அவர்கள் யெகோவாவின் சித்தத்தை செய்தனர்
இயேசுவின் பிரிவுரை வார்த்தைகளுக்கு கவனம்செலுத்துதல்
இயேசு கிறிஸ்துவும், அவருடைய 11 உண்மையுள்ள அப்போஸ்தலர்களும் பொ.ச. 33-ல், நிசான் 14 அன்று மாலையில் எருசலேமில் உள்ள ஒரு மேலறையில் ஓர் மேஜையில் சாய்ந்திருந்தனர். தம்முடைய மரணம் சமீபித்துள்ளது என்று உணர்ந்து, அவர்களிடம் இவ்வாறு கூறினார்: “இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்.” (யோவான் 13:33) மெய்யாகவே, யூதாஸ் காரியோத் இயேசுவை கொல்ல விருப்பப்பட்டிருந்த பொல்லாத மனிதர்களுடன் சதிசெய்ய ஏற்கெனவே போய்விட்டிருந்தான்.
இயேசுவைப்போல் அந்தச் சூழ்நிலைமையின் அவசரத்தன்மையை அந்த மேலறையில் உள்ள யாரும் உணரவில்லை. தாம் துன்பப்படபோகிறார் என்று அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது. தம்முடைய அப்போஸ்தலர்கள் தம்மை அதே இரவில் கைவிட்டுவிடுவார்கள் என்றும்கூட இயேசு அறிந்திருந்தார். (மத்தேயு 26:31; சகரியா 13:7) தம்முடைய மரணத்திற்குமுன் தம்முடைய அப்போஸ்தலர்களுடன் பேசுவதற்கு இதுதான் இயேசுவின் கடைசி வாய்ப்பானதால், அவருடைய பிரிவுரை வார்த்தைகள் மிக முக்கியமான காரியங்களின்மேல் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம்.
“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்”
யூத பஸ்காவிற்குப் பதிலாக ஒரு புதிய ஆசரிப்பை, தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களுடன், இயேசு தொடங்கிவைத்தார். அப்போஸ்தலனாகிய பவுல் அதை “கர்த்தருடைய இராப்போஜனம்” என்று அழைத்தார். (1 கொரிந்தியர் 11:20) புளிப்பில்லாத ஒரு அப்பத்தை எடுத்து, இயேசு ஜெபம் செய்தார். பின்பு அவர் அப்பத்தைப் பிட்டு, தம் அப்போஸ்தலருக்குக் கொடுத்து, “வாங்கிப் புசியுங்கள். இது என்னுடைய சரீரம்,” என்றார். பின்பு திராட்சரசப் பாத்திரத்தையும் எடுத்து, நன்றி செலுத்தி அப்போஸ்தலருக்கு கொடுத்து, இவ்வாறு கூறினார்: “எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்; இது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தம்; பாவமன்னிப்புக்கென்று அநேகருக்காகச் சிந்தப்படுகிறது.”—மத்தேயு 26:26-28, திருத்திய மொழிபெயர்ப்பு.
இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் என்னவாயிருந்தது? இயேசு சுட்டிக்காட்டியபடி, அப்பம் அவருடைய பாவமற்ற சரீரத்தைப் பிரதிநிதித்துவம் செய்தது. (எபிரெயர் 7:26; 1 பேதுரு 2:22, 24) பாவங்கள் மன்னிக்கப்படுவதை சாத்தியமாக்கும் இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தை, திராட்சரசம் பிரதிநிதித்துவம் செய்தது. யெகோவா தேவனுக்கும், பரலோகத்தில் இயேசுவுடன் முடிவிலே ஆட்சிசெய்யப்போகும் 1,44,000 மனிதர்களுக்குமிடையே உள்ள புதிய உடன்படிக்கையையும் இயேசுவின் பலிக்குரிய இரத்தம் சட்டப்படி உறுதிப்படுத்தும். (எபிரெயர் 9:14; 12:22-24; வெளிப்படுத்துதல் 14:1) இந்தப் போஜனத்தை பகிர்ந்துகொள்ள தம்முடைய அப்போஸ்தலர்களை அழைப்பதன்மூலம், அவர்கள் தம்முடன் பரலோக ராஜ்யத்தில் பங்குகொள்வார்கள் என்று இயேசு சுட்டிக்காட்டினார்.
இந்த நினைவு ஆசரிப்பைக் குறித்து, இயேசு இவ்வாறு கட்டளையிட்டார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்துகொண்டிருங்கள்.” (லூக்கா 22:19, NW) ஆம், பஸ்காவைப்போல், கர்த்தருடைய இராப்போஜனம் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் நிகழ்ச்சி. எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலருக்கு கிடைத்த விடுதலையின் ஞாபகார்த்தமாக பஸ்கா ஆசரிக்கப்பட்டதென்றால், கர்த்தருடைய இராப்போஜனம் ஒரு பெரியளவிலான விடுதலையின்மேல்—பாவம் மற்றும் மரணத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் மீட்டுக்கொள்ளத்தக்க மனிதவர்க்கத்தின்மேல் கவனம் செலுத்தும். (1 கொரிந்தியர் 5:7; எபேசியர் 1:7) மேலும், அடையாளச் சின்னங்களுக்குரிய அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்குகொள்பவர்கள், ராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் இருக்கப்போகும் தங்களுடைய எதிர்கால சிலாக்கியங்களைப் பற்றி நினைப்பூட்டப்படுவார்கள்.—வெளிப்படுத்துதல் 20:6.
