நீங்கள் உங்களுடைய வணக்க இடத்தை மதிக்கிறீர்களா?
“சுவிசேஷத்தின் ஆதி ஆரம்பத்திலிருந்தே, கிறிஸ்தவர்கள் தங்களுக்கே சொந்தமான, நிலையான தெய்வ வணக்கத்திற்குரிய இடத்தை எப்பொழுதும் பெற்றவர்களாக இருந்தனர்.” —வில்லியம் கேவ் என்பவரின் “பண்டைக்கால கிறிஸ்தவம்.”
கடவுளுடைய மக்கள் வணக்கத்திற்கு கூடிவருவதில் எப்பொழுதுமே சந்தோஷத்தைப் பெற்றிருக்கின்றனர். முதல் நூற்றாண்டில் இது எந்தளவு உண்மையாயிருந்ததோ அந்தளவிற்கு இப்போது உண்மையாயிருக்கிறது. லூஸியன், கிளமென்ட், ஜஸ்டின் மார்ட்டிர், டெர்ட்டூலியன் போன்ற பூர்வ ஆசிரியர்கள், இறையியல் வல்லுநர்கள் அனைவரும், கிறிஸ்தவர்கள் குறிப்பிட்ட இடங்களில் ஆராதனைக்கு வழக்கமாகக் கூடிவந்தனர் என்று ஒப்புக்கொள்கிறார்கள்.
முறைப்படியான கூட்டங்கள் கிறிஸ்தவத் தொகுதிகளால் நடத்தப்பட்டன என்று பைபிளும் எண்ணற்ற மேற்கோள்களினால் இதே கருத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது. இந்தத் தொகுதிகள், சபைகள் என்று அறியப்பட்டிருந்தன. இது மிகவும் பொருத்தமானதுதான், ஏனென்றால் “சபை” என்ற வார்த்தை, பைபிளின் மூல மொழிகளில் ஒரு மக்கள் தொகுதி ஒரு நோக்கத்திற்காக அல்லது நடவடிக்கைக்காக ஒன்றாகக் கூடிவந்ததைக் குறிக்கிறது.
கிறிஸ்தவ வணக்கத்தின் பூர்வகால இடங்கள்
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கூட்டமாகக் கூடிவந்தபோது என்ன செய்தார்கள்? பைபிள் அப்படிப்பட்ட கூட்டங்களைப்பற்றியும் அங்குப் போதித்தலே ஒரு பிரதான அம்சமாக இருந்தது என்றும் விளக்குகிறது. (அப்போஸ்தலர் 2:42; 11:26; 1 கொரிந்தியர் 14:19, 26) பேச்சுகள், உற்சாகமளிக்கும் அனுபவங்களைச் சொல்வது, எருசலேமிலுள்ள நிர்வாகக்குழுவிடமிருந்து அல்லது அப்போஸ்தலரிடமிருந்து பெறப்பட்ட கடிதங்களைக் கவனமாகச் சிந்திப்பது போன்ற கல்வி கற்பிக்கும் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அப்போஸ்தலர் 15:22-35-ல், அந்தியோகியாவிலிருந்த ஒரு கிறிஸ்தவத் தொகுதிக்கு இப்படிப்பட்ட ஒரு கடிதம் வாசிக்கப்பட்டப் பின்பு, யூதாவும் சீலாவும் ‘அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்திசொல்லி, அவர்களைத் திடப்படுத்தினர்,’ என்று நாம் வாசிக்கிறோம். பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவுக்கு வந்துசேர்ந்தபோது, ‘சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளை அறிவித்தனர்,’ என்று மற்றொரு பதிவு சொல்கிறது. யெகோவாவிடம் ஜெபிப்பதும் கிறிஸ்தவக் கூட்டங்களின் ஒரு முக்கியமான அம்சமாகும்.—அப்போஸ்தலர் 14:27.
முதல் நூற்றாண்டு சபைகள் கூடிவந்த இடங்கள், இன்றுள்ள பல கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளுக்கு இருப்பதுபோல பிரமாண்டமான கட்டிட அமைப்புகளைக் கொண்டதாக இல்லை. பெரும்பாலும், பூர்வ கிறிஸ்தவர்கள் தனிப்பட்டவர்களின் வீடுகளில் கூடி வந்தனர். (ரோமர் 16:5; 1 கொரிந்தியர் 16:19; கொலோசெயர் 4:15; பிலேமோன் 2) அடிக்கடி தனிப்பட்டவர்களின் வீட்டின் மாடியோ அல்லது மேல்வீடோ பயன்படுத்தப்பட்டது. கர்த்தருடைய இராப்போஜனம் நடத்தப்பட்ட இடமும் ஒரு மாடிதான். பெந்தெகொஸ்தேயின்போது 120 சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்செய்யப்பட்டதும் மேல்வீட்டில்தான்.—லூக்கா 22:11, 12, 19, 20; அப்போஸ்தலர் 1:13, 14; 2:1-4; 20:7, 9.
