சாந்தம் நமக்கு எப்படிப் பிரயோஜனத்தைத் தரும்?
“நான் கூச்ச சுபாவமுள்ள ஒரு ஆள். எனக்கு அவ்வளவா தன்னம்பிக்கை கிடையாது. அதனால, தங்களோட கருத்துதான் சரிங்குற மாதிரியும் ரொம்ப நம்பிக்கையோடவும் பேசுறவங்ககிட்ட பழகுறது எனக்கு கஷ்டம். ஆனா, சாந்தமா, தாழ்மையா இருக்குறவங்களோட பழகுறது எனக்கு சுலபம். இப்படிப்பட்டவங்ககிட்ட என்னோட உணர்ச்சிகள தாராளமா கொட்ட முடியுது. என்னோட பிரச்சினைகள பத்தியும் பேச முடியுது. இவங்கதான் என்னோட நெருங்கிய நண்பர்கள்” என்று சகோதரி சாராa சொல்கிறார்.
சாரா சொன்னதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? நாம் சாந்த குணத்தைக் காட்டும்போது, நம்முடைய நண்பர்களாக ஆக வேண்டுமென்ற ஆசை மற்றவர்களுக்கு வரும். சாந்த குணம், யெகோவாவின் மனதையும் சந்தோஷப்படுத்துகிறது. “சாந்தத்தை. . . காட்டுங்கள்” என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. (கொலோ. 3:12) அப்படியென்றால், சாந்த குணம் என்றால் என்ன? இந்தக் குணத்தை இயேசு எப்படிக் காட்டினார்? சாந்த குணம் நம்முடைய வாழ்க்கையை எப்படிச் சந்தோஷமாக்கும்?
சாந்தம் என்றால் என்ன?
நம் மனதுக்குள் இருக்கும் ஒருவிதமான அமைதிதான் சாந்தம். சாந்தமாக இருக்கிற ஒருவர், மற்றவர்களை மென்மையாக, அன்பாக நடத்துவார். தன்னை எரிச்சல்படுத்துகிற விதமாக ஏதாவது நடந்தால்கூட அமைதியாக இருப்பார், சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவார்.
சாந்தம் என்பது, பலத்துக்கான ஓர் அடையாளம்! “சாந்தம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற கிரேக்க வார்த்தை, பயிற்சிபெற்ற குதிரையை விவரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பயிற்சிபெற்ற பிறகு, அந்தக் குதிரை பலவீனமாக ஆகிவிடாது; பலமாகத்தான் இருக்கும். சொல்லப்போனால், அதற்கு இருக்கும் பலத்தை அந்தக் குதிரையால் கட்டுக்குள் வைக்க முடியும். அதேபோல், சாந்த குணத்தைக் காட்டுகிறவர்கள் பலவீனமானவர்கள் கிடையாது; பலமானவர்கள்தான்! ஏனென்றால், அவர்கள் தங்களுடைய பாவ இயல்பைக் கட்டுப்படுத்தி மற்றவர்களோடு சமாதானமாக இருக்கிறார்கள்.
‘நான் சாந்தமான ஆள் கிடையாது’ என்று நாம் நினைக்கலாம். தங்களுடைய கருத்துதான் சரி என்பதுபோல் பேசுகிறவர்களும் பொறுமையில்லாமல் நடந்துகொள்கிறவர்களும் நிறைந்த ஓர் உலகத்தில் நாம் வாழ்வதால், சாந்த குணத்தைக் காட்டுவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். (ரோ. 7:19) அதனால், இந்தக் குணத்தைக் காட்டுவதற்கு முயற்சி தேவை. நாம் தொடர்ந்து இந்தக் குணத்தைக் காட்டுவதற்கு யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்து உதவுவார். (கலா. 5:22, 23) அப்படியென்றால், சாந்த குணத்தைக் காட்டுவது ஏன் அவசியம்?
சாந்தம் மற்றவர்களைக் காந்தம்போல் நம்மிடம் ஈர்க்கிறது. மேலே பார்த்த சாரா சொன்னதுபோல், நாமும் சாந்தமான ஆட்களோடுதான் பழக விரும்புகிறோம். சாந்தமாகவும் அன்பாகவும் நடந்துகொள்வதில் இயேசு தலைசிறந்த முன்மாதிரி! (2 கொ. 10:1) அவரைப் பற்றித் தெரியாத சின்னப் பிள்ளைகள்கூட அவரோடு இருக்க விரும்பினார்கள்.—மாற். 10:13-16.
