பாடம் 52
யெகோவாவின் நெருப்பு போன்ற படை
சீரியாவின் ராஜா பெனாதாத், இஸ்ரவேலைத் தாக்கிக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு தடவையும் எலிசா தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவை எச்சரித்ததால் அவரால் தப்பிக்க முடிந்தது. அதனால், எலிசாவைக் கடத்த வேண்டும் என்று பெனாதாத் முடிவு செய்தான். அவர் தோத்தான் என்ற நகரத்தில் இருந்ததைத் தெரிந்துகொண்டான். அதனால், அவரைப் பிடிப்பதற்கு தன்னுடைய படையை அனுப்பினான்.
சீரியர்கள் ராத்திரியில் தோத்தானுக்கு வந்தார்கள். அடுத்த நாள் காலையில், எலிசாவின் வேலைக்காரர் வெளியே போய்ப் பார்த்தபோது, அந்த நகரத்தைச் சுற்றிலும் ஒரு படை நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அவர் பயந்துபோய் எலிசாவிடம், ‘எலிசா, இப்போது என்ன செய்வது?’ என்று அலறினார். அதற்கு எலிசா, ‘அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள்தான் அதிகம்’ என்று சொன்னார். அப்போது, அந்த நகரத்தைச் சுற்றி இருந்த மலைகளில் குதிரைகளும் நெருப்புபோல் பிரகாசமான ரதங்களும் நிறைந்திருப்பது அந்தக் வேலைக்காரரின் கண்களுக்குத் தெரிந்தது. யெகோவாதான் இதெல்லாம் அவருக்குத் தெரியும்படி செய்தார்.
சீரியாவின் வீரர்கள் எலிசாவைப் பிடிக்க வந்தபோது அவர், ‘யெகோவாவே, இவர்களுடைய கண்களைக் குருடாக்குங்கள்’ என்று ஜெபம் செய்தார். அந்த வீரர்களுக்குக் கண் தெரிந்தாலும், அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது எலிசா அவர்களிடம், ‘நீங்கள் தப்பான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள். என் பின்னால் வாருங்கள். நீங்கள் தேடுகிற ஆளிடம் நான் உங்களைக் கூட்டிக்கொண்டு போகிறேன்’ என்று சொன்னார். அவர்களும் அவர் பின்னால் போனார்கள். அவர்களை இஸ்ரவேலின் ராஜா வாழ்ந்த சமாரியாவுக்கு எலிசா கூட்டிக்கொண்டு போனார்.
அங்கே போன பிறகுதான், தாங்கள் எந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புரிந்தது. இஸ்ரவேலின் ராஜா எலிசாவிடம், ‘இவர்களைக் கொன்றுபோடட்டுமா?’ என்று கேட்டார். தன்னைப் பிடிக்க வந்த வீரர்களைப் பழிவாங்க எலிசா நினைத்தாரா? இல்லை. ‘இவர்களைக் கொல்ல வேண்டாம். இவர்களுக்குச் சாப்பாடு போட்டு அனுப்பி வையுங்கள்’ என்று ராஜாவிடம் சொன்னார். அதனால் ராஜா அவர்களுக்கு ஒரு பெரிய விருந்து வைத்து அவர்களுடைய ஊருக்கு அனுப்பி வைத்தார்.
“கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார் என்பதுதான் நாம் அவர்மேல் வைத்திருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை.”—1 யோவான் 5:14