரும் என் கட்டளையை மீறிவிட்டீர்கள்,” அதாவது, கலகம் செய்துவிட்டீர்கள் என்று யெகோவா சொன்னார். (எண். 20:24) அது மிகப் பெரிய தவறு!
13. மோசேக்கு யெகோவா கொடுத்த தண்டனை நியாயமானது என்று ஏன் சொல்லலாம்?
13 தன்னுடைய மக்களை மோசேயும் ஆரோனும் முன்நின்று வழிநடத்தியதால், யெகோவா அவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்த்தார். (லூக். 12:48) முன்பு ஒருமுறை, இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்தபோது, அந்தச் சந்ததி முழுவதையும் வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் அவர் அனுமதிக்கவில்லை. (எண். 14:26-30, 34) அப்படியென்றால், கலகம் செய்த மோசேயையும் தண்டிப்பது நியாயமானது, இல்லையா? மற்ற கலகக்காரர்களைப் போலவே, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் நுழைய மோசேயும் அனுமதிக்கப்படவில்லை.
பிரச்சினைக்கான மூலகாரணம்
14, 15. யெகோவாவுக்கு எதிராக மோசே கலகம் செய்ததற்கு என்ன காரணம்?
14 யெகோவாவுக்கு எதிராக மோசே கலகம் செய்ததற்கான காரணத்தை சங்கீதம் 106:32, 33-ல் மறுபடியும் வாசித்துப் பார்க்கலாம். “மேரிபாவின் தண்ணீருக்குப் பக்கத்தில் அவர்கள் கடவுளைக் கோபப்படுத்தினார்கள். அவர்களால் மோசேக்குப் பயங்கர பிரச்சினை வந்தது. அந்த மக்கள் அவருக்கு எரிச்சலூட்டினார்கள். அதனால், அவர் ஆத்திரப்பட்டுப் பேசிவிட்டார்” என்று அது சொல்கிறது. இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு எதிராகத்தான் கலகம் செய்தார்கள்; ஆனால், எரிச்சலடைந்ததோ மோசே! அவர் சுயக்கட்டுப்பாட்டை இழந்து, பின் விளைவுகளை யோசிக்காமல் பேசிவிட்டார்.
15 மற்றவர்கள் செய்த தவறு தன்னுடைய கவனத்தைச் சிதறடிக்கும்படி விட்டுவிட்டதால், யெகோவாமீது கண்களைப் பதிய வைக்க மோசே தவறிவிட்டார். தண்ணீர் இல்லையென்று சொல்லி முதல் தடவை மக்கள் குறைசொன்னபோது, மோசே சரியானதைச் செய்தார். (யாத். 7:6) ஆனால், பல வருஷங்களாக அவர்கள் கலகம் செய்ததைப் பார்த்துப் பார்த்து அலுத்துப்போனதால் அவர் எரிச்சலடைந்திருக்கலாம். அதனால், இப்போது, யெகோவாவை எப்படி மகிமைப்படுத்தலாம் என்று யோசிப்பதற்குப் பதிலாக, தன்னுடைய உணர்வுகளைப் பற்றியே அவர் யோசித்திருக்கலாம்.
16. மோசே செய்ததைப் பற்றி நாம் ஏன் யோசித்துப்பார்க்க வேண்டும்?
16 விசுவாசமுள்ள அந்தத் தீர்க்கதரிசியே தன்னுடைய கவனத்தைச் சிதறவிட்டு பாவம் செய்திருக்கிறார் என்றால், நாமும் அப்படிச் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் நுழையும் சமயத்தில் மோசே இருந்தார்; புதிய உலகத்துக்குள் நுழையும் சமயத்தில் நாம் இருக்கிறோம்! (2 பே. 3:13) புதிய உலகத்துக்குள் காலடியெடுத்து வைக்கும் அந்த அருமையான பாக்கியத்தை இழக்க நாம் நிச்சயம் விரும்பமாட்டோம். ஆனால், அந்தப் பாக்கியம் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், நம்முடைய கண்கள் தொடர்ந்து யெகோவாவையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்; அவருக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும். (1 யோ. 2:17) அப்படியென்றால், மோசே செய்த தவறிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
மற்றவர்களால் உங்கள் கவனம் சிதறிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்
17. நமக்கு எரிச்சல் வரும்போது, சுயக்கட்டுப்பாட்டை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
17 மற்றவர்கள் உங்களை எரிச்சல்படுத்தும்போது, சுயக்கட்டுப்பாட்டை இழந்துவிடாதீர்கள். சிலசமயங்களில், ஒரே பிரச்சினை நம்மைத் திரும்பத் திரும்பத் தாக்கலாம். அப்போது, பைபிள் சொல்வதை நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். “நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருக்க வேண்டும். நாம் சோர்ந்துபோகாமல் இருந்தால் ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்” என்று அது சொல்கிறது. (கலா. 6:9; 2 தெ. 3:13) யாராவது ஒருவர் அல்லது ஏதோவொன்று நம்மைத் திரும்பத் திரும்ப எரிச்சல்படுத்திக்கொண்டே இருந்தால், நாம் என்ன செய்வோம்? பேசுவதற்கு முன்பு யோசிப்போமா? நம்முடைய கோபத்தைக் கட்டுப்படுத்துவோமா? (நீதி. 10:19; 17:27; மத். 5:22) மற்றவர்கள் நம் கோபத்தைக் கிளறும்போது, ‘அதைக் கடவுளுடைய கடும் கோபத்துக்கு விட்டுவிட’ கற்றுக்கொள்ள வேண்டும். (ரோமர் 12:17-21-ஐ வாசியுங்கள்.) அதாவது, பிரச்சினைகள் வரும்போது நாம் கோபப்படக் கூடாது. தேவைப்பட்டால் யெகோவா தலையிடுவார் என்று பொறுமையாக இருக்க வேண்டும். யெகோவாமீது கண்களைப் பதிய வைக்காமல் பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டால், நாம் யெகோவாவை அவமதித்து விடுவோம்.
