அதிகாரம் 7
எல்லா தேசத்தாரும் ‘நான் யெகோவா என்று தெரிந்துகொள்வார்கள்’
முக்கியக் குறிப்பு: யெகோவாவின் பெயரைக் கெடுத்த தேசங்களோடு இஸ்ரவேலர்கள் தொடர்பு வைத்துக்கொண்டதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
1, 2. (அ) இஸ்ரவேலர்கள் எப்படி ஓநாய் கூட்டத்தின் மத்தியில் தன்னந்தனியாக இருந்த செம்மறியாட்டைப் போல வாழ்ந்தார்கள்? (ஆரம்பப் படம்.) (ஆ) இஸ்ரவேலர்களும் அவர்களுடைய ராஜாக்களும் எதை அனுமதித்தார்கள்?
இஸ்ரவேலர்களைச் சுற்றியிருந்த தேசங்கள், ஓநாய் கூட்டத்தைப் போல இருந்தன. நூற்றுக்கணக்கான வருஷங்களாக, இஸ்ரவேலர்கள் அந்தத் தேசங்கள் மத்தியில் தன்னந்தனியாக இருக்கும் ஒரு செம்மறியாட்டைப் போல வாழ்ந்தார்கள். கிழக்கே அம்மோனியர்கள், மோவாபியர்கள் மற்றும் ஏதோமியர்கள் இஸ்ரவேலர்களை அச்சுறுத்தினார்கள். மேற்கே, பெலிஸ்தியர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள்; அவர்கள் எப்போதுமே இஸ்ரவேலர்களை எதிர்த்தார்கள். வடக்கே, செல்வச்செழிப்புக்கும் வர்த்தகத்துக்கும் பேர்போன தீரு நகரம் இருந்தது. தெற்கே, பரந்து விரிந்த பூர்வ எகிப்து தேசம் இருந்தது. கடவுளாகக் கருதப்பட்ட பார்வோன் அதை ஆட்சி செய்தான்.
2 இஸ்ரவேலர்கள் எப்போதெல்லாம் யெகோவாவை நம்பியிருந்தார்களோ அப்போதெல்லாம் எதிரிகளிடமிருந்து அவர்களை அவர் பாதுகாத்தார். ஆனால் அடிக்கடி, அவர்களும் சரி, அவர்களுடைய ராஜாக்களும் சரி, தங்களைச் சுற்றியிருந்த தேசங்கள் தங்களுடைய வணக்கத்தைக் கறைபடுத்த அனுமதித்தார்கள். இதற்கு, ஆகாப் ராஜா ஒரு உதாரணம். யூதாவை யோசபாத் ராஜா ஆட்சி செய்த காலத்தில் இவர் இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தை ஆட்சி செய்தார். சீதோனிய ராஜாவின் மகளான யேசபேலை இவர் திருமணம் செய்திருந்தார். செல்வச்செழிப்பான தீரு நகரம் அந்தச் சீதோனிய ராஜாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இஸ்ரவேல் முழுக்க பாகால் வணக்கம் பரவுவதற்கு யேசபேல் காரணமாக இருந்தாள். அதுவரை இல்லாதளவுக்குத் தூய வணக்கத்தைக் கறைபடுத்த அவள் தன் கணவனைத் தூண்டிவிட்டாள்.—1 ரா. 16:30-33; 18:4, 19.
3, 4. (அ) எசேக்கியேல் யாருக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொன்னார்? (ஆ) என்ன கேள்விகளுக்குப் பதில்களைப் பார்ப்போம்?
3 தனக்கு உண்மையில்லாமல் போவதால் வரும் விளைவுகளைப் பற்றி யெகோவா தன்னுடைய மக்களை முன்கூட்டியே எச்சரித்திருந்தார். ஆனால், யெகோவா பொறுமையோடு இருந்த காலம் முடிவுக்கு வந்தது. (எரே. 21:7, 10; எசே. 5:7-9) கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்குப் பிறகு, கி.மு. 609-ல் பாபிலோனியப் படை வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தை மூன்றாவது முறையாகத் தாக்கியது. இந்த முறை பாபிலோனியப் படை எருசலேமின் மதில்களை இடித்து, நேபுகாத்நேச்சாருக்கு எதிராகக் கலகம் செய்தவர்களை அழித்தது. எருசலேமின் முற்றுகையையும் அதன் அழிவையும் பற்றி எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிய சமயத்தில், இஸ்ரவேலைச் சுற்றியிருந்த தேசங்களுக்கு எதிராக அவர் தீர்க்கதரிசனம் சொன்னார்.
