உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w26 ஜூன் பக். 26-30
  • 70 வருஷங்களாக கியூபாவில் எங்கள் சந்தோஷமான சேவை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 70 வருஷங்களாக கியூபாவில் எங்கள் சந்தோஷமான சேவை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2026
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கஷ்டமான காலம் ஆரம்பித்தது
  • பயனியர்களாகவும் பெற்றோராகவும்
  • தடையின் மத்தியிலும் வட்டாரச் சேவை
  • மாற்றங்கள் வந்தபோதும் சந்தோஷமாக இருந்தோம்
  • “என் கனவு நனவாகிவிட்டது”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • இந்தியாவில் நடைபெற்ற ஊழியப் பயிற்சிப் பள்ளியின் முதல் வகுப்பு
    நம் ராஜ்ய ஊழியம்—1995
  • யெகோவா என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • ’ஜீவனைப்பார்க்கிலும் உம்முடைய அன்புள்ள தயவு மேம்பட்டது’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2026
w26 ஜூன் பக். 26-30
கஸ்டவோ ஜோசஃப் மற்றும் எமிலியா.

வாழ்க்கை சரிதை

70 வருஷங்களாக கியூபாவில் எங்கள் சந்தோஷமான சேவை

கஸ்டவோ ஜோசஃப்

1947-ல் கியூபாவில் இருக்கிற கரீபியன் என்ற அழகான தீவில் நான் பிறந்தேன். அது வடக்கு கரீபியன் கடலும் அட்லாண்டிக் பெருங்கடலும் சேரும் இடத்தில் இருக்கும் ஒரு தீவு. நானும் அப்பா-அம்மாவும் என் இரண்டு தங்கைகளும் எஸ்மெரல்டா என்ற கிராமத்தில் வாழ்ந்தோம்.

அந்த அழகான குட்டி கிராமத்தில், எங்கள் வாழ்க்கை ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. எங்களைச் சுற்றி அத்தை, சித்தப்பா, தாத்தா-பாட்டி என்று நிறைய சொந்தக்காரர்கள் இருந்தார்கள். எங்களுக்குத் தேவையான எல்லாமே இருந்தது. நாங்கள் திருப்தியாக வாழ்ந்தோம்.

எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது அப்பாவும் அம்மாவும் சகோதரர் வால்டன் ஜோன்ஸோடு சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். சகோதரர் வால்டன் சுறுசுறுப்பாக ஊழியம் செய்வார். எங்கள் கிராமத்துக்கு, கிட்டத்தட்ட பத்து மணிநேரம் சலிக்காமல் நடந்து வருவார். அப்படி அவர் ஒவ்வொரு தடவை வரும்போதும், அவரோடு சேர்ந்து பைபிள் படிப்பதற்காக எங்கள் குடும்பத்தில் இருக்கும் நிறைய பேர் தாத்தா-பாட்டி வீட்டிற்கு வந்துவிடுவோம். அங்கே ஒன்றாகச் சேர்ந்து மணிக்கணக்காக பைபிள் படிப்போம். படித்த விஷயங்கள் என் அப்பா-அம்மாவுக்கும், அத்தைக்கும், சித்தப்பாவுக்கும் ரொம்பப் பிடித்துவிட்டது. அதனால், சீக்கிரத்திலேயே ஞானஸ்நானம் எடுத்தார்கள். என் அத்தைக்கு இப்போது கிட்டத்தட்ட 100 வயதாகிறது. இன்னமும் பயனியராகச் சேவை செய்கிறார்.

அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு கியூபாவில் எந்தத் தடையும் இல்லை. அதனால், கூட்டங்களிலும் ஊழியத்திலும் எங்களால் சுலபமாகக் கலந்துகொள்ள முடிந்தது. வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது யெகோவாவின் சாட்சிகள்தான் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். கையில் பையோடு பைபிள் பிரசுரங்களை எடுத்துக்கொண்டு நிறைய தூரம் நடந்தே போவோம். என்னுடைய சின்ன வயதில், அந்த ‘சாதகமான காலத்தில்’ சேவை செய்த நல்ல நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது. ஆனால் கஷ்டமான காலமும் வந்தது.—2 தீ. 4:2.

