பரிணாமக் கொள்கையின் விளைவுகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையில் இருந்த உறவுமுறை ஓரளவு சுமுகமானதாகவே இருந்துவந்தது. உயிரின தோற்றம் வெளியிடுவதற்கு இரண்டே இரண்டு வருடங்களுக்கு முன்பு, உயிரினங்கள், “முன்யோசனை, ஞானம், பெருந்தன்மை,” போன்ற குணாதிசயங்களைக் காட்டுகின்றன என்றும், இயற்கையின் வரலாற்றுடைய முக்கிய நோக்கம்தானே, “இந்த அண்டத்தின் படைப்பாளருடைய எண்ணங்களை,” அலசி ஆராய்ந்து பார்ப்பதாக இருக்கிறது என்றும் உயிரியல் வல்லுநரும் ஹவர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான லூயிஸ் அகாசிஸ் எழுதினார்.
அகாசிஸ் தெரிவித்த நோக்குநிலை ஒன்றும் வழக்கத்திற்கு மாறானதாக இல்லை. அறிவியலும் மதமும் ஒத்திசைந்து போகும் என்று அநேகர் கருதினர். விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மகத்தான படைப்பாளருக்கான ஒரு அத்தாட்சியாக பெரும்பாலும் கருதப்பட்டன. ஆனால் கண்டுபிடிக்க முடியாத வகையில் மதத்திற்கும் அறிவியலுக்குமிடையே ஒரு இடைவெளி தோன்றிக்கொண்டிருந்தது.
சந்தேகம் வளர ஆரம்பிக்கிறது
1830-ம் ஆண்டு வெளிவந்த, சார்லஸ் லையலின் பிரின்ஸிப்பல்ஸ் ஆஃப் ஜியாலஜி என்ற புத்தகத்தின் முதல் தொகுதி, படைப்பைப் பற்றிய பைபிள் பதிவுகளை சந்தேகித்தது. படைப்பு ஆறு சொல்லர்த்தமான நாட்களில் ஒருவேளை நடந்தேறியிருக்க முடியாது என்று லையல் வலியுறுத்திக் கூறினார். “ஏதாவதொரு வழியில் ஏதாவது ஒரு அம்சத்தில் பைபிள் தவறானதாக இருக்கக்கூடும், என்று பொதுவாக உலகை நம்பவைத்ததற்கு லையல் எழுதின புத்தகங்கள் பெரும் பொறுப்பாளிகளாக இருந்தன. இது அதுவரையாக நினைத்துக்கூட பார்க்கக்கூடாத ஒரு எண்ணமாக இருந்தது,” என்று எழுதினார் இயற்பியல் வல்லுநர் ஃப்ரெட் ஹாய்ல். a
இவ்வாறு சந்தேகத்திற்கான ஒரு அடித்தளம் போடப்பட்டது. பலருடைய எண்ணத்தில், அறிவியலும் பைபிளும் இனியும் ஒத்திசைவிக்க முடியாதவையாக இருந்தன. தெரிவை எதிர்ப்படும்போதெல்லாம் அநேகருடைய தெரிவு அறிவியலாகவே இருந்தது. “லையலின் புத்தகங்கள் பழைய ஏற்பாட்டின் ஆரம்ப அதிகாரங்களை சந்தேகத்திற்குள்ளாக்கின. அதை மாற்றீடு செய்ய டார்வினுடைய புத்தகம் இருந்தது,” என்று ஃப்ரெட் ஹாய்ல் எழுதினார்.
பைபிளை கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்களுக்கு உயிரின தோற்றம் புத்தகம் தக்க சமயத்தில் வந்தது. மனிதனுக்கும் அறிவியலுக்கும் இடையே ஏற்கெனவே காதல் மலர்ந்திருந்தது. ஏற்கெனவே மோகம் கொண்டிருந்த பொதுமக்கள் அறிவியலின் வாக்குறுதிகளாலும் சாதனைகளாலும் வசீகரிக்கப்பட்டனர். காதலியை மணந்துகொள்ளவிருக்கும் காதலனைப்போல, தொலைநோக்கி, நுண்ணோக்கி, நீராவி எஞ்சின், பிறகு மின்சாரம், தொலைபேசி, தானியங்கும் ஊர்தி—என்று ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளின் பரிசுமழையை அறிவியல் மனிதனின்மேல் பொழிந்தது. தொழில்நுட்பம் ஏற்கெனவே ஒரு தொழில்புரட்சியை உருவாக்கியிருந்தது. இது சாதாரண மனிதனுக்கு என்றும் இல்லாத அளவு பொருளாதார அனுகூலங்களைக் கொடுத்தது.