யெகோவாவை எதிர்த்த தேசங்களால் தங்களுடைய செயல்களுக்கான விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியாது
4 எருசலேம் அழிக்கப்படும்போது, யூதாவின் எதிரிகள் சந்தோஷப்படுவார்கள் என்றும் தப்பித்து ஓடுகிறவர்களைக் கொடுமைப்படுத்துவார்கள் என்றும் எசேக்கியேலிடம் யெகோவா சொல்லியிருந்தார். ஆனால், யெகோவாவை எதிர்த்த தேசங்களால் தங்களுடைய செயல்களுக்கான விளைவுகளிலிருந்து தப்பிக்கவே முடியாது. அவருடைய மக்களைத் துன்புறுத்திய அல்லது அவர்களுடைய வணக்கத்தைக் கறைப்படுத்திய தேசங்களால் தப்பிக்கவே முடியாது. அந்தத் தேசங்களோடு இஸ்ரவேலர்கள் தொடர்பு வைத்துக்கொண்டதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? அந்தத் தேசங்களைப் பற்றி எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனங்கள் இன்று நமக்கு எப்படி நம்பிக்கை தருகின்றன?
இஸ்ரவேலர்களை “கேலியும் கிண்டலும்” செய்த சொந்தக்காரர்கள்
5, 6. அம்மோனியர்களும் இஸ்ரவேலர்களும் எந்த விதத்தில் சொந்தக்காரர்களாக இருந்தார்கள்?
5 அம்மோனியர்கள், மோவாபியர்கள், ஏதோமியர்கள் எல்லாரும் ஒருவிதத்தில் இஸ்ரவேலர்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். ரொம்பக் காலத்துக்கு முன் இவர்களுடைய முன்னோர்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்துவந்தார்கள். ஆனாலும், இந்த மக்கள், பல காலமாகவே கடவுளுடைய மக்கள்மீது பகையைக் காட்டினார்கள். அவர்களைக் “கேலியும் கிண்டலும்” செய்தார்கள்.—எசே. 25:6.
6 அம்மோனியர்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். இவர்கள், ஆபிரகாமின் அண்ணன் மகனான லோத்துவின் சந்ததியார். அதாவது, லோத்துவின் இளைய மகள் மூலம் வந்தவர்கள். (ஆதி. 19:38) அவர்கள் பேசிய மொழி கிட்டத்தட்ட எபிரெய மொழியைப் போல இருந்தது. அதனால், இஸ்ரவேலர்களால் அதைப் புரிந்துகொள்ள முடிந்திருக்கும். இஸ்ரவேலர்களும் அம்மோனியர்களும் சொந்தக்காரர்களாக இருந்ததால், அம்மோனியர்களை எதிர்த்து போர் செய்ய போகக் கூடாது என்று இஸ்ரவேலர்களிடம் யெகோவா சொல்லியிருந்தார். (உபா. 2:19) ஆனாலும், நியாயாதிபதிகளின் காலத்தில் அம்மோனியர்கள் மோவாபிய ராஜாவான எக்லோனோடு சேர்ந்துகொண்டு இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்கினார்கள். (நியா. 3:12-15, 27-30) ராஜாவாக சவுல் நியமிக்கப்பட்ட சமயத்தில் அம்மோனியர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். (1 சா. 11:1-4) யோசபாத் ராஜாவின் காலத்தில் அவர்கள் மறுபடியும் மோவாபிய படைகளோடு சேர்ந்து வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்கு எதிராகப் போர் செய்தார்கள்.—2 நா. 20:1, 2.
7. மோவாபியர்கள் தங்களுடைய சொந்தக்காரர்களான இஸ்ரவேலர்களை எப்படி நடத்தினார்கள்?
7 மோவாபியர்களும் லோத்துவின் சந்ததியில் வந்தவர்கள். அதாவது, லோத்துவின் மூத்த மகள் மூலம் வந்தவர்கள். (ஆதி. 19:36, 37) அதனால், அவர்களோடு போர் செய்யக் கூடாது என்று இஸ்ரவேலர்களிடம் யெகோவா சொல்லியிருந்தார். (உபா. 2:9) ஆனால், மோவாபியர்கள் இஸ்ரவேலர்களிடம் அன்பாக நடந்துகொள்ளவில்லை. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி வந்த தங்களுடைய சொந்தக்காரர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்கு அவர்கள் போவதைத் தடுக்கப் பார்த்தார்கள். மோவாபிய ராஜாவான பாலாக், இஸ்ரவேலர்களைச் சபிப்பதற்கு பிலேயாமுக்குக் கூலி கொடுத்தான். இஸ்ரவேல் ஆண்களைப் பாலியல் முறைகேட்டிலும் சிலை வழிபாட்டிலும் சிக்க வைப்பதற்கு என்ன செய்யலாம் என்று பாலாக்குக்கு பிலேயாம் சொல்லிக்கொடுத்தான். (எண். 22:1-8; 25:1-9; வெளி. 2:14) எசேக்கியேலின் காலம்வரைக்கும் பல நூற்றாண்டுகளாகவே மோவாபியர்கள் தங்களுடைய சொந்தக்காரர்களை அடக்கி ஒடுக்கினார்கள்.—2 ரா. 24:1, 2.
8. ஏதோமியர்களை இஸ்ரவேலர்களின் சகோதரர்கள் என்று யெகோவா ஏன் குறிப்பிட்டார், ஆனால் இஸ்ரவேலர்களிடம் அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்?