கஷ்டமான காலம் ஆரம்பித்தது

அதே வருஷத்தில், அதாவது எனக்கு ஐந்து வயது இருந்தபோது, என் அப்பாவும் சித்தப்பாவும் ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அதே தீவில் இருந்த இன்னொரு இடத்துக்குப் போனார்கள். போன இடத்தில் தண்ணீரால் பரவுகிற டைபாய்டு காய்ச்சல் அவர்களுக்கு வந்தது. அந்தக் காய்ச்சலால் என் சித்தப்பாவுடைய முடியெல்லாம் கொட்டிவிட்டது. இருந்தாலும், உயிர் பிழைத்துக்கொண்டார். ஆனால் என் அப்பா இறந்துவிட்டார். அப்போது அவருக்கு 32 வயதுதான்.

அப்பா இறந்த பிறகு, அம்மா ஒரு முடிவெடுத்தார். லாம்பிலோ என்ற கிராமத்தில் இருக்கிற அவருடைய அண்ணனின் வீட்டுக்குக் குடும்பமாக மாறி போக நினைத்தார். எங்கள் சொந்தக்காரர்களையும் எங்களுக்கு ரொம்பப் பிடித்த தாத்தா-பாட்டியையும் நாங்கள் விட்டுவிட்டு போக வேண்டியிருந்தது. இருந்தாலும் நாங்கள் யெகோவாவை விட்டுவிடவில்லை, குடும்பமாக சேர்ந்து அவருக்குச் சேவை செய்தோம்.

ஆகஸ்ட் 26, 1957-ல், லாம்பிலோவில் இருக்கும் ஒரு ஏரியில் நான் ஞானஸ்நானம் எடுத்தேன். அப்போது எனக்கு பத்து வயது. ஆனால் இரண்டு வருஷத்துக்குள் நிலைமை மோசமானது. 1959-ல் கியூபாவில் ஆட்சி மாறியது, கம்யூனிஸ்ட் ஆட்சி ஆரம்பித்தது.

கம்யூனிஸ்ட் அரசாங்கம் ராணுவ சேவைக்குத்தான் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தது. அது யெகோவாவின் மக்களுக்குப் பெரிய பிரச்சினையாக இருந்தது. ஏனென்றால், அவர்கள் ராணுவத்தில் சேரமாட்டார்கள், அரசியல் விஷயங்களிலும் நடுநிலையாக இருப்பார்கள். அதனால், யெகோவாவின் சாட்சிகளால் சுதந்திரமாக ஊழியம் செய்யவோ கூட்டங்களில் கலந்துகொள்ளவோ முடியாமல் போனது. கடைசியில், யெகோவாவின் சாட்சிகளுடைய எல்லா வேலைகளையும் அரசாங்கம் தடைசெய்தது. நூற்றுக்கணக்கான சகோதரர்களைச் சிறையில் அடைத்தது. சில சகோதரர்களை அதிகாரிகள் பயங்கரமாக அடித்தார்கள், சாப்பாடு கொடுக்காமல் கஷ்டப்படுத்தினார்கள். சிலசமயங்களில், அவர்கள் கொடுத்த சாப்பாட்டில் இரத்தமும் இருந்தது.

இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து யெகோவாவை வணங்குவதை நிறுத்தவில்லை. (எபி. 10:25) அந்தச் சமயத்தில், மாநாடுகள் பண்ணைகளிலும் மற்ற சில இடங்களிலும்தான் நடந்தது. ஒருசமயம், மாநாடு நடத்த ஒரு சகோதரர் அவருடைய பண்ணையை எங்களுக்குக் கொடுத்தார். அந்தப் பண்ணையைச் சுத்தம் செய்யவோ ஆடுகளை வெளியே கொண்டு வரவோ எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அதனால், அந்த ஆடுகளோடு சேர்ந்து யெகோவாவின் ஆடுகளான நாங்களும் மாநாட்டைக் கவனித்தோம்.—மீ. 2:12.

