வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
பிப்ரவரி 3-9
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 12-14
“நன்மையளிக்கும் ஓர் ஒப்பந்தம்”
it-1-E பக். 522 பாரா 4
ஒப்பந்தம்
ஆபிரகாமோடு செய்யப்பட்ட ஒப்பந்தம். கானானுக்குப் போகும் வழியில் யூப்ரடிஸ் ஆற்றை ஆபிராம் (ஆபிரகாம்) கடந்தபோது, இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததாகத் தெரிகிறது. அதிலிருந்து 430 வருஷங்கள் கழித்து திருச்சட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. (கலா 3:17) மெசொப்பொத்தாமியாவிலுள்ள ஊர் என்ற கல்தேயர்களின் நகரத்தில் ஆபிரகாம் இருந்தபோது யெகோவா அவரிடம் பேசியிருந்தார்; தான் காட்டப்போகிற தேசத்துக்குப் போகும்படி அவரிடம் சொல்லியிருந்தார். (அப் 7:2, 3; ஆதி 11:31; 12:1-3) ஆபிரகாம் மற்றும் அவருடைய வம்சத்தார் கானானிலும் எகிப்திலும் வாழ்ந்த காலப்பகுதி, 430 வருஷங்கள். “அந்த 430 வருஷங்கள் முடிந்த நாளில்தான்” அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வெளியேறியதாக யாத்திராகமம் 12:40, 41 சொல்கிறது. எகிப்திலிருந்து அவர்கள் விடுதலையான அந்த நாள் கி.மு. 1513, நிசான் 14 (பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்ட தேதி). (யாத் 12:2, 6, 7) அப்படியென்றால், ஆபிரகாம் கானானுக்குப் போகும் வழியில் யூப்ரடிஸ் ஆற்றைக் கடந்தது கி.மு. 1943, நிசான் 14-ஆம் தேதியாக இருந்திருக்க வேண்டும். அந்தத் தேதியில்தான், ஆபிரகாமோடு செய்யப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். கானான் தேசத்திலிருந்த சீகேம் நகரத்துக்கு ஆபிரகாம் போய் சேர்ந்த பிறகு அவருக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியைப் பற்றி கடவுள் கூடுதலான விவரங்களைக் கொடுத்தார்; “உன்னுடைய சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்” என்று அவர் சொன்னார். இதன் மூலம், ஏதேனில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கும் இந்த ஒப்பந்தத்துக்கும் சம்பந்தம் இருப்பதைக் காட்டினார்; அதோடு அந்த “சந்ததி,” ஒரு மனிதனாக, மனித வம்சாவளியில் வருவார் என்பதையும் வெளிப்படுத்தினார். (ஆதி 12:4-7) அதற்குப் பிறகு, ஆதியாகமம் 13:14-17; 15:18; 17:2-8, 19; 22:15-18 ஆகிய வசனங்களில் நாம் பார்க்கிறபடி, யெகோவா இந்த ஒப்பந்தத்தைப் பற்றி இன்னும் சில விவரங்களையும் கொடுத்தார்.
w89-E 7/1 பக். 3 பாரா 4
ஆபிரகாமைப் பற்றிய உண்மைகளை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்
அது வியக்கவைக்கும் ஒரு வாக்குறுதி; குறைந்தது இன்னும் இரண்டு சந்தர்ப்பங்களிலாவது ஆபிரகாமிடம் இந்த வாக்குறுதி சொல்லப்பட்டது. (ஆதியாகமம் 18:18; 22:18) இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, அழிந்துபோன வெவ்வேறு இனத்திலிருந்துகூட இறந்தவர்களை கடவுள் உயிரோடு கொண்டுவருவார். அவர்களுக்குக் கிடைக்கப்போகும் வாழ்க்கை நிச்சயம் ஓர் ஆசீர்வாதமாக இருக்கும்; ஏனென்றால், அவர்களில் நிறைய பேர் மறுபடியும் உயிரோடு வரும்போது இந்த முழு பூமியும், ஆரம்பத்தில் மனிதர்கள் இழந்தது போன்ற பூஞ்சோலையாக மாறியிருக்கும். அதற்குப் பிறகு, முடிவில்லாத வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.—ஆதியாகமம் 2:8, 9, 15-17; 3:17-23.