இதற்கு நேர்மாறாக, மதமானது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகக் கருதப்பட்டது. இது மக்களை, அதிவிரைவில் முன்னேறிவரும் அறிவியலோடு சேர்ந்து முன்னேறவிடாமல் மந்தநிலையில் வைத்திருந்ததென்று ஒருசிலர் யோசித்தனர். நாத்திகர்கள் தங்கள் கருத்துகளை சப்தமாகவும் தைரியமாகவும் பிரகடனப்படுத்தத் தொடங்கினர். மெய்யாகவே, ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதியதுபோல, “ஒரு ஆள் அறிவுப்பூர்வமாக திருப்தி செய்யப்பட்ட நாத்திகனாக இருப்பதை டார்வின் சாத்தியப்படுத்தினார்.” அறிவியல் மனிதவர்க்கத்தின் ரட்சிப்புக்கான புதிய நம்பிக்கையாக ஆகிக்கொண்டு வந்தது.
முதன்முதலில், மதத்தலைவர்கள் பரிணாமக் கொள்கையை எதிர்த்தனர். ஆனால் பத்தாண்டுகள் கடந்து செல்கையில் குருமார்கள் பொதுவாக, எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்குத் தலைவணங்கி, பரிணாமமும் படைப்பும் கலந்த ஒரு கலவையை ஏற்றுக்கொண்டனர். “சர்ச் ஆஃப் இங்லாண்டின் அறிக்கை பரிணாம ரீதியிலான படைப்புக் கருத்தை ஆதரிக்கிறது,” என்று 1938-ம் வருடத்திய நியூ யார்க் டைம்ஸ் தலைப்புச் செய்தி அறிவித்தது. யார்க்கின் ஆர்ச்பிஷப் தலைமையிலான ஒரு கமிஷனின் அறிக்கை கூறியதாவது: “ஆதியாகமம் 1 மற்றும் 2-ல் உள்ள இரண்டு படைப்பு பதிவுகளிலிருந்தும் பரிணாமக் கொள்கைக்கு எந்தவித மறுப்பையும் நம்மால் பெறமுடியாது. ஏனென்றால் இவையெல்லாம் கட்டுக்கதைகளிலிருந்து தொடங்கியவை என்பதும், இவற்றால் நமக்கு ஏற்படும் நன்மைகள் வரலாற்றுப்பூர்வமானவையாக இருப்பதைவிட அடையாள அர்த்தமுடையவையாகவே இருக்கின்றன என்பதும் படிப்பறிவுள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே.” இந்த ஆர்ச்பிஷப்பின் கமிஷன் முடித்தவிதமாவது: “உங்களுக்கு இஷ்டமானதையே நினைத்துக்கொண்டு அதேசமயம் கிறிஸ்தவர்களாகவும் இருக்கலாம்.”
அநேக மக்களுக்கு, பைபிளை பரிணாமத்தோடு சமரசம் செய்து வைக்க எடுத்த இத்தகைய முயற்சிகள் பைபிளின் நம்பத்தகுந்த தன்மையை பலவீனமடையத்தான் செய்தன. இது பரவலாக பைபிளை சந்தேகிப்பதில் விளைவடைந்தது, மேலும் இதுநாள்வரை, மதத்தலைவர்கள் மத்தியிலும்கூட தொடர்ந்திருக்கிறது. பைபிள் விஞ்ஞான யுகத்திற்குமுன் எழுதப்பட்டதாகையால் பாரபட்சத்தையும் அறியாமையையும் அது வெளிக்காட்டியது என்று வலியுறுத்திக்கூறிய கனடாவைச் சேர்ந்த ஒரு எப்பிஸ்கோப்பல் பிஷப்பின் கூற்றுகள் சரியான உதாரணமாக இருக்கின்றன. பைபிளில் இயேசுவின் பிறப்பைக் குறித்தும் உயிர்த்தெழுதலைக் குறித்தும் “வரலாற்றுத் தவறுகளும்,” “அப்பட்டமான மிகைப்படுத்தல்களும்” இருக்கின்றன என்று அவர் கூறினார்.
