அங்கீகாரத்தின் மூலமாக ஓர் அடிப்படை மனித தேவையைப் பூர்த்திசெய்தல்
“நன்றாகச் செய்திருக்கிறாய்!” “உன்னுடைய சாதனையைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்!” அல்லது “உன்னால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்தாய்; உன்னைக் குறித்து நாங்கள் பெருமையடைகிறோம்!” என்பவை நேர்மையாகச் சொல்லப்படுகையில், விசேஷமாக நீங்கள் மதிக்கும் ஒருவரிடமிருந்து அவை வரும்போது சுய மதிப்பை உயர்த்துவதற்கு அதிகத்தைச் செய்கின்றன. மனிதர்கள் அங்கீகாரத்தைப் பெறும்போது மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் நன்றாகச் செய்கிறவர்களாகவும் இருக்கின்றனர். ஆம், உடலுக்கு ஆரோக்கியமான உணவு எப்படியோ அப்படியே, தகுதியுள்ள அங்கீகாரமும், மனதுக்கும் இருதயத்துக்கும் இன்றியமையாதது.
அங்கீகாரத்துக்கு ஓர் அகராதி “பரிவு காட்டப்பட அல்லது கவனத்துக்கு உரிமையுள்ளவராக ஒரு நபரை ஏற்றுக்கொள்வது” மற்றும் “விசேஷ கவனிப்பு அல்லது கவனம்” என்ற விளக்கத்தை அளிக்கிறது. இது மரியாதை, மதிப்பான உணர்வோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டுள்ளது. இது கொடுக்கப்படுகையில், ஒரு நபரையும் அந்த நபருக்கு தகுதியாயிருக்கும் அங்கீகாரத்தின் அளவையும் பற்றிய நியாயமான மதிப்பீட்டை அல்லது கணக்கீட்டை குறிப்பாக உணர்த்துகிறது.
அங்கீகாரம்—ஓர் அடிப்படை தேவை
பாராட்டு தகுதியாயிருக்கும் போது பாராட்டு தெரிவிப்பது, நியாயமாயும் நேர்மையாயும் இருக்கிறது. எஜமான் தன்னுடைய ஆஸ்திகளை அடிமைகளிடம் ஒப்படைக்கும் இயேசுவின் உவமையில் அவர் ஒரு மாதிரியை வைத்தார். தம்முடைய சொத்துக்களைச் சரிவர நிர்வாகம் செய்ததை ஒப்புக்கொள்ளும்போது அவர் இவ்வாறு சொன்னார்: “[நன்றாகச் செய்திருக்கிறாய், NW] உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே!” (மத்தேயு 25:19-23) இருந்தபோதிலும், தகுதியுள்ள இந்த நயமான நடத்தை அடிக்கடி அசட்டை செய்யப்படுகிறது. அங்கீகாரம் அளிக்க தவறுவது உற்சாகத்தையும் முயற்சியில் முந்திக்கொள்வதையும் அடக்கிவிடுகிறது. ஐயோனி இப்படி அதைச் சொல்கிறாள்: “அங்கீகாரம் உங்களைத் தேவைப்பட்டவராக, விரும்பப்பட்டவராக மற்றும் போற்றப்பட்டவராக உணரச்செய்கிறது . . . அது உங்களை முயற்சியில் முந்திக்கொள்ளச் செய்கிறது. நீங்கள் அசட்டை செய்யப்பட்டால், நீங்கள் விசனமாகவும் ஆதரவற்றவராகவும் உணருகிறீர்கள்.” பேட்ரிக் மேலுமாகச் சொல்கிறான்: “அப்பொழுது உயர்ந்த அளவில் தரத்தையும் உற்பத்தி அளவையும் காத்துக்கொள்வது கடினமாக இருக்கிறது.” ஆகவே, அங்கீகாரத்தை எவ்விதமாக மற்றும் எப்போது கொடுப்பது என்பதை நாம் கற்றறிவது எத்தனை அத்தியாவசியமானது. நம்மைச் சுற்றியுள்ள ஆட்களால் நாம் ஏற்றுக்கொள்ளப்படுவதை அறிந்திருப்பதால் கிடைக்கும் பாதுகாப்பான உணர்ச்சிக்காக நாம் அனைவருமே ஏங்குகிறோம். அது ஓர் அடிப்படை மனித தேவையாகும்.