18. வழிநடத்துதல்களைப் பின்பற்றும் விஷயத்தில், நாம் எதை ஞாபகம் வைக்க வேண்டும்?
18 சமீபத்திய வழிநடத்துதல்களைக் கவனமாகப் பின்பற்றுங்கள். யெகோவா கொடுத்திருக்கும் சமீப வழிநடத்துதல்களைப் பின்பற்றுவதில் நாம் உண்மைத்தன்மையோடு நடந்துகொள்கிறோமா? ‘இத்தன வருஷமா இந்த விஷயத்த இப்படித்தானே செஞ்சிட்டிருக்கேன்’ என்று நாம் நினைத்துக்கொண்டு எப்போதும் செய்வதைப் போலவே செய்யக் கூடாது. அதற்குப் பதிலாக, தன்னுடைய அமைப்பின் மூலம் யெகோவா கொடுக்கிற புதிய வழிநடத்துதல்கள் எல்லாவற்றுக்கும் உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும். (எபி. 13:17) அதேசமயத்தில், ‘எழுதப்பட்ட விஷயங்களுக்கு மிஞ்சிப் போகாதபடி’ கவனமாகவும் இருக்க வேண்டும். (1 கொ. 4:6) யெகோவாவின் வழிநடத்துதல்களைக் கவனமாகப் பின்பற்றும்போது, நம் கண்கள் யெகோவாவைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன என்று அர்த்தம்.
19. மற்றவர்கள் செய்கிற தவறுகள் யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பைக் கெடுத்துவிடாதபடி நாம் எப்படி பார்த்துக்கொள்ளலாம்?
19 மற்றவர்கள் செய்யும் தவறுகள் யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் நட்பைக் கெடுத்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். நம்முடைய கண்களைத் தொடர்ந்து யெகோவாமீது பதிய வைக்கும்போது, அவரோடு நமக்கு இருக்கிற நட்புக்கு எந்தப் பங்கமும் வராதபடி நாம் பார்த்துக்கொள்வோம். அதோடு, மற்றவர்களுடைய செயல்களைப் பார்த்து கோபப்பட மாட்டோம். மோசேயைப் போல, இன்று கடவுளுடைய அமைப்பில் பொறுப்புகளைக் கையாளுபவர்களுடைய விஷயத்தில் இது ரொம்பவே முக்கியம். நமக்கு மீட்பு கிடைக்க வேண்டுமென்றால், நாம் எல்லாருமே யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. (பிலி. 2:12) இருந்தாலும், நம்மிடம் அதிகமான பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தால், யெகோவா நம்மிடம் அதிகமாகக் கேட்பார். (லூக். 12:48) நாம் உண்மையிலேயே யெகோவாவை நேசித்தால், அவருடைய அன்பிலிருந்து எதுவுமே நம்மைப் பிரிக்க முடியாது; எதுவுமே நம்மை இடறலடையச் செய்யாது.—சங். 119:165; ரோ. 8:37-39.
20. நாம் என்ன செய்யத் தீர்மானமாக இருக்க வேண்டும்?
20 கஷ்டமான, சவாலான ஒரு காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். அதனால், ‘பரலோக சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்’ யெகோவா நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்காக, தொடர்ந்து நம் கண்களை அவர்மீது பதிய வைப்பது ரொம்பவே முக்கியம். மற்றவர்களுடைய செயல்கள், யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பைக் கெடுத்துவிடாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த முக்கியமான பாடத்தைத்தான் மோசேயின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம். மற்றவர்களுடைய தவறுகளைப் பார்த்து அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுவதற்குப் பதிலாக, ‘யெகோவா கருணை காட்டும்வரை நம்முடைய கண்கள் அவரையே எதிர்பார்த்துக் காத்திருக்க’ வேண்டும் என்பதில் நாம் தீர்மானமாக இருக்கலாம்.—சங். 123:1, 2.
a இந்த மேரிபா, ரெவிதீமுக்குப் பக்கத்தில் இருந்த மேரிபா அல்ல. (அந்த மேரிபா, மாசா என்றும் அழைக்கப்பட்டது.) இஸ்ரவேலர்கள் தகராறு செய்ததால் அல்லது குறைசொன்னதால், இந்த இரண்டு இடங்களுமே மேரிபா என்று அழைக்கப்பட்டன. இதைப் பற்றித் தெரிந்துகொள்ள, பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பில், இணைப்பு B3-ல் இருக்கும் வரைபடத்தைப் பாருங்கள்.
b பைபிள் அறிஞரான ஜான் எ. பெக் இந்தப் பதிவைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “‘மோசேக்கு அந்தப் பாறையின் தன்மை தெரியும்! தனக்கு அற்புதம் செய்யும் சக்தி இருக்கிறது என்பதை மோசே நிரூபிக்க நினைத்தால், இன்னொரு பாறையிலும் அதேபோல் அடித்து தண்ணீரை வரவழைக்கட்டும்’ என்று சொல்லி அந்தக் கலகக்கார ஜனங்கள் மோசேயை விமர்சித்ததாக யூதப் பாரம்பரியம் சொல்கிறது.” ஆனால், பாரம்பரியமாக வந்த ஒரு தகவல்தான் இது.
c அக்டோபர் 15, 1987 காவற்கோபுரத்தில் (ஆங்கிலம்) வெளிவந்த “வாசகர் கேட்கும் கேள்விகள்” பகுதியைப் பாருங்கள்.