விழிப்புடன் இருங்கள்!
பொதுமக்களை யார் காப்பாற்றுவார்?—பைபிள் என்ன சொல்கிறது?
ஐ.நா. சபையின் அறிக்கையின்படி:
அக்டோபர் 7-23, 2023 வரை, காசா-இஸ்ரேல் போரில் 6,400-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர், 15,200-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள். அதோடு, ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு குடிமாற வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 24, 2023 வரை, ரஷ்யா-உக்ரைன் போரில் பொதுமக்கள் 9,701 பேர் கொல்லப்பட்டனர், 17,748 பேர் படுகாயமடைந்தனர்.
போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பைபிள் என்ன நம்பிக்கையைக் கொடுக்கிறது?
பைபிள் தரும் நம்பிக்கை
கடவுள், ‘பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுவார்’ என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 46:9) பரலோகத்தில் இருந்து ஆட்சி செய்கிற ஒரு அரசாங்கத்தைப் பயன்படுத்தி மனித அரசாங்கங்களை அவர் நீக்குவார். (தானியேல் 2:44) மனிதர்களுக்கு அந்த அரசாங்கம் நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்கும்.
அந்த அரசாங்கத்தின் ராஜாவான இயேசு கிறிஸ்து இதை செய்வார்:
“ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு அவர் உதவி செய்வார். எளியவனுக்கும் ஆதரவற்றவனுக்கும் கைகொடுப்பார். ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும் அவர்களை விடுவிப்பார்.”—சங்கீதம் 72:12-14.
இந்த அரசாங்கத்தின் மூலமாக, போராலும் வன்முறையாலும் ஏற்பட்ட எல்லா பாதிப்புகளையும் கடவுள் சரிசெய்வார்.
“அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன.”—வெளிப்படுத்துதல் 21:4.
“போர் முழக்கங்களையும் போர்ச் செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள்” என்று பைபிள் அன்றே சொன்னது. (மத்தேயு 24:6) இந்த சம்பவங்களும் வேறு சில சம்பவங்களும், மனித ஆட்சி “கடைசி” கட்டத்துக்கு வந்துவிட்டதைக் காட்டுகின்றன. (2 தீமோத்தேயு 3:1) சீக்கிரத்தில் கடவுளுடைய அரசாங்கம் பூமியில் பெரிய மாற்றங்களை செய்யும்.