புகழ்ச்சியாக ஒரு வார்த்தை, கூடுதலான பொறுப்பு அல்லது ஒரு பொருளைப் பரிசாகப் பெறுவதும்கூட உங்களாலான மிகச் சிறந்ததைத் தொடர்ந்து செய்யும்படியாக உங்களைத் தூண்டுகிறது. நீங்கள் ஒரு பெற்றோராக, கணவராக, மனைவியாக, பிள்ளையாக, சபை அங்கத்தினராக அல்லது கண்காணியாக இருந்தாலும் சரி, இது உண்மையாய் இருக்கிறது. “அங்கீகாரம் அளிக்கப்படுகையில், நான் மகிழ்ச்சியாக, தேவைப்பட்டவளாக உணருகிறேன், மேம்பட்ட விதமாகச் செய்ய எனக்கு ஆசை ஏற்படுகிறது,” என்பதாக மார்கரெட் சொல்கிறாள். ஆண்ட்ரூ பின்வருமாறு சொல்லி அதை ஒத்துக்கொள்கிறான்: “நான் ஆனந்தமாக உணருகிறேன், இது இன்னும் கடினமாக உழைக்க எனக்குத் தூண்டுதலை அளிக்கிறது.” என்றபோதிலும், ஒருவருக்கு அங்கீகாரத்தையும் மதிப்பையும் அளிப்பதற்குக் கவனமான சிந்தனையும் நல்ல திறனாய்வுப் பண்பும் தேவைப்படுகிறது.
அங்கீகாரம் அளிப்பதில் யெகோவாவின் மாதிரியைப் பின்பற்றுங்கள்
மற்றவர்களின் மதிப்பை அங்கீகரிப்பதில் முதன்மையான முன்மாதிரியாக இருப்பது யெகோவா தேவனே. அங்கீகாரத்துக்குத் தகுதியுள்ளவர்களை அவர் ஒப்புக்கொள்கிறார். அவர் ஆபேல், ஏனோக்கு மற்றும் நோவா போன்ற மனிதர்களைக் கவனித்தார். (ஆதியாகமம் 4:4; 6:8; யூதா 14) குறிப்பிடத்தக்க உண்மைத்தன்மைக்காக தாவீதை யெகோவா ஒப்புக்கொண்டார். (2 சாமுவேல் 7:16) ஒரு தீர்க்கதரிசியாக யெகோவாவைப் பல வருடங்கள் கனப்படுத்திய சாமுவேல் கடவுளால் கனப்படுத்தப்பட்டார். பெலிஸ்தரைத் தோற்கடிப்பதற்காக சாமுவேல் செய்த ஜெபத்துக்கு யெகோவா உடனடியாக பதிலளித்து அவரைக் கனப்படுத்தினார். (1 சாமுவேல் 7:7-13) இப்படிப்பட்ட தெய்வீக அங்கீகாரத்தைக் கொண்டிருக்கையில் நீங்கள் கனப்படுத்தப்பட்டவராக உணரமாட்டீர்களா?
நன்றியறிதலும் போற்றுதலும் அங்கீகாரத்தோடு நெருக்கமான தொடர்புடையதாய் இருக்கின்றன. பைபிள் ‘நன்றியறிதலுள்ளவர்களாக நம்மைக் காண்பித்து’ நமக்காக செய்யப்பட்டிருக்கும் காரியங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கும்படியாக நம்மைத் துரிதப்படுத்துகிறது. (கொலோசெயர் 3:15; 1 தெசலோனிக்கேயர் 5:18) இது குறிப்பாக யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாயிருப்பதற்குப் பொருந்தினாலும், வாழ்க்கையின் அன்றாடக காரியங்களிலும் இதுவே உண்மையாக இருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் இதைப் போற்றினார். பெபேயாள் ‘அநேகருக்கு ஆதரவாய்’ இருந்ததாகவும் பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் ‘தங்கள் கழுத்தைக் கொடுத்ததாகவும்’ ஒப்புக்கொண்டார். (ரோமர் 16:1-4) வெளிப்படையாக தெரிவிக்கப்பட்ட நன்றியறிதலைப் பெற்றுக்கொண்டபோது அவர்கள் எவ்வாறு உணர்ந்திருக்க வேண்டும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அங்கீகாரம், கனம், மற்றும் ஊக்குவிப்பைக் கொடுக்கும் சந்தோஷத்தைக் கொண்டிருப்பது பவுலுக்கும்கூட நன்மையாக இருந்தது. தகுதியுள்ளவர் எவரோ அவருக்கு சரியான அங்கீகாரத்தைக் காண்பிப்பதன் மூலம் நாமும்கூட யெகோவாவையும் போற்றுதலுள்ள அவருடைய வணக்கத்தாரையும் போல இருக்கமுடியும்.—அப்போஸ்தலர் 20:35.