சாந்தமாக இருப்பது நமக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது. நாம் சாந்தமாக இருக்கும்போது சீக்கிரத்தில் எரிச்சலடைய மாட்டோம், கோபமாக நடந்துகொள்ள மாட்டோம். (நீதி. 16:32) பின்னால் நினைத்து வருத்தப்படும் அளவுக்கு மற்றவர்களை, முக்கியமாக நம்முடைய அன்புக்குரியவர்களை, புண்படுத்த மாட்டோம். இப்படி நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும்போது, மற்றவர்களும் பிரயோஜனமடைவார்கள்.
சாந்த குணத்தைக் காட்டுவதில் பரிபூரண முன்மாதிரி
இயேசுவுக்கு முக்கியமான பொறுப்புகளும், செய்வதற்கு ஏராளமான வேலைகளும் இருந்தன. ஆனாலும், எல்லாரிடமும் அவர் சாந்தமாக நடந்துகொண்டார். அவருடைய நாட்களில் இருந்த நிறைய பேர், பாரமான சுமைகளைச் சுமந்துகொண்டிருந்தார்கள். அதனால், அவர்களுக்குப் புத்துணர்ச்சி தேவைப்பட்டது. அவர்களைப் பார்த்து, “என்னிடம் வாருங்கள், . . . நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்” என்று இயேசு சொன்னபோது அவர்களுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்!—மத். 11:28, 29.
இயேசுவைப் போல சாந்த குணத்தைக் காட்டுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? மக்களை இயேசு எப்படி நடத்தினார்... கஷ்டமான சூழ்நிலைகள் வந்தபோது அவர் என்ன செய்தார்... என்பதையெல்லாம் பைபிளிலிருந்து படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு, நம்முடைய சாந்த குணத்தை உரசிப் பார்ப்பதற்கான சூழ்நிலைகள் வரும்போது இயேசுவைப் போலவே நடந்துகொள்ள கடினமாக முயற்சி செய்ய வேண்டும். (1 பே. 2:21) இந்தக் குணத்தைக் காட்ட இயேசுவுக்கு உதவிய மூன்று விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
இயேசு உண்மையிலேயே மனத்தாழ்மையாக நடந்துகொண்டார். “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்” என்று அவர் சொன்னார். (மத். 11:29) இந்த இரண்டு குணங்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருப்பதால், இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து பைபிள் சொல்கிறது.—எபே. 4:1-3.
மனத்தாழ்மையாக இருந்தால், நாம் எளிதில் புண்பட்டுவிட மாட்டோம். “பெருந்தீனிக்காரன், குடிகாரன்” என்று மற்றவர்கள் இயேசுவை அநியாயமாக விமர்சனம் செய்தபோது அவர் எப்படி நடந்துகொண்டார்? “ஒருவர் செய்கிற நீதியான செயல்கள் அவர் ஞானமுள்ளவர் என்பதை நிரூபிக்கும்” என்று சாந்தமாகச் சொன்னார். தான் வாழ்ந்த விதத்தின் மூலம், அவர்கள் சொன்னதெல்லாம் அபாண்டமான பொய் என்பதை நிரூபித்தார்.—மத். 11:19.
உங்களுடைய இனம், பாலினம், அல்லது பின்னணியைப் பற்றி யாராவது யோசிக்காமல் பேசிவிட்டால் என்ன செய்வீர்கள்? சாந்தமாகப் பதில் சொல்வதற்கு முயற்சி செய்யலாம், இல்லையா? “எனக்கு எரிச்சல் வர்ற மாதிரி யாராவது எதையாவது சொல்லிட்டா, ‘இந்த இடத்துல இயேசு இருந்தா என்ன செஞ்சிருப்பாரு’னு என்னை நானே கேட்டுக்குவேன்” என்று தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற பீட்டர் என்ற மூப்பர் சொல்கிறார். “நான் என்னை உயர்வா நினைக்காம இருக்குறதுக்கு கத்துக்கிட்டேன்” என்றும் அவர் சொல்கிறார்.
