மலர்கள் நம்மீது அக்கறையுள்ள ஒருவரைப் பற்றி பறைசாற்றுகின்றன
கொலம்பியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
தத்திச் செல்லும் மழலை ஒன்று, சாமந்திப் பூக்களிடம் மனதைப் பறிகொடுத்து கொழுகொழுவென்றிருக்கும் அதன் பிஞ்சுக் கரங்களில் அவற்றைப் பறித்து, ஏதோ புதையலைக் கண்டெடுத்ததுபோல் அதை அம்மாவிடம் கொடுக்க “குடுகுடுவென” ஓடுகிறது. பாசம்நிறைந்த கணவன், ஆசை மனைவிக்கு தன் ஆழமான அன்பை வெளிக்காட்ட, அவளுக்காக கடையில் ஒரு டஜன் ரோஜாப் பூக்களைப் பார்த்துப்பார்த்து பொறுக்கி எடுக்கிறார். அம்மாவை மகிழ்விக்க நினைக்கும் பாசமுள்ள மகன், அருகே உள்ள பூக்கடைக்கு ஃபோன் செய்து புத்தம்புது டேலியாப் பூக்களை வரவழைக்கிறான். குடும்பப்பற்றுள்ள ஓர் இல்லத்தரசி, பலநிற கார்னேஷன் மலர்ச்செண்டை வீட்டுக்கு வாங்கிச்செல்லும் சாமான்களோடுசேர்த்து எடுத்து வைக்கிறாள். அவை அவளின் இல்லத்தை அவளது இரசனைக்கேற்ப அலங்கரிக்கவும், அழகுக்கு அழகுசேர்க்கவும் பயணப்படுகின்றன.
மலர்கள் சிறியோர் பெரியோர் ஆகிய அனைவரது உள்ளங்களையும் கொள்ளைகொள்கின்றன. அவை, “அக்கறையுள்ள ஒருவர் இருக்கிறார்” என்ற உணர்வை உண்டாக்குவதற்கு சிறந்த வழிமுறைகளாக இருக்கின்றன. ஸ்பானிய பழமொழி ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது: “ரோஜா மலருக்கு நன்றியில்லாதவன் மற்ற எதற்கும் நன்றியில்லாதவன்.” (Quien no agradece una rosa, no agradecerá ninguna cosa.)
மலர் விற்பனை எப்போதுமில்லாத அளவில் வேகமாக சூடுபிடித்துவருகிறது. விமானப் போக்குவரத்து அதிகரித்திருக்கும் இந்தக் காலத்தில், கடந்துசெல்வோரின் கவனத்தைக் கவரும் விதத்தில் மலர்களைப் பரப்பி வைத்திருக்கும் கடைகள், சூப்பர்மார்க்கெட்டுகள், சாலையோர வண்டிகள் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களிலும் மலர்களை வளர்க்கலாம். பூ வாணிபம் “வேகமாக வளர்ச்சியடைகிறது, அதைக்காட்டிலும் வேகமாக மாறிவருகிறது: தென் பகுதிகளில்—பெரும்பாலும் கொலம்பியாவில் அதிகமதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது; பூ ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் ஹாலாந்துக்கு அடுத்ததாக கொலம்பியா இருக்கிறது,” என டைம் பத்திரிகை குறிப்பிட்டது.
ப்ளாஸ்டிக் கூரை மலர்க்கூடங்களும் செயற்கை ஏரிகளும்
25 வருடங்களுக்கும் மேலாக பூ வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கொலம்பியா, கார்னேஷன் மலர்களை ஏற்றுமதி செய்வதில் உலகில் முதலிடம் வகிக்கிறது; மொத்த பூ விற்பனையிலோ இரண்டாவது நிலையில் இருக்கிறது. 1964-ல், அ.ஐ.மா.-விலுள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர், வருடம் முழுவதும் பூ உற்பத்திச் செய்வதற்கு ஏற்ற சூழலுள்ள இடங்களை கண்டுபிடிக்க கம்ப்யூட்டர் மூலம் ஆராய்ந்தார். நில நடுக்கோடிற்கு வடக்கேயும் ஆண்டிஸ் மலைத் தொடரில் கிட்டத்தட்ட 2,800 மீட்டர் உயரத்திலும், போகோடா நகரம் அமைந்திருக்கும் இடமான மேட்டுநில பள்ளத்தாக்கின் வெப்பநிலையும் உயரமும் பொருத்தமான சூழ்நிலையாய் இருந்ததாக அவர் கண்டுபிடித்தார்.