இவ்வாறு குருவர்க்க அங்கத்தினர்களையும் உட்படுத்தும் அநேகர் எவ்வித தயக்கமுமின்றி பைபிளை சந்தேகித்திருக்கின்றனர். ஆனால் அத்தகைய சந்தேகம் எதற்கு வழிநடத்தியிருக்கிறது? என்ன மாற்று நம்பிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது? பைபிள்மீதுள்ள பலவீனப்படுத்தப்பட்ட விசுவாத்தோடு சிலர் தத்துவஞானத்தையும் அரசியலையும் எதிர்நோக்கியிருக்கின்றனர்.
தத்துவஞானம் மற்றும் அரசியல் மீதான விளைவுகள்
உயிரின தோற்றம் என்ற புத்தகம் மனித நடத்தையின் மீது புதிய ஒரு கண்ணோட்டத்தை அளித்தது. ஒரு தேசம் மற்றொரு தேசத்தைக் கீழ்ப்படுத்துவதில் வெற்றிகாண்பதேன்? ஒரு இனம் மற்றொரு இனத்தின்மீது ஆதிக்கம் செலுத்துவது ஏன்? இயற்கை வழித்தேர்ந்தெடுப்பு மற்றும் தக்கவை வாழ்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த உயிரின தோற்றம் என்ற புத்தகம், 19-ம் நூற்றாண்டில் முன்னணியில் நின்ற தத்துவஞானிகளை செயலாற்றும்படி கிளர்ந்தெழவைத்த விளக்கங்களைத் தந்தது.
ஃப்ரீட்ரிக் நீச்ச (1844-1900) மற்றும் கார்ல் மார்க்ஸ் (1818-1883) ஆகியோர் அரசியல்மீது பெரும்பாதிப்பைக் கொண்டிருந்த தத்துவஞானிகளாக இருந்தனர். இவர்கள் இருவருமே பரிணாமத்தினால் கவர்ந்திழுக்கப்பட்டனர். கார்ல் மார்க்ஸ் சொன்னார்: “டார்வினுடைய புத்தகம் முக்கியமான புத்தகமாக இருக்கிறது; அது வரலாற்றில் வகுப்புவாத போராட்டத்திற்கு ஒரு இயற்கை அறிவியல் ஆதாரமாக எனக்கு உதவுகிறது.” வரலாற்று ஆசிரியராகிய வில் ட்யூரன்ட் என்பவர் நீச்சயை “டார்வினின் பிள்ளை” என்று அழைத்தார். ஃபிலாசஃபி—என் அவுட்லைன்-ஹிஸ்டரி என்ற புத்தகம் நீச்சயின் நம்பிக்கைகளில் ஒன்றை இவ்வாறு சுருக்கி விவரித்தது: “பலம் வாய்ந்த, தைரியமுள்ள, அடக்கியாளும், கர்வமுள்ள மக்களே எதிர்கால சமுதாயத்திற்கு மிகப் பொருத்தமான ஜனங்களாக இருக்கின்றனர்.”
எதிர்காலத்தில், “உலகம் முழுவதிலும் எண்ணற்ற தாழ்ந்த இனங்கள், நாகரீகமடைந்த உயர்ந்த இனங்களால் துடைத்தழிக்கப்பட்டிருக்கும்,” என்பதாக டார்வின் நம்பினார், தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்திலும் இதையேதான் எழுதினார். ஐரோப்பியர்கள் மற்றவர்களைக் கீழ்ப்படுத்தியதை இதற்கு முன்னுதாரணமாக அவர் உபயோகித்து, இதற்கு உயிர்களிடையே ஏற்படும் “வாழ்வுப் போராட்டம்”தான் காரணம் என்பதாகக் காட்டினார்.