அந்தச் சமயத்தில் சகோதரர்கள் எங்களுக்காக கடினமாக உழைத்தார்கள். உதாரணமாக, மாநாட்டு நிகழ்ச்சிகளை முன்பே கேஸட்டுகளில் ரெக்கார்ட் செய்து கியூபாவில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். சிலசமயங்களில், மாநாட்டின் எல்லா பேச்சுகளையும் தயாரிக்க வெறும் இரண்டே சகோதரர்களைத்தான் நியமிப்பார்கள். அவர்கள் அந்த எல்லா பேச்சுகளையும் தயாரித்து கொடுத்து, அதை ரகசியமான இடங்களில்தான் ரெக்கார்ட் செய்வார்கள். அதனால் அந்த ரெக்கார்டிங்கில் கோழி கூவுகிற சத்தமும் வேறு சில வினோதமான சத்தங்களும் கேட்கும். மாநாட்டு மன்றத்தில் கரெண்ட் வசதி இல்லை என்றால், சகோதரர்கள் டைனமோ பொருத்திய சைக்கிளை மிதித்து அதிலிருந்து கரெண்ட் எடுப்பார்கள். அதை வைத்து, டேப் ரெக்கார்டரைப் பயன்படுத்துவார்கள். இப்படித்தான் நாங்கள் மாநாட்டு நிகழ்ச்சிகளைக் கேட்போம். மற்ற நாடுகளில் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளுக்கு இருப்பதுபோல் எங்களுக்கு நல்ல சூழ்நிலையும் இல்லை, நிறைய பிரசுரங்களும் இல்லை. ஆனாலும் யெகோவாவோடு நெருக்கமாக இருக்க தேவையான எல்லாமே எங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தது. நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து யெகோவாவைச் சந்தோஷமாக வணங்கினோம்.—நெ. 8:10.

பயனியர்களாகவும் பெற்றோராகவும்

எனக்கு 18 வயதானபோது ஃப்ளோரிடா என்ற ஊரில் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்ய ஆரம்பித்தேன். ஒரு வருஷத்துக்குப் பிறகு, காமாகுவா என்ற நகரத்தில் விசேஷ பயனியராகச் சேவை செய்ய எனக்கு நியமிப்பு கிடைத்தது. அங்கேதான் எமிலியா என்ற அழகான சகோதரியைப் பார்த்தேன். அவள் சாண்டியாகோ டி கியூபா என்ற ஊரைச் சேர்ந்தவள். நாங்கள் காதலித்தோம். ஒரு வருஷத்தில் கல்யாணம் செய்துகொண்டோம்.

படத்தொகுப்பு: 1. கஸ்டவோவும் அவரோடு ராஜ்ய ஊழியப் பள்ளியில் படித்தவர்களும் குழு புகைப்படம் எடுக்கிறார்கள். 2. கஸ்டவோவும் எமிலியாவும் கல்யாண நாளில் கேக் பக்கத்தில் சிரித்த முகத்தோடு நிற்கிறார்கள்.

(இடது) மூப்பர்களுக்கான ராஜ்ய ஊழியப் பள்ளி—காமாகுவே, கியூபா, 1966

(வலது) எங்கள் கல்யாண நாள், 1967

பிறகு, அரசாங்கத்தின் சர்க்கரை தொழிற்சாலையில் முழுநேரமாக வேலை செய்ய ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில், என்னாலும் எமிலியாவாலும் பயனியர் சேவை செய்ய முடியாமல் போனது. ஆனாலும், யெகோவாவுக்காக எங்களால் முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதிகாலை 3 மணிக்கு ஆரம்பித்து 11 மணிக்கு முடியும் வேலை நேரத்தைத் தேர்ந்தெடுத்தேன். எனக்குக் காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பது பிடிக்காதுதான். ஆனால் அப்படிச் சீக்கிரமாக வேலையை ஆரம்பித்ததால்தான் என்னால் ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்ள முடிந்தது, எமிலியாவோடு சேர்ந்து எல்லா கூட்டங்களிலும் கலந்துகொள்ள முடிந்தது.