it-2-E பக். 213 பாரா 3
சட்டம்
நிலத்தை ஒருவர் விற்கும்போது, அதை வாங்க போகிறவருக்கு அந்த நிலத்தின் எல்லைகளை (ஒரு உயரமான இடத்திலிருந்து அல்லது நிலத்தை முழுமையாகப் பார்க்க முடிந்த இடத்திலிருந்து) காட்டுவார் என்று சில அறிஞர்கள் நம்புகிறார்கள். கிடைத்திருக்கும் சரித்திரப்பூர்வ ஆதாரங்களை வைத்து அவர்கள் அப்படி நம்புகிறார்கள். “நான் பார்க்கிறேன்” என்று வாங்குபவர் சொல்லிவிட்டால், சட்டப்பூர்வமாக அந்த நிலத்தை அவர் வாங்கிவிட்டார் என்று அர்த்தம். ஆபிரகாமுக்கு கானான் தேசத்தைத் தருவதாக வாக்குக் கொடுப்பதற்கு முன்பு, அந்தத் தேசத்தை நான்கு திசைகளிலும் பார்க்கும்படி யெகோவா அவரிடம் சொன்னார். அந்தச் சமயத்தில், “நான் பார்க்கிறேன்” என்று ஆபிரகாம் சொல்லவில்லை; அந்தத் தேசத்தைப் பிற்பாடு அவருடைய சந்ததி பெற்றுக்கொள்ளும் என்று கடவுள் சொன்னதால் அவர் அப்படிச் சொல்லாமல் இருந்திருக்கலாம். (ஆதி 13:14, 15) இஸ்ரவேலர்களுக்குச் சட்ட ரீதியான பிரதிநிதியாக இருந்த மோசேயும், தேசத்தை “பார்க்கும்படி” சொல்லப்பட்டார்; நிலம் வாங்குவது விற்பது சம்பந்தமாக இப்போது நாம் பார்த்த கருத்து சரியாக இருந்தால், மோசே அந்தத் தேசத்தை “பார்த்தபோது” அது சட்டப்பூர்வமாக இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமாகிவிட்டது என்றும், யோசுவாவின் தலைமையில் அதை அவர்களால் சொந்தமாக்கிக்கொள்ள முடியும் என்றும் அர்த்தம். (உபா 3:27, 28; 34:4; மத் 4:8-ல் இயேசுவுக்குச் சாத்தான் ராஜ்யங்களைக் கொடுப்பதாகச் சொன்ன பதிவையும் பாருங்கள்.) நிலத்தை வாங்குவதைச் சட்டப்பூர்வமாக ஆக்கும் இன்னொரு செயல், ஒரு நிலத்தைச் சொந்தமாக்கும் நோக்கத்தோடு அந்த நிலத்தைச் சுற்றிப் பார்ப்பது அல்லது அந்த நிலத்துக்குள் நுழைவதாகும். (ஆதி 13:17; 28:13) ஒவ்வொரு நிலத்தை விற்கும்போதும், அந்த நிலத்தில் எத்தனை மரங்கள் இருக்கின்றன என்ற தகவல் அந்த நிலத்துக்கான பத்திரத்தில் இருந்தது; அப்படிப்பட்ட சில பழங்காலத்து நிலப் பத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.—ஆதி 23:17, 18-ஐ ஒப்பிடுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
பிரச்சினைகளை அன்பினால் சரிசெய்யுங்கள்
12 வாக்குவாதம் ஏற்படும்போது கடவுளுடைய மக்கள் எப்படி சமாதானமாக இருக்கலாம் என்பதற்கு ஒரு பைபிள் உதாரணத்தை கவனியுங்கள். ஆபிரகாமுக்கும் லோத்துவுக்கும் நிறைய ஆடு, மாடுகள் இருந்தது. அவற்றை மேய்ப்பதற்கு போதுமான இடம் இல்லாததால் அவர்களுடைய மேய்ப்பர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் நடந்தது. ஆனால் ஆபிரகாம் லோத்துவோடு சமாதானமாக இருக்க விரும்பியதால் முதலில் ஒரு நல்ல இடத்தை எடுத்துக்கொள்ளும்படி அவரிடம் சொன்னார். (ஆதி. 13:1, 2, 5-9) ஆபிரகாம் நமக்கு ஒரு சிறந்த உதாரணம் இல்லையா? அவர் அப்படி தாராளமாக விட்டுக்கொடுத்ததால் எதையாவது இழந்துவிட்டாரா? இல்லவே இல்லை. இந்த சம்பவம் நடந்த உடனேயே யெகோவா ஆபிரகாமை பலமடங்கு ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்தார். (ஆதி. 13:14-17) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? மற்றவர்களோடு நமக்கு இருக்கும் பிரச்சினையை நாம் அன்போடு சரிசெய்ய வேண்டும். அதனால் நமக்கு ஏதாவது நஷ்டம் வந்தாலும் யெகோவா நம்மை பலமடங்கு ஆசீர்வதிப்பார்.
it-2-E பக். 683 பாரா 1
குரு
சாலேமின் ராஜாவான மெல்கிசேதேக் விசேஷமான ஒரு குருவாக (கோ-ஹென்’’) இருந்தார். அவருடைய வம்சவரலாறு, பிறப்பு, இறப்பு போன்ற எதைப் பற்றியும் பைபிள் சொல்வதில்லை. அவர் குருமார்களின் வம்சத்தில் வந்ததால் குருவாக ஆகவில்லை; அவரைப் போன்ற குரு அவருக்கு முன்போ பின்போ இருக்கவில்லை. மெல்கிசேதேக் ராஜாவாகவும், அதேசமயத்தில் குருவாகவும் இருந்தார். லேவியர்களின் குருத்துவ சேவையைவிட இவருடைய குருத்துவ சேவை மேலானதாக இருந்தது. ஏனென்றால், லேவியே ஒரு விதத்தில் பத்திலொரு பாகத்தை மெல்கிசேதேக்குக்குக் கொடுத்தார். எப்படிச் சொல்கிறோம்? ஆபிரகாம் பத்திலொரு பாகத்தை மெல்கிசேதேக்குக்குக் கொடுத்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்; ஆபிரகாமின் வழியாக லேவி வந்ததால், அதை ஒரு விதத்தில் லேவி கொடுத்தார் என்று சொல்லலாம். (ஆதி 14:18-20; எபி 7:4-10) இப்போது நாம் பார்த்த விஷயங்களில் மெல்கிசேதேக் இயேசுவுக்குப் படமாக இருந்தார்; அதனால்தான், பைபிள் அவரை ‘மெல்கிசேதேக்கைப் போலவே என்றென்றும் குருவாக இருப்பவர்’ என்று அழைக்கிறது.—எபி 7:17.
