கடைசி நாட்கள் பஞ்சம், கொள்ளைநோய், தூய்மைக்கேடு —மற்றும் ராஜ்ய பிரசங்கிப்பு
“பசி பட்டினி இன்னொரு உருவில் தோன்றுகிறது. இடைவிடா பசி பட்டினியில் 700-க்கும் அதிகமான ஆட்கள் அவதியுறுகின்றனர். . . . பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத இந்தப் பசி பட்டினி 1.8 கோடி முதல் 2 கோடி மக்களைக் கொல்லுகிறது—இது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மரித்தவர்களின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.”—ஃப்ரான்சிஸ் மூர் லேப்பெ, ஜோசப் காலின்ஸ் எழுதிய உலக பசி—பன்னிரண்டு பழங்கதைகள் (World Hunger—Twelve Myths).
இயேசு முன்னறிவித்ததுபோல, நம்முடைய தலைமுறை பஞ்சத்தையும் உணவு பற்றாக்குறையையும் அனுபவித்திருக்கிறது, ஆனால் முன் தலைமுறைகளைவிட சில அம்சங்களில் காரணம் காட்ட முடியாத நிலையிலிருக்கிறது. ஏன் அப்படி? ஏனென்றால் நவீன தொழில்நுட்பமும், தொடர்பு முறைகளும் போக்குவரத்து வசதியும் பஞ்சத்தைக் கடந்த கால காரியமாக்கியிருக்க வேண்டும். என்றபோதிலும் ஏழை எளிய மக்களுக்கும் நிலமற்றவர்களுக்கும் ஏற்படுத்தப்படும் துன்பங்களைத் தவிர, நில உரிமைக்காரரும் அரசியல்வாதிகளும் மக்களை அடகுப் பொருட்களாகப் பயன்படுத்திவந்திருக்கின்றனர்.
பசி பட்டினியும் பஞ்சமும் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து பற்றியிருக்கிறது. 1987 செப்டம்பர் மாதத்தில், “வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளில் பசி பட்டினி மீண்டும் வேகமாக பரவிக் கொண்டிருக்க,” எத்தியோப்பியா மீண்டும் அதன் முற்றுகையின் கீழ் வந்திருக்கிறது என்று தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது. எத்தியோப்பியாவின் முன்னாள் பஞ்ச நிவாரண அதிகாரி பின்வருமாறு சொன்னார்: “இப்பொழுது ஏறக்குறைய ஐம்பது இலட்சம் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது, ஆனால் அது எந்தளவுக்கு மோசமாகப் போகும் என்பது நமக்குத் தெரியாது.”
அதே சமயத்தில் இந்திய துணைக்கண்டத்தின் அறிக்கைகளும் வறட்சியின் சித்திரத்தைத் தீட்டுகின்றன. வேளாண்மைத் துறை மந்திரி சொன்னார்: “இந்த வறட்சியினால் நம்முடைய மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 60 சதவிகிதத்தினர் பாதிக்கப்படுவர்.” மற்றும் “இதற்கு முன்னால் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தைவிட இது அதிகத்தைக் குறிக்கிறது, 78 கோடி மக்களில் 47 கோடி பாதிக்கப்படும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது,” என்றும் கூறினார். அந்த எண்ணிக்கையையும் மனித குடும்பத்தின்மீது அதன் பாதிப்பையும் நம்மால் உண்மையிலேயே ஜீரணிக்கவும் கிரகித்துக்கொள்ளவும் முடிகிறதா?
பஞ்சங்கள், வெள்ளங்கள், வறட்சிகள் ஆகியவற்றின் சுழற்சி அடிக்கடி ஏற்பட, அத்துடன் இரண்டு உலக மகா யுத்தங்களின்போதும் அவற்றிற்குப் பின்னாலும் உண்டாயிருந்த பசி பட்டினிக்குச் செலுத்தப்பட்ட விலையையும் கூட்டிப் பாருங்கள். 1945–46 நிலைமையின் பேரில் ஓர் எழுத்தாளர் பின்வருமாறு எழுதினார்: “அந்த யுத்தத்தின் விளைவாக உலகமுழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது, மேலும் ஐரோப்பா முழுவதும் நிலைமை . . . கொடுமையாக இருந்தது. ரஷ்யா, ருமேனியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் கடுமையான பஞ்சம் நேரிட இருந்தது, கிரீஸிலும் ஆயிரக்கணக்கானோர் பட்டினியில் சாவார்கள். பிரிட்டனின் தேசிய சரித்திரத்திலுங்கூட ரொட்டி முதல்முறையாக பங்கீட்டு முறையில் வழங்கப்பட இருந்தது.”
