அதிகாரம் 2
கடவுளுடைய ஏற்பாட்டில் கிறிஸ்துவுக்கு இருக்கிற பங்கை ஏற்றுக்கொள்ளுதல்
“ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்.” அவர் படைத்த எல்லாமே “மிகவும் நன்றாக” இருந்தன. (ஆதி. 1:1, 31) யெகோவா மனிதர்களைப் படைத்தபோது, அவர்களுக்கு அருமையான எதிர்கால நம்பிக்கையைக் கொடுத்தார். ஆனால், ஏதேனில் ஏற்பட்ட கலகத்தால், மனிதர்களின் சந்தோஷமான வாழ்க்கைக்குத் தற்காலிகமாக ஒரு தடை ஏற்பட்டது. இருந்தாலும், பூமி மற்றும் மனிதர்கள் சம்பந்தமாக யெகோவாவுக்கு இருந்த நோக்கம் மாறவே இல்லை. ஆதாமின் சந்ததியில் வந்த கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்கு மீட்பு கிடைக்கும் என்று யெகோவா சுட்டிக்காட்டினார். அவர் உண்மை வணக்கத்தை மறுபடியும் நிலைநாட்டுவார். பொல்லாதவனான சாத்தானுக்கும் அவனுடைய கெட்ட செயல்கள் எல்லாவற்றுக்கும் கடவுள் முடிவுகட்டுவார். (ஆதி. 3:15) மறுபடியும் எல்லாமே “மிகவும் நன்றாக” மாறும். இதையெல்லாம் தன்னுடைய மகனான இயேசு கிறிஸ்து மூலம்தான் யெகோவா நிறைவேற்றுவார். (1 யோ. 3:8) அதனால், கடவுளுடைய ஏற்பாட்டில் கிறிஸ்துவுக்கு இருக்கிற பங்கை நாம் ஏற்றுக்கொள்வது ரொம்ப முக்கியம்.—அப். 4:12; பிலி. 2:9, 11.
கிறிஸ்துவுக்கு இருக்கிற பங்கு
2 கடவுளுடைய ஏற்பாட்டில் கிறிஸ்துவுக்கு இருக்கிற பங்கைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, அதில் பல அம்சங்கள் உட்பட்டிருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இயேசு மனிதர்களை விடுவிக்கிறவராகவும், அவர்களுடைய தலைமைக் குருவாகவும், கிறிஸ்தவ சபையின் தலைவராகவும், இப்போது கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாகவும் இருக்கிறார். இயேசுவுக்கு இருக்கிற இந்தப் பொறுப்புகளைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது கடவுளுடைய ஏற்பாட்டின்மீது நமக்கு இருக்கிற நன்றியுணர்வு அதிகமாகிறது, கிறிஸ்து இயேசுவின்மீது இருக்கிற அன்பும் அதிகமாகிறது. அவருக்கு இருக்கிற வெவ்வேறு பொறுப்புகளைப் பற்றி பைபிள் விளக்குகிறது.
மனிதர்கள் சம்பந்தமாக யெகோவாவுக்கு இருக்கிற நோக்கத்தை நிறைவேற்றுவதில் இயேசு மிக முக்கியமான நபராக இருக்கிறார்
3 கிறிஸ்து இந்தப் பூமியில் ஊழியம் செய்தபோது, அவர் மூலமாக மட்டுமே கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் கடவுளோடு சமாதானமாக முடியும் என்பது தெளிவாகத் தெரிந்தது. (யோவா. 14:6) இயேசு மனிதர்களை விடுவிப்பவராக இருப்பதால், பலருடைய உயிருக்கு ஈடாக தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுத்தார். (மத். 20:28) அப்படியானால், அவர் தேவபக்தியைக் காட்டுவதில் வெறும் ஒரு முன்னுதாரணம் மட்டுமே அல்ல. மனிதர்கள் சம்பந்தமாக யெகோவாவுக்கு இருக்கிற நோக்கத்தை நிறைவேற்றுவதில் மிக முக்கியமானவராகவும் இருக்கிறார். ஏனென்றால், அவர் மூலமாக மட்டுமே நாம் கடவுளுடைய தயவை மறுபடியும் பெற முடியும். (அப். 5:31; 2 கொ. 5:18, 19) கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் கடவுளுடைய ஆட்சியில் நிரந்தரமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள இயேசுவின் தியாக மரணமும் உயிர்த்தெழுதலும் வழியைத் திறந்திருக்கின்றன.
