அறிவியல் பேசுகையில்—நீங்கள் எவ்வாறு கவனிக்கிறீர்கள்?
புதிய நோய்களும் மறுபிரவேசம் செய்யும் பழைய நோய்களும் அறிவியலுக்கு ஒரு சவாலே. நிவாரணத்திற்கு ஏங்கும் மக்கள் அறிவியல் பேசுகையில் கவனம் செலுத்துகின்றனர். அதிநவீன அற்புத மருந்தை உபயோகித்துப் பார்க்கும்படி மரண பயம் அநேகரைத் தூண்டுகிறது. ஆகவே, நீண்டகால பின்விளைவுகளைப் பற்றி அவர்கள் நினைப்பதேயில்லை.
நிறைய சந்தர்ப்பங்களில் அறிவியலானது, துயரப்படும் அநேகருக்கு மேம்பட்ட வாழ்க்கை தரத்தை அனுபவிக்க உதவியிருக்கிறது. இதில் கவனிக்கத்தக்கவை, அதிக ஆபத்தை உட்படுத்தும் இரத்தமேற்றுதல் இல்லாமல் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளே. கற்பனையை விஞ்சுவிடும் அளவிற்கு காரியங்களை செய்வதற்கு சக்தியை அறிவியலும் தொழில்நுட்பமும் மனிதவர்க்கத்திற்கு அளித்திருக்கின்றன. முன்னர் கற்பனையாக இருந்தது இப்போது அன்றாட வாழ்க்கையின் நிஜமாகிவிட்டது. என்றபோதிலும், மனிதவர்க்கத்தின் அதிமுக்கிய தேவைகளால் தூண்டப்பட்டு, பிறர்நலம் கருதும் ஒன்றாகவே எல்லா விஞ்ஞானமும் இருப்பதில்லை.
உண்மையில் பேசுவது யார்?
முன்பு கவனித்தபடி, பெரும்பாலான விஞ்ஞானம் பண லாபத்தால் தூண்டப்பட்டு, செல்வாக்குள்ள ஆட்களால் ஆதரிக்கப்படுகிறது. ஆகவே, எந்தவொரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பைப் பற்றி தீர்மானம் எடுப்பதற்கு முன்பு அல்லது வியந்துபோவதற்கு முன்பு உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள், ‘உண்மையில் பேசுவது யார்?’ மறைமுகமான காரியங்களை கண்டுணர கற்றுக்கொள்ளுங்கள். பரபரப்பூட்டுகிற விஷயங்களால்தான் செய்தித்துறை பிழைக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. தங்கள் செய்தித்தாள்களை விற்பதற்காக சிலர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். அதிக மதிப்புமிகுந்த சில பத்திரிகைகளும்கூட, பரபரப்பூட்டுகிற விஷயங்களை சில சமயங்களில் ஓரளவு அனுமதிக்கின்றன.
அநேக சமயங்களில், அறிவியலும் செய்தித்துறையும் விருப்பு-வெறுப்பு உறவை அனுபவிக்கின்றன. செய்தித்துறையானது அறிவியலைச் சிறந்ததாக சித்தரிக்கலாம். மறுபட்சத்தில், “அச்சடிப்பதற்குமுன் அந்தப் பிரதியை வாசித்து, திருத்தம்செய்ய அனுமதித்தால்தான் பேட்டிகொடுக்க முடியும் என்று கூறுவதன் மூலம் செய்தியாளர்களை கட்டிப்போட அறிவியலாளர்கள் அடிக்கடி முயலுகின்றனர். குறுகிய நோக்கமுள்ள அறிவியலாளர்களால் தணிக்கை செய்யப்படும் பயத்தால், செய்தியாளர்கள் தங்கள் கட்டுரைகளை அவர்களிடம் காட்ட பொதுவாக விரும்புவதில்லை. ஆனாலும் விவரங்கள் திருத்தமாக இருப்பதைப் பற்றி அவர்களிடம் அடிக்கடி உறுதியளிக்கின்றனர்” என அறிவியலை விற்றல் என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் டாரத்தீ நெல்கன் எழுதுகிறார்.