பலம் வாய்ந்தவர்கள் இத்தகைய கூற்றுகளை தங்கள் அனுகூலத்திற்காக பயன்படுத்திக்கொள்ள சிறிதும் தாமதிக்கவில்லை. ஹெச். ஜி. வெல்ஸ் தி அவுட்லைன் ஆஃப் ஹிஸ்டரி என்ற புத்தகத்தில் எழுதினார்: “பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்த பலம் வாய்ந்த மக்கள், பலவீனரையும் சார்ந்திருப்போரையும் தோற்கடித்த, வாழ்வுப் போராட்டத்தால்தான் உறுதி வாய்ந்தவர்களும் தந்திரமுள்ளவர்களும் மேலோங்க முடிந்தது என்பதாக நம்பினர். மேலும், அவர்கள் பலமுள்ள, கடுமையான உழைப்பாளிகளாக, இரக்கமற்ற, ‘நடைமுறையான’ தற்பெருமையுள்ள ஆட்களாக இருக்கவேண்டும் என்றும் நம்பினர்.”
இவ்வாறு “தக்கவை வாழ்தல்” என்பது அடிக்கடி பொருத்தமில்லாத வகையில் தத்துவ, சமூக, அரசியல் ரீதியிலான அர்த்தங்களை ஏற்றது. “சிலருக்கு யுத்தம் என்பது ‘உயிரியல் அத்தியாவசியம்’ என்றாகிவிட்டது” என்று மைல்ஸ்டோன்ஸ் ஆஃப் ஹிஸ்டரி என்ற புத்தகம் சொன்னது. மேலும் அடுத்த நூற்றாண்டில் “டார்வினின் கருத்துகள் ஹிட்லரின் உயர்ந்த இனக் கோட்பாட்டின் இன்றியமையாத பாகத்தை உருவாக்கின,” என்று இந்தப் புத்தகம் குறிப்பிட்டது.
சந்தேகமின்றி, டார்வினோ, கார்ல் மார்க்ஸோ, நீச்சவோ தங்களுடைய கருத்துகள் எவ்வாறு பொருத்தப்படும்—அல்லது தவறாகப் பொருத்தப்படும் என்பதைப் பார்ப்பதற்கு வாழ்ந்திருக்கவில்லை. மெய்யாகவே, வாழ்வுப் போராட்டம் மனிதனின் வாழ்க்கையை முன்னேற்றும் என்றுதான் அவர்கள் எதிர்பார்த்தார்கள். “அனைத்து உடல் திறமைகளும் அறிவுத் திறமைகளும் பரிபூரணத்தை நோக்கி முன்னேறும் நாட்டமுடையதாகும்” என்று உயிரின தோற்றம் புத்தகத்தில் டார்வின் எழுதினார். இருபதாம் நூற்றாண்டு பாதிரியும் உயிரியல் நிபுணருமான பையர் டேயார் ட ஷார்டன் இக்கருத்தை ஒப்புக்கொண்டார். இறுதியில் ‘முழு மனித இனத்தின் மனங்களும் பரிணாமம்’ அடைந்து; ‘ஒவ்வொருவரும் ஒரே குறிக்கோளை நோக்கி ஒத்திசைந்து உழைப்பார்கள்,’ என இவர் கருத்து தெரிவித்தார்.
சீரழிவுதான், முன்னேற்றமல்ல
அத்தகைய முன்னேற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் காண்கிறீர்களா? க்ளிங்கிங் டு எ மித் என்ற புத்தகம் ட ஷார்டனின் நம்பிக்கைகரமான கருத்தின்பேரில் இவ்வாறு குறிப்பு சொன்னது: “மனித ரத்தம் சிந்துதல், மற்றும் தென் ஆப்பிரிக்காவின் இன ஒதுக்கீடு போன்ற இனவேறுபாட்டு அமைப்புகள் ஆகியவற்றின் வரலாற்றை ட ஷார்டன் அடியோடு மறந்துவிட்டார் போலும். இவர் இந்த உலகத்தோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத ஒரு ஆள்போலத் தோன்றுகிறார்.” ஒற்றுமையை நோக்கி முன்னேறுவதற்கு மாறாக, இந்நூற்றாண்டில் மனிதவர்க்கம் என்றுமில்லாத அளவு இனப் பிரிவினைகளுக்கும் தேசிய பிரிவினைகளுக்கும் உள்ளாகியிருக்கிறது.