சான்டாஃபே டெ போகோடா நகரின் சவான்னாப் புல்வெளி, செயற்கை ஏரிகளாலும் ப்ளாஸ்டிக் கூரை மலர்க்கூடங்களாலும் நிறைந்திருக்கிறது; கொலம்பியாவின் ஏற்றுமதிக்கான 92 சதவீத மலர் உற்பத்தி இங்குதான் செய்யப்படுகிறது. மர அல்லது உலோக சட்டங்களாலான இந்தக் கூடங்களுக்குள், வெப்பநிலை இளவேனிற்காலத்தில் இருப்பதுபோன்று கவனமாக கட்டுப்படுத்தி வைக்கப்படுகிறது; இந்த வெப்பநிலை, லட்சக்கணக்கான கார்னேஷன்கள், டேலியாக்கள், ரோஜாக்கள், க்ரிஸான்தமம்கள், பெருவியன் லில்லி மற்றும் பிற அநேக வகை மலர்களை பேணி வளர்க்கிறது. இவை, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய இடங்களுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படுவதற்காக சீக்கிரத்தில் கத்தரிக்கப்பட்டு பேக் செய்யப்படும்.
பூ உற்பத்திக்கு ஏற்ற தட்பவெப்பநிலை 18-லிருந்து 20 டிகிரி செல்ஸியஸாய் இருக்கிறது; இதுவே சவான்னாவில் வருடம் முழுவதும் பொதுவாக காணப்படும் பகல்நேர வெப்பநிலையாகும். இங்கு, மிகுதியான மழைநீரும் வளமான நிலமும் இருக்கின்றன, குறைந்த ஊதியத்திற்கு வேலையாட்களும் கிடைக்கின்றனர். இரவில், சீதோஷ்ணம் கிட்டத்தட்ட உறைநிலைக்கும், சிலசமயங்களில் -2 டிகிரி செல்ஸியஸுக்கும் குறையலாம். கணப்புப் பானைகள், அதிக ஒளிதரும் பல்புகள் அல்லது தெளிப்பான்கள் குளிர்ச்சியிலிருந்து அவற்றைப் பாதுகாக்கின்றன. பல்புகள் கூடுதலான நேரத்திற்கு வெளிச்சம் அளித்து, இவ்வாறு சில செடிகளைத் தொடர்ந்து தூண்டி அவற்றின் வளர்ச்சியை தீவிரப்படுத்துகின்றன.
உற்பத்தி முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது
கொலம்பியாவில் 1,20,000-க்கும் அதிகமான வேலையாட்கள் பூ வாணிகம் சம்பந்தப்பட்ட ஏதோவொரு வகை வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் அநேகர், சவான்னா முழுவதும் பரவியிருக்கும் சமுதாயங்களில் வாழும் யெகோவாவின் சாட்சிகளாவர். ஃபாகாடாடிவா நகரத்திலுள்ள ஒரு சபையின் கிறிஸ்தவ மூப்பரான பெனிட்டோ கின்டானா ஒரு நர்சரியில் உற்பத்தி மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். அவர் இவ்வாறு விளக்குகிறார்: “பருவகாலத்துக்குரிய மார்க்கெட் டிமான்டுகளை சமாளிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் உற்பத்தியைத் திட்டமிட வேண்டும். கார்னேஷன் தாய்ச் செடிகள் ஹாலாந்திலிருந்தோ இத்தாலியிலிருந்தோ இறக்குமதி செய்யப்படுகின்றன; டேலியாக்களுக்கானவை ஃப்ளாரிடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. பெண்கள் சிறிய தண்டுகளை கவனமாக கத்தரித்து, வெதுவெதுப்பான மலர்க்கூடத்தில் வரிசைகளில் குவித்து வைக்கின்றனர்; அங்கே அவை வேர்விடும்வரை மேகம்போன்ற மூடுபனியிலிருந்து நீரைப் பெறுகின்றன. 20-லிருந்து 35 டிகிரி செல்ஸியஸ் (68°-லிருந்து 95° F.) வெப்பத்தில் டேலியாக்கள் வளர்வதற்கு 12 நாட்கள் ஆகின்றன; இரவில் இவற்றிற்கு இரண்டு மணிநேரம் கூடுதலாக வெளிச்சம் தேவைப்படுகிறது. 15-லிருந்து 25 டிகிரி செல்ஸியஸ் (59°-லிருந்து 77° F.) வெப்பத்தில் கார்னேஷன்கள் வளர்வதற்கு 23 நாட்கள் பிடிக்கின்றன; இவற்றிற்கு இரவில் வெளிச்சம் தேவையேயில்லை. பின் நாங்கள் இந்தச் சிறிய செடிகளை மற்ற மலர்க்கூடங்களிலுள்ள பாத்திகளில் வைக்கிறோம். அங்கே அவை பூ பூக்கும்வரை உரங்களால் வளமூட்டப்பட்டு, பூச்சிமருந்து தெளிக்கப்பட்டு, நீர்ப்பாய்ச்சப்படுகின்றன; கார்னேஷன்கள் ஆறு மாதங்களிலும் டேலியாக்கள் மூன்று மாதங்களிலும் பூ பூக்க ஆரம்பிக்கின்றன.”