மனிதர்கள் பாவ இயல்புள்ளவர்கள் என்பதை இயேசு புரிந்துவைத்திருந்தார். இயேசுவின் சீஷர்கள் நல்லது செய்ய விரும்பினார்கள். ஆனால், அவர்களுடைய பாவ இயல்பால் அவர்களால் அப்படிச் செய்ய முடியவில்லை. இதோ ஓர் உதாரணம்: இயேசு இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, பேதுருவும் யாக்கோபும் யோவானும், இயேசு கேட்டுக்கொண்டதுபோல் அவருக்கு உணர்ச்சிப்பூர்வ ஆதரவு தரவில்லை. அதாவது, அவர்கள் விழித்திருக்கவில்லை. அதற்கான காரணத்தை இயேசு புரிந்துகொண்டதால்தான், “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது” என்று சொன்னார். (மத். 26:40, 41) அவர்களுடைய பாவ இயல்பை இயேசு புரிந்துகொண்டதால், அவர்கள்மேல் எரிச்சலடையவில்லை.
ஜெசிக்கா என்ற சகோதரியைப் பற்றிப் பார்க்கலாம். மற்றவர்களிடம் எப்போதுமே குறை கண்டுபிடிக்கிற பழக்கம் அவருக்கு இருந்தது. ஆனால், இயேசுவைப் போலவே மற்றவர்களிடம் சாந்தமாக நடந்துகொள்வதற்கு இப்போது முயற்சி செய்கிறார். ‘எல்லாருமே பாவ இயல்புள்ளவங்கதாங்குற விஷயத்த நான் ஞாபகப்படுத்திக்கிறேன். யெகோவா மாதிரியே மத்தவங்ககிட்ட இருக்குற நல்லத பார்க்க முயற்சி செய்றேன்” என்று அவர் சொல்கிறார். மற்றவர்கள் பாவ இயல்புள்ளவர்கள் என்பதை இயேசுவைப் போலவே நாமும் புரிந்து வைத்திருந்தால், நம்மால் சாந்த குணத்தைக் காட்ட முடியும்.
எல்லாவற்றையும் கடவுளுடைய கைகளில் இயேசு விட்டுவிட்டார். இயேசு பூமியில் இருந்தபோது அநியாயமாக நடத்தப்பட்டார். இருந்தாலும், அதையெல்லாம் அவர் சகித்துக்கொண்டார். அவரை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டார்கள், அசட்டை செய்தார்கள், சித்திரவதை செய்தார்கள். ஆனாலும், ‘நீதியான தீர்ப்பு கொடுக்கிறவரிடம் தன்னையே ஒப்படைத்ததால்’ தொடர்ந்து அவரால் சாந்தமாக இருக்க முடிந்தது. (1 பே. 2:23) தனக்கு ஏற்பட்ட அநீதியையெல்லாம் தன்னுடைய பரலோகத் தந்தை சரியான சமயத்தில் சரிசெய்வார் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது.
யாராவது நமக்கு அநீதி இழைத்துவிட்டால், நாம் ஒருவேளை கோபத்தைக் கொட்டிவிடலாம். ஆனால் அப்படிச் நடந்துகொண்டால், நிலைமை இன்னும் மோசமாகிவிடலாம். “கோபப்படுகிற மனிதனால் கடவுளுடைய நீதியை நிறைவேற்ற முடியாது” என்று பைபிள் சொல்கிறது. (யாக். 1:20) நம்முடைய கோபம் நியாயமாக இருந்தால்கூட, நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் தவறாக நடந்துகொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இப்போது, ஜெர்மனியில் இருக்கிற கேத்தி என்ற சகோதரியைப் பற்றிப் பார்க்கலாம். “நமக்காக நம்மதான் போராடணும். வேற யாரும் வர மாட்டாங்க” என்று அவர் முன்பு நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், யெகோவாமேல் நம்பிக்கை வைக்க ஆரம்பித்த பிறகு அவர் தன்னை மாற்றிக்கொண்டார். “இனிமேல நான் எல்லாத்துக்கும் போராட வேண்டிய அவசியம் இல்ல” என்று அவர் சொல்கிறார். “உலகத்துல நடக்குற தவறுகள யெகோவா சரி செய்வார்னு எனக்கு தெரியும். அதனால, என்னால சாந்தமா நடந்துக்க முடியுது” என்கிறார் கேத்தி. உங்களுக்கு ஏதாவது அநீதி நடந்தால், இயேசுவைப் போல கடவுள்மேல் நம்பிக்கை வையுங்கள். அப்போது, தொடர்ந்து உங்களால் சாந்தமாக இருக்க முடியும்.
“சாந்தமாக இருப்பவர்கள் சந்தோஷமானவர்கள்”
சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், சாந்த குணத்தைக் காட்டுவது முக்கியம் என்று இயேசு சொன்னார். “சாந்தமாக இருப்பவர்கள் சந்தோஷமானவர்கள்” என்றார் இயேசு! (மத். 5:5) பின்வரும் சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கு சாந்த குணம் எப்படி உதவும் என்று இப்போது பார்க்கலாம்.
கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினைகள் வரும்போது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் சகோதரர் ராபர்ட் இப்படிச் சொல்கிறார்: “என்னோட மனைவிய புண்படுத்துற மாதிரி நான் நிறைய தடவ பேசியிருக்கேன். ஆனா, அவள புண்படுத்தணும்னு நெனச்சு அப்படி பேசல. கோபத்துல வார்த்தைகள கொட்டீட்டா, அதுக்கு அப்புறம் அத அள்ள முடியாது. நான் பேசுன வார்த்தைகள் அவள எந்தளவுக்கு புண்படுத்தியிருக்குனு நெனச்சு ரொம்ப வருத்தப்பட்டேன்.”
பேசும்போது, “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்.” (யாக். 3:2) யோசிக்காமல் பேசும்போது கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினைகள் வருகின்றன. அப்படிப்பட்ட சமயங்களில், அமைதியாக இருக்கவும் யோசித்துப் பேசவும் சாந்த குணம் நமக்கு உதவும்.—நீதி. 17:27.
அமைதியாகவும் சுயக்காட்டுப்பாட்டுடனும் இருப்பதற்கு ராபர்ட் கடினமாக உழைத்தார். அதனால் கிடைத்த பலனைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “இப்பல்லாம் எங்களுக்குள்ள பிரச்சினைகள் வர்றப்போ, கவனமா கேட்குறதுக்கும் சாந்தமா பேசுறதுக்கும் எரிச்சலடையாம இருக்குறதுக்கும் முயற்சி செய்றேன். அதனால, எனக்கும் என் மனைவிக்கும் இடையில இருக்குற பந்தம் இப்போ பலமாகி இருக்கு.”
மற்றவர்களோடு பழகுவது சிரமமாக இருக்கும்போது. சீக்கிரமாகப் புண்படுகிறவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால், சாந்த குணம் “சமாதானமாக வாழ்வதற்கு” உதவுகிறது. (எபே. 4:2, 3) முன்பு பார்த்த கேத்தி இப்படிச் சொல்கிறார்: “சாந்த குணத்த காட்டுறப்போ என்னால மத்தவங்களோட சந்தோஷமா பழக முடியுது. பழகுறதுக்கு கஷ்டமா இருக்குறவங்ககிட்டகூட என்னால பழக முடியுது.”
மனஅமைதி இல்லாமல் தவிக்கும்போது. ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்தை’ சாந்த குணத்தோடும் சமாதானத்தோடும் சம்பந்தப்படுத்தி பைபிள் பேசுகிறது. (யாக். 3:13, 17) சாந்தமாக இருப்பவர்களுக்கு “அமைதியான உள்ளம்” இருக்கும். (நீதி. 14:30) இந்தக் குணத்தை வளர்த்துக்கொள்வதற்குக் கடினமாக உழைத்த மார்ட்டின் என்பவர் இப்படிச் சொல்கிறார்: “நான் சொல்ற மாதிரிதான் எல்லாம் நடக்கணும்னு இப்பல்லாம் நான் கட்டாயப்படுத்துறதில்ல. அதனால, என்னோட மனஅமைதி இன்னும் அதிகமாகியிருக்கு. சந்தோஷமும் கூடியிருக்கு.”
சாந்த குணத்தைக் காட்டுவதற்கு நாம் கடினமாகப் போராட வேண்டும் என்பது உண்மைதான். “சொல்லப்போனா, இன்னைக்கும் சில சமயங்கள்ல நான் கோபத்துல கொந்தளிக்கிறேன்” என்று ஒரு சகோதரர் சொல்கிறார். சாந்த குணத்தைக் காட்ட வேண்டுமென்று யெகோவா நம்மிடம் சொல்வதால், இந்தக் குணத்தைக் காட்ட அவர் நிச்சயம் நமக்கு உதவுவார். (ஏசா. 41:10; 1 தீ. 6:11) அவர் ‘நம்முடைய பயிற்சியை முடிப்பார்,’ அவர் ‘நம்மைப் பலப்படுத்துவார்.’ (1 பே. 5:10) காலப்போக்கில், அப்போஸ்தலன் பவுலைப் போலவே நம்மாலும் ‘கிறிஸ்துவுக்கே உரிய சாந்தத்தையும் கருணையையும்’ காட்ட முடியும்.—2 கொ. 10:1.
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.