பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு
பிறந்த வருஷம்: 1967
பிறந்த நாடு: பின்லாந்து
என்னைப் பற்றி: டென்னிஸ் விளையாட்டு வீரன்
என் கடந்தகால வாழ்க்கை
பின்லாந்தில் இருக்கும் டாம்பேர் நகரத்தின் வெளிப்புறத்திலுள்ள அமைதியான, பச்சைப்பசேல் என்ற ஒரு பகுதியில் நான் வளர்ந்தேன். என் குடும்பத்தில் இருந்தவர்களுக்கு அவ்வளவாக மதப்பற்று இல்லை. ஆனால், படிப்புக்கும் நல்ல பழக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். என் அம்மா ஜெர்மனியைச் சேர்ந்தவர். சிறுவயதில் நான் அவ்வப்போது மேற்கு ஜெர்மனிக்குப் போய் என் தாத்தா பாட்டியோடு தங்குவேன்.
சின்ன வயதிலிருந்தே விளையாட்டு என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆரம்பத்தில், எல்லா விளையாட்டுகளையும் விளையாடினேன். ஆனால் எனக்கு 14 வயதானபோது, டென்னிஸில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். 16 வயதில், தினமும் இரண்டு தடவை பயிற்சி வகுப்புகளுக்குப் போனேன்; பிறகு சாயங்காலத்தில் நானாகவே பயிற்சி செய்தேன். இந்த விளையாட்டில் இருக்கும் வித்தியாசமான அம்சங்கள் எனக்குப் பிடித்திருந்தது. டென்னிஸ் விளையாடியபோது, என் மனதுக்கும் உடலுக்கும் நானே சவால் விடுவதுபோல் இருந்தது. நண்பர்களோடு நேரம் செலவிடுவதும், அவ்வப்போது பீர் குடிப்பதும் எனக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும், போதைப்பொருள்களுக்கோ மதுபானத்துக்கோ நான் அடிமையாகவில்லை. டென்னிஸைச் சுற்றியே என் வாழ்க்கை சுழன்றது; அதுதான் எனக்கு முக்கியமானதாக இருந்தது.
எனக்கு 17 வயதானபோது ஏடிபி போட்டி விளையாட்டுகளில் (ATP tournaments) கலந்துகொள்ள ஆரம்பித்தேன்.a நிறைய விளையாட்டுப் போட்டிகளில் ஜெயித்த பிறகு தேசிய அளவில் பிரபலம் அடைந்தேன். 22 வயதில், உலகின் 50 முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவனாக ஆனேன்.
பல வருஷங்களாக, உலகம் முழுவதும் நிறைய நாடுகளுக்குப் போய் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டேன். சில அழகான இடங்களைப் பார்க்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதேசமயம், நிறைய பிரச்சினைகள் உலகத்தில் இருந்ததை நான் புரிந்துகொண்டேன். எல்லா இடங்களிலும் மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தினார்கள், சுற்றுச்சூழலைக் கெடுத்தார்கள், குற்றச்செயல்களில்கூட ஈடுபட்டார்கள். சொல்லப்போனால், அமெரிக்காவிலுள்ள சில இடங்களில் குற்றச்செயல்கள் ரொம்ப அதிகமாக நடந்ததால், அங்கு போக வேண்டாம் என்று நாங்கள் எச்சரிக்கப்பட்டோம். இந்தப் பிரச்சினைகளையெல்லாம் பார்த்தபோது எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. ஒருபக்கம் வாழ்க்கையில் எனக்குப் பிடித்ததைத்தான் செய்துகொண்டிருந்தேன், ஆனால் இன்னொரு பக்கம், என் மனதில் ஒரு விதமான வெறுமை இருந்தது.
பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது
என் காதலி சான்னா யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தாள். மத விஷயங்களில் அவள் ஆர்வம் காட்டியதைப் பார்த்தபோது, எனக்குக் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. ஆனால், அவள் பைபிள் படிப்பதை நான் தடுக்கவில்லை. 1990-ல் நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். அடுத்த வருஷமே அவள் ஞானஸ்நானம் எடுத்து ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனாள். எனக்கு மதத்தில் அந்தளவுக்கு ஈடுபாடு இல்லை என்றாலும், கடவுள் நம்பிக்கை இருந்தது. ஜெர்மனியில் இருந்த என்னுடைய பாட்டியின் ஞாபகம் எனக்கு அடிக்கடி வரும்; அவர் எப்போதும் பைபிள் படித்துக்கொண்டிருப்பார். ஜெபம் செய்வதற்கு அவர்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார்.