குடும்ப வட்டாரத்துக்குள் அங்கீகாரம்
“சிறிதளவு அங்கீகாரம் வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிக்கும் ஒன்றாக ஆக்குவதில் மிகவும் உதவியாக இருக்கிறது,” என்பதாக ஒரு கணவனும் கிறிஸ்தவ மூப்பருமாக இருக்கும் மிட்ஷெல் சொல்கிறார். “அங்கீகாரத்தைக் கொடுப்பவரிடமாக ஒருவேளை என்றென்றுமாக அது உங்களை அன்பினால் பிணைத்துவிடுகிறது.” உதாரணமாக, ஒரு கிறிஸ்தவ கணவர் அதிக பாரமான பொறுப்பைச் சுமந்து குடும்பத்தின் நலனை உட்படுத்தும் முக்கியமான தீர்மானங்களைச் செய்கிறார். அவர் குடும்பத்தின் ஆவிக்குரிய, பொருளாதார மற்றும் உணர்ச்சி சம்பந்தமான தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். (1 தீமோத்தேயு 5:8) குடும்பத் தலைவனாக கடவுள் கொடுத்திருக்கும் அவருடைய நியமிப்புக்கு சரியான அங்கீகாரம் காண்பிக்கப்படுகையிலும் அவருடைய மனைவி அவருக்கு ‘ஆழ்ந்த மரியாதையைக் காட்டும்போதும் எவ்வளவு நன்றியுள்ளவராக இருக்கிறார்!—எபேசியர் 5:33.
வெளிப்படையாக இல்லாமல் வீட்டிற்குள் செய்யப்படும் ஒரு மனைவியின் வீட்டு வேலையும்கூட கவனியாமல் விடப்பட முடியாது. நவீன காலத்தின் எண்ணம் இப்படிப்பட்ட வேலையை மதிப்புக்குறைவாக கருதி அதன் கண்ணியத்தையும் மதிப்பையும் இழக்கச்செய்யலாம். என்றாலும் அது கடவுளைப் பிரியப்படுத்துகிறது. (தீத்து 2:4, 5) விவேகமுள்ள ஒரு கணவன், குறிப்பாக தன்னுடைய மனைவி சிறந்து விளங்கும் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அவளைப் புகழ்ந்து, அவருடைய தலைமைத்துவத்தின்கீழ் அவளுக்கு அங்கீகாரத்தை அளிக்கையில் அது எத்தனை புத்துயிரளிப்பதாக இருக்கிறது! (நீதிமொழிகள் 31:28) ரோவீனா தன் கணவனைப் பற்றி இவ்வாறு சொல்கிறாள்: “நான் செய்வதை அவர் நன்றியோடு குறிப்பிடுகையில், அவருக்குக் கீழ்ப்பட்டிருப்பதும் அவரைக் கனப்படுத்தி மரியாதைக் காட்டுவதும் சுலபமாக இருப்பதாக காண்கிறேன்.”