4 இயேசு நம்முடைய தலைமைக் குருவாக இருப்பதால், ‘நம் பலவீனங்களைக் குறித்து அனுதாபப்படவும்,’ பூமியில் தன்னை உண்மையோடு பின்பற்றுகிறவர்களின் பாவத்துக்குப் பரிகாரம் செய்யவும் அவரால் முடியும். அதனால்தான், அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “நம்முடைய தலைமைக் குரு நம் பலவீனங்களைக் குறித்து அனுதாபப்பட முடியாதவர் அல்ல, ஆனால் நம்மைப் போல் எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டவர்; என்றாலும், பாவமே இல்லாதவர்.” இதைச் சொன்ன பிறகு, கடவுளோடு சமாதானமாவதற்கான இந்த ஏற்பாட்டை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி, இயேசு கிறிஸ்துமீது விசுவாசம் வைக்கிற எல்லாரையும் பவுல் உற்சாகப்படுத்தினார். அவர் இப்படி எழுதினார்: “அதனால், அளவற்ற கருணை காட்டுகிற கடவுளுடைய சிம்மாசனத்தை நாம் தயக்கமில்லாமல் அணுகுவோமாக. அப்படிச் செய்தால், நமக்கு உதவி தேவைப்படுகிறபோது சரியான சமயத்தில் இரக்கத்தையும் அளவற்ற கருணையையும் பெறுவோம்.”—எபி. 4:14-16; 1 யோ. 2:2.
5 இயேசு, கிறிஸ்தவ சபையின் தலைவராகவும் இருக்கிறார். முதல் நூற்றாண்டில் இருந்த அவருடைய சீஷர்களைப் போலவே, இன்று நமக்கும் ஒரு மனித தலைவர் தேவையில்லை. கடவுளுடைய சக்தியின் மூலமாகவும் தகுதியுள்ள மூப்பர்கள் மூலமாகவும் இயேசு நம்மை வழிநடத்துகிறார். கடவுளுடைய மந்தையைக் கவனித்துக்கொள்ளும் விஷயத்தில், இந்த மூப்பர்கள் இயேசுவுக்கும் அவருடைய பரலோகத் தகப்பனுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும். (எபி. 13:17; 1 பே. 5:2, 3) இயேசுவைப் பற்றி யெகோவா ஒரு தீர்க்கதரிசனத்தில் இப்படிச் சொன்னார்: “இதோ, ஜனங்களுக்கு அவரை என்னுடைய சாட்சியாக நான் ஏற்படுத்தினேன். ஜனங்களுக்குத் தலைவராகவும் அதிகாரியாகவும் நியமித்தேன்.” (ஏசா. 55:4) இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “தலைவர் என்றும் அழைக்கப்படாதீர்கள், கிறிஸ்து ஒருவர்தான் உங்கள் தலைவர்” என்று சொன்னதன் மூலம் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியதை உறுதிப்படுத்தினார்.—மத். 23:10.
6 நமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும், ஆசையும் இயேசுவுக்கு இருக்கிறது. அதனால்தான், “உழைத்துக் களைத்துப்போனவர்களே, பாரமான சுமையைச் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஏனென்றால், என்னுடைய நுகத்தடி மென்மையாகவும் என்னுடைய சுமை லேசாகவும் இருக்கிறது” என்ற அழைப்பைக் கொடுத்தார். (மத். 11:28-30) கிறிஸ்தவ சபையைச் சாந்தமாகவும், புத்துணர்ச்சி தரும் விதத்திலும் இயேசு கிறிஸ்து வழிநடத்துகிறார். இதன் மூலம், தன்னுடைய பரலோகத் தகப்பனான யெகோவா தேவனைப் போலவே, தானும் ஒரு ‘நல்ல மேய்ப்பனாக’ இருப்பதை நிரூபித்திருக்கிறார்.—யோவா. 10:11; ஏசா. 40:11.
7 இயேசு கிறிஸ்துவுக்கு இருக்கிற இன்னொரு பொறுப்பைப் பற்றி கொரிந்தியர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில் பவுல் விளக்கினார். “எல்லா எதிரிகளையும் அவருடைய காலடியில் கடவுள் வீழ்த்தும்வரை அவர் ராஜாவாக ஆட்சி செய்ய வேண்டும். எல்லாமே மகனுக்குக் கீழ்ப்படுத்தப்பட்ட பின்பு, எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்திய கடவுளுக்கு மகனும் கீழ்ப்பட்டிருப்பார். அப்போது, கடவுள்தான் எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பார்” என்று அவர் எழுதினார். (1 கொ. 15:25, 28) இயேசுதான் கடவுளுடைய படைப்புகளிலேயே முதல் படைப்பு. பூமிக்கு வருவதற்கு முன், அவர் “கைதேர்ந்த கலைஞனாக” கடவுளுடன் இருந்தார். (நீதி. 8:22-31) இயேசுவைக் கடவுள் பூமிக்கு அனுப்பியபோது, இயேசு எல்லா சமயத்திலும் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றினார். உச்சக்கட்ட சோதனையைச் சகித்துக்கொண்டு, சாகும்வரை தன்னுடைய தகப்பனுக்கு உண்மையாக இருந்தார். (யோவா. 4:34; 15:10) இப்படிக் கடைசிவரை அவர் உண்மையாக இருந்ததால், கடவுள் அவரைப் பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பினார்; கடவுளுடைய பரலோக அரசாங்கத்தின் ராஜாவாக ஆகிற உரிமையை அவருக்குத் தந்தார். (அப். 2:32-36) அதனால், மனித ஆட்சியையும் அக்கிரமத்தையும் இந்தப் பூமியிலிருந்து ஒழித்துக்கட்டும் மிகப் பெரிய பொறுப்பை கடவுளிடமிருந்து கிறிஸ்து இயேசு பெற்றிருக்கிறார். இதை நிறைவேற்றுவதற்காக, பலம் படைத்த கோடிக்கணக்கான பரலோகப் படைவீரர்களுக்கு அவர் தலைமைதாங்குவார். (நீதி. 2:21, 22; 2 தெ. 1:6-9; வெளி. 19:11-21; 20:1-3) மனித ஆட்சி ஒழிக்கப்பட்ட பிறகு, கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்ட பரலோக அரசாங்கம் மட்டுமே இந்த முழு பூமியையும் ஆட்சி செய்யும்.—வெளி. 11:15.