8 ஏதோமியர்கள், யாக்கோபின் சகோதரனான ஏசாவின் வம்சத்தில் வந்தவர்கள். ஏதோமியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் நெருங்கிய பந்தம் இருந்ததால், அவர்களைச் சகோதரர்கள் என்று யெகோவா குறிப்பிட்டார். (உபா. 2:1-5; 23:7, 8) அப்படியிருந்தும், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையான சமயம்முதல் கி.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்படும்வரை அவர்களை ஏதோமியர்கள் எதிர்த்தார்கள். (எண். 20:14, 18; எசே. 25:12) எருசலேம் அழிக்கப்பட்டபோது இஸ்ரவேலர்கள் பட்ட கஷ்டத்தைப் பார்த்து அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். எருசலேமை தரைமட்டமாக்கிப்போடும்படி பாபிலோனியர்களைத் தூண்டிவிட்டார்கள். அதுபோதாதென்று, தப்பியோடிய இஸ்ரவேலர்களைப் பிடித்து எதிரிகளிடம் ஒப்படைத்தார்கள்.—சங். 137:7; ஒப. 11, 14.
9, 10. (அ) அம்மோன், மோவாப் மற்றும் ஏதோமுக்கு என்ன ஆனது? (ஆ) அந்தத் தேசங்களைச் சேர்ந்த எல்லாருமே இஸ்ரவேலர்களின் எதிரிகளாக இருக்கவில்லை என்பதற்கு உதாரணம் கொடுங்கள்.
9 தன்னுடைய மக்களை மோசமாக நடத்தியதற்காக அவர்களுடைய சொந்தக்காரர்களை யெகோவா தண்டிக்கப்போவதாகச் சொன்னார். ‘அம்மோனியர்களைப் பற்றிய நினைவையே அழிப்பதற்காக அவர்களைக் கிழக்கத்திய ஜனங்களின் கையில் கொடுப்பேன்’ என்று அவர் சொன்னார். அதோடு, “மோவாபை நான் தண்டிப்பேன். அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்” என்று அவர் சொன்னார். (எசே. 25:10, 11) எருசலேம் அழிக்கப்பட்டு ஐந்து வருஷங்களுக்குப் பின், அம்மோனையும் மோவாபையும் பாபிலோனியர்கள் கைப்பற்றியபோது இந்தத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேற ஆரம்பித்தன. ஏதோமைப் பற்றி யெகோவா இப்படிச் சொன்னார்: “மனுஷர்களோ மிருகங்களோ இல்லாதபடி அதை வெறிச்சோடிப்போக வைப்பேன்.” (எசே. 25:13) யெகோவா சொன்னபடியே காலப்போக்கில் அம்மோன், மோவாப், ஏதோம் ஆகிய தேசங்கள், இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.—எரே. 9:25, 26; 48:42; 49:17, 18.
10 ஆனால், அந்தத் தேசங்களைச் சேர்ந்த எல்லாருமே கடவுளுடைய மக்களின் எதிரிகளாக இருக்கவில்லை. உதாரணத்துக்கு, அம்மோனியனான சேலேக்கும் மோவாபியனான இத்மாவும் தாவீதின் படையில் மாவீரர்களாக இருந்தார்கள். (1 நா. 11:26, 39, 46; 12:1) மோவாபிய பெண்ணான ரூத், யெகோவாவின் உண்மையுள்ள வணக்கத்தாரில் ஒருத்தியாக ஆனாள்.—ரூத் 1:4, 16, 17.
நம்முடைய நம்பிக்கைகளைக் கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்கக் கூடாது
11. அம்மோன், மோவாப் மற்றும் ஏதோமிடம் இஸ்ரவேலர்கள் தொடர்பு வைத்துக்கொண்டதிலிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்?
11 அந்தத் தேசங்களோடு இஸ்ரவேலர்கள் தொடர்பு வைத்துக்கொண்டதிலிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்? தங்களுடைய சொந்தக்காரர்களுக்கு இஸ்ரவேலர்கள் இடம்கொடுத்ததால், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய பொய் மதப் பழக்கவழக்கங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். உதாரணத்துக்கு, மோவாபியர்களின் கடவுளான பாகால் பேயோரையும், அம்மோனியர்களின் கடவுளான மோளேகையும் வணங்க ஆரம்பித்தார்கள். (எண். 25:1-3; 1 ரா. 11:7) நமக்கும் அதேபோல் நடக்க வாய்ப்பிருக்கிறது. சத்தியத்தில் இல்லாத நம் சொந்தக்காரர்கள், நம்முடைய நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்கும்படி நம்மை வற்புறுத்தலாம். உதாரணத்துக்கு, நாம் ஏன் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை, கிறிஸ்மஸின்போது ஏன் பரிசுகளை வாங்குவதோ கொடுப்பதோ இல்லை, அல்லது பொய் மத நம்பிக்கைகளோடு சம்பந்தப்பட்ட பிரபலமான பழக்கவழக்கங்களில் ஏன் கலந்துகொள்வதில்லை என்பதெல்லாம் அவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஒருவேளை கொஞ்ச நேரத்துக்காவது நம்முடைய நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்கும்படி அவர்கள் சொல்லலாம். அவர்கள் எந்தத் தப்பான எண்ணத்தோடும் அப்படிச் சொல்லாவிட்டாலும், நாம் அவர்களுடைய வற்புறுத்தலுக்கு இணங்கிவிடாமல் இருப்பது ரொம்ப முக்கியம். இஸ்ரவேலர்களுடைய சரித்திரம் காட்டுகிறபடி, நம்முடைய நம்பிக்கைகளைக் கொஞ்சம் விட்டுக்கொடுத்தாலும் அது நம்மைப் பெரிய ஆபத்தில் கொண்டுபோய்விடும்.