ஆம், கைகளில் பிடித்திருக்கும் தராசின் ஒரு ஜோடு தட்டுகளைக் காற்றில் அசைத்தவண்ணம் சவாரி செய்யும் பஞ்சமாகிய கறுப்புக் குதிரை தேசங்களினூடே பாய்ந்து இன்னும் மனிதவர்க்கத்தின் மேல் ஓடிக்கொண்டிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 6:5, 6.
கொள்ளை நோய்கள்
கடைசி நாட்களுக்கான அடையாளத்தின் ஒரு பாகம் “கொள்ளைநோய்கள்” என்று இயேசு முன்னறிவித்தார். (லூக்கா 21:11) நம்முடைய இந்த இருபதாம் நூற்றாண்டு தன் பாகமாக கொள்ளைநோய்களைக் கண்டிருக்கிறதா? முதல் உலக மகா யுத்தத்தின் முடிவுடன் ஆரம்பமான ஸ்பனிய ஜுரம் ஏறக்குறய 2 கோடி உயிர்களை மாய்த்தது. அதுமுதல் மனிதவர்க்கம், அதற்கு முன்னான தலைமுறைகளைப் போல நோய்களால் பாதிக்கப்படலாயின. விஞ்ஞானமும் மருத்துவமும் இந்தக் கடைசி நாட்களில் முன்னேறியிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நோயளிகளின் எண்ணிக்கையும், அதனால் மரிப்பவர்களின் எண்ணிக்கையும் இலட்சக்கணக்காக இருக்கின்றன.
செல்வச் செழிப்புள்ள மேற்கத்திய நாடுகளில் புற்றுநோய், இருதய நோய், ஏய்ட்ஸ் ஆகிய வியாதிகளின் சிகிச்சைக்காகவும் அதற்குரிய செலவை மேற்கொள்ள பணத்துக்காகவும் அடிக்கடி உதவி கோரப்படுகிறது. உண்மைதான், இந்த நோய்களினிமித்தமும் மற்ற வியாதிகளினிமித்தமும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் மரிக்கின்றனர். என்றபோதிலும், ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா முதலிய நாடுகளில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மக்களைக் கொல்லும் நோய்களும் இருக்கின்றன.
ரீனி டுபோஸ், உடல் நலத்தின் பொய்த் தோற்றம் (Mirage of Health) என்ற தன்னுடைய புத்தகத்தில் பின்வருமாறு எழுதினார்: “பின்தங்கிய அநேக பகுதிகளில் மலேரியா, ஓரணு உயிர் நுண்மங்களால் ஏற்படுகிற நோய்கள், வயிற்றுப்பூச்சி நோய்கள் ஆகியவை உடல் மற்றும் பொருளாதார துயர்நிலைக்கு ஊற்றாயிருக்கின்றன.” இதனால் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா முதலிய நாடுகளில் கொக்கிப் புழுவால் உண்டாகும் நோயால் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் மரிக்கின்றனர்.” இந்த நோய்களால் ஏற்படுத்தப்படும் துயர்நிலை அவற்றால் மரிக்கும் எண்ணிக்கையால் அளவிடப்படுவதில்லை. டுபோஸ் குறிப்பிடுவதாவது: “நோய்நுண்மங்களால் ஏற்படும் வியாதிகள் இன்னும் வெற்றிகொள்ளப்படவில்லை.”
