விழிப்புடன் இருங்கள்!
மக்களால் ஏன் சமாதானமாக இருக்க முடியவில்லை?—பைபிள் என்ன சொல்கிறது?
உலகத்தில் இருக்கிற தலைவர்களாலும் சரி, சர்வதேச அமைப்புகளாலும் சரி, இந்த உலகத்துக்கு சமாதானத்தைக் கொண்டுவர முடியவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இப்போதுதான் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான போர்களும் வன்முறைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. உலக மக்கள் தொகையில் கால்வாசி மக்கள், அதாவது 200 கோடிக்கும் அதிகமான மக்கள், இந்த மாதிரி கலவரங்கள் நடக்கிற இடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
மனிதர்களால் ஏன் சமாதானத்தைக் கொண்டுவர முடியவில்லை? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
மூன்று காரணங்கள்
1. இன்று மக்களுடைய குணங்கள் ரொம்ப மோசமாக ஆகிவிட்டதால் அவர்களால் சமாதானமாக இருக்க முடியவில்லை. நம்முடைய காலத்தைப் பற்றிப் பைபிள் முன்பே இப்படிச் சொல்லியிருக்கிறது: “மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, . . . உண்மையில்லாதவர்களாக, . . . எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, . . . சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, . . . அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக” இருப்பார்கள்.—2 தீமோத்தேயு 3:2-4.
2. நம்மைப் படைத்த கடவுளாகிய யெகோவாவின்a உதவி இல்லாமல், பிரச்சினைகளைச் சரிசெய்யும் திறமை மனிதர்களுக்கு இல்லை. அது அவர்கள் ஒன்றுசேர்ந்து உழைத்தாலும் சரி, தனித்தனியாக முயற்சி செய்தாலும் சரி. “மனுஷனுக்குத் . . . தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை” என்று பைபிள் சொல்கிறது.—எரேமியா 10:23.
3. “உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற” பிசாசாகிய சாத்தானுடைய கட்டுப்பாட்டில்தான் இந்த முழு உலகமும் இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:9) அவன் பொல்லாதவன், அவனுக்கு சக்தியும் இருக்கிறது. “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில்” இருக்கும்வரை போரும் கலவரங்களும் நடந்துகொண்டுதான் இருக்கும்.—1 யோவான் 5:19.
யார் சமாதானத்தைக் கொண்டுவருவார்?
மனிதர்களால் அல்ல, கடவுளால் இந்த உலகத்துக்கு சமாதானத்தைக் கொண்டுவர முடியும் என்று பைபிள் நம்பிக்கைக் கொடுக்கிறது.
“யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் அழிந்துபோக வேண்டும் என்றல்ல, நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். உங்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கவே ஆசைப்படுகிறேன்.’”—எரேமியா 29:11.
இதைக் கடவுள் எப்படிச் செய்யப்போகிறார்? “சமாதானத்தைத் தருகிற கடவுள் சீக்கிரத்தில் சாத்தானை . . . நசுக்கிப்போடுவார்.” (ரோமர் 16:20) உலகம் முழுவதும் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக பரலோகத்தில் இருக்கும் ஒரு அரசாங்கத்தை கடவுள் பயன்படுத்துவார். அதுதான் “கடவுளுடைய அரசாங்கம்” என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 4:43) அந்த அரசாங்கத்தின் ராஜாவான இயேசு கிறிஸ்து, இந்த உலகத்தை ஆட்சி செய்யும்போது சமாதானமாக வாழ மக்களுக்குக் கற்றுக்கொடுப்பார்.—ஏசாயா 9:6, 7.
இதைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள “கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்யும்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.