w12-E 1/1 பக். 8
கடவுள்பக்தியுள்ள பெண், தங்கமான மனைவி
சாராளின் கணவர் விசுவாசத்துக்கு தலைசிறந்த உதாரணமாக இருந்தார். அதற்காக சாராளை நாம் லேசாக எடுத்துக்கொள்ள முடியாது; அவளும் பின்பற்றுவதற்கு ஒரு சிறந்த உதாரணம். கடவுள்பக்தியுள்ள பெண்கள் பின்பற்றுவதற்கு ஒரு சிறந்த உதாரணமாக மூன்று தடவை அவளுடைய பெயரை பைபிள் குறிப்பிடுகிறது. (ஏசாயா 51:1, 2; எபிரெயர் 11:11; 1 பேதுரு 3:3-6) பைபிளில் சாராளைப் பற்றி அவ்வளவாக இல்லை என்றாலும், நம்மால் அவளைப் பற்றிய ஒரு அழகான படத்தை நம் மனக்கண்களில் வரைய முடியும்.
இதை யோசித்துப் பாருங்கள்: ஊர் நகரத்தைவிட்டுப் போகும்படி ஆபிரகாமிடம் கடவுள் சொன்னார். அதை சாராளிடம் ஆபிரகாம் சொன்னபோது அவள் எப்படி நடந்துகொண்டாள்? எங்கே போகப்போகிறோம், ஏன் போகிறோம், பொருள் தேவைக்கு என்ன செய்வோம் என்றெல்லாம் யோசித்தாளா? ‘நண்பர்களையும் குடும்பத்தாரையும்விட்டு எப்படிப் போவது, மறுபடியும் அவர்களை எப்போது பார்ப்போம், பார்ப்போமா’ என்றெல்லாம் நினைத்து வருத்தப்பட்டாளா? இப்படியெல்லாம் யோசித்திருப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால் அவர் கண்டிப்பாகத் தன்னை ஆசீர்வதிப்பார் என்று நம்பி அவள் கிளம்பிப் போனாள்.—அப்போஸ்தலர் 7:2, 3.
கடவுளுக்குக் கீழ்ப்படியும் பெண்ணாக மட்டுமல்ல, அருமையான மனைவியாகவும் சாராள் இருந்தாள். குடும்பத் தலைவராக ஆபிரகாமுக்கு இருந்த பொறுப்பைத் தட்டிப் பறிப்பதற்குப் பதிலாக, அவருக்கு ஆழ்ந்த மரியாதையை சாராள் காட்டினாள்; முழுமையான ஆதரவைக் கொடுத்தாள். இப்படிச் செய்வதன் மூலம், நல்ல குணங்களால் தன்னை அலங்கரித்துக்கொண்டாள்.—1 பேதுரு 3:1-6.
மனைவிகள் இந்தக் குணங்களைக் காட்டுவது இன்று பிரயோஜனமாக இருக்குமா? 30 வருஷங்களாக மணவாழ்வை மகிழ்ச்சியாக அனுபவித்துவரும் ஜில் என்ற பெண் இப்படிச் சொல்கிறார்: “என்னோட கணவர்கிட்ட தயங்காம வெளிபடையா என் கருத்த சொல்லணும்னு சாராள்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன். அதேசமயத்துல, தீர்மானம் எடுக்குற பொறுப்பு குடும்ப தலைவரா என் கணவருக்குதான் இருக்குங்கறதயும், அந்த தீர்மானம் வெற்றில போய் முடியறதுக்கு என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செய்றது என்னோடு பொறுப்புங்கறதயும் நான் புரிஞ்சுக்கிட்டேன்.”
அப்படியென்றால் சாராளிடமிருந்து முக்கியமாக நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? சாராள் ரொம்பவே அழகானவளாக இருந்தாலும், பெருமை தன் கண்ணை மறைக்க அவள் அனுமதிக்கவில்லை. (ஆதியாகமம் 12:10-13) அதற்குப் பதிலாக, மனத்தாழ்மையோடு வாழ்க்கையில் வந்த மேடு பள்ளங்களில் ஆபிரகாமுக்கு ஆதரவாக இருந்தாள். ஆபிரகாமும் சாராளும் விசுவாசமுள்ள, மனத்தாழ்மையுள்ள, அன்புள்ள தம்பதியாக இருந்தார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை; அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தந்தார்கள்.
பிப்ரவரி 10-16
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 15-17
“ஆபிராமுக்கும் சாராய்க்கும் யெகோவா பெயரை மாற்றினார்—ஏன்?”