இன்று, அப்போஸ்தலர்களால் ஏற்படுத்தப்பட்ட மாதிரியை யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகின்றனர். இவர்கள் ராஜ்ய மன்றங்கள் என்றழைக்கப்படும் கூடுவதற்கான இடங்களைப் பயன்படுத்துகின்றனர். அங்கு, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பவர்களாக இவர்கள் பயிற்சியளிக்கப்படுகிறார்கள். (மத்தேயு 24:14) ராஜ்ய மன்றத்தில், வேதவசனங்களைப் படிக்கிறார்கள், ஜெபிக்கிறார்கள், ஒருவருக்கொருவர் உற்சாகமும் கொடுத்துக்கொள்கின்றனர். இது எபிரெயர் 10:24, 25-ல் உள்ள பைபிளின் ஆலோசனைக்கு ஒப்பாக இருக்கிறது: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.”
நம்முடைய வணக்க இடத்தைச் சரியாகப் பயன்படுத்துதல்
“தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்” என்றும், “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது” என்றும் சொன்ன, அப்போஸ்தலர் பவுலின் வார்த்தைகளை உங்களால் ஞாபகப்படுத்த முடிகிறதா? இந்த வார்த்தைகளின் சூழமைவை நீங்கள் ஆராய்ந்துபார்த்தால், சபைக் கூட்டங்கள் நடத்தப்படவேண்டிய முறையைப் பற்றி பவுல் கலந்துரையாடிக்கொண்டிருந்தார் என்பதை அறிவீர்கள். அப்போஸ்தலர்களின் காலத்தைப்போலவே, இன்றைய கிறிஸ்தவர்களும் தங்களுடைய கூட்டங்களை ஒழுங்கோடும் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட விதத்திலும் இருக்கும்படி நிச்சயப்படுத்திக்கொள்கிறார்கள்.—1 கொரிந்தியர் 14:26-40.
அக்டோபர் 15, 1969, தி உவாட்ச்டவர் இதழ் சொன்னது: “ராஜ்ய மன்றத்தின் ஆவிக்குரிய சூழ்நிலை உண்மையானதாகவும், உண்மை வணக்கத்திலிருந்தும் பைபிள் போதனையிலிருந்தும் வரும் உண்மையான ஆர்வத்தினால் தோன்றினதாயும் இருக்கிறது. மன்றத்தின் வெளிச்சமும், இயற்கையான சூழ்நிலைகளும் அங்கு வந்திருப்பவர்களை, மனம்விட்டு பழகி, நேசமுள்ளவர்களாக இருக்க உற்சாகப்படுத்துவதாக இருக்கவேண்டும், மாய்மால தோரணையில் பய உணர்ச்சியோடு இருக்கும்படிச் செய்யப்பட்டவர்களாக ஆக்கக்கூடாது.” நிச்சயமாகவே, ராஜ்ய மன்றம் பயன்படுத்தப்படும் விதமும் எப்போதுமே மரியாதைக்குரிய மதிக்கத்தக்க விதத்திலும் இருக்கும்படிக் கவனம் செலுத்தப்படவேண்டும்.
இந்த விஷயத்தில் கிறிஸ்தவ மண்டலம் பெரிய அவமரியாதையை வெளிப்படுத்துகிறது. சில மத அமைப்புகள், தங்களுடைய வணக்க இடங்களைக் கேளிக்கை விளையாட்டின் சமூக மையங்களாகப் பயன்படுத்துகின்றன. அவை, மதம் சம்பந்தமான ராக் இசையின் நேரடி நிகழ்ச்சிகள், பளு தூக்கும் பயிற்சிசெய்யும் அறைகள், பில்லியர்டு மேஜைகள், பாலர் பள்ளிகள், உள்ளறை திரையரங்குகள் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றன. ஒரு சர்ச், தன்னுடைய நிகழ்ச்சிநிரலின் பாகமாகக் குத்துச்சண்டைப் போட்டியைக் கொண்டிருந்தது. இது அப்போஸ்தலர்களால் முன்வைக்கப்பட்ட மாதிரிக்கு ஒப்பாக நிச்சயமாக இருக்கமுடியாது.