12, 13. நமக்கு எப்படிப்பட்ட எதிர்ப்பு வரலாம், ஆனால் நாம் உண்மையாக இருந்தால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்?
12 அம்மோன், மோவாப் மற்றும் ஏதோமிடம் இஸ்ரவேலர்கள் பட்ட கஷ்டங்களிலிருந்து நாம் இன்னொரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். சத்தியத்தில் இல்லாத நம் குடும்பத்தாரிடமிருந்து நமக்குக் கடும் எதிர்ப்பு வரலாம். சில சமயங்களில், நாம் பிரசங்கிக்கும் செய்தியால் குடும்பத்தில் பிரிவினைகள் வரும் என்று இயேசு எச்சரித்தார். அதனால்தான், “அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும் . . . பிரிக்க வந்தேன்” என்று அவர் சொன்னார். (மத். 10:35, 36) தங்களுடைய சொந்தக்காரர்களோடு சண்டை போடக் கூடாது என்று இஸ்ரவேலர்களிடம் யெகோவா சொல்லியிருந்ததால் நாமும் சத்தியத்தில் இல்லாத நம் குடும்பத்தாரிடம் சண்டை போடுவதில்லை. ஆனால், அவர்கள் நம்மை எதிர்ப்பதைப் பார்த்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.—2 தீ. 3:12.
13 யெகோவாவை நாம் வணங்குவதை நம் சொந்தக்காரர்கள் எதிர்க்காமல் இருக்கலாம். ஆனாலும், யெகோவாவைவிட அவர்களுக்கு நம் வாழ்க்கையில் அதிக இடம்கொடுத்துவிடக் கூடாது. ஏனென்றால், நம் இதயத்தில் யெகோவாவுக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும். (மத்தேயு 10:37-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால், சேலேக், இத்மா, மற்றும் ரூத்தைப் போல நம் சொந்தக்காரர்களில் சிலர் தூய வணக்கத்தில் நம்மோடு சேர்ந்துகொள்வார்கள். (1 தீ. 4:16) அப்போது, ஒரே உண்மையான கடவுளுக்குச் சேவை செய்வதால் கிடைக்கும் சந்தோஷத்தை அவர்களாலும் அனுபவிக்க முடியும். அதோடு, கடவுளுடைய அன்பையும் பாதுகாப்பையும் பெற முடியும்.
யெகோவாவின் எதிரிகள் ‘கடும் கோபத்தோடு தண்டிக்கப்பட்டார்கள்’
14, 15. பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களை எப்படி நடத்தினார்கள்?
14 கிரேத்தா தீவிலிருந்த பெலிஸ்தியர்கள், ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் யெகோவா கொடுப்பதாகச் சொன்ன தேசத்தில் ஏற்கெனவே குடியேறியிருந்தார்கள். ஆபிரகாமும் ஈசாக்கும் சில விஷயங்களில் அவர்களோடு தொடர்பு வைத்திருந்தார்கள். (ஆதி. 21:29-32; 26:1) இஸ்ரவேலர்கள் வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குப் போவதற்குள் பெலிஸ்தியர்கள் சக்தி படைத்த ஒரு தேசமாக ஆகியிருந்தார்கள். அவர்களிடம் பலம் வாய்ந்த ராணுவப் படை இருந்தது. பாகால்-செபூப், தாகோன் போன்ற பொய்க் கடவுள்களை அவர்கள் வணங்கினார்கள். (1 சா. 5:1-4; 2 ரா. 1:2, 3) சிலசமயங்களில், அவர்களோடு சேர்ந்து இஸ்ரவேலர்களும் அந்தக் கடவுள்களை வணங்கினார்கள்.—நியா. 10:6.
15 இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போனதால், பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களை பல வருஷங்களுக்கு அடக்கி ஒடுக்க அவர் அனுமதித்தார். (நியா. 10:7, 8; எசே. 25:15) பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்கள்.a நிறைய பேரை வெட்டிச் சாய்த்தார்கள். (1 சா. 4:10) ஆனால், இஸ்ரவேலர்கள் மனம் திருந்தி யெகோவாவிடம் வந்தபோது அவர்களை அவர் காப்பாற்றினார். சிம்சோன், சவுல், தாவீது போன்றவர்கள் மூலம் அவர்களுக்கு விடுதலை தந்தார். (நியா. 13:5, 24; 1 சா. 9:15-17; 18:6, 7) பெலிஸ்தியர்களை “கடும் கோபத்தோடு தண்டிப்பேன்” என்று எசேக்கியேல் மூலம் யெகோவா முன்னறிவித்திருந்தார். முதலில் பாபிலோனியர்களும் பிறகு கிரேக்கர்களும் அந்தத் தேசத்துக்கு எதிராகப் போர் செய்தபோது அந்த வார்த்தைகள் நிறைவேறின.—எசே. 25:15-17.