அறுப்புக் காலத்தில் கடின உழைப்பு
பூ பறிக்கும் காலம் வந்தவுடன், பெண்கள்தான் சிறந்த வேலை செய்கின்றனர்; பொதுவாக கையுறைகள் இல்லாமலும் நன்றாக கழுவிய கைகளுடனும் அவர்கள் வேலை செய்கின்றனர். பூவின் தரத்தை தீர்மானிக்கும் காரியங்களான, பூ மொட்டுகள் எந்தளவுக்கு விரிந்திருக்கின்றன, தண்டுகள் எந்தளவுக்கு நேராக இருக்கின்றன என்பனவற்றை இயந்திரங்களால் தீர்மானிக்க முடியாது.
ஃபாகாடாடிவாவைச் சேர்ந்த ஹூடிட் காரெடோர் இவ்வாறு விளக்குகிறார்: “பெண்கள், பொறுமையையும் அவற்றைக் கையாளுவதில் மென்மையையும் மட்டுமல்ல, தேவைப்படும் வேகத்தையும் திறமையையும்கூட பெற்றிருக்கின்றனர். விடியற்காலையில் நாம் இந்த மலர்க்கூடங்களுக்குள் செல்லும்போது, அங்கு பெரும்பாலும் பனி மூடியிருக்கிறது; அங்கு உறைந்துபோகும் அளவிற்கு கடுங்குளிர் நிலவலாம். அநேக பெண்கள் ஸ்கார்ஃபுகளைக் கட்டிக்கொள்கின்றனர். பகல்நேரம் வெதுவெதுப்பாகிறது, சிலசமயங்களில் 32 டிகிரி செல்ஸியஸையும் தாண்டுகிறது. முக்கியமாக, வேகவேகமாகவும் கூடுதலான நேரமும் வேலை செய்ய வேண்டியிருக்கும் வேலைமிகுந்த காலத்தில் அது கடின உழைப்பாக இருக்கிறது.”
வண்ணமிகு, வாசமிக்க செய்தி
பறிக்கப்பட்டபின் அந்தப் பூக்கள் காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள ஒரு விசேஷ அறைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. இங்கு, பூ மலர்ந்திருக்கும் தன்மையைப் பொருத்தும் தண்டுகளின் வளையாத தன்மை, தடிப்பு, நீளம் ஆகியவற்றைப் பொருத்தும் பெண்கள் அவற்றை வகைப்படுத்திப் பிரிக்கின்றனர். பின் அந்தப் பூக்கள், ஒவ்வொரு செண்டிலும் 25 என்ற கணக்கில் கண்ணாடிக் காகிதங்களால் சுற்றப்பட்டு பேக்கிங் செய்யப்படுவதற்கு தயாராகின்றன. மிகச் சிறந்தவைதான் ஏற்றுமதிக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
மடிப்புச் சுருக்கங்களுள்ள விசேஷ அட்டைப்பெட்டிகளில் ஆண்கள் இந்தப் பூக்களை பேக் செய்கின்றனர்; அப்பெட்டிகள் அந்த நர்சரியின் பெயரைக் கொண்டிருக்கின்றன. ஒரு அட்டைப்பெட்டியில் 24 கார்னேஷன் பூச்செண்டுகள் வைக்கப்படுகின்றன. பேக்கிங் வேலை செய்யும் பெனிட்டோவின் சகோதரரான ஆலேஹான்ட்ரோ க்வின்டானா இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் மிக வேகமாக வேலை செய்ய வேண்டும், ஏனென்றால் பயிர்செய்யப்படும் அனைத்து வகைகளிலும் பூக்கள்தான் மிக விரைவில் அழுகிவிடும் வஸ்துவாகும். ஒவ்வொரு முறையும் 112 பெட்டிகள் என்ற கணக்கில், அட்டைப்பெட்டிகளிலிருந்து வெப்பமான காற்றை வெளியே உறிஞ்சி எடுப்பதற்கும், அதேசமயத்தில் குளிர்ந்த காற்றை இரண்டு மணிநேரங்களுக்கு உள்ளே செலுத்துவதற்கும் இரண்டு பம்ப்புகள் எங்கள் கம்பெனியில் இருக்கின்றன; இவ்வாறு பெட்டிகளுக்குள் சீதோஷ்ண நிலையானது உறைநிலைக்கு ஒருசில டிகிரிகள் அதிகமாக இருக்கிறது. பின் அட்டைப்பெட்டிகளிலுள்ள ஓட்டைகள் சீல் செய்யப்படுகின்றன; பின் அவை விமானநிலையத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதற்கு ட்ரக்குகளில் ஏற்றப்படும்வரை குளிர்சாதனத்தில் வைக்கப்படுகின்றன.”
