பரிணாமமும்—நீங்களும்
தெய்வீக தலையிடுதல் இன்றியே மனிதன் பிழைத்திருக்கிறான், தொடர்ந்து பிழைத்துமிருப்பான் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின்போது, உயிரின தோற்றம் என்ற புத்தகம் திரளான மக்களை நம்பவைத்தது. அறிவியல் முன்னேற்றங்களைக் கண்டு பிரமித்துப்போன அநேகர், இனிமேலும் கடவுள் தேவையில்லை, மனித இனத்தை அறிவியல் காப்பாற்ற முடியும் என்று நினைத்தனர். 19-ம் நூற்றாண்டு, “நியாயமான முறையில் எடுக்கப்படும் மனித முயற்சியால் இந்த உலகை மாற்றமுடியும் என்ற நம்பிக்கையால் உயிரூட்டப்பட்டது,” என்பதாக முன்னேற்றத்தின் காலம் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிட்டது.
எனினும், அந்த நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில், சார்லஸ் டார்வினுடைய நம்பிக்கைகரமான மனநிலையும்கூட ஆட்டம்கண்டது. வரலாற்று ஆசிரியர் ஒருவர் கூறியதுபோல, பரிணாமக் கொள்கை, “கடவுளைக் கொன்றுவிட்டது என்றும் மனிதவர்க்கத்தின் எதிர்காலத்தின்மீதான அதன் பாதிப்புகள் அளவிடப்படமுடியாதவை,” என்றும் டார்வின் பயந்தார். டார்வினின் சமகாலத்தவரும் ஆனால் அவரைவிட இளையவருமான ஆல்ஃப்ரட் ரஸல் வாலஸ் இவ்வாறு ஞாபகப்படுத்தி சொன்னார்: “டார்வினோடு நான் கடைசி முறையாக [டார்வினுடைய மரணத்திற்குச் சற்றுமுன்] பேசியபோது, மனிதவர்க்கத்தின் எதிர்காலத்தைப்பற்றி, அவர் மிகவும் நம்பிக்கையிழந்த ஒரு நோக்குநிலையைத் தெரிவித்தார்.”
மனித முயற்சி எதை உற்பத்திசெய்திருக்கிறது?
20-ம் நூற்றாண்டின் வரலாறு, மிகவும் இருண்ட காலம் உண்மையிலேயே விரைவில் வந்தது என்பதை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. டார்வினுடைய காலத்திலிருந்து அடையப்பட்ட தொழில்நுட்ப சாதனைகள், முழு மனித சரித்திரத்திலேயே மிகவும் இருண்டது, மிகவும் வன்முறையானது என்று நிரூபிக்கப்பட்ட காலத்தை வெறுமனே மூடிமறைத்திருந்தன. “ஒரு மெய்யான ஒழுக்கநெறி சீர்குலைவு,” என்று வரலாற்று ஆசிரியர் ஹெச். ஜி. வெல்ஸ் விவரித்ததன் மத்தியில் நாம் வாழ்ந்துவருகிறோம்.
வெல்ஸ் அதை (சுமார் 75 வருடங்களுக்கு முன்) சொன்னதிலிருந்து, இந்த உலகம் இன்னுமதிக ஒழுக்கநெறி சீர்குலைவை தொடர்ந்து எதிர்ப்பட்டிருக்கிறது. விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், சமூகநல அமைப்புகள், மனித அரசாங்கங்கள், அல்லது இந்த உலகின் மதங்கள் ஆகிய அனைத்தும் எடுத்த எந்த முயற்சிகளும் நிவாரணத்தைக் கொண்டுவந்துவிடவில்லை, அல்லது ஒழுக்கநெறி சீர்குலைவதைக் கட்டுப்படுத்தக்கூட முடியவில்லை. நிலைமைகள் தொடர்ந்து சீரழிந்துகொண்டே போகின்றன.
ஆகவே, உள்ளபடியே, கீழ்க்கண்டவாறு கேட்கப்படவேண்டும்: மனித முயற்சி எதை உற்பத்தி செய்திருக்கிறது? அறிவியலும் தொழில்நுட்பமும் சேர்ந்து மேம்பட்ட ஒரு உலகை ஸ்தாபித்திருக்கின்றனவா? “செய்தித்தாளை நாம் திறந்து என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று வாசித்துப்பார்த்தால், பிரச்சினைகள் அறிவியல்பூர்வமானவையாக இல்லை. அவை சமூக அமைப்புகளின், சமாளிக்கமுடியாத காரியங்களின், மனிதத் தேவைகளை அசட்டை செய்துவிட்டு லாபத்தைத் தேடும் மக்களின் பிரச்சினைகளாக இருக்கின்றன,” என்று ரூத் ஹபர்ட் என்ற உயிரியல் வல்லுநர் தெரிவித்தார். “வளங்களை நியாயமாக பகிர்ந்தளிப்பதில், எந்தவொரு பிரச்சினையையாவது அல்லது உலக மக்களைத் துன்பப்படுத்தும் பெரும்பாலான பிரச்சினைகளில் அநேகத்தையாவது அறிவியல் தீர்த்துவைக்கும் என்று மெய்யாகவே எனக்குத் தோன்றவில்லை,” என்று ஹபர்ட் மேலுமாகக் கூறினார்.