டுபாஸ் தொடர்ந்து கூறுவதாவது: “மாறாக, [வெள்ளையனின்] தன்னலம் தன்னுடைய சொந்த நலம் தாங்கிய எந்த ஒரு கண்டுபிடிப்புக்கும் அறிவியல் வசியக் கவர்ச்சி அளித்திடச் செய்கிறது.” எனவே மேற்கத்திய உலகில் புற்றுநோய்க்கும் இருதய நோய்க்கும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது—பாலுறுப்புகள் மூலம் பரவும் நோய்களை மறப்பதற்கில்லை. ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஆண்டுதோறும் ஏறக்குறைய முப்பது இலட்சம் பேருக்குப் புதிதாக கொனோரியா என்ற பால்வினை நோய் ஏற்பட்டிருக்கிறது என்று ஒரு மருத்துவப் பத்திரிகை குறிப்பிடுகிறது.
ஆனால் நாம் முன்னேறிய உலகை ஆராய்ந்தாலும் சரி, அல்லது பின்தங்கிய உலகை ஆராய்ந்தாலும் சரி, திருவெளிப்பாட்டின் நான்காவது குதிரைக்கு, ‘மரணமாகிய மங்கியநிற குதிரைக்கும் கொள்ளைநோய்க்கும்’ நாம் அத்தாட்சியை காண்கிறோம்.—வெளிப்படுத்துதல் 6:8.
பூமியைக் கெடுத்தல்
உலக அளவில் தூய்மைக்கேடு, இயற்கைவளத்தைத் தன்னலம் கருதி சுரண்டியெடுத்தல், கவலையீனம் மற்றும் காடுகளை அழித்தல் மூலமாக மனிதன் தன்னுடைய சொந்த உயிர்ச்சூழலின் நேர்த்தியான இயற்கையின் சமநிலையைக் கெடுத்து அழிக்க ஆரம்பித்துவிட்டான்.
மழையும் பனியும் நிலக்கரி மற்றும் எண்ணை எரிசக்தி ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் வாயுக்களில் (வெடியம் மற்றும் கந்தக வாயுக்களில்) கலப்பதால் ஏற்படும் திராவக மழை அல்லது உறை மழை வடதுருவ ஏரிகளையும் காடுகளையும் பாதிக்கின்றன. பூமி (Earth) என்ற புத்தகத்தின் எழுத்தாளர்கள் குறிப்பிட்டதாவது: “திராவக மழையின் ஒரு விளைவு, நியு இங்கிலாந்து ஸ்கண்டிநேவிய நாடுகள் போன்ற பிரதேசங்களில் அநேக ஏரிகள் உயிர் வகை மிகுந்ததும் இயற்கையில் சமநிலைக்குப் பெரிதும் உதவக்கூடியதுமான நிலையிலிருந்து உயிர்சத்திழந்ததும், சிலசமயங்களில் செத்துப்போன நீர்த்தேக்கங்களாகவும் மாறியிருக்கின்றன. உதாரணமாக, ஆடிரான்டேக்ஸிலுள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளிலுள்ள எல்லா மீன்களும் கொல்லப்பட்டன, ஏறக்குறைய 50,000 கானடா தேசத்து ஏரிகளும் அதே நிலையை எதிர்ப்படுகின்றன.”
காடுகளைக் குறித்ததிலோ, அநேகம் “இறக்கும் காடு” என்று அழைக்கப்படும் துயர்நிலை அடைந்திருக்கின்றன. “கிழக்கு ஐரோப்பா, சோவியத் ரஷ்யா, இத்தாலி, ஸ்பய்ன், கானடா, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் மேல் மத்திய மேற்குப் பகுதிகளில் ‘இறக்கும் காடு’க்குரிய நோய்க்குறிகள் கவனிக்கப்படுகிறது.” அதே எழுத்தாளர்கள் தொடர்ந்து குறிப்பிடுவதாவது: “ஒரு கருத்தில், மனிதவர்க்கம் ஒரு பிரமாண்டமான செய்முறையில் ஈடுபட்டிருக்கிறது, அதாவது, பூகோளத்தின் ஒரு பாதியை (ஒருவேளை மற்ற பாதியின் பகுதிகளைக்கூட) பேரளவில் நச்சுப்படுத்தி, பின்பு என்ன ஏற்படப்போகிறது என்பதைக் காத்திருந்து பார்க்கிறது.”