it-1-E பக். 817
குறை, குறை கண்டுபிடிப்பது
ஆனால் மனிதர்களுடைய வழிகளும் சரி, அவர் செய்யும் விஷயங்களும் சரி, அப்படியே நேர்மாறானது; எல்லாவற்றிலும் குறை இருக்கிறது. குறையையும் பாவத்தையும் மனிதர்கள் ஆதாமிடமிருந்து சொத்தாகப் பெற்றிருக்கிறார்கள். (ரோ 5:12; சங் 51:5) ஆனால், எந்தக் குறையும் இல்லாதவரான யெகோவா, “நாம் எப்படி உருவாக்கப்பட்டோம் என்பதை . . . நன்றாக அறிந்திருக்கிறார். நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.” அதோடு, நம்மேல் இரக்கம் காட்டுகிறார். (சங் 103:13, 14) உண்மைத்தன்மைக்கும் கீழ்ப்படிதலுக்கும் உதாரணமாக இருந்த நோவாவை, யெகோவா “குற்றமற்றவராக” கருதினார். (ஆதி 6:9) அவர் ஆபிரகாமிடம், “நீ என்னுடைய வழியில் நடந்து, குற்றமற்றவனாக இரு” என்று சொன்னார். (ஆதி 17:1) இவர்கள் இருவரும் பாவ இயல்புள்ளவர்களாக இருந்து இறந்துபோயிருந்தாலும், ‘இதயத்தைப் பார்க்கிறவரான’ யெகோவா அவர்களைக் குற்றமற்றவர்களாகத்தான் கருதினார். (1சா 16:7; ஒப்பிடுங்கள்: 2ரா 20:3; 2நா 16:9.) “உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும்” என்று இஸ்ரவேலர்களுக்கும்கூட அவர் கட்டளை கொடுத்தார். (உபா 18:13; 2சா 22:24) குறையில்லாத, குற்றமற்ற தன் மகனை (எபி 7:26) மீட்புப் பலியாக யெகோவா கொடுத்தார்; யாரெல்லாம் விசுவாசத்தைக் காட்டுகிறார்களோ, அவருக்குக் கீழ்ப்படிகிறார்களோ அவர்களை, அந்தப் பலியின் அடிப்படையில், ‘நீதிமான்களாக,’ அல்லது குறையில்லாதவர்களாகக் கருதுகிறார்; அதேசமயத்தில் நீதியான, குறையில்லாத நீதிபதியாக தனக்கு இருக்கும் பொறுப்பை அவர் விட்டுக்கொடுப்பதில்லை.—ரோ 3:25, 26.
it-1-E பக். 31 பாரா 1
ஆபிரகாம்
காலங்கள் ஓடின. அவர்கள் இப்போது கானானுக்கு வந்து கிட்டத்தட்ட பத்து வருஷங்கள் ஆகிவிட்டன. சாராளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. அதனால், தன்னுடைய எகிப்திய வேலைக்காரியான ஆகாரின் மூலம் தனக்குக் குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்காக ஆபிரகாமுக்கு அவளை மனைவியாகக் கொடுத்தாள். ஆபிரகாம் அதற்கு ஒத்துக்கொண்டார். அதனால் கி.மு. 1932-ல், ஆபிரகாமின் 86-வது வயதில், இஸ்மவேல் பிறந்தான். (ஆதி 16:3, 15, 16) இன்னும் சில காலம் கழிந்தன. கி.மு. 1919-ல், ஆபிரகாமுக்கு 99 வயதாக இருந்தபோது, யெகோவாவுக்கும் அவருக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்கு அடையாளமாக ஆபிரகாமின் வீட்டிலிருக்கும் எல்லா ஆண்களும் விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று யெகோவா கட்டளை கொடுத்தார். அந்தச் சமயத்தில் யெகோவா ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று மாற்றினார்; அதற்கான காரணத்தைப் பற்றிச் சொல்லும்போது, “நான் உன்னை நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக ஆக்கப்போகிறேன்” என்று யெகோவா சொன்னார். (ஆதி 17:5, 9-27; ரோ 4:11) சில நாட்களுக்குப் பிறகு, மனித உருவத்தில் மூன்று தேவதூதர்கள் வந்தார்கள்; யெகோவாவின் பெயரில் ஆபிரகாம் அவர்களை உபசரித்தார்; அவர்கள் ஆபிரகாமிடம், அடுத்த வருஷத்துக்குள் சாராள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள் என்று வாக்குக் கொடுத்தார்கள்.—ஆதி 18:1-15.
w09-E 2/1 பக். 13
அர்த்தமுள்ள பெயர்கள்
தீர்க்கதரிசன காரணங்களுக்காக வளர்ந்து ஆளான சிலருடைய பெயரைக் கடவுளே மாற்றியிருக்கிறார். உதாரணத்துக்கு, ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று கடவுள் மாற்றினார். ஆபிராம் என்றால் “தகப்பன் உயர்ந்தவர்” என்று அர்த்தம்; ஆபிரகாம் என்றால் “திரளான ஜனங்களுக்குத் தகப்பன்” என்று அர்த்தம். மாற்றப்பட்ட பெயருக்கு ஏற்றபடியே ஆபிரகாம் நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக ஆனார். (ஆதியாகமம் 17:5, 6) ஆபிரகாமின் மனைவியான சாராயைப் பற்றி என்ன சொல்லலாம்? சாராய் என்ற பெயர் ஒருவேளை “சண்டைக்காரி” என்ற அர்த்தத்தைக் கொடுக்கலாம். ஆனால், அதை “சாராள்” என்று கடவுள் மாற்றினார். அதற்கு “இளவரசி” என்று அர்த்தம்; ராஜாக்களுக்கு மூதாதையாக இருக்கப்போவதால் கடவுள் அவளுக்கு இந்தப் பெயரை வைத்தார். இந்தப் பெயரை கடவுள் தனக்கு வைத்தபோது அவள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்!—ஆதியாகமம் 17:15, 16.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 460-461
காலவரிசை