16, 17. பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களை நடத்திய விதத்திலிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்?
16 பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களை நடத்திய விதத்திலிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்? மனித சரித்திரத்திலேயே மிகவும் பலம் படைத்த சில தேசங்களிடமிருந்து யெகோவாவின் ஊழியர்களுக்கு நம் காலத்திலும் எதிர்ப்பு வந்திருக்கிறது. இஸ்ரவேலர்களைப் போல இல்லாமல், நாம் எப்போதுமே யெகோவாவுக்கு உண்மையாக இருந்திருக்கிறோம். ஆனாலும், சில சமயங்களில் தூய வணக்கத்தின் எதிரிகளுக்கு வெற்றி கிடைப்பதுபோல் தெரியலாம். உதாரணத்துக்கு, 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க அரசாங்கம், நம் அமைப்பை முன்நின்று வழிநடத்தியவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனை கொடுத்தது. இப்படி, யெகோவாவின் மக்களுடைய வேலையைத் தடுக்க முயற்சி செய்தது. இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியிலிருந்த நாசி கட்சி கடவுளுடைய மக்களில் ஆயிரக்கணக்கானோரைச் சிறையில் போட்டது, நூற்றுக்கணக்கானோரைக் கொலை செய்தது. அதன் மூலம் கடவுளுடைய மக்களை அடியோடு அழிக்க முயற்சி செய்தது. அந்தப் போருக்குப் பிறகு சோவியத் யூனியன், பல வருஷங்களுக்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராகச் செயல்பட்டது. நம் சகோதரர்களைக் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பியது அல்லது தொலைதூர இடங்களுக்கு நாடுகடத்தியது.
17 அரசாங்கங்கள் நம் பிரசங்க வேலைக்குத் தொடர்ந்து தடை போடலாம், கடவுளுடைய மக்களைச் சிறையில் தள்ளலாம், சிலரைக் கொலையும் செய்யலாம். இந்தச் சம்பவங்களைப் பார்த்து நாம் பயப்படலாமா, நம்பிக்கையை இழந்துவிடலாமா? கூடாது. தனக்கு உண்மையாக இருப்பவர்களை யெகோவா நிச்சயம் பாதுகாப்பார். (மத்தேயு 10:28-31-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் மக்களை அடக்கி ஒடுக்கிய பலம் படைத்த அரசாங்கங்கள் சுவடு தெரியாமல் போய்விட்டதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், கடவுளுடைய மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெலிஸ்தியர்களுக்கு வந்த அதே கதிதான் எல்லா அரசாங்கங்களுக்கும் சீக்கிரத்தில் வரப்போகிறது. அப்போது, யெகோவா யார் என்பதை அவை தெரிந்துகொள்ளும். பெலிஸ்தியர்களைப் போலவே அவையும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்!
‘குவித்துவைத்த சொத்துகள்’ பாதுகாப்பைத் தரவில்லை
18. தீரு எப்படிப்பட்ட சாம்ராஜ்யமாக இருந்தது?
18 பூர்வ காலத்தில் தீரு நகரம்b பெரிய வர்த்தக சாம்ராஜ்யங்களில் ஒன்றாக இருந்தது. தீரு மக்கள் மேற்கே, மத்தியதரைக் கடல் வழியாக கப்பலில் பல இடங்களுக்குப் போய் வியாபாரம் செய்தார்கள். கிழக்கே, தரை மார்க்கமாகப் போய் தூரத்தில் இருந்த பல சாம்ராஜ்யங்களோடு வியாபாரம் செய்தார்கள். பல நூறு வருஷங்களாக தூர இடங்களிலிருந்து சொத்துகளைக் குவித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய வணிகர்களும் வியாபாரிகளும் தங்களை அதிபதிகள் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பணக்காரர்களாக ஆனார்கள்.—ஏசா. 23:8.
19, 20. தீரு மக்களுக்கும் கிபியோனியர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
19 தாவீதும் சாலொமோனும் ஆட்சி செய்த காலத்தில் இஸ்ரவேலர்களுக்கும் தீரு மக்களுக்கும் இடையே வியாபாரத் தொடர்பு இருந்தது. தாவீதின் அரண்மனையையும், பிற்பாடு சாலொமோனின் ஆலயத்தையும் கட்டுவதற்குத் தேவையான பொருள்களையும் கைத்தொழிலாளிகளையும் தீரு மக்கள் அனுப்பினார்கள். (2 நா. 2:1, 3, 7-16) இஸ்ரவேலர்களின் சரித்திரத்தில் அது ஒரு பொற்காலமாக இருந்தது. அந்தச் சமயத்தில்தான் தீரு மக்கள் அவர்களோடு தொடர்பு வைத்திருந்தார்கள். (1 ரா. 3:10-12; 10:4-9) இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: தூய வணக்கத்தைப் பற்றியும் யெகோவாவைப் பற்றியும் தெரிந்துகொள்ள தீருவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அந்தச் சமயத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கும். அதோடு, ஒரே உண்மைக் கடவுளான யெகோவாவை வணங்குவதால் வரும் ஆசீர்வாதங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கும்.