மனித சரித்திரத்திலேயே இயேசு கிறிஸ்துவின் மரணம்தான் உண்மையில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக இருந்திருக்கிறது. இயேசு செய்ததை போற்றுபவர்கள், “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்,” என்று கர்த்தருடைய இராப்போஜனத்தை பற்றி அவர் கூறிய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொரு வருடமும் நிசான் 14-க்கு ஒத்திருக்கும் தேதியில் இயேசுவின் மரணத்தை நினைவு ஆசரிப்பாக அனுசரிக்கிறார்கள். 1996-ல் இந்தத் தேதி ஏப்ரல் 2 அன்று சூரிய அஸ்தமனத்திற்குப்பின் வருகிறது. நீங்கள் வசிக்குமிடத்திலிருக்கும் ஒரு ராஜ்ய மன்றத்திற்கு வந்து இதில் கலந்துகொள்ள நீங்கள் அனலுடன் அழைக்கப்படுகிறீர்கள்.
‘நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறேன்’
கர்த்தருடைய இராப்போஜனத்தைத் தொடங்கி வைத்ததைத்தவிர, இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு ஒரு பிரிவுரை புத்திமதியையும் கொண்டிருந்தார். அவர்களுக்கு சிறந்த பயிற்சியளிக்கப்பட்ட பிறகும், இன்னும் அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகமிருந்தது. இயேசுவிற்கான, தங்களுக்கான, அல்லது எதிர்காலத்திற்கான கடவுளுடைய நோக்கத்தைக் குறித்து அவர்கள் முழுமையாக பகுத்துணரவில்லை. ஆனால் இயேசு இந்தக் காரியங்களையெல்லாம் இச்சமயத்தில் தெளிவுபடுத்த முயற்சிக்கவில்லை. (யோவான் 14:26; 16:12, 13) அதற்கு பதிலாக, மிக முக்கியமான ஒன்றைப்பற்றி அவர் பேசினார். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்,” என்று இயேசு கூறினார்.—யோவான் 13:34, 35.
எந்த விதத்தில் இது ‘ஒரு புதிய கட்டளையாக’ இருந்தது? “உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக,” என்று மோசேயின் நியாயப்பிரமாணம் கட்டளையிட்டது. (லேவியராகமம் 19:18) ஆயினும், சககிறிஸ்தவர்களுக்காக ஒருவருடைய ஜீவனைக் கொடுக்குமளவுக்கு போகக்கூடிய சுயதியாக அன்பை காட்டவேண்டும் என்று தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இயேசு கூறினார். நிச்சயமாகவே, ‘அன்பின் கட்டளை’ ஆபத்து குறைவான மற்ற சூழ்நிலைமைகளிலும் பொருந்தும். எல்லா சமயங்களிலும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒருவர், ஆவிக்குரிய விதத்திலும் மற்ற விதத்திலும் அன்பை வெளிக்காட்ட முயற்சி எடுப்பார்.—கலாத்தியர் 6:10.
இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி இரவில், தம்முடைய சீஷர்கள் சார்பாக யெகோவாவிடம் ஜெபிக்க அன்பு இயேசுவைத் தூண்டியது. அவர் செய்த ஜெபத்தின் ஒரு பாகமானது: “இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.” (யோவான் 17:11) தம்முடைய தந்தையிடம் செய்யப்பட்ட இந்த வேண்டுதலில், இயேசு தம் சீஷர்களின் அன்பான ஒற்றுமைக்காக ஜெபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (யோவான் 17:20-23) ‘இயேசு அவர்களிடம் அன்பாயிருந்ததுபோல அவர்களும் ஒருவரிலொருவர் அன்பாக’ இருக்கவேண்டியது அவசியமாக இருந்தது.—யோவான் 15:12.
இயேசுவின் பிரிவுரை வார்த்தைகளுக்கு அந்த உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் கவனம்செலுத்தினார்கள். நாமும்கூட அவருடைய கட்டளைகளுக்கு இணங்க வேண்டும். இந்த நெருக்கடியான “கடைசிநாட்களில்,” முந்தி எந்த சமயத்திலும் இருந்ததைவிட இப்போதுதான் அன்பும், ஒற்றுமையும் உண்மை வணக்கத்தாருக்கு மிக முக்கியம். (2 தீமோத்தேயு 3:1) மெய்யாகவே, உண்மை கிறிஸ்தவர்கள் இயேசுவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து, சகோதர அன்பை வெளிக்காட்டுகிறார்கள். கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆசரிக்கவேண்டும் என்ற அவருடைய கட்டளையையும் இது உட்படுத்துகிறது.