தனிமையின் கொடுமை—பைபிள் என்ன சொல்கிறது?
உலகத்தில் இருக்கும் கிட்டத்தட்ட நாலு பேரில் ஒருவர் தனிமையின் பிடியில் சிக்கித் தவிப்பதாக சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கை சொல்கிறது.a
“யாரோடும் ஒட்டாமல் ஒதுங்கியிருக்கும் பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும், எங்கே இருக்கிறவர்களுக்கு வேண்டுமானாலும், எந்த வயதைச் சேர்ந்தவர்களுக்கு வேண்டுமானாலும் வரலாம்.”—சீடோ பெம்பா, உலக சுகாதார அமைப்பின் சமூக தொடர்பு ஆணையத்தின் இணைத்தலைவர்.
வயதானவர்களை அல்லது மற்றவர்களைவிட்டு ஒதுங்கியிருக்கிறவர்களை மட்டும்தான் தனிமை வாட்டும் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா? இளைஞர்கள், ஆரோக்கியமானவர்கள், வாழ்க்கையில் வெற்றிகளைக் குவித்தவர்கள், கல்யாணமானவர்கள் என யாரையுமே தனிமை விட்டுவைப்பதில்லை. மற்றவர்களோடு ஒட்டாமல் தனியாக ஒதுங்கியிருப்பது ஒருவருடைய உடலையும் மனதையும் ரொம்பவே வதைக்கலாம்.
“தனிமை என்பது நம் மனதை மட்டும் பாதிக்கும் ஒரு பிரச்சினை கிடையாது. அது நம் உயிருக்கே உலை வைத்துவிடலாம். சொல்லப்போனால், ஒரு நாளுக்கு 15 சிகிரெட் பிடிப்பது நம் உயிருக்கு எந்தளவு ஆபத்தானதோ அதே அளவுக்குத்தான் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பதும் ஆபத்தானது” என்று அமெரிக்க தலைமை அறுவை சிகிச்சையாளரான டாக்டர் விவேக் மூர்த்தி சொல்கிறார்.
பைபிள் என்ன சொல்கிறது?
நாம் மற்றவர்களோடு ஒட்டாமல் ஒதுங்கியிருக்கக் கூடாதென்று கடவுள் நினைக்கிறார். மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் சந்தோஷமாகப் பேசிப் பழகி நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பமே.
பைபிள் ஆலோசனை: “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல” என்று கடவுள் சொன்னார்.—ஆதியாகமம் 2:18.
எல்லாரும் தன்னுடைய நண்பராக வேண்டுமென்று கடவுள் ஆசைப்படுகிறார். நாம் அவரிடம் நெருங்கிப்போக முயற்சி எடுக்கும்போது அவரும் நம்மிடம் நெருங்கிவருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்.—யாக்கோபு 4:8.
பைபிள் ஆலோசனை: “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.”—மத்தேயு 5:3.
நாம் மற்றவர்களோடு சேர்ந்து கடவுளை வணங்க வேண்டுமென்று கடவுள் ஆசைப்படுகிறார். அப்படிச் செய்யும்போது நமக்கு சந்தோஷம் கிடைக்கும்.
பைபிள் ஆலோசனை: “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்; . . . சபைக் கூட்டங்களுக்கு வராமல் . . . இருந்துவிடக் கூடாது. . . . ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்.”—எபிரெயர் 10:24, 25.
தனிமையில் இருப்பதைத் தவிர்ப்பது ஏன் முக்கியம் என்பதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள “தனிமை உணர்வை சமாளிக்க...” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
a The Global State of Social Connections, by Meta and Gallup, 2023.