அமெரிக்க கல்வியாளர் கிறிஸ்சென் போவி ஒரு சமயம் சொன்னார்: “பூக்கள் வளருவதற்கு சூரிய ஒளி அவசியமாக இருப்பது போலவே, நியாயமான புகழ்ச்சி பிள்ளைகள் செழித்தோங்க உதவியாக இருக்கிறது.” ஆம், மிகவும் சிறிய ஒரு பிள்ளைக்கும்கூட அவன் மதிக்கப்படும் குடும்ப அங்கத்தினனாக இருப்பதைக் குறித்து இடைவிடாமல் நம்பிக்கையூட்டப்படுவது அவசியமாக இருக்கிறது. புதிய உணர்ச்சிகளும் சரீர மாற்றங்களும் ஏற்படுகிற வளர்ச்சிப் பருவத்தின் போது, தனிப்பட்ட தோற்றத்தைக் குறித்து அதிகமான தன்னுணர்ச்சியும் அதோடுகூட சுதந்திரத்துக்கும் அங்கீகாரத்துக்கும் ஓர் ஏக்கமும் இருக்கிறது. விசேஷமாக இந்தச் சமயத்தில், பருவ வயதிலுள்ள ஒருவர் தன்னுடைய பெற்றோரால் நேசிக்கப்படுவதை உணருவதும் புரிந்துகொள்ளுதலோடும் மனித தயவோடும் நடத்தப்படுவதும் அவசியமாயிருக்கிறது. வயதாகிக்கொண்டு போகும் பெற்றோரும், பாட்டி தாத்தாக்களும் அதேவிதமாக ‘முதிர் வயதில் தள்ளிவிடப்படாமல்,’ அவர்கள் இன்னும் பயனுள்ளவர்களாகவும் நேசிக்கப்படுகிறவர்களாகவும் இருப்பதைக் குறித்து மீண்டும் நம்பிக்கையூட்டப்பட வேண்டும். (சங்கீதம் 71:9; லேவியராகமம் 19:32; நீதிமொழிகள் 23:22) அங்கீகாரத்துக்கான தேவையை சரியாகப் பூர்த்திசெய்வது, குடும்ப வட்டாரத்துக்குக் கூடுதலான மகிழ்ச்சியையும் வெற்றியையும் கொண்டுவருகிறது.
கிறிஸ்தவ சபைக்குள் அங்கீகாரம்
கிறிஸ்தவ சபையில் மற்றவர்கள் பேரில் உண்மையான அக்கறையை வளர்த்துக்கொண்டு அவர்களுடைய செயல்களுக்கும் முயற்சிகளுக்கும் தாராளமாக போற்றுதலை வெளிப்படுத்துவதில் மிகுதியான பயன் இருக்கிறது. கிறிஸ்தவ மூப்பர்கள் சபையிலுள்ள மற்றவர்களின் சாதனைகளையும் முயற்சிகளையும் நன்றியோடு ஒப்புக்கொள்வதன் மூலம் முன்நின்று நடத்தலாம். “பல மேய்ப்புச் சந்திப்புகளுக்குப் பின் தானே, உற்சாகம், மனநிறைவு மற்றும் மகிழ்ச்சி சம்பந்தமாக அவை என்ன அர்த்தப்படுத்தின என்பதை நான் உணர்ந்தேன்,” என்பதாக மார்கரெட் சொன்னாள். “பொதுவாக அங்கீகாரம் கொடுக்கப்படாதிருக்கையில் ஒருவர் எதை இழந்துவிடுகிறார் என்பதை நான் உணர்ந்தேன்.” சபையிலுள்ள அனைவரிடமும் உண்மையான, அன்புள்ள தனிப்பட்ட அக்கறையைக் காட்டுவதற்கு என்னே நல்ல ஒரு காரணம்! அவர்களுடைய வேலையை அங்கீகரியுங்கள். தாராளமாக பாராட்டி உற்சாகப்படுத்துங்கள். அநேக சபைகளில் தங்கள் பிள்ளைகளில் ஆவிக்குரிய மதிப்பீடுகளை மனதில் பதிய வைப்பதற்காக கடினமாக உழைத்துக்கொண்டிருக்கும் ஒற்றைப் பெற்றோர் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் விசேஷமான பாராட்டுக்குத் தகுதியுள்ளவர்கள். எதிர்மறையானவற்றுக்குப் பதிலாக உடன்பாடானவற்றை உயர்த்திக் காண்பியுங்கள். அவர்களிடம் நீங்கள் கொண்டிருக்கும் சகோதர சிநேகத்தை மற்றவர்கள் பார்க்கட்டும். நீங்கள் அக்கறையுள்ளவராயிருப்பதை அவர்கள் பார்க்கட்டும். இவ்விதமாக அன்புள்ள கண்காணிகள் சபையைக் கட்டியெழுப்புகிறார்கள். (2 கொரிந்தியர் 10:8) தங்களுக்காக கடினமாக உழைக்கும் இப்படிப்பட்ட உண்மையுள்ளவர்களுக்கு தகுதியாயிருக்கும் அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுப்பதன் மூலம் தனிப்பட்ட அங்கத்தினர்கள் அதற்கு கைம்மாறு செய்கிறார்கள்.—1 தீமோத்தேயு 5:17; எபிரெயர் 13:17.