“உன்னுடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருப்பார்கள்; அந்தத் தேசத்து ஜனங்கள் 400 வருஷங்களுக்கு அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள். இது நடக்கப்போவது உறுதி” என்று யெகோவா ஆபிராமிடம் (ஆபிரகாம்) சொன்னார். (ஆதி 15:13; அப் 7:6, 7-ஐயும் பாருங்கள்.) இந்தத் தீர்க்கதரிசனம், வாக்குக்கொடுக்கப்பட்ட வாரிசான (அல்லது, ‘சந்ததியான’) ஈசாக்கு பிறப்பதற்கு முன்பு சொல்லப்பட்டது. கி.மு. 1932-ல், ஆபிராமுக்கு எகிப்திய அடிமை பெண்ணாகிய ஆகாரின் மூலம் இஸ்மவேல் பிறந்தான். கி.மு. 1918-ல் ஈசாக்கு பிறந்தான். (ஆதி 16:16; 21:5) இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையான நாளிலிருந்து, அதாவது அவர்கள் ‘அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்பட்ட’ காலத்தின் முடிவிலிருந்து (ஆதி 15:14), 400 வருஷங்கள் பின் சென்றால் அது கி.மு. 1913-க்கு வந்து சேரும். அந்தச் சமயத்தில் ஈசாக்குக்குச் சுமார் ஐந்து வயது. ஈசாக்கு அப்போது தாய்ப்பால் மறந்திருந்ததாகத் தெரிகிறது. தீர்க்கதரிசனத்தின்படி, அவன் ஏற்கெனவே ‘அன்னியனாக’ வேறொரு தேசத்தில் குடியிருந்தான்; அப்போது, சுமார் 19 வயதை எட்டியிருந்த இஸ்மவேல், ஈசாக்கைக் ‘கேலி செய்துவந்தான்.’ ஆபிரகாமின் சந்ததி கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் அந்தச் சமயத்திலிருந்து நிறைவேற ஆரம்பித்தது. (ஆதி 21:8, 9) ஆபிரகாமின் வாரிசை இஸ்மவேல் கேலி செய்தது நமக்கு ஒருவேளை சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், பைபிள் காலங்களில், அப்படி இல்லை. ஆகாரையும் அவளுடைய மகன் இஸ்மவேலையும் துரத்தும்படி சாராள் சொன்னதிலிருந்தும், அதைக் கடவுள் அங்கீகரித்ததிலிருந்தும் இது நமக்குத் தெளிவாகிறது. (ஆதி 21:10-13) ஈசாக்கை இஸ்மவேல் கேலி செய்ததைப் பற்றி பைபிள் இவ்வளவு விவரமாகச் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, ‘அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படும்’ 400 வருஷ காலப்பகுதியின் ஆரம்பம் இதுதான் என்பது தெளிவாகிறது; இந்தக் காலப்பகுதி இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகும்போது முடிவடைந்தது.—கலா 4:29.
it-1-E பக். 778 பாரா 4
எகிப்திலிருந்து பயணம்
“நான்காவது தலைமுறைதான்.” ஆபிரகாமுடைய சந்ததியின் நான்காவது தலைமுறைதான் கானானுக்குத் திரும்பி வரும் என்று ஆபிரகாமிடம் யெகோவா சொன்னார். (ஆதி 15:16) ஆபிரகாமோடு செய்யப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த சமயத்திலிருந்து இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையான சமயம் வரை மொத்தம் 430 வருஷங்கள். அன்று வாழ்ந்தவர்கள் நீண்ட ஆயுள் உள்ளவர்களாக இருந்தாலும்கூட, இந்தக் காலப்பகுதியில் நான்குக்கும் அதிகமான தலைமுறைகள் இருப்பதை பைபிள் பதிவுகள் காட்டுகின்றன. இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இஸ்ரவேலர்கள் உண்மையில் எகிப்தில் இருந்த வருஷங்கள் மொத்தம் 215 மட்டுமே. அப்படியென்றால், “நான்காவது தலைமுறை” என்பதை எகிப்தில் அவர்கள் குடியேறிய சமயத்திலிருந்து கணக்கிட வேண்டும். லேவி கோத்திரத்தை உதாரணமாக வைத்து கணக்கிட்டுப் பார்த்தால், லேவியிலிருந்து நான்காவது தலைமுறை சரியாக மோசேயில் வந்து முடிகிறது. அதாவது: (1) லேவி, (2) கோகாத், (3) அம்ராம், (4) மோசே.—யாத் 6:16, 18, 20.
பிப்ரவரி 17-23
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 18-19
“‘முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்’ சோதோமையும் கொமோராவையும் அழிக்கிறார்”
“முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்” எப்போதும் நியாயமாக நடந்துகொள்வார்
“இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர் நியாயமாக நடக்காமல் இருப்பாரா?” (ஆதி. 18:25) உண்மையுள்ள மனிதனாகிய ஆபிரகாம் இந்தக் கேள்வியைச் சந்தேகத்தோடு கேட்டாரா? இல்லை! சோதோம், கொமோரா நகரங்களுக்கு யெகோவா நியாயமான தீர்ப்பு கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் அந்தக் கேள்வியைக் கேட்டார். யெகோவா ஒருபோதும் ‘பொல்லாதவர்களோடு சேர்த்து நீதிமான்களை அழிக்க மாட்டார்’ என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. யெகோவா அப்படிச் செய்வார் என்பதை ஆபிரகாமால் ‘நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.’ சுமார் 400 வருஷங்களுக்குப் பிறகு, யெகோவா தன்னைப் பற்றி இப்படிச் சொன்னார்: “அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை. அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை. அவர் நம்பகமான கடவுள், அநியாயமே செய்யாதவர். அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.”—உபா. 31:19; 32:4.
