பாடம் 87
இயேசுவின் கடைசி பஸ்கா
யூதர்கள் ஒவ்வொரு வருஷமும் நிசான் மாதம் 14-ஆம் தேதி பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினார்கள். இதை ஏன் கொண்டாடினார்கள்? எகிப்தில் அடிமைகளாக இருந்த தன் மக்களை யெகோவா காப்பாற்றி, தான் வாக்குக் கொடுத்த தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போனார். இதை நினைத்துப் பார்ப்பதற்காகத்தான் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினார்கள். கி.பி. 33-ல் இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் எருசலேமில் ஒரு மாடி அறையில் பஸ்காவைக் கொண்டாடினார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்தபோது, ‘உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்’ என்று இயேசு சொன்னார். அப்போஸ்தலர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் இயேசுவிடம், ‘யார் அது?’ என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, ‘இந்த ரொட்டியை நான் யாருக்குக் கொடுக்கிறேனோ அவன்தான்’ என்றார். பிறகு ஒரு ரொட்டித் துண்டை யூதாஸ் இஸ்காரியோத்திடம் கொடுத்தார். உடனே அவன் வெளியே போனான்.
பிறகு இயேசு ஜெபம் செய்துவிட்டு, ரொட்டியைத் துண்டு துண்டாக உடைத்து அங்கிருந்த அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தார். இயேசு அவர்களிடம், ‘இந்த ரொட்டியைச் சாப்பிடுங்கள். இது உங்களுக்காக நான் கொடுக்கப்போகும் என் உடலைக் குறிக்கிறது’ என்று சொன்னார். அடுத்ததாக, திராட்சமதுவை எடுத்து ஜெபம் செய்துவிட்டு தன் அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார். பிறகு அவர்களிடம், ‘இந்தத் திராட்சமதுவைக் குடியுங்கள். பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக நான் கொடுக்கப்போகும் இரத்தத்தை இது குறிக்கிறது. நீங்கள் பரலோகத்தில் என்னோடு ராஜாக்களாக இருப்பீர்கள் என்று சத்தியமாகச் சொல்கிறேன். என் ஞாபகமாக இதை ஒவ்வொரு வருஷமும் செய்யுங்கள்’ என்று சொன்னார். இன்றும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் ஒவ்வொரு வருஷமும் இதே நாள் சாயங்காலத்தில் கூடிவருகிறார்கள். அந்தக் கூட்டத்தை இப்போது எஜமானின் இரவு விருந்து என்று நாம் சொல்கிறோம்.
அப்போஸ்தலர்கள் அந்த விருந்துக்குப் பிறகு, தங்களில் யார் ரொம்ப முக்கியமானவர் என்று வாக்குவாதம் செய்தார்கள். இயேசு அவர்களிடம், ‘உங்களில் யார் தன்னைச் சிறியவராக, அதாவது சாதாரண ஆளாக நினைக்கிறாரோ, அவர்தான் எல்லாரையும்விட பெரியவர்’ என்று சொன்னார்.
அதோடு, ‘நீங்கள் என்னுடைய நண்பர்கள். என் அப்பா உங்களிடம் சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் நான் உங்களிடம் சொல்கிறேன். சீக்கிரத்தில், பரலோகத்தில் இருக்கிற என் அப்பாவிடம் போய்விடுவேன். நீங்கள் இங்கே இருப்பீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் காட்டுகிற அன்பைப் பார்த்து, நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று மக்கள் தெரிந்துகொள்வார்கள். நான் உங்களிடம் அன்பு காட்டியது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும்’ என்றும் சொன்னார்.
கடைசியாக, எல்லா சீஷர்களையும் பாதுகாக்கும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அவர்கள் ஒன்றுசேர்ந்து சமாதானமாக வேலை செய்ய உதவ வேண்டும் என்றும் யெகோவாவிடம் கேட்டார். அதோடு, யெகோவாவின் பெயர் புனிதமாக்கப்பட வேண்டும் என்றும் ஜெபம் செய்தார். பிறகு, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் யெகோவாவைப் புகழ்ந்து பாடல்கள் பாடிவிட்டு வெளியே போனார்கள். இயேசு கைது செய்யப்படும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.
“பயப்படாதே சிறுமந்தையே, உங்களிடம் தன் அரசாங்கத்தைக் கொடுக்க உங்கள் தகப்பன் பிரியமாக இருக்கிறார்.”—லூக்கா 12:32