20 அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்திருந்தும், தீரு மக்கள் செல்வத்தைக் குவிப்பதிலேயே குறியாக இருந்தார்கள். பலம் படைத்த கானானிய நகரமான கிபியோனைச் சேர்ந்த மக்களின் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றவில்லை. கிபியோனியர்கள் யெகோவாவின் வல்லமையான செயல்களைக் கேள்விப்பட்டதை வைத்தே அவருடைய ஊழியர்களாக ஆக தூண்டப்பட்டார்கள். (யோசு. 9:2, 3, 22–10:2) தீரு மக்கள் அவர்களைப் போல் நடந்துகொள்ளாமல், கடவுளுடைய மக்களை எதிர்க்குமளவுக்குப் போய்விட்டார்கள். அவர்களில் சிலரை அடிமைகளாகவும் விற்றுப்போட்டார்கள்.—சங். 83:2, 7; யோவே. 3:4, 6; ஆமோ. 1:9.
பணம், பொருள் ஒரு பாதுகாப்பான மதில்போல் இருக்கும் என்று நாம் ஒருபோதும் நினைக்கக் கூடாது
21, 22. தீருவுக்கு என்ன நடந்தது, ஏன்?
21 எதிரிகளான தீரு மக்களுக்கு எசேக்கியேல் மூலமாக யெகோவா இப்படிச் சொன்னார்: “தீரு நகரமே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன். திரண்டு வருகிற கடல் அலைகளைப் போல உனக்கு எதிராகப் பல தேசங்களைத் திரண்டு வர வைப்பேன். அவர்கள் உன்னுடைய மதில்களை உடைத்துப்போடுவார்கள். உன் கோபுரங்களை இடித்துப்போடுவார்கள். நான் உன்னுடைய மண்ணையெல்லாம் சுரண்டி எடுத்துவிடுவேன். எதுவுமே இல்லாத வெறுமையான பாறையாக உன்னை ஆக்கிவிடுவேன்.” (எசே. 26:1-5) தங்களுடைய தீவு நகரத்துக்கு 150 அடி உயர மதில்கள் எப்படிப் பாதுகாப்பு தந்ததோ அதேபோல, தங்களுடைய சொத்துகளும் தங்களுக்குப் பாதுகாப்பு தரும் என்று தீரு மக்கள் நினைத்தார்கள். “பணக்காரனின் சொத்து அவனுக்கு மதில் சூழ்ந்த நகரம்போல் இருக்கிறது. அதை ஒரு கோட்டைச் சுவர்போல் அவன் கற்பனை செய்துகொள்கிறான்” என்று சாலொமோன் சொன்ன வார்த்தைகளுக்கு அவர்கள் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.—நீதி. 18:11.
22 எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனம் முதலில் பாபிலோனியர்கள் மூலமாகவும், பிற்பாடு கிரேக்கர்கள் மூலமாகவும் நிறைவேறியது. அப்போதுதான், தங்களுடைய சொத்துகளையும், மதில்களையும் நம்பியிருந்தது வீண் என்பதை தீரு மக்கள் புரிந்துகொண்டார்கள். பாபிலோனியர்கள் எருசலேமை அழித்த பிறகு, தீரு நகரத்துக்கு எதிராகப் படையெடுத்து வந்தார்கள். 13 வருஷ முற்றுகைக்குப் பிறகு, தீரு கைப்பற்றப்பட்டது. (எசே. 29:17, 18) பிறகு கி.மு. 332-ல் மகா அலெக்ஸாண்டர் எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனத்தின் ஒரு முக்கியமான அம்சத்தை நிறைவேற்றினார்.c கடலோரத்திலிருந்த தீரு நகரத்தின் இடிபாடுகளை, அதாவது கற்களையும் மரங்களையும், மண்ணையும் பயன்படுத்தி அதன் தீவு நகரத்துக்கு கடல் வழியாக ஒரு பாதையை அமைத்தார். (எசே. 26:4, 12) அலெக்ஸாண்டர் அந்த நகரத்தின் மதிலை இடித்து நகரத்தைச் சூறையாடினார். ஆயிரக்கணக்கான போர் வீரர்களையும் பொதுமக்களையும் கொன்றுபோட்டார். இன்னும் ஆயிரக்கணக்கானோரை அடிமைகளாக விற்றுப்போட்டார். தாங்கள் ‘குவித்த சொத்துகள்’ நிரந்தர பாதுகாப்பு தராது என்பதை அவர்கள் பட்டுத்தான் புரிந்துகொண்டார்கள். யெகோவா யார் என்பதை அப்போது தெரிந்துகொண்டார்கள்.—எசே. 27:33, 34.