பிறகு, தான் கூறியதை நிரூபிக்க உதாரணங்களையும் கொடுக்கிறார்: “புதிய அறிவியல் முன்னேற்றங்களைப் பற்றிய செய்திகள், நம்பிக்கையிழந்த மக்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கின்றன. . . . [பிரபலமான ஒரு பத்திரிகையின்] லேட்டஸ்ட் இதழை கொண்டுவந்து தங்கள் மருத்துவரை சந்தித்து, அதிநவீன நிவாரணத்தை கேட்கின்றனர்.” டாரத்தீ நெல்கன் மேற்கோள் காட்டும் மற்றொரு உதாரணம் ஒரு பத்திரிகையாளரைப் பற்றியது. அவர், உலக சுகாதார மற்றும் மனித ஆற்றலுக்கான சர்வதேச சிறப்புப் பணி பிரிவின் தலைவரிடம், “ஆப்பிரிக்காவில், பில்லிசூனிய மருத்துவர்களால் நல்லவிதமாக சிகிச்சையளிக்க முடியும் என அவர் நினைத்தாரா” என்று கேட்டார். அவர்கள் “பெரும்பாலான ஜனங்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதால் ஒருவேளை முடியலாம்” என்று அவர் பதிலுரைத்தார். ஆனால் மறுநாள் தலைப்புச்செய்தி என்ன? “பில்லிசூனிய மருத்துவர்கள் அதிகம் தேவை—ஐ.நா. பிரதிநிதி வேண்டுகோள்” என்று இருந்தது!
சமீபத்திய அறிவியலைப் பற்றி தகவல்பெற செய்தித்தாள்களையும் பத்திரிகைகளையுமே அதிகமதிகமான ஆட்கள் எதிர்பார்ப்பதே நவீனகால போக்காகிவிட்டது வருந்தத்தக்க ஒன்று என நெல்கன் கூறுகிறார். அதிக விருப்பமில்லாத அல்லது ஒருவேளை அதிகம் வாசிக்க இயலாத மற்ற அநேகருக்கு, தொலைக்காட்சியே முக்கிய தகவல்மூலம் ஆகிவிடுகிறது.
அறிவியலை சமநிலையோடு நோக்குதல்
அறிவியலின் சாதனைகள் மனிதவர்க்கத்திற்கு பயனளித்திருக்கிற போதிலும், விஞ்ஞானிகளும் மனிதர்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் சோதனைக்கும் ஊழலுக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்லவே. அவர்களுடைய உள்நோக்கங்கள் எப்போதுமே சிறந்தவையாக இருப்பதில்லை. உண்மையில், அறிவியலுக்கு சமுதாயத்தில் அதற்குரிய இடம் இருக்கிறது. ஆனால், இருண்டுகொண்டே போகும் உலகிற்கு வழிகாட்டும் தவறிழைக்க முடியாத ஞான தீபமாக அது இல்லை.
அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஊகங்கள் (ஆங்கிலம்) என்ற இதழ் இவ்வாறு கூறுகிறது: “அறிவியல் தலைவர்கள் எவ்வளவுதான் மேன்மையானவர்களாக . . . தோன்றினாலும் அவர்கள் இன்னமும் தவறிழைப்பவர்களே என அறிவியலின் சரித்திரம் காட்டுகிறது.” உண்மையில், சிலர் அதைவிட இன்னும் மோசமானவர்கள்.
இக்கட்டுரைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் காரணங்களின் நிமித்தமாக, அறிவியல் சச்சரவுகளில் பங்குகொள்வது அல்லது நிரூபிக்கப்படாத அறிவியல் கோட்பாடுகளை பரப்புவது கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதல்ல. உதாரணமாக, மின்காந்த சக்தியைப் பற்றிய பயத்தால் சிலர் மேற்கொள்ளப்படலாம். பிறகு, மைக்ரோவேவ் அடுப்புகள், மின்சாரத்தால் சூடாக்கப்படும் கம்பளங்கள் போன்றவற்றை நீக்கிவிடும்படி மிகவும் நல்ல நோக்கத்தோடு மற்றவர்களிடம் கூறலாம். நிச்சயமாகவே, ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமானதை தெரிவுசெய்யலாம். அதை மற்றவர்கள் விமர்சிக்கக்கூடாது. ஆனால் தங்கள் விருப்பத்திற்கு மாறான ஒன்றை தெரிவு செய்பவர்களும்கூட அவ்வாறே நடத்தப்பட வேண்டும். ஆகவே, பரபரப்பூட்டுவதை தவிர்ப்பது ஞானமானது. அநேக அசாதாரணமான கூற்றுகள் உண்மையா பொய்யா என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. இவற்றில் சில கடைசியில் ஆதாரமற்றவையாகவோ தவறானவையாகவோ நிரூபிக்கப்பட்டால், அப்படிப்பட்ட கூற்றுகளை முன்னேற்றுவித்தவர்கள் அசடுவழிவது மட்டுமல்ல, அவை தெரியாத்தனமாக மற்றவர்களுக்கு தீங்கைக்கூட ஏற்படுத்தியிருக்கலாம்.