இன்னொரு கடினமான அம்சத்தாலும் இந்த உயிர்க்கோள் அழுத்தத்திற்குள்ளாகிறது—உலக மக்கள் தொகை ஐந்நூறு கோடியைக் கடந்துவிட்டது. உயிர்நூலர் ஆனியும் பால் எர்லிச்சும் கூறுகிறார்கள்: “அறிவுக்கூர்மைப்படைத்த இனத்தின் (மனிதவர்க்கம், Homo sapiens) பெருக்கத்தினால் அநேகமாக எல்லா உயிர் வகைகளும் அல்லற்படுகின்றன.” மனிதன் விரிவுபடுத்துகிறான், இயற்கை வளத்தைச் சுரண்டித்தள்ளுகிறான். எதிர்கால தலைமுறை தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வியற்கை வளங்களை மனிதன் மனச்சாட்சியின்றி பயன்படுத்துவதால் ஆறுகளும், கடல்களும் மகா சமுத்திரங்களும் அசுத்தப்படுத்தப்படுகின்றன. மகா சமுத்திரங்கள் உள்ளூர் கழிவுக்கூடமாக, பூமியில் உயிர்வாழ்வுக்குத் தேவையற்ற துணைப்பகுதியாகக் கருதப்பட்டு கழிவுநீர், குப்பை, வேதியல் நச்சுப்பொருட்கள் ஆகியவை அவற்றில் கொட்டப்படுகின்றன.
எனவே மனித சரித்திரத்தில் பூமியை நேரடியாகவே நச்சுப்படுத்தக்கூடியதாய் இருந்திருக்கும் தலைமுறை இதுவே. இப்பொழுது, கடவுள் “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்” என்ற வெளிப்படுத்துதல் 11:18-ன் தீர்க்கதரிசனம் முதல் முறையாக நிறைவேற்றப்படக்கூடும். அது “முடிவு காலத்தின்” முடிவில் நிகழ வேண்டும்.—தானியேல் 12:4.
தனித்தன்மை வாய்ந்த ஒரு விசேஷ வேலை
அற்புதமான வகையில் நிறைவேற்றம் காணும் இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் இன்னொரு அம்சமும் இருக்கிறது. முடிவு வருவதற்கு முன்பு எல்லா தேசங்களிலும் ஒரு பெரிய பிரசங்க வேலை, சாட்சி கொடுக்கும் வேலை நடைபெற வேண்டும் என்று அவர் முன்னறிவித்தார். (மத்தேயு 24:14; மாற்கு 13:10) அது 1914-ன் சந்ததியின் அல்லது தலைமுறையின் காலப்பகுதிக்குள் செய்துமுடிக்கப்படும். இது இந்த 20-வது நூற்றாண்டில்தான் கூடிய காரியமாகியிருக்கிறது, ஏனென்றால், போக்குவரத்து, செய்தித்தொடர்பு, கணிமங்கள், அச்சு ஆகிய துறைகளில் நவீன முன்னேற்றங்கள், யெகோவாவின் சாட்சிகளைத் தங்களுடைய பிரமாண்டமான கல்வி சம்பந்தப்பட்ட வேலையை பூமி முழுவதும் ஏறக்குறைய 200 மொழிகளில் விஸ்தரிக்கச் செய்திருக்கின்றன.
இப்பொழுது யெகோவாவின் சாட்சிகள் காவற்கோபுரம் பத்திரிகையை 104 மொழிகளில் வெளியிடுகின்றனர்! ஒவ்வொரு வெளியீடும் 1.3 கோடி பிரதிகளுக்கும் அதிகமாக விநியோகிக்கப்படுகிறது. நீங்கள் வாசிக்கும் இந்தப் பத்திரிகை 54 மொழிகளில் பிரசுரிக்கப்படுகிறது, ஒவ்வொரு வெளியீடும் 1.1 கோடி பிரதிகள் அச்சடிக்கப்படுகின்றன. முப்பத்தைந்து இலட்சத்துக்கும் அதிகமான சாட்சிகள் தங்களுடைய ஊழியத்திலே கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை 212 நாடுகளில் ஒழுங்காக அறிவித்துவருகின்றனர்.