1969-ல் எங்களுடைய முதல் மகன் கஸ்டவோ பிறந்தான். அவன் பிறந்த சமயத்தில்தான், சகோதரர்கள் என்னிடம் வட்டாரக் கண்காணியாக சேவை செய்ய முடியுமா என்று கேட்டார்கள். அந்தக் காலத்தில், பிள்ளைகளை வைத்திருக்கிறவர்களும் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்வார்கள். அந்த நாட்கள் ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. அதேசமயம் பிஸியாகவும் இருந்தது. சகோதர சகோதரிகளுக்கு உதவ எங்களுக்குக் கிடைத்த அந்த வாய்ப்பு பெரிய ஆசீர்வாதம்தான். வட்டாரச் சேவையில் இருந்த சமயத்தில், எங்களுடைய அடுத்த மகன் ஓபேத் பிறந்தான். பிறகு, அப்னேர் பிறந்தான். சில வருஷங்களில், எங்கள் மகள் மஹெலி பிறந்தாள்.

வட்டாரச் சேவை செய்த அந்த நாட்களைத் திரும்பிப் பார்க்கும்போது, எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது. கியூபாவில் இருக்கிற அவருடைய மக்களை, யெகோவா ரொம்ப ஆசீர்வதித்து இருக்கிறார். அதுமட்டுமல்ல, எங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாமேல் அன்பை வளர்க்க நாங்கள் எடுத்த முயற்சியையும் ஆசீர்வதித்து இருக்கிறார். இப்போது, வட்டாரச் சேவை செய்த சமயத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது என்று சொல்கிறேன்.

தடையின் மத்தியிலும் வட்டாரச் சேவை

நம்முடைய வேலைக்குத் தடை இருந்ததால், 1960-களிலும் 1970-களிலும் நிலைமைகள் இன்னும் மோசமானது. ராஜ்ய மன்றங்களை மூடினார்கள். மிஷனரிகளை நாட்டைவிட்டு வெளியே அனுப்பினார்கள். நிறைய இளம் சகோதரர்களைக் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள். ஹவானாவில் இருந்த கிளை அலுவலகத்தையும் மூடிவிட்டார்கள்.

கஸ்டவோ மற்றும் எமிலியா ஸ்பானிஷ் மொழியில் “விழித்தெழு!” பத்திரிகைகளைக் கையில் வைத்திருக்கிறார்கள்.

வட்டாரச் சேவை, 1990-கள்

தடை இருந்ததால் சபைகளை சனி-ஞாயிறுகளில் மட்டும்தான் சந்திப்போம். அதனால் ஒவ்வொரு சபையிலும் இரண்டு வாரங்கள் இருப்போம். நாங்கள் நிறைய பொருள்களை எடுத்துக்கொண்டு போக மாட்டோம். நிறைய சமயங்களில், சைக்கிளில்தான் போவோம். அப்போதுதான் யார் கண்ணிலும் படாமல் ஜாக்கிரதையாகப் போக முடியும். வட்டாரக் கண்காணியின் சந்திப்பு ரகசியமாகத்தான் நடக்கும். சொந்தக்காரர்களைப் பார்க்கப்போவது போல்தான் காட்டிக்கொள்வோம். அது எங்களுக்குக் கஷ்டமாகவே தெரியவில்லை. சொல்லப்போனால், சகோதர சகோதரிகள் எங்களுக்குக் குடும்பம் மாதிரிதான் இருந்தார்கள். (மாற். 10:29, 30) அதனால் வட்டார சந்திப்புக்குத்தான் போகிறோம் என்பதே நிறைய சமயங்களில் மறந்துவிடும். ஆனால், அப்போதும் நாங்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்தது. எங்களை போலீஸ் அடிக்கடி பின்தொடர்வார்கள், எங்களை விசாரிப்பார்கள். நாங்கள் யார் என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டால், எங்களை வீட்டில் தங்க வைத்தவர்களையும் கைது செய்துவிடுவார்கள்.—ரோ. 16:4.