உயிரின தோற்றம் என்ற புத்தகம், மனிதன் பரிபூரணத்தை நோக்கி முன்னேறுவான், அல்லது குறைந்தபட்சம் முன்னேற்றத்தை நோக்கியாவது வளர்ச்சியடைவான் என்றெல்லாம் அளித்த நம்பிக்கை ஒரு துளிகூட நிறைவேறவில்லை. மேலும் காலம்செல்லசெல்ல அந்த நம்பிக்கையானது அரிக்கப்பட்டுக் கொண்டேபோகிறது. ஏனென்றால் பரிணாமத்தை பொதுவாக ஏற்றுக்கொண்டதிலிருந்தே, மனிதக் குடும்பம் பெரும்பாலும் காட்டுமிராண்டித்தனத்துக்கு தாழ்ந்துவிட்டது. சிந்தித்துப் பாருங்கள்: இந்நூற்றாண்டில் நடந்த போர்களில் பத்து கோடிக்கும் மேற்பட்ட ஆட்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் சுமார் ஐந்து கோடி பேர் இரண்டாம் உலகப்போரில் மட்டும் கொல்லப்பட்டிருக்கின்றனர். ருவாண்டா மற்றும் முன்னாள் யுகோஸ்லேவியா போன்ற இடங்களில் சமீபத்தில் நடைபெற்ற இனபேத கொலைகளையும்பற்றி நினைத்துப் பாருங்கள்.
இதுதானே கடந்த நூற்றாண்டுகளில் போர்களோ வன்முறைச் சம்பவங்களோ நடந்ததில்லை என்று அர்த்தப்படுத்துமா? இல்லை, நிச்சயமாகவே நடந்திருக்கின்றன. ஆனால் பரிணாமக் கொள்கை, வாழ்வுக்காக முரட்டுத்தனமாக போராடும் மனநிலை, தக்கவை வாழ்தல் கருத்து போன்றவற்றை ஏற்றுக்கொண்டிருப்பது, மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்த உதவவில்லை. ஆகவே, மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் பரிணாமத்தின் மேலேயே பழிபோட முடியாதுதான். இருந்தாலும் அது என்றும் இல்லாதளவு அதிக வெறுப்பு, குற்றச்செயல், வன்முறை, ஒழுக்கக்கேடு, சீரழிவு ஆகியவற்றுக்குள் மனிதக் குடும்பத்தைத் தள்ளிவிட்டிருக்கிறது. மனிதன் மிருகத்திலிருந்துதான் பரிணமித்தான் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதனால், அதிகமதிகமான மக்கள் மிருகத்தைப் போல நடந்துகொள்கிறார்கள் என்பதில் ஆச்சரியமேதுமில்லை.
[அடிக்குறிப்புகள்]
a உண்மையில், இந்த பூமி ஆறு சொல்லர்த்தமான நாட்களில் (144 மணிநேரங்களில்) படைக்கப்பட்டதாக பைபிள் போதிக்கவில்லை. இந்தத் தவறான புரிந்துகொள்ளுதல் பற்றிய அதிக தகவல்களுக்கு உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் வெளியிடப்பட்ட உயிர்—அது எப்படி வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா என்ற ஆங்கில புத்தகத்தில் 25-37 பக்கங்களைப் பார்க்கவும்.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
‘டார்வினுடைய புத்தகம் வரலாற்றில் வகுப்புவாத போராட்டத்திற்கு ஒரு அறிவியல் ஆதாரமாக எனக்கு உதவுகிறது.’—கார்ல் மார்க்ஸ்
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
‘தாழ்ந்த இனங்கள் நாகரீகமடைந்த உயர்ந்த இனங்களால் துடைத்தழிக்கப்பட்டிருக்கும்’—சார்லஸ் டார்வின்
[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo
[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]
Copyright British Museum