ஒருநாள், நானும் சான்னாவும் யெகோவாவின் சாட்சியாக இருந்த காரி என்பவரையும் அவருடைய மனைவியையும் பார்க்கப் போயிருந்தோம். அப்போது காரி, ‘கடைசி நாட்களை’ பற்றிய பைபிள் தீர்க்கதரிசனத்தை எனக்குக் காட்டினார். (2 தீமோத்தேயு 3:1-5) அது என் மனதைத் தொட்டது. ஏனென்றால், உலகத்தில் ஏன் இவ்வளவு கெட்ட காரியங்கள் நடக்கின்றன என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. பைபிளைப் பற்றி அன்றைக்கு நாங்கள் வேறு எதுவும் பேசவில்லை. ஆனால், அதற்குப் பிறகு சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பைபிளைப் பற்றிப் பேசினோம். நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எல்லாமே எனக்கு நியாயமாகப் பட்டது. ஆனால், காரியை அடிக்கடி சந்திக்க முடியவில்லை. ஏனென்றால், நான் ரொம்ப பிஸியாக இருந்தேன். முக்கால்வாசி நேரம் ஊரிலேயே இருக்க மாட்டேன். ஆனாலும், காரி தன்னுடைய முயற்சியைக் கைவிடவே இல்லை. நான் அவரிடம் பேசியபோது கேட்ட கேள்விக்கெல்லாம் கடிதம் மூலம் எனக்குப் பதில் அனுப்பினார். வாழ்க்கை சம்பந்தப்பட்ட எல்லா முக்கியமான கேள்விகளுக்கும் பைபிளில் நியாயமான பதில்கள் இருந்ததைத் தெரிந்துகொண்டேன். கடவுள் தன்னுடைய விருப்பத்தைத் தன்னுடைய அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றுவார் என்பதுதான் பைபிளுடைய முக்கியப் பொருள் என்பதை நான் போகப்போகப் புரிந்துகொண்டேன். கடவுளுடைய பெயர் யெகோவா என்பதையும், அவர் நமக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதையும் படித்தபோது, ரொம்ப சந்தோஷமாக இருந்தது. (சங்கீதம் 83:18) முக்கியமாக, கடவுள் தன்னுடைய மகனின் உயிரையே நமக்காகக் கொடுத்திருக்கிறார் என்ற விஷயம் என் மனதை ரொம்பவும் தொட்டது. ஏனென்றால், வெறுமனே கடமைக்காக அல்லது சம்பிரதாயத்துக்காகக் கடவுள் இந்த ஏற்பாட்டைச் செய்யவில்லை, அன்பினால்தான் செய்தார். (யோவான் 3:16) நான் கடவுளுடைய நண்பராக ஆக முடியும் என்பதையும், சமாதானம் நிறைந்த பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ முடியும் என்பதையும் கற்றுக்கொண்டேன். (யாக்கோபு 4:8) அதன் பிறகு, ‘இதுக்கெல்லாம் நான் எப்படி நன்றி காட்டுறது?’ என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய வாழ்க்கையைப் பற்றி நான் ஆழமாக யோசிக்க ஆரம்பித்தேன். மற்றவர்களுக்குக் கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது என்று பைபிளிலிருந்து கற்றுக்கொண்டேன்; அதனால், நான் தெரிந்துகொண்ட விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். (அப்போஸ்தலர் 20:35) நான் போட்டி விளையாட்டுகளில் கலந்துகொண்டதால், வருஷத்தில் கிட்டத்தட்ட 200 நாள் வெளியூரில்தான் இருந்தேன். விளையாட்டிலேயே மூழ்கியிருந்த என்னுடைய வாழ்க்கை, என் குடும்பத்தில் இருந்த எல்லாரையுமே பாதித்தது. அதனால், நான் மாற்றம் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்.