அந்தச் சமயத்தில், நிறைய சகோதர சகோதரிகள் எங்களை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். அவர்களிடம் அவ்வளவாக காசு பணம் இல்லை என்றாலும் தாராளமாக கொடுத்தார்கள். சில இடங்களில் மக்களைவிட கொசுக்கள்தான் அதிகமாக இருக்கும். அப்போது, நாங்கள் இரவில் நன்றாகத் தூங்குவதற்காக, சகோதர சகோதரிகள் அவர்களிடம் இருக்கும் ஒரே கொசு வலையை எங்களுக்காக கொடுத்துவிடுவார்கள். வேறு சிலரிடம் கொஞ்சம்தான் சாப்பாடு இருக்கும். ஆனாலும் அவர்களுடைய வீட்டில் எங்களைத் தங்க வைக்க தயாராக இருந்தார்கள். சிலசமயங்களில், நாங்களும் அவர்களுக்காக சாப்பாடு கொண்டு போவோம்.

நாங்கள் சபைகளைச் சந்திக்கும்போது எங்களுடைய எல்லா பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போக முடியாது. அதனால், ஒரு பிள்ளையை மட்டும் கூட்டிக்கொண்டு போவோம். மற்ற பிள்ளைகளை, என் அம்மாவும் தங்கையும் கவனித்துக்கொள்வார்கள். ஒருவிதத்தில், குழந்தையைக் கூட்டிக்கொண்டு போவது எங்களுக்குப் பாதுகாப்புதான். சிலசமயங்களில், போலீஸ் எங்களுடைய பொருள்களைச் சோதனை செய்வார்கள். ஆனால், நாங்கள் பிரசுரங்களை அழுக்கு டயப்பர் போடுகிற ஒரு பையில் முன்பே ஒளித்து வைத்துவிடுவோம். ஏனென்றால், போலீஸ் அந்தப் பையில் தேட மாட்டார்கள்.

இத்தனை வருஷங்களாக முழுநேர சேவை செய்துகொண்டு, என்னையும் என் பிள்ளைகளையும் எமிலியா நன்றாகக் கவனித்துக்கொண்டாள். அதையெல்லாம் யோசித்துப் பார்க்கும்போது, அவளை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. என்னால் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டே வட்டாரக் கண்காணியாகவும் சேவை செய்ய முடிந்தது. சிலசமயங்களில், வாரத்தில் ஒன்று இரண்டு தடவை, தொடர்ந்து இரண்டு ஷிப்ட் வேலை பார்ப்பேன். அப்போதுதான் சனி-ஞாயிறுகளில் என்னால் சபைகளைச் சந்திக்க முடியும். கொஞ்ச நாட்கள் கழித்து, என்னுடைய வேலையில் மாற்றம் வந்தது. என்னிடம் அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்கிறவர்களை மேற்பார்வை செய்ய சொன்னார்கள். அதனால் வாரத்தில் ஏழு நாட்களும் நான் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதை என்னால் மாற்ற முடியவில்லை. ஆனால், அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தேன். அங்கே வேலை செய்கிறவர்களுக்கு, சனி-ஞாயிறுகளில் செய்வதற்குத் தேவையான வேலைகளைக் கொடுத்துவிட்டால் போதும். என்னுடைய வேலைகளையும் அவர்கள் கவனித்துக்கொள்வார்கள். என்னால் சபைகளைச் சந்திக்க முடிந்தது. சொல்லப்போனால், நான் சனி-ஞாயிறுகளில் வேலைக்கு வரவில்லை என்பது கடைசிவரை என் முதலாளிகளுக்குத் தெரியாது என்றுதான் நினைக்கிறேன்.

மாற்றங்கள் வந்தபோதும் சந்தோஷமாக இருந்தோம்

1994-ல் நடந்த ஒரு வட்டார மாநாட்டில் கஸ்டவோ பேச்சு கொடுக்கிறார்.