நிதானத்தின் தேவை
செய்தித்துறையின் பரபரப்பூட்டும் அறிவியல் அறிக்கைகளுக்கு ஒரு கிறிஸ்தவர் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? முதலில் நோக்கத்தை ஆராயுங்கள். அக்கட்டுரை அல்லது செய்தித் துணுக்கின் உள்நோக்கம் என்ன? இரண்டாவதாக, முழு கட்டுரையையும் வாசியுங்கள். பரபரப்பூட்டும் அதன் தலைப்புக்கும் அக்கட்டுரையில் இருக்கும் விஷயங்களுக்கும் சம்பந்தமேயில்லாமல் இருக்கலாம். மிகவும் முக்கியமான மூன்றாவது விஷயம், அக்கட்டுரையின் எழுத்தாளருடைய சாதனைகளை ஆராயுங்கள். அவர்கள் உண்மையை பேசுகிறார்களா? திரைமறைவில் காரியங்களை வைத்திருக்கிறார்களா?—ரோமர் 3:4.
சிலர், விஞ்ஞானிகளை கொஞ்சம் சந்தேகக் கண்ணோடு நோக்குகிறார்கள் என்றால் அந்தச் சூழ்நிலைக்கு அவர்களே காரணம். சத்தியத்தை நடுநிலைமையோடு தேடுபவர்கள் என்ற சில விஞ்ஞானிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய உலகத்தைப் பற்றியும் அண்டத்தைப் பற்றியும் கிளர்ச்சியூட்டும் அறிவை அறிவியல் தந்திருக்கிறது. என்றபோதிலும், மேம்பட்ட ஒரு புதிய உலகத்தைப் பற்றிய அறிவியலை அடிப்படையாக கொண்ட சிலருடைய முன்னறிவிப்புகள் நம்பிக்கையூட்டுவதற்கு பதிலாக பயத்தையும் கவலையையுமே ஏற்படுத்துகின்றன.
ஏற்படக்கூடிய எதிர்கால பேரழிவுகளைப் பற்றி சில வல்லுநர்கள் பயத்தை ஏற்படுத்தும் எச்சரிக்கைகளைக் கொடுக்கிறார்கள். சமாதான நோபல் பரிசு பெற்ற, பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலரான ஜோசப் ரோட்பிளாட் இவ்வாறு கூறுவதன் மூலம் தன்னுடைய கவலையை தெரிவித்தார்: “அறிவியலின் மற்ற முன்னேற்றங்கள், அணு ஆயுத கருவிகளைவிட அதிக எளிதில் கிடைக்கக்கூடிய, ஒட்டுமொத்த அழிவிற்கான வேறுசில காரியங்களில் விளைவடையலாம் என்பதே என்னுடைய கவலை. மரபணு பொறியியல் அதற்கு சாத்தியமான ஒரு துறை. ஏனென்றால் அச்சந்தரும் முன்னேற்றங்கள் இத்துறையில் ஏற்படுகின்றன.” ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பென் செலிங்கர், தான் எதிர்பார்க்கும் பிரச்சினைகளைப் பற்றி கூறினார்: “அடுத்த நெருக்கடி மரபணு பொறியியல் துறையில் ஏற்பட அதிக சாத்தியம் இருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் அது என்ன, எப்போது அல்லது எப்படி நடக்கும் என்பது எனக்கு தெரியாது.”
மறுபட்சத்தில், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் ‘நம் பாதைக்கு’ நிச்சயமான, நம்பத்தக்க ‘வெளிச்சமாய் இருக்கிறது.’ அந்தப் பாதை, கடவுளுடைய ராஜ்ய ஆட்சியில் சுத்திகரிக்கப்பட்ட ஒரு பூமியில், சமாதானம், நல்ல ஆரோக்கியம் மற்றும் உலக ஒற்றுமையில் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு வழிநடத்துகிறது.—சங்கீதம் 119:105; வெளிப்படுத்துதல் 11:18; 21:1-4.
[அடிக்குறிப்புகள்]
[பக்கம் 10-ன் படம்]
மற்ற கிரகங்களில் உயிர் இருப்பதற்கான சாத்தியங்கள் அல்லது மின்காந்த புலத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றிய சச்சரவுகளை கிறிஸ்தவர்கள் ஞானமாக தவிர்க்கின்றனர்
[படத்திற்கான நன்றி]
NASA photo/JPL
NASA photo/JPL