போகோடாவிலுள்ள எல் டோராடோ இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில், இந்தப் பூக்கள் ஏற்றுமதிக்கான சோதனை செய்யப்படுகின்றன; பின், வெளிநாடுகளில் விநியோகத்திற்கு அனுப்பப்பட பெரிய ஜெட் விமானங்களில் ஏற்றப்படும்வரை ஒருசில மணிநேரங்கள் குளிர்சாதன அறைகளில் வைக்கப்படுகின்றன. ஒருசில நாட்களுக்குள், வீடுகளிலும், ஆபீஸுகளிலும், நோயாளிகளின் அறைகளிலும் மற்ற இடங்களிலும் இந்த மலர்கள் மலர்ந்து, அக்கறையுள்ள ஒருவர் இருக்கிறார் என்ற வண்ணமிகு வாசமிக்க செய்தியைச் சொல்கின்றன.
உண்மையிலேயே அக்கறையுள்ள ஒருவர்
பூமியில் நாம் எங்கு சென்றாலும் நம்மை கொள்ளைகொள்ளும் பூக்களைப் பார்க்கிறோம். மலை உச்சியிலும், பனிப்பரப்புகள் மற்றும் பனிக்கட்டியாறுகளின் ஓரங்களிலும், காடுகள் மற்றும் புல்வெளிகளிலும், ஓடைகள் மற்றும் ஆறுகள் நெடுகிலும், கடற்கரை ஓரத்திலும், வெப்பமான வறண்ட பாலைவனங்களிலும்கூட நாம் பூக்களைக் காண்கிறோம். மனிதன் இந்தப் பூமியில் உண்டாக்கப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே பூக்கள் இங்கு இருந்திருக்கின்றன. ‘பூச்செடிகள்தான் அனைத்து மிருக மற்றும் மனித வாழ்விற்கு அடிப்படையானவை. அவை இல்லாமல், மிருகங்களாலும் மனிதராலும் வாழ முடியாது,’ என தாவரவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
சாலொமோன் ராஜா நுண்ணறிவோடு இவ்வாறு அறிவித்தார்: “அவர் [கடவுள்] சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.” (பிரசங்கி 3:11) இது, சகல வகைகளிலும் பிரகாசத்திலும் கடவுள் பரிசாக அளித்திருக்கும் பூக்களையும் உட்படுத்துகிறது. நினைவுக்கெட்டாத காலம் முதற்கொண்டே அவை சிறியோர் பெரியோர் ஆகிய அனைவரது இருதயத்தையும் பூரிக்கச் செய்திருக்கிறது. உண்மையிலேயே, நம்மீது அக்கறையுள்ள கடவுள் இருக்கிறார்!
[பக்கம் 17-ன் பெட்டி]
பூக்கள் அதிக நேரம் வாடாமலிருக்க
• பூக்களை அழகு ஜாடிகளில் வைப்பதற்கு முன்பு தண்டுகளை தண்ணீருக்குள்வைத்து சாய்வாக வெட்டுங்கள். தண்டுகளின் நுனியில் இருக்கும் நீர்த்துளிகள், காற்று உட்புகுந்து தண்ணீரும் ஊட்டச்சத்துக்களும் உட்செல்வதைத் தடைசெய்யாதபடி பார்த்துக்கொள்ளும்.
• ஒரு ஆஸ்பிரின் மாத்திரை, ஒரு டீஸ்ப்பூன் சர்க்கரை அல்லது கொஞ்சம் கோலா போன்றவற்றை தண்ணீரில் கலப்பது பூக்கள் நீண்ட நேரம் வாடாமலிருக்கச் செய்யும் என்பதாக கொலம்பியாவைச் சேர்ந்த தோட்டக்கலை நிபுணர்கள் சொல்வதாக கேயோமுன்டோ பத்திரிகை குறிப்பிடுகிறது. மொட்டுகள் சீக்கிரமாக மலர்வதற்கு வெதுவெதுப்பான தண்ணீரையும்கூட பயன்படுத்தலாம் என்றாலும், ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை அறையின் வெப்ப நிலையிலுள்ள குளிர்ந்த தண்ணீரைப் பயன்படுத்தி அதன் தண்ணீரை மாற்றுங்கள்.
• சிறிது வாடியிருக்கும் பூக்களைக்கூட, சுடுதண்ணீரில் அவற்றின் தண்டுகளை பத்து நிமிடங்களுக்கு போட்டுவைத்து அவற்றின் இதழ்களின்மேல் குளிர்ந்த நீரை தெளிப்பதன் மூலம் மீண்டும் மலரச் செய்யலாம். வெப்ப மூலங்கள், அதிக காற்று வீசும் இடங்கள், நேரடியான சூரியவொளி போன்றவற்றிலிருந்து பூக்களைத் தூர வையுங்கள்.