தம்மை உண்மையாகப் பின்பற்றுபவர்களுக்குத் துன்புறுத்துதல் ஏற்படும் என்று இயேசு முன்னறிவித்த உலகளாவிய துன்புறுத்துதலின் மத்தியிலும் இந்த வேலை நடைபெறுகிறது. ஆம், உலக முழுவதுமாகச் செய்யப்பட்டுவரும் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையும், அவர்கள் பிழைத்திருப்பதும்தானே நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கின்றன!—மாற்கு 13:9, 10.
உச்சக்கட்டம் அண்மையிலிருக்கிறது
இப்படியாக, இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் நவீன நிறைவேற்றத்தில், இந்தச் சம்பவங்கள் அனைத்துமே இயேசு காணக்கூடாதவராக வந்திருத்தலுக்கும் கடைசி நாட்களுக்கும், அல்லது “இந்தக் காரிய ஒழுங்குமுறைகளின் முடிவு”க்கும் ஒரு கூட்டு அடையாளமாக அமைகிறது. (மத்தேயு 24:3) (பக்கம் 11-லுள்ள பெட்டிப் பகுதியைப் பார்க்கவும்.) அவை ஒரு திருகுவெட்டுப்புதிர் போன்று ஒன்று சேர்ந்து, “இவை இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடைசி நாட்கள்,” என்று சொல்லும் ஒரு முழு படமாக அமைகிறது.—2 தீமோத்தேயு 3:1–5, 12, 13-ஐயும் பார்க்கவும்.
இயேசு முன்னறிவித்த நிலைமைகளில் பல முன்னால் இருந்த தலைமுறைகளில் தனித்தனியாக இருந்தன என்றாலும், அவை இதற்கு முன் எந்த சமயத்திலும் ஒரே தலைமுறையில் ஒட்டுமொத்தமாக இருந்ததில்லை. நாம் ஏற்கெனவே பார்த்தது போல, அவற்றில் சில இதற்கு முன்னான எந்த ஒரு தலைமுறையிலும் சம்பவித்ததில்லை, சம்பவித்திருக்கவும் முடியாது. அவற்றில் சில இந்தத் தலைமுறை முழுவதுமாக ஒழிந்துபோவதற்கு முன்பு முழு நிறைவேற்றத்தைக் காண காத்திருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகள் அதிக ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் மற்ற சம்பவங்களும் இப்பொழுது காத்துக்கொண்டிருக்கின்றன. கடவுள் தம்முடைய ராஜ்ய ஆட்சியைப் பூமியின் மீது செலுத்துவதற்கு அந்தச் சம்பவங்கள் முற்சம்பவங்களாக இருக்கின்றன. எனவே இப்பொழுது கேள்வி, அடுத்து என்ன? (g88 4⁄8)
[பக்கம் 11-ன் பெட்டி]
பக்கம் 7-லுள்ள கேள்விகளுக்குப் பதில்கள்a
1. மத்தேயு 24:7—இரண்டு உலக மகா யுத்தங்கள் (1914–18; 1939–45); ஸ்பானிய உள்நாட்டுக் கலகம் (1936–39); வியட்னாம் போர்; கொரியா போர்; ஈரான்–ஈராக் போர்; மத்திய கிழக்குப் போர்களும் மற்றவையும்.