23. தீரு மக்களிடமிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?
23 தீரு மக்களிடமிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? ‘செல்வத்தின் வஞ்சக சக்திக்கு’ இடம்கொடுத்தால், பணம், பொருளை ஒரு மதில்போல் நம்ப ஆரம்பித்துவிடுவோம். ஆனால், அதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுக்கக் கூடாது. (மத். 13:22) நம்மால், “ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது.” (மத்தேயு 6:24-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கு முழு மூச்சோடு சேவை செய்கிறவர்கள் மட்டும்தான் உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்கிறார்கள். (மத். 6:31-33; யோவா. 10:27-29) தீருவுக்கு எதிராகச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியது போலவே இந்த உலகத்தின் முடிவைப் பற்றிய தீர்ககதரிசனங்களும் துல்லியமாக நிறைவேறும். பேராசையும் சுயநலமும் பிடித்த இந்த உலகத்தின் வர்த்தக அமைப்புகளை யெகோவா அழிக்கும்போது, சொத்துகள்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் யெகோவா யார் என்பதைத் தெரிந்துகொள்வார்கள்.
அரசியல் சக்தி ஒரு “வைக்கோலை” போல இருந்தது
24-26. (அ) யெகோவா எகிப்தை ‘வைக்கோல்’ என்று ஏன் குறிப்பிட்டார்? (ஆ) சிதேக்கியா எப்படி யெகோவாவின் பேச்சைக் கேட்காமல் போனார், அதன் விளைவு என்ன?
24 யோசேப்பின் காலத்திலிருந்து எருசலேமுக்கு எதிராக பாபிலோனியர்கள் போர் செய்த காலம்வரை, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தின் மீது எகிப்து அதிக செல்வாக்கு செலுத்தியது. பல காலமாக உறுதியாய் நிலைத்திருக்கிற ஒரு மரத்தைப் போல எகிப்து தன்னை நினைத்துக்கொண்டாலும், யெகோவாவோடு ஒப்பிடும்போது அது உறுதியில்லாத “வைக்கோலை” போலத்தான் இருந்தது.—எசே. 29:6.
25 எகிப்தைப் பற்றிய இந்த உண்மையை விசுவாசதுரோகியாக மாறிய சிதேக்கியா ராஜா உணரவில்லை. பாபிலோன் ராஜாவுக்கு அடிபணியும்படி எரேமியா தீர்க்கதரிசி மூலம் சிதேக்கியாவிடம் யெகோவா சொன்னார். (எரே. 27:12) நேபுகாத்நேச்சாருக்கு எதிராகக் கலகம் செய்யப் போவதில்லை என்று யெகோவாவின் பெயரில் சிதேக்கியா சத்தியமும் செய்திருந்தார். ஆனால், பிற்பாடு அவர் யெகோவாவின் பேச்சைக் கேட்கவில்லை; நேபுகாத்நேச்சாரிடம் செய்த சத்தியத்தை மீறினார்; பாபிலோனியர்களுக்கு எதிராகப் போர் செய்ய எகிப்திடம் உதவி கேட்டார். (2 நா. 36:13; எசே. 17:12-20) எகிப்தின் அரசியல் பலத்தை நம்பிய இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஆபத்தைத்தான் தேடிக்கொண்டார்கள். (எசே. 29:7) எகிப்து, யாராலும் எதிர்க்க முடியாத ஒரு “ராட்சதக் கடல் பிராணி” போலத் தெரிந்திருக்கலாம். (எசே. 29:3, 4) ஆனால், நைல் நதியிலிருக்கும் முதலைகளின் வாயில் கொக்கி மாட்டி அவற்றைப் பிடிப்பது போல யெகோவா எகிப்தைப் பிடித்து அழித்துப்போடுவார். அந்தத் தேசத்தைக் கைப்பற்ற பாபிலோனியர்களை அனுப்பியதன் மூலம் யெகோவா அதைச் செய்தார்.—எசே. 29:9-12, 19.
26 உண்மையில்லாமல் போன சிதேக்கியாவுக்கு என்ன ஆனது? அவர் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் செய்ததால், அந்த ‘பொல்லாத தலைவனிடமிருந்து’ கிரீடம் எடுக்கப்படும் என்றும் அவருடைய ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் எசேக்கியேல் முன்னறிவித்தார். அதேசமயத்தில், ராஜ வம்சத்தில் வரும் ஒருவருக்கு, அதாவது ‘உரிமைக்காரருக்கு,’ சிம்மாசனம் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கை தரும் விஷயத்தையும் அவர் முன்னறிவித்தார். (எசே. 21:25-27) அந்த உரிமைக்காரர் யார் என்பதை அடுத்த அதிகாரத்தில் பார்ப்போம்.
27. எகிப்தியர்களோடு இஸ்ரவேலர்கள் தொடர்பு வைத்துக்கொண்டதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?