மனிதன் நிலவுக்குப் போகமுடிந்திருக்கும்போது, மனித குடும்பத்தில் இருக்கும் அடிப்படையான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முடியாமலிருப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? அணுகுண்டைப் போன்ற பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைக் கண்டுபிடித்தது போர்களுக்கும் இன வன்முறைக்கும் ஒரு முடிவையா கொண்டுவந்தது? அறிவியல் சாதனைகள் குறிப்பிடத்தக்க வகையில் குற்றச்செயல், குடும்பம் பிளவுறுதல், பாலுறவு நோய்கள், ஒழுக்கக்கேடு, சட்டவிரோதமான பிறப்புகள், உயர்ந்த ஸ்தானங்களில் ஊழல், வறுமை, பட்டினி, வீடில்லாமை, போதைப்பொருள் துர்ப்பிரயோகம், மாசுபடுத்துதல் ஆகியவற்றைக் குறைத்திருக்கின்றனவா? இல்லை, மறுபட்சத்தில் இவற்றில் சிலவற்றை மோசமாக்கியிருக்கின்றன. கடவுளைப் புறக்கணித்துவிட்டு அதற்குப் பதிலாக பரிணாமத்தையும் அறிவியலையும் ஏற்றிருப்பது மனிதக் குடும்பத்தின் சூழ்நிலைக்கு உதவி செய்யவில்லை, ஆனால் கெடுதியையே விளைவித்திருக்கிறது.
முதல் மானிடரைப் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு மாறாக, மனிதக் குரங்கைப்போலுள்ள படைப்புகளிலிருந்து மனிதன் பரிணமித்திருக்கிறான் என்ற கொள்கையையே அநேகர் மீண்டும் ஒருமுறை அலசிப்பார்க்கின்றனர் என்பதில் ஆச்சரியமில்லை. தெய்வீக தலையிடுதலேயின்றி மனிதன் பரிணமித்தான் என்பதை அமெரிக்கர்களில் 9 சதவீதத்தினர் மட்டுமே நம்புகின்றனர்; கடவுள் மனிதனை அவனுடைய தற்போதைய உருவில் படைத்தார் என்ற கருத்தை 47 சதவீதத்தினர் ஏற்றுக்கொள்கின்றனர் என்று ஐக்கிய மாகாணங்களில் ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது.
பைபிள் முன்னறிவித்தது என்ன
மனிதன் பரிபூரணத்தை நோக்கி முன்னேறுவான் என்று உயிரின தோற்றம் என்ற புத்தகம் முன்னறிவித்தபோது, உலகம் ஒழுக்கநெறி சம்பந்தமான நெருக்கடியான நிலைமையால் உலுக்கப்படும் என்று பைபிள் முன்னறிவித்தது. (மத்தேயு 24:3-12; 2 தீமோத்தேயு 3:1-5) இந்த நெருக்கடி அதன் உச்சக்கட்டத்தை அடையும், அதன்பிறகு உண்மைத்தன்மையுள்ள மனிதவர்க்கம் இன்றைய பிரச்சினைகளிலிருந்து விடுபட்ட ஒரு பரதீஸை சுதந்தரிக்கும் என்றும்கூட பைபிள் முன்னுரைத்தது.—சங்கீதம் 37:10, 11, 29; ஏசாயா 11:6-9; 35:1-7; வெளிப்படுத்துதல் 21:4, 5.
இந்த நம்பிக்கையானது அநேகர் பைபிளை மிகுந்த ஆர்வத்தோடு ஆராய்ந்து பார்க்கும்படி செய்திருக்கிறது. வாழ்க்கையின் நோக்கம் உண்மையிலேயே வாழ்வு போராட்டத்தைவிட அதிகத்தை உட்படுத்தியதாய் இருக்குமோ? மனிதனின் கடந்த காலத்திற்கு மட்டுமல்ல அவனுடைய எதிர்காலத்துக்கும், அதோடு உங்களுடைய எதிர்காலத்துக்கும் திறவுகோல் பைபிளில் இருக்குமோ? கடவுளைப் பற்றியும் இந்த பூமிக்கும் அதன் மக்களுக்குமான அவருடைய நோக்கத்தைப் பற்றியும் பைபிள் உண்மையிலேயே என்ன போதிக்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்பது உங்களுக்கு அதிக நன்மை பயக்குவதாக இருக்கும். அதிக தகவல் பெற நீங்கள் விரும்பினால் உங்களுக்கு உதவி செய்ய யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமுள்ளவர்களாக இருப்பார்கள்.
[பக்கம் 9-ன் பெட்டி]
உயிர்—அது எப்படி வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? புத்தகத்தின் வாயிலாக படைப்புகளின் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை மறுபடியும் ஆராய்ந்து பார்க்க கோடிக்கணக்கானோர் உதவப்பட்டிருக்கின்றனர். a இன்றுவரை சுமார் மூன்று கோடி பிரதிகள் 27 மொழிகளில் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், பரிணாமக் கொள்கையின் நம்பத்தகுந்த தன்மையைப்பற்றி மெய் அறிவியலின் உண்மைகள் என்ன காட்டுகின்றன என்பதுபற்றிய தகவல்களை விழித்தெழு! பத்திரிகை தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 8, 9-ன் படம்]
பரிணாமக் கொள்கைக்கு எதிராக, இன்றைய ஒழுக்கநெறி நெருக்கடியையும் அதற்கான தீர்வாகிய, பிரச்சினைகளிலிருந்து விடுபட்ட ஒரு பரதீஸையும் பைபிள் முன்னறிவித்தது
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
U.S. Coast Guard photo
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
Starving child: WHO photo by P. Almasy
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
Right: U.S. National Archives photo