2. மத்தேயு 24:7—பூமியதிர்ச்சிகள்: 1920 மற்றும் 1932, கன்சூ, சீனா, முறையே 2,00,000 பேரும் 70,000 பேரும் மாண்டனர்; 1923, கேன்டோ, ஜப்பான், 1,42,000 பேர் மாண்டனர்; 1935, குவெட்டா, பாக்கிஸ்தான், 60,000 பேர் மாண்டனர்; 1939, சில்லியன், சில்லி, 30,000 பேர் மாண்டனர்; 1939, எர்ஸின்கன், துருக்கி, 30,000 பேர் மாண்டனர்; 1960, அகாடிர், மொராக்கோ, 12,000 பேர் மாண்டனர்; 1970, பெரு, 66,700 பேர் மாண்டனர்; 1972, மனாகுவா, நிக்கராகுவா, 5,000 பேர் மாண்டனர்; 1976, குவாட்டிமாலா நகரம், குவாட்டிமாலா, 23,000 பேர் மாண்டனர்; 1976, டாங்ஷான், சீனா, 8,00,000 பேர் மாண்டனர்.
3. லூக்கா 21:11—இருதய நோய்; புற்று நோய்; ஏய்ட்ஸ் நோய்; ஆனைக்கால் காய்ச்சல்; மலேரியா காய்ச்சல்; பாலுறுப்புகள் மூலம் பரவும் நோய்கள்.
4. லூக்கா 21:11—பஞ்சம்: 1920–22, வடக்குச் சீனா, 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது; 1943–44, இந்தியா, 15,00,000 பேர் மரித்தனர்; 1967–69, நைஜீரியா, 15,00,000 பேருக்கும் அதிகமான பிள்ளைகள் மரித்தனர்; 1975–79, கம்பூச்சியா, 10,00,000 பேர் மரித்தனர்; 1983–87, கருப்பர் ஆப்பரிக்கா, 2.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
5. மத்தேயு 24:11—கரிஸ்மாட்டிக் மதத் தலைவர்கள், தொலைக்காட்சி மேசியாக்கள், குருக்கள் தொடர்ந்து இலட்சக்கணக்கானோரை மோசம்போக்குகின்றனர்.
6. மத்தேயு 24:12; 2 தீமோத்தேயு 3:13—குற்றச்செயல், வன்முறை, கடமை தவறுதல், போதை மருந்தின் துர்ப்பிரயோகம் ஆகியவை உலகின் பெரும் பகுதிகளில் பொதுவாகக் காணப்படுகிறது. உலக போதைப் பொருட்களின் வியாபாரம் கொடிய போதைப் பெருமான்களையும் கொலைக்காரரையும் பிறப்பித்திருக்கிறது.
7. மத்தேயு 24:12—கதவுகள் பூட்டப்பட்டு இரும்பு அணைப்புகள் கொடுக்கப்படுகின்றன; சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக தாக்குதல் செய்யும் நாய்கள் வளர்க்கப்படுகின்றன; அயலகத்தார் அநேக சமயங்களில் அந்நியராக இருக்கின்றனர்.
8. வெளிப்படுத்துதல் 17:3, 8–11—சர்வதேச சங்கமும், ஐக்கிய நாட்டுச் சபையும்.
9. லூக்கா 21:26—இரண்டு உலக மகா யுத்தங்கள் சொல்லொண்ணா துயரத்தையும் தத்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. 1945 முதல் இருந்துவரும் அணு ஆயுத பேரழிவின் திகில் உலக முழுவதும் பயத்தையும் கவலையையும் பரப்பியிருக்கிறது.
10. மத்தேயு 24:14—முப்பது இலட்சத்துக்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை ஏறக்குறைய 200 மொழிகளில் பிரசங்கித்து வருகின்றனர்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தப் பட்டியல் சம்பவங்களின் ஒரு மாதிரி பட்டியலாக இருக்கிறது, அது முழுமைப் பெறவில்லை.
[பக்கம் 10-ன் படங்கள்]
பஞ்சம் பூகோளத்தின் பெரும் பகுதியை வேதனையில் ஆழ்த்துகிறது
மற்ற எல்லா உயிரினங்களுடன் பகிர்ந்துகொள்ளும் உயிர்க்கோளை மனிதன் நச்சுப்படுத்துகிறான்
பல்வேறு வியாதிகளால் பல இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்
தனித்தன்மை வாய்ந்த ஓர் எச்சரிப்பு வேலை உலக முழுவதும் ஏறக்குறைய 200 மொழிகளில் செய்யப்பட்டுவருகிறது