பொறுமை—நம்பிக்கையோடு சகித்திருப்பது
பொறுமையைக் காட்டுவதில் யெகோவாதான் மிகச் சிறந்த முன்மாதிரி! (2 பே. 3:15) யெகோவாவின் பொறுமையைப் பற்றி நாம் அடிக்கடி பைபிளில் படிக்கிறோம். (நெ. 9:30; ஏசா. 30:18) சோதோமை அழிப்பதென்று யெகோவா முடிவெடுத்தபோது, ஆபிரகாம் யெகோவாவிடம் அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டார். அப்போது யெகோவா என்ன செய்தாரென்று ஞாபகம் இருக்கிறதா? அவர் ஆபிரகாமைத் தடுக்கவில்லை! ஆபிரகாம் எழுப்பிய ஒவ்வொரு கேள்வியையும் பொறுமையோடு கேட்டார், ஆபிரகாமின் கவலைகளைப் புரிந்துகொண்டார். பிறகு, ஆபிரகாம் சொன்ன வார்த்தைகளையே திரும்பச் சொன்னதன் மூலம், அவர் பேசியபோது தான் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்ததை வெளிக்காட்டினார். சோதோம் நகரத்தில் 10 பேர் நீதிமான்களாக இருந்தால்கூட அதை அழிக்கப்போவதில்லை என்று அவருக்கு உறுதியளித்தார். (ஆதி. 18:22-33) யெகோவா எப்போதுமே பொறுமையைக் காட்டுகிறார்; அவர் ஒருபோதும் உணர்ச்சிவசப்படுவதில்லை!
யெகோவாவே நம் பேரரசராகிய எஜமானர்!
12 யெகோவா சீக்கிரத்தில் தம்முடைய பேரரசாட்சியே சரியானதென நிரூபிப்பார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். தீமை தொடர்கதையாவதை அவர் பொறுத்துக்கொள்ளவே மாட்டார். அதுமட்டுமல்ல, நாம் கடைசி காலத்தில் வாழ்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். நோவா காலத்தில், தீயவர்களைப் பெருவெள்ளத்தால் அவர் அழித்தார். சோதோம், கொமோரா பட்டணத்தாரையும், பார்வோனையும் அவனுடைய படைவீரர்களையும் அவர் அழித்தார். சிசெராவையும் அவனுடைய படைவீரர்களையும் சனகெரிப்பையும் அவனுடைய அசீரிய படைவீரர்களையும் உன்னதமான கடவுள் படுதோல்வி அடையச் செய்தார். (ஆதி. 7:1, 23; 19:24, 25; யாத். 14:30, 31; நியா. 4:15, 16; 2 இரா. 19:35, 36) தம்முடைய பெயரை இழிவுபடுத்துவதையும் தம்முடைய சாட்சிகளைத் துன்புறுத்துவதையும் என்றென்றைக்கும் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம். அதோடு, இயேசுவின் பிரசன்னத்திற்கும் இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவுக்குமான அடையாளத்தை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.—மத். 24:3.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w88-E 5/15 பக். 23 பாரா. 4-5
கடவுளை யாராவது பார்த்திருக்கிறார்களா?
கடவுளின் சார்பாக மனித உருவத்தில் வந்த தேவதூதரிடம், யெகோவாவிடமே பேசுவதுபோல் ஆபிரகாம் பேசியதற்குக் காரணம் என்னவென்று நம்மால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. அந்தத் தேவதூதர், கடவுளின் சார்பாக வந்தார், கடவுள் என்ன சொல்லவேண்டுமென்று நினைத்தாரோ அதை அப்படியே ஒன்றுவிடாமல் ஆபிரகாமிடம் சொன்னார்; அதனால்தான், “யெகோவா ஆபிரகாமுக்குமுன் தோன்றினார்” என்று பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 18:1.
நாம் பேசுவதை ஃபோன் அல்லது ரேடியோவால் எப்படி ஒன்றுவிடாமல் இன்னொருவருக்குக் கொண்டுசேர்க்க முடிகிறதோ, அப்படித்தான் கடவுளுடைய சார்பில் வரும் ஒரு தேவதூதரால் கடவுளின் செய்தியை அப்படியே சொல்ல முடியும். ஆபிரகாம், மோசே, மனோவா போன்றவர்களால், கடவுளின் சார்பில் வந்த தேவதூதரிடம் எப்படி கடவுளிடமே பேசுவதுபோல் பேசியிருக்க முடியும் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது, இல்லையா? தேவதூதர்களையும், அந்தத் தேவதூதர்கள் வெளிப்படுத்திய கடவுளுடைய மகிமையையும் இவர்கள் பார்த்தார்கள் என்பது உண்மைதான்; ஆனால், இவர்கள் கடவுளைப் பார்க்கவில்லை. அதனால்தான், “கடவுளை ஒருவரும் ஒருபோதும் பார்த்ததில்லை” என்று அப்போஸ்தலன் யோவான் சொல்வது முழுமையாக ஒத்துப்போகிறது. (யோவான் 1:18) அப்படியென்றால் என்ன முடிவுக்கு வரலாம்? ஆபிரகாம், மோசே, மனோவா போன்றவர்கள் பார்த்தது கடவுளின் சார்பாக வந்தத் தேவதூதர்களைத்தான், கடவுளை அல்ல.