கடவுளுக்காகப் பேரையும் புகழையும் பணத்தையும் உதறித்தள்ளுவது மற்றவர்களுக்கு முட்டாள்தனமாகத் தெரியும் என்று எனக்குப் புரிந்தது. ஆனால், யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொண்டு, முடிவில்லாத வாழ்க்கையைப் பெறுவதுதான் நான் விளையாடி ஜெயிக்கும் எந்தப் பரிசையும்விட மிகச் சிறந்த பரிசு என்றும் எனக்குப் புரிந்தது. அதனால், என்ன செய்யலாம் என்று முடிவெடுப்பது எனக்குக் கஷ்டமாக இருக்கவில்லை. ‘இது என்னோட வாழ்க்கை, நான்தான் தீர்மானம் எடுக்கணும். மத்தவங்க சொல்றதயெல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது’ என்று நினைத்தேன். அதைச் செய்ய எனக்கு ரொம்ப உதவியாக இருந்த ஒரு வசனம் சங்கீதம் 118:6: “யெகோவா என் பக்கத்தில் இருக்கிறார், நான் பயப்பட மாட்டேன். மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?”
இன்னும் பல வருஷத்துக்கு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு கைநிறைய சம்பாதிக்கவும்... கவலையே இல்லாமல் வாழவும்... வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. ஆனால், நான் ஏற்கெனவே தீர்மானம் எடுத்திருந்ததால் அந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் ஏடிபி விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதையே நான் நிறுத்திவிட்டேன். நான் தொடர்ந்து பைபிள் படித்தேன். ஜூலை 2, 1994-ல் ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சியாக ஆனேன்.
எனக்குக் கிடைத்த நன்மைகள்
வாழ்க்கையில் ஏதோவொரு சோகமான சம்பவம் ஏற்பட்டதால் நான் கடவுளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன் என்று சொல்ல முடியாது. அதேசமயத்தில், நான் உண்மைகளைத் தேடிக்கொண்டிருந்தேன் என்றும் சொல்ல முடியாது. என் வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது; குறை என்று சொல்ல பெரிதாக எதுவும் இல்லை. ஆனாலும், பைபிள் உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எதிர்பாராத விதத்தில் என்னைத் தேடிவந்தது. அப்போதுதான், வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் புரிந்தது. நான் நினைத்தே பார்க்காத அளவுக்கு இப்போது என் வாழ்க்கை முன்னேறியிருக்கிறது. எங்கள் குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் இன்னும் அதிகமாகியிருக்கிறது. என்னுடைய மூன்று மகன்களும் விளையாட்டு வீரர்களாக ஆகாமல் என்னைப் போலவே யெகோவாவின் சாட்சிகளாக ஆகியிருப்பதை நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இப்போதும் எனக்கு டென்னிஸ் விளையாட பிடிக்கும். நிறைய வருஷங்களாக, டென்னிஸ் சம்பந்தப்பட்ட வேலைகளைத்தான் செய்திருக்கிறேன். உதாரணத்துக்கு, டென்னிஸ் பயிற்சியாளராகவும் டென்னிஸ் விளையாட்டு மையத்தின் மேனேஜராகவும் வேலை செய்திருக்கிறேன். ஆனால், நான் இப்போது விளையாட்டே வாழ்க்கை என்று இல்லை. முன்பெல்லாம், டென்னிஸ் சாம்பியன் ஆவதற்கு ஒவ்வொரு வாரமும் நிறைய நேரம் பயிற்சி செய்வேன். ஆனால் இப்போது, என்னுடைய வாழ்க்கையை மாற்றிய பைபிள் போதனைகளை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதில் சந்தோஷமாக நேரம் செலவிடுகிறேன். யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடப்பதும், நல்ல எதிர்காலம் வரப்போவதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதும்தான் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைக்கிறேன். இதுதான் எனக்கு உண்மையான சந்தோஷத்தைத் தருகிறது.—1 தீமோத்தேயு 6:19.
a ஏடிபி என்பது டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் சங்கம். டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் (ஆண்கள்) வட்டாரத்தை நிர்வகித்த ஒரு குழுதான் இது. ஏடிபி சுற்றுப்பயணத்தில், நிறைய போட்டி விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்படும். அவற்றில் ஜெயிப்பவர்களுக்குப் புள்ளிகளும் பரிசுத் தொகையும் கிடைக்கும். இந்தப் போட்டிகளில் வீரர்கள் மொத்தம் எத்தனை புள்ளிகள் பெறுகிறார்களோ, அதைப் பொறுத்து அவர்களுடைய உலகத் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.