எந்த முதல் நூற்றாண்டு சபையாவது முறையற்ற விதத்தில் நடந்தால், சரிப்படுத்துதல் பொருத்தமாகவே உடனே கொடுக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவச் சபையில் இருந்த சிலர், கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்பை, புசித்தலும் குடித்தலும் நிறைந்த நிகழ்ச்சியாகப் பயன்படுத்தினர். அவர்கள் தங்களுடைய இரவு உணவை, கூட்டம் நடக்கும்போதோ, அதற்கு முன்போ சாப்பிடுவதற்காகத் தங்களோடு கொண்டுவந்தனர், சிலர் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடவும் குடித்துவெறிக்கவும் செய்தனர். இது உண்மையில் பொருத்தமாயில்லை. அப்போஸ்தலர் பவுல் அவர்களுக்கு எழுதினார்: “புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா?”—1 கொரிந்தியர் 11:20-29.
பவுலின் ஆலோசனைக்கு இணங்க, யெகோவாவின் சாட்சிகள் சொந்த காரியங்களை ராஜ்ய மன்றத்தில் கவனித்துக்கொள்வதற்குப் பதிலாக, வீட்டிலேயோ வேறு இடங்களிலேயோ கையாளுவதற்கு அதிக முயற்சிசெய்கின்றனர். உண்மையில், நம்முடைய ஒழுங்கான கூட்டங்கள் ஒரே சமயத்தில் அநேக நண்பர்களைச் சந்திப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுக்கிறது. ஆகிலும், ராஜ்ய மன்றம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதாக இருக்கிறது, எனவே, அது அவருடைய வணக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். நாம் அங்கு ஆஜராயிருக்கும் வாய்ப்பை சொந்த வணிகத்தைச் செய்ய அல்லது தனிப்பட்ட பணப் புழக்கங்களைச் செய்வதற்கு பயன்படுத்தக்கூடாது.
மேலுமாக, ராஜ்ய மன்றங்கள் கேளிக்கை விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கோ, பணம் சேர்க்கும் நடவடிக்கைகளுக்கோ, குழந்தைப் பராமரிப்புப் போன்ற சமூக சேவைகளுக்கோ சபையில் பயன்படுத்தப்படுவதில்லை. இப்படிப்பட்ட தனிப்பட்ட, வணிகம் சார்ந்த விஷயங்களை ஒருவர் கவனித்துக்கொள்வதற்கு மற்ற அநேக இடங்கள் இருக்கின்றன.
ஒரு ராஜ்ய மன்றத்திலுள்ள மூப்பர்கள், சபை அங்கத்தினர்கள் தாங்கள் இரவல் வாங்குவதை அல்லது இரவல் வாங்கின பொருளைத் திருப்பித்தருவதை ஒரு பழக்கமாகக் கூட்டங்களில் செய்வதாகக் கண்டிருக்கிறார்கள். மேலும், பழக்கதோஷமாக வீடியோ கேசட் படங்களை ராஜ்ய மன்றங்களில் கொடுக்கல்வாங்கல் செய்துகொள்கிறார்கள். இந்தச் செயல் வணிகம் சம்பந்தபட்ட செயலாக இல்லாவிட்டாலும், மூப்பர்கள் இப்படிப்பட்ட விஷயங்களை வீட்டில் கவனித்துக்கொள்வதன் ஞானமான போக்கை அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவிசெய்தார்கள்.
தவறான அபிப்பிராயங்களைக் கொடுக்கும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும், ராஜ்ய மன்றம் சரியாகப் பயன்படுத்துவதை நிச்சயப்படுத்திக்கொள்ளவும், ஒவ்வொருவரும் தன்னையே இவ்வாறு கேட்டுக்கொள்ளவேண்டும்: ‘வீட்டில் கவனிக்கப்பட முடிந்த ஏதேனும் சொந்தக் காரியங்களை நான் ராஜ்ய மன்றத்தில் செய்துவருகிறேனா?’ உதாரணமாக, உல்லாசப் பயணங்களை அல்லது மற்ற சமூகக் கூட்டங்களை ஒழுங்கமைக்கும்போது, இப்படிப்பட்ட விஷயங்களை நாம் வீட்டில் பேசுவது சரியாக இருக்கும் அல்லவா? தொலைபேசியைப் பயன்படுத்தலாம், அல்லது நாம் சந்திக்க விரும்புகிறவர்களை அவர்களுடைய வீட்டிலேயே சந்திக்கலாமே? பவுலின் வார்த்தைகளிலிருந்து எடுத்துக் குறிப்பிட்டு நாம் இப்படியும் சொல்லலாமே: ‘அப்படிப்பட்ட விஷயங்களைக் கையாளுவதற்கு நமக்கு வீடுகள் இல்லையா?’