வேதனையைச் சமாளிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள்
3 லோத்துவைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஒழுக்கக்கேட்டில் ரொம்பவே மூழ்கிக்கிடந்த சோதோம் மக்கள் மத்தியில் வாழ்வதென்று அவர் முடிவெடுத்தார். அது மோசமான முடிவாக இருந்தது! (2 பேதுரு 2:7, 8-ஐ வாசியுங்கள்.) சோதோம் செழிப்பான ஓர் ஊராக இருந்தபோதிலும், அங்கே குடிமாறிப் போனதால் லோத்து நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். (ஆதி. 13:8-13; 14:12) அந்த ஊரை அல்லது அந்த ஊரிலிருந்த சிலரை அவருடைய மனைவிக்கு ரொம்பப் பிடித்திருக்கலாம். அதனால், அவள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டாள். அந்த ஊரை நெருப்பாலும் கந்தகத்தாலும் யெகோவா அழித்தபோது, அவளும் அழிந்துபோனாள். லோத்துவின் மகள்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர்கள் யாருக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தார்களோ, அவர்களும் அந்த ஊரிலேயே செத்துப்போனார்கள். தன்னுடைய வீட்டையும் சொத்துப்பத்துகளையும் லோத்து இழந்தார். எல்லாவற்றையும்விட வேதனையான விஷயம் என்னவென்றால், தன்னுடைய மனைவியையே அவர் இழந்தார்! (ஆதி. 19:12-14, 17, 26) இந்த வேதனையான காலகட்டத்தில், லோத்துவிடம் யெகோவா பொறுமை காட்டாமல் இருந்துவிட்டாரா? இல்லை!
பிப்ரவரி 24–மார்ச் 1
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 20-21
“கொடுத்த வாக்கை யெகோவா எப்போதுமே காப்பாற்றுவார்”
wp17.5 பக். 14-15
கடவுள் இவளை “இளவரசி” என்று அழைத்தார்
சாராள் சிரித்ததால் அவளுக்கு விசுவாசம் இருக்கவில்லை என்று சொல்லிவிடலாமா? இல்லை! “விசுவாசத்தால்தான் சாராள்கூட, வயதானவளாக இருந்தாலும் கர்ப்பமானாள். ஏனென்றால், வாக்குறுதி கொடுத்தவர் உண்மையுள்ளவர் என்று அவள் நம்பினாள்” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:11) சாராளுக்கு யெகோவாவைப் பற்றி தெரியும்; கொடுத்த வாக்கை அவரால் நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்பதும் நன்றாகத் தெரியும். இப்படிப்பட்ட விசுவாசம் இருக்க வேண்டும் என்று தானே நாம் ஆசைப்படுவோம்! பைபிளின் கடவுளைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படித் தெரிந்துகொள்ளும்போது, சாராளுக்கு இருந்த விசுவாசம் சரியானது என்று நாம் புரிந்துகொள்வோம். யெகோவா உண்மையுள்ளவர், தன்னுடைய ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுபவர். சில சமயங்களில், நாம் ஆச்சரியப்படும் விதத்தில் கடவுள் அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார். நம்மால் நம்ப முடியாத விதத்திலும், ஏன், நமக்குச் சிரிப்பு வரும் விதத்திலும்கூட அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறும்.
“அவளுடைய பேச்சைக் கேள்”
ஒரு பெண்ணாக இத்தனை காலம் அந்தத் தருணத்திற்காகத்தான் சாராள் ஏங்கிக்கொண்டிருந்தாள். கடைசியில், தன்னுடைய 90-வது வயதில் அது நடந்தது. 100 வயதாக இருக்கும் தன் கணவனுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். கடவுள் சொன்னபடியே ஆபிரகாம் அந்தக் குழந்தைக்கு, ஈசாக்கு அல்லது “சிரிப்பு” என்று பெயர் வைத்தார். “கடவுள் என்னைச் சந்தோஷமாகச் சிரிக்க வைத்திருக்கிறார். இதைக் கேள்விப்படுகிற எல்லாரும் என்னோடு சேர்ந்து சிரிப்பார்கள்” என்று சாராள் சிரித்த முகத்தோடு சொன்னதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும். (ஆதியாகமம் 21:6) யெகோவா தந்த இந்த அற்புதமான பரிசை நினைத்து சாராள் காலமெல்லாம் சந்தோஷப்பட்டிருப்பாள். அதுமட்டுமல்லாமல், பெரிய பெரிய பொறுப்புகளும் சாராளுக்கு இருந்தன.
ஈசாக்குக்கு 5 வயது இருந்தபோது, அவன் தாய்ப்பாலை மறந்தான். அன்று, ஆபிரகாம் ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்தார். ஆனால், ஏதோவொன்று சரியாக இருக்கவில்லை. ஆகாரின் மகனான 19 வயது இஸ்மவேல், குட்டி ஈசாக்கைக் கேலி செய்வதை சாராள் “கவனித்துக்கொண்டே இருந்தாள்.” அவன் வெறுமனே விளையாட்டுக்காக அப்படிச் செய்தது போல தெரியவில்லை. இஸ்மவேலின் அந்த நடத்தையை, துன்புறுத்தல் என்பதாக அப்போஸ்தலன் பவுல் பிற்பாடு குறிப்பிட்டார். இஸ்மவேல் இப்படி வம்பு பண்ணுவது தன் மகனைப் பாதிக்கும் என்று சாராள் புரிந்துகொண்டாள். ஈசாக்கு வெறுமனே தன் மகன் மட்டும் அல்ல, யெகோவாவுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவனுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது என்று சாராளுக்குத் தெரியும். அதனால், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஆபிரகாமிடம் வெளிப்படையாகப் பேசினாள். ஆகாரையும் இஸ்மவேலையும் துரத்திவிடும்படி சொன்னாள்.—ஆதியாகமம் 21:8-10; கலாத்தியர் 4:22, 23, 29.