தடை நீக்கப்பட்ட பிறகு வெளிப்படையாக நடந்த முதல் மாவட்ட மாநாடு, 1994

1994-ல் ஒருநாள், கியூபாவில் நம்முடைய வேலைகளை முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள், எல்லா பயணக் கண்காணிகளையும் ஹவானாவில் நடந்த ஒரு விசேஷக் கூட்டத்துக்குக் கூப்பிட்டார்கள். நாங்கள் மொத்தம் 80 பேர் இருந்தோம். அத்தனை வருஷங்கள் கழித்து ஒருவரையொருவர் பார்த்தது ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. அந்தக் கூட்டத்தில், அமைப்பில் நடந்த சில மாற்றங்களைப் பற்றி முதலில் சொன்னார்கள். பிறகு அதிர்ச்சியான ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். எங்கள் எல்லாருடைய பெயர்களையும் அரசாங்க அதிகாரிகளிடம் கொடுக்கப்போவதாக சொன்னார்கள். ஆனால் ஏன் அப்படி முடிவெடுத்தார்கள்?

அதற்கான காரணத்தைச் சகோதரர்கள் எங்களிடம் சொன்னார்கள். அதாவது அரசாங்கத்துக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் இடையில் சுமுகமான உறவு இருப்பதற்காக, சகோதரர்கள் அதிகாரிகளைச் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்போதுதான், எல்லா பயணக் கண்காணிகளுடைய பெயர்களையும் அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். இதைச் சகோதரர்கள் எங்களிடம் சொன்னபோது நாங்களும் எங்களுடைய பெயர்களைக் கொடுக்க ஒத்துக்கொண்டோம். அதன் பிறகு, அரசாங்கத்துக்கும் சாட்சிகளுக்கும் நல்ல உறவு வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக எங்களால் ஒன்றாகக் கூடிவர முடிந்தது, வெளிப்படையாக ஊழியம் செய்யவும் முடிந்தது. ஆனாலும் எங்களுக்குச் சட்டப்பூர்வ அதிகாரம் அதுவரைக்கும் கிடைக்கவில்லை. பிறகுதான் எங்களுக்கு ஒரு விஷயம் தெரியவந்தது. சில பயணக் கண்காணிகளுடைய பெயர்கள் அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. ஆனால் நாங்கள் சரியான தகவல்களைத்தான் கொடுக்கிறோமா என்று பார்க்கத்தான் எங்களிடம் அதைக் கேட்டிருக்கிறார்கள்.

செப்டம்பர் 1994-ல் கிளை அலுவலகத்தைத் திறக்க எங்களுக்கு அனுமதி கிடைத்தது. 20 வருஷத்துக்கு முன்பு நாங்கள் பயன்படுத்திய அதே கட்டடத்தை எங்களால் மறுபடியும் பயன்படுத்த முடிந்தது.

1996-ல் பெத்தேலில் இருந்து எங்களுக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. பெத்தேலில் வந்து சேவை செய்ய முடியுமா என்று சகோதரர்கள் எங்களிடம் கேட்டார்கள். அதைக் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. என் இரண்டு பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று சகோதரர்களுக்கு ஞாபகப்படுத்தினேன். அப்போது என்னுடைய சூழ்நிலையைப் பற்றி யோசித்துப் பார்ப்பதாக சகோதரர்கள் சொன்னார்கள். பிறகு எங்களை மறுபடியும் தொடர்புகொண்டு, நாங்கள் பெத்தேலில் சேவை செய்ய அவர்கள் விரும்புவதாகச் சொன்னார்கள். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டோம். குடும்பமாக ஹவானாவுக்குக் குடிமாறிப் போனோம்.

படத்தொகுப்பு: 1. பெத்தேலில் தையல் டிபார்ட்மென்டில் எமிலியாவும் மற்ற சகோதரிகளும் வேலை செய்கிறார்கள். 2. ஒரு மாநாட்டு மன்றத்தில் கஸ்டவோ பேச்சு கொடுக்கிறார்.