யெகோவாவை வணங்க ஒரு குறித்த காலமும் இடமும்
பைபிள், பிரசங்கி 3:1-ல் (NW) சொல்கிறது: “ஒவ்வொன்றிற்கும் குறித்த காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.” ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்காக ஆஜராகும்போது, நாம் முழுவதுமாக, கிறிஸ்தவ ஊழியம் சம்பந்தப்பட்ட செயல்களிலேயே ஆழமாய் ஈடுபடலாமே. இது யெகோவாவை வணங்குவதற்கான ஒரு குறித்த காலம்.
இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரராகிய யாக்கோபு, கிறிஸ்தவச் சபைக்குள் ஓரவஞ்சனைக் காட்டுவதற்கு எதிராக ஆலோசனைச் சொன்னார். (யாக்கோபு 2:1-9) இந்த ஆலோசனையை நாம் எப்படி நம்முடைய ராஜ்ய மன்றங்களில் பொருத்திப் பிரயோகிக்கலாம்? சமூக நிகழ்ச்சிகள் சம்பந்தமாக எழுத்துவடிவில் உள்ள அழைப்பிதழ்கள் கவனத்தைக் கவரும் விதத்தில் கடத்தப்படுவது, ஓரவஞ்சனைக் காட்டப்படுகிற உணர்வு தோன்றும்படிச் செய்யக்கூடும். ஒரு சபையில், பழக்கம் என்னவென்றால், அப்படிப்பட்ட அழைப்பிதழ்களை, அங்கு ஆஜராயிருப்பவர்களின் புத்தகப் பைகளில் அல்லது பைபிள்களில் வைப்பதாகும். சரியாகவே, அழைப்பிதழ்களைத் தபால்மூலமோ அல்லது நேரிலோ அவரவர்களுடைய வீட்டில் கொடுப்பதைவிட இது அதிக எளிதான காரியம்தான். ஆகிலும், அழைப்பிதழ்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அறியவரும் அழைப்பிதழ் பெறாதவர்கள் எப்படி உணர்வார்கள்? இது ஓரவஞ்சனைக் காட்டுவதாகத் தோன்ற வைக்குமா?
நிச்சயமாகவே, யாருமே யாருக்கும் ராஜ்ய மன்றத்தில் இருக்கும்போது, தனிப்பட்ட செய்தியையோ பொட்டலத்தையோ கொடுக்கவேக் கூடாது என்று சொல்லும் ஒரு கடினமான சட்டம் அங்கு இருக்கவேண்டிய அவசியம் இல்லை; அல்லது அன்றாட காரியங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பற்றியோ, ஒருவரை உங்கள் வீட்டிற்கு அழைப்பதைப் பற்றியோ, ஒருவகையான இன்பப் பொழுதுபோக்கில் உங்களோடு சேர்ந்துகொள்வதைக்குறித்து கேட்பதைப் பற்றியோ, பேசுவதும் தவறல்ல. ஆனால் இது எப்போதாவது செய்யப்படுவதாகவும், ஞானத்தோடும் முனைப்பற்ற விதத்திலும் செய்யப்படவேண்டும். சொந்த ஏற்பாடுகள், ராஜ்ய மன்றத்தில் நாம் கூடிவந்த உண்மையான நோக்கத்தை, அதாவது ஆவிக்குரிய வகையில் கட்டியெழுப்பப்படுவதிலிருந்து, திசைதிருப்புவதாக ஒருபோதும் இருக்கக்கூடாது.—மத்தேயு 6:33; பிலிப்பியர் 1:10.
எடுத்துக்காட்டாக இருக்கும் மனிதர்கள்
மூப்பர்களும் உதவி ஊழியர்களும் ராஜ்ய மன்றத்தை மரியாதைக்குரியதாக்குவதற்கு உற்சாக மனதோடு முன்மாதிரி வைக்கிறார்கள். பொதுவாக, ஒன்று அல்லது இரண்டு மூப்பர்களும் உதவி ஊழியர்களும் ராஜ்ய மன்றத்தைப் பராமரிக்க தேவையான விஷயங்களைக் கவனித்துக்கொள்வதற்கு நியமிக்கப்படுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் ஒரே ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்தினால், மூப்பர்கள் குழு இந்தக் காரியங்களைக் கண்காணிக்கும்.