ஆபிரகாம் என்ன செய்தார்? “தன்னுடைய மகனைப் பற்றி அவள் இப்படிச் சொன்னது [ஆபிரகாமுக்கு] மிகவும் வேதனையாக இருந்தது” என்று பைபிள் சொல்கிறது. ஏனென்றால், அவருக்கு இஸ்மவேலை ரொம்ப பிடிக்கும். வெறுமனே ஒரு அப்பாவாக மட்டும் அவர் இந்தப் பிரச்சினையைப் பார்த்தார். ஆனால், யெகோவா இந்தப் பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொண்டார். அதனால், அவரே குறுக்கிட்டு ஆபிரகாமிடம் இப்படிச் சொன்னார்: “உன்னுடைய மகனையும் உன்னுடைய அடிமைப் பெண்ணையும் பற்றி சாராள் சொன்னதை நினைத்து வேதனைப்படாதே. அவளுடைய பேச்சைக் கேள். ஏனென்றால், ஈசாக்கின் வழியாக உருவாகும் சந்ததிதான் உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படும்.” ஆகார் மற்றும் இஸ்மவேலுடைய தேவைகள் கவனித்துக்கொள்ளப்படும் என்று யெகோவா ஆபிரகாமுக்கு வாக்குக் கொடுத்தார்.—ஆதியாகமம் 21:11-14.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
wp17.3 பக். 12, அடிக்குறிப்பு
“நீ பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறாய்!”
சாராள் ஆபிரகாமுடைய ஒன்றுவிட்ட சகோதரி. தேராகுதான் இவர்கள் இரண்டு பேருக்கும் அப்பா. ஆனால், அம்மாதான் வேறு வேறு. (ஆதியாகமம் 20:12) இன்று இப்படிப்பட்ட உறவு முறையில் யாரும் திருமணம் செய்வதில்லை. ஆபிரகாம்-சாராளின் காலத்தில் வாழ்ந்தவர்கள் நம்மைவிட பலமடங்கு ஆரோக்கியமாக இருந்தார்கள். காரணம் என்னவென்றால், பரிபூரண ஆரோக்கியத்தோடு படைக்கப்பட்ட ஆதாம்-ஏவாள் இறந்து கொஞ்சக் காலத்திலேயே இவர்கள் வாழ்ந்தார்கள். ஆதாம்-ஏவாளுடைய வம்சத்தில் வந்த இவர்களுக்கும், நல்ல ஆரோக்கியம் இருந்தது. அதனால், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்துகொள்வதால் வரும் உடல்நல பிரச்சினைகள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு வரவில்லை. ஆனால், 400 வருஷங்களுக்கு பிறகு வாழ்ந்த மக்களுக்கு அப்படிப்பட்ட ஆரோக்கியம் இருக்கவில்லை. அவர்களுடைய வாழ்நாள் குறைந்துவிட்டது. அதனால்தான் “இரத்த சொந்தங்களோடு உடலுறவுகொள்ளக் கூடாது” என்று மோசேயின் திருச்சட்டம் சொன்னது.—லேவியராகமம் 18:6.
w89-E 7/1 பக். 20 பாரா 9
ஆபிரகாம்—கடவுளோடு நண்பராக விரும்பும் எல்லாருக்கும் ஓர் உதாரணம்
9 விசுவாசத்தை ஆபிராம் இன்னொரு விதத்திலும் காட்டினார். அதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஆபிராம் யெகோவாவுக்காக அங்கே ஒரு பலிபீடம் கட்டினார்.” (ஆதியாகமம் 12:7) “பலிபீடம்” என்பதற்கான எபிரெய வார்த்தை, “பலி கொடுக்கும் இடம்” என்ற அர்த்தத்தைக் கொடுப்பதால், அநேகமாக அவர் மிருக பலிகளையும் கொடுத்திருக்க வேண்டும். பிற்பாடு ஆபிராம், தேசத்தின் மற்ற இடங்களிலும் இதுபோல பலி கொடுத்தார். அதோடு, அவர் “யெகோவாவின் பெயரைப் போற்றிப் புகழ்ந்தார்.” (ஆதியாகமம் 12:8; 13:18; 21:33) ‘பெயரைப் போற்றிப் புகழ்வது’ என்பதற்கான எபிரெய சொற்றொடருக்கு “பெயரை அறிவிப்பது (பிரசங்கிப்பது)” என்று அர்த்தம். ஆபிராம் தன்னுடைய கடவுளான யெகோவாவைப் பற்றி அவருடைய குடும்பத்தாரிடமும் கானானியர்களிடமும் நிச்சயம் தைரியமாக அறிவித்திருப்பார். (ஆதியாகமம் 14:22-24) அப்படியென்றால், கடவுளோடு நண்பராக விரும்பும் எல்லாருமே அவரைப்போலவே கடவுளுடைய பெயரை விசுவாசத்தோடு போற்றிப் புகழ வேண்டும். அதாவது, மற்றவர்களிடம் பிரசங்கிக்க வேண்டும்; அப்படிச் செய்வதன் மூலம், ‘கடவுளுக்கு எப்போதும் நம்முடைய உதடுகளின் கனியைப் பலி செலுத்துவோம். அதாவது, கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் அறிவிப்பதன் மூலம் அவருக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோம்.’—எபிரெயர் 13:15; ரோமர் 10:10.