ஆனால் இந்த விஷயத்துக்கு மற்றொரு பக்கம் அல்லது கோணமும் இருக்கிறது. அங்கீகாரத்துக்கான ஆசை மிகவும் தீவிரமானது என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. இயேசுவின் நாளிலிருந்த மதத் தலைவர்கள் இந்த எண்ணங்களிலேயே ஆழ்ந்துவிட்டிருந்தனர். இந்த விஷயத்தில் தம் சீஷர்களுடைய தவறான கருத்தை இயேசு திருத்த வேண்டியவராக இருந்தார். (மாற்கு 9:33-37; லூக்கா 20:46) கிறிஸ்தவர்கள் நியாயத்தன்மையுடனும் சமநிலையுடனும் இருப்பது அவசியம். தடுக்கப்படாதிருக்கையில், அங்கீகாரத்துக்கான ஆசை ஆவிக்குரியவிதமாக அபாயமானதாக இருக்கக்கூடும். (யாக்கோபு 3:14-16) உதாரணமாக ஒரு மூப்பர் அகந்தையுள்ளவராகி, தன்னைப் பற்றிய சொந்த உயர்த்தப்பட்ட மதிப்பீட்டை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த ஆரம்பித்தால் அது எத்தனை துக்ககரமானதாக இருக்கும்!—ரோமர் 12:3.
அப்போஸ்தலன் பவுல் ரோமாபுரியிலிருந்த உடன் கிறிஸ்தவர்களுக்கு ஞானமாக பின்வரும் ஆலோசனையைக் கொடுத்தார்: “சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.” (ரோமர் 12:10) இந்த வார்த்தைகள் எல்லாருக்கும் மேலாக, எல்லா சமயங்களிலும் கிறிஸ்துவைச் சபையின் தலைவராக அங்கீகரிக்க வேண்டியவர்களாக இருக்கும் கிறிஸ்தவ மூப்பர்களுக்குப் பொருந்துகிறது. பரிசுத்த ஆவி, பைபிள் நியமங்கள், மற்றும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’யால் ஆன நிர்வாகக் குழுவின் வழிநடத்துதல் ஆகியவற்றின் மூலமாக கொடுக்கப்படும் கிறிஸ்துவின் வழிகாட்டுதலை நாடுவதன் மூலம் அவருடைய வலது கரத்தின் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருப்பது வெளிப்படுத்தப்படுகிறது.—பார்க்கவும்: மத்தேயு 24:45-47; வெளிப்படுத்துதல் 1:16, 20; 2:1.