சிலர் இப்படிப்பட்ட காரியங்களைப் பார்த்துக்கொள்ளும்படி விசேஷித்தவகையில் நியமிக்கப்பட்டிருந்தாலும், எல்லா உதவி ஊழியர்களும் மூப்பர்களும் மன்றத்தின்மீது உண்மையான அக்கறையைக் காண்பிக்கவேண்டும். ராஜ்ய மன்றம் யெகோவாவுக்கு ஒப்படைக்கப்பட்டு, அவருடைய வணக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று அவர்கள் உணர்கிறார்கள்.
பழுதுபார்க்கவேண்டிய தேவை வரும்போது மூப்பர்கள் காலம் தாழ்த்தக் கூடாது. (2 நாளாகமம் 24:5, 13; 29:3; 34:8; நெகேமியா 10:39; 13:11) சில சபைகளில் ராஜ்ய மன்றங்கள், எந்தத் தேவையான சரிப்படுத்துதல்களும் ஏற்றச் சமயத்தில் செய்யப்படும்படி, ஒழுங்காகப் பரிசோதிக்கப்படுகின்றன. தேவையான பொருள்கள் கையிருப்பிலும், உபயோகப்படுத்தும் வகையிலும் இருக்கும்படி நிச்சயப்படுத்துவதற்காகக் கையிருப்புப் பட்டியல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தேவைப்பொருள்கள், கருவிகள், சுத்தஞ்செய்யும் சாதனங்கள் போன்றவற்றை வைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டிருந்தால், எல்லா மூப்பர்களும் உதவி ஊழியர்களும் அந்தப் பகுதியின் நிலையைக் குறித்து அக்கறைகாண்பித்து, அது சுத்தமாக இருக்கிறதா என்று நிச்சயப்படுத்தவேண்டும். புத்தக அல்லது பத்திரிகை வினைமுகப்புகளில் (கவுன்டர்களில்) வேலைசெய்பவர்கள், காலிப் பெட்டிகள், மன்றத்தில் எங்கும் சிதறிக்கிடக்காதவாறு எப்போதும் கவனமாயிருப்பதன்மூலம் தங்களுடைய அக்கறையைக் காட்டவேண்டும்.
முன்மாதிரியாக இருப்பதன்மூலம், மூப்பர்களும் உதவி ஊழியர்களும், சபையிலுள்ள மற்றவர்கள் ராஜ்ய மன்றத்திற்கு உற்சாகமான அக்கறையைச் செலுத்த உதவலாம். (எபிரெயர் 13:7) மன்றத்தைச் சுத்தம்செய்வதில் பங்குகொள்வதன்மூலமும் அதன் ஒட்டுமொத்த தோற்றத்திற்கு உண்மையான அக்கறையைக் காண்பிப்பதன்மூலமும் அனைவரும் சரியான மரியாதையைக் காண்பிக்கலாம்.
மத்தேயு 18:20-ல் இயேசு சொன்னார்: “இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்.” ஆம், நாம் வணக்கத்திற்காகக் கூடிவரும்போது என்ன செய்கிறோம் என்பதைக்குறித்து இயேசு அக்கறையுடையவராக இருக்கிறார். இது எந்தக் கூட்டத்தையும், தனிப்பட்டவர்களுடைய வீடுகளில் நடக்கும் கூட்டங்களையும், மாநாடுகள் அல்லது அசெம்பிளிகள் போன்ற பெரிய கூட்டங்களையும் உட்படுத்தும்.
லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளுக்கு, அவர்களுடைய இருதயத்திற்கு நெருங்கிய இடமாக, அவர்கள் ஒழுங்காக வணக்கத்திற்கு கூடிவரும் ராஜ்ய மன்றத்தைவிட வேறெதுவும் இருக்க முடியாது. அவர்கள் இந்த இடத்திற்கு உரிய மரியாதையைக் காண்பிக்கின்றனர். அவர்கள் அதைப் பராமரிப்பதில் சுறுசுறுப்பாக உழைக்கும் ஆர்வத்தை வெளிக்காட்டுகிறார்கள், மேலும் அவர்கள் அதை எப்போதும் சரியாகப் பயன்படுத்தவும் கடும்முயற்சிச் செய்கிறார்கள். யெகோவா தாமே கொடுக்கிற பின்வரும் எச்சரிப்பை நீங்களும் பின்பற்றுவீர்களாக: “நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்.”—பிரசங்கி 5:1.