(இடது) கியூபா கிளை அலுவலகத்தின் தையல் டிபார்மென்டில் எமிலியா வேலை செய்தபோது

(வலது) மாநாட்டு மன்ற அர்ப்பணிப்பு நிகழ்ச்சி, 2012

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் பெத்தேலில் சேவை செய்வது எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. நான் நிறைய வருஷங்கள் வட்டாரச் சேவையில் இருந்ததால் என்னுடைய மனதெல்லாம் ஊழியம் செய்வதில்தான் இருந்தது. அதனால், ஒரு ஆஃபிஸில் உட்கார்ந்திருப்பது எனக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால் பெத்தேலில் என்னோடு சேவை செய்தவர்களும், முக்கியமாக என் மனைவியும், என் எண்ணத்தை மாற்றிக்கொள்ள உதவினார்கள். போகப்போக என்னுடைய நியமிப்பில் எனக்குச் சந்தோஷம் கிடைத்தது. இப்போது நான் பெத்தேலில் ரொம்பச் சந்தோஷமாக சேவை செய்து கொண்டிருக்கிறேன்.

படத்தொகுப்பு: 1. கஸ்டவோ மேடையில் நிற்கிறார். அவருக்குப் பின்னால் நிற்கும், கிறிஸ்தவத் தம்பதிகளுக்கான பைபிள் பள்ளியில் பட்டம் வாங்கிய மாணவர்களைப் பார்த்து பேசுகிறார். 2. மற்ற நான்கு கிளை அலுவலக குழு அங்கத்தினர்களோடு கஸ்டவோ நிற்கிறார்.

(இடது) கிறிஸ்தவத் தம்பதிகளுக்கான பைபிள் பள்ளியின் பட்டமளிப்பு நிகழ்ச்சி, 2013

(வலது) கியூபா கிளை அலுவலக குழு, 2013

கஸ்டவோ மற்றும் எமிலியா தங்கள் மகளோடும் மருமகனோடும் இருக்கிறார்கள்.

ஒரு வட்டார மாநாட்டில் எங்கள் மகளோடும் மருமகனோடும்

எனக்கும் எமிலியாவுக்கும் இப்போது வயதாகிவிட்டது. இத்தனை வருஷங்களாக நிறைய சகோதர சகோதரிகளுடன் பழகவும் அவர்களோடு சேர்ந்து சேவை செய்யவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நினைத்து நாங்கள் ரொம்பச் சந்தோஷப்படுகிறோம். முக்கியமாக எங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் யெகோவாவுக்குச் சேவை செய்வதைப் பார்க்கும்போது இன்னும் சந்தோஷமாக இருக்கிறது. அப்போஸ்தலன் யோவான், வயதான காலத்தில் சொன்னதைத்தான் நாங்களும் சொல்கிறோம்: “என் பிள்ளைகள் தொடர்ந்து சத்தியத்தில் நடக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது ஏற்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் இல்லை.”—3 யோ. 4.

நானும் எமிலியாவும் கிட்டத்தட்ட 30 வருஷங்களாக பெத்தேலில் சேவை செய்துகொண்டிருக்கிறோம். இப்போது எங்களுக்கு வயதாகிவிட்டது, உடல்நலப் பிரச்சினையாலும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். ஆனாலும் இந்த நியமிப்பைச் செய்வதற்கு எங்களால் முடிந்ததை எல்லாம் செய்கிறோம். இத்தனை வருஷங்களாக யெகோவாவுக்கு நாங்கள் செய்த சேவையில், சில சவால்கள் இருந்ததுதான். ஆனாலும், கடந்த 70 வருஷங்களாக ‘சந்தோஷமுள்ள கடவுளான’ யெகோவாவுக்குச் சந்தோஷமாக சேவை செய்து வருகிறோம். கியூபா தீவில் நாங்கள் செய்த சேவை எங்களுக்கு நீங்காத நினைவுகளாக இருக்கிறது.—1 தீ. 1:11; சங். 97:1.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்