இதன் காரணமாக, மூப்பர்கள் கூடிவந்து கடவுளுடைய மந்தையை மேய்ப்பதற்காக யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஜெபிக்கும்போது, வேதப்பூர்வமாக சரியாக இருக்கும் தீர்மானங்களைச் செய்ய அவர்கள் உண்மையாக பாடுபடுவார்கள். கிறிஸ்தவ அடக்கம், சாந்தம், மனத்தாழ்மை ஆகியவை எந்த ஒரு மூப்பரையும் தன்னைத்தானே உயர்த்தி, தன்னுடைய சகோதரர்கள் மீது அதிகாரம் செலுத்தி தன்னுடைய கருத்தை இந்தக் கூட்டங்களில் வற்புறுத்துவதைத் தடைசெய்யும். (மத்தேயு 20:25-27; கொலோசெயர் 3:12) சாத்தியமாக இருக்கும்போதெல்லாம், மூப்பர் குழுவின் அக்கிராசனர் உடன் மூப்பர்களிடமிருந்து முன்கூட்டியே கருத்துக்களைச் சொல்லும்படியாக அழைத்து, ஒவ்வொரு குறிப்பையும் கவனத்துடனும் ஜெபசிந்தையுடனும் சிந்திப்பதற்காக ஆய்வுசெய்யப்பட போகும் பொருள்களைத் தொகுத்து வரிசையாக குறிப்புகளைத் தயாரித்து அளிப்பது பிரயோஜனமாக இருக்கும். மூப்பர்கள் கூட்டத்தின் போது, அவர் மூப்பர்களின் அபிப்பிராயங்களைத் தான் கட்டுப்படுத்த முயற்சி செய்யாமல், கலந்தாலோசிக்கப்படும் விஷயங்களின் பேரில் ‘பேச்சு சுயாதீனத்தை’ அப்பியாசிக்கும்படியாக அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். (1 தீமோத்தேயு 3:13) உடன் மூப்பர்கள் ஒருவருக்கொருவர் சொல்லும் கருத்துக்களைக் கவனமாக செவிகொடுத்துக்கேட்டு அநேக வருடங்கள் கிறிஸ்தவ அனுபவத்தைக் கொண்ட மூப்பர்களின் உட்பார்வையிலிருந்து சந்தோஷமாக பயனடைய வேண்டும்.—எசேக்கியேல் 18:21, 22.
என்றபோதிலும் ஒரு நிலைமையைச் சமாளிப்பதற்கு அல்லது முக்கியமான ஒரு தீர்மானத்தைச் செய்வதற்குத் தேவையான பைபிள் நியமங்களை அளிக்க குழுவிலுள்ள எந்த மூப்பரையாவது கிறிஸ்து பயன்படுத்த முடியும் என்பதைக் கண்காணிகள் புரிந்துகொள்கிறார்கள். சபையின் ஆவிக்குரிய அக்கறைகளைக் கவனித்துக்கொள்வதில் ஒவ்வொரு மூப்பருக்கும் அவருடைய பங்கிற்காக சரியான அங்கீகாரம் கொடுக்கப்படுகையில் குழுவின் மத்தியில் நல்ல ஆவி வியாபித்திருக்கும்.—அப்போஸ்தலர் 15:6-15; பிலிப்பியர் 2:19, 20.
தகுதியுள்ள அங்கீகாரத்தை கொடுப்பதற்கும் சம்பாதிப்பதற்கும் உழையுங்கள்
அங்கீகாரம் கட்டியெழுப்புகிறது. அது ஊக்கமளிக்கிறது, அது அன்பினால் பிணைக்கிறது. “நாம் மிகவும் சாதாரணமானவர்கள் என்று நினைத்தாலும்கூட, நம்முடைய சொந்த சுய மதிப்புக்கு உற்சாகம் தேவை,” என்பதாக மேரி சொல்கிறாள். மற்றவர்களின் அன்றாடக முயற்சிகளை நேர்மையாக நன்றியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அவ்விதமாகச் செய்வது அவர்களுக்கு வாழ்க்கையை அதிக பயனுள்ளதாயும் இன்பமானதாயும் ஆக்கும். பெற்றோரே, பிள்ளைகளே, கண்காணிகளே, கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களே, நீங்கள் எவ்விதமாக பேசுகிறீர்கள் மற்றும் நடந்துகொள்கிறீர்கள் என்பதன் மூலம் நீங்கள் அங்கீகாரத்தைச் சம்பாதிக்க முடியும். பைபிள் கடினமாக உழைக்கும், அடக்கமான, மனத்தாழ்மையுள்ள ஆட்களைப் பற்றி சாதகமாக பேசுகிறது. (நீதிமொழிகள் 11:2; 29:23; எபிரெயர் 6:1-12) மற்றவர்களின் மதிப்பை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களோடு வேலைசெய்யும்போது அவர்களுடைய உணர்ச்சிகளைக் கவனத்தில் கொள்ளுங்கள். அப்போஸ்தலன் பேதுரு இந்தப் புத்திமதியைக் கொடுத்தார்: “நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமா”யிருங்கள். (1 பேதுரு 3:8) இது மற்றவர்களுக்கு அங்கீகாரமளிப்பதைக் கேட்கிறது, இவ்விதமாக ஓர் அடிப்படை மனித தேவை பூர்த்திசெய்யப்படுகிறது,