27 எகிப்தியர்களோடு இஸ்ரவேலர்கள் தொடர்பு வைத்துக்கொண்டதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? அரசியல் அமைப்புகள் தங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் என்று நினைத்து அதன்மீது யெகோவாவின் மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடாது. நம்முடைய எண்ணங்களில்கூட இந்த “உலகத்தின் பாகமாக” இருக்கக் கூடாது. (யோவா. 15:19; யாக். 4:4) இன்றுள்ள அரசியல் அமைப்புகள், பலமாக இருப்பதுபோல் தெரியலாம். ஆனால், பூர்வ கால எகிப்தைப் போல அவை உறுதியற்ற வைக்கோலைப் போலத்தான் இருக்கின்றன. சர்வவல்லமையுள்ள உன்னதப் பேரரசர்மீது நம்பிக்கை வைக்காமல், அற்ப மனிதர்கள்மீது நம்பிக்கை வைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!—சங்கீதம் 146:3-6-ஐ வாசியுங்கள்.
எல்லா தேசத்தாரும் “தெரிந்துகொள்வார்கள்”
28-30. யெகோவா யார் என்பதைத் தேசங்கள் எப்படித் தெரிந்துகொள்ளும்? யெகோவா யார் என்பதை நாம் எப்படித் தெரிந்துவைத்திருக்கிறோம்?
28 எல்லா தேசத்தாரும் ‘நான் யெகோவா என்று தெரிந்துகொள்வார்கள்’ என எசேக்கியேல் புத்தகத்தில் யெகோவா பலமுறை சொல்லியிருக்கிறார். (எசே. 25:17) பூர்வ காலத்தில், தன்னுடைய மக்களின் எதிரிகளை யெகோவா தண்டித்தபோது அந்த வார்த்தைகள் நிறைவேறின. நம் நாளில் அந்த வார்த்தைகள் பெரியளவில் நிறைவேறும். எப்படி?
29 பூர்வ காலத்தில் வாழ்ந்த கடவுளுடைய மக்களைப் போலவே, இன்று நாமும் பாதுகாப்பில்லாத ஒரு செம்மறியாட்டைப் போல இருப்பதாக நம்மைச் சுற்றியிருக்கிற தேசங்கள் நினைக்கின்றன. (எசே. 38:10-13) சீக்கிரத்தில் தேசங்கள் முழு பலத்தோடு கடவுளுடைய மக்களைக் கடுமையாகத் தாக்கப்போவதைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 17, 18 அதிகாரங்களில் பார்ப்போம். அப்போது, யாருக்கு உண்மையான பலம் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அர்மகெதோன் போரில் அவர்கள் அழிக்கப்படும்போது, யெகோவா யார் என்பதை... அவர்தான் உன்னதப் பேரரசர் என்பதை... புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும்.—வெளி. 16:16; 19:17-21.
30 அந்தச் சமயத்தில் யெகோவா நம்மைப் பாதுகாப்பார்; நம்மை ஆசீர்வதிப்பார். ஏன்? ஏனென்றால், அவர் யாரென்று நமக்குத் தெரியும் என்பதை நாம் இப்போதே நிரூபித்துக் காட்டுகிறோம். அவர்மீது நம்பிக்கை வைப்பதன் மூலம்... அவருக்குக் கீழ்ப்படிவதன் மூலம்... அவருக்கு மட்டுமே சேர வேண்டிய தூய வணக்கத்தைச் செலுத்துவதன் மூலம்... அதை நிரூபித்துக் காட்டுகிறோம்.—எசேக்கியேல் 28:26-ஐ வாசியுங்கள்.
a உதாரணத்துக்கு, இஸ்ரவேலில் உலோக வேலை செய்வதை பெலிஸ்தியர்கள் தடை செய்தார்கள். அதனால், இஸ்ரவேலர்கள் தங்களுடைய விவசாயக் கருவிகளைத் தீட்டுவதற்கு பெலிஸ்தியர்களிடம் போக வேண்டியிருந்தது. அந்த வேலைக்காக, பலநாள் சம்பளத்துக்குச் சமமான கூலியை இஸ்ரவேலர்களிடமிருந்து அவர்கள் வாங்கினார்கள்.—1 சா. 13:19-22.
b தீரு நகரம் முதன்முதலில் கர்மேல் மலைக்கு வடக்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திலிருந்த கடலில் ஒரு பாறைப் பரப்பின் மீது கட்டப்பட்டதாகத் தெரிகிறது. பிற்பாடு, அதன் விரிவாக்கமாக கடலோரத்தில் ஒரு நகரம் கட்டப்பட்டது. எபிரெய மொழியில் அந்த நகரத்தின் பெயர் சுர்; அதன் அர்த்தம் “பாறை.”
c தீருவுக்கு எதிராக ஏசாயா, எரேமியா, யோவேல், ஆமோஸ், சகரியா சொன்ன தீர்க்கதரிசனங்களும் துல்லியமாக நிறைவேறின.—ஏசா. 23:1-8; எரே. 25:15, 22, 27; யோவே. 3:4; ஆமோ. 1:10; சக. 9:3, 4.