கிறிஸ்துவுக்கு இருக்கும் பங்கை ஏற்றுக்கொள்வது என்றால் என்ன?
8 நமக்கு முன்னுதாரணமாக இருக்கிற இயேசு கிறிஸ்து பரிபூரணமானவர். நம்மை அக்கறையோடு கவனித்துக்கொள்கிற பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய அன்பும் அக்கறையும் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், நாம் எப்போதுமே யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும். முன்னேறிக்கொண்டே போகும் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து நாம் முன்னேறவும் வேண்டும்.
9 கடவுளுடைய ஏற்பாட்டில் கிறிஸ்துவுக்கு இருக்கிற பங்கை முதல் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசுவின் சீஷர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள். கிறிஸ்துவின் தலைமையில் ஒற்றுமையாகச் சேவை செய்வதன் மூலமும், கடவுளுடைய சக்தியின் உதவியோடு இயேசு கொடுத்த வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் இதைக் காட்டினார்கள். (அப். 15:12-21) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைக் கொண்ட சபையின் ஒற்றுமையைப் பற்றி பவுல் இப்படி எழுதினார்: “சத்தியத்தைப் பேசி, தலையாக இருக்கிற கிறிஸ்துவின் கீழ் எல்லாவற்றிலேயும் அன்பினால் வளருகிறவர்களாக இருக்க வேண்டும். அவரால்தான் எல்லா உடலுறுப்புகளும், அவற்றுக்கு உதவி செய்கிற எல்லா மூட்டுகளாலும் ஒன்றோடொன்று இசைவாக இணைக்கப்பட்டு ஒற்றுமையாக வேலை செய்கின்றன; ஒவ்வொரு உறுப்பும் அதனதன் வேலையைச் சரியாகச் செய்வதால் முழு உடலும் வளர்ச்சியடைந்து அன்பால் பலப்படுத்தப்படுகிறது.”—எபே. 4:15, 16.
10 சபையில் இருக்கும் எல்லாரும் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, தலைவரான கிறிஸ்துவின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து ஒற்றுமையாகச் சேவை செய்யும்போது கிறிஸ்தவ முதிர்ச்சியை அடைய முடிகிறது, ‘எல்லாரையும் பரிபூரணமாக இணைக்கிற அன்பு’ அவர்களுக்குள் அதிகமாகிறது.—யோவா. 10:16; கொலோ. 3:14; 1 கொ. 12:14-26.
11 பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இன்று உலகம் முழுவதும் நடக்கிற சம்பவங்கள், 1914 முதல் இயேசு கிறிஸ்து ஆட்சி செய்துவருகிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாக நிரூபிக்கின்றன. அவர் இப்போது தன்னுடைய எதிரிகளின் நடுவே ஆட்சி செய்கிறார். (சங். 2:1-12; 110:1, 2) இன்று பூமியில் வாழ்கிறவர்களுக்கு இதனால் என்ன நன்மை? ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகவும், எஜமான்களுக்கெல்லாம் எஜமானாகவும் இருக்கிற இயேசு, தன்னுடைய எதிரிகள்மீது சீக்கிரத்தில் கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றப்போகிறார். (வெளி. 11:15; 12:10; 19:16) அதன் பிறகு, ஆரம்பத்தில் மனிதர்கள் கலகம் செய்த சமயத்தில் கடவுள் கொடுத்த வாக்கு நிறைவேறும். இயேசுவின் பிரியத்தைச் சம்பாதித்து அவருடைய வலது பக்கத்தில் நிற்கிறவர்கள் கடவுள் வாக்குக் கொடுத்த மீட்பை பெற்றுக்கொள்வார்கள். (மத். 25:34) கடவுளுடைய ஏற்பாட்டில் கிறிஸ்துவுக்கு இருக்கிற பங்கைப் புரிந்துகொண்டதை நினைத்து நாம் ரொம்ப சந்தோஷப்படுகிறோம், இல்லையா? இந்தக் கடைசி நாட்களில், கிறிஸ்துவின் தலைமையில் உலகம் முழுவதும் நடக்கிற ஊழியத்தைச் செய்து முடிக்க நாம் ஒன்றுசேர்ந்து செயல்படுவோமாக!